12.9.10 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.30க்கு வல்லினம்
பதிப்பகத்தின் கலை இலக்கிய விழா 2 கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில்
தொடங்கியது. தமிழக எழுத்தாளர் ஜெயமோகனின் இலக்கிய உரை கேட்க இலக்கிய
ஆர்வலர்கள் திரளாக வந்திருந்தனர். கவிஞர் தினேஸ்வரி அறிவிப்பில் மலர்ந்த
நிகழ்வு உற்சாகமாகத் தொடங்கியது.
இம்முறை வல்லினம் பதிப்பகத்தோடு 'இலக்கியகமும்' இணைந்து கொண்டது கூடுதல்
பலமாக இருந்தது. இலக்கியகத்தின் தலைவர் திரு. ந. பச்சைபாலன் வரவேற்புரை
ஆற்றினார். அவர் தமதுரையில் 'மலேசியத் தமிழ் இலக்கியம் பன்முகங்கொண்டதாக
மாறியுள்ளது. பழைய தடத்தில் மரபான இலக்கியங்களை கவிதை, கட்டுரை, சிறுகதை
போன்றவற்றைப் போற்றிக்காக்கும் முயற்சி ஒரு பக்கம் நடைபெறுகிறது. இன்னொரு
பக்கத்தில் புதிய இலக்கிய முயற்சிகள் - பழைய தடத்தை மறுதலித்துவிட்டு புதிய
இலக்கில் பயணப்படுகின்றன. அரசியலில் மாற்று அணி என்பதுபோல இலக்கியத்தில்
மாற்று அணி. வல்லினத்தின் வருகையை நாம் அப்படித்தான் பார்க்கிறோம்'
என்றார்.
டாக்டர் சண்முகசிவா தலைமையுரையாற்றினார். வல்லினத்தின் வருகையை
இலக்கியத்தில் ‘மாற்று அணி’ என வரவேற்புரையில் ந. பச்சைபாலன்
குறிப்பிட்டதைக் கூறி, வல்லினம் மாற்று அணி அன்று; அனைவரும் விரும்பி அணிய
வேண்டிய அணி என்று கருத்துரைத்தார். “எழுத்தாளர்களுக்கு அறச்சீற்றம்
வேண்டும். கருத்துக்களையும் எதிர்வினையையும் துணிச்சலோடு
முன்வைக்கவேண்டும். வல்லினம் படைப்பாளர்களின் செயல்பாட்டைப்
பாராட்டுகிறேன். ஆனால், வல்லினம் படைப்பாளிகளின் வட்டம் விரிவடைய வேண்டும்”
என கேட்டுக்கொண்டார். மேலும் www.vallinam.com.my என்ற முகவரியில்
அகப்பக்கமாக வரும் வல்லினம் படைப்புகளை ஒட்டி சிலாகித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு நடந்தது. மா. சண்முகசிவா நூலை வெளியிட
சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி முதல் நூலை பெற்றுக் கொண்டு ஆசியுரை
வழங்கினார். தனது ஆன்மீக தேடலுக்கு இலக்கியம் எவ்வாறு பங்களிக்கிறதென அவர்
தனதுரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
வல்லினம் ஆசிரியர் ம. நவீன், ‘வல்லினம் மலேசியா-சிங்கை 2010’ இதழ் உருவான
கதையைச் சுருக்கமாக விளக்கினார். பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடம் தற்கால
இலக்கியம் குறித்த சிந்தனை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த இதழ்
அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார். தனக்கு ஆன்மிகம் வாசிப்பைத்
தொடர ஒரு தூண்டுகோளாக இருந்ததைப் போன்று வரும் தலைமுறைக்கு இவ்விதழ் ஓர்
தொடக்கமாக இருக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார். பல்கலைகழகம் மற்றும்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களிடையே நவீன இலக்கியம் மீது விழுந்துள்ள
திரையை அகற்றும் பணியை வல்லினம் தொடர்ந்து செய்யும் என்றார்.
நிகழ்ச்சியின் மையப்பகுதியாக கல்லூரிகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும்
புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. கல்லூரி விரிவையாளார்களும்
கல்லூரியைப் பிரதிநிதிப்பவர்களும் நன்கொடையாளர்களிடமிருந்து நூலைப்
பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சு .யுவராஜன் ஜெயமோகனை அறிமுகம் செய்தார். ஜெயமோகன் சில
நிகழ்ச்சிகளில் ஒரு சினிமாக்காரராக மட்டும் அறிமுகம் செய்துவைக்கப்படும்
நிலையை யுவராஜன் வேதனையோடு குறிப்பிட்டார். அவர் அறிமுக உரை ஓரளவு
ஜெயமோகனின் ஆளுமையை அறிந்துகொள்ள உதவியது.
‘தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்கள்’ என்ற தலைப்பில் ஜெயமோகன்
உரையாற்றினார். ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டோய் எழுதிய ‘போரும் அமைதியும்’
நாவல் தமக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அதனுள் தான்
கண்டடைந்தவற்றையும் விரிவாகக் கூறினார். மூன்று பாகங்களில் அமைந்த
அந்நாவலைச் சிரமத்தோடு வாசிக்கத்தொடங்கினாலும் வரலாற்று பிரக்ஞையோடு
உளவியல் தன்மைகளின் தொகுப்பாக அமைந்த அது, தமக்கு நாவல் குறித்த பல
உண்மைகளை உணர்த்தியதாகக் கூறினார்.
“நாவல் வெறும் நீண்ட கதையாக மட்டும் அமைந்து விடாமல் பல்வேறு தன்மைகளின்
தொகுப்புப் பார்வையாக இருக்கவேண்டும். வாசகனுக்கு ஒரு ஒட்டுமொத்த
பார்வையைத் (தரிசனத்தை) தரவேண்டும். நெடுங்காலத்தைக் களமாகக்
கொண்டிருக்கவேண்டும். ஒரு கண்ணில் யானையையும் மற்றொரு கண்ணில் சிறு
எறும்பையும் காணும் நிலையில் எழுத்தாளன் இருக்க வேண்டும்.” என்றார்.
ஜெயமோகனின் நாவல் குறித்த சிந்தனை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
அதன்பின் தமிழில் எழுதப்பட்ட சில முக்கிய நாவல்களைத் தொட்டுப் பேசினார்.
புளியமரத்தின் கதை, தலைமுறைகள், ஆழிசூழ் உலகு, காவல் கோட்டம் போன்றவை
அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அவரின் உரைக்குப் பின்னர், கேள்வி - விளக்கம்
என மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை.
ஏறத்தாழ 9.30 அளவில் நிகழ்ச்சி முடிவுற்றது. இலக்கியம் தொடர்பான புதிய
அறிமுகம் கிடைத்ததிலும் பழைய இலக்கிய நண்பர்களை சந்தித்ததிலும் அனைவரின்
முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.
மலேசியா - சிங்கப்பூர் 2010 புத்தகம் வேண்டுவோர் தொடர்புகொள்க : 016
3194522 (ம. நவீன்)
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்