இதழ் 22
அக்டோபர் 2010
  பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் மலேசிய வருகை - ஒரு ப‌திவு
கே. பாலமுருகன்
 
 
 
  பதிவு:

வல்லினம் கலை இலக்கிய விழா 2 (புகைப்படத்தொகுப்பு)


பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் மலேசிய வருகை - ஒரு ப‌திவு
கே. பாலமுருகன்

பத்தி:

இசை நிறுவனம் தொடங்குவது...

அகிலன்

பின் ஜெயமோகன்: சில நினைவுகள்
சு. யுவராஜன்

கட்டுரை:

அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா
புன்னியாமீன்

நிறைவளிக்கிறதா தமிழாசிரியர்களின் இலக்கியப் பங்களிப்பு?
ஏ. தேவராஜன்

சிறுகதை:

"பெல்ஜியம்" கண்ணாடி
சின்னப்பயல்


ஒரு பைத்தியமும் ஒரு கொலையும்
ராம்ப்ரசாத்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...4
எம். ஜி. சுரேஷ்

எனது நங்கூரங்கள் ...14
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...10
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...12

லதா

ஏ.தேவராஜன்

ரெ. பாண்டியன்

ராக்கியார்

ந. மயூரரூபன்

சேகர் கவிதன்

திரைவிமர்சனம்:


நான் மகான் அல்ல - மனநோயின் வேர்களும் குற்றவாளிகளின் நகரமும்
கே. பாலமுருகன்

புத்தக அறிமுகம்:

அன்புள்ள அய்யனார் - சுந்தர ராமசாமியின் 200 கடிதங்கள்

அறிவிப்பு:


தும்பி அறிவியல் இதழ் - அறிமுக விழா
     
     
 

நவீன இலக்கியச் சிந்தனைக்களத்தின் மூலம் இலக்கிய ஆன்மீக நிகழ்வுகளுக்காக கூலிம் தியான ஆசிரமத்தின் பொறுப்பாளர் சுவாமி பிரமானந்த சரஸ்வதியின் ஏற்பாட்டில் இந்திய எழுத்தாளரும் தத்துவம் ஆன்மீகம் வரலாறு செவ்விலக்கியம் நவீன இலக்கியம் என பல தளங்களில் தனித்துவமான ஆளுமையுடன் எழுதி வரும் படைப்பாளியுமான ஜெயமோகன் அவர்கள் 7 நாட்கள் மலேசியாவிற்கு வருகை புரிந்திருந்தார்.

கூலிம் தியான ஆசிரமத்தில் கடந்த ஒரு வருடமாக சுவாமி அவர்களுடன் நான் எழுத்தாளர் கோ.புண்ணியவான், தமிழ்மாறன், மணிஜெகதீசன், குமாரசாமி போன்றவர்கள் இலக்கியக் கலந்துரையாடலும் இலக்கிய வாசிப்பையும் நடத்தி வருகிறோம். அந்த வகையில் இரண்டு முறை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறுகதைகளையும் (தம்பி, ஊமை செந்நாய்) ஒருமுறை அவர் எழுதிய பண்பாட்டு விவாதம் கட்டுரைகளையும் வாசித்துவிட்டு கலைந்துரையாடியிருக்கிறோம். குறிப்பாக ஜெயமோகன் படைப்புகள் குறித்து மிக ஆழமான வாசிப்பையும் தேடலையும் அங்கிருந்துதான் பெற்றேன் எனச் சொல்லலாம். ஆகையால் நவீன களம் மூல‌மே ஜெயமோகனை மலேசியாவிற்கு வரவழைத்து இலக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம் எனத் திட்டமிடப்பட்டது.


முதல் நாள்: துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்றகம்
த‌லைப்பு: இலக்கியம் எதைக் கற்பிக்கின்றது

ஜெயமோகன் பினாங்கு வந்த பிறகு கூலிம் தியான ஆசிரமத்தில் தங்கியிருந்தார். முதல்நால் மாலையில் 4.00மணி போல பினாங்கு ஆசிரியர் பயிற்றகம் துங்கு பைனுன் வளாகத்தில், “இலக்கியம் எதைக் கற்பிக்கின்றது?” என்கிற தலைப்பில் உரையாற்றினார். சுமார் 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், பயிற்சி ஆசிரியர்களும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜெயமோகனின் ஆளுமை குறித்தும் அவரது படைப்பாற்றல் குறித்தும் எழுத்தாளர் கோ.புண்ணியவான் பேசி அறிமுகப்படுத்தி வைத்தார்.

தனது முதல் அரங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இலக்கியம் தொடர்புடைய பல கற்பிதங்களை உருவாக்கி சற்றும் எளிமைப்படுத்தப்படாத அவருக்கேயுரிய மொழியில் பேசத் தொடங்கினார்.

ஜெயமோகன் இலக்கியத்தில் கற்பிக்கப்படும் அல்லது கருதப்படும் அறங்கள் குறித்து மேலும் தெளிவாக முன்வைக்க கதைகளின் வழி பேசினார். வெறுமனே அறங்களைப் போதிப்பது இலக்கியமாகக் கருத முடியாது எனவும் அந்த அறங்களின் வழி உருவாகும் சீற்றங்களை அந்த அறத்தின் வழி உருவாகும் வெளிப்பாடுகளை ஒரு கலையாகத் ஒரு மகத்தான தருணங்களாகத் தருவதில் இலக்கியத்திற்கு முக்கியமான இடம் உண்டு எனவும் குறிப்பிட்டுப் பேசினார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதியதாக ஒரு எழுத்தாளன் முளைத்து வந்து அறங்கள் குறித்து எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறான். அது எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும் யதார்த்தத்தையும் குறிப்பிட்டார். தண்ணீரின் மேற்பரப்பை மூடியிருக்கும் பாசியைப் போலத்தான் அறம் என்றும் அதை எப்பொழுதும் விலக்கி பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்து விடுவதாகவும் கூறினார்.

செம்மொழி மாநாடு எந்தவகையில் தமிழின் வளர்ச்சிக்கு வித்திட்டது எனப் பார்வையாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் அற்புதமான பதிலைக் கொடுத்தார் ஜெயமோகன். தமிழில் முக்கியமான (கல்வெட்டுகளின் ஆவணங்கள் நூலாக்கப்படவில்லை, சுவடிகள் நூலாக்கப்படுவதில்லை) சில முயற்சிகள் ஏதும் செய்யாமல் கூட்டம் கூட்டி ஊர்வலம் நடத்தி குடும்ப அரசியலை நிகழ்த்திக் காட்டியெல்லாம் தமிழை வளர்த்துவிட இயலாது எனக் கூறினார்.

மலேசியாவில் உருவாகி வரும் இலக்கிய முயற்சிகளைப் பற்றி ஜெயமோகனின் பார்வை குறித்து கேள்வியாகக் கேட்கப்பட்டது. மலேசியாவில் நல்ல தரமான இலக்கியங்கள் உருவாவதற்கான அடையாளங்கள் இங்குள்ள சிற்றிதழ்களை நடத்தி வரும் இளம் படைப்பாளிகளின் மூலம் தெரிய வருவதாகக் குறிபிட்டார். வல்லினம், அநங்கம், மௌனம் போன்ற தமிழ் சிற்றிதழ்களின் மூலம் சமரசமற்ற எழுத்தை அடையாளம்காண முடிகிறது எனவும் இப்படிப்பட்ட எழுத்து வகைத்தான் தமிழ் சூழலின் எழுத்துத் தீவிரத்தை வலுப்படுத்தும் எனவும் கூறினார்.


இரண்டாம் நாள்: சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் பயிற்றகம்
த‌லைப்பு: இலக்கியமும் நவீன இலக்கியமும்


ஜெயமோகனின் இலக்கிய உரையின் அடுத்தப்படியாக மறுநாள் 7.00 மணி இரவில் சுங்கைப்பட்டாணியிலுள்ள ஆசிரியர் பயிற்றகம் சுல்தான் அப்துல் அலிம் வளாகத்தில் “எழுத்தும் இலக்கிய எழுத்தும்” என்கிற தலைப்பில் நடைப்பெற்றது. ஆசிரியர்களும் பயிற்சி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் என 200க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் இந்த அரங்கத்தில் உரையாற்றிய ஜெயமோகன் இறுதியில் தமிழக்கியம் என்கிற அடையாளத்தை இரத்து செய்துவிட்டு உலக இலக்கியம் என்கிற வெளிக்குள் ஒரு தமிழ் வாசகனும் எழுத்தாளனும் நுழைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

பெரும்பாலும் ஜெயமோகனின் இலக்கிய படைப்புகளைப் படிக்காதவர்கள் இருந்தமையால், அவர் வசனம் எழுதிய சினிமாக்களைக் குறிப்பிட்டு சொல்லி அவரை அடையாளப்படுத்தவே நேர்ந்தது. ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகாவது ஜெயமோகனைத் தேடி வாசிப்பார்கள் என நம்புகிறேன்.

அந்த நிகழ்வில் ஜெயமோகன் பேசிய சில குறிப்புகள்:

1. தமிழ் இலக்கியம் என ஒன்று இப்பொழுது இல்லை, இனி உலக இலக்கியம் எனப் பிரக்ஞை மட்டுமே உருவாக வேண்டும், உலக இலக்கியங்கள் இப்பொழுது தமிழில் அதிகமாக மொழிப்பெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைப்பதால் தமிழ் வாசகர்கள் இனி நம் இலக்கியத்தை உலக இலக்கியம் என்கிற பரப்பிலிருந்துதான் மதிப்பிட வேண்டும்.

2. சமரசமற்ற எழுத்துத் தீவிரம் உருவாக வேண்டும். அது மட்டுமே எப்பொழுதும் தரமான ஓர் இலக்கிய முயற்சியை நோக்கி நம்மை நகர்த்தும்.

3. கறாரான விமர்சனப் போக்கு உருவாக வேண்டும். எதையும் எப்படியும் வன்மையாக நிராகரித்து கலை விமர்சனத்தை நிகழ்த்தக்கூடிய ஆளுமை உருவாக வேண்டும்

4. உலக இலக்கிய வாசிப்பை ஒவ்வொரு எழுத்தாளனும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், உலக இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கும் அண்மைய மாற்றங்கள்வரை ஒரு எழுத்தாளனால் அறியப்பட்டிருக்க வேண்டும்

5. காலம் காலமாகப் பல மாற்றங்களையும் புதுமையையும் கண்டதுதான் 2000 வருட வரலாற்றைக் கொண்ட நம் மரபு. புதுமையையும் புதுப்பித்தலையும் கொண்டிராத எந்த மரபும் வளர்ந்ததாகச் சொல்ல முடியாது. தொல்காப்பியமே மாற்றத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.

6. பின்நவீனத்துவம் பற்றி அறிந்துகொள்வதற்கு முன் நவீனத்துவம் பற்றிய வரலாறு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நவீனத்துவத்தின் தோல்விதான் பின்நவீனத்துவம் என்கிற புரிதல் ஏற்பட வேண்டும்.

7. கோட்பாடுகள் அனைத்தும் ஒரு படைப்பைப் புரிந்து கொள்வதகான துணைக்கருவிகள் மட்டுமே, அதைக் கொண்டுதான் ஒரு படைப்பை உருவாக்குதல் என்பது “படைப்பைச் செய்தல்” எனும் அளவிற்குக் கருதப்படும்.

முழு உரையை வாசிக்க‌: http://www.jeyamohan.in/?p=8114


மூன்றாம் நாள்: பினாங்கு காந்தி மண்டபம்
த‌லைப்பு: “காந்தியும் இந்திய ஞான மரபும்”


மூன்றாவது நாளில் எழுத்தாளர் ஜெயமோகன் பினாங்கு மாநிலத்திலுள்ள காந்தி நினைவு மண்டபத்தில் “காந்தியும் இந்திய ஞான மரபும்” என்கிற தலைப்பில் தனது உரையை வழங்கினார். 60க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். காந்தி என்கிற அடையாளத்தின் மீதும் காந்திய தத்துவத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கையும் ஆழந்த ஈடுபாடும் கொண்டவர் ஜெயமோகன் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. காந்தியின் மண் வழி சிகிச்சை குறித்து தொடங்கப்பட்ட உரையை அவர் கற்றுக் கொண்ட காந்தியின் அகிம்சைவழியின் பின்னனியில் கட்டமைந்திருக்கும் சமணக் கொள்கைகள் வரை முன்வைத்து பேசப்பட்டது.

மேலும் காந்தியின் கூற்றுப்படி ஒவ்வொரு சமூகத்தையும் இரண்டாகப் பிரிக்கலாம் எனவும் ஒரு சமூகம் சிவில் சமூகம் இன்னொரு சமூகம் அரசியல் சமூகம் எனவும் கூறினார். காந்தி முழுக்கப் போராடியது அரசியல் சமூகத்திற்கு எதிராக அல்ல, மாறாக சிவில் சமூகத்தை மாற்றியமைக்கத்தான் போராட்டங்களை முன்னெடுத்தார் எனக் கூறினார். அரசியல் சமூகம் என்பது மக்களைப் பிரதிநிதித்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது ஆகையால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் சமூகத்தையும் மாற்றியமைக்கலாம் எனக் கூறினார். காந்திய வழி கொள்கைகளையும் அவர் கையாண்ட அரசியல் போராட்டங்களுக்குப் பின்னனியிலுள்ள த‌ர்மங்களையும் மேலும் விரிவாகப் பேசினார்.

முழு உரையை வாசிக்க‌: http://www.jeyamohan.in/?p=8138


நான்காம் நாள்: கூலிம் தியான ஆசிரமம்
தலைப்பு: “கீதையும் யோகமும்”

நான்காவது நாளான வியாழக்கிழமை இரவில் கூலிம் தியான ஆசிரமத்தில் “கீதையும் யோகமும்” என்கிற தலைப்பில் ஜெயமோகன் உரையாற்றினார். பெரும்பாலானோர் கூலிம் தியான ஆசிரமத்திற்க்கு வழக்கமாக வருகையளிக்கும் பக்தர்கள்தான் நிகழ்வில் கலந்துகொண்டனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரளாக ஆசிரமத்தில் கூடி ஜெயமோகனின் கீதை உரையைக் கேட்டனர்.

கீதையை ஒரு மேற்கோள் நூலாகக் காட்டுவது மிகப் பெரிய தவறாகும் எனக் கூறிய ஜெயமோகன், இன்று கீதையின் வாசிப்பு ஒரு மேற்கோள் அளவிலேயே எல்லாம் இடங்களிலும் முன்வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும் கீதை அத்தியாத்திற்கு அத்தியாயம் முரண்பட்டு இருப்பதையும் குறிப்பிட்டார்.

முழு உரையை வாசிக்க‌: http://www.jeyamohan.in/?p=8140


ஐந்தாம் நாள்: சுங்கைப்ப‌ட்டாணி எழுத்தாள‌ர் சங்கம்
தலைப்பு: நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?


ம‌றுநாள் சுங்கைப்ப‌ட்டாணி எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌ நிக‌ழ்விலும் ஜெய‌மோக‌ன் உரையாற்றினார். நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை? என்ற‌ த‌லைப்பில் அமைந்த‌ அவ‌ர‌து உரை ப‌ல‌ருக்கும் புதிய‌ த‌க‌வ‌ல்க‌ளைப் ப‌ரிமாறிய‌து. தொட‌ர்ச்சியான‌ வாசிப்பு... வாசிப்பு ப‌யிற்சி அறிய‌ முடிகின்ற‌ மீ மொழி போன்ற‌வை குறித்து ஜெய‌மோக‌னின் உரை ஆழ‌மாக‌ இருந்த‌து.

'மரபிலக்கியத்தின் தலை 2000 ஆண்டுகளுக்கு முன்பும், வால் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறது. நவீன இலக்கியத்தின் தலை இந்த நூற்றாண்டிலும் வால் 2000 ஆண்டுகளுக்கு முன்பும் இருக்கிறது. தமிழ் இலக்கிய மரபு தன்னை எப்பொழுதும் புதுப்ப்பித்துக் கொண்டேதான் வந்திருக்கிறது. தொல்காப்பிய மரபுகளை மீறி எழுதப்பட்டதுதான் சங்க இலக்கியம். தொல்காப்பிய இலக்கணங்கள் அந்தக் காலக்கட்டத்திலேயே மீறப்பட்டுவிட்டன' எனக் கூறினார்.

மேலும் அந்தக் காலக்கட்டத்தில் அதிகமாக பதவுரைகளும் விளக்கவுரைகளும்தான் எழுதப்பட்டன. அல்லது பல்வேறான இலக்கண ஆசிரியர்கள் தமிழில் அதிகமான இலக்கண உரைகளைத்தான் எழுதியிருந்தார்கள். ஆகையால் அப்பொழுது தமிழில் படைப்பிலக்கியம் பெரிய தேக்கநிலையை அடைந்திருந்தது என ஜெயமோகன் குறிப்பிட்டார். நவீன காலக்கட்டத்தில் படைப்பிலக்கியம் மீண்டும் வலுப்பெற்றது, தொடர்ந்து இலக்கியத்திற்குத்தான் இலக்கணம் என்கிற புரிதல் எல்லாம் நிலைகளிலும் புரிந்துகொள்ளப்பட்டது எனவும் கூறினார்.

நிக‌ழ்வின் இறுதியில் ப‌ல‌ கேள்விக‌ள் கேட்க‌ப்ப‌ட்ட‌ன‌. அனைத்திற்கும் ப‌தில‌ளித்த‌ ஜெய‌மோக‌னின் ஆளுமை ப‌ல‌ருக்கும் விய‌ப்ப‌ளித்த‌து.

முழு உரையை வாசிக்க‌ : http://www.jeyamohan.in/?p=8156


ஐந்தாம் நாள்: கோலாலம்பூர் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்
“சிறுகதை பட்டறை”

மறுநாள் காலையில் ஜெயமோகன் சுங்கைப்பட்டாணியிலிருந்து ம‌.நவீனுடன் கோலாலம்பூருக்குப் பயணப்பட்டார். 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை இரு முக்கியமான இலக்கிய நிகழ்வுகள் கோலாலம்பூரில் நடைபெறவிருப்பதால் அன்றைய தினமே அவர் புறப்பட வேண்டியிருந்தது. ஞாயிறு காலை மணி 9.00க்கு மலேசிய தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதை பட்டறை நடத்தப்பட்டது. 30க்கும் மேற்பட்ட பல முக்கியமான மூத்த எழுத்தாளர்களும் இளம் படைப்பாளிகளும் இந்தச் சிறுகதை பட்டறையில் கலந்துகொண்டனர்.

ஜெயமோகன் சிறுகதை பட்டறையில் குறிப்பிட்ட சில விசயங்கள் குறிப்புகளாக (ஞாபகத்தில் உள்ள) தரப்படுகிறது:

1. மூன்று நாள் பட்டறையில் தரவேண்டிய சிறுகதை பற்றிய வழிக்காட்டுதல்களை இங்கு ஒரே நாளில் மூன்று பிரிவுகளாகத் தரவேண்டியுள்ளது.

2. சிறுகதை என்பது சிறிய கதை அல்ல. சிறுகதை என்பது சொல்லப்படக்கூடாது, காட்டப்பட வேண்டும்.

3. சிறுகதை என்பது அதன் முடிவை நோக்கி படைக்கப்பட்டதாக அமைக்கப்பட வேண்டும். சிறுகதையின் முடிவு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும். வாசகர்கள் எதிர்ப்பார்த்திராத ஒரு முடிவை கதையின் முடிவில் புனைந்து, மீண்டும் சிறுகதை முடிவிலிருந்து தொடங்குவதாக அமைக்கப்பட வேண்டும்.

4. ஒரு சிறுகதையின் முடிவு திருப்பத்தைக் கொண்டிருக்காமல் அது ஒரு கவித்துவமான விவாதமாக அல்லது கவித்துவமான புள்ளியில் முடியலாம்.

5. முடிவிற்கு ஏற்புடைய வகையில் சிறுகதையின் உடல் அமைந்திருக்க வேண்டும். எ.கா, ஈட்டியின் கூர்முனைக்கு ஏற்ப உருவாக்கப்படும் ஈட்டியின் உடல் போல. சில சமயங்களில் அளவுக்கு அதிகமான விவரிப்புகள் கதையின் முடிவில் உருவாகும் தாக்கம்/பாதிப்பை வலுவிழக்கச் செய்துவிடும்.

6. சிறுகதைக்குள் ஒரு கதை ஒளித்து வைத்திருப்பது மேலும் சிறுகதையைக் கூர்மைப்படுத்தும். வாசகன் கதையின் முடிவில் அந்த ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு கதையைக் கண்டடையும்போது சிறுகதை இன்னொரு கதையை வாசகனுக்குள் உருவாக்கிவிட்டிருக்கும்.

7. தேவையில்லாத சொற்களைக் கதையிலிருந்து நீக்குவதன் மூலம் கதை சிறுகதையின் அளவீடுகளைத் தக்க வைத்துக்கொள்ளும். மேலும் தேவையில்லாத வாக்கியங்கள், சாதாரணமான வாக்கியங்கள், கதைக்கு அவசியமற்ற வாக்கியங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

8. உரையாடல் ரொம்பவும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சாதரணமாக இருவர் உரையாடும் விதத்தைக் கதையில் அப்படியே பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உரையாடலைச் சிந்தித்து தேவையான அளவில் கச்சிதமாக அதன் முக்கியம் கருதி எழுத வேண்டும்.

9. சிறுகதைகளுக்குப் பக்க அளவில் வரையறை கொடுப்பது மிக மோசமான அபத்தம். ஆகையால் அதற்கு அளவு கிடையாது. வாசிப்பத்தில் ஏற்பட்ட சோம்பேறித்தனம்தான் கடுகு கதை, நொடி கதை என உருவாகிவிட்டது.

10. உலகின் பெரும்பாலான நல்ல சிறுகதைகள் “நான்” என்ற தன்னிலை கதைச் சொல்லலைத்தான் கையாண்டிருக்கின்றன. ஆகையால் கதைச் சொல்லியைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த “நான்” எந்தக் கதைப்பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதையும் யாரிடமிருந்து கதை சொல்லப்பட்டால் மேலும் வலுவான பாதிப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்தும் எனவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

11. ஒரு உதாரணக் கதையைச் சொல்லி, அந்தச் சிறுகதை எங்கிருந்து தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்பதையும், எந்த இடத்தில் முடிப்பது, யார் கதைச் சொல்லி போன்ற கேள்விகளை எழுப்பி சிறுகதை குறித்து மேலும் விரிவாகப் பேசினார்.

பின்நவீனத்துவம், நவீனத்துவம் என்கிற கதையெல்லாம் எழுதப்பட முடியாது, அப்படி அடையாளப்படுத்தி எழுதுவது கதையைச் செய்வதற்குச் சமமாகும். நல்ல சிறுகதைகள் மனிதர்களைப் பற்றிய கதையாகத்தான் இருக்கும். கோட்பாடுகள் அந்தக் கதையை வாசித்துப் புரிந்துகொள்வதற்கான மதிப்பீட்டுக் கருவிகள் மட்டுமே.


ஐந்தாம் நாள்: கோலாலம்பூர் வல்லினம் கலை இலக்கிய விழா
த‌லைப்பு: “தமிழின் முக்கிய நாவல்கள்”


மாலையில் 6.00மணி போல வல்லினம் பதிப்பகமும் மலேசிய தமிழ் ஆசிரியர் இலக்கியக் கழகமும் இணைந்து நடத்திய கலை இலக்கிய விழா-2இல் ஜெயமோகன் “தமிழின் முக்கிய நாவல்கள்” எனும் தலைப்பில் பேசினார். ரஷ்ய இலக்கியத்தின் முக்கியமான பிரதியாகக் கருதப்படும் டால்ஸ்டாய் எழுதிய “போரும் அமைதியும்” நாவலின் மூலம அவர் அடைந்த வாசக மனதைப் பற்றி சிலாகித்து பேசினார். அந்த மிக நீண்ட நாவலைப் படிக்கத் துவங்கியதும் சில பக்கங்களுக்கு மேல் கடக்க முடியாமையின் தோல்வியைக் குறித்தும் பிறகொரு நாளில் அதனை மீள்வாசிப்பின் மூலம் படித்துமுடித்துவிட்ட சந்தர்ப்பத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அந்த நாவல் அவருக்குள் ஏற்படுத்திய வெற்றிடத்தையும் தனிமையும் வெறுமையயையும் சுட்டிக்காட்டி ஒரு நல்ல நாவலைப் படித்து முடித்தவுடன் காலத்தின் மிக நீண்ட தனிமையையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிட்டிருக்க வேண்டும். அந்தப் பிரதிக்குள்ளிருந்து ஒரு வாசகன் மீள மூடியாமல் ஒரு பெரிய வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதன் சோர்வு ஏற்பட்டிருக்கும். அதுதான் ஒரு நாவல் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய அனுபவம் எனக் கூறினார்.

மேலும் ஒரு நாவல் என்பது காலத்தின் தரிசனமாக இருக்க வேண்டும். வரலாற்றையும் அந்த மனிதர்களையும் அவர்களின் கலாச்சாரப்ம் பதிவையும் காலத்தின் தரிசனம் மூலம் நம் பார்வைக்குக் கொண்டு வரக்கூடியது நாவல்தான். நாவல் எனப்படுவது பொது புத்தியைச் சார்ந்ததாகவும் அதே வேளையில் நுண்ணியப் பார்வையையும் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறினார். ஒரு கண்ணில் யானையையும் மறு கண்ணில் எறும்பையும் பார்க்கின்ற ஆற்றல் நாவலாசிரியர்களுக்கு இருக்க வேண்டுமென கூறினார். தான் எழுதிய “நாவல்” எனும் புத்தகம் தமிழ் நாவல்கள் பற்றியும் ஒரு நாவல் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் எழுதியிருப்பதாகக் கூறினார்.

ஜெயமோகனின் இந்த மலேசிய வருகை நம் தமிழ் இலக்கிய சூழலில் ஒரு மாற்றத்தை, குறிப்பாக வாசிக்கும் பழகத்தில் தீவிரத்தைக் கொண்டு வரும் என தைரியமாகச் சொல்லலாம்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768