இதழ் 22
அக்டோபர் 2010
  சிறுவர் இலக்கியம்:
ஆமையும் எருதும் அல்லது நீருக்கும் நிலத்துக்கும் நாமே ராசா
வ. ஐ. ச. ஜெயபாலன்
 
 
 
  பதிவு:

வல்லினம் கலை இலக்கிய விழா 2 (புகைப்படத்தொகுப்பு)


பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் மலேசிய வருகை - ஒரு ப‌திவு
கே. பாலமுருகன்

பத்தி:

இசை நிறுவனம் தொடங்குவது...

அகிலன்

பின் ஜெயமோகன்: சில நினைவுகள்
சு. யுவராஜன்

கட்டுரை:

அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா
புன்னியாமீன்

நிறைவளிக்கிறதா தமிழாசிரியர்களின் இலக்கியப் பங்களிப்பு?
ஏ. தேவராஜன்

சிறுகதை:

"பெல்ஜியம்" கண்ணாடி
சின்னப்பயல்


ஒரு பைத்தியமும் ஒரு கொலையும்
ராம்ப்ரசாத்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...4
எம். ஜி. சுரேஷ்

எனது நங்கூரங்கள் ...14
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...10
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...12

லதா

ஏ.தேவராஜன்

ரெ. பாண்டியன்

ராக்கியார்

ந. மயூரரூபன்

சேகர் கவிதன்

திரைவிமர்சனம்:


நான் மகான் அல்ல - மனநோயின் வேர்களும் குற்றவாளிகளின் நகரமும்
கே. பாலமுருகன்

புத்தக அறிமுகம்:

அன்புள்ள அய்யனார் - சுந்தர ராமசாமியின் 200 கடிதங்கள்

அறிவிப்பு:


தும்பி அறிவியல் இதழ் - அறிமுக விழா
     
     
 

முன்னொரு காலத்தில் ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் தேவதைகள் வாழும் காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு ஆமையும் எருதும் தங்கள் குடும்பங்களோடு வாழ்ந்து வந்தன. ஆமை தேவதைகளுக்குப் படகு ஓட்டியது . எருது தேவதைகளுக்கு வண்டி ஓட்டியது. ஆமையும் எருதும் ஏனென்று காரணம் தெரியாமல் ஒன்றோடு ஒன்று பகமை பாராட்டுவதைப் பார்த்து தேவதைகள் ஆச்சரியப் பட்டன. அந்த ஆமையிடன் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அதேபோல எருதும் ஒரு பெரிய புத்தகத்தை வைத்திருந்தது.

ஆமை தனது பரம்பரை புத்தகமே உலகத்திலேயே பழமையானதும் உண்மையானதும் என்று காண்கிற தேவதைகளிடம் எல்லாம் சொல்லும். அதனால் உலகத்தில் ஆமைகள்தான் உசத்தி என்று அந்த ஆமை சொல்லிவந்தது. இதைக் கேள்விப்படும் போதெல்லாம் எருது கோபப் படும். ”இல்லை இல்லை எனது பரம்பரைப் புத்தகம்தான் பழசு” என்று எருது அடித்துச் சொல்லும். ”எனது புத்தகம்தான் உண்மை. மாடுகள்தான் உசத்தி” என்று தேவதைகளைப் பார்த்து எருது உரத்துக் கத்தும்.

தேவதைகளைக் காணும்போதெல்லாம் ”நான்தான் இந்த நீருக்கும் நிலத்துக்கும் ராசா” என்று ஆமை பெருமை பேசி தலை நிமிரும், ”சின்ன சத்தம் கேட்டாலே தலையையும் கால்களையும் மறைத்துக் கொள்ளும் பயந்தாங்கொள்ளி ஆமை எப்படி இந்த ஆற்றுக்கும் காட்டுக்கும் ராசாவாக இருக்க முடியும்?” என்று எருது கேலிசெய்யும். எருது எப்பவும் “நான்தான் இந்த நீருக்கும் நிலத்துக்கும் ராசா” என்று கூறியபடி தேவதைகளிடம் தனது கொம்புகளை அசைத்துக் காட்டும்.

ஆமையும் எருதும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால்கூட பேசுவதில்லை. அப்போதெல்லாம் அவை தங்கள் தலைகளை மறுபக்கம் திருப்பிக் கொள்ளும். அவை தங்கள் பெண்டாட்டி பிள்ளைக்கூட பேச அனுமதிப்பதில்லை.

ஆனால் ஆமைக் குட்டிகளும் மாட்டுக் கன்றுகளும் எப்போதும் ஒன்றோடொன்று சேர்ந்து விளையாடவே விரும்பின. ஆமைப் பெண்ணும் பசுவும் தேவதைகளைக் காணும் போதெல்லாம் தங்கள் கணவன்மாரை ஒற்றுமை ஆக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டன. தேவதைகளுக்கும் அதுதான் விருப்பமாக இருந்தது.

படகில் ஏறி ஆற்றில் நீர் விழையாடும்போதெல்லாம் எருதுடன் பேசும்படி தேவதைகள் ஆமையிடம் கேட்கும். அப்போதெல்லாம் ஆமைக்கு பொல்லாத கோபம் வந்துவிடும்.. ”இதைக் கேழுங்கள்” என்றபடி தனது பரம்பரை புத்தகத்தை திறந்து தேவதைகளுக்கு வாசித்துக் காட்டும்.

அந்தப் புத்தகத்தில் ஆமைகள்தான் உலகத்துக்கு முதன் முதல் வந்தது என்றும் அதனால் உலகம் ஆமைகளுக்குத்தான் சொந்தம் என்றும் எழுதி இருந்தது. ஆமைகளின் காலத்தில் உலகம் மிக மிக அழகாய் இருந்ததாம். பின்னர் மாடு என்ற அவலட்சணமான பிராணி உலகத்துக்கு வந்ததாம். மாடுகள் உலகத்தை அழுக்காக்கிக் கெடுத்து விட்டதாம். இப்படி ஆமையின் புத்தகத்தில் எழுதி இருந்தது.”

ஆமை தனது புத்தகத்தை தேவதைகளுக்கு வாசித்துக் காட்டும். அதன்பிறகு எங்கள் உலகத்தை ஊத்தையாக்கிக் கெடுத்த எருதுகளோடு பேசச் சொல்கிறீர்களே? உங்களுக்கு வெட்கம் இல்லையா?” என்று தேவதைகளைப் பார்த்துக் கேட்கும்.

தேவதைகள் அடிக்கடி எருதின் வண்டியில் ஏறி உல்லாசப் பயணம் போவதுண்டு. அப்போதெல்லாம் அவை ஆமையுடன் பேசும்படி எருதைக் கேட்டுக் கொள்ளும். எருது கோபத்தோடு தேவதைகளைப் பார்க்கும். ஆமை உங்களுக்கு மூழைச் சலவை செய்துவிட்டது என்று குறை கூறும். பின்னர் ”இதைக் கேழுங்க” என்றபடி தனது பரம்பரை புத்தகத்தை திறந்து உரத்து வாசிக்கத் தொடங்கும்..

அந்தப் புத்தகத்தில் ”எருதுகள்தான் உலகத்துக்கு முதன் முதல் வந்தன.” என்று எழுதி இருந்தது. அதனை தேவதைகளிடம் காட்டி உலகம் எருதுகளுக்குத்தான் சொந்தம் என்று எருது வாதாடும். ”எருதுகளின் காலத்தில் உலகம் அழகாய் இருந்தது. அதன் பின்னர் ஆமை என்ற அவலட்சணமான பிராணி உலகத்துக்கு வந்தது. அதன்பின் உலகம் அழுக்காகி கெட்டுப் போனது” என்று எருதின் புத்தகத்தில் எழுதியிருந்தது.

எருது தனது புத்தகத்தை வாசித்துக் காட்டி விட்டு எங்கள் உலகத்தை ஊத்தையாக்கிக் கெடுத்த ஆமைகளோடு பேசச்சொல்லிக் கேட்பது தப்பல்லவா?” என்று கோபத்தோடு கத்தும்.

2

அந்த நாட்களில் காட்டில் பஞ்சம் வந்தது. நெடுநாட்க்களாக மழை பெய்யவில்லை. புற்க்கள் எல்லாம் காய்ந்து பட்டுப் போயின. மழை பெய்யாததால் மரங்களின் இலைகளும் காய்ந்து போனது. எருதும் பசுவும் கன்றுகளும் நெடுநாட்கள் காய்ந்த புல்லையும் வாடிய இலைகளையுமே சாப்பிட்டு வந்தன. பின்னர் காய்ந்த புல்லும் வாடிய இலைகளும்கூட அந்தக் காட்டில் இல்லாமல் போய்விட்டது.

மரங்கள் எல்லாம் எஞ்சி இருந்த இலைகளை தமது உச்சாணிக் கொம்பர்களில் ஒளித்து வைத்து விட்டன. தனது வண்டியின்மீது ஏறி துள்ளிப் பார்த்தபோதும்கூட எருதினால் அந்த இலைகளை பறிக்க முடியவில்லை. எருதின் வீட்டில் சாப்பிட எதுவுமே இல்லாமல் போனது. காடு முழுவதும் அலைந்து திரிந்தும் தனது பசுவுக்கும் கன்றுகளுக்கும் காய்ந்த புற்களைக்கூட எருதினால் சேகரிக்க முடியவில்லை. ஆற்று தண்ணீரை மட்டும் குடித்து அவற்றால் நெடுநாட்க்களுக்கு உயிர் வாழமுடியாது.

பசுவும் கன்றுகளும் பசியால் வாடுவதைப் பார்த்து எருது கவலைப் பட்டது. அது முற்றத்துக்கு வந்து வானத்தை அடிக்கடி அண்ணாந்து பார்க்கும். பின்னர் நாழைக்கு எப்படியும் மழை பெய்யும் என்று அடித்துச் சொல்லும். ”நாழைக்கு மழை நாழை மறுநாளே புற்க்கள் முழைத்துவிடும்” என்று எருது தனது பசுவுக்கும் கன்றுகளுக்கும் அடிக்கடி ஆறுதல் கூறிக் கொண்டிருந்தது. ஆனால் மழை மட்டும் வந்தபாட்டைக் காணவில்லை..

தேவதைகள் எருதின் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறின. பறந்து செல்லும்போதெல்லாம் ஆற்றுக்கு அடுத்த பக்கத்தில் இருக்கும் பள்ளத்தாக்கில் புற்களும் காய் கனிகளும் நிறைந்திருப்பதை தேவதைகள் பார்த்திருந்தன. அந்த சேதியை தேவதைகள் எருதுக்கும் பசுவுக்கும் எடுத்துக் கூறின.. வண்டியோடு ஆற்றைக் கடந்துபோய் அவற்றை பறித்துக் கொண்டு வரும்படி தேவதைகள் எருதுக்கு புத்தி சொல்லின..

ஆற்றை கடப்பதானால் ஆமையின் படகில் பயணம் செய்ய வேண்டும். அதுவும் வண்டியை அக்கரைக்கு எடுத்துச் செல்வதானால் படகோட்டியான ஆமையிடம்தான் உதவி கேட்டுப் போகவேண்டும். ஆமையிடம் உதவி கேட்க்க எருதுக்கு விருப்பமில்லை. அதனால் எருது “பசியில் செத்தாலும் சாவேனே தவிர ஒரு நாளும் அந்த படகோட்டி ஆமையிடம் போய் உதவி கேட்க்க மாட்டேன்” என்று அடித்துச் சொல்லி விட்டது..

மழை பெய்யாவிட்டாலும் ஆற்றில் மட்டும் தொலைதூரத்து மலைகளில் இருந்து தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அதனால் ஆமைகளுக்கு போதிய அளவு மீன்கள் கிடைத்தது. எருதின் துன்பத்தை பார்த்து ஆமை சந்தோசப் பட்டது.

”இப்படி ஒரு பெரிய பஞ்சம் வரும் என்று எங்கள் பரம்பரைப் புத்தகத்தில் எழுதி இருக்கிறது” என்று ஆமை தேவதைகளிடம் சொன்னது. ”அந்த கொடிய பஞ்சத்தில் மாடுகள் உலகத்தில் இருந்து முற்றாக அழிந்துபோகும்:” என்ற வசனத்தை ஆமை மகிழ்ச்சியோடு தேவதைகளுக்கு வாசித்துக் காட்டியது.

ஆனால் ஆமைப் பெண் ணுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. அது மாடுகளுக்கு உதவ விரும்பியது. ஆனாலும் ஆமைப்பெண்ணிடம் மீன்கள்தான் மட்டும்தான் இருந்தது. புற்க்களோ காய்கனிகளோ அதனிடம் இருக்கவில்லை. தனது கணவனிடம் “ஆமை அத்தான் ஆமை அத்தான் இன்று மற்றவர்கள் அழும்போது நாங்கள் சிரித்தால் நாளை நாங்கள் அழும்போது மற்றவர்கள் சிரிப்பார்கள்” என்று கவலையோடு சொன்னது. ஆமைக் குட்டிகள் “அம்மா கன்றுகளுக்கு நாங்கள் சாப்பிடும் மீனில் கொஞ்சம் கொடுப்போமா” என்று தாயை கேட்டன. ”மாடுகள் மீன் சாபிடுவதில்லை” என்று ஆமை பெண் தன் குட்டிகளிடம் கவலையுடன் சொன்னது.

அந்த இரவு முழுவதும் பசுவும் கன்றுகளும் பசியால் அழுதன. எருதுக்கும் பசி தாங்க முடியவில்லை. ”எத்தனை நாழைக்கு ஆற்றுத் தண்ணீரைக் குடிப்பது? நாழைக்கும் சாப்பிட ஏதும் கிடைக்காவிட்டால் சின்ன கன்று செத்துப்போகும்” என்று அம்மா பசு அழுதபடி சொன்னது. காலையில் பசுவும் கன்றுகளும் மயங்கிக் கிடந்ததைப் பார்த்த எருது அதிர்ந்து போனது. அழுதபடி எருது ஆற்றம் கரைக்கு ஓடி வந்தது. பச்சைப் பசேலென்றிருந்த ஆற்றின் மறு பக்கத்தை நெடுநேரம் பார்த்துக் கொண்டு நின்றது. ஆற்றில் இருந்து வடியும் நீரில் செளிப்பாக இருந்த பச்சைப் பள்ளத்தாக்கைப் பார்க்க எருதின் நாவில் நீர் வடிந்தது... அந்த பள்ளத்தாக்கிற்க்கு வண்டியில் போய் புற்களையும் காய்கனிகளையும் கொண்டுவர வேண்டும். இல்லா விட்டால் தனது கன்றுகளும் பசுவும் பசியில் செத்துப் போய்விடும் என்று எருது அஞ்சியது.

இறுதியில் வெட்கத்தை விட்டு விட்டு உதவி கேட்டு ஆமையின் வீட்டுக்குப் போவதென்று எருது முடிவு செய்தது.

3

தலை குனிந்தபடி ஆமையின் வீட்டு வாசலுக்கு வந்த எருது தயங்கித் தயங்கி கதவைத் தட்டியது. தன்னிடம் உதவி கேட்க்க எருது வந்திருப்பதைப் பார்த்ததும் ஆமைக்கு கர்வம் ஏற்பட்டது. எருதைப் பார்த்து ”யாரது? நீருக்கும் நிலத்துக்கும் இராசாவா? நீங்கள் இந்த ஏழையின் குடிசைக்கு வந்திருப்பதை நம்பமுடியவில்லையே” என்று கிண்டல் செய்தது.

எருதுக்கு கோபம் வந்தது. துயரத்தில் கண்களும் கலங்கிவிட்டது. அவமானம் தாங்காமல் திரும்பிவிட நினைத்தது. எனினும் பசித்திருக்கும் தனது கன்றுகளதும் பசுவினதும் முகங்கள் நினைவுக்கு வந்ததால் எருது சற்று தயங்கியது. நல்ல வேழையாக அந்தச்சமயம் பார்த்து யார் வந்திருக்கிறார்கள் என்று ஆமைப்பெண் எட்டிப்பார்த்தது. எருதைக் கண்ட ஆமைபெண் ”வாங்கண்ணா” வாங்கண்ணா” என்று வரவேற்றது. பின்னர் கோபத்துடன் தனது கணவன் பக்கம் திரும்பி ”மனிதர்கள் மாதிரி நடக்காதே. அவர் எங்கள் விருந்தாளி”.என்று கத்தியது.

“அண்ணா நீங்க வாறதா தேவதைகள் சொன்னது.. உங்களுக்கு ஆற்றைக் கடக்க படகுதானே வேணும்?” என்று அன்பாகச் கேட்டது. துக்க மிகுதியில் எருதின் தொண்டை அடைத்தது. சிறுது நேரம் அவமானத்தோடு குனிந்த தலையை நிமிர்த்தாமல் மெளனமாக நின்றது. பின்னர் கண்களை உயர்த்திய எருது ”ஆம் ஆமை அம்மா” என்றது. ஆமைப்பெண் குறுக்கிட்டு ”நீங்கபோய் வண்டியோடு ஆத்தங் கரைக்கு வாங்க அண்ணா மிச்சத்தை நான் பார்க்கிறேன்” என்று ஆமைப் பெண் சொன்னது. .

ஆற்றங்கரையில் ஆமை பெண்ணினதும் தேவதைகளதும் உதவியோடு எருது வண்டியை படகில் ஏற்றியது. மறு கரையில் எருத்துக்கு ஆச்சரியங்கள் காத்திருந்தது. பச்சை பள்ளத்தாக்கு உணவுக் களஞ்சியம்போல செளித்திருந்தது. ஏற்கனவே தேவதைகள் புற்களையும் கனிகளௌயும் சேகரித்து தெருவோரத்தில் குவித்து வைத்திருந்ததன.. ”புற்கட்டுக்களை நாங்கள் வண்டியில் ஏற்றுகிறோம் நீ முதலில் சாப்பிடு அப்பதான் பார வண்டியை இழுக்க முடியும்” என்று தேவதைகள் எருதிடம் கூறின. பசி கிடக்கும் பசுவும் கன்றுகளும் நினைவுக்கு வந்ததால் எருதினால் அதிகம் சாப்பிட முடியவில்லை. எருது சாப்பிட்டு முடிக்க முன்னம் தேவதைகள் வண்டியில் புல்லுக் கட்டுக்களை ஏற்றி விட்டு அவற்றின்மீது ஏறி அமர்ந்து கொண்டன. எருது ஆற்றங்கரையை நோக்கி வண்டியை இழுத்ததுச் சென்றது.

ஆறங்கரையில் எருதும் ஆமையும் தேவதைகளின் உதவியுடன் புல்லு வண்டியை படகில் ஏற்றின. ஆற்றைக் கடந்து காட்டை அடையும்போது நடுப்பகல் ஆகிவிட்டது. கசப்பு மருந்தை விழுங்குவதுபோல கஸ்டப்பட்டு ஆமைக்கு நன்றி கூறிய கையோடு எருது வண்டியை இழுத்தபடி நேரே வீட்டை நோக்கி ஓடி வந்தது. வண்டிசத்தம் கேட்டு பசுவும் கன்றுகளும் வீதிக்கு வந்துவிட்டன. வண்டியை நிறுத்திய எருது அவசரம் அவசரமாக . புல்லு கட்டுகளை இழுத்து கன்றுகளின் முன்னமும் பசுவின் முன்னமும் போட்டது. பசியில் நலிந்துபோன கன்றுகளுக்கு எருது புல்லை ஊட்டிவிட்டது. உனக்கும் பசி நீயும் சாப்பிடடி என்று எருது எவ்வளவு சொல்லியியும் கேளாமல் பசுவும் கன்றுகளுக்கு புல் ஊட்டியது..பின்னர் பசுவுக்கு எருது புல்லை ஊட்டத் தொடங்கியது கிண்டல் செய்தபடியே கன்றுக்குட்டிகள் வெளியில் விளையாடப் போயின. ஆமை அண்ணனின் புண்ணியத்தால் நெடுநாளைக்குப் பின்னர் எனது கன்றுக் குட்டிகள் வயிறாரச் சாப்பிட்டன என்று சொல்லி பசு வாழ்த்தியது.

பசுவும் எருதும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது காறு வீசத் தொடங்கியது. பலமாக வீசிய குளிர் காற்று அந்தக் காட்டின்மீது கருமுகில்களை விரட்டிக் கொண்டு வந்தது. கருமுகில்களைக் கண்டு எருதும் பசுவும் குதூகலித்ததன. அம்மா மழை வரப்போகுது என்றபடி கன்றுக்குட்டிகள் விட்டை நோக்கி ஓடி வந்தன. எருதின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிந்தது. இப்படித்தான் அந்த வருடம் மாரிகாலம் ஆரம்பித்தது. ஆமைப் பெண் குதூகலித்தது. “இனி மாடுகளுக்கு புல்லு முழைத்துவிடும்” என்று சொல்லி ஆமைப் பெண் குதூகலித்தது. பெரும் மழை பெய்ததில் காடு மீண்டும் பசுமையாகிச் செளித்தது. ஆறிலும் புது வெள்ளம் வந்தது. மாரிகாலம் எல்லோருக்கும் ஆறுதல் தந்தது.

ஆமை வெற்றியடைந்த சிறுவர்களைப்போல பெருமிதத்துடன் நான் தான் நீருக்கும் நிலத்துக்கும் இராசா என்று உரத்துச் சொல்லிக் கொண்டு திரிந்தது. இதை கேட்க்கும் போதெல்லாம் எருது முன்னைப்போல சண்டைக்குப் போகவில்லை. ஆனாலும் தோற்றுப் போன சிறுவர்களைப்போல கண் கலங்கியது.

காட்டில் இப்போது புதிதாக மாலை நேரங்களில் ஆமைக் குட்டிகளும் மாட்டுக் கன்றுகளும் தேவதைகளுடன் சேர்ந்து விழையாடத் தொடங்கின. எப்போதும் ஓட்டப்போட்டியில் மாட்டுக் கன்றுகளும் நீச்சல் போட்டியில் ஆமைக் குட்டிகளும் வெற்றி பெற்றன. மாட்டுக் கன்றுகள் ஆமைக் குட்டிகளுக்கு ஓடுவதற்க்குப் பயிற்ச்சி அளித்தன. பதிலுக்கு ஆமைக் குட்டிகள் மாட்டுக் கன்றுகளை ஆற்றுக்கு அழைத்துச் சென்று நீந்தக் கற்றுக் கொடுத்தன.

ஆமைப் பெண்ணும் பசுவும் சந்தித்துக் கொள்ளாவிட்டாலும் பிள்ளைகள் ஊடாக அடிக்கடி நலம் விசாரித்துக் கொண்டன. விழையாடி முடிந்து வீட்டுக்கு வரும் தங்கள் பிள்ளைகள் சிரித்துச் சிரித்துச் சொல்லும் கதைகளைக் கேட்டு பசுவும் ஆமைப்பெண்ணும் மகிழ்ச்சியடைந்தன.

4

ஒருநாள் அதிகாலை காட்டில் காதைச் செவிடாக்கும் சத்தங்கள் கேட்டது. காற்றில் கெட்ட மணம் வீசும் கரிய புகை நிறைந்தது, ஆற்றுத் தண்ணீரர் கலங்கலாக வந்தது. மேலே இருந்து பறவைகள் பல ஓலம் வைத்தபடி காட்டைச் சுற்றிச் சுற்றிப் பறந்தன. அவை மனிதன் யந்திரங்களோடு வந்து காட்டை அழிக்கிறான் என்று மரங்கலையும் விலங்குகளையும் எச்சரித்தன. காட்டை அழிப்பதும் ஆற்றைத் தடுத்து அணை கட்டுவதும் தப்பு என்று மனிதனுக்கு உணர்த்த தேவதைகள் ஊர்வலங்கள் போனார்கள். தேவதைகள் எவ்வளவு போராடியும் மனிதன் அவற்றைக் கேட்கவில்லை. அதனை அறிந்த எருது மீண்டும் உற்சாகமடைந்தது.

அணக்கட்டு உயர உயர ஆற்றில் படிப்படியாக தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. ஆமைகளுக்குச் சாப்பிட மீன்கள் கிடைக்கவில்லை. ஆமைகள் பறவைகளோடு போட்டி போட்டு மணலில் காய்ந்து கருவாடாகக் கிடந்த மீன்களை சாப்பிட்டு கொஞ்ச நாட்களை ஓட்டின. இறுதியில் ஆமையின் வீட்டில் சாப்பிட ஒன்றுமில்லாமல் போனது. வரண்டு கிடந்த ஆற்றில் எவ்வளவு அலைந்து திரிந்தாலும் ஆமையால் ஒரு கருவாட்டைக்கூட கண்டு பிடிக்க முடியவில்லை. ஆற்றுப் பள்ளங்களில் கிடந்த தண்ணீரை மட்டும் குடித்து அவற்றால் நெடுங்காலத்துக்கு உயிர் வாழ முடியாது. கன்றுக் குட்டிகள் மூலம் ஆமைகள் பசியால் வாடும் சேதியை அறிந்த பசு கவலை அடைந்தது.

ஆமைப் பெண்ணும் குட்டிகளும் பசியால் வாடுவதைப் பார்த்து ஆமை கவலைப் பட்டது. தேவதைகளின் ஊர்வலங்களையும் போராட்டங்களையும் பார்த்து மனிதன் நாழையே அணையைத் திறந்துவிடுவான் என்று. ஆமை நம்பியது. ஆற்றில் தண்ணீர் வந்துவிடும் இன்று வந்துவிடும் நாளை வந்துவிடும் என்று ஆமைப் பெண்ணுக்கும் குட்டிகளூக்கும் ஆமை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் ஆற்றில் தண்ணீர் மட்டும் வந்தபாடில்லை.

தேவதைகள் ஆமையிடம் வந்து காட்டின் மறு பக்கத்தில் பெரிய ஆறு ஒன்று ஓடுவதாக சொல்லின. ஓடத்தைக் எடுத்துக் கொண்டு அங்கு போனால் சந்தோசமாக வாழலாம் என்றும் ஆலோசனை கூறின. ஆமைக்குட்டிகளால் நெடுந்தூரத்துக்கு தரையில் நடந்து போக முடியாது. காட்டின் மறுபக்கத்தில் இருக்கும் ஆற்றுக்குப் படகையும் குட்டிகளையும் எடுத்துச் செல்வதானால் வண்டி ஓட்டியான எருதின் உதவி தேவை. ஆனால் எருதிடம் உதவி கேட்க்க ஆமைக்கு விருப்பமில்லை. ”பசியில் செத்தாலும் சாவேனே தவிர உதவி கேட்டு ஒருபோதும் எருதிடம்போக மாட்டேன் என்று ஆமை தேவதைகளிடம் அடித்துச் சொல்லி விட்டது.

ஆமைகள் பட்டினி கிடக்கும் சேதியைக் கேட்டு எருது மகிழ்ழ்சி அடைந்தது. எருதின் செயலைப் பார்த்து பசு கோபப் பட்டது. ”இப்படி மனிதர்கள்போல நன்றி இலாமல் நடந்து கொள்ளாதே” என்று பசு எருதைக் கண்டித்தது.

எருது தனது புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு தேவதைகளைத் தேடிப்போனது.. அது தனது புத்தகத்தில் சில பக்கங்களை தேவதைகளுக்கு வாசித்துக் காட்டியது. ஒருநாள் ஆறு வரண்டுபோகும் என்றும் ஆமை இனம் உணவும் தண்ணீரும் இன்றி அழிந்துபோகும் என்றும் அந்த புத்தகத்தில் எழுதி இருந்தது.

கன்றுக் குட்டிகளும் பசுவும் ஆமைகளின் நிலைபற்றி கவலைப் பட்டன. ”அம்மா நாங்கள் ஆமைகளுக்கு புற்கள் கொண்டுபோய்க் கொடுப்போம்” என்று கன்றுக் குட்டிகள் துருதுருத்தன. ”ஆமைகள் புல்லு சாப்பிடாது மக்காள்” என்று பசு கவலையோடு சொன்னது.

இரவிரவாக ஆமைப் பெண்ணும் ஆமைக் குட்டிகளும் பசியால் அழுதன. ”எத்தனை நாழுக்கு வெறும் ஆற்றுத் தண்ணீரைக் குடிப்பது? நாழைக்கும் சாப்பிட ஒன்றும் கிடைக்காவிட்டால் சின்ன ஆமைக்குட்டி செத்துப் போய்விடும் என்று ஆமைப் பெண் அழுதது.

காலையில் ஆமைப் பெண்ணும் குட்டிகளும் பசியில் மயங்கிக் கிடப்பதக் கண்டு ஆமை அதிற்ச்சி அடைந்தது. இன்றே காட்டைக் கடந்து தொலைதூர ஆற்றுக்குப் போகாவிட்டால் தனது குட்டிகள் இறந்துபோய்விடும் என்று ஆமை அஞ்சியது. இறுதியில் ஆமை கர்வத்தை விட்டு விட்டு தலை குனிந்தபடி போய் எருதின் வீட்டுக் கதவைத் தட்டியது.

ஆமையை வீட்டு வாசலில் பார்த்த மகிழ்ச்சியில் எருதுக்கு தலைகால் தெரியவில்லை. “யார் அது? நீருக்கும் நிலத்துக்கும் இராசவா? நீங்கள் இந்த ஏழையின் வீட்டுக்கு வந்திருப்பதை நம்பவே முடியவில்லையே?” என்று கிண்டல் செய்தது. வாசலில் ஆமையைக் கண்ட பசு வாங்கண்ணா வாங்கண்ணா என்றபடி ஓடிவந்தது. கன்றுகளும் ஆமை மாமா ஆமை மாமா என்றபடி பசுவுக்குப் பின்னே ஓடிவந்தன. ஆமையைச் சூழ்து கொண்ட கன்றுகள் “ஏன் மாமா குட்டிகளை அழைத்து வரவில்லை” என்று கேட்டன.

பேசாமல் நின்ற எருதைப் பார்த்து ”மனிசர் மாதிரி நிக்காம வந்து ஆமை ஆண்ணனோட பேசுங்க” என்று பசு கத்தியது. பசுவுக்கும் கன்றுகளுக்கும் அஞ்சிய எருது ஆமையைப் பார்த்து ”என்ன வண்டி வேணுமா?” என்று கேட்டது. ஆமை உடனேயே ஆம் என்று தலையை அசைத்தது.

5

தேவதைகளின் உதவியோடு ஆமையும் பசுவும் சேர்ந்து படகை வண்டியில் ஏற்றின. பசுவின் முலையில் பால் குடிக்க ஆமைக் குட்டிகளுக்கு கன்றுகள் உதவி செய்தன. பின்னர் கன்றுகள் சட்டி பானை போன்ற தட்டு முட்டுச் சாமான்களை வண்டியில் ஏற்ற ஆமைப் பெண்ணுக்குக்கு உதவின. ஆமை பெண் குட்டிகளை வண்டியில் ஏறும்படி கேட்டாள். ”இல்லை இல்லை ஆமை மாமி என்று கன்றுக் குட்டிகள் கத்தின. ”அவை எங்கள் முதுகில் சவாரி செய்யட்டும் ஆமை மாமி. நாங்கள் அவர்களை ஒருபோதும் நிலத்தில் விழுத்த மாட்டோம் ஆமை மாமி” என்று” கன்றுகள் கத்தின. பசுப்பால் குடித்து உற்சாகமான குட்டிகளும் “நாங்கள் கன்றுகளோடு வருகிறோம்” என்று அடம் பிடித்தன.

வண்டியில் ஆமையும் ஆமைப்பெண்ணும் அமர்ந்து கொண்டன. பசு குட்டிகளை மெதுவாக கைவ்வி எடுத்து பசு கன்றுகளின் முதுகில் ஏற்றிவிட்டது. பின்னர் வண்டியில் இருந்த ஆமைப் பெண்ணை பசு வற்ப்புறுத்தித் தனது முதுகில் ஏற்றிக் கொண்டது. இப்படித்தான் ஆமைகள் படகை வண்டியில் ஏற்றிக் கொண்டு காட்டின் மறு பக்கம் உள்ள ஆற்றுக்குப் போயின. ஆமையும் எருதும் அதிகம் பேசவில்லை. ஆனாலும் அவை அந்தப் பயணம் முழுக்க தங்கள் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்தன..

பசுவும் ஆமைப் பெண்ணும் அவற்றின் குட்டிகளும் ஜே ஜே என்று ஆர்ப்பாடம் செய்தபடி வண்டியின் பின்னே ஆடிப் பாடிச் சென்றார்கள். பயணக் கழைப்பை மறக்க அவை ஒரு பாட்டு வேறு கட்டிவிட்டன.

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
நீருக்கும் நிலத்துக்கும் நாமே ராசா
வஞ்சனை இன்றி வாழ்வோம் ஜோராய்

நீருக்கும் நிலத்துக்கும் யார் ராசா?
நீருக்கும் நிலத்துக்கும் நாமே ராசா.
நீருக்கும் நிலத்துக்கும் யார் ராசா?
நீருக்கும் நிலத்துக்கும் நாமே ராசா.


கதையின் கதை:
இந்த கதையின் சுருக்கமான முதல் வடிவம் 1998ல் என்னால் எழுதப் பட்டது. மேற்படி வரைவின் நோர்வீஜிய மொழி பெயர்ப்பு 1999ல் Kulturbro Forlag AS பதிப்பகத்தால் Godnatt என்ற சிறுவர்கதைத் தொகுப்பில் வெளியிடப்பட்டது. இக்கதை வேறு மொழிகளில் இதுவரை வெளியிடப் படவில்லை. 10 வருடம் கழித்து தற்போது மேற்படி சிறுவர் கதையை சற்று மாற்றி செம்மையாக்கி மீண்டும் தமிழில் எழுதியுள்ளேன்.

நோர்வீயிய பதிப்பின் விபரம் / Name of the Norwegian Book:
Godnatt - Fortellinger fra vide verden

Publisher:
Kulturbro Forlag AS, Oslo 1999;
ISBN 82-91234-25-6
Ib. 72 s. Kr 198,

http://www.kulturbro.no

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768