இதழ் 22
அக்டோபர் 2010
  அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...4
எம். ஜி. சுரேஷ்
 
 
 
  பதிவு:

வல்லினம் கலை இலக்கிய விழா 2 (புகைப்படத்தொகுப்பு)


பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் மலேசிய வருகை - ஒரு ப‌திவு
கே. பாலமுருகன்

பத்தி:

இசை நிறுவனம் தொடங்குவது...

அகிலன்

பின் ஜெயமோகன்: சில நினைவுகள்
சு. யுவராஜன்

கட்டுரை:

அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா
புன்னியாமீன்

நிறைவளிக்கிறதா தமிழாசிரியர்களின் இலக்கியப் பங்களிப்பு?
ஏ. தேவராஜன்

சிறுகதை:

"பெல்ஜியம்" கண்ணாடி
சின்னப்பயல்


ஒரு பைத்தியமும் ஒரு கொலையும்
ராம்ப்ரசாத்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...4
எம். ஜி. சுரேஷ்

எனது நங்கூரங்கள் ...14
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...10
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...12

லதா

ஏ.தேவராஜன்

ரெ. பாண்டியன்

ராக்கியார்

ந. மயூரரூபன்

சேகர் கவிதன்

திரைவிமர்சனம்:


நான் மகான் அல்ல - மனநோயின் வேர்களும் குற்றவாளிகளின் நகரமும்
கே. பாலமுருகன்

புத்தக அறிமுகம்:

அன்புள்ள அய்யனார் - சுந்தர ராமசாமியின் 200 கடிதங்கள்

அறிவிப்பு:


தும்பி அறிவியல் இதழ் - அறிமுக விழா
     
     
 

முதலில் ஒரு அனுமானம் தோன்றுகிறது. விரைவிலேயே அந்த அனுமானம் ஒரு கோட்பாடாக உருவாகிறது. வேறொரு புதிய அனுமானம் தோன்றும் போது, பழைய கோட்பாடு ரத்து செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒரு புதிய அனுமானம் தோன்றுகிறது. அது ஒரு புதிய கோட்பாடாக மாறுகிறது. பழைய கோட்பாட்டை ரத்து செய்கிறது. கடந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுக்கால கோட்பாடுகளின் வரலாறு சொல்லும் செய்தி இதுதான். இப்போது வரலாற்றில் உருவான கோட்பாடுகள் சிலவற்றைப் பற்றியும் அவை ரத்தான நிகழ்ச்சிகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆதியில் இருந்த தத்துவவாதிகள் அனைவரும் உலகத்தில் உள்ள பொருட்களின் ஆதாரம் என்ன என்பது பற்றியே சிந்தித்தார்கள். இவர்கள் சிந்தனை இயற்கையை சார்ந்தே இருந்தது. இதனால் இவர்கள் இயற்கைத் தத்துவவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு ‘யுனிக்’ (Unique) தத்துவவாதிகள் என்ற பெயரும் உண்டு.

மேற்கத்திய தத்துவ வரலாற்றில் மிகப் பழைய தத்துவவாதியாகக் கருதப்படுபவர் தேல்ஸ். ஆசியா மைனரில் உள்ள மிலெட்டஸ் என்ற ஊரைச் சேர்ந்த இவர் உலகம் முழுதும் சுற்றியவர். தரையில் விழுந்த பிரமிடின் நிழலைக் கொண்டு பிரமிடின் உயரத்தை மிகத் துல்லியமாக அளந்து சொன்னவர். கி.மு.585ம் ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரணத்தை மிகத் துல்லியமாக முன்னறிவித்தவர். தேல்ஸின் கோட்பாட்டின்படி, ‘உலகம் நீரால் ஆனது; எல்லாப்பொருட்களும் நீரிலிருந்து தோன்றுகின்றன. பின்னர் அழிந்து மீண்டும் நீராகவே மாறுகின்றன’ என்பதாகும். ‘உலகம் கண்ணுக்குத் தெரியாத உயிர்க்கிருமிகளால் நிறைந்திருக்கிறது. அந்தக் கிருமிகள்தான் புழு, பூச்சி, பூக்கள், தவளை, மனிதன் என்று பலவிதமான தோற்றங்கள் கொள்கின்றன’ என்பது அவரது வாதம்.

பண்டைய இந்தியாவிலும் இதே போன்ற இயற்கைத் தத்துவவாதிகள் இருந்தனர். அவர்களும் உலகத்துக்கு அடிப்படை காரணம் என்ன? எல்லா ஞானங்களுக்கும் அடிப்படை ஞானம் எது? என்பது போன்ற சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர். நமது தத்துவஞானிகளில் ஒருவர் நெருப்பே எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றார். இன்னொருவரோ காற்றே பிரதானம் என்றார். வேறொருவரோ ஆன்மா அல்லது பிரம்மம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றார்.

ஏறக்குறைய தேல்ஸின் சமகாலத்தவர் என்று கருதப்படும் இன்னொரு தத்துவவாதி அனாக்ஸிமாண்டர். ‘பஞ்சபூதங்களால் ஆன உருவங்களின் அடிப்படைத் தத்துவம், அவற்றை விடச் சூட்சுமமாக இருக்க வேண்டும்; அந்தச் சூட்சுமம் எல்லையற்றது’ என்றார். இந்த எல்லையற்ற அடிப்படையிலிருந்துதான் எல்லாப் பொருட்களும் தோன்றின என்பது அவரது கோட்பாடு. ‘பிரபஞ்சத்தில் உள்ள பல உலகங்களில் நமது உலகமும் ஒன்று. இவை பரிணாம வளர்ச்சியில் தோன்றுவதும், அழிவதுமாக இருக்கின்றன’ என்பது அவரது கொள்கை.

அடுத்த தத்துவவாதி அனாக்ஸிமெனஸ். இவர் ‘எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரம் காற்றே’ என்றார். தேல்ஸ் கூறுவது போல் எல்லாபொருட்களுக்கும் ஆதாரம் நீர் என்று வைத்துக் கொண்டால் கூட அந்த நீர் ஆவியாகத் (காற்று) தானே மாறுகிறது. அந்த ஆவிதானே மறுபடியும் நீராக மாற்றம் கொள்கிறாது? என்பது அனாக்ஸிமெனஸின் கருத்து. ஆக, தேல்ஸின் அனுமானம் ஒரு கோட்பாடாக மாறி, அந்தக் கோட்பாட்டை அனாக்ஸிமேனஸின் அனுமானம் ரத்து செய்து விட்டது.

ஆக, ஆதி தத்துவவாதிகள் யாவரும் பிரபஞ்சத்தின் அடிப்படையாக ஒரு பொருள் இருக்கிறது என்றும் அதுதான் வேறு வேறு பொருட்களாக மாறுகிறது என்றும் நம்பினார்கள். அதை ஒட்டியே அவர்களது அனுமானங்கள் இருந்தன.

அப்போது புதிய மனிதர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் ஒரு திடுக்கிட வைக்கும் அனுமானத்தை முன் வைத்தார். ‘உலகில் உள்ள எந்த ஒரு பொருளும் மாறுவதே இல்லை. அது அதுவாகத்தான் இருக்கிறது. வேறு ஒன்றாக மாறுவது இல்லை’ என்றார். அவர் இத்தாலியைச் சேர்ந்தவர். பெயர் பார்மினைடிஸ். ‘உலகில் நிலவிக்கொண்டிருக்கும் எல்லாமும் எப்போதும் நிலவிக் கொண்டிருந்ததே’ என்பது அவர் கருத்து. ’மாற்றம் என்பது வெறும் தோற்றம். கண்ணால் காண்பது பொய்; தீர விசாரித்தல் மெய். மனித அறிவின் அசைக்க முடியாத தன்மை பகுத்தறிதலே’ என்பது பார்மினைடிஸின் நம்பிக்கை.

’உலகில் உள்ள எல்லாமே மாறக்கூடியதே’ என்று அறிவித்து பார்மினைடிஸின் அனுமானத்தைத் தகர்த்தார் இன்னொரு மனிதர். அவர் பெயர் ஹெராக்ளிடஸ். ’பிரபஞ்சத்தில் இருக்கும் யாவும் இயக்கத்தில் இருக்கின்றன’ சூரியன் தோன்றுகிறது, மறைகிறது; சந்திரன் தோன்றுகிறது, மறைகிறது. ஆறு ஓடிக் கொண்டே இருக்கிறது. நாம் வலது காலை எடுத்து வைக்கும் போது ஓடும் ஆறு வேறு; அடுத்ததாக இடது காலை எடுத்து வைக்கும் போது ஓடும் ஆறு வேறு’ என்றார் அவர். மேலும், உலகம் இருமை எதிர்வுகளால் ஆனது. பகல் X இரவு, குளிர் X வெப்பம், போர் X அமைதி என்பது போன்ற எதிர்வுகள் இல்லையேல் இந்த உலகம் இல்லை என்பது அவரது கோட்பாடு. பிரபஞ்ச விதி (Universal law) என்ற ஒன்று இருக்கிறது. அதுதான் இந்த உலகத்தை ஆள்கிறது என்பது அவரது கொள்கை. அந்த பிரபஞ்ச விதியை ஒருமை (One-ness) யாக அவர் கண்டார். அதற்கு லோகோஸ் (Logos) என்று பெயரிட்டார். இதனை பண்டைய இந்தியாவின் ஓரிறைக் கொள்கையான அத்வைதத்துடன் ஒப்பிடலாம். ஹெராக்ளிடஸுக்கு முந்தைய தத்துவஞானிகள் யாரும் அடிப்படைத்தத்துவங்களைப் பற்றிச் சிந்தித்தார்களே தவிர, இவற்றை உண்டாக்கியவர் யார் என்ற சிந்தனைக்குப் போகவில்லை. இவர்களின் சமகாலத்தில் இந்தியாவில் வாழ்ந்த புத்தர், சார்வாகர் போன்றோர் கூட உலகைப் படைத்தவன் யார் என்ற கேள்வியை எழுப்பவில்லை. உயிர் பஞ்சபூதங்களிலிருந்து தோன்றியது; அதுவும் பஞ்சபூதங்களும் வேறு வேறானவை அல்ல. எனவே, அவற்றை வழி நடத்த வேறு சக்தி ஏதும் தேவை இல்லை என்று அவர்கள் நினைத்தனர்.

ஹெராக்ளிடஸுக்குப் பின் வந்தவர் எம்பெடோக்ளிஸ். இவர் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். உலகின் அடிப்படை என்று ஆளாளுக்கு நீர், காற்று, என்றெல்லாம் ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். நீர்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்றால், நீர் ரோஜாப்பூவாகவோ, பாலாடைக்கட்டியாகவோ மாற முடியுமா? எப்போதும் நீர் நிராகத்தானே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். உலகம் நான்கு மூலகங்களால் ஆனது. அவை நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகியவை. இவை ஒன்று சேரும் போதுதான் பொருட்கள் தோன்றுகின்றன என்றார் அவர். தனது இந்தக் கோட்பாட்டின் மூலம் பழைய கோட்பாடுகளை ரத்து செய்தார்.

அவருக்கு அடுத்தபடியாக வந்தவர் அனக்ஸகோரஸ். எம்பெடோக்ளிஸை மறுத்தார். என்னதான் நான்கு மூலகங்கள் ஒன்று சேர்ந்தாலும் அவை ரத்தமாகவோ எலும்பாகவோ ஆக முடியுமா என்ற கேள்வியை எழுப்பினார். உலகிலுள்ள எல்லாமே கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய துகள்களால் ஆனவை என்று அவர் அனுமானித்தார். எந்தப் பொருளைத் துண்டுகளாக்கினாலும் அந்தத் துண்டுகளில் அந்தப் பொருளின் கூறு இருக்கும் என்றார் அவர். நாம் அருந்தும் பாலில் உள்ள எலும்புத் துகள்கள் நம் உடலில் எலும்பாக உருப்பெறுகின்றன. அந்தத் துகள்களை அவர் விதைகள் என்று அழைத்தார். அவர் சூரியன் கடவுள் இல்லை; அது ஒரு மிகப் பெரிய சிவந்து கனன்று கொதிக்கும் கல் என்று சொன்னார். இதனால் அவர் மீது நாத்திகம் பேசுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

அடுத்து வந்த டெமாக்ரடீஸ் எம்பெடோக்ளிஸ் கண்டு பிடித்த ’விதைகளு’க்குப் பெயரிட்டார். அவற்றை அணு என்று அழைத்தார். அணு என்ற கிரேக்கச் சொல்லுக்கு பிரிக்க முடியாதது என்று பொருள். ஒரு பொருளைப் பல துண்டுகளாகத் தொடர்ந்து பிரித்துக் கொண்டே போனால் கடைசியாக பிரிக்க முடியாத அளவுக்கு ஒரு கடைசித் துண்டு துகளாக மிஞ்சும். அதன் பெயர் அணு என்பது அவரது வாதம். நமது உடல், ஒரு மிருகம் எதுவாக இருந்தாலும், அது இறந்து அழியும் போது அணுக்களாகப் பிரிந்து தனித்தனியே போய் விடும். பின்னர் மீண்டும் அந்தப் பிரிந்து சென்ற அணுக்கள் ஒன்று சேர்ந்து புதிய உடலை அல்லது பொருளை உருவாக்கும். அணுக்கள் பிரபஞ்ச வெளியில் அலைந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ‘கொக்கிகள்’ இருக்கின்றன. அந்தக் கொக்கிகள் மூலம் அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்கின்றன என்பது அவரது கோட்பாடு. டெமாக்ரடீஸின் அணுக்கொள்கைக்குப் பின் கிரேக்க இயற்கைத் தத்துவஞானம் ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த இயற்கை தத்துவவாதிகளுக்குப் பின் அடுத்த கட்டத்துக்கு தத்துவத்தை நகர்த்திச் சென்றவராக பித்தகோரஸைக் குறிப்பிடலாம். பித்தகோரஸ் தத்துவவாதி மட்டுமல்ல; தேர்ந்த கணித மேதையும் கூட. இவர் இந்தியாவுக்கு வந்தவர் என்றும் அங்கிருந்து ‘மறு பிறவி’, ‘பிரம்மம்’ போன்ற சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. இவரது கருத்துகளும் உபநிஷத் கால ரிஷிகளின் கருத்துகளை ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. அடிப்படைப் பொருட்களைப் பற்றிப் பேசும் போது, பஞ்சபூதங்கள் அடிப்படைப் பொருட்களுமல்ல; அதன் சூட்சுமமான உருவங்களுமல்ல என்றார்.வீணையின் கம்பியின் நீளத்துக்கும், அதிலிருந்து எழும் நாதத்துக்கும் தொடர்பிருக்கிறது. வீணையின் கம்பிகளை கை விரல்களால் அழுத்தும் போது, அந்தத் தூரத்தை அனுசரித்து அதில் ஒலி பிறக்கிறது. எனவே, எந்த ஒரு பொருளும் அதன் நீள்ம், அகலம், சுற்றளவு ஆகிய அம்சங்களைப் பொருத்து இருக்கின்றது. எனவே எல்லாப் பொருட்களும் எண்ணிக்கைகளே என்றார் பித்தகோரஸ். சூனியம் கோடுகளை உருவாக்கும்; கோடுகள் அடிப்பாகத்தை உண்டாக்கும்; அடிப்பாகம் கனப் பொருளை உண்டாக்கும்; அதாவது சூனியமே எல்லாவற்றுக்கும் அடிப்படையாகும் என்பது அவரது அனுமானம்.

பித்தகோரஸ் தத்துவப்பள்ளியை மட்டுமல்ல; மதவாத சிந்தனைப் பள்ளியையும் துவக்கி வைத்தவர் எனலாம். புத்தர், மஹாவீரர் சங்கரர் ஆகியோரைப் போலவே அவரும் பல மத மடாலயங்கள் தோன்றக் காரணமாக இருந்தார். அவர்கள் உபதேசித்த மதம் ’நிலையான’ தன்மை வாதமாகும். உலகில் எதுவும் மாறுவதில்லை. மாற்றம் என்பது தோற்றம் மட்டுமே. நுணுகிப்பார்த்தால் எதுவும் நிலையாக இருப்பதே என்பது அவர்கள் போதனை.

டெமாக்ரடீஸ் அணு என்ற பொருளை அடிப்படையாகப் பார்த்ததால் அவர் பொருள்முதல்வாதி ஆகிறார். பித்தகோரஸ் யதார்த்த உலகை விட்டு கற்பனாவாத உலகைத் தேர்ந்தெடுத்தார். அவரது இயல் இந்தியாவின் ஆன்மீக வாதத்துடன் பொருந்தக் கூடியது. அதை கருத்து முதல் வாதம் எனலாம். ஆக, இயற்கைத் தத்துவவாதிகளுக்குப் பின் வந்த சிந்தனையாளர்கள் இரு பெரும் பிரிவுக்குள் வகைப்படுத்தப் படுகிறார்கள். அந்த இரண்டில் ஒன்று: பொருள் முதல் வாதம், இரண்டு: கருத்து முதல் வாதம். கடந்த ஈராயிரம் ஆண்டுக்காலமாக இவ்விரண்டு கோட்பாடுகளும் தொடர்ந்து எதிர் எதிராக இயங்கிக் கொண்டிருகின்றன.

ஈரானிய மன்னர் கோரோஷ் கிரேக்கத்தின் மேல் படையெடுத்து வெற்றி கொண்டபோது கிரேக்கத் தத்துவ ஞானிகள் கிரேக்கத்தை விட்டுச் சிதறிச் சென்று விட்டனர். அவர்கள் எங்கெல்லாம் சென்று தங்கினார்களோ அங்கெல்லாம் மையங்களை உருவாக்கினார்கள். ஒரு சிலர் ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து துறவிகளாக வாழ்ந்தார்கள். இவர்கள் ஸோஃபிக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இஸ்லாமியச் சொல்லான சூஃபி என்ற சொல் ஸோஃபியிலிருந்து தோன்றியதே. அதற்கு ஞானி என்று பொருள். ஞானத்தைத் திரட்டுவதும் அதை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதுமே ஸோஃபிக்களின் நோக்கமாக இருந்தது. உண்மையை அறிவதற்காக நாம் நமது அறிவை எல்லாவிதமான கட்டுத்தளைகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கோஷமாக இருந்தது. ஸோஃபிக்கள் உண்மையை இரண்டாகப் பிரித்தனர்; ஒன்று: பழங்காலத்திலிருந்துன் வரும் உண்மை; இரண்டு: யதார்த்தமான உண்மை. புத்தரும் சங்கரரும் கூட இரண்டு உண்மைகளை போதித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது. புத்தர் பழங்காலத்திலிருந்து வரும் உண்மையை ‘மறைந்த உண்மை’ என்றார். சங்கரர் ’நடைமுறை உண்மை’ என்றார்.

சாக்ரட்டீஸ் வரும் வரை கிரேக்கத் தத்துவ இயல் தீவிரம் அடையாமல் இருந்தது. அவருக்குப் பின் கிரேக்கம் தத்துவத்தின் மையமாக மாறி விட்டது. சாக்ரட்டீஸ் மற்றும் அவரது வழித்தோன்றல்களான பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் தத்துவம் என்ற ஒளிப்பந்தத்தை உலகின் கண் முன் உயர்த்திப் பிடித்தனர்.

(தொடரும்)

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768