இதழ் 23
நவம்பர் 2010
 

நேர்காணல்: 
“எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.”
இளங்கோவன்

 
 
 
  நேர்காணல்:

“எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.”

இளங்கோவன்



இளங்கோவன் சிறப்பிதழ் பத்திகள்:


அக்னிக் குஞ்சு

சீ. முத்துசாமி

இடம்பெயராத இளங்கோவன் எனும் ஆளுமை!
கோ. முனியாண்டி

நிஷா : காலமும் வெளியும்

இராம. கண்ணபிரான்

FLUSH - வெறுப்பின் குருதி
சு. யுவராஜன்

இளங்கோவன் : தீ முள்

ம. நவீன்

இலக்கிய வானில் ஓர் விடிவெள்ளி
முனைவர் ஸ்ரீலஷ்மி



த‌ற்கொலை போதிக்கும் த‌த்துவ‌ங்க‌ள்!
யோகி



அஞ்சலி:


ரெ. ச‌ண்முக‌ம் : க‌லையின் குர‌ல்
ம. நவீன்



கட்டுரை:


மலேசியக் கல்விச் சூழலில் தமிழாளுமையின் சரிவும் இழந்தே பழகிய அரைநூற்றாண்டுச் சுரணையும்!
ஏ. தேவராஜன்

அயராது உழைக்கும் ஜப்பானியர்கள்
சந்தியா கிரிதர்



சிறுகதை:


சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்
கே. பாலமுருகன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...5
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...11
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



கவிதை:


இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...13

பா. அ. சிவம்

ரெ. பாண்டியன்

ஏ. தேவராஜன்




அறிவிப்பு:
 
வ‌ல்லின‌ம் ச‌ந்திப்பு 1
     
     
 

பகுதி 2

இளங்கோவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகங்களின் பிரதி வாசகர்களின் பார்வைக்காக கீழே தரப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
(The links are in pdf format. Right click at the images and choose 'save link as' to save the files)




Meow


 

Alamak



Oh!



Oodaadi


 

Satyameva Jayate



Smegma


கேள்வி: பொதுவாகத் தமிழகத்திலிருந்து சிங்கை வந்து இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை விமர்சிக்கிறீர்கள். ஒரு வேளை இவர்களும் இல்லாமல் போனால் சிங்கையில் தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சி இருக்குமா?

பதில்: அதிகார மையம் இலக்கியம் வளர்க்க வழங்கி இருக்கும் ஏராளமான வசதிகளை, இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்று உறிஞ்சிப்பெருத்து நாளையே ஓடிப்போகும் இந்த வந்தேறிகளின், தமிழ்நாட்டில் சாதாரணமாகவே கவனிப்பற்றுப் போகத்தக்க தயிர்ச்சாத, மசால் வடை, புளியோதரை, சைவ பிரியணி, வார்ப்புகளால் சிங்கப்பூர் இலக்கியம் ஒன்றும் வளரப்போவதில்லை. அப்படி வளரவேண்டும் என்று இங்கு யாரும் முட்டிக்கொள்ளவும் இல்லை. 1819 -இல் Stamford Raffles உருவாக்கிய சிங்கப்பூர் இன்றுவரைக்கும் விபச்சார விடுதிதான், சூதாட்ட மையந்தான். 9.8.1965-ல் மலேசியாவிலிருந்து விரட்டப்பட்ட சிங்கப்பூர் ஒரு நாடல்ல. இன்று சீனாவின் இன்னொரு மாநிலமாகத் தோற்றமளிக்கும் சிங்கப்பூர் என்றுமே தார்மீகத்தை அனுசரிக்கும் நாடாக முடியாதக் கற்பிதம். இதில் தீவிர சிங்கப்பூர் இலக்கியம் என்ற ஏதோ ஒன்று தப்பித்தவறி நான்கு மொழிகளிலும் உருவாகியே வந்துள்ளது. ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளில் உள்ள இளம் தலைமுறை வளர்ச்சி, தமிழில் இல்லாமல் போனதற்குக் கூறுகெட்ட மறை கலன்ற தமிழ்க் கல்விமுறையின் இலக்கியப் பாடத்திட்டமும், நவ அடிமைகளைப் பெற்றுத்தள்ளும் தமிழ் ஆசிரியர்ப் பயிற்சிக் குட்டைகளும், அதில் ஊறிய இலக்கிய விமர்சன முனைவர் மட்டைகளும் இலக்கியம் வளர்க்கிறோம் என்று செருப்பு மாட்டியும் நோபெல் பரிசு வாங்கத்தக்க புதிய ஊர்க்கூலிகளின் கவிக்கிறுக்கல்களுக்குக் கவிப்பாடையிலும் கவிச்சாக்கடையிலும் பிச்சைக்காசு விட்டெரியும் உள்ளூர் மடையர்களும் பொறுப்பு. சிங்கையின் தமிழ் இலக்கியத்தை முன்னெடுக்க முயன்ற நா.கோவிந்தசாமி தன் கல்விக் கழகப் பயிற்சி வகுப்புகளில் ஹைஹை என்று சிறுகதைக்குத் தட்டிக்கொடுத்த தமிழ் ஆசிரியர்களும், 1980-களின் இறுதியில் எழுதவந்த வாசகர் வட்டத்தின் இளையர்களான ரெ.பாண்டியன் (சிறுகதை), இராஜ சேகர் (கவிதை), இராஜா ராம் (சிறுகதை) எங்கே போனார்கள்? சிங்கப்பூர் வாழ்க்கையின் பொருளாதாரத் தேவைகளின் நெருக்கடியால் நிர்ப்பந்தத்தால் தானுண்டு தான் குடும்பமுண்டு என்று அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். சிங்கப்பூரில் யாரும் முழுநேர இலக்கிய வாதியாய் இருக்க முடியாது. வீட்டில் தோசை வார்த்துக்கொண்டு சிங்கப்பூரைப் பற்றி தவறான கண்ணோட்டத்தையும் தகவல்களையும் அரைவேக்காட்டுப் படைப்புகளில் பேதிக்குப் போகும் மாமிகளைத் தவிர அதிலும் தமிழில் முதுகெலும்புள்ள படைப்பாளியாய் இருபதென்பது தற்கொலைக்குச் சமம். இதில் தமிழை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் பல்லக்குத்தூக்கிகள் ஒரு பக்கம், பாடத்திட்டத்தில் தமிழ் இல்லாவிட்டால் நிம்மதி என்று வளரும் இளம் தலைமுறை மறு பக்கம். அரசியல் சதுரங்கத்தில் தமிழுக்கும் தமிழருக்கும் கெக்களித்தவாரே கோடித்துணி விட்டெறியும் அதிகார மையம் இரண்டுக்கும் மேலே. இந்த இலட்சணத்தில் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் தொடர்ந்தால் என்ன தொடராவிட்டால் என்ன? நாளையே சிறுபான்மைத் தமிழ் மொழி அதிகாரப்பூர்வ அந்தஸ்தை இழந்து ஹிந்தி மொழி அரியணை ஏறினாலும் ஆச்சரியமில்லை. அதற்கான அரசியல் வியாபார நாடகங்கள் மெதுவாய் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தமிழ் என்றால் என்ன என்று கேட்கும், ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் இளைய தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. அவர்கள் இனிமேல் தமிழனின் தலைவலிகளைப் பற்றி எழுதினாலும் எழுதலாம். கால்மேல் கால் போட்டுக்கொண்டு காரித்துப்பினாலும் துப்பலாம். தமிழில் எழுத யாரும் இல்லையே என்று யாரும் ஒப்பாரிவைக்கப் போவதில்லை. தலையாட்டி தம்பிரான்களைத் தவிர.

கேள்வி: இளம் தலைமுறைத் தமிழ் இளைஞர்கள் இலக்கியத்தில் நாட்டம் காட்டுகின்றனரா? அவர்களிடம் தமிழ் சார்ந்த கலையார்வம் உண்டாக? உங்களின் பங்களிப்பு என்ன?

பதில்: தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மையம் 1990 -இல் இருந்து கல்வி அமைச்சின் Gifted Education பிரிவோடு நடத்திவரும் Creative Arts Programme (CAP), தேசியக் கலை மன்றம் 2000 -இல் தொடங்கிய Mentor Access Project (MAP), இரண்டும் நாளைய எழுத்தாளர்களை உருவாக்கும் முகாந்திரமாய் ஆரம்பிக்கப்பட்டவை. இவற்றில் தமிழ் இளைய தலைமுறையினர் பங்கேற்பது மிகவும் குறைவு. அப்படி அவர்கள் கலந்து கொண்டாலும் சிறுகதையும் கவிதையும் எழுதுவது எப்படி என்று பயிற்சி கொடுக்க ஏற்பாட்டாளர்களால் கொண்டுவரப்படும் காலாவதியான மூத்திரத் தமிழ் எழுத்தாளர்கள் கொடுக்கும் இம்சையால் புறமுதுகு காட்டி ஓடிவிடுகிறார்கள். கடந்த பத்து வருடங்களில் இவற்றில் உருவாகிய இளம் படைப்பாளிகள் இன்று சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களாக ஏனைய மூன்று மொழிகளிலும் எழுதி வருகின்றனர். நான் CAP தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஆங்கிலத்தில் கவிதை, நாடகம் ஒரே ஒரு முறை தமிழில் கவிதை என்று பயிற்சி அளித்திருக்கிறேன். என்னிடம் ஆங்கிலத்தில் கவிதை பயிற்சி பெற்ற வேற்று இனத்தவர் சிலர் இன்று குறிப்பிடத்தக்கக் கவிஞர்களாக எழுதிக்கொண்டிருக்கின்றனர். பலமுறை உயர்நிலை பள்ளிகளில் தமிழில் கவிதை, நாடகப் பயிலரங்குகள் நடத்த அணுகியபோது அங்கிருக்கும் மரபூக்கிய தமிழ் ஆசிரிய வேதாளங்கள் சீனப் பள்ளி முதல்வர்களிடம் ‘நான் மாணவர்களை மூளை சலவை செய்துக் கெடுத்து வெகுஜன விரோதிகாளாக்கி விடுவேன்’ என்று வத்தி வைத்ததால் கதவுகள் மூடப்பட்டன. இழப்பு எனக்கில்லை. என் தலைக்கு மேலே சர்ச்சைக்குரிய படைப்பாளி என்ற சக்கரம் சுற்றுவதால், முன்புபோல் இல்லாமல் தற்போது ஆங்கிலப் பள்ளிகளிலிருந்து கூட அழைப்பில்லை. இந்தச் சில்லரை குருபீடங்களை எதிர்ப்பார்த்து நான் எழுதிக்கொண்டிருக்கவில்லை. நானே குருவின்றி வித்தையைக் கற்றவன்.

கேள்வி: பொதுவாகவே சிங்கையில் தாங்கள் சர்ச்சைக்குரியவாராக அடையாளம் காட்டப்படுவதன் காரணம் என்ன? இவ்வடையாளம் தாங்களாக விரும்பி ஏற்றுக்கொண்டதா?

பதில்: நான் என்ன சர்ச்சையை விறைத்த குறியாக வைத்துக்கொண்டு அலைகின்றேனா? சிங்கப்பூரில் கடந்த முப்பத்தேழு ஆண்டுகளாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் நான் எந்த அடையாளத்தையும் விரும்புவதில்லை,விரும்பி ஏற்றுக்கொண்டதும் இல்லை. அப்படி இங்குள்ள சிந்தனை காயடிக்கப்பட்ட தமிழ் ஜிங்குஜக்குகளின் குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி ஏற்றுக்கொண்டிருந்தால், நானும் எழுத்துச் செங்கல், தமிழ் வேல், வில், கம்பு, ஏவல், கூவல், தேனீ, யோனி, ஏறல், தூறல் என்று தமிழன்னையிடம் கோவணம் வாங்கிக் கட்டிக்கொண்டு மேடைதோறும் எனக்கும் தமிழ் வரும் என்று தமிழ் வாழ்த்துப் பாடி வேட்டி தூக்கிக் காட்டி புல்லரித்துப்போயிருப்பேன். நல்ல வேளையாக, நான் கற்ற கல்வி, தமிழ் இலக்கியத்தைக் கடந்த வாசிப்பு, இருமொழி எழுத்துப் பயிற்சி, பெற்ற தொழில்முறை வாழ்க்கை அனுபவங்கள், சந்தித்த கலைஞர்கள், தனித்திருக்கும் துணிச்சல், எல்லாம் என்னைத் தற்காலத் தமிழ் இலக்கியம் எனும் கருந்துளையில் (black hole) இருந்து காப்பாற்றி இருக்கின்றன.

சிறுபான்மைத் தமிழனாக இருந்தாலும், என் படைப்புகள் சுயதணிக்கை இல்லாமல் அதிகார மையத்தை நோக்கி உண்மையைப் பேசுவதால், நிறுவன அமைப்புகளின் மரபார்ந்த கருத்தியல்களை, விழுமியங்களை நிர்-நிர்மாணம் செய்து நகைப்பதால், எதையும் கேள்விக்குள்ளாக்குவதால் என்னைச் சர்ச்சைக்குரியவராகச் சிங்கப்பூரின் ஜனநாயக விரோத ஆங்கிலப் பத்திரிகைகளும் அரசின் கலாலோசைனக் குழுக்களில் வீற்றிருக்கும் மலப்புழுக்களும் சாவதானமாக முத்திரை குத்திவருகிறார்கள். இதனாலேயே நான், கெஞ்சினாலும், கொஞ்சினாலும் நட்புப் பாராட்டி வரும் ஆங்கிலப் பத்திரிகை நிருபர்களுக்கு நேர்காணல் வழங்குவதில்லை. சொன்ன கருத்தைத் திரித்துப்போட்டுச் சர்ச்சையைக் கிளப்புவதே அவர்கள் வேலை. 2008 -இல், நியூஸ்வீக் இதழின் தலைமை நிருபர் George Wehrfritz ஹாங்காங்கில் இருந்து பறந்துவந்து சிங்கப்பூரின் சர்ச்சைக்குரிய ஆங்கில நாடகக் கலைஞர்களைப் பேட்டி எடுத்தார். மற்ற நான்கு பேரைக் குழுவாகவும், என்னைத் தனியாகவும் சந்தித்தார். சிங்கப்பூரில் நாடகத் தணிக்கை, தடை, கலைகளில் அரசின் குறுக்கீடு, கருத்துச் சுதந்திரம், அரசியல் என்று நேர்காணல் நீண்டது. இறுதியில், ஆகஸ்ட் 11- ஆம் தேதி வெளியான இதழில் என் நேருரை மட்டும் கத்தரிக்கப் பட்டிருந்தது. என் கருத்துகள் சிங்கப்பூரைத் தென்கிழக்காசியாவில் மிகப்பெரிய கலைகளின் மையமாக உருவாக்க மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருப்பதாய்த் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் ஸ்தாபனத்தையும் நடப்புகளையும் அம்பலப்படுத்தியதால், பரிகசித்ததால், அமெரிக்க வெள்ளைக்காரக் குழு ஆடிப்போய் தணிக்கை செய்துவிட்டுச் சிங்கப்பூர்ப் பிரதிநிதி Sonia Kolesnikov-Jessop மூலம் ஈமெயிலில் பூடகமாக மன்னிப்புக் கேட்டது. உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சோனியா சொல்ல மறுத்தாலும், ஏதோ ஓர் அரசாங்க நாய் போடவேண்டாம் என்று காலில் விழாக் குறையாய் மன்றாடிக் கேட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். வெளியான கட்டுரையில், Alfian Sa’at மட்டும் என் தலாக் (TALAQ) நாடகத் தடை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். நான் இதுபோன்ற கோமாளித்தனங்களை ஏற்கனவே நம் தமிழ் விதூஷகர்களிடம் பார்த்திருப்பதால் பெரிதாய் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அன்று முதல் நேர்காணல் என்று வரும் எந்த வெளிநாட்டு வெள்ளைக்கார நாயையும் அண்டவிடுவதில்லை. நேர்காணல் வெளிவரும் என்று உறுதிமொழி எழுதிக்கொடுத்தால் அன்றிப் பதில் கொடுப்பதில்லை. பாருங்கள், நான் உண்டு என் எழுத்துண்டு என்று இருந்தாலும், சர்ச்சை வீட்டுக்கதவைத் தட்டுகின்றது.

நான் ஒன்றும் தீப்பந்தம் ஏந்தி இந்த நாட்டைக் கொளுத்தப்போவதில்லை; குண்டுமழை பொழிந்து முட்டாள்களை வதம் செய்யப்போவதில்லை; அரசியலில் நுழைந்து ஆட்சியைக் கவிழ்க்கப் போவதில்லை; எனக்குப் பதவியோ பணபலமோ சீடர்களோ கிடையாது என்பதை தினமும் என் கைத்தொலைபேசி, வீட்டுத் தொலைபேசி, கணினி, நாடகம் அரங்கேறும் இடம் அனைத்தையும், வாங்கும் சம்பளத்துக்குப் பாதகமில்லாமல் 24-மணி நேரமும் ஒட்டுக் கேட்கும் கண்காணிக்கும் உள்துறை இலாகா அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும், அரசாங்கத்துக்கும் நன்றாகவே தெரியும் என்று எனக்கும் தெரியும். விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கலைஞனை வாழவிடாத எந்த நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. சிறுபான்மை இனக் கலைஞனை நசுக்குவதால் நாட்டின் கலை மேம்பாட்டு முயற்சிகளுக்குதான் இழுக்கு. ஸ்தாபன மையத்தைச் சிதறடிக்கும் மற்றமைத்தன்மை உரையாடல்களை நாடகங்களாகவும் கவிதைகளாகவும் கொடுப்பதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. இந்நாட்டில் என் இருப்புக்கூட அதிகாரத்துக்கும் எனக்குமிடையே அரங்கேறும் ஒருவித நுண்ணரசியல்தான். “In a time of universal deceit, telling the truth is a revolutionary act - George Orwell.” 2005 -இல் ஆகஸ்ட் மாத உயிர்மை இதழுக்கு அளித்த நேர்காணலில் முடிவாகக் கூறியதை மறுபடியும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். “கண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் நான் நீண்டகாலமாகத் தனிமையில் நடந்து கொண்டிருக்கிறேன். இந்த அபாயகரமான பயணம் எனக்குச் சந்தோஷங்களைக் கொடுத்தாலும் பொருளாதார ரீதியில் நான் பல இழப்புக்களைச் சந்திக்கவேண்டியுள்ளது. அதற்காக எந்தக் கொம்பனிடமோ, குப்பனிடமோ, சுப்பனிடமோ, அதிகாரத்திடமோ நான் கையேந்தியதில்லை, சமரச இரசம் காய்ச்சிப் பருகியதில்லை. ஒவ்வொரு நாளும் ஆன்மீக ரீதியில் நான் வலிமை பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆனமீகம் மதம் சார்ந்ததல்ல. என்னுடைய கவிதை - நாடகம் இரண்டைத் தவிர எனக்கு வேறு மதமில்லை. கடவுள் கச்சடா எதுவுமில்லை. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?"

கேள்வி: பொதுவாக உங்கள் நாடகங்களை வெளிநாடுகளில் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? குறிப்பாகத் தமிழகத்தில்?

பதில்: 1994 -1995 வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் நான் எழுதி இயக்கி அரங்கேறிய நாடகங்களைப் பற்றிச் சொல்கிறேன். ‘You Are Here’ எனும் வெள்ளை இனவாதம் பற்றிய Theatre-in-Education நாடகம் பெர்த்தில் (Perth) உள்ள பத்து வெவ்வேறு வெள்ளை, பழங்குடிக் கல்விக்கூடங்களில் அரங்கேற்றப்பட்டது. நான் காதுகேளாதோர் சமூகத்தோடு இணைந்து தோற்றுவித்த Fingerpainters என்ற குழுவுக்காக THE CHAIR எனும் நாடகத்தை ஊமைப்பயிற்சிக் கலைஞர்களை வைத்து மேடையேற்றி அந்தக் குழுவுக்கு முறையான நிர்வாகத்தை அமைத்து மாநிலத்தின் கலை மானியத் தொகையும் பெற உதவினேன். மற்றும் ஆஸ்திரேலிய நகர வாழ்க்கையின் சிதைவைக் காட்டும் நாய்கள் (DOGS) எனும் மிகையதார்த்த நாடகம், உயிர்பெறும் மரப்பாச்சியின் மூலம் சமூக அரசியலை நக்கலடிக்கும் PUPPET etc. எனும் பின்நவீனத்துவ நாடகம். 1996-இல், ஜூலை மாதம் தென்னாப்பிரிக்காவில் கேப் டவுனில் (Cape Town) உள்ள The Hearts and Eyes Theatre Collective எனும் புகழ்பெற்ற நாடகக் குழு, என் அனுமதி பெற்று நாய்கள் (DOGS) நாடகத்தை Grahamstown தேசியக் கலை விழாவில் தென்னாப்பிரிக்க வாழ்வைப் படம்பிடிக்க வசனங்களைச் சிறிது மாற்றி இயக்கி நடித்து அரங்கேற்றினர்.

1997-இல், மே மாதம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், இரத்தக்கறை படிந்த ஸ்பானிய வரலாற்றை அல்-ஹம்ப்ராவில் (Al-Hambra in Granada) வாழ்ந்த ஓர் அலியின் ஆவியும் பந்து விளையாடும் இரு சூனியக்காரிகளும் மறுபரிசீலனை செய்யும் இரத்தம் (SANGRE) எனும் பின்நவீனத்துவ நாடகத்தை மொழிபெயர்ப்பாளர் உதவியோடு ஸ்பானிய மொழியில் உருவாக்கி, இரு ஸ்பானிய நடனமணிகளையும், கொலம்பியாவில் (Colombia) இருந்த வந்த ஒரு நடிகரையும், மேலும் ஓர் உயிருள்ள முயல் குட்டியையும் இயக்கி நடிக்கவைத்தேன். நாடகத்தின் இறுதிக்காட்சியில், சிவப்புநிறச் சாயத்தொட்டியில் முங்கி எடுக்கப்பட்ட முயல் குட்டி மேடையெங்கும் விரிக்கப்பட்ட வெள்ளைத்துணியில் குதித்துப்போய் செந்நிற வர்ணச் சுவடுகளை உருவாக்கும்போது பார்வையாளர்கள் இரு குழுக்களாய்ப் பிரிந்து கத்தி சிறு கலவரமே வெடித்தது. சில பெண்கள் அழத்தொடங்கினர். ஆண்கள் ஸ்பானிய மொழியில் திட்டினர். ஒன்றும் புரியவில்லை. எனக்கு உவப்பான ஸ்பானிய மொழியில் திட்டியதால் உவகை பொங்கியது. என் ஸ்பானிய பேராசிரியர், நாடகத்தின் வீச்சைப்பற்றி ஒரு பிரசங்கமே நடத்தி பார்வையாளர்களை அடக்கினார். முயலைக் குளிப்பாட்டி அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தோம். நான் எழுதிய ஒரே ஸ்பானிய நாடகத்தை இன்னும் பதிப்பிக்கவில்லை. இலண்டனில் உள்ள Yellow Earth Theatre என்னும் பிரபல நாடகக்குழு, நாய்கள் (DOGS) நாடகத்தை 2007-இல், அக்டோபர் மாதம் 9 -13 வரை, இன்னொரு தென்கொரிய எழுத்தாளரின் நாடகத்தோடு சேர்த்து அரங்கேற்றியது. அந்த நாடாக விழாவுக்குத் தென்கொரியத் தூதரகம் நிதியுதவி செய்தது. சிங்கப்பூர்த் தூதரகத்தை அவர்கள் அணுகியபோது, என் நாடகம் என்றதும் கதவைச் சாத்திவிட்டர்கள் என்று மலேசிய ஈப்போவைப் பூர்வீகமாகக்கொண்ட நாடக இயக்குனர் க்வாங் லோக் (Kwong Loke) தெரிவித்தார். அதே வாரம், அதே தெருவில் வேறு அரங்கில், சிங்கப்பூர்க் கலை விழா என்ற பெயரில் வெள்ளைக்காரர்களை ஈர்க்க ஒரு கும்தலக்கடிகும்மா நிகழ்ச்சி சிங்கப்பூரின் உயரமான மாஜி பிரதமர் தலைமை தாங்க நடந்தேறியது. நாய்கள் நாடகம் நிறைய சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. ஒரு சிங்கப்பூரர் உலகின் ஏதாவது ஒரு மூலையில் குசுவிட்டால் கூட The Straits Times - இன் முதல் பக்கத்தில் வண்ணப் படம்பிடித்துப் போடும், எனக்கு நன்கு அறிமுகமான சிங்கப்பூரின் ஆங்கிலப் பத்திரிகை பெண் நாடக நிருபர், நாய்கள் பற்றிய தகவல்களை இலண்டனில் இருந்து பெற்றும், அதுபற்றி எதுவும் எழுதவில்லை. கேட்டதற்குப் பக்கம் போதவில்லை என்று மூடிமறைத்தார். கேவலமாக அரசாங்கத்துக்குக் குண்டி கழுவும் பத்திரிகை. அதில் கழுத்தில் நாய்ச் சங்கிலியோடு ஊளையிடும் நிருபர்கள். பத்திரிகா தர்மத்துக்கே அவமானம். Welcome to Singapore. ஆங்கிலச் சூழலிலேயே இப்படிக் கிழிகிறதென்றால், தமிழ்ச் சூழல்? தமிழினத் தலைவர் கருணாநிதியின் குடும்ப தர்பார் நடக்கும் தமிழகத்தில், என் நாடகங்களை அரங்கேற்றும் தைரியம், 1989-இல் இருந்தே எனக்கு ஒரு தந்தையைப்போல் மிக நெருக்கமாய் இருந்துவரும் நாடகக் கலைஞர் கலைமாமணி ந. முத்துசாமியின் கூத்துப்பட்டறைக்கே இல்லாதபோது, வேறு எந்த அமைப்பு முன்வரும் என்று எதிர்பார்க்கமுடியும்? அதிலும் கனிமொழி வேறு கூத்துப்பட்டறையின் Board of Trustees -இல் ஒருவராக இருக்கும்போது? கவுண்டமணி சொன்னதுபோல், அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. ஒன்னும் கண்டுகொள்ளக்கூடாது. வேறு தமிழக நாடக அனுபவங்கள் என்றால் சிங்கப்பூர் கலை விழாவில் 1990-ல் புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் தெருக்கூத்தையும் 1998-ல் கூத்துப்பட்டறை குழுவினரின் நவீன நாடகங்களையும் அரங்கேற்ற உழைத்திருக்கிறேன். டிசம்பர் 2002-ல் சென்னை (Stella Maris College)ல் Women In Asia : Issues and Concerns மாநாட்டில் பேராளராகக் கலந்து கொண்டதோடு மாணவிகளுக்கு ஒரு நாடகப் பயிலறங்கும் நடத்தியிருக்கிறேன். ஆகஸ்ட் 2002-ல் Maxmuller Bhavan சென்னையில் எனது Flush நூல் வெளியீட்டோடு நாடகத்தின் காணொலியும் இடம்பெற்றது. சென்னையில் முக்கியான இலக்கியவாதிகளும் விமர்சகர்களும் இதழாளர்களும் வந்திருந்தனர். நாடகம் அவர்களின் மனதில் இருந்து வந்த சிஙக்ப்பூர் என்ற பிம்பத்தை உடைத்தது.

கேள்வி: கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் தவிர்த்துத் தாங்கள் இரண்டு சிறுகதைகளும் எழுதியுள்ளதாக அறிகிறோம். அதில் தொடர்ச்சியாகத் தங்கள் கவனம் செல்லாதது ஏன்?

பதில்: இரண்டு சிறுகதைகளல்ல. 27 சிறுகதைகள். திரை ஒளி சினிமா இதழில் வெளிவந்த “ஒரு நம்பிக்கை தூக்கில் தொங்குகிறது” - நகல் பிரதி இல்லை. 1975 -ல் இருந்து தமிழ் மலருக்கு அனுப்பிய 19 கதைகளும் அம்போ என்று போய்விட்டன. நானும் நகல் பிரதி வைத்துக் கொள்ளவில்லை. தமிழ் மலர் சிங்கப்பூரில் இருந்த போது அங்கே ஓடும்பிள்ளையாய் இருந்த காலஞ்சென்ற மரபுக் கவிஞர் பரணனிடம் கொடுத்த ஒரு சிறுகதையை அவர் ஆசிரியரிடம் ஒப்படைக்காமல் குடிபோதையில் கழிப்பறைத் தாளுக்குப் பயன்படுத்தி இருக்கலாம். அதற்கும் நகல் இல்லை. ‘வெள்ளிக்கிழமை காத்திருந்தவன்’ என்ற மலேசிய தோட்டப்புறப் பேய்க்கதை 1975 தமிழ் மலரில் வெளிவந்தது. மஞ்சள் பூத்துப்போன பக்கம் இருக்கின்றது. 1977 -இல் மனோரதங்களின் பாதையில் ஒரு நிர்மலப்பூ என்று தமிழ் மலரில் வெளிவந்த ஒரு கற்பனாவாத மசாலாக் கதைக்கு நகல் இல்லை. ஆனால், காலஞ்சென்ற நா. கோவிந்தசாமியின் 1977 இலக்கியக்களத் தொகுப்பில் இருக்கிறது. சிறுகதை வடிவ சோதனை செய்து தீவிரமாய் எழுதிய கதைகள் பழைய கோப்புகளில் கிடக்கலாம்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய புகை ஏணி (Smoke Ladder), அறிமுகமில்லாக் கண்ணாடிகளில் ஏதேச்சையாக (In Unknown Mirrors) என்ற இரு சிறுகதைகளும் 1990 -இல் சிங்கப்பூர்ப் புனைகதைத் தொகுப்பில் (The Fiction of Singapore - Anthology of ASEAN Literatures) இடம்பெற்றன. முதலில், 1992 சிங்கா கலை சஞ்சிகையில் ஆங்கிலத்தில் சிறுகதையாய் வந்த FLUSH தான், பிறகு 2001-ல் சிங்கப்பூரின் சீன இனவாதப் பிரச்சினையைப் போட்டுடைத்த என் முக்கியமான நாடகமாய்ப் புதுவடிவம் பெற்றது. உண்மையில் FLUSH, The Straits Times பத்திரிகையின் கலைப்பகுதி ஆசிரியர் கவிஞர் Koh Buck Song வருட இறுதி சிறப்புச் சிறுகதைப் பகுதியில் வெளியிடக் கேட்டுக்கொண்டதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. ஆனால் இறுதியில், மற்ற எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமே பிரசுரமாயின. கடைசி நேரத்தில் அவர் எவ்வளவோ போராடிப் பார்த்தும், சர்ச்சையைக் கிளப்பும் என்று என் கதை நீக்கப்பட்டது. இந்த FLUSH சிறுகதையை நான் கலந்துகொண்ட சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலிய இலக்கிய மாநாடுகளிலும், விழாக்களிலும் வாசித்திருக்கிறேன். வாசித்து முடித்ததும், விருந்துநேரத்தில் யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். சீனாவில் இருந்து வந்த சீனர்கள் மட்டும் பேசுவார்கள்; விவாதிப்பார்கள். இவ்வளவுக்கும், சிங்கப்பூரின் சீன இனவாதத்தை இலக்கியத்தில் அம்பலமாக்கிய, அதுவும் சிறுபான்மைத் தமிழன் ஒருவன் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கதை. இத்தனை வருடங்களுக்குப் பின் இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகுதைய்யா. சிறுகதையில் எனக்கு ஆர்வம் குறைந்தது. வெறும் மௌனவாசிப்புக்கான சிறுகதையை விட ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கும் அதிரடி நாடக அரங்கின் பனிமுக எரிமலை வீச்சு என்னைக் கவர்ந்தது. சிறுகதை அடக்கமான கைத்துப்பாக்கி என்றால் நாடகம் AK47. நான் AK47-னைத் தேர்ந்தெடுத்தேன்.

கேள்வி: சிறுகதையைக் கைத்துப்பாக்கியாகவும், நாடகத்தை AK 47-னாகவும் ஒப்பிடும் தொடர்ச்சியில் சினிமாவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நாடகத்தைக் காட்டிலும் சினிமாவின் அடைவு விஸ்தாரமானது அல்லவா? ரித்விக் கடக் போன்றோர் நாடகம் மூலம் தொடங்கினாலும் பின்னர் சினிமா இயக்கத்தைத் தேர்ந்து கொண்டது பற்றி உங்கள் எண்ணம் என்ன? நீங்கள் ஒரு பயிற்சிபெற்ற Cameraman என்று அறிகிறோம். நாடக இயக்கத்தின் நீட்சியாக நீங்கள் சினிமாவை எப்படி அணுகுகிறீர்கள்? சினிமா தொடர்பான உங்கள் முயற்சிகள் அல்லது மனத்தடைகள் பற்றிக் கூறுங்கள்.

பதில்: சினிமாவைப் Bazooka-வோடு ஒப்பிடுவேன். நான் முறையாக ஒளிப்பதிவுத் துறையில் பயிற்சி பெற்றவன். 1980 -இல் இருந்து 1981-வரை சிங்கப்பூர்த் தொலைக்காட்சி நிலையத்தில் நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒளிப்பதிவாளரின் மிகக் கடுமையான ஆறுமாத நேரடிப் பயிற்சிக்குப் பிறகு அவர் வைத்த தேர்விலும் தேறி தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் முதல் முதலாக ஒளிப்பதிவு செய்தது ஒரு மரணத்தை. ஓர் அதிகாலை மழையில், சிங்கப்பூர் இராணுவக் கனரகவாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதிலிருந்த பல இராணுவத்தினர் தூக்கியெறியப்பட, ஒருவர் மட்டும் சாலையோரத்தில் நாட்டுக்காக உயிர்விட்டார். மழையில் நனைந்துகொண்டே உடலின் பக்கத்தில் அமர்ந்து படம்பிடித்தது மறக்கமுடியாத அனுபவம். செய்திப் பிரிவில் இருந்த என்னைத் தமிழ்ப் பிரிவுக்கு மாற்ற முயன்றனர். நான் ஆங்கிலப் பகுதிக்கு வேலை செய்து என் திறனை வளர்த்துக்கொள்ள முடிவு செய்திருந்தேன். மற்ற சராசரி ஒளிப்பதிவாளர்களைவிட என் அடிப்படைக் கல்வித்தரம் உயர்ந்தது என்பதால் ஆங்கில நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்பாளராகும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். மேலதிகாரியிடம் எவ்வளவோ கேட்டும், தமிழ்ப் பிரிவு உன்னைக் கேட்கிறது, நான் ஒன்றும் செய்யமுடியாது என்று கையை விரித்துவிட்டதால், பீயைத் தின்பதற்கு ஒப்பான தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களுக்கும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் வெளிப்புற ஒளிப்பதிவாளனாய் இருப்பதை விட நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவதே மேல் என்று இராஜினாமாக் கடிதத்தை நீட்டினேன்.

நான் தொலைக்காட்சி நிலையத்தில் சேர்வதற்கு முன்பே, உலகத் திரைப்படங்களைப் பற்றிய ஆழமான வாசிப்பு எனக்கிருந்தது. அதோடு Singapore Film Society -இல் நான் அங்கத்தினன். சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், ஷ்யாம் பெனேகல், மிருனாள் சென் போன்ற இந்தியத் திரைப்பட ஜாம்பவான்களையும் சேர்த்து, Sergei Eisenstein, Akira Kurosawa, Luis Bunuel, Ingmar Bergman, Federico Fellini, Bertolucci, Pasolini, Orson Welles, Godard, Roman Polanski, Ousmane Sembene, என்று (அடுக்கிக்கொண்டே போகலாம்) அனைவரின் படங்களையும், ஆப்ரிக்க, இலத்தின் அமெரிக்க இயக்குனர்களின் படங்களையும் சுவாசித்தவன் நான். எனக்குக் கிடைத்த அனுபவத்தோடும் ஒளிப்பதிவாளர் சான்றிதழோடும், American Film Institute, London International Film Institute, பின்னர், இந்தியாவில் Pune Film Institute, கடைசியில் சென்னை அடையாறு Film Institute என்று பணச்செலவைக் கருதி இறங்கி இறங்கி முயற்சி செய்தும், தந்தையார் ஒரு சல்லிக்காசு கொடுக்கமாட்டேன், சினிமாக் கூத்தாடி ஆவதென்றால் வீட்டைவிட்டு வெளியே போ என்று என் கனவுகளைச் சுட்டுத் தள்ளிவிட்டார். இன்று சிங்கப்பூரில் ஆரம்பக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் திரைப்பட மானியத் தொகை அன்று அறவே கிடையாது, அன்றோடு என் திரைப்பட ஒளிப்பதிவாளர் பின் இயக்குனர் ஆகும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மேடை நிகழ்கலைக்கு மாறிவிட்டேன்.

நான் முழுமையாக 16mm film -இல் பயிற்சி பெற்றவன். 1981 -இல் வீடியோ காமெராக்கள் சந்தையில் வெளிவந்தன. நான் பகுதிநேர வீடியோ ஒளிப்பாதிவாளராகச் சுமார் ஏழு வருடங்கள் குறிப்பாகச் சீன மரணச் சடங்குகள் (சீனர்கள் துரதிர்ஷ்டம் என்று படம்பிடிக்கமாட்டார்கள் - புதைகுழியில் போட்டு மூடும் வரை ஒளிப்பதிவு செய்தால் நல்ல தொகை), பொதுவான சமூக நிகழ்வுகள், நான்கின திருமணங்கள், தொழிற்சாலை விளக்கப் படங்கள், என்று என் ஒளிப்பதிவு அரிப்பைத் தீர்த்துக்கொண்டேன். அன்று இன்றைய தொழில்நுட்பங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், காட்சிகளைப் பதிவு செய்யும் போதே அவற்றை mental editing செய்து பதிவுசெய்யும் திறமை பெற்றிருந்ததால், வேலை எனக்குச் சுலபமாக இருந்தது. தற்போதைய சிங்கப்பூர் அதிபரின் ஒரே மகளின் திருமண சடங்கையும் அன்று ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். என் பணிகள் மாறவும், வீடியோ தொழிலை விட்டுவிட்டேன். இன்று குறும்படம் முதல் திரைப்படம் வரை எடுக்கும் சாத்தியக்கூறுகள் தென்பட்டாலும், பண முதலீட்டையும் யோசிக்க வேண்டி உள்ளது. யாரும் அழைத்தால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று ஒத்துழைக்கும் ஆர்வம் இருக்கிறது. 1998 -இல், Tiger’s Whip என்னும் சிங்கப்பூரில் தயாராகித் தோல்வியடைந்த ஆங்கிலப் படத்திலும் இந்திய யோகியாக ஒரு Cameo Role பண்ணியிருக்கிறேன். நாடக எழுத்து இயக்கம் என்பது திரைப்படத்தைவிட அதிக சிரமமானது. பார்வையாளர்களின் எண்ணிக்கையும் பரப்பளவும், சொல்முறை உத்திகளும் நாடகத்தைவிட திரைப்படத்துக்கே அதிகம் என்பதை மறுக்கமுடியாது.

இன்று பல நாடக இயக்குனர்கள் ஆட்டப்பிரதியோடு குறும்படக் காட்சிகளையும் நாடகத்தின் ஓர் அங்கமாக இணைத்துக்கொள்கிறார்கள். இதில் எழுத்துத் திறமை இல்லாமலும், கற்பனை வறட்சியாலும் படக்காட்சிகளை நாடக அரங்கில் காட்டுபவர்களே அதிகம். மின்சார வெட்டு வந்தால், ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கூட நடிகர்கள் நாடகத்தைக் காப்பாற்ற முடியும். ஆனால், வெறும் மின்சாரத்தை நம்பிய தொழில் நுட்ப ஜோடனைகள் ஏமாற்றிவிடும். என் தடைசெய்யப்பட்ட தலாக் நாடகத்தை, Shabana Azmi-யையோ, Nandita Dass-சையோ கதாநாயகியாய் நடிக்கவைத்துத் திரைப்படமாக எடுக்க ஒருவர் ஆர்வம் காட்டினார். வியாபாரிகளிடம் திரைக்கதையில் சமரசம் செய்துகொண்டு கதையை விற்க விருப்பமில்லாததால், மறுத்துவிட்டேன். என்னுடைய நாடகங்களில், திரைப்படமாகவேண்டிய பல கதைகள் இருக்கின்றன. நான் என் நாடகங்களை ஒரு திரைப்படத்தை இயக்குவதுபோலவே இயக்கி அரங்கேற்றிவருகிறேன். இன்றும் விடாமல் தென்கொரிய, ஈரானிய, பிலிப்பினோ, ஐரோப்பிய, ஆப்ரிக்க தீவிர சினிமாவை இரசித்து உத்வேகம் பெறுகிறேன். இரண்டரை மணி நேரம் மூளையைக் கழற்றிவைத்துவிட்டு எப்படி இரசனையை வளர்த்துக்கொள்வது என்ற ஜெகஜால வித்தையைக் கற்றுக்கொள்ள மட்டும் தமிழ்ப்படங்கள் பார்க்கிறேன்.

கேள்வி: இதைத் தவிர்த்துத் தாங்கள் இசைப் பாடலாசிரியராகவும் இருந்துள்ளீர்கள். அது குறித்துக் கூறுங்கள்?

பதில்: அண்மையில் வெளிவந்த ஜக்குபாய் படத்தின் இசை அமைப்பாளர் ரபி இசையமைத்துச் சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல பாடல்களை இயற்றியவன் நான். 1991-இல் தமிழின் முதல் RAP பாடலான ஜோஜோ முனியாண்டி பாடல், காமாசோமா மாமா என்னும் RAP, புயலுக்கென்ன பூட்டு நெருப்புக்கென்ன தீட்டு - RAP, மந்திரம் வச்சாளே மச்சமுள்ள கண்ணாலே. தொடர்கதையா சிறுகதையா, விண்ணை ஆளும் சங்கீதம், கருப்பாயீ கருப்பாயீ எங்கப்போறே, கண்ணே ரோஜாப்பூவிலே தூளியிடவா, சோகம் பூத்திருக்கும் பாதை, போன்றவை நான் எழுதியவை. ரபி வெளியிட்டிருக்கும் Breakthro’ Karupayee இசைவட்டுகளில் என் பாடல்கள் உண்டு. ஆனால், இதுவரை எவரிடமும் காப்புரிமையை விட்டுக்கொடுக்க எந்தக் கையெழுத்தும் போடவில்லை, ஒரு காசும் வாங்கியதில்லை. சிங்கப்பூரின் மதுபானக்கூடங்களிலும், வானொலியிலும் (வேண்டுமென்றே என் பெயர் சொல்லப்படாமல்) ஒலிக்கும் என் பாடல்களின் காப்புரிமை என்வசம்தான் இருக்கிறது. ரபியின் காப்புரிமை இசைக்கு மட்டுமே. Intellectual Property என்றால் என்னவென்று பேந்த பேந்த விழிக்கும் காட்டுமிராண்டிகள் பாட்டைக்கேட்டுத் தொலைந்துபோகட்டும் என்று நானும் கடந்த 20 வருடங்களாகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டேன்.

கேள்வி: உங்கள் கவிதையிலும் நாடகத்திலும் உள்ள தீவிரத்தன்மை உங்களின் இசைப்பாடல்களில் காணமுடிவதில்லையே? (உங்களின் பெரும்பாலானபாடல்களைச் செவிமடுத்துள்ளதால் கேட்கிறேன்.)

பதில்: என் இசைப் பாடல்களுக்கும், ஆத்மார்த்தமான என் இலக்கியத் தீவிரத்தன்மைக்கும் தொடர்பில்லை. Rap பாடல்கள் மட்டுமே விதிவிலக்கு. மற்ற அனைத்தும் மெல்ல மெல்ல இசை வியாபாரியான ரபி என்னும் இசை அமைப்பாளருக்காக இயற்றப்பட்ட வெறும் கற்பனாவாதக் கூளங்கள். இதற்கும், எதையும் நியாயப்படுத்தவேண்டிய அவசியமில்லாத ஒரு கொதிப்பேற்றும் பின்னணி உண்டு. எனக்கு உலக இசையில் அதிக நாட்டமுண்டு. 1975 -ல் மறைந்த குழல் இசைக் கலைஞர் சிங்கப்பூர்க் கர்ணனைச் சந்தித்தேன். மலையாளியான அவர் அப்போது உள்ளூர்த் தமிழ் இசைப்பாடல் வட்டுகளை வெளியிட்டிருந்தார். அவ்வப்போது அத்திப்பூத்தாற்போல் மலேசிய சிங்கப்பூர் வானொலியில் ‘மூங்கிலென்னும் குழலினிலே’, ஜேம்ஸ் போண்ட் மற்றும் சீன இசையைக் காப்பியடித்த ‘அன்றில் இருந்து இன்று வரை ஆண்டவன் நேரில் வந்ததில்லை’ போன்ற பாடல்கள் ஒளிபரப்பாகும். அப்பாடல்களை எழுதியவர் பானுதாசன் என்று ஞாபகம். ஒருவகையில் முன்னோடியான கர்ணனைச் சந்தித்தபோது என் மரபுக் கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. நான் எப்போதும் கையோடு தூக்கிக்கொண்டு அலையும் என் மரபுக் கவிதை நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தார். நான் அவருக்குப் பாடல் எழுத விரும்பினேன். அவர் எனக்குக் குழல் வாசிக்கக் கற்றுக்கொடுத்துத் தன் சீடனாக்க விரும்பினார். மீண்டும் சந்திக்க ஏற்பாடானது. ஆனால், என் தந்தையார் இந்த முயற்சிக்கும் தடைவிதித்ததால் உலகம் ஒரு குழல் கலைஞனை இழந்தது.

பின்னர், 1982-இல் இருந்து 1984 வரை இளங்குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளியில் சமூகநல அதிகாரியாக வேலை பார்த்தபோது சக அதிகாரியும் பிரிய நண்பருமான அந்தோணி மார்ட்டின் ஹோகனிடம் கித்தார் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். கித்தார் மீட்டி ஆங்கிலப் பாடல்களைப் பாடுவது என் பொழுதுபோக்கானது. 1985 -இல் கீழ்நீதிமன்றத்துக்குப் பணிபுரியும் Probation Officer -ஆகப் போனதோடு கித்தார் வாசிப்புக்கும் முழுக்கு. இருப்பினும், 1982 -இல் அமெரிக்காவில் Grandmaster Flash and the Furious Five வெளியிட்ட The Message எனும் hip-hop rap பாடல் என்னை மிகவும் பாதித்தது. ஒடுக்கப்பட்ட அமெரிக்க கறுப்பினத்துக்காகக் குரலெழுப்பிய அந்தப் பாடல் rap இசையின் முன்னோடியானது. நான் ஏற்கெனவே 1970-களில் இருந்து இங்கிலாந்தின் Pink Floyd இசைக்குழுவின் Psychedelic, Progressive, Sonic Experimental, Philosophic Rock இசைப்பாடல்களின் தீவிர இரசிகன். அக்குழுவின் பாடாலசிரியர் Roger Waters அற்புதமான கவிஞர். Another Brick in the Wall என்னும் இசைப்பாடலை மறக்கமுடியாது. 1980 -இல் தென்னாப்பிரிக்க அரசாங்கம் அந்த ஆல்பத்துக்கும் பாடலுக்கும் தடை விதித்தது. அந்தப் பாடலின் தாக்கத்தில் தான் என்னுடைய The Brick எனும் அரசியல் அங்கத நாடகம் 1991-இல் அரங்கேறியது. அமெரிக்க rap குழுவான Public Enemy, Bob Marley, நைஜீரிய இசைக்கலைஞரும் புரட்சிவாதியுமான Fela Kuti போன்ற பலரும் என்னை ஆட்கொண்டவர்கள்.

1991-இல் ரபியை சந்தித்தபோது ரபி சிங்கப்பூர்த் தொலைக்காட்சியின் நீர்த்துப்போன தமிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குத் தன் வசந்தம் குழுவினரோடு வாசித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார். அவரிடம், தமிழ்ச் சினிமாப் பாடல்களின் இறுக்கமான ஆதிக்கத்தை உடைத்துத் தென்கிழக்காசியாவில் தமிழ் இசைப்பாடல்களுக்கென்று ஒரு தனி அடையாளத்தை மலாய் (M. Nasir), சீன ஆங்கில இசைத்துறைகள் போல் உருவாக்குவோம் என்று திட்டமிட்டேன். அவரும் ஆமோதித்தார். அதனால், என் rap பாடல்களும் உருவாகின. இடையிடையே கொஞ்சம் கவிதாபூர்வமான காதல் பாடல்களையும் எழுதித்தருமாறு வேண்டிக்கொண்டார். அவர் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் பாடுபவர். மலாய் இரண்டாம் மொழியாய்ப் படித்தவர். ஆனால், நான் எதிர்பார்த்ததுபோல் அவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் rap பாடல்களில் அக்கறை காட்டவில்லை. சர்ச்சைக்குரிய கவிஞனோடு இணைந்து பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் வெறும் தொழில்முறைக் கூத்தாடியாகவே இருக்க விரும்பினார். தொலைக்காட்சியின் தேவைகளுக்கு ஏற்ப வித்தியாசமான உணர்வுப் பாடல்களை எழுதுவேன் என்று எதிர்பார்த்தார். எனக்குப் பெருத்த ஏமாற்றம். எனது தலாக் நாடகத் தடையின் பிறகு, வேறு ஒரு முஸ்லிமைக் கொண்டு மசாலாப் பாட்டெழுதிகொண்டார். அறவே ஒதுங்கிவிட்டார். அதனால், கடந்த 11 வருடங்களாகத் தொடர்பைத் துண்டித்துக்கொண்டேன். இன்று உள்ளூர்ப் பாடல், மண்ணின் மைந்தர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் தமிழ்க்கொலை, கருத்துக்கொலையோடு ஒளியேறும் பாடல்களைச் செவிமடுக்கும்போது, அந்தக் காலத்தில் நாங்கள் எவ்வளவோ பரவாயில்லை. இருந்தாலும், ஒரு துறையில் ஏற்பட்ட தோல்வியின் இரணம் இன்னும் ஆறாமல் வலிக்கின்றது. நான் இசைப் பாடல்களுக்குக் காசுவாங்காமல் எழுதியதுதான் ஒரே மனநிறைவு. இதற்கெல்லாம் கழுவாய் தேடுவதுபோல் செப்டம்பர் 2004-ல் நான் ஆங்கிலத்தில் எழுதிய நிழல் பிடிப்பவன் - Shadow Catcher என்ற நீளமான Rap பாடல் Belgium நாட்டைச் சேர்ந்த Dr. Robert Casteels இசையில் சிங்கப்பூரின் முன்னணி ஆங்கில Rap பாடகர் Sheikh Haikel பாட Nanyang Academy Of Fine Arts Chorus-ன் நூறு குழுப்பாடகர்களின் பின்னனியோடு அரங்கேறியது. Dr. Robert Casteels 2005-ல் வெளியிட்ட இசைவட்டிலும் இடம்பெற்றது.

கேள்வி: மலேசியாவைப் பொருத்தவரை மீடியொகர் எழுத்தாளர்களே மலேசிய எழுத்தாளர்களாக அடையாளம் காட்டப்படுகின்றனர். சிங்கையின் நிலை என்ன?

பதில்: எங்கெங்குக் காணினும் பாரதி சொன்ன சக்தி இல்லை, மீடியோக்ரிட்டியே ஆளுகின்றது. மௌடீகத்தை மூச்சிலும் பேச்சிலும் சுமந்துகொண்டு வாந்திபேதியோடு இலக்கியத்தை விசிட்டிங் கார்டாய்ப் பயன்படுத்திக்கொண்டு சோரம் போய்க்கொண்டிருக்கும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு அடையாளம் மீடியோக்ரிட்டி என்ற சராசரித்தனம். இதில் எழுத்தில் சூளுரைத்துவிட்டு “ஐயோ நாளைக்கு வேலை போய்விடுமே, விருது கிடைக்காதே! யாராவது எழுதிப்போட்டு இசாவில் கம்பி எண்ண வேண்டுமே,” என்ற நடுக்கத்தில் அதிகார மையத்துக்கு உடனே குரங்குகளைப்போல் புட்டந்தூக்கிக் காட்டி “ஏறிக்க மவராசா ஏறிக்க... நல்ல அடிச்சுக்க... இராமனுக்குப் பெருசா... இராவணனுக்குப் பெருசா... மாதவிக்கு மாதவிலக்கு... கண்ணகிக்கு என்ன கணக்குன்னு கவியரங்கம்.... இலக்கிய மாநாடு.... பட்டிமன்றம்.... போட்டிகீட்டி எல்லாம் ஏற்பாடு செய்திருக்கோம்... அவாளும் இவாளும் வந்து தலைமை தாங்கணும்...” என்று அங்கப்பிரதட்சணம் செய்யும் காக்கைகளை வெளுக்கவே முடியாது. நீங்கள் மலேசியப் பெயர் பட்டியல் கொடுக்கவில்லை என்றாலும் எழுத்தாளர் கழகங்களிலிருந்து நாளேடுகள், வார மாத இதழ்கள்,வலைமனைகள் வரை நீளும் பிரகிருதிகளை நானறிவேன். சிங்கையின் நிலை என்ன என்று முதலிலேயே பட்டியலிட்டுவிட்டேன். தேவாங்குகளுக்கு எதற்குத் தீவிர இலக்கியத் திவ்யதரிசனம். பாலத்துக்கு இருபுறமும் பரதமாடுவது புழுக்கைகள்தான்.

கேள்வி: மலேசிய இலக்கியத்தைப் பொருத்தவரை நீங்கள் முக்கியமாகக் கருதும் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் பிரதிகள் குறித்தும் சொல்லுங்கள்?

பதில்: 1997 டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி, மீண்டும் இந்தோனேசியாவில் மேடானுக்குத் திரும்பாமலேயே எங்கோ மதுரையில் ஓர் ஆம்புலன்ஸ் வண்டியில் அனாதையாய் இறந்துபோன கலைஞன் ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால்(1950 ), புயலில் ஒரு தோணி (1962) படைப்புகளைப்போல் பிரம்மிக்க வைக்காவிட்டாலும், வடிவத்திலும், கலை நயத்திலும், சொல்ல எடுத்துக்கொண்ட பிரச்சனையிலும், என் “இன்றைய” எதிர்பார்ப்புக்குள் வராமல் போனாலும், படித்தவை, இரசித்தவை, தேர்ந்து படிக்கச் சொல்பவை :- மறைந்த கவிஞர் கா. பெருமாளின் துயரப் பாதை, மலபார் குமாரின் செம்மண்ணும் நீல மலர்களும், ஐ. இளவழகின் இலட்சியப் பயணம், மறைந்த சா. ஆ. அன்பானந்தனின் மரவள்ளிக்கிழங்கு, ஆர். சண்முகத்தின் சயாம் மரண ரயில், மறைந்த நண்பர் இளஞ்செல்வனின் சிறுகதைகள், இராஜகுமாரனின் சிறுகதைகள், தொடர்ந்து எழுதாமற்போன அரு. சு.ஜீவானந்தத்தின் சிறுகதைகள், இந்துமதவாதியாகிவிட்ட நாகப்பனின் கோணல் ஆறு சிறுகதைகள், அ. ரெங்கசாமியின் லங்காட் நதிக்கரை, ரெ.கார்த்திகேசுவின் சிறுகதைகள், இதுவரை குறிப்பிட்டோர்க்கான என் இரசனை அளவுகோலைத் தாண்டி, மா. சண்முக சிவாவின் சிறுகதைகள், கோ. முனியாண்டியின் கவனமாகத் தொகுக்கப்படவேண்டிய கவிதைகளும் சிறுகதைகளும், மலேசியாவுக்கு வெளியே ஆங்கில வடிவத்தில் பயணிக்காமல் இன்னும் தமிழ் இலக்கியத்தில் கம்பு சுழற்றிக்கொண்டிருக்கும் கலைஞன் சீ. முத்துசாமியின் மண்புழுக்கள் குறுநாவலும், சிறுகதைகளும். இளம் தலைமுறை எழுத்தாளர்களில் இன்னும் எதிர்பார்க்க வைப்பவை, நம்பிக்கை அளிக்கும் நவீனின் கவிதைகள், இசையில் ஒன்றிவிட்ட அகிலனின் கவிதைகள், ப. அ. சிவத்தின் கவிதைகள், வியக்கவைக்கும் தனித்துவமிக்க மஹாத்மனின் கதைகள், சு. யுவராஜனின் சிறுகதைகள், கே. பாலமுருகனின் சிறுகதைகள். இவ்வரிசைகள் எந்த நேரத்திலும் மாறலாம். இதில் ஏன் ஒரு பெண் படைப்பாளியும் இல்லை என்று கேட்கவேண்டாம். மீசை வைத்த ஆண்களே, நாளை வேலை போய்விடுமே, அடியாட்கள் வீட்டுக்கதவைத் தட்டுவார்களே, ISA (Internal Security Act)-இல் அடைத்துவிடுவார்களே என்று தயக்கத்தோடு எழுதிவரும் சூழலில், அவர்களின் இலக்கியத் தற்காப்புணர்வு சார்ந்த பயங்கள் தற்சமயத்துக்கு நியாயமானவைதான். ஆபத்திலாத தன்னுணர்வு படைப்புகள் தற்காலிகமானவையாகவும் இருக்கலாம். காத்திருப்பதில் தவறில்லை. ஒரு படைப்பாளியின் முக்கியத்துவத்தை, அதிகார மையத்திடம் குளிர்காய்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குக் கோவிந்தாக்கொள்ளி போடக் காத்திருக்கும் எழுத்தாளர் சங்கமோ, பத்துப்பேரைப் பன்னாடைகள் என்று திட்டித் தீர்த்து பொன்னாடை போர்த்தி அரிய விலை கொடுத்து நூல்வாங்கி புளகாங்கிதமடையவைக்கும் போலி அரசியல்வாதிகளோ, பட்டம் பதவிக்காகத் தன் வீட்டுப் பெண்களைக்கூடத் தயங்காமல் காசுக்காகவும் பென்ஸ் காருக்காகவும் விற்கத் தயாராய் இருக்கும் தமிழ்ப் பத்திரிகையாசிரியனோ முத்திரைக் குத்த முடியாது. தன்னம்பிக்கையும், தன்மானமும், மனசாட்சியும், அறச்சீற்றமும் கொண்டு மௌனக்கலாச்சாரத்தை உடைக்கும் விழிப்புணர்வுள்ள படைப்பாளனின் படைப்பே காலங்கடந்தாலும் அதை உறுதிப்படுத்தும். மலேசியாவில் அதிகபட்ச ஒடுக்குமுறைக்குள்ளாகிவரும் சிறுபான்மைத் தமிழினத்திலிருந்து எழுதவந்திருக்கும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள், இதுநாள்வரை ஜனரஞ்சக சூடுபோட்டுக்கொண்டு இலக்கியப் புலிகளாய் உலாவந்த சொறிப் பூனைகளின் கக்கல்களில் கால் வைக்காமல், சும்மா தலையில் அடித்துக்கொண்டு போய்விடாமல், பிசிறில்லாத, கூர்மையான படைப்புகளால் தம் விளிம்புநிலை சமுதாயத்தின் நசுக்கப்படும் வரலாற்றையும், சோதனைகளையும், வேதனைகளையும் ஆவணப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: தொடர்ச்சியாக நீங்கள் மலேசிய எழுத்துப் போக்கை அவதானித்து வருகிறீர்கள்? இன்றைய இளம் தலைமுறையினரின் இலக்கியப்போக்கை நீங்கள் எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறீர்கள்?

பதில்: தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் ஓட்டை வான்குடை விரிப்புக்குள் தொங்கிக்கொண்டிருக்கும் ஒட்டடைகள் புத்திலக்கியவாதிகள் என்று கோஷம் போட்டுக்கொண்டிருக்க, இலக்கியத்தை வாழ்க்கையின் ஆயுதமாய் ஏந்தி முன்னெடுத்துச் செல்லும் போராளிகள் காயகல்பம் தேடும் சித்தர்களைப்போல் சிந்தித்துக்கொண்டு செயலாற்றுகின்றனர். தமிழ்நாட்டின் சுயநலம்பிடித்த சுயமோகி இலக்கியச்சூழலை நிராகரித்து எதிர்வினையாற்றிவரும் கைக்கட்டி நிற்காத புலம்பெயர் ஈழ இலக்கியவாதிகளைப்போல் இந்த இளம் போராளிகள் சமூக புனிதர்களின் காட்டுக்கூச்சலுக்கு மத்தியிலும் ஒரு தனித்துவமிக்க மலேசியத் தமிழ் புத்திலக்கியத்துக்கு அடித்தளமிடுவதை அவதானிக்கிறேன். பலே பாண்டியா. ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது.

கேள்வி: உங்களுக்கு ஏற்பட்ட ஏற்படுகின்றபொருளாதார இழப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

பதில்: ஒரு ஜென் (Zen) துறவியின் புன்முறுவலோடு.

பதில்: மலேசியாவில் எழுதும் இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

கேள்வி: எழுத்திலும் வாழ்க்கையிலும் முதுகெலும்பை மடித்துவைத்துவிட்டுச் சமரசம் பண்ணிக்கொள்ளாமல் உண்மையாய் அறச்சீற்றத்தோடு இருந்தாலே போதும், உருப்படலாம்.

நேர்காணல் : ம. நவீன், சு. யுவராஜன், சிவா பெரியண்ணன்

<<< பகுதி 1

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768