|
ஒரு சமூக போராளியின்
நேர்காணல்
வல்லினம் இதழில் உதயகுமாருடனான ஒரு நேர்காணலைப் பார்க்கவும் படிக்கவும்
வாய்ப்பு கிடைத்தது. இலக்கியப்படைப்புகளுக்கு மத்தியில் ஒரு சமூக
போராளியின் நேர்காணல் என்னை மிகவும் ஈர்த்தது. இந்த நேர்காணலை வழங்கிய
வல்லினத்திற்கு முதலில் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். Hindraf என்றால் என்ன? அதன் தோற்றத்தின் நோக்கம் என்ன? அதன் பின்னால்
யாரெல்லாம் செயல்படுகிறார்கள்? என எல்லா கேள்விகளுக்கும் இந்த நேர்காணல்
பதிலளித்துள்ளது.
இவ்வமைப்பு எந்தவொரு முன்திட்டமும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தாலும்
அதன் நோக்கம் சரியானதே மற்றும் நம் சமுதாயத்திற்குத் தேவையான ஒன்றும் கூட.
இந்த நேர்காணலின் மூலம் நம் அரசாங்கம் நம்மிடம் எதை விரும்புகிறது என்பது
எனக்கு இப்போதுதான் புலப்படுகிறது. நம் அரசாங்கம் நம்மை நாமே குறைக்கூறிக்
கொள்ள வேண்டும் என்பதையும் நமக்குள்ளே ஒரு பிளவு இருக்க வேண்டும்
என்பதையும் எதிர்பார்ப்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. பிறகு நாம்
எப்படி ஒன்றுபட முடியும் எனும் கேள்வியும் என்னுள் தோன்றுகிறது.
அது மட்டுமின்றி இலங்கைத் தமிழர்கள் கண்ணுக்குத் தெரியும் வகையில்
கொல்லப்படுகிறார்கள். ஆனால் நாமோ நூதனமாகக் கொல்லப்படுகிறோம். இது
முற்றிலும் உண்மை. இதை திரு. உதயகுமார் அவர்களே காலம் ஒருநாள் அதை
உணர்த்தும் என்றார். ஆனால் இப்போதே பலருக்கு பிறப்புப்பத்திரம், படிப்பு,
தொழில் மற்றும் இறப்புப் போன்ற வழிகளில் நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது.
ஆனால் நாம்தான் கண்ணை கட்டிக் கொண்டு அலைகிறோம்.
மனித உரிமைகள் மீறல்களால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு இது பேருதவியாக
இருக்கும் என நம்புகிறேன். கண்ணுக்குத் தெரிந்தவர்களில் உதயகுமார் ஒருவர்
என்றால் கண்ணுக்குத் தெரியாமல் புரட்சி செய்யும் உதயகுமாரர்கள் இன்னும்
எத்தனைப் பேர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் இந்த
சமுதாயம் ஒருநாள் எல்லாத் தடைகளையும் மீறி முன் நிற்கும் என நம்புவோம்.
இருட்டறையில் கிடந்த இந்த சமுதாயத்தை இவர்களால் முழுமையாக மீட்க
முடியாவிட்டாலும் ஒரு சிறு தீக்குச்சியளவாவது விடியல் கொடுக்கும் என
நம்புகிறேன்.
|
|