|
சேனன் தொண்ணூறில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா , பிரான்ஸ்
என்று அகதியாக அலைந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். 'அம்மா', 'எக்ஸில்'
ஆகிய சஞ்சிகைகளில் வித்தியாசமான கதைகளைக் கவிதைகளை எழுதியவர். எதிர்,
தமிழ்ஒருங்கமைப்பு ஆகிய இணையத்தளங்களின் ஆசிரியராகவும் செயற்பட்டு
வருகின்றார். சேனன் லண்டனில் தொழிலாளர்களின் போராட்டங்களையும்
அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்ப்புகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுப்பவர்.
மார்க்சிய சிந்தனைவாதி. தமிழ்ஒருங்கமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரான
சேனன் கடந்த மாதம் கொழும்பில் நடத்திய கூட்டத்தில் சிறீலங்கா அரசு மீது
மிகக் கடுமையாகத் தன் கண்டனத்தை வெளிப்படுத்தினார். மிக அண்மைய அவரது பயணம்
குறித்து வல்லினம் அவரை நேர்காணல் செய்தது.
கேள்வி: மிக அண்மையில் இலங்கை சென்று வந்த தங்களின் பார்வையில்
சொல்லுங்கள்... இலங்கை இப்போது எப்படி இருக்கிறது?
இலங்கை தற்போது ஒரு சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. எங்கு
பார்த்தாலும் மக்கள் துணிந்து கதைக்கப் பயப்பிடுகிறார்கள். யாரும்
சுதந்திரமாக எழுதப் பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். தெற்கிலாவது
பொன்சேகாவின் பெயரில் ஒரு சில எதிர்ப்புகளைச் செய்கிறார்கள். வடக்கில்
அரசுக்கெதிராக ஒரு மூச்சு விடமுடியாத நிலையுள்ளது. மக்கள் முச்சுத்திணறுவதை
மூடி மறைத்து சனநாயகம் பூத்துக் குலுங்குவதாகப் பிரச்சாரம் செய்கிறது அரசு.
நொருக்கப்பட்டிருக்கும் வீடுகளைச் சிறு கடைகளை மக்கள் தாங்களாகவே
திருத்தியமைப்பதை அபிவிருத்திக்கான ஆதாரமாகக் காட்டுகிறது அரசு. இதற்குள்
ஏதோ உயிரோடு விட்டுள்ளார்களே அதுபோதும் என்பதுபோல் மனமிழந்த வாழ்க்கை
வாழ்கிறார்கள் மக்கள். இதுதான் நான் பார்க்கக்கூடிய இலங்கையாக இருந்தது
கேள்வி: நீங்கள் இலங்கை சென்ற நோக்கம் தான் என்ன?
கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் எனறெல்லாம் பெரிய அபிவிருத்திகள் செய்து
சிறிலங்கா சிங்கப்பூராக மாறிக் கொண்டிருக்குதென்று வெளிநாடுகளில் அரசும்,
அரச ஆதரவாளர்களும் கதை விடுகிறார்கள். அதை நேரடியாகப் பார்க்கவும்;
படுபாதகமான கொலைகளைச் செய்த ராஜபக்ச அரசுக்கு எப்படியாவது எதிர்ப்புக்
காட்டியாக வேண்டுமென்ற நோக்கத்திலுமே இலங்கை சென்றேன்.
கேள்வி : சிங்களவர்கள் - தமிழர்கள் என இரு இனத்து மக்களின் வாழ்க்கை நிலை
எப்படி உள்ளது? போர் முடிந்து ஓராண்டு காலமாகியுள்ள இன்றைய நிலையில்
தமிழர்கள் - சிங்களவர்களிடையே புரிந்துணர்வு ஏற்படுள்ளதா? (சாதாரண
மக்களிடம்) அல்லது அவநம்பிக்கை வலுப்பட்டுள்ளதா?
சிங்களவர் தமிழர் மட்டுமல்ல முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களும்
கேவலமான வாழ்க்கையை வாழப் பணிக்கப்பட்டுள்ளார்கள். அரசு அனைவரது
உரிமைகளையும் பறித்து வருகிறது. இதற்குச் சாதகமாக இனங்களுக்கிடையிலான உறவை
முறிப்பதில் குறியாக இருக்கிறது. குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கும்
தமிழருக்குமிடையிலான பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கிறது. அதே போல்
சிங்களக் குடியேற்றம் என்ற பெயரில் சிங்கள-முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவை
முறிக்கும் செயலைச் செய்து வருகிறது. கிழக்கில் காலங் காலமாகத் தாம்
வாழ்ந்து வந்த பிரதேசங்களை முஸ்லிம் மக்கள் இழந்து வரும் நிலை
உருவாகியிருக்கிறது. அவர்களது நிலத்தைப் பறிக்கும் அரசு, அதற்குத் தமிழ்
மக்களைக் குற்றம் சாட்டுகிறது. இந்த லட்சணத்தில் இப்படியான அரசாட்சியின்
கீழ் இனங்களுக்கிடையிலான நல்லெண்ணம் வளர்வதாகவும் பொய்ப் பிரச்சாரம்
நடக்கிறது.
மக்களின் வாழ்க்கைத்தரமோ இலங்கை வரலாறு காணாதளவு மோசமாகியுள்ளது.
வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தண்ணிக்கும் சாப்பாட்டுக்கும்
மிகவும் கஸ்டப்படுகிறார்கள். அதே போல் தெற்கில் கடைசித் தேர்தலில்
ராஜபக்சவுக்குக் குறைவாக வாக்களித்த பகுதிகள் திட்டமிட்ட முறையில்
பழிவாங்கப்படுகின்றன. தெற்கில் சில கிராமங்களில் நிலவும் வறுமை இந்தியாவில்
ஒரிசாவில் நிகழும் வறுமைக்கோ சில ஆபிரிக்க நாடுகளில் நிலவும் வறுமைக்கோ
கொஞ்சமும் குறைந்ததல்ல. எங்கு அதிகூடிய வறுமை என்பதில் கடும் போட்டிதான்!
அதே சமயம் பண்டங்களின் விலை கூரையை பிச்சுக்கொண்டு செல்கிறது. எப்படித்தான்
மக்கள் சீவிக்கிறார்களோ தெரியவில்லை. கையேந்திப் பிழைக்கும்
வாழ்க்கையிலிருந்து அவர்களுக்கு விடிவில்லை.
கேள்வி : புலிகளின் மறைவுக்குப் பின்பான வட இலங்கையின் நிலைமை எப்படி
இருக்கிறது?
அங்கு வெறும் பிணக்காடுதான் இருக்கிறது. வடக்கில் புலிகளின்
கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களுக்கு இன்றும்
மக்கள் போகமுடியாத சூழ்நிலை தான் நிலவுகிறது. நிலக்கண்ணிவெடி அகற்றுகிறோம்
என்ற பெயரில் யுத்தக் குற்றத்தடையங்களைத் துடைத்தழித்துக்
கொண்டிருக்கிறார்கள். 1995ற்குப் பின்னர் புலிகளின் கட்டுபாட்டின்கீழ்
இருக்காத வடக்குப் பிரதேசத்திலும் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத
நிலைதான். முன்புபோல் முப்பது இடத்தில் இறங்கி செக் பொயின்றுக்குள்ளால்
போகும் நிலை தற்போதில்லை. இச்சிறு தளர்வும் கூட மக்களுக்கு நிறைய நிம்மதியை
கொடுக்கிறது – என்றாலும் அதற்காக இராணுவம் தனது கட்டுப்பாட்டைத்
தளர்த்துகிறது என்று தப்பாக எடுக்கவேண்டாம். புலிகளை முடித்துக்
கட்டிவிட்டோம் இனி இலங்கையில் பயங்கரவாதிகள் கிடையாது என்று அறிவித்த அரசு
ஒரு இராணுவ முகாமைத் தன்னும் மூடத் தயாராக இல்லை. மாறாக மூலைக்கு மூலை
இராணுவ முகாம்களை வடக்கு-கிழக்கெங்கும் நீங்கள் காணலாம். போதாக்குறைக்கு
நிரந்தரமான முகாம்கள் அமைக்கும் முயற்சிகளையும் செய்து வருகிறது அரசு.
மகிந்த அரசின் நடவடிக்கைகளை பார்த்தால் புலிகளை முற்றாக முடித்துவிட்டோம்
என்ற அவர்கள் கூற்றில் அவர்களுக்கே நம்பிக்கையில்லைப் போலிருக்கிறது.
வடக்கு-கிழக்கு பிரதேசங்களை நிரந்தர இராணுவ முற்றுகையின் கீழ்
வைத்திருப்பதற்கான அனைத்தையும் செய்து வருகிறது. காஷ்மீரை இந்தியா
ஆக்கிரமித்து வைத்திருக்கும் அதே பாணியில் இங்கும் வேலை நடக்கிறது.
கேள்வி : ஈழத்திற்கும்- ஈழத்தில் வாழும் மக்களுக்கும் வெளிநாடுகளில் வாழும்
இலங்கைத் தமிழர்கள் தலைமை தாங்கும் முயற்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாடு கடந்த அரசாங்கம் குறித்த உங்களது பார்வை என்ன? இலங்கையில் வாழும்
தமிழ் மக்கள் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள்?
பல கேள்விகள்.
ஒவ்வொன்றும் சுருக்கமாக பதிலளிக்ககூடிய கேள்விகளில்லை. ஈழத்தில் வாழும்
மக்களுக்கு வெளிநாட்டு மக்கள் தாம் தலைமை தாங்குவோம் என்று சொல்லவில்லை.
நீங்கள் குறிப்பிடும் நாடு கடந்த அரசு என்ற கருத்தியல் ;சார்ந்து
இயங்குபவர்கள் கூட தாம் வெளியில் இருந்து தலைமைத்துவத்தைக் கொடுப்போம்
என்று சொல்லவில்லை. நாட்டில் இன்று சுதந்திரமாக இயங்க முடியாத சூழ்நிலையில்
வெளியில் நாம் அரசுக்கெதிரான வேலைகளை செய்யவேண்டும் என்ற அடிப்படையில்தான்
இந்த முயற்சிகள் நிகழ்கின்றன. இருப்பினும் இதற்குப் பின்னால் உள்ள அரசியல்
நிச்சயமாக கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது தான். இலங்கை அரசுக்கெதிரான
எதிர்ப்பு என்ற வெற்றுப் பேச்சு மட்டும் போதாத நிலையில் திட்டவட்டமான ஒரு
எதிர்ப்பு அரசியலை –எவ்விதத்திலும் அரச அதிகாரங்களுக்கு சமரசம் செய்யாத
அரசியலை – ஒடுக்கப்படும் மக்களின் நலன்சார்ந்த அரசியலை நாம்
செய்யவேண்டியுள்ளது. ஆனால் இது பற்றிச் சரியாக நாம் சிந்திக்கக்கூடத்
தொடங்கவில்லை.
பெரும்பாலும் மேற்கத்தேய நாடுகளில் வாழும் நாம்-அந்தந்த நாடுகளில்
மிகச்சிறுபான்மையாக வாழுகின்றோம்.;பெரும் முதலாளித்துவ நலன்களை மீறி இலங்கை
வாழ் சிறுபான்மையினரின் நலன்சார்ந்து எப்படி ஒரு நாடுகடந்த அரசை நிறுவுவது?
அத்தகைய எதிர்ப்பைக் காட்டும் அரசியலை நாம் அரசாங்கங்களோடு பேசுவதால்
மட்டும் செய்துவிட முடியுமா? தேர்தல் நிகழ்த்தப்படவேண்டும், சனநாயக
முறையில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் மற்றும் மக்கள் பங்களிப்பு வேண்டும்
என்று கருதுவதெல்லாம் மிகவும் வரவேற்கப்படவேண்டியதே. சனநாயக முறையில் இயங்க
பழக்கப்படுத்திக்கொள்வதை இனியாவது செய்வோம். ஆனால் ஒடுக்கப்படும்
மக்களுக்கான போராட்டம் என்பது அதோடு நின்றுவிடுவதில்லை. ஒடுக்குதல்
செய்யும் எந்த அதிகாரத்தோடும் சேர்ந்து நின்று நாம் போராட முடியாது. ஒரு
ஒடுக்குதலுக்கு எதிரான ஒரு குரல் இன்னுமொரு ஒடுக்குதலுக்குத் துணை போவதாக
இருக்கமுடியாது. ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராட்டத்தைக் கட்ட
நினைப்பவர்கள்-அவர்களோடு சேர்ந்து போராட நினைப்பவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய
அடிப்படை அறிவு இது. இதைத்தாண்டிய அரசியலைக் கற்பனை செய்பவர்களின் அரசியல்
தெளிவீனத்தை நாம் நிச்சயமாக வெளிப்படுத்த வேண்டும். சமரசங்களைச் செய்து –
உரிமைகளைப் ‘பேரம்பேசி’ ‘ஏலம்விட்ட’ -வியாபார அரசியல் செய்வதன்மூலம்
மேற்கத்தேய வியாபாரிகளை வென்று அவர்களின் ஆயுதபலத்தை அரசியல் அதிகாரத்தை
எமக்கு சாதகமாக்கலாம் என்பது வெற்றுக்கனவு அரசியலே. இலங்கைவாழ்
சிறுபான்மையர் அப்படியொன்றும் பூமிப்பந்தின் பெரும் பொக்கிஷங்கள் அல்ல.
‘சொந்த லாபம்’ இல்லாத போது நாற்பதாயிரம் மக்கள் நாலு கிழமைக்குள்
போட்டுத்தள்ளப்பட்டது பற்றி யாருக்கென்ன அக்கறை? மேற்குலக அரசுகளுக்கு மனித
உரிமையையும் ஒரு வியாபாரமே. ஈரான் தனது எண்ணைக்கிடங்கை மேற்குக்குத்
திறந்து விடுகிறேன் என்று ஒரு சொல் சொன்னால் போதும் இன்று ஈரானுக்கு எதிராக
இயங்கும் மேற்கு அரசியல் மனித உரிமைக் கதையைத் தூக்கிக் குப்பையில்
போட்டுவிட்டு வியாபாரத்தில் குதிப்பார்கள் என்பது எமக்கு தெரியும்.
முதலாளித்துவ அமைப்பு –அரசியல் பற்றி நுணுக்கமான அறிவு இல்லாவிட்டாலும்
பரவாயில்லை. குறைந்தபட்சம் யாரின் லாபத்துக்கும் பலியாகாமல்
ஒடுக்கப்படுவோர் நலன்சார்ந்து நாம் இயங்குகிறோமா என்ற குறைந்தபட்ச அறிவாவது
நமக்கு வேண்டும்.
நாடு கடந்த அரசியலுடன் தங்களைச் சம்மந்தப்படுத்திக் கொண்டுள்ள பல
இளையோருக்கு இது நன்றாகத் தெரியும். கடந்த யுத்தத்தின் பிறகு
அரசியல்மயப்பட்ட, அவர்களுக்கு மேற்கத்தேய அரசியல் பற்றி நல்ல அறிவுண்டு.
நாம் முன்பு பார்த்தது போல் வர்க்கச்சார்பற்ற மொட்டையான பார்வையில் இருந்து
மாறுபட்ட புதிய அரசியற்பார்வை அவர்களிடமுண்டு. இருப்பினும் இந்த இளம்
தலைமுறை சுயமாக இயங்க முடியவில்லை! என்னதான் சனநாயகம் என்று நாம்
கூக்குரலிட்டாலும் அதைச் சரியாக நடைமுறைப்படுத்த நாம் இன்னும்
பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. நிர்வாக அலகுகளை உருவாக்குவது மட்டும்
சனநாயத்தை நிலைநாட்டிவிடப் போதாது. நிர்வாக அலகுகள் மூலம் கட்டுப்பாட்டை
யார் வைத்துக்கொள்வது- யார் கொள்கைசார் முடிவுகளை எடுப்பது போன்ற
விசயத்தில் சில ‘பழைய’ அரசியல் செய்தவர்கள் விடாப்பிடியாக இருக்கிறார்கள்.
தவிர வெளிநாடுகளில் எஞ்சியிருக்கும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் தமது
இருப்புக்காக இப்படியான வேலைகளைச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிலும்
ஓரளவு உண்மையுண்டு. தமது கைக்குள் எல்லாம் இருக்கவேண்டும் என்று ஒருசிலர்
எதிர்பார்க்கிறார்கள். அதற்காக உருப்படியான போராட்டத்தை அடுத்த தலைமுறை
முன்னெடுப்பதற்கும் அவர்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். பணம்,சொத்து
முதலானவை அவர்கள் கையில்தான் உண்டு. இளையோரிடம் பணமில்லை. ஆனால் அவர்களிடம்
அரசியல் உண்டு. ஒடுக்கப்படும் மக்களுக்கான சமரசமற்ற போராட்டத்தைக்
கட்டமைக்கவேண்டும் என்ற விடாய் உண்டு. அதே சமயம் அவர்கள் பழையவர்களைக்
கோபத்துக்குள்ளாக்கித் தங்களைத் தாங்களே அன்னியப்படுத்திக் கொள்ளவும்
விரும்பவில்லை. அவர்கள் தமது அரசியலை வேகத்தோடு முன்னெடுக்க பழையவர்களை
புறக்கணிக்க முற்பட்டால் அவர்கள் புலி எதிர்ப்பாளர்களாகவும் அதனால்
ஏதாவதொரு விதத்தில் அரச ஆதரவாளர்களாகவும் ஒதுக்கப்படும் அபாயமுள்ளது.
பெரும்பான்மையான இளையோர் புலிக்கெதிர்ப்பாளர்கள் அல்ல. அதேசமயம் புலிகள்
விட்ட பிழைகளை ஏற்றுக்கொண்டு தமது அரசியலை முன்னெடுக்கவும் அவர்கள் தயாராக
இல்லை. அதேபோல் பழைய பிற்போக்கு அரசியலுக்குத் தம்மை விரயம் செய்யவும்
அவர்கள் தயாராக இல்லை. தாங்கள் சொல்வதை மட்டும் செய்தால் போதும் என்று
இளையோரைக்கொண்டு வேலை செய்விக்க முனைவதை தவிர ‘பழையோருக்கு’ வேறு
எதிர்பார்ப்பில்லை. வேலைக்கு மட்டும் ஆள் தேவையாக இருக்கிறது அவர்களுக்கு.
ஏனென்றால் இளையோரின் ஆதரவு இன்றி ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும்
அவர்களுக்குக் கிட்டப்போவதில்லை. இந்த இடியப்பச்சிக்கலுக்குள் சிக்கிக்
கிடக்கிறது நாடு கடந்த தமிழ் ஈழ அரசியல்.
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அங்கும் இங்குமாகச் சிலதைக்
கேள்விப்பட்டுள்ளார்களே தவிர நாடு கடந்த அரசு பற்றி அவர்கள் எதுவும்
அறிந்திருக்கவில்லை. கின்னஸ் புத்தகத்தில் கடைசியாக ரெக்கோர்ட் செய்தது
யார் என்பது போன்ற வெளிநாட்டு செய்திகளை பத்திரிகைகள் வெளியிடுகின்றனவே
தவிர உருப்படியான எந்த வெளிநாட்டுச் செய்திகளையும் அவை அங்கு
பிரசுரிப்பதில்லை. இணையத்தளம் ஊடாக சில இளையோர் செய்திகளை அறிந்து
கொள்கின்றனர். அங்கிருப்பவர்கள் வெளிநாட்டில் இருந்து இயங்கும் இணையச்
செய்திகளைப் பார்த்துத்தான் சில உள்நாட்டுச் செய்திகளையே தெரிந்து கொள்ள
வேண்டியிருக்கிறது.
யுத்த காலப்பகுதியில் நாட்டைவிட்டுத் தப்பியோடிய நான், தற்போது யுத்தம்
முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிற காலப்பகுதியில் நாடு திரும்பியிருந்தேன்.
நான் சின்ன வயசில் ஓடித் திரிந்த நான் வாழ்ந்த பகுதிகளைக் கூட என்னால்
அடையாளம் காண முடியவில்லை. முப்பது வருடகால யுத்ததம் வடக்கில்
நிலப்பிரதேசங்கள் உட்பட எல்லாத்தையும் மாற்றிவிட்டுள்ளது. -அஞ்சினவன்
கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய்- என்ற மனநிலையில் தான் மக்கள்
வாழ்கிறார்கள். பேய்களுக்கு அங்கு குறைவில்லை. மக்களின் இரத்தத்தை எப்படி
எப்படியெல்லாம் உறிஞ்சலாம் என்று பல்வேறு பேய்கள் பல்வேறு புது
முயற்சிகளில் இருக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் எதையும் மக்கள்
நம்பத்தயாரில்லை. இந்தியா உட்படப் பல வெளிநாட்டு அரசுகளுடன் இரகசியம் பேசி
மக்கள் உரிமையை முன்னெடுக்கப்போவதாகக் கூட்டமைப்பு விடும் கூத்திற்கு
எடுபடும் சிலருக்குக் கொஞ்சம் நப்பாசையுண்டு. இருப்பினும் வெளிநாட்டு
உறவுகள் தங்களைக் கைவிடமாட்டார்கள் என்று நம்புவர்கள் மிகச்சிறுபான்மையரே.
இந்நிலையில் நாடு கடந்த அரசியல் நாட்டு வாழ் மக்களிடம் என்ன பாதிப்பை
ஏற்படுத்தமுடியும் என்று சொல்லமுடியவில்லை. தற்போது எந்த சாதகமான
பாதிப்பும் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லலாம்.
கேள்வி : இலங்கையில் தமிழ் மக்களின் வீழ்ச்சிக்கு, போராட்ட அமைப்புகள்,
அரசியல் தலைத்துவங்கள் இடையே ஒருமைப்பாடு இல்லாததும்; தலைமைக்கும்
ஆதிக்கத்திற்கும் இருந்த போட்டாபோட்டியும்; ஒரு சிலரின் சுய அரசியல்
போக்குகளும் லட்சக் கணக்கான மக்கள் உயிர் விட்டு வளர்ந்த சுதந்திரக் கனவு
கருகிப் போவதற்கான காரணம் எனக் கருதுகிறேன். இது குறித்து உங்கள்
கருத்தென்ன?
நீங்கள் சுதந்திரக் கனவு எனறு குறிப்பிடுவது சரியே. அது எப்போதும் வெறும்
கனவாகவே வளர்க்கப்பட்டது என்பதில் உங்களுடன் உடன்படுகிறேன். ஒடுக்கப்பட்ட
சிறுபான்மையரின் சுயாட்சியைப் பெரும்பான்மைக்கு எதிராக நிறுவுவது எப்படி
என்ற அரசியற் தெளிவு எந்தவொரு தமிழ் கட்சிகளிடமோ அல்லது இயக்கங்களிடமோ
இருக்கவில்லை. இது தலைமைத்துவங்களுக்கிடையிலான ஒருமைப்பாடு சம்மந்தப்பட்ட
விடயம் மட்டுமல்ல. இது போராட்டத்துக்கு சரியான அரசியற் தலைமைத்துவம்
ஏற்படுத்துவதும் சார்ந்த பிரச்சினை. தெளிவான ஒரு மக்கள் போராட்ட அரசியல்
முதன்மைப்படாத காலத்தில் -எண்பதுகளில் - எல்லா இயக்கங்களும் விடுதலை
அரசியல் பேசி அரைகுரை அரசியல் அறிவை தமது முடிந்த முடிபான கொள்கைகளாக
வைத்தன. விவாத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகத் தத்தமது கொள்கைகளைக் கருதிய
அவர்கள், ஆயுதமயப்பட்ட போது கொள்கை வேறுபாடுகள் கொலைகளில் போய் முடிந்தது.
சகோதரக் கொலைகளின் மூலமே விடுதலை இயக்கம் கூர்மைப்பட்ட வரலாறு
கேவலமானதுதானே. கொள்கை விளக்கத்தின் மூலமோ அல்லது அரசியல் அறிவின்
வளர்ச்சியின் மூலமோ விடுதலை இயக்கங்கள் மக்கள் ஆதரவு திரட்ட முயற்சிக்காமல்
ஆயுத முனையில் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றைக் கனவை வளர்த்தது பிழைதானே. இந்த
பிழைகளுடன் ஒரு சிலரின் சுயநலமான அரசியற் போக்குகளும் இணைந்து இன்று
ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டிருக்கின்றன.
வெற்றிக்கான அரசியல் எம்மிடம் இருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வது இன்று
அவசியம். சரியான முறையில் எதிர்ப்பை “மீளக்கட்ட” இது மிக முக்கியம்.
ஏனெனில் இந்த வீழ்ச்சியை தமிழ் மக்களின் வீழ்சியாக நான் பார்க்கவில்லை.
மாறாகப் பிழையான அரசியல் முன்னெடுப்பின் வீழ்சியாக பார்க்கிறேன். மக்களைச்
சாகடிப்பதால் எந்தப் போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து
விடமுடியாது. படுகொலைகளுக்குப் பயந்து அதிகாரத்துக்குப் பணிந்து போன
வரலாறல்ல மனிதகுல வரலாறு. மக்களுக்கெதிரான யுத்தத்தையும் படுகொலைகளையும்
செய்யும் வரலாறுதான் அதிகாரத்தின் வரலாறு. இவ்வாறுதான் தம் ஆதிக்கத்தைத்
தொடர்ந்தும் அவர்கள் தக்கவைத்துக் கொண்டு வருகிறார்கள். இதை உயிரைக்
கொடுத்து எதிர்த்து வருவதுதான் ஒடுக்கப்படும் எமது வரலாறு. எமக்கு நிரந்தர
வெற்றிகிட்டும் வரையும் இந்தப்போர் தொடரும். வெற்றி பெற்றதாக பேரினவாதம்
பூரிப்படைவதில் எந்த அர்த்தமுமில்லை.
கேள்வி : பல ஆண்டுகாலக் கனவும் 30 ஆண்டு காலப் போராட்டமும் ஒன்றுமில்லாமல்
சிதைந்து போன பிற்பாடும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கைத்
தமிழர்கள் ஒற்றுமையின்றிச் செயல்படுவதைக் காணமுடிகிறது. இத்தகைய போட்டா
போட்டி மனப்பாங்கு உள்ளவர்களால், சிதைந்து போயிருக்கும் தமிழ் மக்களின்
வாழ்வை எப்படி மீளக் கட்டமைக்க முடியும்?
ஒற்றுமை என்பதற்காகச் சமரசத்திற்குப் போய்விட முடியாது. -இனி இலங்கை அரசை
எதிர்த்துப் பிரயோசனமில்லை செய்யக்கூடியதை செய்ய ஒன்றுபடுவோம்- என்கிறார்
டக்ளஸ் தேவானந்தா. இந்திய அரசின் கொள்கைக்கிணங்கி செயற்படுவதன மூலம்
அரசுக்கு அலுப்புக்குடுக்க ஒன்றுபடுவோம் என்று சிலர் கோருகின்றனர். இனி
வியாபாரத்தைக் கவனிக்க ஒன்றுபடுவோம் என்கின்றனர் சிலர். இவர்கள் எப்படி
ஒன்றுபடமுடியும்? இவர்களுடன் நாம் எப்படி ஒன்றுபட முடியும்? ஒற்றுமை என்பது
புனிதமானதல்ல. நாம் ஒற்றுமை என்பதைச் -சொல்வழிகேட்பது- என்ற
அர்த்தத்தில்தான் பாவித்து வருகிறோம். அதிகாரத்தின் சொல்வழிகேட்கும்
வரையும் நீங்கள் ஒற்றுமையாக இருக்கலாம். என்றைக்குத் தட்டிக்கேட்க
நினைக்கிறீர்களோ அன்று உங்களுக்குள் பிளவுகளை வளர்ப்பதை முற்போக்காக
காட்டும் அதிகாரம்! நாம் பேசும் ஒற்றுமை இதிலிருந்து வேறுபட்டது.
எதிர்ப்புக்கு ஒன்றுபடுவோம். ஒடுக்கப்படும் மக்களை ஒன்றிணைப்போம்.
அதிகாரத்தின் முதுகெலும்பை முறிக்கும் அரசியலில் ஒன்றுபடுவோம். இதை
ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். தமது சுயநலன்களுக்காக
சமரசங்களை செய்கிறார்கள். எமது எதிர்ப்பை மழுங்கடிக்க ஒற்றுமை பற்றியும்
பொறுமை பற்றியும் போதிக்கிறார்கள். அதிகாரத்துக்கும் அதனால் ஒடுக்கப்படும்
மக்களுக்கும் ஒருபோதும் ஒற்றுமை வரமுடியாது. அதன் பிரதிபலன்களைத் தான்
இலங்கை அரசியலில் நீங்கள் பார்க்கிறீர்கள். இலங்கைத் தமிழ்பேசும் மக்கள்
மத்தியில் ஒப்பீட்டளவில் கூர்மையான அரசியல் முரண்கள் இருப்பதற்குக் காரணம்
அங்கு தெளிவான அரசியலுக்கான வேட்கை இருப்பதுதான். இது ஆரோக்கியமான விடயமே.
ஆயுதத்தைத் தூக்கி நாம் ஆளையாள் போட்டுத் தள்ளாமல்- சனநாயக முறையில்
அரசியல் மோதல் கூர்மையடைவது சரியான எதிர்ப்பைக் கட்டமைக்கும் அரசியலை
நோக்கி நம்மை நகர்த்த உதவும்.
மக்களின் வாழ்வை மீளக்கட்டமைக்க வெறும் அபிவிருத்திக்காக ஒன்றுபடுதல்
மட்டும் போதாது. இந்தியா இலங்கையைவிட மிகவும் வளர்ச்சியடைந்த மலேசியாவில்
எத்தனை போராட்டங்களை நடத்தவேண்டியுள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.
வளர்ச்சியடைந்த நாடுகளாகச் சொல்லப்படும் மேற்கத்தேய நாடுகளில் இன்று
நடக்கும் பெரும் போராட்டங்கள் பற்றி அறிவீர்கள். வளர்ச்சி என்பது
ஒடுக்கப்படும் மக்களைப் போராடவிடாமல் வைத்திருக்கும் எலும்புத்துண்டு
.எறியும் வளர்ச்சியாக இருக்கும் வரை அபிவிருத்திகள் எமக்கு
அர்த்தப்படப்போவதில்லை. மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவது என்ற
அரசியலிலின் இருபது காசு இனிப்புக்கு நாம் போராட்டத்தை சமரசம் செய்ய
முடியாது. இந்த அர்த்தத்தில் பாருங்கள்.
கேள்வி : இன்று வட இலங்கையின் அகதி முகாம்களிலும் சிதைந்த ஊர்களிலும்
வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து ஆக்ககரமான சிந்தனையும்
செயல்பாடும் இலங்கை அரசுக்கோ உலக நாடுகளுக்கோ அல்லது புலம் பெயர் நாடுகளில்
வாழும் செல்வாக்கும் செல்வமும் மிகுந்த தமிழ் மக்களுக்கோ இருக்கிறதா?
எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன?
இது சுலபமான கேள்வி இல்லை என்பது அதற்குச் சுருக்கமான விடை.
ஆக்கபூர்வமான சிந்தனையும் செயற்பாடும் என்று கேட்கிறீர்கள்! நீங்கள்
குறிப்பிட்ட மூன்று வகையறாக்களுக்கும் அப்படி ஒரு புனித நோக்கங்களும்
கிடையாது. அவர்கள் செய்யும் முயற்சிகளைப் ‘படங்காட்டல்'அல்லது ‘பம்மாத்து'
என்ற சொற்களுக்குள் அடக்கிவிடலாம்.
கேள்வி : இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன? அவர்களுக்கு இன்று
வழிகாட்டுபவர்களாக, கைகொடுப்பவர்கள் யார்?
எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை. ஆனால் அவர்கள்
உரிமைகள் மேலும் பறிக்கப்பட்டு மேலதிக தாக்குதல்களுக்கு உள்ளாவார்கள்
என்பதை எதிர்வுகூறல் சாத்தியமே. ஏனெனில் அவர்களின் அரசியலை முன்னெடுத்து
பேச இன்று யாருமில்லை. இலங்கை தமிழ் மக்கள் என்று ஒட்டுமொத்தமாகப் பேசுவதை
விட ஒடுக்கப்படும் மக்கள் என்று பேசுவது இன்று அவசியம். பல இலங்கைத் தமிழ்
மக்கள் ஒடுக்கும் அரசியலை செய்யும் பொழுது நாம் பிரித்து பேசவேண்டிய
தேவையுள்ளதுதானே. ஒடுக்கப்படுபவர்களைச் சமரசங்களின்றி வழிநடத்த இனித்தான்
ஏதாவது உருவாக வேண்டும். ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் முற்போக்கு
சக்திகள் பலப்படுவது மூலமே இது சாத்தியம்.
கேள்வி : எந்தப் போரும் பெண்களுக்கும் சிறார்களுக்கும் வயதானவர்களுக்குமே
பேரவலத்தைக் கொண்டு வருகிறது. இலங்கைப் போரிலும் 80,000க்கும் அதிகமான
பெண்கள் விதவைகளாகி இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான சிறார்களும்
முதியவர்களும் அநாதைகளாகி உள்ளனர். இவர்களின் எதிர்காலம் என்ன? நிலை என்ன?
இவர்களின் மறுவாழ்வுக்கு எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன? இன்று
புலம் பெயர்ந்த அரசாங்கம் குறித்துப் பேசுபவர்களும் புலிகளின் பிரதிநிதிகள்
என அறிவித்துக் கொள்பவர்களுக்கும் இவர்களுக்காக ஏதாவது செய்கிறார்களா?
போருக்காக புலிகள் திரட்டிய கோடிக்கணக்கான பணம் எங்கே? அந்தப் பணம் இந்த
மக்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளதா?
போரால் பெண்கள் படும் அவலம் கதைக்கப்படுவது மிகக்குறைவு. வன்னியில்
அண்மையில் மீள்குடியேற்றறம் செய்யப்பட்ட குடும்பம் ஒன்றைச் சந்தித்தேன்.
தனது கணவனை இழந்தது மட்டுமல்ல அந்த தாய்மாரின் சோகம். சமைக்கக்கூட
அவர்களிடம் பாத்திரங்கள் இல்லை. அவர்களிடம் தமது பிள்ளைகளைத் தவிர
எதுவுமேயில்லை. இதில் பாலியல் வன்முறைக்குள்ளானவர்களும் உள்ளார்கள்.
யுத்தத்தால் மோசமாகக் காயப்பட்டவர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு முதலில்
அரசாங்கம் ஐயாயிரம் ரூபாய் கொடுக்கிறது. விலைவாசி கூரையை பிக்கும் நிலையில்
ஐந்து பிள்ளைகளுக்கு ஒரு மாசத்துக்குச் சோறு போட அவர்களுக்கு இது போதாது.
அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய்
வழங்கப்படுகிறது. இந்த காசு முடிந்த பின்னர் கடன்வாங்குவது-
ஆர்மிக்காரனிடம் கெஞ்சுவது – பிச்சையெடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு
வழியில்லை. குஞ்சுகுருமான்களைப் பாம்புப் புதர்களுக்குப் பக்கத்தில்
விட்டுவிட்டு சிலர் கூலி வேலைக்குப் போகிறார்கள். பாம்பு கடித்துப் பல
குழந்தைகள் சாகின்றன. கூலி வேலை கிடைப்பது கூடக் கடினமே. சாப்பாட்டுக்கு
வழியின்றிக் குழந்தைகள் சாகும் நிலையுண்டு. இதனால்தான் கிளிநொச்சியில் ஒரு
நாளைக்கு நான்கு பேரளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தச் சாவுகள்
பற்றி கதைப்பாரும் இல்லை. இறப்பு இலகுவாகிப்போன கோரம் உங்கள் இதயங்களை
உடைக்க வல்லது. வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் எதுவும் அரசாங்கத்தை
மீறிப்போக முடியாத நிலையில் மக்களுக்கு கிடைக்கும் உதவிகள் சொற்பமாகவே
உள்ளது. சில குடும்பங்கள் வெளிநாடுகளில் இருந்து நேரடி உதவி பெறுகின்றன.
அதுவும் மிகச் சொற்பமே. புலிகளின் பிரதிநிதிகள் என்று
அறிவித்துக்கொள்பவர்கள் இலங்கைக்குள் எந்த நடவடிக்கையும் செய்வதில்லை.
அவ்வாறு அவர்கள் செய்யவும் அரசு விடாது. தவிர கோடிக்கணக்காண பணம் பல
வங்கிகளில் முடங்கிக்கிடப்பதாகச் சொல்லப்படுகிறது. பல கோடிகளை ராஜபக்ச
குடும்பம் திண்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அது தெற்காசியாவின் மிக
முக்கிய பணக்காரக் குடும்பங்களில் ஒரு குடும்பமாக இருக்கிறது
தவிர வெளிநாடுகளில் புலிகளின் பெயரால் சேர்க்கப்பட்ட பணம் எல்லாம் இன்று
“மாயமாய்” மறைந்து போய்விட்டது. யாரைக்கேட்டாலும் காசில்லை என்கிறார்கள்.
இந்த பணம் மக்களுக்கு சேரும் எந்த வாய்ப்பும் இல்லை. இரண்டு மூன்று வீடு
–பெரிய கார் என்று உல்லாச வாழ்க்கை வாழும் முன்னாள் புலி ஆதரவாளர்கள் தாம்
அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டதாக அறிக்கை விட்டுவிட்டு வியாபாரத்தில்
ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சிலர் இலங்கை அரசுடன் இணங்கிப்போய் தங்கள்
வியாபாரம் பெருக்கவும் தயங்கவில்லை. மக்களைப் பணம் கைவிட்டு விட்டது என்பது
எமக்குப் புதுக்கதையில்லை. பணம் ஒருபோதும் மக்களுக்காகப் பேசியது,
செயற்பட்டது கிடையாதுதானே.
கேள்வி : இலங்கைப் போரின் இறுதிக் கட்டம் பற்றி ஏராளமான செய்திகளும்
கதைகளும் இன்று வரை வெளிவந்தமுள்ளன. போர்ப் பகுதியில் வாழ்ந்தவர்களைச்
சந்தித்தீர்கள் என்ற முறையில், என்ன தான் நடந்தது? புலிகள் ஏன் இத்தனை
மோசமாகத் தோற்றுப் போனார்கள்? வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் ஏன்
கடைசி வரை போரைத் தொடர்ந்தார்கள்? கடைசி கட்டத்தில் சரணடைந்தது ஏன்?
தலைவவர்கள் உயிரை மட்டும் காப்பாற்றவா? முன்னரே சரணடைந்திருந்தால் பல
ஆயிரம் உயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றியிருக்கலாமே?
இந்த கேள்விகளை எல்லாரும் கேட்கிறார்கள். இதோடு சேர்த்து உண்மையில்
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டாரா என்றும் கேட்கிறார்கள். போரின்
இறுதிக்கட்டத்தில் இருந்தவர்களை நான் சந்தித்தது உண்மைதான். ஆனால் அவர்கள்
சொன்ன கதைகளை வைத்து இறுதியில் என்ன நடந்தது என்பதை என்னால் திட்டவட்டமாகச்
சொல்ல முடியவில்லை. தப்பிப்போகும் அவதியில் மக்கள் கள அறிக்கை எடுத்துக்
கொண்டிருக்கவில்லை. இது முறையான–நேரடி ஆய்வின் மூலம் கண்டறியப்படவேண்டிய
விசயங்கள். பல தடயங்களை அழித்துவரும் தற்போதய அரசாட்சியை முடிவுக்கு
கொண்டுவராமல் அது சாத்தியப்படப் போவதுமில்லை.
வெற்றி பெற முடியாது என்று தெரிந்திருந்தால் புலிகள் போர்
செய்திருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆயுதப்போராட்டத்தின் மூலம்
வெற்றிபெற முடியும் என்று அவர்கள் தொடர்ந்து நம்பியிருந்தார்கள்.
எதிர்பார்க்காத வகையில் வந்த தோல்வியைச் சரியாக எதிர்கொள்ள அவர்களால்
முடியவில்லை. கிளிநொச்சி விழுந்த பிறகாவது சிந்தித்திருக்கலாம்.
பின்வாங்கல்; அல்லது சரணடைதல் என்ற முயற்சியை அப்போதே எடுத்திருக்கலாம்
என்று பலர் இன்று சொல்கிறார்கள். இதனால் பல உயிர்கள்
காப்பாற்றப்பட்டிருக்கக் கூடும் என்பது உண்மையே. இருப்பினும் மக்களின்
மாபெரும் அழிவை அதன் மூலம் தடுத்திருக்கமுடியும் என்று நான் நம்பவில்லை.
இறுதியில் புலிகள் சரணடைந்த பின்னரும் கூட ஆயிரக்கணக்கில் மக்கள்
கொல்லப்பட்டதாகச் சர்வதேச அமைப்புகள் கருதுகின்றன. புலிகள் மற்றும்
நெருங்கிய புலி ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்களை ஒட்டுமொத்தமாகக் கொன்று
தள்ளுவதில் அரசு குறிக்கோளாக இருந்தது என்பதைப் பலரும் இன்று
ஒத்துக்கொள்கிறார்கள். இந்நிலையில் புலிகள் பக்கம் இருந்தும் கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள். தப்பி ஓடவோ சரணடையவோ வழியற்ற நிலையில் புலிகள்
என்ன செய்திருக்கக்கூடும்?
புலிகள் எப்போதும் தங்களை இராணுவ அமைப்பாகவே கருதி வந்தார்கள். இராணுவப்
பயிற்சியில் இருந்த அக்கறை -ஆழம் அவர்களுக்கு அரசியற் பயிற்சியில்
இருக்கவில்லை. இதனால் இராணுவ ரீதியான வெற்றிகளுக்காகப் புலிகள் மாபெரும்
அரசியற் தவறுகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். இராணுவ பலத்தால் மட்டும்
வெற்றி பெற முடியும் என்று அவர்கள் கருதியது பெரும் பிழை. தெற்காசியப்
பிராந்திய அரசியல் மாறியதையும் அதனால் இந்திய சீன உதவியுடன் இலங்கை அரசு
பலப்பட்டதையும் அவர்கள் அவதானிக்கத் தவறிவிட்டார்கள். இலங்கை அரசு தனியாகத்
தமக்கெதிரான இராணுவ ரீதியான வெற்றியை அடைய முடியாது என்று அவர்கள் கருதியது
சரிதான். இந்திய-சீன மற்றும் மேற்குலக உதவியின்றி புலிகளுக்கு எதிரான
வெற்றி இலங்கை அரசுக்குச் சாத்தியப்பட்டிருக்கப்போவதில்லை. ஆனால் சீனாவும்
இந்தியாவும் இலங்கையில் தமது மூலதனத்தைப் பெருப்பிக்கப் பலமான மற்றும்
தமக்குச் சாதகமான அரசொன்றை இலங்கையில் நிறுவுவதற்கு விரும்பின. இதற்குத்
தடையாக இருந்த புலிகளை வேரோடு ஒழிக்க அவை தமது முழு ஆதரவையும் இலங்கை
அரசுக்கு வழங்கின. மனித உரிமைகள் மீறப்படுவது பற்றிச் சீன வெளியுறவுக்
கொள்கையாளர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. இங்கிலாந்து, ஈராக்கில் மனித
உரிமைகளை மீறுவதால் உள்நாட்டு மக்களிடம் சந்தித்த பெரும் எதிர்ப்பைப் போன்ற
சூழ்நிலை சீனாவுக்கு இல்லை. இலங்கையில் நடந்ததை இனப்பிரச்சினைக்குத் தீர்வு
என்று வர்ணிக்கும் அளவுக்கு அவர்களது பங்குண்டு. புலிகளின் இராணுவ ரீதியான
தோல்விக்கு இது ஒரு முக்கிய காரணம். இது தவிர எந்த ஒரு விடுதலை அமைப்பும்
அரசுகளுக்கு எதிராக இராணுவ ரீதியில் அதிகூடிய பலம் பெறுவது என்பது
சாத்தியமற்றது. உலகளவில் ஒரு அரசுக்கிருக்கும் இராணுவபலத்தைப் போல் பலமாக
வளர்ந்த இயக்கமாக இருந்த புலிகள் - தரைப்படை கடற்படை-விமானப்படை என்று
அனைத்து தளத்திலும் இயங்கிய உலகின் ஓரேயெரு இயக்கமாக இருந்த புலிகள் -
கணிசமான நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து அனைத்து
நிர்வாகங்களையும் நடத்தித் தற்காலிக அரசை நிறுவியிருந்த புலிகள் - இராணுவ
ரீதியாக தோற்றுப்போன நிகழ்வு இன்று உலகெங்கும் ஒரு படிப்பினையாகக்
கருதப்படுகிறது. எந்தப் போராட்ட இயக்கங்களும் ஆயுத பலத்தை மட்டும் நம்பி
எதையும் சாதிக்க முடியாது என்பதை இது மீண்டும் நிறுவியுள்ளது.
இதைச் சொல்வதால் நாம் காந்தியவாதி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்தக்
கன்னத்தில் அடிவிழுந்தால் மற்றக் கன்னத்தை காட்டு என்று சொல்வது நமது
பழக்கமில்லை! அதேசமயம் மனித உரிமையை அரசியல் லாபத்துக்காக பாவிக்கும்
வர்க்கத்தைச் சேர்ந்தவனுமல்ல. அதிகாரத்தின் தாக்குதலில் இருந்து தம்மைப்
பாதுகாக்கவும் அதை முற்றாக முறியடிக்கவும் மக்கள் ஆயுதமயப்படுவது தவிர்க்க
முடியாதது. மக்கள் ஆயுதமயப்பட்டாலன்றி அந்த இறுதி வெற்றி சாத்தியமல்ல.
ஆனால் அரசியலற்ற மக்களின் பங்களிப்பற்ற ஆயுதப்போராட்டம் எந்த வெற்றியையும்
கொண்டுவரப் போவதில்லை என்பதையே இங்கு குறிக்க வேண்டியுள்ளது. ஆயுதம் பலம்
என்ற பிரேமையை வழங்குகிறது.அந்தப் பிரேமையில் தவறான தீர்மானங்களுக்கு
வழிநடத்தப்படுகிறார்கள்.
ஆயுதப்போராட்டத்தை முதன்மைப்படுத்துவதால் ஏற்படும் அரசியல்
பலவீனங்களுக்கும் அதன் பக்கவிளைவான மனித உரிமை மீறல்களுக்கும் கூட புலிகள்
நல்ல எடுத்துக்காட்டே. தமது சகோதரப் படுகொலைகள் மூலமும் துரோகி- ஆதரவாளன்
என்ற இருமைகளுக்குள்ளால் மக்களைப் பிரித்துப் பார்த்ததன் மூலம் கணிசமான
தொகைப் போராளிகளையும் மக்களையும் அவர்கள் அன்னியப்படுத்தினார்கள். முஸ்லிம்
மக்களுக்கு எதிரான அவர்களது இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை மன்னிக்கப்பட
முடியாத குற்றம். பின்பு புலிகள் வெளிப்படையாக அந்தத் தவறை ஒத்துக்கொண்டது
மட்டும் போதாது. அரசியல் நெருக்கடி காரணமாக அவர்கள் தவறை ஒத்துக்கொண்ட
போதும் இந்த மறக்கமுடியாத கொடுமையை ஈடுகட்ட எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. கிழக்கு மக்களின் வறுமை நிலையையும் அவர்களது
தனித்துவத்தையும்கூட புலிகள் கண்டுகொள்ளவில்லை. கிழக்குத்தளபதி
உடைத்துக்கொண்டு சென்றபோது மக்கள் ஆதரவை திரட்டக்கூடிய நிலையிருந்ததை
அவதானிக்க. அதேபோல்தான் சமூகத்தில் இருந்த சாதிய ஏற்றத்தாழ்வு பற்றிய
அக்கறை அவர்களிடமிருக்கவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். சாதிய
ஒடுக்குமுறையை எதிர்கொள்ளாமல் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எந்தப்
போராட்டமும் வெற்றி பெற முடியாது. சாதியம் மேலோங்குவது சில சமயம்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோதும் ஆதிக்கசாதிய அரசியலை புலிகள்
தகர்க்கும் முயற்சி எதுவும் செய்யவில்லை. இவ்வாறு புலிகளின் தோல்விக்கான
காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவர்கள் இறுதிக்காலத்தில் எடுத்த
முடிவுகளும் அவர்கள் நீண்டகாலமாகச் செய்த பலவீனமான அரசியலின் பிரதிபலிப்பே.
மேற்கத்தேய அரசுகள் தமக்குச் சாதகமாக இயங்கும் போன்ற தப்பான நம்பிக்கைகளை
அவர்கள் வைத்திருந்தார்கள்.
புலிகள் ஏன் ஆயுதத்தை போடுவதானால் இந்திய ஆமி ஆக்கிரப்புக்காலப்பகுதியிலேயே
போட்டிருக்கலாம். புலிகளின் தலைமை ஒட்டுமொத்தமாக ஆயுதத்தைக் கீழே போட்டுச்
சரணடையும் ஒரு சந்தர்ப்பத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறு போராட்டம்
முடிவுக்குவரும் எந்தச் சாத்தியங்களும் இருக்கவில்லை. சரணடைதல் என்ற
சொல்லுக்கே புலிகளிடம் இடமிருக்கவில்லை. எல்லாவற்றையும் இழந்து, இனிச்
சாவுதான் என்ற கட்டத்தில்தான் பலர் சரணடைய வந்துள்ளார்கள். இதில் யார் யார்
வந்தார்கள் -இதற்குள் பிரபாகரன் இருந்தாரா என்ற விடயம் எனக்கு
ஆதாரபூர்வமாகத் தெரியாது. ஆனால் பிரபாகரனும் புலிகளின் முக்கிய தலைமை
உறுப்பினர்களும் சரணடைய முயற்சித்ததாக நீண்டகாலமாகப் புலிகளுடன் நெருங்கி
வேலை செய்துவருபவர்கள் பலரும் ஒத்துக் கொண்டுள்ளார்கள். சரணடைந்தவர்கள்
அனைவரும் சுட்டுக் கொள்ளப்பட்டதை யுத்த்தை நடத்திய சரத் பொன்சேகாவே முன்பு
ஒத்துக்கொண்டுள்ளார் (உயிருக்கு பயத்தில் தற்போது அதை மறுத்து வருவது
தெரிந்ததே). அவர்கள் ஏன் வீரச்சாவடைந்திருக்கக்கூடாது? மற்றவர்கள் போல்
சாகும்வரை போராடியிருக்கலாம் தானே. இவர்கள் உயிர்கள் மட்டும் என்ன பெரிதா
என்று கேட்கலாம்.
‘இறுதி யுத்தம்' என்று தெரிந்த பிறகும் ஏனைய போராளிகளும் மக்களும்
செத்துக்கொண்டிருப்பதை அனுமதித்தது புலித்தலைமைப்பீடம் செய்த மாபெரும்
குற்றம். இதைவிடப் பெரிய கொடுமை மக்களைக் கடைசிவரை தப்பிப் போகவிடாமல்
வைத்திருந்தது. இது ஒரு முக்கியமான விடயம். போராட்டத்துக்கு ஆதரவானவர்கள்
மற்றும் பல்வேறு முற்போக்கு சக்திகள் கூட இதைப்பற்றிப் பேசுவதை இன்று
தவிர்க்கப் பார்க்கிறார்கள். புலிகள் மக்களைப் போகவிடாமல் வைத்திருந்தததை
ஏற்றுக்கொண்டால் புலிக்கு எதிரானவராக கருதப்பட்டு துரோகிப்பட்டத்துடன்
ஒதுக்கப்படலாம் என்ற ‘அச்சத்தில்' இவர்கள் இயங்குகிறார்கள் போலுள்ளது. இந்த
போக்கு இனியாவது மாறவேண்டும். இத்தனை கோரப்படுகொலைகளுடன் முடிக்கப்பட்ட
யுத்தத்திற்கு பிறகும் நாம் சிறுமைத்தனமான அரசியல் செய்யமுடியாது.
மக்களுக்கெதிரான எந்த கொடுமைகளையும் நாம் மூடி மறைக்கத் துணை போகக்கூடாது.
அதன் மூலம் தான் மக்கள் ஆதரவுதரும் ஆரோக்கியமான போராட்டத்தை நாம்
கட்டமுடியும். நேரடியாகப் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள்
அங்கிருக்கிறார்கள். அவர்களின் மனச்சோகம் ஆறும் முன்பே திரிபுகளைச் செய்து
என்ன ஆதாயம் எடுக்க முயற்சிக்கிறார்களோ தெரியவில்லை. இந்தப் பாதகத்தைச்
செய்து இலங்கைவாழ் அகதி மக்களை அன்னியப்படுத்தாதீர்கள். இது புலிக்கெதிரான
பிரச்சாரமல்ல என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் -குறிப்பாக
இந்திய சகோதர- சகோதரிகளுக்கு இதை அடித்துச் சொல்வது அவசியம்.
புலம்பெயர்ந்து வாழும் புலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட ஒத்துக் கொள்ளும்
விடயம் இது. மக்களும் போராளிகளும் படுகொலை செய்யப்பட்ட இன்றைய நிலையில் இது
பற்றிக் கதைக்கத் தயங்கும் சகோதர உணர்வை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் அதே ‘சகோதர உணர்வு' எம்மை அன்னியப்படுத்தும் செயலைச் செய்வதை அவர்கள்
அவதானிக்க வேண்டும். இதனால் தான் புலி எதிர்ப்பு மையம் இதைப் பிடித்துக்
கொண்டு தொங்குகிறது. மக்கள் படும் இன்னல் பற்றி அக்கறையின்றி புலி
எதிர்ப்பதையே தமது முதன்மை அரசியற் பணியாகச் செய்யும் அவர்களையும் அந்தச்
சந்தர்ப்பத்தை பாவித்து தமிழ்பேசும் மக்களை தமது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர முயற்சிக்கும் இலங்கை முதலாளித்துவ அரசையும் நாம்
பலவீனப்படுத்தவேண்டும் -எதிர்க்கவேண்டும்.
கேள்வி : ஆசியாவிலேயே கல்வி அறிவு அதிகமுள்ள நாடாக இலங்கை ஒரு காலத்தில்
திகழ்ந்தது. காலம் காலமாகக் கடல் கடந்து சென்ற இலங்கை மக்களுக்குக் வழித்
துணையாகவும் வலது கையாகவும் இருந்த வருவது இக்கல்வி அறிவுதான். இன்றைய நிலை
என்ன? இத்தனை போராட்டங்களுக்கு இடையேயேயும் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வியை
அளித்து வந்த இலங்கை அரசாங்கம் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிக்க
உள்ளது. இதனால் ஏற்படப்படப்போகும் பாதிப்பு என்ன? இது குறித்து நாட்டில்
எத்தகைய மனப்போக்கு நிலவுகிறது? கல்வியும் வியாபாரமாகி விட்டால், மக்களின்
நிலை மிக மோசமாகும். சிங்கள மக்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா?
உண்மைதான் தெற்காசியாவில் வித்தியாசமான வரலாறுடையது இலங்கை. கல்வி,
சுகாதாரம் என்பவை இலவசம் என்பது மட்டுமின்றி தொழிலாளர்களுக்கு பல்வேறு
உரிமைகளைத் தொழிலாளர் வென்றெடுத்த நாடு இது. எந்த அரசும் இவற்றை வாரி
வழங்கவில்லை. இதற்குப் பின்னால் பெரும் போராட்டமுண்டு. இதை எதிர்க்க அரசு
இனப்பிரச்சினையைத் தூண்டி வளர்த்தது இலங்கை வரலாறு. இன்று இனரீதியிலான
ஒடுக்குமுறை உச்சமடைந்து அரசு மிகப்பலப்பட்ட நிலையில் உரிமைகள்
பறிக்கப்படுகிறது. நீண்ட போராட்டத்தில் வென்றெடுத்த உரிமைகள் இன்று சுலபமாக
காற்றில் கரைக்கப்படுவதை பார்க்க மனம் கனக்கிறது. சர்வாதிகாரத்தை நோக்கி
நகரும் அரசு மக்களின் உரிமைகளுக்கு மேலான மேலதிக தாக்குதல்களை முதலாளித்து
நலன் சார்ந்து செய்யும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை.
ஆனால் எவ்வளவு காலத்துக்கு இவர்கள் தாக்குப்பிடிக்கப்போகிறார்கள் என்பது
கேள்விக்கிடமானது. எல்லா இன மக்களிடமும் இதற்கு எதிர்ப்புண்டு. வரும்
டிசம்பர் மாதம் லட்சக்கணக்கான மக்களை அரசக்கெதிரான தெருப்
போராட்டத்துக்குத் திரட்டும் முயற்சிகள் நடந்துவருகிறது. இலங்கை ஒரு நீண்ட
போராட்ட வரலாறுடையது. இந்தப் போராட்ட வரலாறு மீண்டும் மக்கள் பிரக்ஞைக்கு
வரும். மீண்டும் எதிர்ப்பு வெடிக்கும். சர்வாதிகாரம் முறியடிக்கப்படும்
என்பதில் எனக்கு நல்ல நம்பிக்கையுண்டு. அதற்கான ஆதரவைத் திரட்டுவது இன்று
முக்கியம்.
கேள்வி :
இந்தக் கடும் சூழலிலும் பல்வேறு சிற்றிதழ்கள் இலங்கையில் வெளியிடப்படுவதாக
அறிகிறோம். அவை குறித்தும் கூறுங்கள்...
சித்தாந்தனை ஆசிரியராக கொண்ட மறுபாதி எனும் கவிதைக்கான காலாண்டிதழ்,
க.பரணீதரன் ஆசிரியராக இருக்கும் ஜீவநதி மற்றும் த பிரபாகரன் கு லஸ்மணன்
இனைந்து கொண்டுவரும் அம்பலம் முதலான சிறு பத்திரிகைகள் அவர்தம் அயராத
முயற்சியால் வந்துகொண்டிருக்கின்றன. விட்டு விட்டு வந்தாலும்
த.மலர்ச்செல்வன் காத்திரமான முயற்சிகளை மறுகா இதழ் மூலம் செய்துவருகிறார்.
இது தவிர திருமறைக்கலா மன்றத்தின் உதவியுடன் எமில் கலைமுகம் இதழை தொடர்ந்து
கொண்டுவருகிறார். இருக்கிறம், தாயகம் முதற்கொண்டு பல்வேறு இதழ்கள்
வடக்கிலும் கிழக்கிலும் வருவது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று. இவற்றை
ஒட்டுமொத்தமாக நாம் சிற்றிதழ்கள் என்று சொன்னாலும் இவ்விதழ்கள் தரத்திலும்
நோக்கத்திலும் வித்தியாசமானவை. இலங்கையில் இந்தியாவில் இருப்பதுபோல்
ஜனரஞ்சக இதழ்கள் தமிழில் இல்லை. அதனால் அந்த இடத்தை நிரப்ப பல இதழ்கள்
முயற்சிப்பதை நாம் பார்க்கூடியதாக இருக்கிறது. இதில் ஜீவநதி முதலான இதழ்கள்
பழய ‘ஆய்வுப்’ பாணி கட்டுரைகளுடன் மரபுக் கருத்தியல் சார்ந்து
இயங்குவதையும் பார்க்கலாம். எமில் போன்ற துடிப்புள்ள இளைஞன் பங்குபற்றும்
கலைமுகம் கூட தீபச்செல்வனின் கவிதைகள் சிலவற்றை பிரசுரிக்கமுடியாது என்று
சொல்லும் நிலையும் இருக்கிறது. நாங்கள் துணிந்து செயற்படத் தயார்
எங்களுக்கு ஆதரவு வேண்டும் என்று நியாயமான கோரிக்கைகளை வைக்கிறார்கள்
சித்தாந்தன் மருதம் கேதீஸ் போன்றவர்கள். இந்த இதழ்கள் குறைபாடுகளற்றவையல்ல.
இருப்பினும் ஒரு இதழை கொண்டுவருவதற்குத் தேவையான அர்ப்பணிப்பு இன்று
அதிகம். இன்று கட்சி சார்பற்ற பொதுசன பத்திரிகை என்று எதுவுமே இலங்கையில்
இல்லாத நிலையில் இந்த இதழ்கள் வருவது மிக அவசியமானது. நான் பங்குபற்றும்
தமிழ் ஒருங்கினைப்புக்கூடாக தர்மினி மற்றும் கீர்த்திகன் முதலானோரின்
உதவியுடன் ஓர் இதழ் கொண்டுவரும் முயற்சியும் செய்துவருகிறோம்.
மாற்றுக்கருத்துக்களை துணிந்து முன்வைக்கும்-மக்களின் பிரச்சினைகளை
வெளிப்படையாக பேசும் பத்திரிகை ஒன்று வருவது இன்று அவசியத்தேவை.
கேள்வி : இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய போக்கு என்ன? உங்களைப் போன்ற
பல இளையர்கள் போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து இலக்கியம்
படைத்து வருகிறீர்கள. இதற்கு உந்து சக்தியாகவும் ஆதரவாகவும் இருப்பது எது?
இலக்கியம் எத்தகைய மன ஆறுதலை அல்லது திருப்தியை அல்லது நம்பிக்கையைத்
தருகிறது? இலக்கியம் மூலம் எதையாவது சாதிக்க முடியும் என நினைக்கிறீர்களா?
இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ தமிழில் இலக்கியம் செய்பவர்களுக்கு அதனால்
எவ்வித மன ஆறுதலும் கிடையாது. உண்மையில் இது ஒரு மனஉளைச்சல் பிடிச்ச வேலை!
பெரும்பான்மையானவர்கள் போராட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தமது நினைவுகளையும் கனவுகளையும் ஒளித்தும் மறைத்தும் திரித்தும்
தான் எழுதவேண்டியுள்ளது. யாருக்கும் பயந்த நடவடிக்கையல்ல அது. ஒருவிதத்தில்
தமக்கு தாமே பயந்தும் அவர்கள் அதைச் செய்கிறார்கள்.
அவர்களிடமுள்ள சமூக அக்கறை காரணமாகத்தான் இன்றும் இலக்கியம்
படைக்கப்படு;கிறது. இலங்கையில் எந்தப் பிரச்சினைக்குள்ளும் நாம் இலக்கியம்
செய்வதை நிறுத்தவில்லை என்பதைப் பெருமையாகத் தம்பட்டமடிக்க விரும்புகிறேன்.
நாம் ஒருபோதும் கவிதை எழுதுவதை நிறுத்தவில்லை. தற்போதுகூட சித்தாந்தன்
கவிதைக்கென்று தனியாக சிறு புத்தகம் கொண்டு வருகிறார். தீபச்செல்வன்
மற்றும் மருதம் கேதீஸ் உட்பட பலர் பெரும் மனத்துணிவுடன் எழுதுகிறார்கள்.
அவர்கள் எல்லோரிடமும் ஒரு நெருப்பிருக்கு. அதிருக்கும் வரை இலக்கியம் வந்து
கொண்டிருக்கும். அந்த நெருப்புக்கும் அவர்தம் சமூக அக்கறைக்கும் நான் தலை
வணங்குகிறேன்-அதுதான் அவர்கள் உந்து சக்தி. அங்கு எழுதுபவர்கள் பலர் இன்று
பரந்த வாசிப்பு தளத்துக்கு இன்னும் வரவில்லை. குறிப்பாக மருதம் கேதீஸ்,
அனார் போன்றவர்கள் கவனிக்கப்படவேண்டியவர்கள்.
இலக்கியத்தால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது. எல்லாப் போராட்ட
வரலாற்றிலும் இலக்கியத்திற்கு பங்குண்டு. ஆனால் இலக்கியம் மட்டும்
போராட்டத்தை முன்னெடுத்ததாக வரலாறு இல்லை. என்னைப்போன்று அரசியலும்
சார்ந்து இயக்கும் இலக்கியவாதிகள் இலக்கியம் குறைத்து அரசியல் சார்
எழுத்துக்களை அதிகமாக எழுத நேருவதும் இதனால்தான் என்று நினைக்கிறேன்.
கண்ணுக்கு முன்னால் நிகழும் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க
முடியவில்லை. எதிர்ப்பு இலக்கியங்கள் மட்டும் படைத்துக கொண்டிருப்பது
எனக்குப் போதவில்லை. வேறு பலருக்கு வேறுமாதிரியிருக்கலாம் ஆனால்
இலக்கியத்துக்காக எதிர்ப்பைச் சமரசம் செய்ய நான் தயாரில்லை. அதனால் மிகுந்த
வேதனையுடனும் கடும் உழைப்புடனும்தான் ஒவ்வொரு இலக்கியப்படைப்பையும்
செய்யவேண்டியுள்ளது. எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு எங்காவது ஒரு
கடலோரமோ தோப்புப் பக்கமோ போயிருந்து லகரியில் கிறங்கி இலக்கியம் படிப்பதும்
படைப்பதுமாக இருக்க முடியாதா என்ற ஒரு கனவை அடித்து நொறுக்கித்
துன்புறுத்தி எங்கோ புதைத்து வைத்து விட்டுத்தான் நான் திரியவேண்டியுள்ளது.
நேர்காணல் : ம. நவீன் |
நிழல்படம் : சேனன்
|
|