|
|
எஸ். ராமகிருஷ்ணன் இரண்டு ஆண்டுகளாக எழுதி வந்த புதிய நாவல் துயில்
ஜனவரி 1 2011 அன்று (1.1.11) மாலை 5.30 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில்
உள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட உள்ளது. 600 பக்கங்களுக்கு மேலுள்ள இந்த நாவல் தமிழ்
புனைகதைப்பரப்பில் மிகப் புதியமுயற்சி. இது எஸ். ராமகிருஷ்ணனின் ஐந்தாவது
நாவல், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.
துயில் நாவல் குறித்து எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ள ஒரு சிறிய குறிப்பு
"நோய் ஒரு நல்ல ஆசான். அது மனிதனுக்கு வேறு எவர் கற்றுத் தந்ததையும் விட
அதிகம் கற்றுத் தந்திருக்கிறது. நோய்மையுறுதல் என்பது உண்மையில் உடலை
அறிந்து கொள்வதற்கான ஒரு விசாரணை. உடல் ஒரு பிரபஞ்சம். நாம் ஒரு போதும்
கண்ணால் காணமுடியாத பேராறு போல நமக்குள் ஒடுகிறது ரத்தஒட்டம். உடலினுள்
மிகுந்த பேரொழுங்குடன் எண்ணிக்கையற்ற புதிர்கள், நுட்பங்கள்,
அடங்கியிருக்கின்றன. உடலை அறிவது தான் மனிதனின் முதல் தேடல். அதை நோய்மை
நினைவுபடுத்துகிறது. கடவுளின் இருப்பு குறித்த நம்பிக்கைகள் யாவும் மனிதன்
நோய்மையடைவதால் மட்டுமே காப்பாற்றபட்டுவருகிறது. ஒவ்வொரு நோயிற்கும்
நூற்றாண்டுகால நினைவுகளிருக்கிறது. வலியின் முன்னே மனிதன் தனது சகல
அடையாளங்களையும் இழந்துவிடுகிறான், வலியைச் சந்திப்பது எளிதானதில்லை, அதை
மனிதர்கள் தாங்கிக் கொள்ள உடல் உறுதியை விட ஆறுதலான. அன்பான சொற்களே அதிகம்
பயன்படுகின்றன. மருத்துவத்தின் வரலாறு இன்று வரை நாம் முறையாக
தொகுக்கப்படாதது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித
நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை. அவ்வகையில் நலமடைதல் என்ற அற்புதத்தின்
மீதான விரிவான விசாரணையே இந்த நாவல். நமது கலாச்சாரம் காலம் காலமாக
உருவாக்கி வைத்துள்ள நமது உடல் குறித்த அறியாமை, பயம், புனிதம், அவநம்பிக்கை
என அத்தனையும் குறித்து புனைவின் வழியாக மறுபரிசீலனை செய்வதே இந்த நாவலின்
தனித்துவம்".
|
|