|
|
ஜனவரி 2011 (இதழ் 25) தொடங்கி
வல்லினத்தில் "சாரு பதில்கள்".
வல்லினம் வாசகர்களின் கேள்விகளுக்கு சாரு நிவேதிதா எழுதும் பதில்கள்
தொடர்ந்து இடம்பெறும். உங்களின் கேள்விகளை editor@vallinam.com.my என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
முழுநேர எழுத்தாளராகி விட்டீர்கள் சாரு. இந்த வாழ்க்கை உங்களுக்கு நிறைவு
அளிக்கிறதா?
இந்த முழுநேர எழுத்தாளன், பாதி நேர எழுத்தாளன் என்பதெல்லாம் ஒரு அவமானகரமான
இலக்கியச் சூழலில் மட்டுமே கேட்கப்படும் கேள்வியாகத் தெரிகிறது. சச்சின்
டெண்டூல்கரிடம் போய் ஒருவர் இப்படி நீங்கள் முழுநேர கிரிக்கெட்
ஆட்டக்காரராக இருப்பது நிறைவு அளிக்கிறதா என்ற கேள்வியைக் கேட்க முடியுமா?
ஓர் எழுத்தாளன், குமாஸ்தா வேலை செய்துதான் தன் வயிற்றுப்பாட்டைப்
பார்த்துக் கொள்ள முடியும் என்பது தமிழ்நாட்டின் கலாச்சார அவலங்களில்
ஒன்று. அதையேதான் நானும் 20 ஆண்டுகள் செய்தேன். அது என் வாழ்வின் இருண்ட
காலம். உலகில் எத்தனையோ எழுத்தாளர்கள் தங்களின் அன்றாட வாழ்வுக்காக
விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். முகமது ஷுக்ரி (மொராக்கோ),
ழான் ஜெனே, கேத்தி ஆக்கர் என்ற பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.
ஆனால் அவர்கள் எழுத ஆரம்பித்த பிறகு அவர்கள் அந்தத் தொழிலை செய்ய வேண்டிய
அவசியம் ஏற்படவில்லை. அவர்கள் எழுத்து அவர்களுக்கு ரொட்டித் துண்டை
அளித்தது. இங்கே நிலைமை அப்படி இல்லை என்பதால் நான் அந்த ஈனத்தொழிலை 20
ஆண்டுகள் செய்தேன். இப்போது அதிலிருந்து வெளியே வந்து விட்டேன். இதற்கு என்
நண்பர்களே காரணம். எனக்கு வேண்டிய ரொட்டி அவர்களிடமிருந்து எனக்குக்
கிடைத்து விடுகிறது. ஆனாலும் இதில் திருப்தி இல்லை. என் நாட்டுக்குப்
பக்கத்தில் இருக்கும் ஒரு சிங்கப்பூர் செல்வதற்குக் கூட ஐந்தாண்டுகள்
யோசிக்க வேண்டியிருக்கிறது. மேற்கில் எழுத்தாளர்கள் உலகம் பூராவும்
சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் ஊதியமே இல்லாமல் வேலை
செய்யும் ஒரே வர்க்கம் தமிழ் எழுத்தாளர் வர்க்கம்தான். இதில் நிறைவு எப்படி
ஏற்படும்? ஆனாலும் நமக்குப் பிடித்தமான வேலையை மட்டுமே செய்வது என்பது
மனதுக்கு நிறைவு அளிக்கக் கூடிய விஷயம்தான். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு
அமையாது.
உங்கள் ஸீரோ டிகிரி அளவிற்கு தீவிரமானதாக ராஸலீலா இல்லை. உங்கள் பார்வையில்
அப்படைப்புகளை ஒட்டிய விமர்சனங்கள் என்ன சாரு?
ஸீரோ டிகிரி அளவுக்கு ராஸ லீலா இல்லை என்று சொல்வது ஒரு எழுத்தாளனை
நேரடியாக முகத்தில் குத்துவதற்கு சமம். எழுத்தாளர்களை அவமானப்படுத்துவது
என்பது தமிழ் மரபு என்பதால் இம்மாதிரி கேள்விகளால் எனக்கு ஆச்சரியம் இல்லை.
முன்பு எழுதிய ஒரு படைப்பைப் பாராட்டி இப்போதைய படைப்பை நிராகரிப்பதன்
மூலம் நீங்கள் என்னுடைய இருத்தலையே (existence) நிராகரிக்க முயல்கிறீர்கள்.
ஸீரோ டிகிரியை விட ராஸ லீலா சிறந்த நாவல். மேலும், ஸீரோ டிகிரியை உக்கிரமான
காதல் அனுபவத்தைப் பெறும் வாய்ப்பைப் பெற்ற யார் வேண்டுமானாலும் எழுதி விட
முடியும். ஆனால் ராஸ லீலாவை சாரு நிவேதிதாவைத் தவிர வேறு யாரும் எழுத
முடியாது. ஏனென்றால், 20 ஆண்டுகள் நான் ஒரு சித்ரவதைக் கூடத்தில்
இருந்திருக்கிறேன். அந்த அனுபவம்தான் ராஸ லீலா. ராஸ லீலாவின் விலை, என்
வாழ்நாளில் 20 ஆண்டுகள். உலக இலக்கியத்தில் மிகச் சில நாவல்களே ராஸ
லீலாவுக்கு இணையானவை. உதாரணமாக, நோபல் பரிசுக்கு அடுத்தபடியாக பேசப்படும்
டப்ளின் இம்பாக் விருதைப் பெற்ற In the Blinding Absence of Light என்ற
நாவலைச் சொல்லலாம். மொராக்கோவைச் சேர்ந்த தாஹர் பென் ஜெலோன் எழுதியது.
மொராக்கோவின் பாதாளச் சிறையில் 20 ஆண்டுகளைக் கழித்து உயிர் மீண்ட ஒரு
கைதியின் நிஜ அனுபவங்களைப் பற்றிய நாவல் அது. ராஸ லீலாவும் அதைப்
போன்றதுதான். என் நண்பர் மனுஷ்ய புத்திரனிடம் “என் நாவல்களில் உங்களுக்குப்
பிடித்தது எது?” என்று கேட்டேன். “சந்தேகம் இல்லாமல் ராஸ லீலாதான்”
என்றார். ஆனால் தாஹர் பென் ஜெலோனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்
என்னவென்றால், என்னிடம் அந்த அனுபவம் கேளிக்கையாக மாறுகிறது. ராஸ லீலாவின்
பின்னட்டையில் மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ள விளக்கம் இது:
"நுண்ணதிகார வலைப்பின்னல்களாலும், மின்னணு ஊடகங்களாலும் முற்றிலுமாக
மாற்றியமைக்கப்பட்டு விட்ட மனித அனுபவத்தையும், புற உலக எதார்த்தத்தையும்
எதிர்கொள்கிறது ராஸ லீலா. இங்கு அடையாளமும் தன்னிலையும் அழிந்த சுயங்கள்
‘சைபர்’ வெளியில் சொற்களாலான கட்டற்ற சுதந்திரத்தை அடைகின்றன. மாறாக சமூக
வெளியிலோ மனோரீதியான ஒடுக்குமுறையும் ரகசியமான வன்முறையும் எல்லாத்
தளங்களிலும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. சுதந்திரத்தையும்
ஒடுக்குமுறையையும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இந்த அனுபவம் ஒரு அபத்த
நிலையினை உருவாக்குகிறது. இந்த அபத்தம் ராஸ லீலாவில் பெரும் கேளிக்கையாக
மாற்றப்படுகிறது அதனாலேயே இந்த நாவல் நவீன உளவியல் மற்றும் உறவுகள் குறித்த
கேலிச் சித்திரங்களின் தொகுதியாக எழுதப் படுகிறது. இந்தக் கேலிச்
சித்திரங்கள் ஒருவிதத்தில் இன்றைய தமிழ் வாழ்க்கையின் அடையாளங்களாகவும்
இருக்கின்றன."
மின்னணு ஊடகங்களின் போலி எதார்த்தத்தை ராஸ லீலாவைத் தவிர வேறு எந்த நாவலும்
பேசியதில்லை. இதனாலேயே அந்த நாவல் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது.அதை
அடுத்து எழுதிய காமரூப கதைகளை என்னைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது.
ஏனென்றால், டீன் ஏஜ் குமரிகளின் அந்தரங்க வாழ்க்கை அதில் அவ்வளவு
துல்லியமாக சித்தரிக்கப்படுகிறது. இதெல்லாம் உலக இலக்கியத்துக்கே புதியவை
என்கிற போது ‘ஸீரோ டிகிரிக்குப் பிறகு நான் எழுதிய நாவல் தீவிரமாக இல்லை’
என்று சொல்வது என் எழுத்தை அவமானப்படுத்தும் செயல் என்றே கருதுகிறேன். என்
தற்காலத்தை நிராகரிப்பதன் மூலம் நீங்கள் என் கடந்த காலத்தையும் சேர்த்தே
நிராகரிக்கிறீர்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஸீரோ டிகிரி வந்த
காலத்தில் நீங்கள் அதையும் கொண்டாடி இருக்க மாட்டீர்கள். உங்களால் என்
எழுத்தைப் புரிந்து கொள்ளவோ எதிர்கொள்ளவோ முடியவில்லை என்பதை நீங்கள்
வெளிப்படையாக ஒத்துக் கொள்ளுங்கள். இப்படி குறுக்கு வழியில் வராதீர்கள்.
என் கண்கள் இருளையும் ஊடுருவக் கூடியவை.
சிறுகதையில் உங்களால் தொடர்ந்து செயல்பட முடியவில்லையே, ஏன்?
சிறுகதையில் என்னால் தொடர்ந்து செயல்பட முடியவில்லை என்று சொல்லும் ஒரு ஆள்
உண்மையில் எந்தவிதமான இலக்கிய நுண்ணுணர்வும் வாசிப்பும் இல்லாதவர் என்றே
சொல்வேன். சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கியின் எழுத்து எதுவாக இருந்தாலும் அதை
கவிதை, நாவல், சிறுகதை என்றெல்லாம் பிரிப்பதில்லை. அவன் கை வைக்கும்
எல்லாமே ப்யூகாவ்ஸ்கி என்ற ஆளுமையின் வெளிப்பாடுகளே. அந்த வகையில் நான்
எழுதும் அரசியல் கட்டுரைகள் கூட சிறுகதைகள்தான். இப்போது மூன்று
தினங்களுக்கு முன்பு கூட ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி என்ற சிறுகதைத்
தொகுப்பு வெளிவந்துள்ளது. நான் எழுதிய நான்–லீனியர் சிறுகதைகளான ‘the joker
was here’, நேநோ, the book of fuzoos, கர்னாடக முரசு போன்ற சிறுகதைகளை
உங்களைப் போன்றவர்களால் பத்து ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது
என்று நினைக்கிறேன். என்னுடைய நான் – லீனியர் சிறுகதைகளுக்கு இணையான
படைப்புகளை தமிழில் நீங்கள் காண முடியாது. உலக இலக்கியத்திலேயே இந்த
genre-இல் எழுதிய மூன்றே ஆட்கள் டொனால்ட் பார்த்தெல்மே, ரொனால்ட்
சுக்கேனிக், மிலோராத் பாவிச். எனவே நம்முடைய அறியாமையை அடிப்படையாகக்
கொண்டு மற்றவர்களை நோக்கிக் கேள்விகளை வீசக் கூடாது.
உங்கள் படைப்புகள் 'எடிட்' செய்யப்படுகிறதா? தமிழகத்தில் பதிப்பக
ஆசிரியர்கள் அந்த திறனுடன் இருக்கிறார்களா?
என் படைப்புகள் கேரளத்தில் அறவே எடிட் செய்யப்படுவதில்லை. தமிழகத்திலும்
எடிட் செய்யப்படுவதில்லை. ஆனால் ஒரே வித்தியாசம், இங்கே எடிட் செய்யாமல்
திருப்பிக் கொடுத்து விடுவார்கள். உதாரணமாக, எந்திரன் படத்தின் விமர்சனத்தை
என்னால் உயிர்மை என்ற பத்திரிகையில்தான் எழுத முடிந்தது. வெகுஜனப்
பத்திரிகையில் எழுத முடியவில்லை. தமிழ்நாட்டில் மிகக் கடுமையான கலாச்சார
ஒடுக்குமுறை நடைமுறையில் இருக்கிறது.
திரைப்படங்களில் நடிக்கும் ஆவல் இருக்கிறதா சாரு. அதற்கான முயற்சிகள்
ஏதேனும் செய்து வருகிறீர்களா?
தமிழ்நாட்டில் எழுத்தாளனாக இருப்பது ஒரு துயரமான தேர்வு. இதிலிருந்து ஒரு
ஆசுவாசமாக திரைப்படத்தில் நடிக்கலாம் என்பது என் எண்ணம். ஆனால் எந்த
விஷயத்திற்காகவும் முயற்சி செய்வதில் எனக்குப் பழக்கமில்லை.
|
|