|
|
வல்லினம் என் கையில் கிடைத்தவுடன் நான் முதன் முதலில் படித்ததும்
சுவைத்ததும் ஏ. தேவராஜன் கவிதைகள்தான். ஒரு கருத்தைச் சில வரிகளில்
சொல்லியிருப்பினும் அதுவே இந்நூலில் இருக்கும் மற்ற கவிதைகளைப் படிக்க
தூண்டின. குறிப்பாக, நாம் தாய்மொழியாம் தமிழ்மொழி சிதைவுண்டாகி வருவதையும்
அதன் நிலையைச் சீர் செய்யும் பொருட்டுப் பல குரல்கள் அவ்வப்போது தோன்றி
மறைந்தும் வருகின்றன. இதன் தொடர்பாக ஏ. தேவராஜனின் கவிதைகளில் “எங்கிருந்தோ
சப்த நொடியின்றி வந்து அவற்றிற்கு மருந்திட்டு மாயமாய் மறைந்தது மௌனம்'
என்ற கவிதை வரிகள் மனதில் பதிகின்றன. அடுத்து, நம் சமுதாயத்தின் சிந்தனை
இன்னமும் பள்ளத்தில் தான் இருக்கின்றது என்றும் அவர்களுக்காக ஒருவேளை
இறைமையும் பேய்களின் தன்மையைப் பெற்று உருமாற வேண்டிய நிலை வரலாம் என்றும்
அவரின் அடுத்தக் கவிதை தெளிவுறுத்துகிறது. இன்றைய நிலையில் இறைமையும்
மறைவிடத்தில் இருப்பதையே விரும்புகிறது போலும்.
இக்காலம் மனிதத்தின் அழிவுக்காலம். இதனைச் சித்தரிக்கும் வகையில் யோகியின்
‘உலக வரைபடத்தில் ஒரு கண்ணீர்த்துளி' என்ற கவிதைகள் அமைந்துள்ளன. சாத்தான்
அனுப்பிய பெட்டியுள்ள நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்த மரணங்களின் முறையே
தேவதை, கடவுள், சாத்தான், மனிதம் என நாம் பாகுப்படுத்திப் பார்க்கும்
பொழுது இக்காலம் மனிதத்தின் அழிவுக்காலம் எனக் கூறுவதில் எவ்வித ஐயமும்
எழாது. இக்கவிதையின் இறுதியில் சாத்தானும் ‘எது நடந்ததோ அது சரியாகத்தான்
நடந்தது' என்று கூறும் வகையில் அமைந்த கீதாச்சார வரிகள் கேட்டுப் பழகியது
என்றாலும் இக்கவிதையில் அது புலப்படுத்தும் பொருள் சிந்திக்கக்கூடியது.
‘பிரிவு' எழுத்தால் மூன்றென்றாலும் அதன் இரணத்தால் ஏற்படும் வலி
அளப்பெரியது. பிரிந்தவுடன் நாம் எதிர்க்கொள்ள இருக்கும் மனிதர்கள்,
இடங்கள், சூழல்கள் அப்பிரிவை அடிக்கடி நினைவுப்படுத்திப் பார்ப்பவனவாக
இருக்கும். குறிப்பாக, கணவன் மனைவி இருவர் பிரியும் போது அவர்கள்
எதிர்நோக்கும் சிக்கல்கள் பல. இதனையே ‘பிரிவதற்கு முடிவெடுத்த பின்
சிலவற்றிற்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது' என ஆரம்பிக்கும் யோகியின் கவிதை
வரிகள் பிரிய முடிவெடுப்போருக்கு அதன் வலியை எடுத்துரைக்கும் வகையில்
அமைந்துள்ளது.
தொடர்ந்து, வல்லினத்தில் எனக்குப் பிடித்தக் கவிதைகளின் பட்டியலில்
மொழிப்பெயர்ப்பு கவிதைகளும் ஒன்றாகும். இக்கவிதைகளில் என் மனதில் பதிந்த
கவிதை சிங்களத்தின் பராக்கிரம கோடித்துவக்கு எழுதிய ‘குசுமாவதி' கவிதை
ஆகும். ஒரு நாள் இரண்டேயிரண்டு வெள்ளைச் சீருடைகளை உலர்த்த முடியாததால்
பள்ளிக்குச் செல்ல இயலாதவளாக ஆகிறாள் குசுமாவதி. இவள் பள்ளிக்குச் சென்று
கல்வியைப் பெற்று வரும் சூழல் சவால் மிக்கது என்று ஆசிரியர் கடிதத்தைப்
பார்த்து அறிந்து கொள்வதாக கவிதை ஆரம்பமாகிறது.
‘உனக்கு இரண்டேயிரண்டு
ஆடைகளை ஒதுக்கியதற்காகச்
சாட்டையால்
அடிக்கவேண்டும் சமுதாயத்தை'
என்ற கவிதை வரிகள் இயலாத ஏழைகளுக்குக் கைக்கொடுக்க மனமில்லாத சமுதாயத்தின்
போக்கினைச் சாடுவதாக அமைகின்றன.
குசுமாவதி ஒவ்வொரு நாளும் கல்வி கற்க பன்னிரு மைல் தூரத்திலிருந்து
காட்டைக் கடந்து வரவேண்டியுள்ளது. வரும் வழியில் பற்பல தடங்கல்கள்;
தடங்கல்களையும் தாண்டி தளராத மனங்கொண்டு கல்வி கற்க இன்னமும் இதற்கு மேலும்
வருவாள் குசுமாவதி. ஏழையானாலும் இவள் கல்வியின் மேல் கொண்டுள்ள பற்று
அடுத்தத் தவணையிலும் இவள் கல்விக் கற்க ‘ஒவ்வொரு கல்லாய்த் தாண்டித் தாண்டி
வருவாள்' என்று கவிதாசிரியர் கூறும் வரிகள் மனதின் எங்கோ ஒரு மூலையில்
வருடிச் செல்கிறது.
|
|