|
|
உடலசைவு மொழியின்
பொருளடக்கம்
அறிவியல், உலகத்தை ஆண்டு கொண்டிருந்தாலும் அதற்கும் ஒரு மொழி தேவை
படுகின்றது இக்காலத்தில். மொழி என்றவுடன் பலருக்கும் எழுத்து வடிவம்
மட்டும்தான் கண் முன் நிற்கும். மொழி எழுத்தால் மட்டும் உருவானது அல்ல.
மாறாக, அது பல்வேறு வடிவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நுண்பொருள்.
உலகில் உள்ள அனைத்து பொருட்களும் பேசுகின்றன. அவை வெவ்வேறு மனிதர்களிடம்
வெவ்வேறு விஷயங்களை வெவ்வேறு வகையில் பரிமாறிக் கொள்கின்றன. இவற்றைப்
பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மூடமாக இருக்கலாம். ஆனால், பரிமாறிக்
கொள்ளப்படுகின்ற மொழியைப் புரிந்து கொள்பவர்களுக்கும் உணர்ந்து
கொள்பவர்களுக்கும் அது அதிசயம்தான்.
அன்று பிரியா வீட்டிற்கு வந்திருந்தாள். ஏழு மாதக் குழந்தை அவள். என்
கணவரின் அக்காள் மகள். அவள் வருகையால் வீடே மகிழ்ச்சியில்
நிரப்பியிருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் அவளின் சேட்டைகளையும் அவளின்
குரலையும் கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள். என்னையும் உட்பட.
அடிக்கடி ஏதாவது ஒலிகளை எழுப்பிக் கொண்டே இருப்பாள். அவள் முட்டியிட்டு
நகரும் போது ஒரு விதமான ஒலியையும் விளையாடும் போது மற்றொரு வேறுபட்ட
ஒலியையும் எழுப்புவாள். அந்த ஒலியும் அவள் செய்து கொண்டிருக்கும்
செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. அந்த ஒலிகளின் மூலம் நான் அறிந்து கொள்ள
கூடிய எந்தவொரு அர்த்தமும் அதில் ஒட்டிருக்காது. இருந்த போதும், அவள்
மகிழ்ச்சியாக இருக்கிறாள்: ஏதோ ஒன்றைச் செய்வதை விரும்புகிறாள் என்பது
மட்டும் எங்களுக்குப் புலப்படும். இன்னும் சிறிது நேரம் கழிந்த பின், அவள்
அழும் சத்தம் கேட்கும். உடனே என் மாமியார் அவளுக்குப் பசி என்று அறிந்து
கொள்வார். பாலைக் கலக்கிக் கொடுத்த பிறகு அழுகை நின்று விடும்.
மீண்டும்விளையாட ஆரம்பித்து விடுவாள் பலவிதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டே.
அவள் பசிக்காகதான் அழுகிறாள் என்பதையும் பசிக்கு மொழி அழுகை என்பதையும்
இருவரும் நன்றாகப் புரிந்து வைத்திருந்தனர். தங்களை அறியாமலே
ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
வார்த்தைகள் பேசப்படாமலே வெறும் அசைவுகளை மட்டுமே இருவரும்
காட்டிக்கொண்டனர். இது போன்ற மொழி பண்டமாற்றத்தைத்தான் ‘உடலசைவு மொழி’
(body language) என்கிறது மொழியியல் துறை. உடல் உறுப்புகள் (கண்,காது,
மூக்கு வாய், கால், கை, உதடு...) மற்றும் உடல் அசைவுகளைப் பயன்படுத்தி
வெளிக்கொணரப்படும் தகவல்கள்தான் உடலசைவு மொழி. உடலசைவு மொழிக்கும் (Body
language) அசைவு மொழிக்கும் (sign language) நிறைய வேறுபாடுகள் உள்ளன.
சுருக்கமாகச் சொன்னால், அசைவு மொழி வகுக்கப்பட்டு அமைக்கப்பட்டதொன்று.
அதாவது காது கேளாதவர் மற்றும் வாய் பேசாதவர்கள் பயன்படுத்து மொழி. கை
மற்றும் விரல்கள் மற்றும் வாய் அசைவின் மூலம் பேசிக் கொள்வதாகும். அசைவு
மொழி ஒருவருக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஆனால், உடல் அசைவு மொழி அப்படியல்ல. அது வரையறுக்கப்படுதில்லை. இதற்கு
புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகம் தேவைப்படுகிறது. புரிந்து கொள்ளும்
பக்குவம் இருப்பின், இதன்பொருளை உணர்ந்து கொள்ள முடியும். அது
மட்டுமல்லாமல் சில பொது சிந்தனைகள் தகவல்கள் இதனை புரிந்து கொள்ள
தேவைப்படுகிறது. உடலசைவு மொழியின் வழி பரிமாறப்படும் தகவல்கள் புரியாமல்
போனால் கருத்து வேறுபாடுகள் நிலவ வாய்ப்புகளுண்டு. உடல் அசைவு மொழி அவரவர்
குடும்ப பின்னனி, கலாசாரம், பண்பாடு, மதம், சூழல், இடம் உறவு போன்றவறைச்
சார்ந்தவையாகும்.
ஒரு நாள் வியாபார நோக்கத்திற்காக ஒரு அமெரிக்கரும் ஒரு ஜப்பானியரும்
சந்தித்துக் கொண்டனர். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
வியாபாரம் பேசிய பிறகு இருவரும் விடை பெறும் நேரம் வந்தது. விடைபெற்று
கொள்கிறேன் என்பதற்கு அடையாளமாக அந்த ஜப்பானியர் முதுகை வளைத்து தலையைக்
குனிந்தார். அமெரிக்கர் அப்படியே நின்று அவர் முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தார். இதை உணர்ந்த அந்த ஜப்பானியர், அமெரிக்கர் தன்னை
மதிக்கவில்லையே என கவலைப்பட்டார். தலை நிமிர்ந்த பிறகு, அமெரிக்கர்
ஜப்பானியரிடம் கை கொடுத்துக் குலுக்கினார். ஜப்பானியர் மிக மென்மையாக
கையைக் கொடுத்து குலுக்கினார். இதனால் அமெரிக்கரின் மனம் வருத்தமடைந்தது.
இருவரும் மனம் குறைபாடோடு விடைப்பெற்றுக் கொண்டனர்.
ஜப்பானியருக்கு தலை குனிந்து விடைபெறுவது மிக மரியாதைக்குரிய செயலாகும்.
அது அவர்களின் பண்பாடும் கூட. அமெரிக்கர்களுக்கு அழுத்தி கை கொடுத்து
குலுக்குவது மிகவும் நம்பிகையான செயல். மேலும் அவர்களிடம் நாம் பேசும்
போதும் கூட அவர்களின் கண்களை பார்க்க வேண்டும் என விரும்புவார்கள். இப்படி
வெவ்வேறான கலாச்சார பின்னணி கொண்டவர்கள் சந்திக்கும் நபரின் பின்னனியை
தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகிறது. ஒருவர் கோபமாக இருக்கிறார் என்பதை
அவரின் முகபாவனையிலிருந்ததே படித்து விடலாம். அவரின் சோகத்தையும் புரிந்து
கொள்ளலாம். உணர்ச்சியை முகம் காட்டி விடும். அது போலதான் மற்ற உடல்
உறுப்புகளிலும் மொழி வாழ்ந்து கொண்டிருகிறது.
ஆக, மொழியில் உன்னதம் என்றெல்லாம் ஒன்றும் இருப்பதாய் படவில்லை. அது மனித
நாகரீகத்தின் ஒரு குறியீடு. அதன் சக்தி முழுமையாக வெளிபட சில பயிற்சிகள்
தேவைப்படுகின்றன. எழுத்தை மட்டும் கொண்டு வாசித்து புரிந்து கொள்ளுதல்
அவசியத்தைப் போல் ஒருவரின் உடலசைவுகளைப் படிக்கவும் ஆற்றல்கள்
தேவைப்படுகின்றன. காரணம் மொழி சொல்லில் மட்டும் ஒளிந்திருக்கவில்லை. அது
ஆய்வுக்குரியதொன்று; தேடல் மிகுந்தவையாகும்.
|
|