|
|
வெள்ளைக் கல்லறைகள்
சாதி பற்றிப் பேசும் போது சாதிக்கொரு கோயில் என்று சொல்வதுண்டு. ஆம்,
உண்மையிலேயே எங்கள் ஊரில் சாதிக்கொன்றாகத் தேவாலயங்கள் இருக்கின்றன.
எங்களுக்கு நினைவு தெரிந்த காலமாக அவ்வழக்கமாகவே இருக்கிறது. ஒன்றைக்
குறிப்பிட வேண்டும்,சர்ச் என்றோ தேவாலயம் என்றோ ஊரில் கதைப்பதில்லை.
கிறிஸ்தவ ஆலயங்களையும் கோயில் என்று தான் சொல்வோம். ஒவ்வொரு சாதியினரும்
வாழும் குறிச்சியில் அவர்களால் ஒவ்வொரு ஆலயம் உருவாக்கப்பட்டிருந்தது.
அச்சிறு கிராமத்தில் இருந்த மூன்று சாதிக் கத்தோலிக்கர்களாலும் மூன்று
ஆலயங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இவற்றைத் தவிர அந்தோனியார் கோயிலும்
கடற்கரையோரமாக இருக்கிறது. அதை வேறு ஊர்களிலிருந்து தொழிலுக்கு வந்த
கடற்றொழிலாளர்களே உருவாக்கியதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் மேல்
மிச்சமாக இருந்த அவ்வாலயத்தை வெள்ளாளரே தம் கைக்குள் வைத்துப் பராமரித்து
தங்கள் கோயிலாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர்.
வெள்ளாளர்கள் தங்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் “இண்டைக்குப் பள்ளற்ர
கோயிலில பூசை” என்றோ “இண்டைக்கு முக்கியரின்ர கோயிலில பூசை என்றோ” சாதி
மூலம் அடையாளப்படுத்துவதையும், அவ்வாறு பிரிக்கப் பட்டு தத்தமக்கென
தனியாகக் கோயில்களை வைத்திருப்பதற்கும் பின்னணியில், கிறிஸ்தவர்களான
போதும் அவர்களை ஒன்றிணைக்க முடியாத அயலார் மீதான நேசிப்பையும் பார்க்கக்
கூடியதாகவே இருந்தது. ஒவ்வொரு ஞாயிறுக்கும் ஒவ்வொரு ஆலயமாகப் பூசை மாறி
மாறி வைக்கப்படும்.
சாதி காப்பாற்றும் படி இயேசுவோ பைபிளோ சொல்லவில்லை என்பதும் உன்னிப்பாக
ஞாயிறு தவறாமல் பாதரியின் பிரசங்கம் கேட்கும் இவர்களுக்கு நன்றாகவே
தெரியும். ஆனால் காலனிய ஆட்சிகளால் மதம் மாறிக் கத்தோலிக்களானவர்கள் தானே
வேளாளர்களும். அவர்களால் சாதி ஏற்றத் தாழ்வுகளை விட்டுவிட முடியாதளவுக்கு
யேசுவின் போதனைகளோ சுவாமியின் பிரசங்கங்களோ மனதில் மாற்றத்தை இன்று வரை
ஏற்படுத்தாமலேயே இருக்கின்றன.
ஆனால், ஒவ்வொரு கத்தோலிக்கருக்கும் ஞாயிறு பூசை கட்டாயமென திருச்சபை
கட்டளையிட்டுள்ளது. அதை மீறுவது சாவான பாவம் என்று பயமுறுத்தியபடியே
இருப்பார்கள். ஆகவே எக்கோயிலாக இருந்தாலும் மூன்று சாதிக்
கத்தோலிக்கர்களும் எல்லாவற்றிலும் பூசையில் பங்கெடுப்பார்கள். ஆனால்
ஆலயங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வெள்ளாளர்கள் எப்போதும் போய்
அமர்ந்து கொள்வார்கள். தப்பித் தவறியும் மற்றைய சாதி மக்களுடன் கலந்து
இருந்து விட மாட்டார்கள். எனது அம்மா இந்த ஊருக்குக் கல்யாணஞ் செய்து
புதிதாக வந்த போது கயிறு கட்டிப் பிரித்திருந்தார்கள் என்று சொல்லுவார்.
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளான வேதக்கார வெள்ளாளர்கள். இடுகாடும் கூட வேறு
வேறு பக்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பாடகர்கள் கூட ஒவ்வொரு
ஆலயத்திற்கும் அவரவர்கள் தான். வெள்ளாளர்களின் கோயிலில் பாடல்களும்
அலங்காரங்களும் மிக மோசமாகவே எப்போதும் இருந்தன. பாடகர்
குழாமிலிருப்பவர்கள் கலவையான குரல் வளமுடையவர்களாயிருப்பார்கள். ஒவ்வொரு
குரலும் வேறு வேறு திசைகளிலிருந்து ஒலிப்பதைப் போல இருக்கும். சில
நேரங்களில் தலைகுனிந்து செபித்துக் கொண்டிருக்கும் சுவாமி நிமிர்ந்து
பார்த்துப் பாடகிகளை முறைப்பதும் நடந்திருக்கிறது. ஆனால், ஏனைய ஆலயங்களின்
பாடகிகளோடு இணையவோ பயிற்சி செய்யவோ மறுத்து விடுவார்கள்.
காலங் காலமாகப் பிரதானமான திருநாட்களான கிறிஸ்மஸ், புத்தாண்டுப் பூசைகள்
வெள்ளாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த ஆலயத்திலேயே நடைபெற்றுக்
கொண்டிருந்தன. அவர்கள், ஊர்க் கத்தோலிக்கர்களுக்கு முதலாளிகள் என்ற
கணக்கில் நடந்து கொண்டிருப்பதை ஒடுக்கப்பட்டிருந்த மக்களால் தடுக்க
முடியாமலிருந்தது. கிறிஸ்மஸ், புத்தாண்டு போன்ற விசேட நாட்கள் தமக்கு
மட்டுமே உரித்தானவை என்பதே வெள்ளாளரின் நினைப்பாக இருந்தது. வெள்ளாளர்கள்,
மற்றைய இரு ஆலயத்தினரும் இவற்றைப் பொறுப்பெடுத்து நடத்தத்
தகுதியற்றவர்களாகக் கருதி நடந்தனர் .
அவ்விரு ஆலயங்களினதும் இளைஞர்கள் 1990 ஐ அண்மித்து வழமையான இந்த நடைமுறையை
எதிர்த்துக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். ஞாயிறு பூசைகள் போலவே விசேட
நாட்களும் சுழற்சி முறையில் பங்கிடப்பட வேண்டியதே என்பதில் உறுதியாக
நின்றனர். ஆனால் வெள்ளாளர்களோ எவ்விதக் குற்ற உணர்வுமின்றி வழமையை எப்படி
மாற்றுவதென வாதாடிக் கொண்டிருந்தார்கள். எந்த பைபிள் வசனத்தைச் சொல்லியும்
அவர்களைச் சுவாமியால் மனம் மாற்ற முடியவில்லை. சாதி என்பது அவர்களது
நெஞ்சில் ஆணியால் அறைப்பட்ட பாவமாக இறுகப் படிந்திருந்தது. அவர்களில்
ஒருவர் கூட சுழற்சி அடிப்படையில் பூசைக்கு சம்மதித்து அம்மக்களுக்குச்
சார்பாகப் பேசவில்லை. போதாதற்கு அது எப்படி விட்டுக் கொடுக்க முடியுமெனச்
வெள்ளாளச் சைவக்காரர்களும், வெள்ளாள வேதக்காரருடன் கூட்டுச் சேர்ந்து
உருவேற்றிக் கொண்டிருந்தார்கள்.
இந்த மக்களுக்கு ஞாயிறுதோறும் பிரசங்கம் செய்து பலனற்றப் போனதை ஃபாதரும்
விளங்கிக் கொண்டார். இதன் காரணமாக ஒரு சாதிக் கலவரமே ஊரில் ஏற்படுமளவுக்கு
நிலமை மோசமாகிக் கொண்டிருந்தது.
இப்பிரச்சனை யாழ் மாவட்ட பிஷப் வரை போனது. தீர்க்க முடியாமல் எல்லாத்
தேவாலயங்களினதும் கதவுகள் பூட்டப்பட்டன. திறப்புகள் பிஷப்பிடம்
ஒப்படைக்கப்பட்டன.
கிறிஸ்மஸ், புதுவருடத்திற்கு எந்தவொரு ஆலயத்திலும் வழிபாடு நடக்கவில்லை.
நான்கு தேவாலயங்களும் மாதக் கணக்காக மூடிக்கிடந்தன. “சனங்கள் ஞாயிறு
பூசைகளுக்குப் போகாத பாவம் வெள்ளாளர்கள் மீது இறங்கட்டும்” என்று ஃபாதர்
சொல்லிக் கொண்டிருந்ததாகக் கதை. சிலர் கோயில் பூட்டினாலும் கவலை
இல்லையென்று கிறிஸ்மஸ், புத்தாண்டுப் பூசைகளுக்காகவும் தொடர்ந்து பெரிய
வியாழன், பெரிய வெள்ளி, ஈஸ்டர் வந்தபோதும் ஆட்டோவில் யாழ்ப்பாணத்தில்
பிரபலமான பெரிய கோயிலுக்குப் போனார்கள். ஊருக்குள் பூசை வைக்கக் கூடாது
என்று எவர்களுடன் முரண்பட்டனரோ அதே சாதி மக்களின் கோயிலுக்கு
வந்ததொன்றும் அவர்களுக்குப் பிரச்சனையில்லையாம்... ஏனென்றால் அது
ஊருக்குள் இல்லை. அது அவர்களுக்குக் கெளரவப் பிரச்சனையாக இருந்தது.
சுழற்சி முறையைத் தவிர வேறு தீர்வில்லை என்ற முடிவோடு பல மாதங்களாகப்
பூட்டப்பட்ட ஆலயங்கள் வேறு வழியின்றித் திறக்கப்பட்டன. நான்
எங்கிருந்தாலும் இந்தக் கொண்டாட்டக்காலங்களில் இப் பிரச்சனையும்
போலித்தனங்களும் தவறாமல் ஞாபகத்திற்கு வந்து விடும்.
அம்மனிதனைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, மீண்டும் மீண்டும்
சிலுவையில் ஏற்றி அவமானப்படுத்துவதை, அறிந்தே தான் செய்கிறார்கள்.
|
|