|
|
அலெக்ஸாண்டரின் மரணம் கி.மு.323-ல் நிகழ்ந்தது. அவனது குரு அரிஸ்டாட்டிலின்
மரணம் கி.மு.322-ல் நேர்ந்தது. அலெக்ஸாண்டரின் மரணம் அவன் உருவாக்க இருந்த
உலகப் பேரரசைக் கலைத்துப் போட்டது என்றால், அரிஸ்டாட்டிலின் மரணம்
கிரேக்கத் தத்துவ இயலை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பிறகு 300
ஆண்டுக் காலத்துக்கு ஹெல்லினிய அரசுகள் எனப்படும் மாசிடோனியா, சிரியா,
எகிப்து ஆகிய நாடுகள் ஆட்சி செலுத்தின. கி.மு. 338-ல் நடந்த ஷெரோனியா
யுத்தத்தில் கிரேக்கம் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து கிரேக்கத்தில்
விரக்தி மனோபாவம் நிலவியது. அதன் விளைவாக கிரேக்கத்தில் ஒரு விரக்திக்
கோட்பாடு பிறந்தது. அதன் பெயர் சினிக் (cynic). அவநம்பிக்கைக் கோட்பாடு
என்று பொருள் தரும் அந்தக் கோட்பாட்டை உருவாக்கியவர் சாக்ரடீஸின்
மாணவர்களில் ஒருவரான ஆண்டிஸ்தனிஸ்.
தத்துவம் அரசியலைப் பாதிக்கிறது; அரசியல் தத்துவத்தைப் பாதிக்கிறது
என்பதற்கு இந்த சினிக் கோட்பாடு ஓர் எடுத்துக் காட்டு. இன்பம் என்பது சுக
போகத்திலோ, அதிகார பலத்திலோ, ஆரோக்கியத்திலோ இல்லை. இவை யாவும்
நிரந்தரமானவை அல்ல. உண்மையான இன்பம் நிரந்தரமானது. அதை அடைதலே நல்லது என்று
ஆண்டிஸ்தனிஸ் உபதேசித்தார். அதன் விளைவாக இன்ப மறுப்பே இன்பம் என்ற விபரீத
சித்தாந்தம் கைக்கொள்ளப்பட்டது. இதற்கு டயோஜினஸை உதாரணமாகக் கூறலாம்.
புகழ்பெற்ற தத்துவ வாதியான டயோஜினஸ் ஆண்டிஸ்தனிஸின் மாணவர். அவர் ஒரு
பீப்பாயில் குடியிருந்தார். ஒரு கோவணம் மட்டுமே உடுத்தி இருந்தார். கையில்
ஒரு பிச்சைப் பாத்திரம் மட்டுமே வைத்திருந்தார். அவரிடம் இழப்பதற்கு என்று
ஏதும் இல்லை. எனவே, அவர் துக்கப்படுவதற்கும் காரணங்கள் ஏதும் இல்லை. ஆக,
மனிதன் நெருக்கடிக்கு ஆளாகும் போது மறுக்கப்படும் இன்பத்தை தானே வலிய
மறுத்து ஒதுக்கி, அதை இன்பமாகப் பார்க்கும் விசித்திர உளவியல் உருவாகி
விடுகிறது.
கிரேக்க அரசு அரசியல் நெருக்கடிக்கு ஆளானதன் விளைவாகத் தோன்றிய
வாழ்க்கையின் நிச்சயமின்மை, தனிமனித மனத்தின் நிலையாமை சிந்தனையை மக்கள்
மனத்தின் கூட்டுச் சிந்தனையாக வடிவமைத்து விட்டது. இதுதான் சினிக் கோட்பாடு
தோன்றக் காரணம் என்லாம்.
சினிக்குகளைத் தொடர்ந்து அடுத்ததாக வந்தவர்கள் ‘ஸ்டாயிக்’குகள். இது ஒரு
நடுநிலைக் கோட்பாடு. ஜீனோ என்னும் தத்துவ அறிஞர் இக்கோட்பாட்டை
உருவாக்கினார். ‘வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகப் பாவிக்க
வேண்டும்’ என்பது இவர்கள் கருத்தியல். துன்பத்தைப் பார்த்து அஞ்சவும்
வேண்டாம்; இன்பத்தை ஒதுக்கவும் வேண்டாம் என்பது அவர்கள் எண்ணம். எது
செயலாற்றுகிறதோ அதுவே உண்மை என்று அவர்கள் கருதினர். செயலில்லாத ஒரு பொருளை
அவர்கள் இருப்பதாக ஒப்புக் கொண்டதில்லை. அடுத்ததாக அவர்கள் ஒருமைக்
கொள்கையாளர்களாக இருந்தார்கள். அதாவது, இயற்கை,. கடவுள், அதிருஷ்டம் போன்ற
எல்லாமே ஒன்றுதான் என்பது அவர்கள் நம்பிக்கை. ‘எல்லா மனிதர்களும்
சகோதரர்களே; கடவுள் எல்லாருக்கும் தந்தை’ என்பது அவர்களின் பிரகடனம்.
ஸ்டாயிக்குகளின் கருத்தை மறுக்க விரைவிலேயே ஒருவர் வந்து சேர்ந்தார். அவர்
பெயர் எபிகூரஸ். சினிக்குகளும், ஸ்டாயிக்குகளும் கொண்டிருந்த இன்ப
மறுப்புக் கொள்கையை இவர் நிராகரித்தார். இன்பத் துய்ப்புக் கொள்கையை இவர்
முன் வைத்தார். இவர் தனது முன்னோடியான அரிஸ்டப்பஸ் என்பவரின்
இன்பக்கொள்கையையும், டெமாக்ரடிஸின் அணுக்கொள்கையையும் ஒன்றிணைத்துத் தன்
கோட்பாட்டை நிறுவினார். மனிதனை மகிழ்ச்சியான வாழ்வை நோக்கி அழைத்துச்
செல்வதுதான் தத்துவத் துறையின் இலக்காக இருக்க வேண்டும் என்பது
எபிகூரியசின் கருத்து. ’உலகம் எண்ணற்ற பரமாணுக்களால் ஆனது. அவை ஒன்றுடன்
ஒன்று இணைந்தும் பிரிந்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த அணுக்களின்
இணைப்பில்தான் மனிதன் உருவானான். வாழ்வின் இறுதியில் இந்த அணுக்கள் சிதறி
விடும். ஆகவே, மகிழ்ச்சி அடையும் வாய்ப்பு தற்போதைய வாழ்க்கைக்குப் பின்
கிடைக்கப் போவதில்லை. எனவே, மனிதன் இப்போதே இன்பம் அடையும் முயற்சிகளில்
ஈடுபடவேண்டும்’ என்பது எபிகூரியரின் வாதம். அவர்கள் இந்த இன்பக் கோட்பாட்டை
சமுதாயம் முழுவதற்குமாக பரிந்துரை செய்தார்கள். ’இன்பம் நல்லது; அது
சிறந்தது. இன்பத்தை நாம் பெற வேண்டும். அதில் தவறில்லை. அதே சமயம் ஒவ்வொரு
இன்பத்துக்கும் ஒரு பக்க விளைவு உண்டு. எனவே, குறுகிய காலத்துக்கு மட்டும்
வரும் இன்பத்தை விட நீண்ட காலத்துக்கு வரும் நீடித்த இன்பத்தை நாம் முயன்று
பெற வேண்டும்.’ என்பது அவர் கருத்து. அவரது பொருள்முதல் வாதமும் கொஞ்ச
காலம் ஆட்சி செய்தது. அதன் பிறகு வந்த மத்திய காலம் எனப்ப்டும் கி.பி..
5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டம்
இருண்ட காலம் எனப்படுகிறது.
மத்திய காலம் புதிய மதங்களை அறிமுகப் படுத்தியது. பழைய மூட நம்பிக்கைக்குப்
பதிலாகப் புதிய மூட நம்பிக்கைகளை விதைத்தது. பகுத்தறிவுச் சிந்தனைகள்
மழுங்கடிக்கப்பட்டன். அதை மீறும் சிந்தனையாளர்கள் தண்டிக்கப்பட்டனர்.
பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் நூல்கள் இருக்கக்கூடும் என்ற
சந்தேகத்தின் பேரில் அலெக்ஸாண்டிரியாவில் இருந்த நூலகங்கள் பல
எரிக்கப்பட்டன. பெண் கணித மேதையான ஹிபாஷியா மதவாதிகளால் படுகொலை
செய்யப்பட்டார். அதன் பிறகு வந்த 700 வருடங்களுக்கு கிரேக்கமும், அதன்
நீட்சியான ஐரோப்பாவும் நெடிய மௌனத்தில் மூழ்கி இருந்தன.
13ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி யுகம் தோன்றும் வரை இந்த நிலை நீடித்தது.
மதவாதிகளின் கையில் அரசு இருந்தது. அவர்கள் மண்டை நிறைய கடவுள்
நம்பிக்கையும், மூட நம்பிக்கையும் நிறைந்திருந்தன. மறுமலர்ச்சி யுகம்தான்
மனிதனைக் கடவுளின் பிடியில் இருந்து விடுவித்து, தன்னைப் பற்றிச்
சிந்திக்குமாறு செய்தது. மார்சிலியோ பிசினோ என்ற சிந்தனையாளர், ‘மனித
உருவில் இருக்கும் இறைவனே, உன்னை நீ அறிந்து கொள்’ என்று முழக்கமிட்டார்.
பைக்கோ டெல்லோ மிராண்டோ என்னும் இன்னொரு சிந்தனையாளர், ‘மனித மாண்பைக்
குறித்த ஒரு சொற்பொழிவு’ என்ற நூல் ஒன்றினை எழுதினார். இவை மனிதனைப் பற்றிய
சனாதன மனநிலையிலிருந்து விலகி ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தின.
மத்திய காலம் முழுவதுமே கடவுளைப் பற்றிய சிந்தனை மட்டுமே மேலோங்கி
இருந்தது. மனிதன் புறக்கணிக்கப்பட்டவனாக இருந்தான். அப்படிப்பட்ட கோட்பாடு
மறுமலர்ச்சி யுகத்தில் நிராகரிப்புக்கு உள்ளானது. பழைய கோட்பாடு அப்படியே
திருப்பிப் போடப்பட்டு மனிதன் முன்னணியிலும் கடவுள் பின்னணியிலும்
தள்ளப்பட்டனர். மனித மாண்பைக் கொண்டாடிய போதும், மறுமலர்ச்சியுகம் மனிதனிக்
கொல்லவும் செய்தது. மறுமலர்ச்சிக்கால சிந்தனையாளரான ஜியாடர்னோ ப்ரூனோ தனது
அறிவார்ந்த சிந்தனைகளுக்காகக் கட்டி வைத்துத் தீமூட்டி எரித்துக்
கொல்லப்பட்டார். மறுமலர்ச்சி யுகம் கலீலியோ, ஃபிரான்சிஸ் பேக்கன், கோப்பர்
நிக்கஸ் போன்ற அறிவியல் அறிஞர்களைத் தோற்றுவித்தது. கெப்ளர் புதிய வானவியல்
கொள்கையை அறிமுகம் செய்ததும் இதே மறுமலர்ச்சி யுகத்தில்தான்.
பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மதத்தின்
பிடியிலிருந்தும், மூட நம்பிக்கையின் ஆதிக்கத்திலிருந்தும் மனிதனை
விடுவிப்பதற்கு பல சிந்தனையாளர்கள் தோன்றினார்கள். அதே காலக்கட்டத்தில்
நமது நாட்டில் உலகத்தை வெறுத்து சன்னியாசம் மேற்கொள்ளும் துறவு நிலையை
பரிந்துரை செய்யும் ஆன்மிகவாதிகள் பெருகிக் கொண்டிருந்தார்கள்.
மத்தியகால மூடநம்பிக்கைகளை முதன் முதலில் எதிர்த்தவராக ஸ்பைனோசாவைக்
குறிப்பிடலாம். 1632ஆம் ஆண்டு ஹாலந்தில் பிறந்த இவர் பகுத்தறிவுச்
சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். தனது சுதந்திரமான சிந்தனைகளுக்காகத் தன்
மதத்திலிருந்து நீக்கப்பட்டார். ’எல்லா சாஸ்திரங்களையும், மத நூல்களையும்
விட நம் அறிவே நம்பத்தகுந்தது. எதுவாக இருந்தாலும் பகுத்தறிவு என்னும்
உரைகல்லில் உரைத்துப் பார்த்தே உண்மையைக் கண்டறிய வேண்டும்’ என்பது அவர்
கொள்கை. ’ஒரு முடிவுள்ள பொருள் தன்னிலைக்காக மற்ற கணக்கற்ற சக்திகளைச்
சார்ந்திருக்கிறது. இக்கணக்கற்ற சக்திகளிலும் ஒவ்வொன்றும் தன்னிலைக்காக
இன்னும் பல கணக்கற்ற சக்திகளைச் சார்ந்திருக்கிறது. இவ்விதமாக ஒன்றின்
அடிப்படையில் மற்றொன்று, அதன் அடிப்படையில் வேறு ஒன்று; அதன் அடிப்படையில்
இன்னொன்று... இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் நாம் ஒரு முடிவுக்கு வர
இயலாத அளவுக்கு இது போய்க் கொண்டே இருக்கும். இந்தச் சக்தி இயற்கையானது.
இதை அளிப்பதற்கு கட்வுள் என்று யாரும் தேவை இல்லை. இயற்கை என்பது இயங்கிக்
கொண்டிருப்பது. மனிதர்கள் இரண்டை மட்டுமே அறிவார்கள். ஒன்று: விரிவு.
மற்றது: சிந்தனை. நம் கண்ணுக்கெதிரே தெரியும் எல்லாம் பிரமைகளோ, மாயைகளோ
அல்ல. எல்லாம் உண்மைகளே. இவை சதா மாறிக் கொண்டே இருக்கும். ஒரு போதும்
மறையாது’ என்பது அவரது கோட்பாடு.
இன்னொரு முக்கியமான சிந்தனையாளராக ரெனி தெக்கார்த்தேயைக் குறிப்பிடலாம்.
தெக்கார்த்தே நவீன தத்துவத்தின் தந்தை என்றே அழைக்க்ப்படுகிறார். இவர் ஒரு
கணித மேதையும் கூட. கணிதத்தில் அல்ஜீப்ரா கணிதத்துக்கு இவர்
அளித்திருக்கும் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தத்துவவாதியான இவர்
ஒரு கணிதவாதியாதலால் தத்துவத்தையும் ஒரு கணித சமன்பாடு போலவே பார்த்தார்.
’நாம் எந்த ஒரு விஷயத்தையும் அப்படியே மொத்தமாக எடுத்துக் கொண்டு அது
உண்மையா என்று பார்க்கக் கூடாது; மாறாக அதைத் துண்டுகளாக்கி அந்தத்
துண்டுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து பார்ப்பதன் மூலமே அந்தப் பொருளைப்
பற்றிய உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்’ என்பது அவரது கருத்து. அவரது
புகழ் பெற்ற வாசகமாக, ‘நான் சிந்திக்கிறேன்; அதனால் நான் இருக்கிறேன்’
என்பதைக் குறிப்பிடலாம். ‘நாம் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும்
காண்பதெல்லாம் உண்மையே’ என்றும் அவர் சொன்னார். கடவுளைப் பற்றிப் பேசும்
போது குழப்பமாகப் பேசினார். கடவுளைப் பற்றிய அவரது கருத்துகளுக்கு எதிர்
மறையான எதிர்வினை இருந்ததால் அவர் தனது கருத்தை எல்லோருக்கும்
பிடித்தமாதிரி ஆக்க விரும்பினார். தெகார்த்தே தனது காலத்தில் ஒரு
முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தும் கூட, தனது கருத்துகளால் மதவாதிகளின்
வெறுப்புக்கு ஆளாக நேருமோ என்று அஞ்சினார். அவர்களுடன் சமரசமாகப் போகவும்
செய்தார். இது மறுமலர்ச்சிக் காலத்தின் புரட்சிகர மனோபாவத்தையும், அதே
சமயம் சமரசம் செய்து கொள்ள விரும்பும் கோழைத்தனத்தையும் எடுத்துக்
காட்டுகிறது.
(தொடரும்)
|
|