|
|
எளிய நண்பர்களும் ஆன்மீகவாதியும்
நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பூர்ண கும்ப மரியாதையோடு என்னை
வரவேற்பதாக என்னுடைய அருமை நண்பர்கள் கூறியிருந்தனர். பொதுவாகத் துறவிகள்
என்பவர்கள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதில் நான் சற்று பிடிவாதமாக
இருப்பவன். பட்டு பீதாம்பரம், மாலை மரியாதை, பாத பூஜை, குரு காணிக்கை என்று
ஆடம்பரத்தில் அரசியல்வாதிகளை விட மோசமாக நடந்துகொள்ளும் சாமியார்களை
நிறையவே தமிழ்நாட்டில் பார்த்து பார்த்து வெறுப்பேறிய எண்ணங்களுடன் ஓர்
ஆசிரமத்தில் இருந்தவன். இவர்கள் செய்யும் பந்தாவைப் பார்க்கும்பொழுது
சினிமா நடிகர்களே தேவலம் என்று தோன்றும்.
ஒரே மேடையில் பல மடாதிபதிகள் ஒன்று கூடும்பொழுது அவர்களுக்கு மற்றவர்களைவிட
சற்றே குட்டையான ஆசனம் அமைந்துவிடக்கூடாது என்று அலப்பரிப்பு, அவர்களுடைய
சிஷ்யர்கள் ஆசிரமத்தில் இருந்தே கொண்டு வந்த நாற்காலிகளை பின்னாலேயே
தூக்கிக்கொண்டு ஓடுவதைக் கண்கூடாகக் பார்த்திருக்கின்றேன்.
அப்படி இருந்தும் அவர்களுக்குச் சமமாக அமர மாட்டேன் என்று அடம் பிடிக்கும்
சங்கராச்சாரியார்களும் உண்டு. இதனால்தான் நான் எங்கு சென்றாலும் சடங்கு
சம்பிரதாயம் என்ற பெயரில் பெரிய இராஜ மரியாதை, மேளதாள வரவேற்புகளைத்
தவிர்த்தே வருகின்றேன்.
உண்மைத் துறவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இராஜோபாச்சாரங்களை நான்
மறுக்கவில்லை. ஆனால் அதன் ஊடே இழையோடும் நவீன குருமார்களின் பகட்டும்,
படாடோபமும் ஒரு புனித பாரம்பரியத்தையே அசிங்கப்படுத்துகிறது. பணிவு நிறை
பண்பாட்டையே ஆபாசப்படுத்துகிறது.
ஆனால் நான் எவ்வளவோ வாதாடியும் எனது தரப்பை அவர்கள் காதில் போட்டுக்
கொண்டதாகத் தெரியவில்லை. “தோ பாருப்பா! நம்ப தோட்டத்துலயே நீ மட்டும்தான்
சன்யாசியா போயிருக்க. இதலாம் எங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு
தெரியுமா,” என்று நாராயணன் சொல்ல, உடனே பொன்னுச்சாமி “அவர் கிடக்கறாறு
உடுப்பா! நம்ப செய்ய வேண்டியத செய்வோம்,” என்று தடாலடியாக எங்கள்
பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பார்த்தான்.
“நான் என்ன டாக்டராயியா வந்திருக்கேன் பெருமை படறதுக்கு?” “என்ன டாக்டர்
விஞ்ஞானி ஆனாதான் பெரிசா?” உலகத்தையே தொறந்துட்டு எல்லா ஆசைகளையும் விட்டு
விட்டு சாமியை அடையறதுதான் ரொம்ப பெரிசுனு எல்லாம் பேசிக்கிறாங்க. அதனால்
நீ ஒன்னும் ரொம்ப அசூசை படாத. என்ன, ஒரு சின்ன மாலை, அப்புறம் கால்ல
கொஞ்சம் மஞ்சா தண்ணி ஊத்தப் போறோம். இதுக்கு ஏன் நீ இப்படி அலட்டிக்கிற?”
என்றான் வாசு. இருந்தாலும் இந்த மரியாதையெல்லாம் ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு
மிகவும் சங்கடமாகவே இருந்தது. எப்படி இவர்களைத் தட்டிக்கழிப்பது என்று
புரியாமல் திகைத்து நின்றபொழுது, “ஏன் இப்படி அடம் பிடிக்கிற? உனக்காக
இல்ல, எங்க ஆத்ம திருப்திக்காக நாங்க இதை செய்யப்போறோம்,” என்று என் வாயை
அடைத்ததும், சரி ஏதோ செய்து விட்டுப் போங்கள் என்று, நான் என்னென்ன
விபரீதங்கள் காத்திருக்கின்றன என்று படபடப்போடே எண்ணங்கள் சிதறி
ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும்பொழுது என்னை சுமந்து வந்த கார் கோயில்
வாசலில் நின்றது.
ஆவலோடு காத்திருந்த என்னுடைய பால்ய நண்பர்கள் இத்தனை விமரிசையாக திருவிழாவை
ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தென்னை ஓலைகளால் பின்னப்பட்ட பச்சைப் பந்தல், கோயில் முழுதும் பசுமையை
அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்த
தோரணங்கள் எல்லாம் காற்றில் அழகாக அசைந்து கொண்டிருந்தது, பச்சைப் பந்தலோடு
அந்த கோயிலே தேர் போல மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது போலிருந்தது.
மாவிலைகள், காற்றில் படபடவென்று ஒன்றோடு ஒன்று மோதி ஓசை எழுப்பியதில் மனம்
பெரிதாக பரவசமடைந்தது. தென்னங்கீற்றுகளுக்கு இடையே இறங்கி வந்து
கொண்டிருந்த வெயிற்கிரணங்கள் என்னைப் பார்த்து கண் சிமிட்டிக்
கொண்டிருந்தது. வெயிற்கதிர்கள் அவ்வப்பொது என் கண்களை குருடாக்கியது. பலர்
என்னைப் பார்த்து வணங்கியதில் பரீட்சயமான முகங்கள் பல நினைவலைகளில் எழுந்து
எழுந்து மறைந்தது. சட்டென்று யாரென்று அடையாளம் கொள்வதின் முடியாமையில்
மனம் முனகித் தொலைத்தது. எல்லோருக்கும் பொத்தாம் பொதுவாக வணக்கம்
வைத்துக்கொண்டு வந்து எனக்குப் பரீட்சயமான நண்பர்களின் கைகளை அவ்வப்பொழுது
பற்றுவதும் விடுவதுமாக கோயில் வாசலை வந்து அடைந்தேன். எளிமையான வரவேற்பு
உபசரிப்புகளுடன் என்னைச் சாமி சன்னிதானத்துக்கு எந்த தடபுடல் இன்றி
அழைத்துச் சென்றதில் பூரண திருப்தி ஏற்பட்டது.
ஹோமம், பூஜை, சொற்பொழிவுக்குப் பிறகு சம்பிரதாயமாக எல்லா நண்பர்களையும்
பார்த்துப் பேசி விட வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்துகொண்டேன்.
எல்லா பூஜைகளும் முடித்துக்கொண்ட பிறகு ஓய்வாக கோயிலின் மூலையில் தனித்து
அமர்ந்து கொண்டேன். அப்பொழுது ஒவ்வொரு நண்பர்களாக என்னை வந்து மெல்ல சூழ
ஆரம்பித்தார்கள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு பல பெண் தோழிகளை அடையாளம்
கண்டு கொள்ள முடியவில்லை. “என்ன முழிக்கிற? இதுதான் நம்ம சின்னம்மா,” என்று
கூறியதும் எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எவ்வளவு சன்னமாக இருந்த சின்னம்மா
இப்பொழுது இவ்வளவு உப்பி ஊதி பெரியம்மாவாக உரு மாற இருந்தது எனக்குப் பெரிய
நகைச்சுவையாக இருந்தது. “அப்ப, நம்ப பெரியம்மா எப்படி இருக்கும்,” என்று
கேளியாகக் கேட்டேன். “அது கதைதான் உனக்குத் தெரியுமில்ல. கல்யாணமான கொஞ்ச
நாள்லயே புருசன் செத்துப் போயிட்டான். அதோ பாரு அங்கு நிக்குது.
எப்பொழுதுமே ஒரு சோகம் அது முகத்துல அப்பிகிட்டேதான் இருக்கு,” என்றான்
இராமன். “நம்ப எல்லப்பன் எப்படி இருக்கான் என்றேன் உற்சாகமாக. “அவன் இப்ப
எஸ்டேட்ல இல்ல. பட்டர்வெர்த் பக்கம் வேலைக்குப் போயிட்டான். உனக்குத்
தெரியாதா? அவனும் வந்திருக்கான்,” என்று அவனையும் கை காட்டி அழைத்தார்கள்.
எல்லா நண்பர்களையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்ப்பதில் ஓர் இனம் புரியாத
உணர்வு மனதின் உள் தடத்தில் ஊறிக்கொண்டே இருந்தது.
திடீரென்று ஞாபகப்படுத்திகொண்டது போல், “ஆமாம், நம்ப லட்சுமி எப்படி
இருக்கு? என்றேன். “ஓ அத, இன்னும் நீ மறக்கலயா? அந்த அழுக்கு மூட்டை
குசினியில ஏதாவது கூட்டிகிட்டு இருக்கும்,” என்று கூறினான் நாராயணன்.
இன்றும் கூட இந்த இனப் பாகுபாடு அவன் மனதில் இருப்பது எனக்கு வருத்தத்தைத்
தரவில்லை, காரணம் அது துவேஷத்தால் ஏற்பட்டது அல்ல, பழக்க தோஷத்தால்
படிந்தது என்று.
சொல்லி வைத்தாற்போல் அந்த நேரம் பார்த்து லட்சுமியும் அங்கு வந்து
ஆஜரானாள். என்னைப் பார்த்ததும் என்ன நீ பெரிய சாமியாராயிட்டியாமே என்று
அவள் வியந்தது இன்னும் அவள் வெள்ளந்தித்தனமாகவே இருப்பதைப் பறை சாற்றியது.
“இல்ல இல்ல நான் எப்போதும் உன்னுடைய அதே பிரண்டுதான்,” என்று நான்
கூறியதும் என் கையை இறுகிப் பற்றிக்கொண்டு “நான்தான் உங்களுடைய
சாப்பாட்டுக்கு பொறுப்பு தெரியுமா? சீக்கிரம் பேசி முடிச்சுட்டு வாங்க.
நான் எல்லாத்தையும் எடுத்து வச்சு தயார் பண்றேன்,” என்று அவள் அன்பொழுகக்
கூறியது அவளோடு பால்ய பருவத்தில் கூட்டாஞ்சோறு ஆக்கித் தின்ற அலாதி
அனுபவத்திற்கே இட்டுச் சென்றது.
“ஆமாப்பா! அவ புருசனுக்கே ஒழுங்கா சோறு போட மாட்டா. உனக்கு பந்தி வைக்கப்
போறாளா? அவ கையில சாப்பிட்டாதான் உனக்கு விமோசனம், அவங்க வகையாறாக்கள்ல
உனக்கும் ஏதாவது அமையுதான்னு பாப்போம்,” என்று எல்லா நண்பர்களும் கேலி
பேசியதை அவள் கண்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.
“நிச்சயமா இன்னிக்கு உன் கையாலதான் சாப்பாடு,” என்று நான் கூறியதும்
“பார்த்தீங்களா உங்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைச்சுச்சா, எப்பொழுதுமே
நான் அன்ன லட்சுமிதான்,” என்று அவள் கோணியதும், “சரி, சரி பாத்து
கூட்டிட்டுப் போ, உன் புருசன் கோவிச்சிக்கப் போறான்,” என்று மற்றவர்கள்
கொல்லென்று சிரித்ததும் அவள் கோபித்துக்கொள்ளாமல் நாணிக் கோணி சென்றது
மனதுக்குப் பரவசமாக இருந்தது.
“அப்புறம் என்ன, எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என்று நண்பர்களையெல்லாம்
குசலம் விசாரித்துக்கொண்டிருந்த பொழுது, “சீதா லட்சுமி பையன் படிச்சு பெரிய
பட்டதாரி ஆயிட்டான். “மீனாட்சி எங்கு இருக்கு?” என்று சட்டென்று நினைவு
கூர்ந்து கேட்டேன். ஓ அந்தக் கதை உனக்குத் தெரியாதா? புருசன் கொடுமை
தாங்காம தற்கொலை இல்ல பண்ணிகிச்சு,” என்று சொன்னதும் மனதில் ஏதோ ஓர்
உறுப்பு அறுந்து விழுந்தது போல சட்டென்று ஒரு வலி தோன்றி மறைந்தது. எத்தனை
அழகான பெண். அழகு இருக்கும் இடத்தில் எப்பொழுதுமே அபத்தமும் ஆபத்தும்
குடிகொள்ளும் போலும்.
“அப்புறம் மத்தவங்க எல்லாம்,” என்றேன். “நாங்க எல்லாம் நல்லாதான இருக்கோம்.
நம்ப ஊடான் கணேசன் இருக்கான் இல்ல, அவன்தாப்பா குடிச்சு குடிச்சு
குட்டிச்சோரா போயிட்டான். யார் சொல்றதையும் கேட்கறது இல்ல. நாலு குழந்தை
ஆச்சு. எல்லாத்தையும் கரை சேக்கறது இல்லையா? ஏதோ நல்ல பொண்டாட்டியா
அமைஞ்சதுனாலே குடும்பம் ஓடிட்டு இருக்கு - பிள்ளைகளும் நல்லா படிக்கிறாங்க.
அவன்தான் குடிகுடின்னு உடம்பை கெடுத்துக்கிறான்.” “வேலை பாக்கறது இல்லையா?”
என்றேன் ஆதங்கத்தோடு. வேலை எல்லாம் ஒழுங்காத்தான். பார்க்கிறான். பாதி
சம்பளத்தை கூட வீட்டுல கொடுக்கறது இல்ல. நீதான் அவனோட ரொம்ப தோஸ்து ஆச்சே.
அவனுக்கு கொஞ்சம் புத்தி சொல்லேன்,” என்றான் பொன்னுச்சாமி.
“எங்க அவன், கோயிலுக்கு வந்திருக்கானா?” என்றேன் ஆர்வமாக. “அதோ பாரு
கோயிலுக்கு வெளியே உன்னயே நின்று பாத்துட்டு இருக்கான்,” என்று கூறியதும்
சட்டென்று திரும்பிப் பார்த்தேன். அவன் கண் மாறாமல் என்னையே உற்றுப்
பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. மூன்றாம் படிவம் வரை எத்தனை
அன்யோன்யமான நண்பர்கள் நாங்கள். நான் பள்ளிக்கு காசு கொண்டு வராதபொழுது
எல்லாம் தான் வாங்கிச் சாப்பிடுவதில் மறக்காமல் பாதி என்னிடம் தந்து
விடுவானே. அவன் கொஞ்சம் முரடன்தான். அவனிடம் காசு இல்லாவிட்டால் லாவகமாகப்
பேசி என்னிடம் உள்ள பணத்தையெல்லாம் வாங்கித் திண்பண்டங்கள் வாங்கினாலும்
எனக்குப் பகிர்ந்து கொடுக்காமல் சாப்பிடமாட்டான். நோஞ்சான் ஆன எனக்கு
அவனிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவன் முரடன் என்பதாலேயே அவனோடு இருப்பதில்
நான் பாதுகாப்பை உணர்ந்தேன். அது அவன் முரட்டுத்தனம் தரும்
வெளிப்பாதுகாப்பு அல்ல. அவன் கரிசனத்தால் ஏற்படும் உணர்வெழுச்சி. என்னையே
பார்த்துக்கொண்டிருந்த அவன் நான் சட்டென்று திரும்பி அவனைப் பார்த்ததும்
டக்கென்று தலையைக் கவிழ்த்துக்கொண்டு மீண்டும் தலையை உயர்த்தி கண்களாலேயே
என்னை அழைத்தான். “உள்ளே வாயேன்,” என்றேன். “நான் உள்ளே வரக்கூடாது, நீ
வெளியே வா,” என்றான் உரிமையோடு.
“ஏன் நீ என்ன வீட்டுக்கு விலக்கா? உனக்குக் கூட தீட்டு தொடக்குன்னு
இருக்கா?” என்றேன் கேளியாக. “உன்கிட்ட உள்ள குசும்பு இன்னும் போகலயா?”
என்றான் குதூகலமாக. “நீ ஏதோ பெரிய சாமியாராயிட்டாமே? யாரையும் தொட்டு கூட
பேச மாட்டேன்னு கேள்விப்பட்டேன்,” என்றான் என்னைப் பார்த்து தயங்கி தயங்கி
நின்றபடி.
வேகமாகச் சென்று அவன் கைகளைப் பற்றிக்கொண்டேன். “என்ன இது நீயே இப்படி
அந்நியப்படுத்திப் பேசலாமா?” என்றேன். கண் கலங்கிவிட்டான். ஏற்கெனவே நன்கு
குடித்திருந்ததால் அவன் குழி விழுந்த கண்களின் அழுந்திய பார்வை என்னை ஏதோ
செய்தது. ஏதும் சொல்லாத அவனுடைய வெற்றுப் பார்வை என் நெஞ்சைக் கிளர்ந்தது.
எத்தனை முறை அவன் இடுப்பை வளைத்துப் பிடித்துக்கொண்டு சைக்கிளின் பின்
புறத்தில் அமர்ந்தவாறு தோட்டப்புறத்தில் காடு மேடுகளையெல்லாம்
சுற்றியிருக்கின்றோம்.
ஒரு முறை கூட தோட்டத்தில் உள்ள பெரிய ஆற்றில் குளிக்கும்பொழுது நான்
தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருக்கும்பொழுது அவன் முரட்டுக்
கரங்கள்தான் தானே என் தலை முடியை பற்றி இழுத்துக்கொண்டு வந்து கரையில்
போட்டது. உயிர் காப்பான் தோழன் என்பார்கள். அது இவன் விஷயத்தில் எத்தனை
உண்மை. அதை எல்லாம் அவன் மறந்தே போயிருப்பான். இந்தச் சில்லறை விஷயங்களை
எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது தான்தோன்றியான அவனுக்கு. நான்தான் இன்னும்
நெஞ்சில் சுமந்துகொண்டு திரிந்தேன்.
அவன் கையில் உள்ள சூடு என் உடல் முழுவதும் வெப்பமாக பரவ ஆரம்பித்ததும்
சற்றே நிதானித்தபடி கைகளை விடுவித்துக்கொண்டு, “சரி எப்படி இருக்கே?”
என்றேன் ஆதங்கத்துடன். “எனக்கென்ன ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். நல்ல
பொண்டாட்டி, நறுக்குன்னு நாலு குழந்தைகள்,” என்றான். “இல்ல ரொம்ப
குடிக்கிறியாமே? உனக்கென்ன அப்படி பெரிய மனக்குறை?” என்றேன் மெல்லத்
தயங்கியபடி. “குடிக்கிறதுல என்ற தவறு? பறக்க பறக்க பாடுபடறேன். அலுப்பு தீர
குடிக்கிறேன். இதுல என்ன தப்பு? ஏதோ கொலை குத்தம் செஞ்ச மாதிரி, கூத்தியாள
வச்சிக்கிற மாதிரி, தப்பா பாக்கிறியே,” என்றான் பொய்யான கோபத்தோடு. “அது
சரி, என் வாழ்க்கை ஒரு பக்கம் கிடக்கட்டும். உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி
சாமியாரா போயிட்ட? உனக்கு என்ன குறை? ஏதோ டிகிரி டிப்ளோமான்னு படிச்சிட்டு
வாத்தியாரா போனியே? அதுவெல்லாம் என்னா ஆச்சு? உங்க குடும்பம்தான்
வசதியானதுன்னு ஊருக்கே தெரியுமே. உனக்கு என்ன கஷ்டம் வந்துச்சு? உன்ன
நெனச்சாதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. கொப்பும் குலையுமா தோப்பும்
தொறவுன்னு செழிப்பா இருக்க வேண்டிய நீ இப்படி பாலைவனத்துல ஒத்த மரமா
நிக்கிறீய!” என்று உண்மையிலேயே உருகி உணர்ச்சி கொந்தளிக்க அவன் கேட்டபொழுது
நான் மனம் அதிர்ந்து நிலை குத்திப்போனேன். என் வாழ்க்கையில் நான் பதில்
சொல்ல முடியாமல் வாயடைத்துப் போன தருணங்களில் இதுவும் ஒன்று.
வாழ்க்கையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறதா என்ன? பதில்
இல்லாமல் கேள்விகளாகவே விரிந்துகொண்டே போவதுதானே வாழ்க்கையின் விலாசம்.
அவரவர் பார்வையில் அவரவர் வாழ்க்கை பெரிசுதான். ஒன்று உயர்ந்தது. மற்றது
தாழ்ந்தது என்று தரம் பிரித்துக்கொள்வதில் தனி மனித நியாயத்துக்கு மட்டுமே
உட்பட்டது. வாழ்க்கையில் எது நல்லது, எது கெட்டது என்று பாகுபிரிப்பது
வாழ்க்கையை குறுக்குவது போல் இருக்கிறது. வாழ்க்கையை புத்திசாலித்தனமாக
நிர்வகித்தால் எல்லாம் சரிதான். முட்டாள்தனமாக கோட்டைவிட்டால் எல்லாம்
கோளாறுதான். எல்லோரும் அவரவர் புரிதலுக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எது நல்லது, யார் கெட்டவர் என்பதை யார் தீர்மானிப்பது என்று மெல்ல எனக்குப்
புரிய ஆரம்பித்தது.
“இங்க பாரு, நான் ஆனந்தமாத்தான் இருக்கேன். நீ சந்தோஷமாகத்தான் இருக்கன்னு
நான் நினைக்கிறேன்,” என்றேன். எதையோ புரிந்து கொண்டது போல, “வா கடைக்குப்
போயி தண்ணி சாப்பிட்டுகிட்டே பேசலாம்,” என்று என் கையைப் பிடித்துக்கொண்டு
வேகமாக நடந்தான்.
ஒர் ஆன்மீக வாதி தன்னை அடையாளம் கண்டு கொண்டான், ஓர் எளிய லௌகீகவாதி
தன்னைக் கண்டுகொண்டது போல.
|
|