|
|
பெலித்தூங் கிராமத்தின் ஆன்மா
(இந்தோனேசியா சினிமா: Laskar Pelangi)
-
ஒரு காலுடைந்த பழைய பெரிய சைக்கிள்...
-
மூன்று பூந்தொட்டிகள்...
-
தகரத்தின் சுருங்கிய நிழல்...
-
கத்திரிப்பு வர்ணத்தின் முட்டிவரை இழுக்கப்பொட்டிருக்கும் காலுறையை
அணிந்துகொண்டிருக்கும் ஹருண். . .
-
வழிப்பாதையில் முதலையிடமிருந்து தினமும் தப்பி வரும் லிந்தாங். .
இதுதான் முஹமாதிய கிராமப்பள்ளியின் முகம். . .
உட்புற தீவான பெலித்தூங் எனும் கிராமத்திலுள்ள பழமையான ஒரு பள்ளியின் கதை
இது. ஒரு காலக்கட்ட மக்களின் வாழ்வை ஆவணப்படுத்தும்போது இது போன்ற
ஆரம்பப்பள்ளிகளின் இருப்பு நீக்க முடியாத வலுவான ஒரு ஞாபகத்தைக்
கொண்டிருக்கும். வாழ்வின் எல்லா விதமான தொடக்கங்களையும் இங்கிருந்துதான்
கற்றுக்கொண்டிருப்போம். அது போல இந்தோனேசியாவின் வறுமை தேசங்களில்,
மீதமிருக்கும் மக்களின் நம்பிக்கைகளின் நினைவாக முஹமாதியா கிராமப்பள்ளியைப்
போல ஏராளமான பள்ளிகள் அங்கு இருக்கின்றன. அவைகள் யாவும் மாணவர்கள்
போதாமையினாலும் ஆசிரியர்கள் இல்லாமையினாலும், பேரிடர்களாலும் மூடப்பட்டு
வரும் ஒரு காலக்கட்டத்தில் நிகழும் உண்மை கதையை மையமாகக் கொண்டதுதான்
முஹமாதியா கிராமப்பள்ளி.
இந்தோனேசியாவின் மிக வளமான தீவு பெலித்தூங். காலனியக் காலக்கட்டத்தில்
மேலாதிக்க சக்திகளாலும் உள்நாட்டு முதலாளிகளாலும் அதிகமாகச் சுரண்டப்பட்டு
வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டப் பகுதியும்கூட. இந்த மண்ணில் இருந்த அனைத்து
இலட்சியங்களையும் கனவுகளையும் மெல்ல மெல்ல பறித்துக் கொண்ட பின்
பிற்படுத்தப்பட்ட சமூகமாக அங்குள்ள இஸ்லாமியர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகும் கொண்டாடப்பட இயலாத ஒரு வாழ்வே அங்குத்
தேங்கியிருந்தது. இரு வேறு சமூகமாகப் பிரிந்து கிடந்த பெலித்தூங், ஒன்றில்
நகர் வளர்ச்சி சாயலையும் மற்றொன்றில் பின்னடைந்த மண்ணின் சாயலையும் பூசிக்
கொண்டு சிதைந்து போயிருந்த ஒரு வரட்சியுற்ற காலத்தின் கண்ணாடியில் ஓர்
அழுத்தமான கோடாக வந்து விழுகிறது Laskar Pelangi திரைப்படம்.
முதல் நாள் பள்ளிப் பதிவு நகரம் முழுக்க நடைப்பெறுகிறது. இந்தோனேசிய கல்வி
தலைமையகம் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர் எண்ணிக்கையில் வரையறையை
விதிக்கிறது. நகர வளர்ச்சியிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுவிட்ட
இப்பள்ளிகளில் குறைந்தது 10 மாணவர்களாவது பதிய வேண்டும் என்றும் அப்படி ஒரு
மாணவர் குறைந்தாலும் அப்பள்ளி மூடப்படும் என்றும் தகவல் வந்து சேர்கிறது.
முஹமதியா பள்ளியின் முதல்நாளில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கும் முஸ்லிமா
தனது பெரிய சைக்கிளில் கிராமப்பள்ளியை வந்து சேரும்போது பள்ளியின் வாசலில்
ஏற்கனவே ஒரு மாணவன் (லிந்தாங்) தனது அப்பாவின் பெரிய சைக்கிளில் காத்துக்
கொண்டிருக்கிறான். அவன் கால்களில் செருப்பு இல்லாமல் பழைய உடையை
அணிந்துகொண்டு முகத்தில் வியர்வை வடிய ஆர்வத்துடன் முஸ்லிமா முன்
நிற்கிறான். அவனைப் பார்த்ததும் முஸ்லிமா பெரும் மகிழ்ச்சி கொள்கிறாள்.
இந்தப் பள்ளிக்குப் பதிய வந்திருக்கும் முதல் மாணவனான அவன் மீனவக்
கிராமத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வந்திருக்கிறான்.
“என் அப்பா கடலுக்குப் போய்விட்டு இன்னும் வீட்டுக்கு வரவில்லை, அதனால்
நானே வந்துவிட்டேன். என்னால் தனியாக வர முடியும்” என முகத்தில் பொங்கும்
ஆர்வத்துடன் சொல்லும் அவனை முஸ்லிமா ஆச்சர்யத்துடன் பார்க்கிறாள். அவனைப்
பார்த்த பிறகு இன்று நமக்கு எப்படியாவது 10 மாணவர்கள் கிடைத்துவிடுவார்கள்
என நம்பிக்கை கொள்கிறாள் முஸ்லிமா.
அதன் பிறகு முஹமாதியா கிராமப்பள்ளிக்கு ஒருவர் ஒருவராக பதிவதற்கு
வந்துகொண்டே இருக்கிறார்கள். காற்றாடி வசதிகூட இல்லாத தகர அடைப்புகளும்
நீண்ட பலகை அடைப்புகளும் கொண்ட அந்தப் பள்ளியின் வகுப்பறையில் அனைவரும்
வியர்த்து வடிய அமர்ந்திருக்கிறார்கள். 'இக்கால்' என்ற இன்னொரு மாணவன்
(இப்படத்தின் கதைச்சொல்லியும்கூட) புதிய காலணி கேட்டும் கிடைக்காத
கோபத்துடன் அமர்ந்திருக்கிறான். லிந்தாங் வெறுங்காலுடன் தனக்கு அருகில்
அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் திடீரென ஆசுவாசம் கொள்வது போல உணர்கிறான்.
முஹமாதிய பள்ளியின் காப்பாளரும் தலைமை ஆசிரியருமான பாக் ஹார்பான் 10
மாணவர்கள் வரவில்லையென்றால் பள்ளியைத் தொடங்க முடியாமல் போய்விடும் என்கிற
வருத்தத்துடனேயே பதிய வருபவர்களை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒன்பது மாணவர்கள் பதிந்துவிட்ட பிறகு அவர்கள் விதித்திருந்த கால அவகாசமும்
முடிவுறுகிறது. முஸ்லிமா இன்னமும் மனதில் நம்பிக்கையுடன் கொஞ்ச நேரம்
காத்திருக்கலாம் எனக் கெஞ்சுகிறாள். இன்று இந்தத் தொழிலாளர் சமூகத்தைச்
சேர்ந்த குழந்தைகளின் கல்வியின் எதிர்காலம் முடிவு செய்யப்படும் கட்டத்தில்
தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. இவர்கள் கல்வி கற்பார்களா அல்லது நிரந்தர
கார்ப்பரெட் தொழிலாளிகளாகவும் ஈய சுரங்கத்து தொழிலாளிளாகவும் நிலைக்கப்
போகிறார்களா என்பதை நிர்ணயம் செய்ய இன்னும் ஒரே ஒரு மாணவனின் வருகைத்தான்
மீதமிருக்கிறது. வெறும் ஒன்பது மாணவர்களின் பதிவுடன் சோர்வாக நகரும்
நேரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர பாக் ஹார்பான் தனது தொடக்க உரையை
ஆற்றுகிறார்.
“இறைவனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். காரணம் இந்தப் பெலித்தோங் மண்ணின்
மிகத் தொன்மமான இஸ்லாமிய பள்ளியின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்கு இத்தனை
அக்கறையுடைய பெற்றோர்களை இந்த வேளையில் அனுப்பி வைத்ததற்கு. முஹமாதிய
கிராமப்பள்ளி பல நல்ல பண்புடைய மாணவர்களையும் சாதனை படைத்தவர்களையும்
உருவாக்கியிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படை ஒழுக்க நெறிகளை முதன்மையாகக்
கொண்டு நாட்டின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் கடமையை இந்தப் பள்ளி செய்து
வந்திருக்கிறது. என்றாலும் 10 மாணவர்கள் கிடைக்கவில்லை என்றால் இப்பள்ளியை
அடைத்துவிடுமாறு ஆணை வந்துள்ளது. இதைத் திறந்த மனதுடன் நாம்
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” எனச் சொல்லி தலை குனிகிறார். லிந்தாங் தன்
கையில் வைத்திருக்கும் நோட்டுப் புத்தகத்தையும் பென்சிலையும் ஏக்கத்துடன்
பார்க்கிறான். எல்லார் முகத்திலும் சலிப்பும் கவலையும் அப்பிக்கொள்கிறது.
முஸ்லிமா தனது முயற்சியைக் கைவிடாமல், “பொறுங்கள் நான் ஒரு பையனையாவது
கொண்டு வருகிறேன்” என வெளியே ஓடும்போது, தூரத்தில் ஹருண் என ஒரு மாணவன்
பள்ளியை நோக்கி ஓடி வருகிறான். அவனுக்குப் பின்னால் ஹருணின் அம்மா அவனைக்
கூவி அழைத்துக் கொண்டே துரத்தி வருகிறார். பின்னணி இசை உச்சத்தை அடைய
ஹருணின் கால்கள் மட்டும் காட்டப்படுகின்றன. பிறப்பிலேயே சற்று ஊனமுடையவன்
ஹருண் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. முஸ்லிமா நன்றியுடன் அவனுடைய
பெயரை உற்சாகம் குறையாமல் அழைக்கிறாள். அன்று ஹருண் என அந்தக் கடவுளின்
பிள்ளையால் முஹமாதியா பள்ளி காப்பாற்றப்படுகிறது. மனதை நெகிழ வைக்கும்
காட்சி அது.
இந்த 10 என்கிற எண்ணிக்கையைக் கேட்கும்போது இப்ராஹிம் இடைநிலைப்பள்ளியில்
பயிலும்போது தமிழ் வகுப்பு ஆரம்பிப்பதற்காக நான் அனுபவித்த தடைகளும்
இடர்களும் சட்டென ஞாபகத்திற்கு வருகின்றன. 2002 ஆம் ஆண்டில் ஆரம்பநிலை 6ஆம்
படிவம் படித்துக் கொண்டிருந்தபோது அப்பள்ளியில் கூடுதல் பாடமாக தமிழ்
மொழியை நான் மட்டுமே எடுத்திருந்தேன். அப்பொழுது இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்
வகுப்புகள் ஆரம்பிப்பதற்குக் குறைந்தது 15 மாணவர்களாவது தமிழ் எடுத்திருக்க
வேண்டும் என்கிற சட்டம் இருந்தது. ஆகையால் அப்பள்ளியில் தமிழ் வகுப்பை
ஆரம்பிப்பதற்காக நானும் என் நண்பன் சண்முகமும் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று
அங்குள்ள இந்திய மாணவர்களைத் தமிழ் எடுக்குமாறு பிரச்சாரம் செய்தோம்.
எல்லாரிடமும் நான் திரும்ப திரும்ப சொன்ன ஒரே வார்த்தை, “நம் தாய்மொழி
நம்பத்தான் எடுக்கனும்” என்பதாகும். இதில் ஒரு சுயநலம் இருந்தாலும்
சட்டத்தை மீறி ஏதும் செய்ய முடியாததால் வேறு வழியில்லாமல் ஒவ்வொரு
மாணவரிடமும் பொதுநலத்தைப் பற்றியும் தாய்மொழி சிந்தனையைப் பற்றியும் பேச
வேண்டியதாகப் போயிற்று.
படம் அடுத்த 5 வருடத்தைக் கடந்து நகர்கிறது. மாணவர்கள் மழைக்காலத்தில்
வகுப்பிற்குள் நுழைந்து விடும் ஆடுகளை வெளியேற்றி சுத்தம் செய்வது முதல்,
வெயில் காலத்தில் தகரத்தின் இடைவெளியிலிருந்து அறுந்து விழும் சூரிய
ஒளிக்கீற்றுகளை இரசித்தவாறு சிரிப்பதுவரை பள்ளியுடன் கலந்துவிட்ட
மனநிலையைப் பிரதிபலிப்பவர்களாக இருக்கிறார்கள். வெறித்துக் கிடக்கும்
கிராமத்தின் அடையாளமாக பழம்பெறும் குறியீடாக நிலைத்திருக்கும் முஹமாதியா
பள்ளி இந்தோனேசியாவின் மரபார்ந்த வாழ்க்கை முறையையும் காட்டிச் செல்கிறது.
படத்தில் அதிகமான வகுப்பறை காட்சிகள் எந்தச் சலிப்பையும் ஏற்படுத்தாமல்
மாணவர்களின் பகிர்ந்தலையும், விளையாட்டையும், சோகத்தையும் வெறுப்பையும்
நிரப்பிக்கொள்ளும் இடமாக வந்துவிட்டுப் போகின்றன. முஸ்லிமா இந்தோனேசியாவின்
ஐந்து கோட்பாடுகளைப் பற்றி போதிக்கும்போது அதன் பின்னணியில் வந்து போகும்
ஐந்து நடைமுறை காட்சிகள் அன்றைய காலக்கட்டம் எப்படி அந்த ஐந்து
கோட்பாடுகளுக்கும் எதிராக இயங்குகின்றன என்பதை உணர முடியும்.
1. கடவுள் மீது நம்பிக்கை வைத்தல்
2. நேர்மையும் நாகரிகமும் கொண்ட மனித வளம்
3. இந்தோனேசியாவின் ஒற்றுமை
4. ஆளுமைகளாளும் திறனுடையவர்களாலும் வழிநடத்தப்படும் ஜனநாயகம்.
5.இந்தோனேசியாவின் அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சமூக
அங்கீகாரமும் நியாயமும்
இந்த ஐந்து கோட்பாடுகள் ஒலிக்கப்படும்போது, பின்னணியில் லிந்தாங் அவ்வளவு
தொலைவிலிருந்து சைக்கிள் மிதித்து பள்ளிக்கு வரும் காட்சியும், அவனுடைய
சிறிய வீட்டில் குழந்தை சத்தம் அதீதமாகக் கேட்க, பானையில் நீரை அள்ளிக்
கொண்டு வந்து ஊற்றும் காட்சியும், தொழில்பேட்டையில் வியர்க்க விறுவிறுக்க
வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகளின் கூட்டத்தைக் காட்டும்
காட்சியும் திரையில் வந்து போகின்றன. இவைதான் ஒட்டுமொத்த இந்தோனேசியாவின்
இன்னொரு முகமாகப் பார்க்க முடிகிறது. இடையில் ஒரு பாடல் காட்சியில்
பெலிந்தூங் நகரத்தில், கிராமத்தில், சந்தையில், தெருக்களில், முஹமாதிய
பள்ளியின் மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்க்கொள்ளும் இன்னொரு வாழ்வை
மொத்தமாகக் காட்டியிருப்பது பாடலின் வரியுடன் நம்மை பெலிந்தூங் முழுக்க
இழுத்துக் கொண்டு போகும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.
மழை நேரத்தில் தெருவில் ஓடும் குழந்தைகளும், சகதிகள் படிந்த பாதையில்
போடப்பட்டிருக்கும் சந்தைக்குள் மீன் வாங்கிக் கொண்டு வரும் மாணவர்களும்,
தன் அப்பாவின் படகை கடலின் கரையில் இருந்துகொண்டு தள்ளிவிடும் லிந்தாங்,
சந்தையில் மீன் வாங்கிக் கொண்டு முஹமாதிய காப்பாளரைச் சைக்கிளில்
ஏற்றிக்கொண்டு வீடு திரும்பும் இக்காலின் அப்பாவும், சந்தையில் வேலை செய்த
களைப்பில் மூட்டைகளின் மீது படுத்துறங்கும் மாணவர்களும், ஈய சுரங்கத்தில்
வேலை செய்துவிட்டு சோகத்துடன் லாரியில் அமர்ந்திருக்கும் மாணவர்களும், என
ஒரு பாடலில் ஒரு இந்தோனேசியாவின் முழுமையான யதார்த்தங்களைக் காட்ட முடியுமா
என்கிற சாத்தியங்களை உருவாக்கி காட்டியிருக்கிறது லஸ்கார் பிலாங்கியில்
இடம்பெறும் இந்தப் பாடல் காட்சி. துயரத்தின் எந்தவிதமான சாயலையும்
அப்பிக்கொள்ளாமல் தினசரி வாழ்வின் நகர்ச்சியை மட்டும் ஓங்கி ஒலிக்கும் இசை
மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஒவ்வொரு சமயத்திலும் எழுதுவதற்குப் பயன்படுத்தும் வெண்கட்டிகள்
முடிந்துவிட்டால், பள்ளியின் சார்பாக இக்காலும் லிந்தாங்கும் சைக்கிளில்
கிராமத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் சீனர்கள் வியாபாரம்
செய்யும் சிறுநகரத்திற்குச் சென்று வருவார்கள். இந்தப் பயணம் அவர்கள்
இருவருக்கும் மத்தியில் நல்ல நட்பை ஏற்படுத்தியிருக்கும். லிந்தாங்கின்
கூர்மையான அறிவின் ஆற்றலைக் கண்டு இக்கால் வியப்பும் பிரமிப்பும் அடைபவனாக
இருப்பான். தொடர்ந்து அவனுடன் விவாதித்துக் கொண்டும் உரையாடிக்கொண்டும்
அவர்களின் சிறுநகரத்துப் பயணம் நீளும். இதற்கிடையில் அந்தச் சீன
வியாபாரிக்கு ஓர் அழகான பெண் இருப்பதாக அறிகிறான் இக்கால். பால்யத்தில்
வரும் ஒருவகையான ஈர்ப்பு அவனுக்கு அந்தச் சீன சிறுமியின் மீது வருகிறது.
அவளைப் பார்ப்பதற்காகவே அவர்கள் பள்ளியில் இருக்கும் வெண்கட்டிகளைத் தூக்கி
வீசிவிட்டு மீண்டும் வெண்கட்டிகள் வாங்க பயணம் செய்கிறார்கள். தன்னைவிட
உயரமான ஐ லிங் என்கிற அந்தச் சீன சிறுமியுடன், பின்னணியில் சீன தனித்துவ
இசை ஒலிக்க இருள் அடர்ந்துவிட்ட சீனர் தெருவில் இக்கால் நடப்பது ஓர் அழகான
கவிதையைப் போல கவர்கிறது. ஒருநாள் மதியத்தில் மீண்டும் வெண்கட்டி
வாங்குவதற்காக இக்கால் அந்தச் சீனக்கடைக்குச் செல்கிறான். ஆனால் ஐ லிங்
அவளுடைய மாமாவிற்கு உதவியாக ஜகர்த்தா சென்றுவிட்டதாக அறிந்து சோகமும்
திகைப்பும் கவிய வீடு வந்து சேர்கிறான். பிள்ளைகள் வாழும் நகரம் மற்றும்
கிராமம் முழுக்கவும் இது போன்ற ஏமாற்றங்களும் திருப்புமுனைகளும்
சத்தமில்லாமல் நிகழ்ந்துகொண்டே இருப்பதை எந்தப் பின்னணி இசையுமில்லாமல் நம்
முன்னே விரியும் இக்காலின் இந்தச் சோகம் நினைவுப்படுத்துகிறது.
எல்லாவற்றிலும் சலிப்புக்கொள்ளத் துவங்கும் இக்காலின் தனிமையை
நீக்குவதற்காக மஹார் அவனுக்காக ஒரு பாடல் பாடுகிறான். எல்லா மாணவர்களும்
அவனுடன் சேர்ந்து அந்தப் பாடலை எதிரொலிக்கிறார்கள். “ஏன் நீ இத்தனை ஆழமான
தனிமையில் கிடைக்கிறாய், அதற்கான நேரம் இதுவல்ல” என ஒலிக்கும் அந்தப்
பாடலைக் கேட்டுக் கொண்டே இக்கால் தூரமாகச் சென்றுவிட்ட தனக்கு விருப்பமான ஐ
லிங்கை நினைத்து ஏங்குகிறான். தூரத்தில் அவள் சிவப்பு நிற ஆடை
அணிந்துகொண்டு நடப்பதைப் போல உணர்ந்து முட்டியிட்டு இரகசியமாக அதை
நெருங்கும்போது, அது ஐ லிங் அல்ல ஹருண் அணிந்திருக்கும் நீளமான சிவப்பு
காலுறை என நகைச்சுவையான திருப்பத்தைக் காட்டுகிறது. படம் காட்டும்
நகைச்சுவை பகுதிகள் ஏராளமாக இருந்தாலும் அவற்றுக்கு பின்னணியில் ஒரு
தனிமையின் கீதம் மெல்லிய அதிர்வுடன் இசைத்துக் கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் பெலித்துங் பள்ளிகளுக்குக்கிடையிலான அணிவகுப்பு போட்டி ஒன்று
நடத்தப்படுகிறது. இதுவரை அம்மாதிரியான போட்டிகளில் பங்குப் பெற்றிறாத
முஹமாதியா பள்ளி இவ்வாண்டு மஹார் தலைமையில் இடம்பெறத் தீர்மானிக்கிறது.
இந்தப் போட்டிக்காக எந்தச் செலவும் பண்ண முடியாத சூழலிலுல் மாஹார் நானும்
இந்த இயற்கையும் இருக்கிறோம் எனத் தைரியமாகப் பதிலளிக்கிறான். இலைகளைத்
தலையிலும் இடுப்பிலும் கட்டிக்கொண்டு, உடலில் கருப்பு சாயம் வெள்ளை சாயம்
எனப் பூசிக்கொண்டு, கழுத்தில் மரக்காய்களை மாலை போல கோர்த்து அணிந்து
கொண்டு பழங்குடி நடனத்தை ஆடி பெலித்தூங் மக்களின் ஆழ்மனதில்
தங்கியிருக்கும் தொன்மத்தின் மீதான மரியாதையையும் நம்பிக்கையையும்
கிளரிவிட்டு கைத்தட்டைப் பெறுகிறார்கள். எல்லோரின் கவனமும் முஹமாதியா பள்ளி
மாணவர்களின் வித்தியாசமான படைப்பின் மீது குவிந்து அந்தப் போட்டியில்
வெற்றியும் பெறுகிறார்கள்.
படம் முழுக்க வந்து போகும் இந்த மாணவர்கள், வாழ்வின் அடுக்குகளில்
ஒளிந்துகிடக்கும் தத்துவங்களை மிக இயல்பாகப் பேசிச் செல்லக்கூடியவர்களாக
இருக்கிறார்கள். எப்பொழுதும் தத்துவங்களை வியாக்கியானம் செய்தும் பெரிய
போராட்டம் நடத்தியும்தான் புரிந்துகொள்ள முடியும் என்கிற நம்முடைய
மதிப்பீடுகளைக் களைத்துப் போடும்வகையில் மிகச் சாதரணமாக மாணவர்கள்
உரையாடல்களை நம்மை நோக்கி நகர்த்துகிறார்கள். எப்பொழுதும் “Jazz” இசையைக்
கேட்கும் மஹார், “இது மேற்கத்திய அறிவாளிகள் மட்டும் கேட்கக்கூடிய இசை”
எனச் சொல்லி சிரிக்கிறான். அந்த இசையைத் தொடர்ந்து கேட்டுக்
கொண்டிருப்பதால் தானும் அறிவாளியாக மாறிவிட்டோம் என்கிற நம்பிக்கை அவனது
உடல் மொழியின் வழி அறிய முடிகிறது. இக்கால் சக மாணவனைப் பார்த்து,
உடல்கட்டு இருந்தால் போதாது சாமர்த்தியமும் திறமையும் இருக்க வேண்டும்
எனவும், கடலில் மாட்டிக்கொண்டவனுக்கு நீச்சல் தெரியவில்லையென்றால் அவனுக்கு
வலுவான உடல்கட்டு இருப்பதால் மட்டும் என்ன நடந்துவிடப்போகிறது எனவும்
கூறுகிறான். படம் பின்னடைந்த ஒரு கிராமத்தில் இன்னமும் வலுவாக
உருவாக்கப்படும் ஏழை மாணவர்களின் புத்திக்கூர்மையைக் காட்டுகிறது.
ஒருநாள் அந்தப் பள்ளியின் காப்பாளரும் தலைமை ஆசிரியருமான பாக் ஹார்ப்பான்
பள்ளியிலுள்ள அவரது அறையின் மேசையில் இறந்து கிடக்கிறார். இதைக் கண்ட
முஸ்லிமா துடித்துப் போகிறார். இத்தனை நாள் இந்தப் பள்ளி நடத்துவதற்குப்
பக்கப்பலமாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது பாக் ஹர்ப்பாந்தான். அவருடைய
இறப்பு பெரிய அடியாக வந்து விழுகிறது. முஸ்லிமா தொடர்ந்து தனியாக இருந்து
அந்தப் பள்ளியை நடத்துவதற்காகப் போராடுகிறாள். மாணவர்கள் அனைவரும்
முஹமாதியா பள்ளி மூடப்பட்டுவிட்டது என நினைத்துக்கொண்டு அவரவர் வீட்டில்
முடங்கிக் கிடக்க, லிந்தாங்கும் இக்காலும் அவர்களை மீண்டும் திரட்டி
அழைத்துச் செல்கின்றனர். “Education for all” என்கிற ஒருவாசகம் என்
ஞாபகத்திற்கு வருகிறது. முஸ்லிமா வருவதற்கு முன்பே லிந்தாங் தன்
நண்பர்களுக்கு இந்தோனேசியாவின் மிகச் சிறந்த சுதந்திரப் போராளியான
சுக்கர்னோவைப் பற்றி பாடம் போதிக்கத் துவங்குகிறான். தன் சமூகத்தின்
வரலாற்றை ஆர்வத்துடன் உணர்ச்சிப் பெருக லிந்தாங் சொல்வதாகப் படம் அடுத்த
தளத்தை நோக்கி நகர்கிறது.
விரைவிலேயே கந்தோங் மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான தேசியப் புதிர் போட்டி
நடைப்பெறப் போவதாக அறிவிப்பு வருகிறது. முஸ்லிமா மாணவர்களை அந்தப் புதிர்
போட்டிக்குத் தயார் செய்கிறாள். இதில் வெற்றிப்பெறுவதன் மூலம் இந்தப்
பெலித்துங் நகரத்திற்கு முஹமாதியா கிராமப்பள்ளியின் இருப்பும் ஆளுமையும்
உணர்த்தப்படும் என நம்புகிறாள். இக்கால், மஹார் மற்றும் லிந்தாங் ஆகிய
மூவரும் இந்தப் புதிர் போட்டிக்காகப் பள்ளியைப் பிரதிநிதித்து தயார்
செய்யப்படுகிறார்கள். பயிற்சியின்போது முஸ்லிமா கேட்கும் கேள்விகள்
அனைத்தும் இந்தோனேசிய நிலப்பரப்பின் மேலாண்மையையும், வரலாற்றையும்
சார்ந்ததாக இருக்கின்றன. மேலும் கேட்கப்படும் கணிதம் தொடர்பான
கேள்விகளுக்கு மிகவும் அபாரமாக லிந்தாங்கும், இசை தொடர்பான கேள்விகளுக்கு
மஹாரும் பதிலளிக்கிறார்கள்.
புதிர் போட்டி நடக்கவிருக்கும் நாளில், மூன்று தங்கைகளை வீட்டில் பத்திரமாக
இருக்கச் சொல்லிவிட்டு லிந்தாங் பெரிய சைக்கிளில் கிளம்புகிறான். அவன்
பயணிக்க வேண்டிய தூரம் மிகவும் தொலைவானது. கடலுக்குச் சென்றுவிட்ட
அப்பாவின் நினைவுகளைச் சுமந்துகொண்டு அவன் வழக்கமான வழிப்பாதையில்
செல்கையில் படுத்துக்கிடக்கும் முதலையிடம் சிக்கிக் கொள்கிறான். வெகுநேரம்
முதலை பாதையைவிட்டு நகராமல் அங்கேயே படுத்துக் கிடக்கிறது. இதனால் லிந்தாங்
ஆகக் கடைசியாக போட்டி நிகழும் பள்ளிக்கு வந்து சேர்கிறான். போட்டியில் தீமா
நகரப்பள்ளியும் முஹமாதியா கிராமப்பள்ளியும் கடுமையான சவால்களை
எதிர்நோக்குகிறார்கள். ஆனாலும் கணிதம் தொடர்பாகக் கேட்கப்படும் அத்தனை
கேள்விகளுக்கு மனக்கணக்கின் வழியாக மிக வேகமாக லிந்தாங் பதிலளிப்பதை
அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். இறுதியாகக் கேட்கப்படும் கணிதம்
தொடர்பான கேள்வி லிந்தாங் அனுபவிக்கும் முழு வாழ்வின் ஒரு துயரத்தைக்
காட்டுவதாகவே இருக்கிறது.
“அடில் எனும் ஒரு மாணவன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு 37.5 கிலோ மீட்டர்
பயணம் செய்கிறான். ஒரு நிமிடத்திற்கு அவன் கிலோ மீட்டர் வேகம் பயணம்
செய்யக்கூடியதாக இருக்கிறது. காலை 7.55க்கு வீட்டிலிருந்து புறப்பட்டால்
அடில் எத்தனை மணிக்குப் பள்ளி வந்து சேர்வான்?” லிந்தாங் தன் மீனவப்
பகுதியிலிருந்து 40 கீலோ மீட்டர் பயணம் செய்து பள்ளிக்கு கடந்த 5 வருடமாக
வந்து கொண்டிருப்பவன். மற்றவர்கள் கேள்வியை எழுதி முடிப்பதற்குள் பதிலைச்
சொல்கிறான். இருந்தபோதும் நீதிபதிகள் பதில் தவறானது எனச் சொல்கிறார்கள்.
தீமா நகரப்பள்ளியைச் சேர்ந்த இன்னொரு ஆசிரியர் (முஸ்லிமாவைக் காதலிப்பவர்)
எழுந்து அவனுடைய விடை சரி என வாதிடுகிறார். இறுதியில் லிந்தாங் அந்த
விடைக்கான வழிமுறையைக் முறையே காட்ட, புதிர் போட்டியில் முஹமாதியா
கிராமப்பள்ளி வெற்றிப்பெறுகிறது.
போட்டியில் கிடைத்தப் பரிசுடன் லிந்தாங் வேகமாக வீட்டை நோக்கி சைக்கிளை
மிதிக்கிறான். வீட்டிற்குச் சென்றதும் அப்பா இன்னமும் கடலிலிருந்து
திரும்பி வராததை வருத்தத்துடன் தங்கைகள் கூறுகிறார்கள். லிந்தாங் தனது
வெற்றியைக் கொண்டாட முடியாமல் சோகத்தோடு வாசலைப் பார்த்துக் கொண்டு
அமர்ந்திருக்கிறான். மறுநாள் விடிந்தும் அவனுடைய அப்பா வரவில்லை. பள்ளியில்
லிந்தாங் வருகைக்காக தொடர்ந்து 5 நாட்கள் செய்திகள் ஏதுமின்றி
காத்திருக்கிறார்கள். திடீரென ஒருநாள் லிந்தாங்கிடமிருந்து கடிதம் வந்து
சேர்கிறது. தன் அப்பா இறந்துவிட்டதால் தன்னால் பள்ளிக்கு வரமுடியாது. நாளை
உங்களிடமிருந்து விடைபெற பள்ளிக்கு வருவேன்” எனக் கடிதத்தில்
எழுதப்பட்டிருக்கிறது. பள்ளியில் உள்ள யாவரும் கவலையில் ஆழ்ந்து
போகிறார்கள். லிந்தாங் இல்லாத வகுப்பறை மகிழ்ச்சியை இழந்து காணப்படுகிறது.
மறுநாள் லிந்தாங் பள்ளிக்கு வருகிறான். சொல்வதற்கு வார்த்தைகள் ஏதுமின்றி
லிந்தாங் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட அனைவரும் அவனைப்
பார்த்தப்படியே கண் கலங்கி நிற்கிறார்கள். இக்கால் மட்டும் அவனுடைய
சைக்கிளைத் துரத்திக் கொண்டு ஓடுகிறான். சக்தியைத் திரட்டி “லிந்தாங்” எனக்
கத்துவதோடு பின்னணியில் இக்காலின் குரல் ஒலிக்கிறது. “முஸ்லிமாவின் முதல்
மாணவன், மிகத் திறமையான மாணவன், எங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாகத்
துடிப்புடன் இருந்தவன், எல்லோருக்கும் முன்பதாகவே பள்ளிக்கு வந்துவிடுபவன்,
இன்று எங்களுக்கு முன்பதாகவே பள்ளியை விட்டுச் செல்கிறான். அம்மாவை
இழந்துவிட்ட பிறகு இப்பொழுது அப்பாவையும் இழந்துவிட்ட ஒரு மீனவக்
குடும்பத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த அறிவாளி லிந்தாங்கின் நிலைமை
இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது” என்பதோடு கதை மீண்டும்
நிகழ்காலத்திற்குத் திரும்புகிறது. பெலித்தூங் 1999-இல் இக்கால் மஹாரின்
நாவல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மீண்டும் தன் கிராமத்திற்கு
திரும்புகிறான். தன் நண்பனான லிந்தாங்கைச் சந்தித்துவிட்டு தனக்கு பாரிஸ்
சென்று படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும் செய்தியைச் சொல்லிவிட்டு
அவனுக்கு நன்றியும் கூறிவிட்டுப் புறப்படுகிறான்.
பெலித்துங் நகரம் அப்பொழுது வெகுவாகவே மாறியிருக்கிறது. உலக சந்தையில்
தீமாவின் விலை நொடித்துப் போக அங்குள்ள தொழிற்சாலைகளும், சுரங்கங்களும்
மூடப்படுவதால் வெளிநாட்டு முதலாளிகளின் ஆதிக்கங்கள் குறைந்து எல்லோரும்
இயல்பான சமூக சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். லிந்தாங்கின் மகள்
நகரப்பள்ளியில் மிகவும் திறமையான மாணவியாகப் படித்து வருகிறாள். லிந்தாங்
எனும் மிகச் சிறந்த ஒரு படிப்பாளியின் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த அந்த
ஆர்வமும் உழைப்பும் அணையாமலே இருக்கிறது. “Setiap warga negara berhak
mendapatkan pendidikan – Undang-undang Dasar Negara 1945” (நாட்டிலுள்ள
எல்லாம் குடிமக்களும் கல்விப்பெற உரிமையுடையவர்கள்) எனும் இந்தோனேசியாவின்
சட்ட விதிகளைக் காட்டியவாறு படம் முடிவடைந்து நம் மனதில் காவியமாக
விரிகிறது.
பார்த்த மாத்திரத்தில் இந்தப் படம் எனக்கு என் மாணவன் ஒருவனை
ஞாபகப்படுத்தியது. சத்தியசீலன் எனும் பெயரில் நான் என் வாழ்நாளில்
யாரையாவது சந்திக்க நேர்ந்தால் அநேகமாக மனமுடைந்து போக வாய்ப்புண்டு.
மூன்று வருடம் என் வகுப்பில் பயின்ற குரூண் நகரத்தின் மிகவும் ஏழ்மையான
குடும்பத்தைச் சேர்ந்தவன் சத்தியசீலன். அவர்களின் வீட்டில் மொத்தம் 8
பிள்ளைகள். அப்பா தொழிற்சாலையில் வேலை செய்கிறார். அம்மாவிற்குக் குடி
பழக்கம். பசியில் வாடிக்கிடக்கும் முகத்துடன் குழந்தைகள் சட்டையில்லாமல்
தெம்பில்லாமல் வீடு முழுக்க அழுது வடிந்து கிடப்பார்கள் என மற்ற மாணவர்கள்
சொல்லிக் கேட்கும்போதெல்லாம் மனம் வலிக்கும்.
பள்ளியில் கொடுக்கப்படும் சத்துணவுக்காகவே வீட்டிலிருந்து அனுப்பப்பட்டு,
சத்துணவு கிடைக்காமலே போகும் வேளைகளில் யாரிடமும் எதையும் கேட்காமல்
வகுப்பில் அமைதியாக அமர்ந்திருப்பான். அவனிடம் நாம் எதிர்ப்பார்க்கும் எந்த
வார்த்தைகளும் இருக்காது. வறுமை அவனுக்கு அளித்திருந்த மிக மோசமான தண்டனை
மௌனம் மட்டுமே. தினமும் என் பாடத்தின்போது அவனுக்காக என்னிடமிருந்து
எப்பொதும் ஒரு கூடுதலான கவனம் இருக்கத்தான் செய்யும். கொடுத்த பாடங்கள்
எதையுமே செய்து முடிக்காமல், நேர்த்தியில்லாத அர்த்தமில்லாத
கிறுக்கல்களுடன் கிடக்கும் அவனது நோட்டுப் புத்தகத்தை என்னிடம்
காட்டிவிட்டு எதுவுமே நிகழாததுபோல தூரத்தில் தெரியும் காட்சிகளை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருப்பான். என்னுடைய வசதிக்காகவும் அவனுக்குக் கல்வி
கற்றுத்தர வேண்டும் எனும் எதிர்பார்ப்பிற்காகவும் தயார்செய்யப்பட்ட
ஒழுங்குக்குள் அவனை இழுக்க நான் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும்
அர்த்தமில்லாமல் பெரும்வெளிக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவனது உலகின்
முன்னே தோற்றுப்போய்கொண்டே இருந்தன.
அவனுடைய இறுதிவரையிலான மௌனத்தை என்னால் மொழிப்பெயர்க்கவே முடியாமல் போனது.
தினமும் என் அருகில் அவனை அமர்த்தி எழுத்தை மட்டுமே அறிமுகப்படுத்திக்
கொண்டிருப்பேன். ஓர் எழுத்தை எழுதி அதன் மீதே எழுத வைக்கும் பயிற்சியை
மட்டுமே அவனால் மேற்கொள்ள முடிந்தது. அதுவும் அவனது எழுத்து
நேர்க்கோட்டிலிருந்து தப்பி விலகுவதாகவே இருக்கும். எத்தனைமுறை
சரிப்படுத்தியும் நான் விதிக்கும் எந்த ஒழுங்கிற்குள்ளும் பிடிப்படாமல்
அவன் தள்ளியே இருந்தான். அவனுக்காக ஒன்றாம் ஆண்டு கையெழுத்து புத்தகம்
ஒன்றை வாங்கி வந்து கொடுத்த சமயம், அதை வாங்கிப் புத்தகப்பையில்
வைத்துவிட்டு வழக்கம்போல வெளியே பார்க்கத் துவங்கினான். வெளியில் அப்படி
என்னத்தான் இருக்கிறது என வெறுப்புடன் கேட்டுப் பார்த்தேன். வெளியில்
எல்லாமும் இருப்பது போல மௌனமாக இருந்தான். அதற்குப் பிறகு இருவரும்
பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போனது. மௌனமாக அவனைக் கடக்கும் பழக்கத்திற்கு
ஆளானேன். அடிக்கடி விடுமுறை எடுக்கத் துவங்கிய பிறகு அவனுக்கும் அந்த
வகுப்பிற்கும் மத்தியில் இடைவெளி விழுந்திருந்தது.
ஜூன் மாதத்தில் அவன் பள்ளிக்கே வரவில்லை. தொடர்ந்து 10 நாட்களுக்கு
அவனிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை. ஆகையால் நானும் தலைமை ஆசிரியரும்
அவனைத் தேடி குரூணிற்குக் கிளம்பினோம். அவன் இருப்பதாகச் சொல்லப்பட்ட பழைய
வீடொன்றிற்குச் சென்றபோது அங்கு யாருமில்லாமல் வீடு தனித்திருந்தது. இரண்டு
பக்கமும் சன்னல் இல்லாத வீடு. அமைதியும் இருளும் எங்கும் பரவியிருக்க ஏனோ
அவன் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும் எனத் தோன்றியது.
பக்கத்து வீட்டிலிருந்தவர்கள், சத்தியசீலனின் அப்பா ஓடிப் போய்விட்ட பிறகு
சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போய்விட்டது, ஆகையால் எங்கோ கிளம்பி
போனவர்கள்தான் திரும்பி இந்தப் பக்கம் வரவே இல்லை எனக் கூறினார்கள்.
பள்ளிக்குத் திரும்பியபோது எந்தச் சத்தமும் இல்லாமல் சலனமுமில்லாமல்
சத்தியசீலன் அமர்ந்திருந்த இருக்கை அங்கேயே அப்படியே இருந்தது. மேற்கொண்டு
நகர முடியாமல் என்னுடைய காலம் அவன் இல்லாத வெறுமையிலேயே தேங்கிவிட்டதா
எனக்கூட பயம் அழுத்தியது.
லஸ்கார் பெலாங்கி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான யாடி சுகாண்டாவின்
ஒளிப்பதிவு பெலித்தூங் நகரத்தின் மனசாட்சியாக வெளிப்படுகிறது. பெலித்தூங்
தொழில்பேட்டை, கிராம வீடுகள், பெலித்தூங் நகர் தெருக்கள், பெலித்தூங் தீமா
சுரங்கத்திற்கு வேலைக்குச் செல்பவர்களின் வாடிய முகங்கள் என விரியும்
அத்தனை காட்சிகளும் மிகவும் கவனமாக அதன் நிதர்சனத்துடன் பதிவு
செய்யப்பட்டிருக்கின்றன. 2005இல் Andrea Hirata அவர்களால் எழுதப்பட்ட நாவலை
Sutradara மற்றும் Riri Riza படமாக்கி பல அரிய விருதுகளைப்
பெற்றுள்ளார்கள். அண்ரியா ஹிராத்தா இந்தோனேசியாவின் மிக முக்கியமான
வரலாற்று நாவலாசிரியரும்கூட. 1970களில் பெலித்தூங் கிராமத்தில் நடந்த உண்மை
சம்பவத்தைத்தான் அவர் நாவலாக எழுதி வெளியிட்டார். அதன் தழுவலிலிருந்து
உருவானதுதான் “Laskar Pelangi”.
இறுதி காட்சிக்குப் பிறகு ஒருவேளை நாம் கண்ணீர் வடித்தால், இதுவரை
யாரிடமும் பகிரப்படாத நம் உள்ளத்தின் ஆழத்தில் மீதமாக இருக்கும்
ஆரம்பப்பள்ளிகளின் நினைவுகள் எப்பொழுதும் விழித்துக் கொண்டே இருக்கின்றன
எனச் சொல்லலாம். பள்ளியை விட்டு திடீரென மாறிப்போன நண்பர்கள், மறு வருடம்
மீண்டும் பள்ளிக்கு வருவோமா எனத் உறுதியாகத் தெரியாமல் பிரியாவிடை
நிகழ்வில் ஒருவரை ஒருவரைப் பார்த்து அழுது கொள்ளும் நண்பர்கள், பேருந்து
பள்ளியின் வாசலை வந்தடைந்ததும் எப்பொழுதும் நம் வருகைக்காகக்
காத்திருக்கும் நண்பர்கள் என மொத்தமான அந்த நினைவுகள் எங்கேயோ ஒரு
மௌனத்தின் ஓசையாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
|
|