|
|
குறிப்பு : மலேசியத் தமிழர்கள்
நெடுங்காலமாகவே மிகச் சமத்தாக ஒளித்துவைத்து வளர்த்தெடுக்கும்
பார்ப்பனர் ஏற்படுத்திய சாதிய அடையாளங்களின் கறைகளை
நெம்பிக்காட்ட பார்ப்பனர் ஏற்படுத்திய சாதிய அடுக்குகளையே
கட்டுரையில் சில இடங்களில் ஆயுதமாகப் பயன்படுத்த
வேண்டியிருக்கிறது.
நமது
நாட்டில் அவ்வப்போது தமிழர்களிடம் ஏதாவது பிரச்சனையை ஒட்டி மிகப்பெரிய
கொதிப்பலை வேகமாக எழுந்து அதன் அதிர்வு நாடு முழுதும் பற்றிப் படர்வதை நாம்
தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த எழுச்சி போராட்டங்கள் பல்வேறு
சமயங்களில் சாதகமான விளைவுகளை நமது சமூகத்துக்கு ஏற்படுத்தியுள்ளதை மறுக்க
முடியாது. மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை
உருவாக்கப்பட்டது முதல், மிக அண்மையில் எஸ்.பி.எம் பாட
விவகாரத்தில் தமிழிலக்கியத்தை நீக்கியதில் ஏற்பட்ட கொந்தளிப்பு
வரை சட்டென மலேசியத் தமிழர் போராட்ட வரலாறு ஒரு பட்டியலாக
மனதில் உருவாகிறது.
இதேபோல நாம் போராடாமல் அல்லது சுரண்டப்படுவதை உணராமல்
இருந்துவிட்ட பிரச்சனைகள் இன்று நமது தொடர்ச்சியான இழப்புக்கு
காரணிகளாக இருக்கின்றன. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு,
வியாபாரம் என மனித வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வித்திடும்
துறைகளில் இந்தப் பாராபட்சங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
துரதிஷ்டவசமாக நாம் நமது எதிர்ப்புகளை முழு வீரியத்தோடு எடுத்துச்
செல்லாததால் ஏற்பட்ட இழப்புகளில் ஒன்றுதான் இன்று நம்மால்
கேள்வியெழுப்ப முடியாதவாறு வளர்ந்துவிட்ட மெட்ரிகுலேசன் கல்வி.
எஸ்.தி.பி.எம் (STPM) எனும் மிகத் தரமான கல்வியையும் கடுமையான
சோதனையையும் கடந்து பலல்கலைக்கழகத்தை அடையும் ஒரு தமிழ்
மாணவனுக்கு கிடைக்காத முக்கியத்துவம் வாய்ந்த மேற்கல்விக்கான
துறைகள் எளிய பாடத்திட்டங்களைக் கொண்ட மெட்ரிகுலேசன் கல்வி மூலம்
மலாய்க்கார மாணவர்கள் அடைவதை நாம் கண்கூடாகப் பார்த்துக்
கொண்டிருக்கிறோம். இதேபோல் இன்னமும் டெலிக்கோம் பங்குகளில்
ஏமாற்றப்பட்டதைப் பேசிப் புலம்புகிறோமே தவிர அரசாங்கம் சார்ந்த
நிறுவனங்களில் நமது பங்குரிமையின் நிலை என்ன என்பது குறித்து
கேள்வி எழுப்புவதில்லை.
ஆனால் நாம் போராட்டம் என நம்பும் ஒன்று எதன் அடிப்படையில் உருவாகிறது எனும்
தெளிவு நமக்கு பல சமயங்களில் இருப்பதில்லை. சில பிரச்சனைகள் வளரும் போது
நாம் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சில சமயங்களில் அதற்கு
ஆதரவாகவும் இருக்கிறோம். அவ்வப்போது தமிழர் பிரச்சனையை
முன்னெடுக்கிறோம் என அறைக்கூவல் விடும் பத்திரிகைகளும் ஒரு சார்பாகவே
நடந்து கொள்பவை. இன்னும் சொல்லப் போனால் தமிழர்கள் தங்களுக்கு
நிகழும் சுரண்டல்களை ஆழமாக யோசிக்கவிடாமல், எல்லா பிரச்சனைக்கான
காரணியும் சாமிவேலு அல்லது சுப்ரமணியம் என தத்தம் குழு
மனப்பான்மையையும் முதலாளி விசுவாசத்தையும் காட்டுவதில்தான் இவைகள்
இன்றைய தினம் வரை வெகு அக்கறையாய் செயல்படுகின்றன. நமது கவனம்
பங்காளி சண்டைபோல தொடரும் ம.இ.காவில் மட்டுமே குவிந்து கிடக்கும்
தருணம், நாம் கவனிக்காத ஒரு பகுதி நமக்கே தெரியாமல் அவசர
அவசரமாக வேரறுக்கப்பட்டு புதிய பிரச்சனைகள் உருவாகின்றன.
அப்பிரச்சனை அசைக்க முடியாத ஆலமரமாகிவிட்ட பின்னர் கூச்சல் இடுகிறோம்.
உரிமை இல்லாத நிலத்தில் கோயில் கட்டிவிட்டு, அதை உடைக்க வருபவனை எதிர்த்து
'இன துவேஷம்' என கூச்சல் போடுவதிலிருந்து இன்றைய 'இண்டர்லோக்' நாவலில்
உருவாகியுள்ள சாதி பிரச்சனை வரை இதே கதிதான்.
மற்ற இழப்புகள் போலல்லாது 'இண்டர்லோக்' நாவலின் விவகாரம் சற்று
வித்தியாசமானதாகப் படுகிறது. எஸ்.பி.எம் (SPM) தமிழ்ப்பாட விசயத்தில்
நாம் போராடியபோதும், மிக அண்மையில் இ காசே (e-Kasih) எனும் திட்டத்தின்
மூலம் ஏழைக்குழந்தைகளுக்குச் சத்துணவு திட்டத்தை நிறுத்திய போதும்
போராடுவதற்காக நம்மிடையே வலுவான நியாயம் இருந்தன. நம் பக்கத்தில்
எந்தவிதமான சிக்கலும் அவ்விசயத்தில் இல்லை. அது போன்ற போராட்டங்கள்
கண்டிப்பாக செய்யவேண்டியவை. 'இண்டர்லோக்' விசயம் அப்படியல்ல. இது நம்
முகத்தில் பளிச்சென்று கரியை அப்பியுள்ளது. அதை துடைக்க நமக்கு நாதியில்லை.
ஏனெனில் அந்த கரியைத்தான், நாம் பல காலமாகவே கவசமாக பயன்படுத்தி
வந்துள்ளோம். அந்தக் கரியை வைத்தே நம் இந்தியத் தலைவர்கள் பல காலமாக
அரசியல் நடத்தி வந்துள்ளனர். எனவே, போராட்டத்தில் வெற்றி தோல்வி
முக்கியமில்லை. பங்கெடுப்பே முக்கியம் என்று நினைக்கும்பட்சத்தில் இப்போது
நடக்கும் கூத்துக்களை நாம் ஆரவாரமாக கைதட்டி வரவேற்பதே நியாயமாகப்
படுகிறது.
'இண்டர்லோக்' (Interlok) 2011-ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் படிவத்திற்காக
தயாராகியுள்ள மலாய்மொழி இலக்கியப்பாட நூல்களில் ஒன்று. இவ்வாண்டு
முதற்கொண்டு மலாய் இலக்கியப் பாடத்தைப் பயிலும் மாணவர்கள் இந்நூலைப்
படித்து ஆய்வு செய்வர். மலாயாவிற்கு வந்த தென்னிந்தியர்களைப் பற்றிய
வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பகுதி குறுநாவல் வடிவத்தில் இந்நூலில்
உள்ளது. “மணியம் குடும்பத்தார்” (Keluarga Maniam) எனும் தலைப்பில்
இப்பகுதி எழுதப்பட்டுள்ளது. எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட இக்குறுநாவல்
தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது எனக் கடுமையான
சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அப்துல்லா உசேன் (Abdullah Hussain) என்பவர்
இந்நாவலை எழுதியுள்ளார். அப்துல்லா உசேன் இந்நாட்டின் தேசிய
இலக்கியவாதிகளுள் (Sasterawan Negara – 1996) ஒருவராவார்.
நாவலில், தமிழர்களின் தமிழகத்து வாழ்வோடு மலேசிய வாழ்வை அதன் ஆசிரியர்
ஒப்பிட்டு சில இடங்களில் கூறுகிறார்:
-
இங்கு அவன் தன் இனத்தாருடன் சுதந்திரமாகப்
பழகுவதோடு தன் நாட்டிலுள்ள சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அச்சமுற
வேண்டியதில்லை. அங்குக் (தமிழகத்தில்) உயர்சாதியினர் கீழ்சாதியினருடன்
பழகுவதில்லை.
-
கடுஞ்சொற்களால் ஏசுவதுமின்றி அவனையும் அவன்
சாதியினையும் ஒதுக்கிவிடுவர். மிருகங்களைப்போல இழிவுபடுத்திடுவர்.
-
இந்நாட்டில் உயர்சாதி மக்களான பிராமணர்கள் பூணூல்
அணிந்திருப்பர். ஆனால், இவர்களைத் தொடுவதற்கு அவன் அஞ்சுவதில்லை.
-
வணிகனிடமிருந்து பொருள் வாங்கும்போது கையாலேயே
பணத்தைக் கொடுக்கலாம். அவன் நாட்டில் (தமிழகத்தில்) அவ்வாறில்லை.
பணத்தைக் குறிப்பிட்ட ஓரிடத்தில் வைத்துவிட வேண்டும். பின்னர் வணிகன்
அப்பணத்தின் மீது தண்ணீர் ஊற்றித் தூய்மை செய்தபிறகு பெட்டிக்குள்
போடுவான்.
இந்தப் பகுதிகளை நான் சர்ச்சையாக எடுத்துக் கொள்ளவே
இல்லை. சாதியத்தால் இன்னமும் தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை இருக்கும்
போது 1971ல் எழுதப்பட்ட இந்நாவலில் இதுபோன்ற தமிழகச் சூழலை விளக்கும்
தகவல்களால் அதிர்ச்சியடைவதற்கில்லை. இதன்வழி நாவலாசிரியர் மலேசியாவில் சாதி
ஒழிந்துவிட்டதென கூறவில்லை. தீண்டாமையும் சாதிக்கொடுமையும் தமிழகத்தோடு
ஒப்பிடுகையில் இங்கு பரவாயில்லை என சொல்லவருகிறார்.
தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு தமிழர்கள் வட ஆற்காடு, தென்
ஆற்காடு என இரு மிக முக்கியமான மாவட்டங்களிலிருந்து
அழைத்துவரப்பட்டனர் என்பது வரலாறு. வட ஆற்காட்டில் பறையர்களும்
தென் ஆற்காட்டில் வன்னியர்களும் இங்கு அதிகம் அழைத்துவரப்பட்டனர்.
அழைத்து வரும்போதே இவர்களுக்கிடையில் சாதிய வேற்றுமைகள்
இருந்துள்ளன. பறையர்களை கப்பலின் ஒரு மூலையிலே அமரவைத்து அழைத்து
வந்தனர் என்பது வரலாறு. இந்த ஒதுக்குதல் தோட்டத்திலும்
நிகழ்ந்துள்ளது. இங்கு வந்து சேர்ந்தவுடன் பறையர்களுக்கு தனித்த
லயங்களையே வழங்கி ஒதுக்கியுள்ளனர். ஆக ஒடுக்கப்படுதல்
அழைத்துவரப்பட்ட ஆரம்ப காலத்தில் நிகழ்ந்துள்ளது. பின்னர்
இரண்டு முறை பெரியாரின் வருகைக்குப் பின் இந்நிலை மாறியுள்ளது. திராவிட
இயக்கங்களின் தாக்கம் தமிழர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்தி சாதிய ஒடுக்குமுறைகளை அகற்றியுள்ளது. இங்கு மிக
முக்கியமாக கவனிக்க வேண்டியது, வரலாற்று ஆதாரங்களோடு அழைத்து
வரப்பட்ட தமிழர்கள் அனைவருமே சூத்திரர்கள்தான் என்பது
குறிப்பிடத்தக்கது. (இந்த உண்மையை எதிர்க்கொள்ளும் போது பலரின்
முகமும் சுளிபடுவதைப் பார்க்கிறேன். உடனே அவர்களின் உள்ளே இருக்கும்
சாதிய பெருமை மிக பலமாக இக்கூற்றை மறுக்கத்தொடங்கி
அவர்களுக்குள்ளிருக்கும் பிற்போக்குத்தனம் வெட்டவெளியில்
வெட்கமில்லாமல் நிற்கிறது) இவ்விடயத்தையே நாவலாசிரியர் தனக்குத்
தெரிந்த மொழியில் 'மலேசியாவுக்கு அழைத்துவரப்பட்ட அனைவரும்
பறையர்கள்' என்றிருக்கிறார்.
இது வரலாற்றுப் பிழைதான். இந்தப் பிழையைதான் பலரும் தங்கள் வாழ்வில்
போராடி அறிவைக் கசக்கி கண்டுப்பிடித்ததாக அங்கலாய்க்கத்
தொடங்கிவிட்டனர். (இன்னமும் மலேசியத் தமிழர்களுக்கென முறையான
ஒரு வரலாற்று ஆவணம் இல்லாத பட்சத்தில் யார் வேண்டுமானாலும்
வரலாற்றைத் திரித்தும் மறுத்தும் கூறலாம்.) ஆனால் வரலாறு என்பதின்
நோக்கம் ஒரு சமூகத்தின் அடுத்தக்கட்ட தாவலுக்கு உதவ வேண்டுமே
தவிர இன்னமும் பிற்போக்குத் தனங்களில் ஒன்றான சாதியின் வரலாற்றை
ஆராய்வதில் என்ன பயன்? அதன் மூலம் எந்தப் பெருமையை நாம்
நிலைநாட்டப் போகிறோம்? எந்த வரலாற்றை ஆவணப் படுத்தப் போகிறோம்?
அதுவும் தொழில் சார்ந்து அமைந்த சாதி, மலேசியாவிக்கு
ஏற்றுமதியானவுடனேயே அதை அடையாளப் படுத்த அவசியமற்றதாகிவிட்ட
சூழலில் சாதி வரலாறை ஆராய்வதும் சாதி சார்ந்த தவறுகளைச் பெரிய
மேதாவி தோரணையில் சுட்டிக்காட்டுவதும் சாதி எனும் கட்டமைப்பினை
ஏற்றுக்கொள்வதன்றி வேறென்ன? உருப்படியான வரலாறே இல்லாத நமக்கு,
எவ்வகையிலும் உதவாத ஒரு சாதி அடையாளத்தை ஒரு மலாய் எழுத்தாளன்
திணிக்கும்போது அதை வரலாற்று பிழை என, வேறு சாதி அடையாளங்களைக் கொண்டு
திருத்தங்கள் கூறி முன்மொழிவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
சுறுங்கக் கூறினால் இவ்விசயத்தில் நான் பெரியார் சொன்னதைதான் கொஞ்சம்
மாற்றி சொல்லவேண்டியுள்ளது. 'வீட்டுக்கு நடுவில் நாய் பீ இருக்கிறது
என்கிறேன். சில மடையர்கள் அதை துடைத்துவிட்டு நானே பேண்டுவிடுகிறேன்
அதுதானே நியாயம்' என்கின்றனர்.
இனி நாவலில் சர்ச்சையாகக் கருதப்படும் பகுதிகளை மட்டும் பார்ப்போம்.
-
மலையாளிகளும் தெலுங்கர்களும் வடக்குப்
பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ்மொழி தெரியும்.
மலையாளமும் தெலுங்கும் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தனவாகும்.
இவர்கள் அனைவரும் இயல்பாகப் பழகுவதற்குரிய காரணம்; இவர்கள் எல்லாரும்
பறையர் சாதியச் சேர்ந்தவர்களாகும்.
-
யாரையும் தொட்டால் தீட்டாகுமென இவர்கள் பயப்பட
வேண்டியதில்லை.
-
சாதி வேறுபாட்டை உணர்த்தும் வேலைகள் இங்கில்லை.
-
மற்ற இந்தியர்களைப்போல தன் மனைவியின்
பாதுகாப்பைப்பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.
'இண்டர்லோக்' என்பது ஒரு நாவல். நாவல் என்பது புனைவின்
ஒரு வடிவம். ஒரு புனைவு முழுக்க முழுக்க சரியான அர்த்தங்களைக் கொண்டிருக்க
வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் ஒரு புனைவை தடுக்க நாம் யார்? அதில்
ஒரு சமூகத்தை நோக்கி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சில எதிர்மறையான
கருத்துகள் இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு குறிப்பிட்ட
இனத்தையோ அல்லது சமூகத்தையோ கிண்டலடிக்கும்படியான வாசகங்கள் இன்று
தமிழிலும் இன்ன பிற இலக்கியப் பிரதிகளிலும் உலாவுவதை நாம் முதலில்
ஒப்புக்கொள்ள வேண்டும். ஆயின், ஓர் இலக்கியப் பிரதிக்கு ஏற்ற மாதிரியான
எதிர்வினையை அதற்கேற்ற அறிவுதளத்துடன் நமது வாதங்களை முழு ஆதாரத்துடன் முன்
வைக்காமல் கூட்டம் போட்டு பேசுவதும் புத்தகங்களை நம் பணம் போட்டு வாங்கி
எரிப்பதும் என்பது எவ்வகையான புரட்சி? இந்தப் புத்தகம் மலாய் இலக்கியப்
பாடத்திற்குப் பயன்படுத்தப்படவுள்ளதே தவிர வரலாற்று புத்தகமாக இல்லை என்பதை
நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இப்புத்தகத்துக்கு எதிராகக் கடும் போராட்டம் நடத்தும்
புரட்சியாளர்களிடம் சில குற்றச்சாட்டுகள் உள்ளன. 'இது போன்ற எழுத்துப்
பிரதிகள் இளம் தலைமுறையினரிடையே சாதியை அறிமுகப்படுத்தும்' என்பது அதில்
ஒன்று.
இதை ஒட்டி என்னிடம் சில கேள்விகள் உண்டு. முதலாவதாக நமது நாட்டில் சாதி
இல்லையா? நமது இந்திய கட்சிகளில் சாதி இல்லையா? என்னைக் கேட்டால் தமிழகம்,
இலங்கையைவிட மலேசியா சிங்கப்பூரில் 'சாதி' எனும் அதிகாரத்தின் மாற்று
வடிவத்தால் பெரிய ஆபத்துகள் உண்டு. தமிழகம் மற்றும் இலங்கை போலல்லாமல்
இங்கு மிக அந்தரங்கமான ஒரு குரலில் சாதி கவனிக்கப்படுகிறது. புலனுக்குத்
தெரிந்து வளரும் நோயைவிட எவ்வித அறிகுறியும் காட்டாமல் வளரும் நோய்கள்
ஆபத்தானவை. அவற்றை எதிர்ப்பது சிரமம். இவ்வாறு குசுகுசுப்பான ஒரு குரலில்
மலேசியாவில் பேசப்பட்ட சாதி, சங்கங்கள் தொடங்கும் அளவிற்கு வேர்
விட்டுள்ளன. 'முக்குலத்தோர் சங்கம்', 'வன்னியர் சங்கம்' என நாடு முழுவதும்
கிளைவிட்டு பரவும் சாதிசங்கங்களுக்கு அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும்
அறங்காவலர்களாக இருக்கும் அசிங்கத்தைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
'இண்டர்லோக்' பிரச்சனைக்கு எதிர்ப்பு கொடுக்கிறேன் என எழுதி பத்திரிகை
விற்பனையை அதிகரிக்க பகுதிநேர புரட்சியாளர்களாய் வரும் பத்திரிகையாளர்கள்
கொஞ்சம் கூட சுரணையில்லாமல் சாதி சங்கங்களில் விளம்பரங்களை ஒரு பக்கம்,
அரைப்பக்கம் என போட்டு வயிறு வளர்க்கதானே செய்கிறார்கள்? அப்போது இளம்
தலைமுறையினருக்கு சாதி அறிமுகமாகவில்லையா?
இந்தப் பிரச்சனையில் இன்னொரு பிரிவினரின் புரட்சிக் குரல் இவ்வாறு
ஒலிக்கிறது. 'எப்படி அந்நாவலில் மலேசியாவுக்கு வந்த அனைவரையும்
ஒட்டுமொத்தமாக பறையன் என்று சொல்லலாம்?' பொதுவாக இக்குரல் ஏதோ
ஒட்டுமொத்தமான சமூகத்தின் மீது எழும் கரிசனத்தால் உருவான அறச்சீற்றம் போல
தோன்றும். இதை வேறு வழியில் விளங்கி கொள்ள வேண்டுமென்றால் "நான் பறையன்
இல்லையே" என்பதுதான் அப்புரட்சியாளர்களின் கூற்று. இங்கு மிக விரிவாகவே
வரலாற்று பூர்வமாக சாதி எனும் வடிவம் அரச காலத்திலும் அதன் பின்பு
நிலப்பிரபுத்துவ காலத்திலும் எவ்வாறு திரிந்து அதன் அவசியங்கள் மாற்றம்
கண்டன என விவாதிக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் எவ்வகையான தேவையும் இல்லாத
சாதி நம்பிக்கைக்கு விவாதத்தின் மூலம் என்ன நன்மை கிடைக்கப் போகிறது
என்பதுதான் முக்கியமான கேள்வி. எப்படிப் பார்த்தாலும் ஆரியன் சொல்லிவைத்த
நால்வர்ணப் பிரிவு சமூகத்தில் நாம் சூத்திரர்கள்தான், பேச உரிமையற்று
சுரண்டப்படும் நாம், மலாய்காரர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்கள்தான் என்ற
உண்மைகள் எப்போது நமக்குப் புரியப்போகிறது?
அவசியமில்லாத சாதி ஏன் நமது நாட்டில் இவ்வளவு ஆழமாக வேரூன்ற வேண்டும்
என்பது இன்னொரு முக்கியக் கேள்வியாகத் தொனிக்கிறது. இதற்கெல்லாம் ரொம்பவும்
மூளையைக் கசக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். இதற்கு சரியான உதாரணம்
தமிழகம்தான். தேர்தலில் ஓட்டு பெறுவது தொடங்கி, ஒரு திரைப்படம் சில
மாவட்டங்களில் வெற்றி பெறுவதற்கும், வேலை வாய்ப்புகளுக்கும் இன்று சாதி
எனும் அதிகாரத்தின் மாற்று வடிவம் முக்கியக் காரணமாக இருக்கிறது. சாதி
பிடிப்புள்ள ஓர் எளிய மனிதனுக்கு அது வெறும் அடையாளம்தான். ஆனால் இந்த எளிய
மனிதர்களின் கூட்டத்தை ஓட்டிச் செல்கின்ற மேய்பாளனுக்கு ஒரு விலை
இருக்கிறது. தனக்குக் கீழ் சேரும் மந்தைகளைப் பொருத்து மேய்பாளன் தன்
விலையைக் கூட்டுகிறான். இப்போது இதை நம் நாட்டுடன் பொருத்திப் பார்ப்போம்.
சாதியை வைத்து பணம் பண்ணும் கூட்டத்தின் மேய்ப்பாளர்கள் யார் என்பது மிக
தெளிவாகத் தெரியும். இது ஒரு வணிகம். அதிகாரத்தை அமைப்பதற்கும்... விலை
பேசுவதற்கும்... விற்பதற்கும்.
சமூக அக்கறை பொங்கிய இன்னும் சில புரட்சியாளர்கள் இந்த நாவல் நமது நாட்டில்
ஜாதியை வளர்க்கும் என்று வேறு பதைபதைக்கின்றனர். இந்தப் புரட்சியாளர்களின்
பயங்களுக்கு நிவர்த்தி காணும் முன்னர், நாம் சில கேள்விகளை நம்மை நோக்கி
நேர்மையாகக் கேட்டு கொள்ள வேண்டும். முதலில் கோயிலில் இருக்கும்
பூசாரிகளிடம் நாம் இதுவரை பூணூலை அவிழ்க்கக் கூறியிருக்கிறோமா?
சூத்திரர்களை அடையாளம் கண்டுகொள்ள எளிதில் கண்ணில் படும்படியாக கையிலும்
கழுத்திலும் கயிறு கட்டவைத்து பிராமணர்கள் நம்மில் புகுத்திய அடிமைத்தனத்தை
என்றாவது கழற்றி எறிந்தோமா? முனியாண்டி தலித்துகளின் கடவுள் என அவரை
முனீஸ்வரனாக மாற்றிய போது சாதியின் அதிகாரத்தை உணர்ந்தோமா? திருமணத்தின்
போது கட்டுகிற தாலியில் சாதி அடையாளத்தை களைத்தோமா? இவை நம்மிடம் சாதி
வளர்க்கவில்லையா? கடவுளை வணங்குவதிலிருந்து கல்யாணம் செய்வது வரை ஜாதியின்
அடையாளங்களை கட்டிக்கொண்டு அழும் நாம், இனிதான் நம் நாட்டில் சாதி வளரும்
என பேசுவது பாவனை இல்லையா?
இந்த விஷயத்தில் பெரும்பாலான புரட்சியாளர்களின் ஒத்தக் கருத்தாக
இருப்பது ஒன்றுதான். அதாவது இந்த நாவலினால் மற்ற இனத்தவர்கள் நம்மை
அசிங்கப்படுத்த மாட்டார்களா? நமது மாணவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை
ஏற்படாதா? மிக முக்கியமான கவலைதான். இந்த நாவல் இல்லாவிட்டால் பிற
இனத்தவர்கள் நம் மாணவர்களைப் போற்றிப் புகழ்கின்றனரா? அல்லது இந்த
நாவலினால்தான் அவர்கள் நம்மை பறையன் என்று அழைக்க புதிதாக
அறிமுகமாகியுள்ளதா? ஒருவேளை பறையன் என்று அழைத்தாலும் ஏன் அவமானம் கொள்ள
வேண்டும்? அப்படியானால் பறையன் என்பது கீழ்த்தரமான அடையாளம் என்று நாம்
நம்புகிறோமா? இங்கு பறையன் என்பதற்கு பதில் தேவர், கவுண்டர் என்று
அழைத்தால் ஏற்றுக்கொள்ளலாமா? நாம் சாதி எனும் அடையாளத்திலிருந்து தனித்து
நிற்கிறோம் என்றால் புகுத்தப்படும் அடையாளங்கள் நம்மிடம் எவ்வகையான
உணர்வையும் ஏற்படுத்தாது. அவை வெற்றுச் சொற்களாக நம்மிடம் ஒலிக்கும்.
பறையன் எனும் ஓர் அடையாளத்தின் படிமங்கள் நம் மனதில் கீழான நிலையில் இல்லாத
பட்சத்தில் அது நம்மை கோபப்பட வைப்பதின் ரகசியம்தான் என்ன?
ஒருவேளை இந்த நாவலை தடைதான் செய்யட்டுமே. அதனால் இன்று தமிழர்கள் பிற
இனத்தவர்களால் மதிக்கப்பட்டுவிடுவார்களா? நம்மை வந்தேறிகள் எனக் கூறுவதை
தவிர்ப்பார்களா? இந்த நாட்டில் நமக்கு சரிசமமான அங்கீகாரம் கிடைத்துவிடுமா?
பூமிப்புத்ரா எனும் அடையாளத்தின் மேலாதிக்கம் இருக்கும் வரை நம்மை பறையன்
என்று அழைத்தாலும் அழைக்காவிட்டாலும்; இண்டர்லோக்கை ஏற்றுக்கொண்டாலும்
ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மலேசியாவைப் பொறுத்தவரை நாம்
ஒடுக்கப்பட்டவர்கள்தான் எனும் உண்மையை எப்போது நாமே ஏற்கப் போகிறோம்?
மொத்தப் பிரச்சனையின் ஒரு சிறிய பகுதிக்கு ஒட்டுமொத்த சக்தியையும் விரையம்
செய்யும் நாம் பிரச்சனையின் வேரை கண்டுக்கொள்வதே இல்லை. வேர் நமது
சமுதாயத்தில் பரவியுள்ளது. அதை வெட்டாத வரைக்கும் இண்டர்லோக் போன்ற கிளைகள்
பரவத்தானே செய்யும்.
கூர்ந்து பார்க்கும் போது பிரச்சனை புத்தகத்தில் அல்ல. நம்மிடம்தான். நாம்
ஆழமாக பறையன் எனும் அடையாளம் கொண்டிருக்கும் படிமங்களை நம்புகிறோம். அதை
மிக இழிவான குறியீடாக நினைக்கிறோம். அதை விட்டு விலகி வேறு அடையாளங்களை
உருவாக்க நினைக்கிறோம். புரட்சியாளர்களின் இப்போதைய கவலை புகுத்தப்படும்
அடையாளம் அல்ல. அவர்களிடமிருந்து அகற்றப்படும் அடையாளம். அப்படியானால் இது
ஒரு சாதியை கொண்டாடும் சமூகம். பிற்போக்குத்தனமாக ஜாதியை வளர்க்கும்
சமூகம். பிற்போக்குத்தனத்திற்கு ஏன் புரட்சியும் புடலங்காயும்?
|
|