|
|
“அந்த மலாய் நாவலில் இடம்பெற்றுள்ள சாதி துவேச வார்த்தையை (பறையர்) அகற்ற
வேண்டும்”.
அண்மையில் செய்தி அறிக்கை ஒன்றில் இந்த வாக்கியம் இடம்பெற்றிருந்தது. எது
சாதி துவேச வார்த்தை? “பறையர்” எனும் சொல் மிகவும் கீழானது எனும் மிக
அழுத்தமான எண்ணம் கொண்டவர்களின் வாக்குமூலம்தான் இது. அந்தச் சொல்லை ஒரு
சாதி துவேச சொல் எனச் சொல்வதற்குப் பின்னணியில் இருப்பது சாதி வெறி
அல்லாமல் வேறு என்னவாக இருக்கும்? தன்னகத்தே சாதியின் மீது நம்பிக்கையும்
அபிமானமும் கொண்ட மனிதர்கள் அதிகமாக நிரம்பியிருக்க எங்கனம் ஒரு நாவலிலுள்ள
ஒரு சொல்லின் மீது கோபப்பட்டுப் போர்க்கொடியை எழுப்புவது சாத்தியமாகும்?
மலேசிய இந்தியர்களின் வரலாற்றை முழுமையாகத் தொகுத்த ஜானகிராமனையும், மலேசிய
மண்ணின் வரலாற்றையும் வாழ்வையும் நாவல்களாகக் கொடுத்த நாவலாசிரியர் அ.
ரெங்கசாமியையும் அங்கீகரிக்காத, வாசிக்காத ஒரு காலக்கட்டத்தில்தான் நான்
இருக்கிறேன் என்கிற பிரக்ஞையோடு இதை எழுதுகிறேன்.
இண்டர்லோக் நாவல் குறித்து பயங்கரமான சர்ச்சையையும் போராட்டத்தையும்
முன்னெடுத்திருக்கும் போராட்டவாதிகளே, நிற்க. சுங்கைப்பட்டாணியில் 1997ஆம்
ஆண்டில் பெயர் குறிப்பிட விரும்பாத இருவேறு இடங்களில் இரண்டுவகையான
சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
-
கொடுத்த கடனை வசூலிக்க நகரங்கள் தோறும் வசிப்பிடங்கள் தோறும் நடந்தே
சென்று தன் வாழ்க்கையை நடத்தும் 84வயது நிரம்பிய ஒரு பாட்டி, ஒரு இந்திய
குடும்பத்தால் சாலையில் வைத்து பயங்கரமாக அடித்துத் தள்ளப்படும்போது,
“பறைச்சி நாயே!” என இன்னொரு இந்திய பெண்ணால் கொடூரமாகத் திட்டப்படுகிறார்.
-
சீனக்கம்பத்தில் இருக்கும்போது பலமுறை “இந்து பறையா” எனச் சொல்லப்பட்டு
கல்லால் துரத்தியடிக்கப்பட்ட அனுபவம் எனக்குண்டு. ஒருமுறை நானும் என் பால்ய
நண்பனும் சைக்கிள் தொலைந்துபோன சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டு சீனர்களாலும்
அங்குள்ள சில இந்திய வாலிபர்களாலும் துரத்தியடிக்கப்பட்டோம். அவர்கள்
வீசியெறிந்த கற்களைவிட அதிகமாக வந்து விழுந்தது “பறையா” என்கிற சொல்தான்.
பறையர் எனும் சொல்லைப் பற்றிய எந்த அறிமுகமும் தெளிவும் இல்லாத ஒரு வயதில்
இப்படித் துரத்தியடிக்கப்பட்ட கொடூரம் 1997களில் எனக்கு நேர்ந்தபோது எந்த
இண்டர்லோக் அப்பொழுது பாடப்புத்தகமாக இருந்தது எனச் சொல்ல முடியுமா
போராட்டவாதிகளே?
மீண்டும் 2010களில் ஒரு சம்பவம் நடக்கிறது. நண்பர் ஒருவர் என்னை அழைத்து
கூடியவிரைவில் இங்கு ஒரு சாதி சங்கத்தின் கிளை திறப்பு விழா
நடக்கப்போவதாகத் தெரிவிக்கிறார். யாரெல்லாம் அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களோ
அவர்கள் அனைவரும் இந்தச் சாதி சங்கத்தில் இணைவதன் மூலம் தம்மை
வளர்த்துக்கொள்ளலாம் எனச் சொல்கிறார். அந்தத் திறப்பு விழாவிற்கு ஒரு
தொழில்முனைவரும் 'சமூக ஆர்வளரும்' சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பண
அன்பளிப்பும் வழங்கி வந்திருப்பவர்களைச் சாதி சார்ந்து மேலும்
வளர்த்துவிடுகிறார். மிகவும் சுயநலமாகச் சாதியின் பெயரைச் சொல்லி ஒரு
குழுவை மட்டும் வளர்த்துக்கொள்ளும் கொடிய நோய்க்கு ஆளான இவர்களுக்கு எந்த
அப்துல்லா உசேன் தவறான நாவலை எழுதி கெடுத்திருப்பார்? இந்தச் சாதி
சங்கத்தைச் சேர்ந்த இம்மாதிரியான தமிழர்கள் யாவரும் இன்று ஆபத்தாகக்
கருதப்படும் இண்டர்லோக்கைவிட பயங்கரமானவர்கள் இல்லை என உங்களால் சொல்ல
முடிந்தால் நானும் அந்த நாவலை எரிக்கத் தயார்.
வன்னியர் கவுண்டர் சங்கத்தின் திறப்பு விழா தொடங்கி இன்னும் இன்னும் சாதி
சங்கங்களின் ஆண்டு விழாவரை அனைத்து செய்தியையும் பத்திரிகையில் பிரசுரித்து
தனது பத்திரிக்கை தர்மத்தைக் கடைப்பிடிக்கும் பத்திரிகையாளர்களின்
கவனத்திற்கு: இண்டர்லோக் நாவல் கிள்ளானில் எரிக்கப்பட்ட செய்தியை உங்கள்
பத்திரிகைகளில் பிரசுரிக்கும்போது உங்கள் மனம் சுடவில்லையா? உங்களின் சுயநல
தீ உங்களைக் கொஞ்சம்கூடவா எரிக்கவில்லை? இண்டர்லோக்கை மட்டும்தான் எரித்து
சாம்பலாக்க முடிந்தது. இன்னமும் வெளிப்படையாக அடையாளம் காட்டப்படாத நம்
இந்தியர்களின் உள்ளுக்குள் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் சாதி
உணர்வை என்ன செய்வது? இதற்கு முன் ஓரு வசை அடையாளமாகவே பள்ளிகளிலும்
வசிப்பிடங்களிலும் வலுவாக உருவாகிவிட்ட இந்தச் சொல் இனிமேல்தான் இந்த
இண்டர்லோக் நாவலின் வழி நம்மைத் தாக்கப் பயன்படுத்தப்படும் எனப்
பதற்றமடைவது மிகவும் போலியானது. இங்கு ஏற்கனவே நமக்குள்ளும் பிற
இனத்தவர்களும் தீவிரமாகப் புதைந்துவிட்ட ஒரு வார்த்தை அது.
முதலில் “பறையர்” என்பதே இழிவான சொல் என நினைக்கும் தென்னிந்தியனின்
கொடூரமான சாதிய புரிதலிலிருந்து இங்குள்ள அனைவரும் விடுதலையாக வேண்டும்.
உலகத்தின் மிக முக்கியமான அகராதிகளிலேயே “பறையர்” எனும் சொல்லுக்கு
தாழ்த்தப்பட்டவர்கள் எனும் பொருள் இருக்கும்போது, எப்படிப் பறையர் என்பது
ஒரு தனிப்பட்ட இனக்குழுவை இழிவுப்படுத்தும் சொல்லாக நாம் கருத முடியும்?
ஆப்பிரிக்காவில் “பறையா” எனும் பெயரிலேயே ஒரு சினிமா
எடுக்கப்பட்டுருக்கிறது. பல முக்கியமான விருதுகளைப் பெற்ற படம் அது.
ஆப்பிரிக்க மக்களின் அடித்தட்டு வாழ்க்கை முறையின் நிலையைப் பிரதிபலிக்கும்
ஒரு சொல்லாகவும், ஒழுக்கம் சிதைந்துபோன ஒரு சாராரை இப்படி அழைப்பார்கள்
எனவும், அந்தச் சொல்லுக்குப் பின்னணியில் அங்கொரு வரலாறும் இருக்கிறது.
எத்தனை பேருக்கு இது தெரியும்? இது நமக்கான இழிவான சொல் எனச் சொந்தம்
கொண்டாடி, அதற்காகப் பதறுவதிலும் கோபப்படுவதிலும் என்ன அர்த்தம்
இருக்கிறது?
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தின் வரலாற்றை மையமாகக் கொண்டு
பிரிட்டிஸ் பிடியிலிருந்து தப்பித்த மலாயாவின் கதையைத்தான் அப்துல்லா உசேன்
இண்டர்லோக்கில் பதித்துள்ளார். மலாயா விடுதலைக்காக உழைத்த மூன்று இனத்தைச்
சேர்ந்தவர்களின் வாழ்க்கைமுறையே நாவலின் மையமாக ஒலிக்கிறது எனச்
சொல்லப்படுகிறது. இன்று இண்டர்லோக் நாவலுக்கு ஒட்டுமொத்தமான எதிர்ப்பையும்
கண்டனத்தையும் தெரிவிக்கும் போராட்டக்காரர்களுக்கு உண்மையான பிரச்சனையே
அந்த நாவலோ அல்லது அந்த நாவலை எழுதிய அப்துல்லா உசேனோ கிடையாது. முறையான
நாவல் வாசிப்புப் பயிற்சி கிடையாதவர்கள் “பறையர்” எனும் சொல்லின் மூலம்
தூண்டப்பட்டு நாவலை மறுவாசிப்புக்கூட செய்யாமல் உடனடி உணர்ச்சிக்கு
ஆளாகியுள்ளார்.
இதற்கு முக்கியமான ஓர் உளவியல் தூண்டலை உதாரணமாக முன்வைக்கக்கூடும். மலாய்
மேலாண்மையைக் காட்டி தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிபலிப்பு
இலக்கியம், கலை, சமூக அரசியல் என்பதற்கு அப்பாற்பட்ட பதற்றமான ஒரு நிலையை
அடைந்துவிட்ட சூழல். தொடர்ந்து பலவகைகளில் சுரண்டப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட
ஒரு சமூகம் தன் மீதான சுரண்டலை அறிந்துகொண்ட பிறகு அடையும் மன எழுச்சியும்,
இத்தனைநாள் சுமந்து திரிந்த அடக்குமுறைகளை உதறித் தள்ளுவதில் உருவாகும்
ஆவேசமும் எப்பொழுதும் கட்டுப்படுத்த முடியாதவை. உலகின் மிக்க்கொடூரமான போர்
சூழல்கள் அனைத்தும் இப்படிப்பட்ட ஒரு உளவியல் தூண்டலிலிருந்தே
உருவாகியிருக்கின்றன.
எப்பொழுது ஒரு தரப்பினரை உயர்த்திக்காட்டியும் அவர்களுக்கான சலுகைகளை
வெளிப்படையாக யாவரும் கேள்வி எழுப்பக்கூடாது என்கிற கட்டமைப்பை நிறுவியும்
ஓர் அரசியலாட்சி நடத்தப்படுகிறதோ அப்பொழுதே அது அவர்களுடன் சேர்ந்து வாழும்
சிறுபான்மை இனத்தை ஒடுக்கத் துவங்குகியிருக்கிறது என அடையாளப்படுத்தலாம்.
இன்று உலகம் முழுக்க புலம்பெயர்வும் புகழிடம் தேடி நகர்வதும்
நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக
உள்நாட்டுக்காரர்கள் நடத்தும் புறக்கணிப்பும் ஒடுக்குதலும் ஆங்காங்கே
நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் புலம்பெயர்ந்தவர்களுக்கு முன் தன் அரசியல்
அதிகாரத்தையும் வர்க்க மேலாண்மையையும் காட்டி அவர்களைச் சிறுமைப்படுத்தும்
செயலை ஓர் அரசாங்கமே செய்யத் துணிவது மிகவும் வருந்தத்தக்கச் செயலாகும்.
இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்து முடிந்ததும் இப்படிப்பட்ட ஓர்
அரசாங்கத்தின் மீறல்கள் என்பதை உணர்ந்தாக வேண்டும்.
மலாயாவிற்கு வந்த தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்களின் வரலாற்றை
எப்படிப் பார்க்கப் போகிறோம் என்பதிலிருந்து மலேசிய வரலாற்றின் பகுதி
தொடங்குகிறது. இன்று அடர்ந்த வனப்பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் அசலான
பழங்குடிமக்களே (அஸ்லி) இந்த மலாயா மண்ணில் சீனர்கள், தமிழர்கள்,
மலாய்க்கார்ர்கள் வருவதற்கு முன்பாக வாழ்ந்தவர்கள். ஆனால் எந்தவகையிலும்
புலம்பெயர்ந்தவர்களின் மீதான தனது குடியுரிமை அரசியலையும் அதிகாரத்தையும்
காட்டத் தெரியாதவர்கள் அவர்கள். இன்று அடையாளம் தெரியாமல் இன்னமும் 8
மணிநேரம் படகில் பயணம் செய்து சென்று பார்த்துவிட்டு வரும் அளவிற்கு
முன்னேற்றங்களோடு துண்டிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, மார்ச் 8-இல் நடந்த கம்போங் மேடான் இனக்கலவரத்தின்
பின்னணியில் தமிழர்களின் உயிரைக் காப்பதற்காக எதிரிகளை எதிர்த்து நின்ற
மலாய்க்காரர்களும் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும். எது யார் இனபேதங்களை நோக்கி எல்லா வகையான கட்டமைப்புகளையும்
செய்து வருகிறார்கள் என்பதைக் கண்டறிவதே இன்றைய சிக்கலாக இருந்து வருகிறது.
கண்டறிவதில் / அடையாளம் காண்பதில் பற்பல சமூக சூழலில் வாழும் நமக்கு ஒரு
தீவிரமான மனமுதிர்ச்சியும் வலுவான விழிப்புணர்ச்சியும் தேவையாக இருக்கிறது.
இண்டர்லோக் நாவலில் இடம்பெற்ற அந்தச் சொல்லும் இந்தியர்களின் வாழ்வை
அவமானப்படுத்தும் சில விவரிப்புகளும் ஒரு நாவலின் சரியான வாசகனை இந்த
அளவிற்கு சலனப்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. ஒரு நாவல் என்பது புனைவின்
வடிவம், மேலும் அது இரு வகையான தாக்கங்களை நமக்குள் ஏற்படுத்தும். ஒன்று
ஒட்டு மொத்த நாவலிலிருந்து வெளிப்படும் வாழ்வின் சாரம். மற்றொன்று வரலாற்று
தகவல். இந்த இரண்டாவது பகுதியில் எப்பொழுதும் வரலாற்று பிழைகள் நடப்பது
இயல்பான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. வரலாற்று சம்பவங்களைக் கதைகளாக
நாவல்களாகத் தொகுக்க முற்படும் எல்லாம் வரலாற்று நாவலாசிரியர்களும் 100%
உண்மையாகவும் தெளிவாகவும் தனது வரலாற்று பார்வையைச் சொல்லியிருப்பார்கள்
என்றே சொல்ல முடியாது. புனைவு கொடுக்கும் கற்பிதங்கள் மாயத்தன்மையுடன்
மயக்கநிலைக்கும் விழிப்புநிலைக்கும் இடையில் துடிக்கும் இயல்பாகத்தான்
பார்க்க முடிகிறது. ஒரு வரலாற்று நாவலாசிரியனின் நினைவு என்பது என்ன? தன்
மூதாதையர்களின் வாய்மொழி கதைச்சொல்லலின் வழியாகவும், சேகரிக்கப்பட்ட
முந்தைய தலைமுறையின் நினைவுகளின் வழியாகவும், முன்பே எழுதப்பட்ட சில
முக்கியமான வரலாற்று ஆவணங்களின் வழியாகவும் உருவாக்கப்படும் ஒரு மனநிலை
ஆகும். இந்த மனநிலையிலிருந்து மட்டுமே அவனால் தன் நாவலைத் தொடங்க முடியும்.
மற்றபடி அவனால் கடந்தகாலத்திற்குச் செல்லும் இயந்திரத்தில் பயணித்தெல்லாம்
ஒரு நாவலை எழுதிவிட முடியாது.
இண்டர்லோக் நாவல் நம்முடைய மாணவர்களுக்குச் சரியான இலக்கிய வடிவா
என்பதில்தான் நம்முடைய விவாதம் தொடங்கியிருக்க வேண்டும். இந்த நாவல்
பள்ளியில் வருவதற்கு முன்பதாகவே பறையர் எனச் சொல்லி இந்திய மாணவர்களை
அவமானப்படுத்தும் வழக்கமே மலேசியாவில் இல்லையா? அப்பொழுது எந்த இண்டர்லோக்
இம்மாதிரியான சூழலை இங்கு உருவாக்கியிருக்கக்கூடும்? நம் இந்திய
மாணவர்களைக் காலணியால் அடித்து அவமதிக்கும் சூழல் படித்த ஆசிரியர்கள்
மத்தியில் இருக்கும்போதே இதற்கெல்லாம் வெறும் இண்டர்லோக் மட்டும் காரணம்
எனச் சொல்ல முடியுமா? இண்டர்லோக்கைவிட நிசத்தில் சாதியை
உயர்த்திப்பிடிக்கும் பேர்வழிகள் எங்கும் பரவியிருக்க, அவர்கள் நம்
இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர்களை விட்டுவிடுவதும், அப்துல்லா ஒரு
மலாய்க்காரர் என்பதற்காக அவரைத் தண்டிப்பதும் நியாயமான செயல் இல்லை என்றே
கருதுகிறேன்.
இண்டர்லோக் நாவலின் சுருக்கம் 3 பகுதிகளாகத் தரப்பட்டுள்ளது. மலாய்
மொழியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்துள்ளேன்:
1
மணியத்தைப் பார்ப்பதற்காக செமான் அங்கு வருகிறான். மணியத்திடம் கித்தா
தோட்டத்தில் வேலை கிடைக்குமா எனக் கேட்கிறான். செமானுடைய அனைத்து
சொத்துக்களையும் சீனன் பாஞ்சாங் அபகரித்துவிட்டு அவனையும் அவன் அம்மாவையும்
அங்கிருந்து துரத்தி விடுகிறார்கள். ஆகையால் மணியத்திடம் உதவி கேட்டு
செமான் வந்திருப்பதை தெரிந்துகொண்ட மணியம் செமானின் அப்பாவும் மணியமும்
முன்பு நெருங்கிய நண்பர்கள் எனக் கூறுகிறார். பள்ளிவாசலில் தன்னுடைய
வழிப்பாட்டை முடித்துக்கொண்ட பிறகு அம்மாவுடன் அங்கேயே தங்கிவிடுகிறான்
செமான். மறுநாள் மணியம் அவர்களை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்குச்
செல்கிறான். அங்குக் கூலி ஒருவர் தங்கியிருந்த வீட்டைக் காட்டி அவர்களை
அங்குத் தங்க வைக்கிறான்.
குறிப்பு: (செமான் ஒரு மலாய்க்காரன்) - ஒரு மலாய்க்காரர் இந்தியரிடம் உதவி
கேட்டு வந்து அடைக்கலம் பெறுகிறார். தனது மேலாண்மை புத்தி சார்ந்து எந்தப்
பிரக்ஞையையும் பகிங்கரமாக முன்வைக்காமல் ஒரு சாதரண மனிதராக செமான்
வருகிறார். மணியம் எந்த இனபேதமும் இல்லாமல் அந்த மலாய்க்காரருக்கு
உதவுகிறார்.
2
சிங் ஹுஹாட் அறைந்து அவமானப்படுத்தி வெளியே துரத்திவிட்டப் பிறகு யிவ்
மறுநாள் காலையில் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அங்கிருந்து சங்காட் எனும்
சுரங்கத் தொழிற்சாலைக்குச் சென்று கூலியாக வேலை செய்யத் துவங்குகிறான்.
யிவ் எப்பொழுதும் தன் அப்பாவுடன் கருத்து முரண்பாடு கொண்டவனாக இருந்தான்.
அவன் தன் மலாய்க்கார நண்பர்களிடமே எப்பொழுதும் நட்புக் கொள்வதோடு
விளையாடிக்கொண்டும் இருப்பான். அவனுடைய நெருங்கிய நண்பனாக லாசிம்
திகழ்ந்ததன். லாசிமுடன் சேர்வதால் யிவ்வின் செயல் அவனுடைய அப்பாவிற்குப்
பிடிக்கவில்லை. மலாய்க்காரர்களைக் காட்டுக்காரர்கள் எனச் சொல்லி திட்டும்
தன் அப்பாவின் மீது யிவ்க்கு கோபம் வருகிறது. மலாய்க்காரர்களும் சீனர்களும்
எப்பொழுதும் ஒன்றாகப் பார்க்கக்கூடியவர்கள் எனும் சிந்தனை யிவ்க்குள்
அப்பொழுதே தோன்றுகிறது.
குறிப்பு: யிவ் செங் இன வேறுபாடின்றி அனைவரையும் சமமாகப்
பார்க்கக்கூடியவராக இருந்திருக்கிறார். அப்துல்லா உசேன் சீனர்களில் ஒரு
சாரார்/சிலர் மலாய்க்காரகளைக் காட்டுக்காரர்கள் என இழிவாகப் பார்க்கும் ஒரு
விசயத்தைத் தைரியமாக முன்வைக்கிறார். அதே சமயம் சீனர்களின் இன்னொரு சாரார்
மனிதாபிமானத்துடன் அனைவரையும் சமமாக மதிக்கக்கூடியவர்கள் எனவும்
நிறுவுகிறார்.
3
ஜப்பானிய படை மலாயாவிற்குள் நுழைந்ததும், உள்நாட்டு சூழல் அமைதியை இழந்து
காணப்பட்டது. வெள்ளையர்கள் தோற்று வெளியேறியதும் ஜப்பானியர்களின் ஒட்டு
மொத்த வெறுப்பும் சீனர்கள் மேல் விழுந்துவிடும் என்கிற அச்சத்தில் சீனர்கள்
நடுங்கினர். நாட்டின் சூழல் கட்டுக்கடங்காமல் போனதும், அதிகமான
திருட்டுகளும் நடந்தன. குறிப்பாக சீனர்களின் மீது பகை உணர்வு கொண்ட
மலாய்க்காரர்கள் அவர்களின் வியாபாரக் கடைகளைச் சூரையாடினர். சிங் ஹுஹாட்
கடையைக் கொள்ளையடிக்கும்போது அவரின் மகன் எங் காணாமல் போய்விடுகிறான்.
ஆனால் செமான் அந்தப் பையனைக் காப்பாற்றி விடுகிறான். செமான் அந்தப் பையனை
சங்காட்டிலுள்ள ஒரு தோட்டப்பட்டாளியின் வீட்டில் தங்க வைக்கிறான்.
குறிப்பு: அந்நிய சக்தியின் வருகை உள்நாட்டுப் பகையை எப்படிக் கிளரிவிடும்
அளவிற்கு மாறுகிறது என்கிற உண்மையைக் காட்டுகிறது. அந்தச் சமயத்தில்
மலாய்க்காரர்கள் எப்படித் தம் பகையைத் தீர்த்துக்கொள்கிறார்கள் எனவும்
சொல்லப்பட்டுருக்கிறது. இருந்தபோதும் காணாமல் போகும் ஒரு சீன வியாபாரியின்
மகனை இன்னொரு மலாய்க்காரர் காப்பாற்றி ஒரு இந்திய தொழிலாளியின் வீட்டில்
தங்க வைக்கிறார். இது ஒரு புனைவாக இருந்தாலும் முழுக்க வன்முறைக்கும்
போராட்டத்திற்கும் மத்தியில் அழுத்தமான ஒரு இன ஒற்றுமையையும்
மனிதாபிமானத்தையும் சொல்கிறது.
இப்படியாக நாவல் முழுக்க அது வைத்திருக்கும் வாழ்வின் சாரம் மீண்டும்
மீண்டும் இனத்தின் ஒற்றுமையையே ஆழமாகப் பேசுகிறது. ஒரு நல்ல நாவல்
வாசிப்புப் பயிற்சி உள்ள ஒரு வாசகனால் அடையாளம் காணப்படுவதும் இதுவாகத்தான்
இருக்கும். ஒரு நாவலின் ஒரு சொல்தான் ஒட்டுமொத்த நாவலின் மீதான வெறுப்பாக
மாறுகிறது என்றால், மலாய்க்காரர்களும் அப்துல்லா உசேன் மீது
கோபப்பட்டிருக்க வேண்டும். மலாய்க்காரர்களைக் “காட்டுக்காரர்கள்” எனவும், “
சீனர்களைக் கொள்ளயடித்தவர்கள்” எனவும் இப்படிப் பல இடங்களில் தன் இனத்தைப்
பற்றியும் அப்துல்லா எழுதியிருக்கிறார். இது ஒரு நாவல் / புனைவு
என்பதற்காகவும் அப்துல்லா நாட்டின் முக்கியமான படைப்பாளி என்பதற்காகவும்
அவரின் மீது மலாய் சமூகமே மதிப்பையும் மரியாதையையும் வைத்திருக்கிறது.
ஆனால் அப்துல்லாவின் இந்த நாவல் முழுக்க உண்மையை மட்டுமே பிரதிபலிக்கிறது
என்றும் சொல்வதற்கில்லை. முன்பே குறிப்பிட்டது போல ஒரு நாவல் (இலக்கிய
வடிவம்) உண்மையையும் புனைவையும் முன்வைத்து படைக்கப்படுவது என்பதால் அதில்
100 சதவிகிதம் வரலாற்றையும் சரியான தகவலையும் எதிர்ப்பார்க்க முடியாது.
கற்பனையின் அபாரமான உந்து சக்திதான் ஒரு படைப்பாளியை வாழ்வையும்
உண்மையையும் படைப்பாக்க முன்னகர்த்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும்.
பறையர் எனும் சொல்லின் மீது சமூகம் கொண்டுள்ள அதீதமான வெறுப்பும் பயமும்
அடுத்த தலைமுறைக்கு மிக எளிதாகப் பரவுவதற்கு இண்டர்லோக் மட்டும் காரணமாக
இருக்கும் என்பதன் குற்றச்சாட்டில் எனக்கு முழுமையான மறுப்பு உண்டு.
இங்குள்ள சமூகம் தான் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்கிற நம்பிக்கையைத்
தீவிரமாகக் கொண்டுள்ளது. இது மிக எளிதாக அவர்களின் குழந்தைகளின் மனதிற்குள்
பதிந்துவிடுகிறது. அவர்களின் வழி சாதிய வேறுபாடு அடுத்த தலைமுறைக்குள்
கொண்டு போகும் என்பதும் உண்மை. மலாயாவிற்கு வரும்பொழுது எல்லோரும் ஒரே
கப்பலில் வசதியில்லாமல் ஒரே மாதிரி நடத்தப்பட்டுத்தான் கொண்டு வரப்பட்டோம்.
ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தென்னிந்திய சாதி உணர்வு
விழித்துக்கொண்டுத்தான் இருந்திருக்கிறது. அதனால்தான் காலினியக்
காலத்திற்குப் பிறகு வெவ்வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் தன் சாதி
சார்ந்து ஒரு பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டார்கள். அதன் மூலம் தன் கடந்தகால
வாழ்வின் மீதுள்ள அனைத்து சோகங்களையும் வரலாற்றையும் மறந்து தான் உயர்ந்த
சாதி எனப் பாவனை செய்து தப்பித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் அப்துல்லா சொல்வதைக் கொஞ்சம் திறந்த மனதுடன் பாருங்கள்: அவர்
அங்கிருந்து வந்த அனைத்துத் தமிழர்களும் ஒரே மாதிரிதான் இருந்தனர்.
அவர்களுக்குள் சாதி உணர்வே இல்லை. தீண்டாமை இல்லை. வறுமை அவர்களின் சாதிய
கொள்கைகளை இழக்கச் செய்திருந்தன எனக் கூறுகிறார். இந்த இடத்தில் பறையர்
எனவோ அல்லது தேவர் எனவோ அல்லது கவுண்டர் எனவோ எந்தச் சொல்லையும் அவர்
பயன்படுத்திருக்காமல் எல்லோரும் வறுமையால் பிழைக்க வந்தவர்கள் எனும்
விவரிப்பைக் கொடுத்திருந்தால் இந்த நாவலின் மீது அனைவரும் எதிர்வினை
கொண்டிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. பறையர் எனும் சொல்லை அவர்
புரிந்துகொண்டிருக்கும் விதத்தில் மட்டுமே ஒருவேளை தவறு
நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் இந்த நாவலில், மூவினத்தின் பலவீனத்தையும்
பேசியுள்ளார் என்பதில் முழுவதுமான உண்மை அடங்கியுள்ளது. அப்படியென்றால்
நாவலிலுள்ள வெறும் சொற்களைக் கொண்டு சீனர்கள் ஒரு பக்கமும் மலாய்க்காரர்கள்
ஒரு பக்கமும் பறையர் எனும் சொல்லின் மீது ஆத்திரம் கொண்டிருக்கும் சிலர்
ஒரு பக்கமும், அப்துல்லாவைத் தண்டிப்பதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது?
ஒரு நாவலின் சாரத்தைத் தெரிந்துகொள்ளாத உணராத ஒரு தேக்கநிலையின் பயங்கரமான
விளைவாகத்தான் அதனைப் புரிந்துகொள்ள நேரிடும்.
“உண்மையில் இண்டர்லோக்கை நீக்கிவிட்டால், பறையர் எனும் சொல் உயர்ந்ததாக
மதிக்கப்படுமா? அல்லது கவுண்டர் சங்கங்கள் மூடப்படுமா? என்ன சொல்கிறீர்கள்
போராட்ட நண்பர்களே?”
|
|