|
|
அந்த மழலை தமிழ் பேசும் வானொலி அலையைத் தவறுதலாகத் தட்டினால் அவ்வப்போது
42000 இந்தியர்கள் இன்னும் முறையான அடையாள
அட்டை இல்லாமல் இருக்கின்றனர்
என்ற செய்தியைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் அன்றாடம் கொட்டிக்
கொண்டிருக்கும் ஆயிரம் குப்பைகளுள் அதுவும் ஒன்றென வாளாவிருக்க
முடியவில்லை.
அப்போது எனக்கு வயது 15 இருக்கும்.பாட்டியின் முக்கியமான ஆவணத்தை
அலமாரியில் தேடிக் கொண்டிருந்தேன். நீல வர்ணத்தில் பழைய தாள் ஒன்று அதனூடே
இருப்பதை கண்டேன். பழைய பிரஜா உரிமை என்றார் பாட்டி. பழைய மலாய். அதிசயமாக
பாட்டியின் பெயரைச் சரியாகவே எழுதியிருந்தனர். தாத்தாவின் பெயரில்தான் ‘a’
ஒன்று குறைந்திருந்தது. தொடர்ந்து அலசியதில் இனம் தெலுங்கு என்று இருந்தது.
"அப்படியா?" என்றார் பாட்டி. பச்சைத் தமிழச்சியைத் தெலுங்கு என்று
போட்டதைக் கண்டு என் தமிழ்க் குருதி வழக்கம் போலவே பொங்கோ பொங்கென்று
பொங்கியது. "அட போடா, இது கிடைக்கவே பாதி உயிர் போனது, மனுசன்னு
ஒத்துக்கிட்டானே அதுவே பெரிசு" என்றார் பாட்டி.
வழக்கம் போலவே பாட்டி கதை தொடங்கியது. 1946-ல் மலாயன் யூனியன் மூலம்
இங்கிருந்த அனைத்து இனத்தினருக்குமே இயல்பாக குடியுரிமை வழங்கப்படுவதை
அம்னோ எதிர்த்ததால் பிரிட்டிஷ் அரசு அந்நோக்கத்தைக் கைவிட்டது.
இந்தியாவில் பிறந்து மலாயாவில் வளர்ந்தவர்களுக்குச் சிவப்பு அடையாள
அட்டைதான் வழங்கினார்கள். (1957-க்கு முன் பிறந்தவர்கள்) நாடு
சுதந்திரமடைந்ததும் குடியுரிமை பெற பிரஜா உரிமை எடுக்க வேண்டுமென
சொல்லிவிட்டார்கள். நீங்கள் இந்நாட்டில் பல வருடங்கள் இருந்ததற்குச்
சாட்சியும் மலாய் மொழி பேச முடிய வேண்டுமென்பதே அதன் விதிமுறைகள்.
பாட்டிக்கு மலாயில் மூன்று வாக்கியங்கள் பேச கற்று கொடுத்து
நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர் பெயர், செய்யும் வேலை,
இருக்கும் இடம் அவ்வளவுதான். பாட்டி உள்ளே சென்றதும் அதை மட்டும் சரியாக
மறந்து விட்டிருந்தார். அடுத்த முறை நீதிபதியே கேள்வியை கேட்டு விட பாட்டி
‘ya’ என்று மலாயில் சொல்லி பிரஜா உரிமை வாங்கியிருக்கிறார்.
பெரியம்மாவும் அம்மாவும் 1957-க்கு முன் பிறந்தவர்களாதலால் அவர்களுக்கு
சிவப்பு அடையாள அட்டைதான் இருந்தது. தாத்தா விண்ணப்பத்தில் கொஞ்சம் தாமதம்
செய்ததால் மைனர் பிரஜா எடுத்தப் பிறகே நீல அடையாள அட்டை கிடைத்து மலேசிய
குடிமக்களாக ஏற்கப்பட்டனர். சிவப்பு அடையாள அட்டை வைத்திருந்ததால்
பெரியம்மாவை பெண் பார்க்க வந்த முதல் வரன் வேண்டாமென்று சொல்லிவிட்டதையும்
பாட்டி சொல்லியிருக்கிறார்.
குடியுரிமை பிரச்சனையில் மலாய்காரர் அல்லாதவர்கள் சுதந்திரத்திற்கு முன்
மெத்தனமாக இருந்ததற்குக் காரணம் தங்கள் தாய்நாட்டிற்கே திரும்பிவிடும்
சிந்தனையிலேயே அவர்கள் இருந்ததுதான். ஆனால் சுதந்திரத்திற்குப் பின்பும்
முக்கியமாக மே 13 இனக்கலவரத்திற்குப் பின்னர் வெளியேறியர்களைத் தவிர்த்து
இந்நாட்டையே தங்கள் வாழும் பிரதேசமாக ஏற்று கொண்டவர்கள் இங்கேயே
தங்கிவிட்டார்கள். பெரும்பாலும் தோட்டத் தொழிலாளிகளாக இருந்தவர்களுக்கு
வறுமையோடும், கல்வியின்மையோடும் அடையாள அட்டை பிரச்சனையும் நிம்மதியை
துரத்துகிற துர்க்கனவாக இருந்தது.
மலேசிய இலக்கியத்தில் இப்பிரச்சனை முக்கிய பாடுபொருளாக 70களில் இருந்தது.
அதில் முக்கியமாக சீ. முத்துசாமியின் ‘இரைகள்’ சிறுகதை. கணவனை இழந்து
விடும் 5 பிள்ளைகளைக் கொண்ட லெட்சுமியை மணந்து கொள்ள சிவப்பு அடையாள அட்டை
வைத்திருக்கும் ‘நொண்டி கிருஷ்ணன்’ முன்வருகிறான். லெட்சுமிக்கு
விருப்பமிருந்தாலும் கிருஷ்ணனின் வேலை அனுமதியை புதுப்பிக்க மாட்டோம் என்ற
தண்டல் மற்றும் கிராணியின் மிரட்டலுக்கு அடிபணிந்து போகிறாள் முனியம்மா.
உழைப்போடு உரிமை சுரண்டலுக்கும் இரையாகும் தோட்ட தொழிலாளிகளின் உயிரோட்டமான
சித்திரிப்பு ‘இரைகள்’.
அடையாள அட்டை பிரச்சனை சம்பந்தமாக ஒருமுறை ஒரு நண்பரோடு பேசி
கொண்டிருந்தபோது, 'அன்றே அரசு வழங்கியபோது முறையாக விண்ணப்பித்திருந்தால்
இப்பிரச்சனை இருக்காதே' எனக் குறைப்பட்டுக் கொண்டார். ‘நமது ஆளுங்களே
இப்படிதான், பொறுப்பில்லாதவர்கள்’ என கடிந்து கொண்டார். அன்றைய சூழலில்
கல்வி, வருமானம், போன்றவற்றில் நம் இந்தியர்களின் பின் தங்கிய சூழலை
எடுத்துச் சொன்னேன். நண்பர் ஒத்து கொள்வதாக இல்லை. ‘எந்த சூழலிலும் நாம்
பொறுப்பாக இருந்தால் எல்லாம் முறையாக நடக்கும்’ கட்சி அவர்.
அவருக்கு இன்னொரு நண்பரின் ஒரு வருடத்திற்கு முன்பான அனுபவத்தைச் சொன்னேன்.
அந்த இன்னொரு நண்பர் ஒரு அரசு சாரா அமைப்பில் உயரிய பொறுப்பில் உள்ளவர்.
தமிழ், ஆங்கிலம், மலாய் போன்றவை சிறப்பாகவே தெரியும். வேலை நிமித்தமாக
கோலாலும்பூரில் இருக்கிறார். அவருக்கு திருமணத்திற்கு பின் ஒரு குழந்தை
பிறந்தது. கணவன் மனைவி இருவரும் சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்தவர்கள்.
குழந்தைக்கு பிறப்பு பத்திரம் எடுக்க சுங்கைப்பட்டாணியில் உள்ள பதிவு
அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். குழந்தை பிறந்த 12 நாட்களுக்குள் பிறப்பு
பத்திரம் எடுத்து விட வேண்டும். வேலை பளுவால் கெடு முடியும் போதுதான் பதிவு
செய்ய சென்றிருக்கிறார். அங்கு சென்ற போதுதான் அவர்களின் திருமண சான்றிதழை
எடுத்து செல்லாததை உணர்ந்திருக்கிறார். சான்றிதழ் இல்லாததால் பிறப்பு
பத்திரம் தர மறுத்திருக்கின்றனர் அதிகாரிகள். சான்றிதழோ கோலாலும்பூரில்
இருக்கிறது. மீண்டும் எடுத்து வருவதற்குள் கெடு முடிந்து விடும். கெடு
முடிந்தால் இன்னும் சிக்கல். நண்பருக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அரசு
அலுவலகங்களின் வேலைகள் மையப்படுத்தப்பட்ட (centralised) பிறகும் இன்னும்
ஏன் இவ்வளவு கெடுபிடி என அவருக்குப் புரியவில்லை. எடுத்து சொல்லியும்
அவர்கள் கேட்பதாக இல்லை. நண்பரும் சாதாரணமானவரில்லை. உடனே அலோர்
ஸ்டாருக்குத் தொடர்பு கொண்டு உயர் அதிகாரியிடம் பேசியிருக்கிறார். பிரச்சனை
முடிந்தது.
அந்த இன்னொரு நண்பர் என்னிடம் இச்சம்பவத்தை சொன்ன பிறகு ஒன்றை சொன்னார்.
‘படித்தவர்களையே இவர்கள் இப்படி அலைக் கழிக்கிறார்களே, படிக்காவிட்டால்?’.
அதையே நான் என் நண்பரிடமும் வழிமொழிந்தேன்.
|
|