|
|
சாத்திரம் எனும் சுழல்
25 வருடங்களுக்கு முந்திய சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. ஊரில் பேர்
சொல்லும் படியான பணக்காரர் அவர். அவரின் ஒரே மகள், ரஜனி.
ரஜனி அவர்களிலும் சாதியில் குறைந்த ஒரு பெடியனை காதலித்து விட்டாள்.
அப்பாவுக்கு தெரிந்து அவர் சந்நதம் கொண்டு விட்டார். எங்கள் கண் முன்னால்
ரஜனியின் அம்மா குழற குழற ரஜனியை ஒரு பூவரச மரத்தில் கட்டி வைத்து தோலை
உரித்து விட்டார் அப்பா. அழகான ரஜனியை அன்று அலங்கோலமாக பார்த்தேன்.
அதன் பின்னர் ரஜனி காதல் பற்றி மூச்சு விடவே இல்லை. பிறகு இருவரும்
அப்பாவுக்கு பயந்து வேறு யார் யாரையோ திருமணம் முடித்து வாழ்கிறார்கள்.
ரஜனியின் சித்தப்பாவின் மகனை லண்டனில் சந்தித்தேன். எதேச்சையாகத்தான்.
மிகவும் கவலையோடு இருந்தார். என்னைச் சந்தித்த போது அவரின் கவலைகளை என்னொடு
பகிர்ந்து கொண்டார். உங்ளுக்குச் சொன்னால் என்ன. என்ரை பொடிச்சி நேற்று ஒரு
குண்டைத் தூக்கி போட்டிருக்கிறாள். “என்ன?” என்றேன்.
“நான் பிறந்த எங்கடை ஊரில் சம்பந்தம் பேசினேன். அவன் ஒரு பட்டதாரி பொடியன்.
குடி, சிகரட் இல்லை. தூரத்தில் எங்கடை சொந்தமும் கூட அவன் இப்ப இலங்கையிலை
இருக்கிறான் நல்ல பிரயாசக்காரன்.
உவன் பொட்டையிட்டை கேட்டன். அவள் சொல்லுறாள்......
அப்பா... ஊரோ உலகமோ எனக்கு தெரியாது. என்ரை பாட்னரை செலக்ட் பன்ற உரிமை
எனக்கு இருக்குது. அவர் லண்டனிலையோ அல்லது யாழ்ப்பாணத்திலையோ எண்டது இல்லை
பிரச்சனை. என்ரை ரேஸ்ட்டுக்கு வரவேணும். எனக்கெண்டு ஒரு ரசனை இருக்கு.
அம்மா உங்கடை காலுக்குள்ளை இருக்கிற மாதிரி என்னாலை இருக்க முடியாது. அதோடை
வாறவன் எனக்கு பொருந்துவானா இல்லையா எண்டு அவனோடை ஒரு வருஷம் வாழ்ந்து
பாத்துத்தான் முடிவு எடுப்பன். மனிசனுக்கு இடியை இறக்கியிருக்கிறாள் மகள்.
புதிய தலைமுறை இப்படித்தான் சிந்திக்குது. ஆயிரம் காலத்துப்பயிரை,
பூமியிலேயே சரியாக நிச்சயிக்க தயாராகிறது எமது தலைமுறை (பெயர்கள்
மாற்றப்பட்டுள்ளன.)
பிறரை துன்புறுத்துதல்
இன்னொரு வரைத் துன்புறுத்துதல் அல்லது தங்கியிருத்தல் என்பது வெள்ளைக்
காரர்களிடம் இல்லாதது. அவர்கள் சிறுவயதில் இருந்தே இன்னொருவரிடம்
தங்கியிருப்பது அற்ற ஒரு மனநிலையை பிள்ளைகளுக்கு ஊட்டிவிடுகிறார்கள்.
பிள்ளைகளும் ஒன்பதாம் பத்தாம் வகுப்பு பருவத்தில் இருந்து ஓய்வு காலங்களில்
தனியாக பெற்றோல் ஸ்ரேஸன், மளிகைக்கடை போன்ற இடங்களில் வேலை செய்து பணம்
சேகரித்து தமது பொக்கட் மணியாக பாவிப்பார்கள்.
எதிலும் தானாக முடிவெடுக்கும் பழக்கம், தானக வேலை செய்வது போன்ற விடயங்களை
எமது தமிழ் பிள்ளைகளும் பழகி விடுகிறார்கள்.
ஒரு அப்பா சம்பாதிக்க 10 பேர் உட்கார்ந்து சாப்பிடும் இலங்கை பழக்கம் அங்கு
இல்லை.
ஒரு பெண்பிள்ளை தனிய வீட்டை விட்டு வந்துவிட்டாள். தனது நண்பர்களோடு
ஹொஸ்ரலில் இருக்கிறாள்.
“அம்மா அப்பா தினமும் சண்டை. என்னால் வீட்டில் இருக்கவே முடியாது. எனக்கொரு
தம்பி இருக்கிறான். அப்பாவுக்கு அம்மாமேல் சந்தேகம். அம்மா அழகு. அதனால்
அம்மா வெளியில் போனாலே அப்பா ரென்ஸனாகிவிடுவார். அதனால் இப்பொழுது அப்பா
நிறைய குடிக்கிறார். அம்மா தேவாலயத்துக்கு போகிறா. இருவரும் ஒருவரை ஒருவர்
பார்த்தால் சண்டைதான். எனக்கு இந்த நெருக்கடிக்குள் இருக்க விருப்பமில்லை.
சிறிய வயதில் இருந்து அம்மா அப்பாவின் அரவணைப்பு, அன்பு எனக்கு
கிடைக்கவில்லை. தம்பி தான் பாவம்” என்று அவள் சொன்னாள்.
அனேகமான தமிழ்குடும்பங்கள் உழைப்பு, பணம், நெருக்கடி என்றே சுற்றி
சுழலுவதால் அன்பு பாசம் இல்லாமலே, அற்று போய் பிள்ளைகள் பெற்றார்கள் என்ற
உறவுமுறை அறுந்து போன குடும்பங்களாகவே இருக்கின்றன. இது காலப்போக்கில்
தமிழ் சமூகத்தில் இருந்து வேறுபட்ட தமிழ் பெயருடைய ஐரோப்பியர்களைத் தான்
மிச்சமாகத் தரும்.
சாத்திரம் எனும் சுழல்
சாத்திரம், காண்டம், சூனியம் செய்வதற்கு காலடி மண் எடுப்பது, தலை முடி
எடுப்பது, உடுப்பை எடுப்பது என்று எமது புலம் பெயர் தமிழர்கள் தமது சித்து
விளையாட்டை விட்டு வைக்கவில்லை. வாழ்வின் பல உழைச்சல்களோடு வாழப்வர்களுக்கு
காண்டமும் சாத்திரமும் தான் ஆறுதல்.
டொலரில், பவுண்ஸ்ஸில், ஈரோவில் என்று பணம் கறப்பதற்காக இலங்கை இந்தியாவில்
இருந்து வரும் சாத்திரிமார்கள் பல தந்திரங்களை கையாள பாவம் மக்கள்
அவர்களுக்கு பின்னால் திரிவது தவிர்க்க முடியாததாகிறது. ஏதாவது ஒரு பலன்
கிடைக்குமோ என்ற நம்பாசைதான்.
அழகான பெண்ணை வசியப்படுத்த காலடிமண், தலைமுடி, என்று கொண்டு பொய்
சாத்திரியிடம் கொடுத்த ஒரு பையனைத் தெரியும். சாத்திரி அதனை வாங்கிக்
கொண்டு இலங்கைக்கு வந்து விட்டார். இங்கிருந்து வெள்ளைத்தூள் ஒன்றை தபாலில்
அனுப்பிவைத்தார். அந்தப் பிள்ளை வேறொருவருடன் திருமணமாகி சென்றுவிட்டது.
மண் எடுத்து கொடுத்தவர் இன்னொருவரிடம் சென்று கேட்டார் ஏன் பலிக்கவில்லை.
அவர் சொன்னார் கடல் கடந்து வரும் போது பலிக்காது.
எனக்குத் தெரிந்த ஒருவர் வேப்பங்குழை தேடி அலைந்தார். விசாரித்த போது அவரது
மனைவிக்கு பேய் பிடித்து விட்டதாகவும் அதனை விரட்ட குழை தேவையென்றும்
சொன்னார்.
மார்கழிமாதம் லண்டனில் பனி கொட்டோகொட்டென்று கொட்டுகிறது. வேம்பை கண்ணால்
காணவே கிடையாது. அப்படி இருந்தாலும் இந்தப் பனிக்கு இலை எல்லாம்
உதிர்ந்திருக்கும். எங்கே போவது என்று கலங்கித்தான் போனார். அவர் வேறு
ஏதாவதை பாவித்து பேய் விரட்ட முடியுமா என்று பூசாரிடம் கேட்கச் சொன்னேன்.
பூசாரியை இலங்கையில் இருந்து ஸ்போன்ஸர் செய்து அழைத்திருந்தார். நான்
சொன்னேன் ஒரு வழிதான் இருக்கிறது வேப்பங் குழையையும் மெயிலில்
அழைப்பிக்கலாம் தானே. வேறு வழி தெரியவில்லை எனக்கு.
|
|