|
|
பாம்புக் காட்டில் ஒரு தாழை
இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த லதா 1982ஆம் ஆண்டு குடும்பத்துடன்
சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர்
தமிழ்முரசு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் 'தீவெளி'
(கவிதைகள் 2003), 'பாம்புக் காட்டில் ஒரு தாழை' (கவிதைகள் 2004) என்ற இரு
கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவரது சிறுகதை தொகுதிக்கு (நான் கொலை
செய்யும் பெண்கள்) 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது
வழங்கப்பட்டு பத்தாயிரம் சிங்கப்பூர் டாலரைப் பெற்றுத் தந்தது. லதாவின்
கவிதைகள் மற்றும் சிறுகதைகள் கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், வல்லினம்,
குங்குமம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது தீவெளி நூல் தமிழ்நாடு
பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத்திட்டத்தில்
சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனதின் மிக ஆழத்தில் ஒளிந்துள்ள உணர்வுகளைத் தயங்கி தயங்கி
கூறுபவை லதாவின் கவிதைகள். அவரின் 'பாம்புக் காட்டில் ஒரு தாழை' எனும்
கவிதை தொகுதியில் 'மூலை' என்ற கவிதையை வாசித்த அனுபவம்
வித்தியாசமானது.
இதோ
இந்த மூலையில்தான்
உலகம் தொடங்குகிறது.
இந்த பேரண்டத்தின் ஏதோ ஒரு சிறிய மூலையில் இருந்துதான் இன்று நம் கண்முன்
நடமாடித் திரியும் இந்த உலகத்தின் இயக்கம் தோன்றியது. உயிர்களின் தோற்றம்
மெல்ல மெல்ல உருபெற்று, பல்கி பெருகி இன்றும் பெயர் கண்டுபிடிக்கப்படாத
எண்ணற்ற உயிரிகளோடு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இயங்கிக்
கொண்டிருக்கும் இந்த இயக்கத்தில் நாம் ஏதோ மூலையில் இறப்பு வரும் வரை
நிறுத்த முடியாத இயக்கத்தில் இயங்கியபடி இருக்கிறோம்.
நாம் வாழும் இந்த உலகில் ஒரு சிறிய இடம் மட்டுமே நமக்கானதாக இருக்கிறது.
நமது வீடு என்ற பெயரில் நாம் வாழ்கின்ற வரை அந்த சிறிய இடத்திற்குச்
சொந்தமானவராக நாம் இருக்கின்றோம். ஒரு வீட்டில் நாம் வசிக்க நேர்ந்தாலும்
அந்த வீட்டின் ஒட்டுமொத்த இடமும் நம்மை ஈர்ப்பதில்லை. நாம் வாழ்கின்ற
வீட்டின் ஏதோ ஒரு சிறிய மூலை நம்மை ஈர்த்தப்படி, நம்மை அணைத்தபடி இருப்பதை
நம் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கலாம்.
உலகின் அத்தனை சந்தோசங்களையும்
இந்த மூலை சுகித்திருக்கிறது
சோகங்களைச் சுமப்பதுபோல்.
நம் அனைத்து உணர்வு சார்ந்த வெளிப்பாடுகளும் அந்த வீட்டின் மூலையோடு
இணைந்திருப்பதை மிக மெதுவாக இந்த வரிகளைப் படிக்குப்போது நீங்கள் உணரலாம்.
உங்களுக்குச் சொந்தமாயிருந்த அல்லது சொந்தமாயிருக்கும் மூலை குறித்து
நீங்கள் யோசிக்கத் தொடங்கலாம். குழந்தைகளிடம் இந்த மூலை குறித்த
இணைப்பினை மிக அதிகமாக நான் கண்டிருக்கிறேன்.
என் அண்ணன் மகள் ஒருவள் இருக்கிறாள். மூன்று வயதிருக்கும். வீட்டின் அதிகம்
பயன்படுத்தாத பொருள்கள் வைக்கும் அறையின் கதவின் பின்பகுதி மூலை
அவளுக்குறியது. அவள் கேட்டதை தராவிட்டாலோ, ஏதாவது காரணம் கொண்டு நீங்கள்
அவளை ஏசினாலோ கதவினை வேகமாக மூடிவிட்டு அந்த பின்பக்க மூலையில் அவள்
ஒதுங்குவது தெரியும். மெல்ல கேட்கும் அவளின் விசும்பல் ஒலியில் அவளின்
சோகத்தினை அந்த மூலையோடு பகிர்ந்து கொண்டிருப்பது தெரியும்.
அழுகையும் ஆத்திரமும்
காதலும் கனிவும்
குழைத்துக் குழைத்துச்
சமைத்திருக்கும் இந்தச் சின்ன மூலை
மழையில் கதகதப்பாய்
வெயிலில் நிழலாய்
பயந்த வேலையில் பதுங்கு குழியாய்
வீறு கொண்டால் யுத்த பூமியாய்த்
தேவைக் கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும்.
நமது சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் உள்வாங்கி சோக நேரங்களில் ஆறுதலைத்
தரும் ஒன்றாகவும் மகிழ்ச்சியான தருணங்களில் உடனிருந்து மகிழும் ஒன்றாகவும்
இந்த மூலை மாறிப்போயிருக்கும். நமது கண்ணீர் பல நேரங்களில் அங்கு
சிந்தப்பட்டு அதிகம் வெளிப்படாத அந்த மூலையில் மிதந்தபடியிருக்கும். சில
நேரங்களில் மனிதர்களிடம் கிடைக்காத ஆறுதல் இந்த சின்ன மூலையில்
உங்களுக்குக் கிடைத்துவிடும். ஊர்தோரும் சுற்றித் திரிந்தாலும் வீடு
திரும்பி அந்த மூலையில் அமரும் போது அன்றைய பொழுதின் ஒட்டுமொத்த
களைப்பிற்கும் ஓய்வு கிடைத்தமாதிரி மனம் அமைதியில் ஆழ்ந்திருக்கும்.
காற்றும் ஒளியும் மட்டும் இங்கு ஏனோ
தாராளமாய் புழங்குவதில்லை
எப்போதும்
ஆகச் சிறிய ஜன்னல்கள் மட்டுமே உள்ள
இங்குதான்
உலக வாசல் திறக்கிறது.
விலையுயர்ந்த மரச்சாமான்கள், இருக்கைகள், காற்றைத் தந்தபடியிருக்கும்
மின்விசிறிகள் பெரும்பாலும் நமது இந்த சின்ன மூலையில் இருப்பதில்லை.
பெரும்பாலும் இரவா பகலா என அறிய முடியா மெல்லியதொரு வெளிச்சத்தில், ஆக
குறைந்த காற்றோட்டத்தில், கண்ணுக்குச் சட்டென புலப்படாததொரு இடத்தில்
இந்த மூலை அமைந்திருக்கும். நமக்கான இந்த மூலையில் வேறொன்றையும் புதிதாக
உருவாக்கி வைக்க நாம் பெரும்பாலும் விரும்புவதில்லை. தனது சுயம் இழக்காமல்,
எப்போதும் போல் எந்தவொரு மாற்றங்களும் இன்றி அந்த மூலை நம்மை
உள்வாங்கியபடி இருக்கும்.
வீட்டின் கடைக்கோடியில்
கண்படாத தூரத்தில்
ஒதுக்கப்பட்ட இடமாய்
ஒதுங்கி நிற்கும்
இந்த அக்கினி மூலையில்தான்
பிரளயம் குமிழியாய்க் கொப்பளிக்கும்
பொங்கிப் பிரவாகிக்கும்
ஆழிகள் சீறி உலகை அமிழ்த்தும்
வீட்டின் பெரும்பகுதியில் பரந்து விரிந்திருக்கும் அனைத்து
பகுதிகளிலிருந்து எப்போதும் அந்த மூலை தனித்தபடிதான் இருக்கும்.
பெரும்பாலும் நமக்கான ரகசிய இடமாக பிறரிடமிருந்து தன்னை மறைத்தபடி, அதனுள்
போய் அமரும் நம்மையும் மறைத்தபடி இருக்கும். அந்த மூலையின் இருப்பு
குறித்து பெரும்பாலும் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் நம்மை
மீட்டெடுத்துச் செல்லும் பணியில் அந்த சின்ன மூலையின் பங்கு மிக
முக்கியமானது. தன்னை நம்மிடம் திணிக்காமல் நம்மை உள்வாங்கி, மிக மிக
மெதுவாக நாமே ஆறுதல் கொள்ளும் நிலையினை அந்த மூலை நமக்கு ஏற்படுத்தியபடி
இருக்கிறது.
ஓரணு உயிரி
மெல்ல உயிர்த்து வரும்
இதுபோல் கவிதை எழுதி கிழிக்க...
பல வேலைகளில் நிறைய கவிஞர்களுக்கு இப்படியான ஏதாவதொரு மூலையில்தான்
வீரியமான கவிதைகள் பிறக்கின்றன...
|
|