|
|
அலை அறியா கடற்கரையில்
எண்ணங்களின் வலிமையில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்ட தருணங்களில் ஒன்று
சண்டகானில் (Sandakan, Sabah) பணியாற்றியபோது வாய்த்தது. அப்போதெல்லாம்
வரைப்படத்தில் பார்த்ததைத் தவிர சபா/சரவாக் பற்றி பெரிதாக ஒன்றும்
தெரியாது. அதற்கான அவசியமும் இல்லை.
1989 - 1994 வரை அங்கிருந்த காலகட்டத்தில் பெரும்பகுதியை வாசிப்பதில்
கழித்தேன். தீவிர இலக்கியத்தில் (தீவிரம், இலக்கியத்திலா அல்லது வாசகனின்
சிந்தனையிலா?) பிடிப்பு ஏற்பட்டதும் இங்குதான். முதல் இரு வருடங்கள்
தனிமையில் கரைந்தன.
ஆயினும், அங்கு கடற்கரையோரம் கம்பீரமாக நீலம் போர்த்தி நிற்கும் நூலகம்
என்னை முழுவதுமாக கவர்ந்தது. தினமும் குறைந்தது நான்கு மணி நேரம் அங்கு
இருந்தேன். இந்தக் காலகட்டத்தில் பெரிதும் ஈர்த்தவை ஆன்மீகம் சார்ந்த
புத்தகங்களே. மாயங்கள், அதீத, புதிர்மிக்க, மர்மமுடிச்சுகள் நிறைந்த
ஆக்கங்கள் மனதுக்கு மிகவும் இதமானவையாக இன்னமும் இருக்கின்றன. (Dan
Brawn-ன் எல்லா நாவல்களையும் (Suspense Thrillers), அவற்றின் புதிர்
நிறைந்த கதையமைப்புக்காகவே படித்திருக்கிறேன்.) அந்த நூலகத்தின் ஆன்மீக
அடுக்குகளில் நான் விரும்பிய வகைப் புத்தகங்கள் நிறையவே இருந்தன.
ஆன்மீகம் எனும்போது, என் வாசிப்பு எந்த முன்முடிவுகளோ, தத்துவக் கோட்பாட்டு
ரீதியிலோ இல்லாமல், கிடைத்ததையெல்லாம் வாசித்தேன். நான் வாசித்தவை /
வாசிப்பவை என்னை மகிழ்ச்சியுறச் செய்யவேண்டும் என்ற அடிப்படை விதியைக்கூட
நிர்ணயத்துக்கொள்ளவில்லை. எடுக்கும் புத்தகம் என் ரசனைக்குரிய கருவை
மையமிட்டிருக்க வேண்டும்... அவ்வளவுதான். (இன்றைக்கும் இந்த நிலையில் பெரிய
மாற்றம் ஒன்றும் இல்லை! ஆனால், எந்த உரையாடலிலும் ஈடுபாட்டோடு பங்கேற்க
முடிகிறது; வாசிக்கும் பிரதிகளின் உள்ளீட்டை, அவற்றின் மொத்த
பரிமாணத்தோடும்? புரிந்துகொள்ள இயலுகிறது; ஒரு திருப்தியான வாசிப்பனுபவம்
கிடைத்த நிறைவு நிச்சயம் உண்டு.)
இது சரியான வாசிப்பு முறையா என்பது பற்றி நான் பெரிதாக
அலட்டிக்கொள்ளவில்லை. பல்கலைக்கழக பாடத்தின் வழி கோட்பாடுகளைப்பற்றிய
அடிப்படையான சில தகவல்கள் தெரிந்திருந்தாலும், அவற்றை வாசிப்பில்
பொருத்திப் பார்க்க முயலவில்லை; அந்தச் சிரத்தையோ, தேவையோ இல்லாமல்
இருந்தது. தகவல்களைத் தொகுத்தெழுதும் (அதுவும், நீங்கள் அனுப்பும்
கட்டுரையின் பருமன்தான் தரநிர்ணய அளவுகோள் என்கிறபோது...) பணியே
பிரதானமானதாகிவிட்டதால், விமர்சனப் பார்வையோ, ஆய்வியல் நோக்கோ
முக்கியத்துவம் பெறவில்லை. பொதுவுடமைத் தத்துவம், பின் நவீனத்துவம்,
அமைப்பியல், பின் காலனித்துவம் போன்ற பதங்கள் மிக மேலோட்டமாகவே
அணுகப்பட்டன. தமிழ்த் துறையில் கோட்பாட்டு ரீதியாக ஆய்வு
முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறலாம். (இப்போதும் இளங்கலை/முதுகலை
படிப்புகளில் இந்நிலையில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. மலேசிய
அறிவியல் பல்கலக்கழகத்தில் (USM), கோட்பாட்டு அடிப்படையில் (theoritical
foundation) அமையாத முதுகலை ஆய்வுகள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன)
வாசிப்பில் கொண்டிருந்த தீராக்காதலால் கிடைத்ததையெல்லாம் வாசித்தேன்.
ஆயினும், மரபிலக்கியங்களின்பால் மனம் போகவே இல்லை. டாக்டர் இரா.தண்டாயுதம்,
டாக்டர் ந. செயராமன் ஆகிய ஆற்றல்மிக்க விரிவுரையாளர்கள் போதித்தும் மனம்
லயிக்கவில்லை. (அதனால்தானோ என்னவோ, `மரபு எனும் பின்பாரம்` எனக்கூறி
நவீனத்தை முன்னெடுத்த சுந்தர ராமசாமி எனக்குப் பிடித்துப் போனார்.)
சு.ராவின் ஜே.ஜே. சில குறிப்புகள் படிக்கக் கிடைத்த 1987-ம் ஆண்டு என்
வாசிப்புத் தளத்தையும், போக்கையும் பெரிதும் கட்டமைத்தது. பொத்திப் பொத்தி
வாசித்தேன்; திரும்பத் திரும்ப வாசித்தேன். கொஞ்சம் வாசிப்பேன்... என்னமா
எழுதியிருக்கான்... என்று வியந்துபோவேன். ஜெயகாந்தனின் நீள நீளமான
விவாதங்களில் இருந்த நாட்டம் குறைந்து, கட்டு செட்டான நடையில், ஒரு வகையான
நையாண்டி கலந்த மொழியில், மிகக் கவனமுடம் கையாளப்பட்ட வாக்கிய அமைப்பில்,
ஜே.ஜே என்னை மிகவும் கவர்ந்தது. (புதுமைப்பித்தனை வாசித்த அனுபவம்
இருந்ததால், சு.ரா பு.பித்தனின் நடையில் ஈர்க்கப்பட்டிருக்கிறார் என
எண்ணினேன்). அதன் பிறகு மூளைக்கு வேலை கொடுக்கும் புத்தகமாகத்
தேடத்தொடங்கினேன். ஒரு சமயம், `மாயமான் வேட்டை` நாவலைப் படித்துவிட்டு
நண்பர் நாகராஜனுடன் சுவாரஸ்யமாக உரையாடியது இன்னும் பசுமையாக உள்ளது.
(அவர்தான் இப்போது சிங்கப்பூரில் இருந்து எழுதும் இந்திரஜித் என
கேள்விப்படுகிறேன்). பிறகுதான் என்னைப் `பொட்டி கட்டி` சபாவிற்கு, தனிமைச்
சிறைக்கு, அனுப்பினார்கள்.
நான் போன `பாக்கியம்`, சண்டகானில் சிறிய, அழகிய விநாயகர் ஆலயம்
கட்டப்பட்டது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று இது
மாதிரியான ஓர் ஊரைப் பார்த்துவிட்டுதான் சொல்லியிருக்க வேண்டும். குடியும்,
கும்மாளமும் கைகோர்த்த ஓர் அற்புதம் அது. நான் இருந்த வீட்டிலிருந்து
பள்ளிச் செல்லும் இடைவெளியிலேயே மூன்று மதுபான விடுதிகளும், இரண்டே இரண்டு
விபச்சார விடுதிகளும் இருந்தன. (வீட்டுக்கும், பள்ளிக்குமான தூரம் சரியாக
1.2 கி.மீ! சண்டகானில், அப்போது எனக்குக் கிடைத்த நம்பத்தகுந்த தகவலின்
அடிப்படையில், 37 பப் வகையறாக்களும், 12 `பலான` விடுதிகளும் இருந்தன.
இன்றைய நிலவரம் தெரியவில்லை!)
விநாயகர் கோவிலில்தான் நண்பர் நக்கீரனை முதன் முதலில் சந்தித்தேன்.
அதுவரை அங்கு எனக்கிருந்த நண்பர்கள் யாரும் தமிழ்க் கல்வி கற்றவர்கள் அல்ல;
இலக்கியம் சார்ந்த உரையாடலுக்கு வாய்ப்பே இல்லை. நான் போதிப்பதோ மலாய்
மொழி. ஆக, பள்ளியிலும் அதற்கான சூழல் கிடையாது. எனக்கோ நான் படித்ததை
யாருடனாவது பகிர்ந்து, அப்படியே கொஞ்சம் இலக்கிய கலைச்சொற்களை எடுத்தாண்டு
பிரம்மிப்பூட்டி மகிழ்வுற ஆவல். கிடைத்தார் நக்கீரன். கோவிலில்
சந்தித்தபோது கொஞ்சம் தெனாவெட்டான ஆள் மாதிரிதான் தெரிந்தார். ஆனால்
அவருடன் பழகிய அந்த மூன்று வருடங்கள் மிகவும் இனிமையானவை. இலக்கியம் பேச
ஆளின்றித் திரிந்த எனக்கு, வேலை வெட்டி பற்றியெல்லாம் கவலையற்று பட்டிணத்தை
வலம் வந்த நக்கீரனுடனான நட்பு மிக இயல்பாக அமைந்தது. (17 வயதிலேயே தமிழ்
நாட்டைவிட்டு திரைக்கடலோடி திரவியம் தேடி சண்டகான் வந்தவர் இவர்!)
என்னை வேறு மூளைச் சலவைச் செய்து கோயில் செயற்குழு உறுப்பினராக நியமித்து
விட்டார்கள். அதுவரை காலாற சுற்றிய நான், கடமையைச் செவ்வனேச் செய்ய புதிய
மோட்டார் ஒன்று வாங்கினேன். அன்று ஆரம்பித்தது எங்கள் நோக்கமில்லாப்
பயணங்கள். ஒவ்வொரு சனியன்றும் காலையில் கிளம்பி எங்காவது போவது...
சமயங்களில் நூறு கி.மீ வரைப் போய்... ஒரு பாக்கெட் கடலையை கொறித்தவாறு பல
எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுவோம். தஞ்சைப் பிரகாஷ் முதல் தகழி சிவசங்கரன்
வரை. எ.சாமாட் சைட் முதல் அன்வார் ரிட்சுவான் வரை. மலாய் இலக்கியத்தில்
படித்ததையெல்லாம் மொழிபெயர்த்து சொல்லி எனது `தெறமய` காட்டவேண்டியிருந்தது.
அவருக்கோ தீராப்பசி.
எங்கள் பயணங்களில் அதிகமும் நாங்கள் நாடியது பண்டார் ராமாய்-ராமாய் (Bandar
Ramai-Ramai) என்ற அமைதியே உருவாக, கொஞ்சங்கூட அசையாமல், அலைகளை
நிராகரித்த, கடற்கரையைத்தான். அதற்கு நக்கீரன் வைத்த காரணப் பெயர்தான்
`செத்த கடல்`!
|
|