|
|
நோம் சோம்சுக்கி
2002 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைத்தேன். எனது
தேர்வு மொழி மொழியியல் துறை. விரிவுரையாளர் எனக்கு அறிமுகம் செய்து வைத்த
பெயர்களில் ஒன்று நோம் சோம்சுக்கி (Noam Chomski). 'யார் அந்த நோம்
சோம்சுக்சி?' என்பதுதான் அன்றைக்கான எனது வீட்டுப்பாடம். தகவல்களைச்
சேமிக்க ஆரம்பித்தேன்.
மொழி வரலாற்று பட்டியலில் இடம் பெறும் பெயர்களில் இவர் முக்கியமானவர். 1928
ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை உக்ரேன்
நாட்டில் குடியேறிய ஈபுறு மொழி அறிஞர். தாயார் யூதர் இனத்தைச் சேர்ந்தவர்.
மொழியியல் துறையைப் பற்றி 1945-ல் பிலடெல்வியா பல்கலைக்கழகத்தில் பயிலத்
தொடங்கினார். சொற்றொடரியல் அமைப்புகள் (syntactic structures) என்ற
தலைப்பில் ஆய்வு செய்து புத்தகமாக தொகுத்தார். 40 வருடங்களுக்கு முன்பு
தோன்றிய மொழிக் கோட்பாடுகளைக் குறிக்கும் வகையில் இப்புத்தகம்
அமைந்துள்ளது. இது இன்றளவும் பரவலாக மொழியியலில் பேசப்படும் புத்தகமாகும்.
இவர் தோற்றவாய் இலக்கணத்தை (Generative Grammar) மொழியியல் துறைக்கு
அறிமுகம் செய்து வைத்தார். அவர் கருத்தின் படி, தோற்றுவாய் என்றால்
உற்பத்தி என்று பொருள். மனிதனின் மூளை அளவு அளக்கப்பட்டிருந்தாலும் அதன்
உள்ளடக்கம் அளக்கப்பட்டதில்லை. ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் எத்தனை
வார்த்தைகள் குடிக்கொண்டிருகிறது என்ற பிரக்ஞை இல்லாமலே ஒவ்வொரு நாளும்
வார்த்தைகளை உபயோகித்தும் அதனை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறான்.
ஆரம்பக் காலக்கட்டத்தில் நோம் சோம்சுக்கியின் கருத்துகள் பல மொழி
அறிஞர்களால் எதிர்க்கப்பட்டிருந்தாலும் அவை நாளடைவில் பொதுவில் ஏற்றுக்
கொள்ளப்பட்டன. மூளையில் சொற்கள் வரிசையாக அடுக்கப்படுவதில்லை. மாறாக, அவை
நாளுக்கு நாள் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டு தன் கருத்துகளை வெளியீடு
செய்ய உதவுகிறது. ஒருவர் பேசும் மொழியை மட்டும் வைத்து தகவல் சேகரித்து
பகுப்பாய்வு செய்வதில் இவர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. மேலும்,
திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு இலக்கண விகுதிகளைத் திணித்துக்
காட்டுபவர்களைக் கடுமையாக எதிர்த்தார்.
இதற்கு காரணம், மொழி வரையறையற்றது. கட்டமைக்கப்பட்டதொன்றல்ல. அதன் கிளைகள்
பரந்து விரிந்து கொண்டே போகும். இலக்கண விதிகளை கொண்டு ஒரு மொழியை சரியாக
கற்றுக் கொள்ள முடியும் , ஆனால் இலக்கண விதியில் மொழியை அடக்க முடியாது.
காரணம், வெவ்வேறான மொழிகள் வெவ்வேறான இலக்கண விதிகள் கொண்டிருந்தாலும் அது
வெளிப்படுத்த நினைக்கும் கருத்து ஒன்றுதான். அல்லது அது ஒரே மொழியில் கூட
நடக்கலாம். அதாவது
நேற்று நான் சோறு சாப்பிட்டேன்.
நான் நேற்று சோறு சாப்பிட்டேன்.
சோறு நான் சாப்பிட்டேன், நேற்று.
சோறு சாப்பிட்டேன், நான் நேற்று.
சோறு சாப்பிட்டேன், நேற்று நான்.
மேற்காணும் வாக்கியங்கள் இலக்கண மரபுகளைப் பின்பற்றியும் பின்பற்றாமலும்
காணப்படுகின்றன. இருப்பினும் அதன் உள்ளடக்கம், பொருள் அல்லது கருத்து
ஒன்றே. அதனோடு இலக்கண மரபுகளைப் பின்பற்றாமல் இருக்கும் வாக்கியங்களுக்கு
புதிய மரபுகளை ஏற்படுத்தலாம் என்பதே நோம் சோம்சுக்கியின் கூற்று.
குழந்தைகள் முதலில் மொழியைக் இலக்கணம் தெரியாமல்தான் கற்றுக்கொள்கின்றனர்.
ஒவ்வொரு குழந்தையும் மதத்தால் மொழியால் ஒற்றுமைக் கொண்டிருந்தாலும் தன்
கருத்தை வெளிப்படுத்த வெவ்வேறான உத்திகளைக் கையாளுக்கின்றனர். நோம்
சோம்சுக்கி இதை வழுவாக உறுதிப்படுத்தினார்.
வார்த்தைகள் சேருகையில் சொற்றொடர் பிறக்கின்றன. பிறகு சொற்றோடர்கள்
வாக்கியமாகிறது. பேசுகின்றவர்களின் வாக்கியங்கள் சுருக்கமாகவோ அல்லது
நீண்டோ காணப்படலாம். இவ்வகையான மொழிகளில் இலக்கணம் காண முடியாது.
இலக்கணத்தில் சேர்க்கப்படாத அல்லது கண்டுப்பிடிக்காத கூறுகள் இதில் அடங்கி
இருக்கலாம். அந்த அடிப்படையில் நோம் சோம்சுக்கியின் ஆய்வு தொடர்ந்தது.
அவரின் ஆய்வின் காரணமாய் விளைந்ததுதான் 'தோற்றுவாய் இலக்கண கோட்பாடு'.
|
|