|
|
குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே மற்றும்
ஜி. நாகராஜனின் ஆணாதிக்கம்!

எனது பதினேழாவது வயதில் புத்தகக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது
சம்பந்தமே இல்லாமல் ஒரு தடித்த புத்தகத்தினுள்ளிருந்து வந்து விழுந்தது
'குறத்தி முடுக்கு'. அப்போது அப்புத்தகத்தின் பெயர் குறத்தி முடுக்கு என்று
தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அதன் அட்டை இரண்டாகக் கிழிந்து 'குறத்தி
மு' என இருந்தது. முகப்பின் ஒரு பக்கம் பின் திரும்பியிருக்கும் ஓர் ஆணின்
வரையப்பட்ட படம் மட்டும் தெரிந்தது. எழுத்தாளர் பெயர் இல்லை. கிழிபட்ட
பகுதியில் தொலைந்திருக்கலாம். அப்புத்தகத்தை பொறுமையாக அமர்ந்து திறந்து
பார்க்க இந்த அம்சங்கள் போதுமானதாக இருந்தன.
ஜி. நாகராஜன் என்ற பெயரை அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை.
அப்புத்தகத்தில் 'ஒதுக்கப்பட்டவர்களை முத்தமிட்டவர்' எனும் தலைப்பில்
சுரேஷ்குமார் இந்திரஜித் ஒரு நீண்ட அறிமுக உரையில் ஜி. நாகராஜனைப் பற்றி
கூறியிருந்தார். அதில் 'நாளை மற்றுமொரு நாளே' எனும் நாவல் பற்றி ஆங்காங்கு
பேசியிருந்தார். சமூக மதிப்பீடுகள் பற்றி அவர் எழுதியிருந்தது அந்நாவலைப்
படிக்க எனக்கு தடையாக இருந்தது. ஒதுக்கப்பட்டவர், சமூக மதிப்பீடுகள் என்ற
வார்த்தைகளில் ஏற்பட்ட குழப்பம் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதில்
திரும்ப திரும்ப வந்த 'விபச்சாரிகள்' என்ற வார்த்தை அந்நாவலைப் படிக்க
உள்ளூர தூண்டிக்கொண்டே இருந்தது. படிக்கத்தொடங்கிய போது அது நாவல் என்பது
தெரிந்ததும் மேலும் ஒரு அதிர்ச்சி. அவ்வளவு சிறிய நாவலை நான் அதுவரையில்
வாசித்ததில்லை.
சுமார் இரண்டு மணி நேரத்திலெல்லாம் அந்நாவலை படித்து முடித்தபோது பெரும்
அதிர்ச்சி. நான் நினைத்தது போல எவ்வகையான உணர்ச்சியூட்டும் சம்பவங்களும்
அதில் இல்லை. இருபகுதிகளாகப் பிரிந்து சென்றது நாவல். ஒரு பகுதியில்
பத்திரிகை நிருபருக்கும் பாலியல் தொழிலாளியான தங்கத்திற்கும் உள்ள உறவு
பற்றியும் மற்றொரு பகுதியில் பொதுவாக நிகழும் பாலியல் தொழிலாளிகளின்
சிக்கல்கள் பற்றியும் பேசியது நாவல்.
படிக்கும் காலத்தில் பாலியல் தொழிலாளிகள் மீது எனக்கு இனம் தெரியாத
ஆச்சரியங்கள் இருந்தன. நான் இருந்த ஊரிலும் அப்படி ஒரு பெண் இருக்கிறார் என
நண்பன் சொல்ல மறைவில் அமர்ந்திருந்து அவர் வீட்டையே
பார்த்துக்கொண்டிருப்போம். பெரும்பாலும் வீடு மூடியே கிடக்கும். எப்போதாவது
புதிய முகங்கள் அவ்விடத்தில் நடமாடுவதைப் பார்த்திருக்கிறோம். மோட்டாரின்
எண்ணை வைத்து புதியவர்கள் என கணிப்போமே தவிர முகத்தைப் பார்த்ததில்லை.
வருபவர்கள் பெரும்பாலும் முகத்தை முழுமையாக மூடும் தலை கவசத்தை அணிந்தபடி
வீட்டின் உள்ளே நுழைவார்கள். வீட்டின் கதவை திறக்கும் போதும் மூடும் போதும்
மட்டும் அதில் உள்ள பெண்மணியைப் பார்ப்போம். இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாத
புதிய ஜீவராசியைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஒரு வகையான பதற்ற
உணர்வு எங்கள் இருவருக்குமே ஏற்படும். இதுவரை நாங்கள்
நம்பிக்கொண்டிருக்கும் எதையோ அப்பெண் முழுமுற்றாக மறுப்பதால் ஏற்படும்
பதற்றமாக அது இருக்கலாம். கதவு அடைக்கப்பட்டதும் நண்பன் அதற்கு பின்பு என்ன
நடக்கும் என கற்பனையில் விவரிக்கத் தொடங்குவான். எத்தனை முறை அவ்வாறு
தொலைவிலிருந்து பார்த்து கற்பனையில் கழித்தாலும் சுவாரசியம் அடங்குவதில்லை.
காமத்திற்கு நிஜத்தைவிட கற்பனையே சக்தி கொடுப்பதாய் இருந்தது.
பின்னாளில் அதே நண்பனுடன் பினாங்கில் உள்ள பாலியல் தொழிலாளர்களின்
தெருக்களில் நானும் தலைகவசத்துடன் சுற்றியதுண்டு. அவர்களை நெருங்கிச் செல்ல
துணிவு வந்ததே இல்லை. அவர்களின் பார்வையில் உள்ள அலட்சியமும் உதட்டோரம்
இருக்கும் மெல்லிய புன்னகையும் ஒருசேர தயக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள்
மனிதர்களை அளக்கும் விசித்திரமான கண்களைக் கொண்டிருந்தனர். யார்
வெறுங்கையுடன் வேடிக்கைப் பார்க்க வருகிறார்கள்; யார் வாடிக்கையாளன் என
அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். பினாங்கு போக மூன்று ரிங்கிட்
திரும்ப மூன்று ரிங்கிட் இடையில் உணவுக்கு நான்கு என மொத்தமே 10 ரிங்கிட்
வைத்திருந்த எங்களை அவர்கள் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. ஆனாலும்
மூக்கைத் துளைக்கும் மலிவான வாசனை திரவியங்களை உடல் முழுதும் பூசியிருந்த
அவர்களை நெருக்கத்தில் பார்ப்பது மிகுந்த பரவசம் தரக்கூடியதாக இருந்தது.
ஜி. நாகராஜன் காட்டும் பாலியல் தொழிலாளர்களின் உலகம் அத்தகைய வாசனை
திரவியங்கள் ரொப்பியதாக இருக்கவில்லை. பாலியல் தொழிலாளர்களை சகஜமான ஒரு
உலகில் உலவ விடுகிறார் நாகராஜன். மரகதம், செல்லம், செண்பகம், தேவையானை,
மீனாட்சி என நாவலில் வரும் பெண்கள் தங்களுக்கே உரிய வாழ்வின்
சிக்கல்களுடனும் காதலுடனும் காமத்துடனும் உலாவுகிறார்கள்.
'குறத்தி முடுக்கில்' வரும் பாலியல் தொழிலாளிகள் அதீதமான காதலை
வெளிப்படுத்துபவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நாவலின்
தொடக்கத்திலேயே வரும் மரகதம் தன்னை தொடர்ந்து ஏமாற்றும்; பணம் பிடுங்கும்
ஒருவனை மிக ஈடுபாட்டோடு காதலிக்கிறாள். அவன் மரகதத்திடம் பணம் கேட்கிறான்.
அவள் தன்னிடம் பணம் இல்லாத நிலையை விளக்கி ஏமாற்றம் அடைந்தவனை 'கோவப்படாதே
ராசா... ஆறு ஆறரைக்கு வா' என்று அவனை மார்பில் வைத்து அணைத்துக்கொள்கிறாள்.
அவள் கண்களில் நீர் ததும்புகிறது. காதலனோ தனது இரு கைகளையும் அவளது
இடுப்பில் போட்டு, எதுவும் காசு கிடைக்குமா என்று துளாவுகிறான். வேறு
வழியில்லாமல் அவளும் சினிமாவுக்குப் போகப் போவதாக தனது பாதுகாவலரிடம்
(அத்தான்) பொய் சொல்லி பணம் பிடுங்கி அவனுக்குத் தரவும் செய்கிறாள்.
அவளிடம் பணம் பெற்றுக்கொண்டு இளைஞன் ஓட எத்தனிக்கிறான். அவள் அவனை அணைத்து
முத்தமிடுகிறாள். இளைஞன் ஒருவாறாக விடுதலை அடைந்து வெளியே ஓடி மறைகிறான்.
பொதுவாகவே தன் மீது கவனத்தை எதிர்ப்பார்க்கும் மனம் இவ்வாறுதான்
செயல்படுகிறது. தனது அன்பை அழுத்தமாக நிரூபிப்பதின் மூலமாக தன்
மீதிருக்கும் கவனம் திசை மாறாமல் இருப்பதை திரும்ப திரும்ப
உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதற்காக எவ்வகையான சமரசங்களையும் செய்ய
மனம் தயாராகிறது. தன்னை கவனிப்பவன் சலிப்படையாமல் இருக்க புதிது புதிதாக
ஏதாவது ஒரு சாகசத்தைச் செய்ய எத்தனிக்கிறது. அதற்கு அன்பென்றும்
தியாகமென்றும் நாகரீகமான பெயரை இடுகிறது. இந்த மனோ நிலை பாலியல்
தொழிலாளிகளுக்கு மட்டுமானதல்ல. எனது இந்த குறுகிய கால வாழ்நாளிலேயே மிக
அதிகமாக நான் சந்தித்தது இத்தகைய மனிதர்களைதான். அவர்கள் முதலில்
தங்களுக்கான ஒரு சோக கதையுடன் முன் வந்து நிற்கிறார்கள். சோகம் எளிதில்
ஈர்க்க வல்லதென அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். பின்னர் அன்புக்கு
ஏங்குகிறார்கள். பரிசுகள் வாங்கி கொடுக்கிறார்கள். எந்த எதிர்வினையும் வராத
பட்சத்தில் கோபம் அடைகிறார்கள். கோபம் அடைந்ததற்காக மேலும் அதிக அன்பு
செலுத்துகிறார்கள். தன்மீதும் விழும் பார்வையை எதிர்ப்பார்த்துக் கொண்டே
இருக்கிறார்கள்.
உண்மையில் இது மனிதனின் மிக சிக்கலான உணர்வு. அன்பென்றும் காதலென்றும்
அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்று எத்தகைய புனிதமானது இல்லை என
விளங்கவைப்பதோ அல்லது இவ்வுணர்வுக்கு அன்பென்பதும் காதலென்பதும் பொருந்தாத
பெயர்கள் என புரியவைப்பதோ மிக கடினமானது. ஏறக்குறைய இதை உணர்ந்த ஒரு
கதாபாத்திரமாகத்தான் நாவலின் மையமாக வரும் பத்திரிகை நிருபர் இருக்கிறார்.
காதல் அல்லது திருமணம் குறித்த எண்ணத்தை அக்கதாபாத்திரமே நினைவில்
ஓடவிடுவதாக ஒரு காட்சி வருகிறது.
'ஆணுக்குப் பெண் தேவை; பெண்ணுக்கு ஆண் தேவை. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்கள்
வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ சம்மதிக்கிறார்கள். இது லட்சிய அமைப்பு
என்று சொல்ல முடியாவிட்டாலும், குழந்தை வளர்ப்பு என்ற தொல்லைக்கு வேறொரு
தீர்வு இருக்க முடியாது. இதில் வேறொரு அனுகூலங்கள் உள்ளன. தினம் தினம்
சைக்கிளை வாடகைக்கு எடுப்பதைவிட ஒரு சைக்கிளை வாங்கி விடுவது போல. இதில் பல
வசதிகள் உண்டு. இந்த வசதிகளை உணர்வதைதான் ஆண் பெண் சேர்க்கையை ஒரு தெய்வீக
நிகழ்ச்சியாக, காதலின் மகத்தான வெளிப்பாடாக கருதுவதெல்லாம். இதைப்
புரிந்துகொள்ளாது காதலுக்கு மண வாழ்கையின் அனுகூலங்களுக்கும் அப்பாற்பட்ட
ஒரு அர்த்தத்தைக் கற்பிப்பது என்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயம்.
என்னைப் பொறுத்தவரை என் காமத்தை நான் விலைமாதர்களிடம் தீர்த்துக்கொள்ள
முடியும் வரை திருமணம் பற்றி நினைக்க மாட்டேன். காதல் என்ற பைத்தியம்
எல்லாம் எனக்கில்லை. என்னுடைய உணர்வுதான் மனிதனுக்கு இயற்கையான உணர்வு.'
நாவலின் முற்பகுதியில் இவ்வாறு எண்ணும் பத்திரிகை நிருபர் பிற்பகுதியில்
சிறுதடுமாற்றம் அடைகிறான். குறத்தி முடுக்கில் தங்கம் என்ற பெண்ணிடம் உறவு
கொள்ளும் அவர், அவளை அசாதாரணப் பெண்ணாக காணுகிறான். ஜி. நாகராஜனின்
சொல்படியே அவள் 'பால் இன்பத்தின் வற்றாத ஊற்றாக' அவனுக்குத் தோன்றுகிறாள்.
அவளின் சாகசங்களால் கவரப்படுகிறான். அவள் மீது ஏற்படும் ஈடுபாட்டை
உணர்ந்தவன் பலவாறாக அதை அகற்ற முற்படுகிறான். அவளது சாகசங்கள் தனக்கு
மட்டுமானதல்ல எல்லோரிடமும் இவ்வாறுதான் நடந்துகொள்வாள் என நினைப்பவன்
தன்னிடம் மட்டும் சில விசேஷங்களை செய்கிறாளோ எனவும் நம்பவேண்டும் போல
உணர்கிறான். அவளிடமிருந்து தன்னை விடுவிக்க துருவி துருவி அவள் மனதை
ஆராய்கிறான். அதில் அவன் கண்டுப்பிடிக்கப் போகும் அவளது ஆழமான
வெறுப்பையும், அவளது பணத்தின் மீதான பற்றுதலையும் அவளிடமிருந்து விடுதலை
அடைய தகுந்த காரணங்களாக்க முயல்கிறான். அவன் முயற்சிகள் தொடர் தோல்வி
அடைகின்றன.
தங்கம் தன் பிரிந்து போன கணவனான நடராஜனின் ஏமாற்றுத்தனங்களைப் பற்றி
பேசும்போதெல்லாம் பத்திரிகை நிருபருக்கு வெறுப்பாக இருக்கிறது. அவனைத்
திட்டும்போதெல்லாம் தங்கம் 'அவர் எனக்கென்னவோ நல்லவர்தான்' என்கிறாள்.
பின்னொரு நாள் அவன், தங்கத்தை தன்னுடனே வந்து மூன்று மாதமோ ஆறு மாதமோ
தங்கிவிடும்படி கூறுகிறான். அவள் மிக மகிழ்ச்சியாக 'நிரந்தரமா தங்க
சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன்' என சிரிக்கிறாள். அவன் 'அப்படியும்
முடியும்' எனச்சொல்ல, தனக்கு திருமணமாகிவிட்டதை தங்கம் நினைவுறுத்துகிறாள்.
அதற்கு அவன், அவள் குறத்தி முடுக்கில் இருக்கும் சூழலை இழிவு பேச தங்கம்
சொல்கிறாள், "குறத்தி முடுக்கிலே இருந்தா, அதனால தாலியறுந்தவளாயிடுமா?"
பத்திரிகை நிருபர் தன்னைவிட பண வசதி உள்ளவன் எவனாவது சிக்குவான் என அவள்
காத்திருப்பதாகக் கூற அவள் ஒன்றும் பேசாமல் அவனை அனைத்து உடல் உறவில்
ஆவேசம் காட்டுகிறாள். அவள் வெப்பமான கண்ணீர் அவனைக் குளிரச் செய்கிறது.
குறத்தி முடுக்கு மட்டுமல்ல ஜி. நாகராஜனின் மிக முக்கியமான 'நாளை மற்றொரு
நாளே' எனும் நாவலில் வரும் பாலியல்தொழிலாளியான மீனாவும் கணவன் பக்தி
உள்ளவளாகவே வருகிறார்கள். தன்னை பயன்படுத்தி... தன்னை ஒரு கருவியாக்கி பணம்
சம்பாதிக்கும் ஒருவனுக்கு தங்கள் வாழ்நாள் முழுதும் நேர்மையாகக் கழிக்க
எத்தனிக்கிறார்கள். இவ்விரண்டு நாவல்களை வாசிக்கும் போதும் இது ஜி.
நாகராஜனின் புனைவாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர் தான் விரும்பும் ஒன்றை
கதாபாத்திரங்களில் திணித்துப்பார்க்கிறார். அவரால் தன்னை கருவியாக்கும் ஓர்
ஆண் சமூகத்தை தூக்கியெறிந்துவிட்டு புதிதாய் வாழத் தொடங்கும் ஒரு பாலியல்
தொழிலாளியை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆணுக்கு அடிமையாக இருக்கும்;
எல்லா சுரண்டல்களையும் சகித்துக்கொண்டு நேர்மையை கடைப்பிடிக்கும் பெண்களே
அவருக்கு உவப்பானவர்கள்.
'குறத்தி முடுக்கு' ஒரு பக்கம் இருக்கட்டும். சராசரி வாழ்வே தனி
மனிதனுக்கான தேவைகளையும் அங்கீகாரங்களையும் நிறைவேற்றவே தினம் தினம் பல
அதிர்ச்சியான திருப்பங்களைக் கொண்டு உருமாறுகிறது. கண்டறியமுடியாத மனதின்
தேவைகள் அதில் பற்றிப் படர்ந்துள்ள பிரிவினைகள், வேற்றுமைகள் என பல்வேறு
தர்க்கங்களை மனிதன் கொண்டிருக்கும் பட்சத்தில் நம்பிக்கைகளும் புனிதங்களும்
தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இந்நிலையில் 'குறத்தி
முடுக்கிலும்', 'நாளை மற்றொரு நாளே' நாவலில் வரும் ஒரு பகுதியை சராசரி
வாழ்வோடு பொருத்திப் பார்ப்போம்.
'மலேசியாவில் ஒரு கணவன் தன் மனைவியை தொழிற்சாலைக்கு அனுப்பிவிட்டு
வீட்டிலேயே சோம்பிக்கழிக்கிறான். மனைவியிடம் பணத்தைப் பிடுங்கி தின்கிறான்.
தன் மகனை விரட்டி அடிக்கிறான். மகளின் மரணத்துக்குக் காரணமாக இருக்கிறான்.
அத்தனையையும் அவன் மனைவி சிறு அழுகையுடன் மன்னித்து அவனுடன் காதல்
கொள்கிறாள்.' மேற்கண்ட சூழலைவிட ஒரு பெண்ணை அவமானப்படுத்த வேறு
வாக்கியங்கள் வேண்டாம். 'மனைவி' எனும் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு
பாத்திரம் எவ்வகையான சுரண்டலுக்குப் பிறகும் அப்பாத்திரத்தின் புனிதத்
தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எவ்வகையான ஆணாதிக்க வெறியோ அதையே ஜி.
நாகராஜன் தனது நாவலில் வெளிப்படுத்துகிறார்.
0 0 0
ஜி. நாகராஜன் அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும்
எழுதியவர். இவர் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, நகுலன் போன்றவர்களின்
சமகாலத்தவர். தமிழில் அவரது கதைக்களம் முற்றிலும் புதியது என தமிழ்நாட்டு
விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டு விமர்சகர்கள் தமிழின் பழைய
இலக்கியங்களை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை போல. சங்க
இலக்கியங்களில் வரும் பரத்தையர் வாழ்வை அவர்கள் மறந்துவிடுகின்றனர். ஆனால்
ஒரு இலக்கியப் பிரதியைப் படிக்கும் போது இயல்பாக அதை எழுதியவரின் தனிப்பட்ட
வாழ்வு உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதுபோல ஜி. நாகராஜனைப் படிக்கும்
போதும் நிகழ்கிறது.
தொடக்கத்தில் நான் இந்தப் பாதிப்பை ஆத்மாநாம் கவிதைகளைப் படிக்கும்போது
உணர்ந்திருக்கிறேன். அவரின் தற்கொலை எல்லா கவிதைகளிலும் மௌனமாகப்
படிந்திருப்பதாகத் தோன்றும். அது எனக்கு அக்கவிதைகளில் கூடுதலான
அர்த்தங்களை வழங்குகிறது. அதே போல ஜெயமோகனின் தந்தை தாய் தற்கொலைக்குப்
பின்னர் அவர் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்தது அவர் நாவல்களைப்
படிக்கும் போது குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும்.
ஜி. நாகராஜன் சமூக மதிப்பீடுகளில் நம்பிக்கை அற்றவர். தன் இஷ்டம் போன்ற
வாழ்வுக்காக குடும்ப சௌகரியங்களையும் உத்தியோக சௌகரியங்களையும்
பொருட்படுத்தாது துறந்தவர். தன் நாவலில் வரும் வாழ்வு போன்றே
பாலியல்தொழிலாளர்களுடனே வாழ்ந்தவர் என வாசித்ததுண்டு. இதுபோன்று அவர்மேல்
கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் அவர் நாவலை வாசிக்க மேலும் தூண்டுவதாகவும்
உபரியான அர்த்தங்களைத் தருவதாகவும் உள்ளது.
ஜி. நாகராஜனின் மொழி பதற்றம் இல்லாதது. உணர்ச்சியற்ற கூறும் முறையிலேயே
கதையை நகர்த்திச் செல்கிறார். இவ்விரு நாவல்களில் நெகிழ்ந்து போகும் பல
தருணங்களிலும் அவர் இந்த கச்சிதத்தைக் கடைப்பிடிக்கிறார்.
'நாளை மற்றுமொரு நாளே' நாவலில் கந்தன், பலூனை வைத்து
விளையாடிக்கொண்டிருக்கும் தன் இரண்டாவது குழந்தையான கீதாவிடம் விளையாட்டாக
இருக்கும் என நினைத்து சிகரெட் நுனி கொண்டு பலூனை வெடிக்கிறான். இவன்
வேடிக்கையாக சிரிக்க கீதா அழுகிறாள். புதிய பலூன் கேட்கிறாள். அவனும்
வாங்கித் தருவதாகக் கூறி அதை மறந்து இரவில் போதையுடன் வருகிறான். கீதா தலை
வலியால் ஒரு மூலையில் கிடக்கிறாள். வலிப்பும் வருகிறது. நாட்டு
வைத்தியமெல்லாம் முடிந்து மருத்துவமனைக்குக் கொண்டு போக முதுகெலும்பில்
செலுத்தப்படும் ஊசியின் கொடுமையான வலிக்குப் பின் அவள் இறக்கிறாள்.
"குழந்தைங்க ஆசையா ஒண்ணை வச்சிருக்கும் போது அதை நாசப்படுத்தக்கூடாது"
என்று காலையிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கும் பரமேஸ்வரன் அப்போதும்
சொல்கிறான். முதன் முறையாக எழும் ஒரு குற்ற உணர்ச்சியில் கந்தன் மீனாவிடம்
கேட்கிறான்... "அப்படி இருக்குமா?" மிகவும் உணர்ச்சிகரமான ஒரு சூழலிலும்
நாவலின் சமநிலையை மீறி ஜி. நாகராஜன் முன்னே துறுத்திக்கொண்டு செல்லவில்லை.
உறுதியான காரணங்கள் இல்லாத கீதாவின் மரணம் கந்தனின் அந்தரங்கமான மனதின்
பகுதியை பாதிக்க அவனை ஒரு நிமிடத்தில் மனிதத்துடன் எட்டிப்பார்க்க
வைக்கிறார் ஜி. நாகராஜன்.
நாவலில் பல இடங்களில் அங்கதமும் தொனிக்கிறது. இந்த அங்கதமும் நாளை
மற்றுமொரு நாளே நாவலில்தான் அதிகமும் வெளிப்படுகிறது. அரசியல்வாதிகள்,
வெற்று கோஷங்களையும் அவர் அங்கதம் செய்வது போலவே 'புனிதங்களின்' மீதும்
கேள்வி எழுப்பியபடி செல்கிறார்.
நிச்சயம் ஜி. நாகராஜன் நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர்தான். ஆனால் அவர்
விளிம்புநிலை மக்களைப் பற்றி பேசுகிறார் எனும் கூற்றில்தான் எனக்கு
உடன்பாடில்லை. அவர் விளிம்புநிலை மக்களுக்காகப் பேசவில்லை என்பதை முன்பே
பாலியல் தொழிலாளிகளின் பாத்திரப்படைப்பின் வழி உணரும் நிலையில்
விளிம்புநிலை மக்களைப்பற்றியும் முழுமையாகப் பேசவில்லை எனும் உண்மையையும்
இவ்விரு நாவல்களும் வழங்குகின்றன. இவ்விரு நாவல்களிலும் பாலியல்தொழிலாளிகளே
பிரதானமாய் வருகிறார்கள்... அவர்களின் அத்தான்களோடு. சமூகத்தின் மைய
ஓட்டத்திலிருந்து முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு, சமூக அமைப்பு தரும்
பாதுகாப்பு மற்றும் அடையாளம் ஆகியவற்றைச் சற்றும் அனுபவிக்காமல் வாழும்
மக்கள் கூட்டம் பலவாறாகப் பிரிந்திருக்க குறிப்பிட்ட ஒரு தரப்பினரைப் பற்றி
எழுதிவிட்டு ஜி. நாகராஜன் அவ்வடையாளத்தை பெறுவது சரியில்லை என்றே
தோன்றுகிறது. இவரைக்காட்டிலும் எனக்கு ஜெயகாந்தன் விளிம்பு நிலை மக்களின்
விரிந்த தளத்தினைக் காட்டியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
ஜி. நாகராஜன் எழுதத்தொடங்கிய காலத்தில் அவர் எழுத்துகள்
பொருட்படுத்தப்படாமல் இருந்ததாகவும் பின்னர் நவீன இலக்கியம் முதிர்ந்த
காலத்தில் ப.சிங்காரம் போல அவர் மீண்டும் கண்டெடுக்கப்பட்டார் என்றும்
வாசித்ததுண்டு. பல்வேறு தளங்களில் வைத்து வாசித்து விவாதிக்கும் அனைத்து
தன்மைகளும் ஜி. நாகராஜனின் எழுத்துகளில் நிச்சயம் இருக்கின்றன. இதில் அவர்
கதையை எடுத்துக்கொண்டு நகரும் நிலபரப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை
என்றே தோன்றுகிறது. அவரும் இவ்விரு நாவல்களில் எவ்விடத்திலும் கதை
களத்திற்கான பூகோள வர்ணனையை உருவாக்கவே இல்லை.
யதார்த்த வாழ்வு கருணை, தியாகம், அறம், துரோகம், சுயநலம், பொறாமை போன்ற சில
உச்ச குணாதிசயங்களால் உருவாகியிருக்கிறது. அவை பாலியல் தொழிலாளிகளின்
தெருவில் இருக்கிறதா? பார்ப்பனர் தெருவில் இருக்கிறதா? என்பதெல்லாம்
அபத்தம் நிரம்பிய கேள்விகள். இவ்வுணர்வுகள் ஜி. நாகராஜன் நாவல்களில்
உருவாக்கும் வாழ்வுடனும் முயங்கிக் கிடக்கிறது. தலைகவசம் அணிந்து நானும்
என் நண்பனும் சென்றது போல ஜி. நாகராஜனின் எழுத்தில் பாலியல் தொழிலாளிகள்
செய்யவில்லை. அவர்கள் நிஜத்தைப் போலவே நாவலிலும் உண்மையானவர்களாக
இருக்கின்றனர்.
|
|