நாட்காட்டி தின்னும் காலம்
ஒன்பதினாயிரம் கடல்களின்
காலத்தின் நீந்துகிறேன்
ஒரு சிறிய
நீர்ப்பறவையென
காலங்கள் அழியும் நாட்காட்டி
தின்று மீள்கிறது
இடையற்ற பெரும்பசியில்
இருத்தலைத் தக்கவைப்பதற்கென
தலை நுழைத்துக்கொள்கிறேன்
அலமாரியின் காகித மலர்களில்
நினைவுகள் அழியத்தொடங்கும்
காலமொன்றில்
முடிவிலியாய்
வளர்கிறது
நீ தந்த வானம்.
ooo
முத்தங்களைப்பகிர்ந்து கொள்வதென்பது
ஒரு சம்பிரதாயம்
என் உடலை ஒப்படைக்கிறேன்
உயிர் வளர் பாதையை
உன்னுடையதெனச் சொல்கிறேன்
வார்த்தைகள் அற்றுப்போகும்
நிலைக்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.
முத்தங்கள் முடிந்தபின்
திருப்தியா எனக் கேட்கும்போது
சொல்லத்தயக்கமாய் இருக்கிறது
இதையெல்லாம்.
ooo
கழிவேறிய உடல் நாறத்தொடங்குகிறது
மலக்கிடங்கென
குப்பைகள் சேர்ந்த பாலைவனமென
மணல் அலைகிறது உடலெங்கும்
ஒரு மழை எல்லாவற்றையும்
சரிசெய்யும் என்றாலும் கூட
வானம் பார்த்துக்கொண்டிருக்கிறது
எதையும் செய்ய விருப்பமற்று.
ooo
யாருமற்ற புல்வெளியில்
உடைப்பவனுக்காகத்தான்
காத்துக்கொண்டிருக்கிறது
பனி.
ooo
தற்கொலை செய்துகொள்வதற்கு
சில
எளிய வழிகள் இருக்கின்றன
அரளிவிதை
மையாய் அரைத்து நீரில் கரைத்து
குடித்துவிடலாம்
கொஞ்சம் கசக்கும்.
பிறகு குடல் எரியும்
சையனடு வாங்குவதிலேயே
சிக்கல் வரும்
தூக்குப்போட்டுக்கொண்டால்
நாக்கு வெளித்தள்ளி
முகம் கோரமாகும்
தூக்கமாத்திரைதான்
எல்லாவற்றிலும் எளிது
யாராவது பார்த்துவிட்டால்
கண்டதையும் கரைத்து
வாயில் ஊற்றுவார்கள்
என்பதுமட்டுமே பயம்.
தற்கொலைக்கு எளியவழி என்பது
தற்கொலை எண்ணத்தை கொன்றுவிட்டு
சமரசம் செய்துகொள்வதுதான்.
நான் செய்து கொன்றதைப்போல
|