|
|
நீருறை கனவின் நிறம்
அந்தரிக்கும் இப் பெருவனத்தே
அலைகிறேன் ஒற்றைத் துணிக்கையாய்
இறக்கி வைக்கப்பட்ட எனது கனவுகளின்
அரூபச் சுமை அழுத்தக்
குனிந்து தாழும்
பருத்துச் சடைத்த விருட்சங்களின்
பசிய இலைகள்
கனவு நீரென மாறிக்
கடுகித் துளித்திடும் பொழுது
உந்திக் குமிழும் கோளம் பலதுள்
உற்றுப் பார்க்கில் – யுகாயினி
ஒளிரக் காண்பாய் உன்முகம்
சாகரங்களின் பேரரசி
சாகரங்களின் பேரரசி நீ
வானளவு எறிக்கும் உனது அலைகளின் இசையில்
மிரண்டு திரள்கின்றன மேகப் புரவிகள்
தாகித்திருக்கும் வெம்பாலை என்னை
உன்னுள் ஆழ்த்துகிறாய்
காட்சிக்கெட்டும் தூரமெங்கும் நீயாகிறேன் நான்
ஆதித்தாயின் கிளர்ந்த கொங்கை தழுவி
அப்பன் சிவன் சவமானது போல
உனது வியாபகத்துள் ஒன்றுமற்றுப் போகிறேன்
அலைகளின் பரவசம் கரைபுரளும் பொழுதில்
ஊழியைப் போலும் நிகழ்கிறது நமது கூடல்
யுகங்களின் கனா முழுமையுறும் பெருங்கூடல்
மொழி செயலற்று உறங்கத் துவங்க
உச்சாடனிக்கும் ஒலியெல்லாம் ஒருவரியாகின்றன:
நீயின்றி அமையா துலகு
ஒப்புதல்
குப்புற விரித்து வைத்த புத்தகம்
கிடக்கிறது ஓர் ஓரமாய்
இருளையும் ஒளியையும் இருவர்ணங்களாக்கிச்
சாளரம் சாய்த்த ஓவியம்
மல்லாந்திருக்கும் என் மார்பின் மீது படிகிறது
எங்கெங்கோ எரியும் சுவாலைகள்
எப்படி எனது அறைக்குள்ளும்
புகையை மூட்டின?
மழை ஓய்ந்த பொழுதில்
ஓலை நுனிவழுவி ஒழுகும் துளிபோல
உள்ளக் கணுக்களை ஊடுருவி
உயிர்ப்பொறிக்குள் நுழையும் இது என்ன?
நான்
காலத்தின் இழைகளால் பின்னப்பட்டிருக்கிறேன்
காலம்
எனது அயர்ந்த விழிகளுக்கிடையில்
ஆறி அடர்ந்து பின் அதிர்கிறது
தீரா வெறிகொண்டு அலையும் விலங்குகள்
தின்று மீய்த்த எச்சங்களாய்த் தெரிகின்றன
நாட்காட்டியின் கிழிக்கப்படாத பக்கங்கள்
பொத்தி மூடிய எனது கைகளுக்குள்
ஒரு கொலையாயுதம்
அல்லது
இருளின் திரைகளிலிருந்தான வாழ்வின் மீட்புப்பாடல்
இருக்கலாம் எனச்சந்தேகிக்கிறார்கள் இவர்கள்
புதைகுழிகளுக்குள் உறங்கும்
நேற்றுவரை என்னைப்போலவே இருந்த
மனிதர்கள் பற்றிய நினைவுத் துயர்தவிர
எதுவுமில்லை என்னிடம் பெரிதாய்
****
சொல்ல நினைத்த என் வார்த்தைகளைப்
பெருஞ் சுருக்கில் திணித்துக் கருக்குலைத்தேன்
சொரியும் மழையின் நெடும் பெருக்கில்
எண்ணச் சுழல்வை முழுதாய்க் கரைத்தொழித்தேன்
இல்லை எனும் ஓர் பொருளாகிச்
சூன்ய இருப்பின் முனைக்குள் உயிர்பதுக்கி
ஏற்ற சுயத்தைச் சிதைக்காமல்
இனி எவர்க்கும் இல்லை உயிர் வாழ்க்கை
|
|