|
|
பின்னர் அதுவாய்க் கட்டிக்கொண்டது
வீடு ஒன்று
மனிதர்களெல்லாம்
தங்கும் வண்ணம்
கட்டி எழுப்பினேன்
அண்ணனாய்
சில கற்பனைகளும்
அதில் கலந்தே கட்டினேன்
வரவேற்பறையில்
குதூகலமாய்ப்
பிள்ளைகளின் சிரிப்போசையில்
மறந்திருக்கவும்...
காற்றில் அசைவாடும்
இசையினூடே இலயித்திருக்கவும்...
சதா தேநீர் பலகாரங்களுடன்
அரட்டையடிக்க அவ்வப்போது
நண்பர்களின் வெடி ஜோக்கில்
திளைத்திருக்கவும்...
அப்பாவின் படத்தைப் பார்த்தபடி
தரையில் அமர்ந்திருக்கும்
அம்மாவின் மடியில்
தலைவைத்து
ஏகாந்தமாயிருக்கவும்...
உடன்பிறப்புகளின் கொஞ்சுமொழியில்
இனியொரு பிறவியே
வேண்டாமே என
வேண்டியிருக்கவும்...
கையில் அகப்பட்ட
ஆல்பத்தோடு
பால்ய தோற்றத்தைக்
கிண்டலடித்துப் பிரமிக்கவும்...
இப்படியாய் உருவெடுத்த
கற்பனைகளின் நீட்சியில்
வீட்டின் முன்
கட்ட மறந்தேன்
வாசற்படியை
என் கற்பனையை மீறிய
அகண்ட வாசற்படி
அதுவாய்க் கட்டிக்கொண்டது
அப்பாவின் புகைப்படத்தை
மட்டும்
இனி எப்பொழுதும்
பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்போல்
தோன்றியது...
|
|