|
|
கடற்பயணம்
இறுதிக்கட்டத்தில் நடை பெற்ற முள்ளிவாய்க்கால் படையெடுப்பில் பொறிக்குள்
அடைபட்டவர்களாகச் சனங்கள் எட்டுத் திக்குகளிலுமிருந்து கொல்லப்பட்டதை
எல்லோரும் அறிவர். கடைசி யுத்தத்தில் மக்கள் பட்ட பாடுகள், மரணங்கள் கற்பனை
செய்ய முடியாத கோரங்கள். நாட்டுக்கு விடுமுறையில் சென்று வருபவர்கள்
அனைவரும் எனக்குச் சொன்னது "அந்தச் சனங்களின் கதைகளைக் கேட்க
முடியாமலிருக்கின்றது". என்னிடம் ஒருவர் சொன்னது 'காயம்பட்ட குழந்தையைக்
குறை உயிருடன் மணலால் மூடிவிட்டு காயங்களுடன் மற்றப் பிள்ளைகளைக் தூக்கிக்
காப்பாற்றி ஓடிவந்த தாயின் துன்பத்தை அறிவாயா? யுத்தம் பற்றித்
தூரத்திலிருந்து கவிதை எழுத முடியாது" என்றார். ஆனால் அவரைப் போன்றவர்கள்
தத்தமது வன்னிக்காணிகளை வேலியடைத்துப் பத்திரப்படுத்தி விட்டு வந்தனர்.
குறை உயிராக மீண்ட மக்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டனர். திரும்பி வந்து
இலங்கையில் சாப்பிட்ட ப்ரஷ் மீன்கள் காய்கறிகள் பற்றிப் பேசினர்.
சனங்களைப்பற்றியும் கதைத்தனர். பலர் வன்னிப்பக்கமே போகாமல் திறந்து
விடப்பட்ட யாழ்ப்பாணத்துக்குள் உலவிவிட்டு நாடே நல்லாயிருக்கென்று
பிசத்திக் கொள்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் - இது இறுதி யுத்தம் எனப்படுகிறது. மக்கள் ஓடியோடித்
தலைசாய்க்க வழியின்றித் தண்ணீருக்குள் குதித்துச் செத்து மிதந்த பிணங்களை
விலக்கியபடி தப்பித்து மறுகரையிலும் அடைப்பட்டார்கள். அவர்கள் ஓடித்தப்ப
வேறுவழியிருக்கவில்லை. ஊர்களைச் சென்றடைந்தவர்கள் இன்றுவரை மழையிலிருந்து
கூட காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்களாகத் வாழ்கின்றனர். பழைய வாழ்வைத்
தொடருவதற்கு அவர்களிடம் என்ன உள்ளது?
நானும் இந்தத் சண்டையினால் கடல் வழி தப்பி ஓடினேன். அதை முள்ளி
வாயக்காலின் கொடூரத்துடன் ஒப்பிட்டெல்லாம் தயவு செய்து பார்க்க வேண்டாம்.
ஏனென்றால் இப்போது என்னிடம் அதைத்தான் சிலர் கேட்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் துன்பங்களை அனுபவிக்காத நீ யுத்தம் பற்றிக் எழுதலாமா?
என்கிறார்கள். இதைக் கேட்பவர்களும் அந்நேரம் ஐரோப்பாவில்தான் அமைதியாக
வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இதற்கு முன் நடை பெற்ற சண்டைகளில் ஏதோ ஒரு இடத்தைத் தேடி ஓடிக்
கொண்டிருப்பார்கள். முன் ஒரு போதும் பார்க்காத சொந்தக்காரர்களின் வீடுகளைத்
தேடிப்போய்த் தங்குவோம். பின்னும் சில காலத்தில் அவர்களும் எம்முடன்
சேர்ந்து பொருட்களைக் காவியபடி சண்டை நடைபெறாத இடமொன்றுக்காக ஓடுவோம்.
ஆனால் அது இயக்கத்தினால் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. வவுனியா வருவதோ
அதைத் தாண்டி தலைநகர் கொழும்பு வந்து வாழ்வதோ கடினம். ஒரு
குடும்பத்திலிருந்து எல்லாப் பிள்ளைகளும் வெளியேற முடியாது. சீதனத்தைப் போல
பெரிய கல்வீடு அல்லது இலட்சக்கணக்கில் காசு கொடுத்து விட்டு வெளியேற
எம்மிடம் இருக்கவில்லை. ஆகவே ஓடியோடிப் போய் கடைசியாகக் கடற்கரையில்
நின்றேன். மறுகரையில் இந்தியா. அங்கு வரிசை கட்டிப் படகுகள் நிற்கவில்லை.
திருவிழாக் கூட்டம் போல அகதிகளின் கூட்டம் திரண்டிருந்தது. எப்படி
இராமேஸ்வரம் போய்ச் சேருவது? எவருடன் தொடர்பு கொள்வதென்பது எதுவுமே
அறிந்திருக்கவில்லை. ஆனாலும் இலக்கை வைத்தோ, இடமறிந்தோ போவதில்லையே
நாங்கள். அவற்றை நோக்கி ஆயுதங்கள் நம்மைத் துரத்திச் சென்றன.
இந்தியாவுக்கு அகதிகளை ஏற்றிச் செல்வதும் வியாபாரமாகியிருந்தது. காற்று,
மழை, கடற்படை ரோந்து, அமாவாசை, பௌர்ணமி இப்படிச் சகலதும் சாதகமானால் தான்
அகதிப்பயணம். நாட்கணக்கில் காத்திருந்த பின்னர் நாங்கள் பெரிய படகொன்றில்
ஏறினோம். மெதுவாக இருள் மூடத்தொடங்கிய மைமல் பொழுது. அடுத்தடுத்த நாட்களில்
படகுகளில் வருவதற்குக் காத்திருந்த சனங்கள் வழியனுப்பக் கரையில் கூடி
நிற்கின்றனர். எல்லோரும் தங்களுக்கான நாள் வருவதற்காக ஏங்கிக்
கொண்டிருந்தனர். ஆனால் படகில் ஏறுபவர்கள் நிம்மதியாக இந்தியாவில்
வாழப்போகிறோம் என்றொரு பக்கம் மகிழ்ந்தாலும் மறுபுறம் ஓர் இரவு முழுவதுமான
கடற்பயணத்தில் என்னென்ன நடக்குமோ என்பதை நினைத்துப் பயந்து கொண்டிருந்தனர்.
தனியே ஒரு பெரிய படகு மட்டுமே புறப்பட்டது. அதுவும் பழையதாகவும் இருப்பது
வழமையாம். காரணம் நடுக்கடலில் மூழ்கிவிட்டாலோ இலங்கை இந்தியக் கடற்படைகளின்
கைகளில் சிக்கிவிட்டாலோ அதன் முதலாளி நட்டப்படக் கூடாதே என்பதால்
அப்பெருங்கடலைக் கடக்க சனங்களை அதில் ஏற்றி அனுப்பினார்கள். கடலில் பல
ஆபத்துகளையும் எதிர்கொண்டு போவதைவிட நாட்டில் வாழ்வது தான் அதிபயங்கரமாக
இருந்தது.
ஓர் இரவு தாண்டிவிட்டால் இனிய இந்தியா வரவேற்கக் காத்திருக்குமே என்ற
நினைப்புதான் துணிச்சலைத் தந்திருக்க வேண்டும். நாங்கள் 106 பேர்
படகோட்டிகள் இருவர். பிறந்த குழந்தையிலிருந்து 80 வயசுத் தாத்தா வரை
அதிலிருந்தனர். உட்கார இடமில்லாமல் நெருக்கியடித்து ஆண்கள் நின்று
கொண்டிருந்தனர். படகோட்டிகளுக்கும் பயம்தான். அவர்கள் எங்களை
இந்தியக்கடற்கரையில் இறக்கி விட்டுவிட்டு விடிவதற்கிடையில் இந்தியக் கடல்
எல்லையை விட்டுத் திரும்ப வேண்டும். அல்லது மக்களைக் கடத்திய
காரணத்திற்காகக் கைது செய்து சிறையில் போடப்படுவார்கள். படகு பறிமுதலாகும்.
இருட்டுக்குள் பெரும் மௌனத்தினைப் பார்க்கும் போது எல்லோருமே பயந்து
கொண்டிருக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.
அளவுக்கு மீறிய சனத்தொகை ஏற்றப்பட்டதால் நிறைந்திருந்த படகு
தட்டுத்தடுமாறிக் கொண்டு போவதாகத் தோன்றியது. நான் படகின் ஓரத்தில்
இருந்தேன். வயதானவர்கள் நடுவில் கீழே இருந்தனர். அலைகளால் எத்துப்பட்ட
கடற்தண்ணீர் என் மடியில் வந்து விழுந்து கொண்டிருந்தது. தலையும் பெரும்
அலைகளுக்கு நனைந்தது. நானும் மற்றும் சிலரைப் போல சத்தி (வாந்தி) எடுக்கத்
தொடங்கினேன். நான் படகின் விளிம்பிலிருந்தது வசதியாகப் போனது. குடல் வந்து
விழுந்து விடுமோ என நினைக்குமளவுக்கு எட்டிக்கடலில் சத்தி எடுத்துக்
கொண்டிருந்தேன். இந்தக் கடற்பயணத்தை விடச் ஷெல் துண்டொன்றோ எதுவோ விழுந்து
செத்துப் போயிருக்கலாம் என்று கால்வாசித் தூரத்தில் நினைக்கத் தோன்றியது.
இனி வாழ்நாளில் ஒரு முறையேனும் இப்படியொரு பயணம் செய்யவே போவதில்லை என்று
முடிவெடுத்தது நான் மட்டுமல்ல. தூரத்தில் எங்கோ தெரிந்த வெளிச்சத்தைக்
காட்டி இராமேஸ்வரக் கோயிலின் வெளிச்சம் தெரிகிறதென்று சிலர் கதைத்தது
தெம்பாக இருந்தது. ஆனால் உண்மையில் நாங்கள் அவ்வளவு தூரம்
சென்றிருக்கவில்லை. படகு அலைகளால் அலைக்கழிந்தது. அளவுக்கு மீறிய பாரத்தால்
தடுமாறியது. பெரும் ஆழக்கடலில் சுழன்று கொண்டிருந்தது. எல்லோரும்
அசாதாரணமான ஏதோ நிலை என்பதை ஒரளவு உணர்ந்தோம். படகோட்டிகள் தடுமாறினார்கள்.
அவ்வேளையில் திடீரெனக் கறுப்பு நிறமாகப் பெரிதாக ஒன்று வந்து வழிமறித்து
நின்றது.
சூழப் பெரும் இருள். படாரென்ற பகல் வெளிச்சம் எங்கள் படகுக்குப்
பாய்ச்சப்பட்டது. இது இந்தியக் கப்பற்படை தான். எங்களைக் காப்பாற்ற
வந்ததென்று சனங்கள் கதைத்து வாய்மூடவில்லை... அந்தக் கப்பலில் இருந்து
சிங்களத்தில் கேள்விகள் வந்தன. சிங்கக் கொடி பறந்து கொண்டிருந்தது.
|
|