|
|
பாலியலின் மாயக்கண்கள்!
இக்கட்டுரையை எழுதுவதற்குப் பின்னணியில் ஒரு சம்பவம் உண்டு. என்றேனும் ஒரு
நாள் அதைக் கதையாகப் பதிவு செய்துவிட வேண்டும் என்று அப்பொழுது
எண்ணியிருந்தேன். சம்பவங்கள் மட்டுமே கதையைத் தீர்மானித்துவிடாது
என்பதாலும் எழுதுவதற்குரிய தகுந்த சூழலும் களமும் வாய்க்காததே இதற்குக்
காரணம். இப்பொழுது கட்டுரையாகப் பதிவு செய்கிறேனென்றால் அதற்கும் ஒரு
காரணமுண்டு. கடந்த ஆண்டு மட்டும் நாட்டில் 2426 பாலியல் புகார்கள் பதிவு
செய்யப்பட்டு, அவ்வெண்ணிக்கையில் 456 புகார்கள் சிலாங்கூர் மாநிலத்தில்
பதிவு செய்யப்பட்டவையெனப் புள்ளி விபரங்கள் காட்டின. அதே காலக்கட்டத்தில்
இப்பாலியல் சிக்கல்களில் உயர்கல்விக்கூட மாணவர்களும்
சம்பத்தப்பட்டிருப்பதாக அரசல் புரசலான செய்திகளோடு அதில் அரசியல்
புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் கசிந்திருந்தன. பொதுப்
புத்தியில் வயது, தராதரம், செல்வாக்கு, இனம் அனைத்துக்கும் அப்பாற்பட்டுக்
கிளர்த்தும் உணர்ச்சிதான் இந்தப் பாலியல் எழுச்சி என்பதை யாராலும்
மறுக்கவியலாது. மனிதன் இன்னொரு கிரகத்தில் புலம்பெயர்ந்தாலும் அங்கேயும்
இதை அரங்கேற்றித்தான் தீருவான் போலும்! உயர்கல்விக்கூட மாணவர்கள் மத்தியில்
இப்பாலியல் உறவு அவசியமா இல்லையா என்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அன்றைய
நிலையில் கல்வித் தளத்தின் படிநிலையிலும் சமூக மதிப்பீடுகளிலும் மேல்
தளத்தில் வைத்துப் பார்க்கப்படுகிற கூட்டமாகக் கல்வியாளர்கள்
கருதப்பட்டதால் அவர்கள் அவ்வாறான செயல்களில் சம்பத்தப்பட்டபோது நானும்
அவர்களை வேறொரு கண்ணோட்டத்தில்தான் வைத்திருந்தேன் அப்போது. இப்பொழுது
சம்பவத்திற்கு வருகிறேன்.
சம்பவத்தின் காலப் பின்னணி...
தோராயமாக இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தினன்று வேலை நேரம்போக,
மனமகிழ் மையத்தில் இரவு நேரக் கலைஞனாக உலா வந்துகொண்டிருந்த காலக்கட்டம்
அது. சுற்றுப்பயணப் பேருந்துகளில்கூட என்னைக் கலகலப்புக் கலைஞனாக அழைத்துச்
செல்வார்கள். என்னுடன் நெருக்கமாகப் பழகியவர்களுக்கும் அவ்வளவு ஏன் என்
பெற்றோருக்குக்கூட இது தெரியாது. வார இறுதி நாட்களின் இரவு எட்டு மணி முதல்
விடியற்காலை மூன்று மூன்றரை வரை வாடிக்கையாளர்களைக் களிப்பேற்ற வேண்டிய
கடமை வழங்கப்பட்டிருந்தமையால் உறக்கம், அலுப்பு, வெறுப்பு இப்படி எதனையும்
பொருட்படுத்தாது இயங்கிக்கொண்டிருந்தது இன்னும் ஞாபகத்தில் உள்ளது.
இசைவெளியில் இளையராஜா, எம்.எஸ்.வி, எஸ்.பி.பியோடும் கூடுதலாகப்
பலகுரல்களோடும் மிகத் தீவிரமாக இலயித்திருந்த மேடைச் சூழலில் மற்றவற்றை என்
புலன்களிலிருந்து தள்ளிவைத்துவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கி வருவதையோ,
வாடிக்கையாளர்களோடு கைக்கோர்த்துக்கொண்டு மெதுநடம்புரிவதையோ முற்றாகத்
தவிர்த்திருந்தேன். இசை அங்ஙனமாய்க் கட்டிப் போட்டிருந்தது. அங்ஙனம்
கீழிறங்கி வருவதன் மூலம் ஒரு புதுவித ஒப்பனையோடுதான் வரவேண்டும். அந்த
ஒப்பனையோடு மீண்டும் மேடையேறினால் அதைக் கழற்றி வைக்க இயலாது. வெளியில்
சஞ்சரிக்கின்றபோது ஒப்பனையின் உள்ளார்ந்த ஒலியை உலகம் விதவிதமாய்ச்
சுரங்கலைத்துச் சுதியேற்றிப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதில் யார்
யாரெல்லாம் தாளம் தப்பிப் போயிருக்கிறார்கள் என்பதை ஒரு முறை சக பாடகனே
குறிப்பிட்டபோது கேட்டு இரசிப்பதற்குச் சுவையாகத்தானிருந்தது. அப்பொழுது
நான் இன்னும் திருமணம் புரியாத காலம் என்பதால் அதனைக் கேட்டின்புற இயல்பான
விருப்பம் இருக்கத்தான் செய்தது. தொடக்கத்தில் வார இறுதி நாட்களென்றாலே
அலுத்துக்கொள்கிற அந்த நண்பர் பின்னாளில் ஒவ்வொரு வெள்ளி அல்லது சனிக்கிழமை
வராதா எனக் காத்திருப்பார். அவருக்கு மனைவி பிள்ளைகள் எல்லாம் இருந்தும்
புதுவகை மோகத்தில் எரிந்துகொண்டிருப்பது பிறகுதான் தெரியவந்தது.
அவளின் வருகை...
தொடக்கத்தில் அவளின் வருகை மனமகிழ் மையத்தில் பணி நிமித்தமாகத்தான்.
அப்படித்தான் கூறிக்கொண்டு மேலாளரைச் சந்தித்துப் பணியில் சேர்ந்தாள்.
வாரத்தில் இரண்டு நாட்கள் இரவு ஏழு தொடக்கம் அதிகாலை நான்கு மணிவரையில்
பானங்களை மேசைக்குக் கொண்டு செல்வதும் வாடிக்கையாளர்களைக் கன்னல் மொழியில்
கவனிக்கவுந்தான். மற்றப்படி வார்த்தைகளை அளந்து பேசுவதும் ஆண்களிடத்தில்
மிகுந்த எச்சரிக்கையுடன் பழகுவது போல்தான் எனக்குத் தென்பட்டது. ஆறேழு
மாதங்கள்தான் வேலை செய்திருப்பாள். பிறகு, திடீரென வேறோர் இடத்திற்குப்
பணியின் காரணமாக மாற்றலாகிச் சென்றுவிட்டாள் என்பது தெரிய வந்தது. நண்பன்
தாடியும் மீசையுமாக ஒரு நான்கு ஆண்டுகள் சோகப் பாடல்களையே பட்டுற்றவன்போல்
பாடிக்கொண்டிருந்தான். பிறகு பழையபடி அவனைப் புதிய மனிதனாக உருவாக்க நான்
எடுத்துக்கொண்ட முயற்சியை வேறு கட்டுரையில்தான் எழுத வேண்டும்.
அவள் எல்லோருக்கும் தெரியும்படி ஒரு பெயரை வைத்திருந்தாள். அவளது இயற்பெயர்
அநேகமாக மேலாளருக்கும் என் நண்பனுக்கும் மட்டுமே தெரிந்திருக்கலாம். வயது
இருபத்து மூன்று. ஒரு தனியார்ப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைக் கல்வி கற்று
வந்தாள். பெற்றோர் மணவிலக்குப் பெற்று வாழும் குடும்பத்தில் அவள்
தலைப்பிள்ளை. அம்மா அரசு மருத்துவமனையில் தாதி. உடன்பிறப்புகள் மூவர்.
எப்படியாவது பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வெற்றியடைய வேண்டும் என்ற
இலட்சியப் பிடிப்புக் கொண்டவள். இடைநிலைக் கல்வியின் தேர்ச்சியடைவு
பிரமாதம் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அதே வேளையில் அரசாங்கப் பள்ளியில்
சேர்ந்து மீண்டும் தேர்வு எழுத வேண்டுமென்ற எண்ணம் இல்லாத மனச்சோர்வு
கொண்டவள். சீக்கிரமாகப் பட்டப் படிப்பு முடித்துவிட வேண்டும் என்ற அவசர
கதி. மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி பட்டப் படிப்பு முடிக்க வேண்டிய
வாய்ப்பு வந்தது. அம்மாவின் அனுமதியோடு வீட்டை விட்டுப் புறப்பட்டாள்.
உயர்கல்விக்கூடத்தில் PTPTN எனும் பண உதவியிருந்தும் சில தட்டுப்பாடுகளும்
தேவைகளும் அவளை நிலைகுலையச் செய்திருந்தன. நகர்ப்புற வாழ்வின் அழுத்தம்,
அம்மாவின் வருமானம் போதாமை, தம்பி தங்கைகளின் கல்விச் செலவுகள் அனைத்தும்
அவள் கண்முன் நிழலாடின. பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு பருவமும் 2500 வெள்ளியென
ஆறு தவணைகளுக்குச் செலுத்த வேண்டிய கடப்பாடு. அதைப் பல்கலைக்கழகமே ஏற்பாடு
செய்திருந்தது. இதர செலவுகளுக்குப் பிறரிடம் கையேந்த மனம் இடந்தரவில்லை.
அதே நேரத்தில் வீட்டிற்கும் பணம் அனுப்ப வேண்டும். வேலை செய்ய
எத்தனித்தாள். மனமகிழ் விடுதியில் இரவு நேரச் சிப்பந்தியானாள். நண்பனின்
அறிமுகமும் பாடல்களும் அவளை ஈர்த்தனவென்பதைவிட உள்ளத்துக்கு ஒத்தடமாகவும்
பணம் சுரப்பாளனாகவும் அவன் அமைந்திருந்தான் என்பதே மிகப் பொருந்தும். அவளது
எடுப்பான அழகில் தனை மறந்தான் நண்பன். நண்பன் தண்ணீரைப் போல் பணத்தை
அவளுக்காக ஈந்தான். கல்விக்காலம் முடிவுற்றதும் அவனுக்குத் தெரியாமலேயே
திடீரென அவள் வேலை கிடைத்துப் பறந்தாள். அவன் அழுதான்.
என் நண்பன் சொன்ன செய்திகள் :
-
ஏற்கெனவே தனது ஊரில் காதலனால் வஞ்சிக்கப்பட்ட அனுபவம் கொண்டவள்.
-
அவளுக்கு மனத்தின் தேவைகளும் உடலின் தேவைகளும் அதிகமாக இருந்தன.
-
பல இரவுகள் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தன் இளமையை அவனுக்கு
விருந்தாக்கியவள்.
-
பாதுகாப்பான பாலியல் உறவில் எச்சரிக்கையாயிருப்பவள். ஆனாலும், வெகு
நேரம் இன்பம் துய்க்கத் தெரிந்தவள்.
-
தந்தையையும் ஆண்களையும் பொதுவாகவே வெறுக்கிறவள்.
-
பாலியல் உறவின் இறுதியில் தன் குடும்பத்தையும் வாழ்வையும் நொந்து
அழுகின்றவள்.
-
எப்பாடியாவது வாழ்ந்தாக வேண்டுமென்ற இலட்சியப் பிடிப்புக் கொண்டவள்.
-
அவளுக்காக நண்பன் செலவழித்தது ஐம்பதாயிரம் ரிங்கிட்டாவது இருக்கும்.
-
அவள் வேறு யாருடன் உறவு கொண்டிருக்கிறாள் என்பது நண்பனுக்குத் தெரியாது.
ஆனாலும், ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.
அந்தப் பகிர்தலுக்குப் பின் அவளது முகத்தில் சந்திரக் கீற்று ஒளிர்ந்ததை
நண்பன் கண்டிருக்கிறான்.
-
அவள் தன்னை ஏமாற்றினாலும் தன் மனைவியைவிட அவள் உண்மையிலேயே நல்லவள்;
ஆழ் உள்ளத்தில் கொலுவீற்றிருப்பவள்.
மேற்கூறியவை நண்பனின் வாக்குமூலங்கள். அவனது பச்சையான மற்ற விளக்கங்களைச்
சுய தணிக்கைக்கு விட்டுவிட்டேன்.
பொதுவாகவே பாலியல் உறவில் ஈடுபடுபவர்கள் ஆயிரம் காரணிகளை முன்வைத்தாலும் மன
இசைவு என்பதுதான் முகாந்திரமாய் இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கூட
மாணவர்களைப் பொருத்தமட்டில் படி படியென்ற குடும்ப நச்சரிப்பினின்று
மீண்டவர்கள்; தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள வழி தெரிந்தவர்கள்.
சிறிது காலம் இதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று சுதந்திரமாய்
வாழ்ந்து பார்க்க மோகம் கொண்டவர்கள். அதாவது மேலை நாட்டுப் பதின்மங்களைப்
போல துய்த்துப் பார்க்க விழைபவர்கள். பாலியலில் ஆழ்ந்து ஈடுபட்டாலும் அதை
அடுத்த நிமிடமே துண்டித்துக்கொள்ளும் மனோநிலையையும் கொண்டவர்களும்
இருக்கிறார்கள். வெளியில் யாரும் இராமர்கள் இல்லை என்ற சங்கதியையும்
தெரிந்து வைத்தவர்கள். நமது நாட்டில் எல்லா இன மாணவர்களிலும் இந்தச்
சிக்கல் உள்ளது. சதா அதே நினைவுகளோடு கண்மூடித்தனமாகத் தங்களைச்
சிதைத்துக்கொண்டோரும் உளர். சிலர் அதை ஒரு பொருட்டாகவே
எடுத்துக்கொள்வதில்லை. பாலியல் எனது வாழ்வின் ஒரு பகுதியென்று நினைப்பாரும்
உளர். இதை அவர்களின் சமூகக் கட்டமைப்பும் குடும்பப் பின்னணியும் பொருளாதார
நிலையும் தீர்மானிக்கின்றன.
உயர்கல்வி கற்கச் சென்ற எனது இடைநிலைப்பள்ளியின் சீன மாணவியொருத்தி
பல்கலைக்கழகத்தில் ஒருவனைத் தேர்வு செய்திருந்தாள். ஒருகால் இதை
முன்கூட்டியே வீட்டில் பெற்றோர் மிக நாகரிகமாகலெடுத்துச்
சொல்லியிருப்பார்கள் போலும்! முதலில் ஈர்க்கப்பட்டு அதன் பின்னர்
ஒருவரையொருவர் நேர்மையாக அறிந்துகொண்டு இரு குடும்பத்தாருக்கும் தங்களை
ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திக்கொண்டனர். பொருளியல் சிக்கலில்லாத
குடும்பப் பின்னணி இருவருக்கும். இணையை விட்டுப்பிரியாத அன்றில் பறவையைப்
போல எங்கே சென்றாலும் இருவராகவே உலா வந்தனர். அவர்களின் உறவு கல்வி
ஆய்வுக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதமளிப்பதாய் முன்கூட்டியே
உறுதிப் படுத்திக்கொண்டனர். ஒருவரது வளர்ச்சியில் ஒருவர் எனக் கல்வி குறித்த
ஆய்வுகளையும் அணியத்தையும் (thesis) இணைந்தே முடித்தனர். அவர்களுக்குக்
கலவியென்பதும் பாலியல் என்பதும் ஒரு கூறுதான். இரண்டையும் சரிவிகிதமாக
முடித்திருப்பார்கள். இப்பொழுது அவர்களிருவரும் மருத்துவர்களாகத் திருமணம்
புரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி; காதலையும்
காமத்தையும் புனிதப்படுத்திய பாலியலும் உண்டு!
|
|