|
|
"இலக்கியத்துக்குச் சமூகக் கண்ணோட்டமே தேவையில்லை.
வெறும் ருசிதான் இலக்கியம், என்கிறார்களே இது சரியா சார்?" என்றேன்.
அசோகமித்திரன் : சமூகக்கண்ணோட்டம் கூட தேவையா? இல்லையா என்பதை
முடிவெடுக்கும் உரிமை எழுத்தாளனுக்கிருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட எழுத்து
வாசகனுக்குத் தேவையா இல்லையா என்பதையும் வாசகனே தீர்மானித்துக்கொள்வான்.
பிறகு குறை சொல்லக்கூடாது.
"இன்னும் ஒரு கேள்வி சார் ! சமூகப்பிரக்ஞை மட்டும்தான் இலக்கியம் என்றால்,
தி.ஜா.வின் அம்மா வந்தாள், மோகமுள் போன்ற கதைகளில் சமூகசிந்தனை என்ற
சொல்லாடல் எங்கே? தனிமனித மனங்களுடைய போக்கு,மன இயல் ஆய்வு, பற்றி
எழுதுவதெல்லாம் சும்மா தானா?"
அசோகமித்திரன் : தனிமனிதம் பற்றிய ஆய்வு எழுதவும் தனித்திறமை வேண்டும்.
"இதுதான்... இதுதான் சார் என்டெ அபிப்ராயமும் கூட. காதலைப்பற்றி அப்படி
அனாயாசமாய் எழுதிடல் முடியுமா? எழுதமுடியுமா சார்? கனிந்து குழைந்த மனது
வேண்டுமே சார்! இருட்டுக்கட்டிய கருவறையில் கண்களை இடுக்கிக்கொண்டு, உற்று
நோக்குங்கால், ஒரு கணம், ஒரே ஒருகணம், அம்பிகை கண்களைச் சிமிட்டியதை
பார்த்த அனுபவம், பூரித்த அனுபவம், எத்தனை பேருக்குக்கிட்டும்?
அசோக மித்திரன் : தெளிவாக சொல்லுகிறீர்கள் அம்மா, ஆனால் மிகவும் உணர்ச்சி
வசப்படுகிறீர்களே?
"சார், தமிழின் முதல் குறியீட்டு நாவல் நிங்ஙளின் 'தண்ணீர்'தான் என்று
ந.முத்துசாமி சார் சொல்கிறார் ”
சிரித்து மகிழ்ந்து பேசினார் அசோகமித்திரன்.
இப்படியெல்லாம் சில கேள்விகட்கு சுவாரஸ்யமாகவும், ரசித்தும் பதில்
சொல்லிக்கொண்டே திடீரென்று அசோகமித்திரன் சார் கேட்டார்.
”ஆமாம்! நாடகத்துறை என்கிறீர்களே? இந்திரா பார்த்தசாரதியைப்போய்
பார்த்தீர்களா?’
"இல்லை சார்!. நேரமே கிட்டவில்லை.கூத்துப்பட்டறையில், என்டெ
பயிற்சிகள்,ஸ்க்ரிப்ட், வேலையே சரியாக இருந்தது.“
”ஏன் கவலைப்படுகிறீர்கள்? நாளை நாங்கள் அழைத்துப்போகிறோம், என்று சா.க வின்
மனைவி ரோகிணி கூற , மகிழ்ச்சியாக இருந்தது. இதற்குள் காப்பி வர, இவளே
எடுத்து, அசோக மித்திரன் சாருக்கு கொடுக்க, மனசு உற்ற சந்தோஷம் இம்மட்டு
அம்மட்டு அல்ல. இவர்களெல்லாம் தமிழில் இவள் பெரிதும் மதிக்கும் மனிதர்கள்.
தமிழிலக்கியத்தில் இவள் வணக்கத்திற்குரிய சான்றோர்கள்.
இவளால் தனது அன்பை இந்த எளிமையில்தான் நிரவல் செய்ய முடிந்தது. பேசிப்
போதவில்லை தான். என்றாலும் நேரமில்லை. மாலையாகிவிட்டது. அசோகமித்திரன் சார்
புறப்பட்ட, அடுத்த நிமிஷம் இவள் சரவணனின் காரில் கூத்துப்பட்டறைக்குப்
புறப்பட்டாள்.
உள்ளே நுழைந்த மறுநிமிஷம், 'சேச்சி!' என்ற கூக்குரலோடு மாணவர்கள் சூழ்ந்து
கொள்ள, முத்துசாமி சார், அலுவலக அறையினின்று வெளிப்பட்டார். மாநாட்டில்
நடந்த அனைத்து சேதிகளையும், ஆசிரியரிடம் பேசி முடித்தபிறகுதான் இவளுக்கு
ஆஸ்வாசம் ஏற்பட்டது. அதற்குள் தொலைபேசி அடிக்க,முத்துசாமி சார்
எடுத்துப்பேசினார். பின் கடகடவென்று சிரிக்கிறார்.
”அதெல்லாம் கவனமாக இருப்பார், பத்திரமாக வந்து சேருவார். கவலைப்படாதீர்கள்.
சரி, நிங்ஙள் என்று சென்னை வருகிறீர்கள்? என்றெல்லாம் கேட்டு போனை இவளிடம்
கொடுக்க... கணவர்தான். பரவசம் தாங்கவில்லை. குழந்தைகள் பற்றி இவள் கேட்க,
அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ”பாஸ்போட் பத்திரம்,லக்கேஜ் பத்திரம்,
புறப்படுவதற்கு முன் எல்லாம் , ஒன்றுக்கு 2 முறை கவனமாக செக் செய்து
லக்கேஜைப் பூட்டு.பாஸ்போட்டை கைப்பையிலேயே வைத்துக்கொள்!” என்றார்.
”அதெல்லாம் ஞான் கவனமாக பார்த்துக்கொள்கிறேன். இது கூடவா எனக்குத்
தெரியாது?”
என்றிவள் சொல்ல, “உன்னைப்பற்றி எனக்குத்தெரியாதா? உன்னுடைய அறிவு பற்றி
எனக்குத்தானே தெரியும், சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கிறதல்லவா?" என்று கணவர்
கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் உபதேசம்... உபதேசம் ... உபதேசம் என்று
பொழிய, இவள் போனை வைத்துவிட்டுத்திரும்பினால், முத்துசாமிசார் இன்னமும்
சிரித்துக்கொண்டிருந்தார்.
2 மணிநேரத்துக்குப் பிறகு, ஒரு வழியாக லாக்கேஜை சரிப்படுத்திவிட்டு,
குளித்து பூஜை முடித்து, வெளியே வர ஜெயந்தன் சார் ஹாலில் காத்திருந்தார்.
மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அன்றைய ஜெயந்தனின் அனைத்து
எழுத்துக்களையும் இவள் ஆய்வுக்கு படித்திருந்தாள். அவரும் ராமானுஜம் சாரின்
மாணவர் என்றறிய ஆச்சர்யம் இம்மட்டு அம்மட்டல்ல.[இவரும் நவீன நாடகத் துறைப்
பக்கம் போய் விட்டதால், இப்பொழுது சிறுகதை எழுதுகிறாரா? என்று
தெரியவில்லை.]
"அட! நம்ம முத்துசாமிதான் கமலா சொன்ன வீரபாண்டிய கட்டபொம்மனா?"என்று
திடீரென்று ஜெயந்தன் போட்டுடைக்க, வெலவெலத்துப்போனாள். நல்லவேளை,
கட்டபொம்மன் கோபப் படவில்லை.'எனக்குத் தெரியும்' என்பதுபோல் இன்னும் ஜோராய்
மீசையை முறுக்கிவிட்டு கம்பீரம் காட்டினார்.
இலக்கியம்... இலக்கியம்... இலக்கியம்... ஜெயந்தன் சாரின் அனைத்துக்
கருத்துக்களுமே, விரிவாக்க நிலையில்,பரந்து பட்ட பார்வையிலிருந்ததில்
ஆச்சர்யமில்லை. தொழில்துறையில் மருத்துவர் அல்லவா?
Non Linear ஆகட்டும் magical realism ஆகட்டும். எப்படியெல்லாம்
நவீனத்துக்கு, பதக்கம் சூட்டினாலும்,கதை சொல்லும் மரபை உள்வாங்கி, புதிய
கோணத்தில் ஒரு வடிவம் கொடுக்கிறோம். கலை ஸ்தூலமானது என்பதுபோல் தானே சார்
இலக்கியமும்?
ஜெயந்தன் : ஏற்றுக்கொள்கிறேன் கமலா. மூணாந்தரம், நாலாந்தரம், எழுத்துகூட
சில சமயத்தில் தேர்வு செய்யப் படுகிறதுதான். ஆனாலும் இதனால் எல்லாம்
பாதிக்கப்படாமல், தன்னுடைய பன்முகப்பார்வையிலிருந்து விலகாமல், ஒழுங்காக
தன்னுடைய பதிவுகளைச் செய்ய தெரிந்தாலே போதுமே! ஆத்ம திருப்தியின்
விருதுதானே அவனது முதல் வெற்றி ?' என்றார்.
மாணவர்களும் வீடு திரும்பும் நேரம், ”சேச்சி, இனி, திரும்ப இங்கே வரவே
மாட்டீர்களா?” என்று முருகன் கேட்க,”அதெப்படி, எங்கள் சேச்சியை
பார்க்காமலிருப்பது? சேச்சியின் தமிழைக்கேட்க இனி சிங்கப்பூருக்குத்தான்
வரவேண்டுமா?" என்று பசுபதி கேட்க, அவளுக்கு மனசு கனத்துப் போயிற்று.
எல்லோருமே போனபிறகு, சமையல் அம்மாவும் இவளும் மாத்திரம் தனித்து விடப்பட,
அப்பொழுதுதான் இனம் புரியா வேதனை நெஞ்சைக் கவ்வியது.
மறுநாள் காலையிலேயே, சா.க வும், அவர் மனைவியும் இவளை அழைத்துப்போக, முதல்
பார்வையிலேயே , இந்திரா பார்த்தசாரதி சாரை மனதார நமஸ்கரிக்கத்
தோன்றியது.இவளை அறிமுகப்படுத்திவிட்டு, சா.க செல்ல, இவளால் நம்பவே
முடியவில்லை.வெலிய அம்மாவன் போல், இளையச்சன் போல், ரொம்ப சொந்தமான
உறவுக்கார மனிதரைப்பார்ப்பதுபோல் அப்படியொரு அன்னியோன்யம் அவரைக்கண்டதுமே
ஏற்பட்டது.
இந்திரா பார்த்தசாரதி சாரும் அவ்வளவு மென்மையாகப் பேசினார். குழந்தை போல்
சிரித்த முகம். கண்கள் கூட அன்பாகப் பேசியது. மலையாளம் பேசும் திருவனந்த
புரத்து மருமகனை இவளுக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு முன்னால் தன்னை
ஒரு டைரக்டர் என்று சொல்லிக் கொள்ளவே இவளுக்கு தயக்கமாக இருந்தது. கணவர்,
குடும்பம், குழந்தைகள், என்றெல்லாம் அன்பாக விசாரித்தார். சிங்கப்பூர்
இலக்கியம் பற்றி விசாரித்தார். பிறகுதான் சாஹித்ய பக்கம் வந்தார். இவள்
தனது சம்சயங்களையெல்லாம் கேட்டாள்.முத்துசாமி சாரிடமோ, ராமானுஜம் சாரிடமோ
கேட்டே இராத கேள்விகள்.
[1] ”சார்! realistic நாடகங்களைத் தெரிந்து கொண்டபிறகுதான்,ஸ்டைலைசேஷன்
நாடகங்களுக்குப்போக வேண்டுமென்பது என்டெ அபிராயம், இது சரியா சார்?
[2] சத்யஜித்ரேயின் பதர் பாஞ்ஜாலியின் பாணியில் வருபவை மட்டும் தான்
நவீனத்தின் உச்சமா?
[3] horizontal movementsக்கும், verticl movements க்குமான, நளினம் எனக்கு
புரிய சிரமமாக உள்ளது .நடன அசைவுகள், அடவுகள், இசைக்கூறுகள், என அனைத்து
அம்சங்களும் சேர்ந்தால் தானே dramatic text பூர்த்தியாகும்?
[4] நவீன நாடகத்தில் வரும் ஒவ்வொரு பரிசோதனை முயற்சியும், அவரவர்
புரிதலாகத் தானேஇருக்கிறது? எல்லோரையும் சென்றடையும் உத்தியாக ,ஆடாமல்,
அசையாமல் பார்வையாளர்களை, இருக்கையிலிருத்தி வைக்கும் சாகசம் சிலரால்
மட்டும்தான் சாத்தியமா சார்?
[5] யதார்த்த நாடகங்களில் ஒரு ப்ரத்யேக அடித்தளமுள்ளதாக எனக்குப் படுகிறது.
ஆனால் யதார்த்ததை புறந்தள்ளிய நவீனத்துவ ஆசிரியர்களிடம் தான், oriental
தியேட்டருக்கான பாணி
அதிகம் என்பதை, என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.எது சத்யம்?
[6] Narrative styleல் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு,performing arts ல்
கொண்டு வந்தால் என்ன தப்பு?
இந்திரா பார்த்தசாரதி, தமிழின் மிக முக்கிய நவீன நாடக முன்னோடிகளுள்
ஒருவரல்லவா? அழகாக விளக்கினார்,மிக மிக அருமையாக விளக்கினார். [பொறுமையாக
இவளது சிற்றறிவுக்கு புரியும் விதத்தில்) பிறகுதான் இவளது படைப்பு பற்றி
விசாரித்தார். யார் டைரக்ஷன் என்று கேட்க, ஒரு நிமிஷம்
வெட்கிப்போனாள்.தயக்கத்துடன் "என்டெ ஸ்க்ரிப்டை ஞானேதான் சார், டைரக்ட்
செய்வேன்,”என்றிட மலர்ந்து சிரித்தார்.
அவரது மழை, போர்வை போர்த்திய உடல்கள்,முத்துசாமி சாரின் நாற்காலிக்காரர்,
உந்துச்சுழி, ராமானுஜம் சாரின் வெறியாட்டம்,அல்காஷியின் தேசிய நாடகப்பள்ளி
பற்றிய தகவல்கள், எனப்பேசிக் கொண்டிருக்க, சா. கந்தசாமி வர,இ.பா. தன்னுடைய
நூல்களில் இரண்டை தர, பொன்போல் பெற்றுக்கொண்டு அருமையான அந்த மனிதரை வணங்கி
விடை பெற்றாள். திரும்பி கூத்துப்பட்டறைக்குள் நுழைந்த போது முத்துசாமி
சாரின் மனைவி வந்து காத்திருந்தார்.
அப்படியே அவரைக்கட்டிக்கொண்டு நின்றபோது, அம்மா அன்போடு அணைத்துக்கொண்டார்.
அம்மா போனபிறகு இவளது வேலைகள் ஆக்ரமிக்க, மாலை வந்தது. மாணவர்கள் அனைவரும்
அன்று அவளுடன் பேச அருகே வந்து விட்டனர். வகுப்பு கூட அன்று நடக்கவில்லை.
நாளை பயணம் அல்லவா?
”சேச்சி” என்றழைத்தவாறே, சந்திரா அருகே வர, அந்தப்பெண்ணைப் பார்க்கப்
பார்க்க அவ்வளவு கவலையாக இருந்தது. முதன் முதலாக சென்னைத்தமிழை அவள்தான்
பேசிக்காட்டினாள். பசுபதி, சேச்சி” என்று அழைத்தபோதே அவனுடைய குரல்
கம்மியது. வினாயகத்துக்கு மட்டும் இவள் அம்மா!. அப்புக்குட்டன், குமார்,
குமரவேல், முருகன், தென்னாற்காடு, களறி ஆசிரியர், இசை ஆசிரியர், ரவிவர்மா,
என ஒவ்வொருவரும் அவள் அருகே வர, அவர்களின் சோகம் நெஞ்சைப்
பிழிய,கட்டுப்பாட்டையும் மீறி அவளுக்கும் கண்ணீர் வந்தது.
தொடரும்
|
|