|
|
1724 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இம்மானுவேல் காண்ட் ஒரு முக்கியமான
சிந்தனையாளர் என்லாம். அறிவின் மீதான இவரது கோட்பாடு முக்கியத்துவம்
வாய்ந்தது. தனக்கு முன் நிலவிய அறிவின் மீதான கோட்பாடுகளை இவர்
நிராகரித்தார். காண்டுக்கு முந்தைய தத்துவவாதிகள் தங்களைச் சுற்றி இருந்த்த
உலகத்தைத் தங்கள் கண்களால் காண்பதை உண்மைத் தோற்றம் என்று நம்பினார்கள்.
காண்ட் அதைக் கேள்விக்குள்ளாக்கினார். ‘ஒரு பொருளை நாம் கண்களால் பார்ப்பது
வேறு; அது இயல்பில் இருப்பது வேறு’ என்றார் அவர். ஒரு மரத்தை நாம் மஞ்சள்
கண்ணாடி அணிந்து பார்த்தால் அது மஞ்சள் வண்ணத்தில் தெரியும். ஆனால்,
மரத்தின் அசல் தோற்றம் மஞ்சளாக இராது. கண்களால் காண்பதை அப்படியே ஏற்றுக்
கொள்ள முடியாது’ என்றார். இப்படி நாம் பெறும் அறிவின் மேல் சந்தேகத்தைக்
கிளப்பியதால் இவரது கோட்பாட்டைச் சந்தேக வாதம் என்றும் சொல்வதுண்டு.
சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் உள்ள வேற்றுமை பகுத்தறிவு சார்ந்ததே
அன்றி உளநெகிழ்ச்சி சார்ந்ததல்ல. இது ஒரு மனிதனின் உள்ளார்ந்த மனநிலை. சரி,
தவறு, நல்லது, கெட்டது போன்ற பாகுபாடுகள் தத்துவமானது பகுத்தறிவுக்கும்,
அனுபவவாதத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தடுமாறுவதைக் குறிக்கிறது.
அறிவு என்பது முடிவின் வடிவத்தில் வெளிப்படுகிறது. நாம் அறிவு என்பதை
முடிவின் மூலமே அடைகிறோம். நாம் அறிவின் மூலம் ஒரு விஷயத்தை ஆராயும் போது
அதை ஆதரித்தாலோ அல்லது எதிர்த்தாலோ அந்த நிலைப்பாடு முடிவாகத்தான்
வெளிப்படுகிறது. எல்லா முடிவுகளையும் அறிவு என்று கொள்ள முடியாது
என்பதெல்லாம் காண்டின் சிந்தனைகள்.
1787ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வந்த போது சில மாற்றங்கள் நிகழ்ந்தன.
அப்போதுதான் மனிதன் பிறந்தான் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அது வரை
மனிதன் என்ற மாண்பை மனிதன் பெற்றதில்லை. மன்னன் பெரியவன். மக்கள் அவன் முன்
உடைமைகள் அல்லது கீழ்ப்படிதலுள்ள (Subjects) பிராணிகள் மட்டுமே. பிரெஞ்சுப்
புரட்சிதான் சமத்துவம், விடுதலை, பெண்களுக்கான சுதந்திரம் போன்ற புதிய
சிந்தனைகளைப் பிறப்பித்தது. அது வரை பெண் என்பவள் இரண்டாம்தரக்
குடிமகளாகவும், ஆண்களின் போகப்பொருளாகவும் மட்டுமே இருந்தாள். ஆணும்
பெண்ணும் சமம் என்ற கருத்து தோன்றியதும் அப்போதுதான். அத்தகைய புதிய
சூழ்நிலையில்தான் ஒரு ப்திய கோட்பாடு பிறந்தது. அதன் பெயர் ரொமாண்டிசிசம்.
இதைத் தமிழில் மிகையுணர்ச்சிக் கோட்பாடு எனலாம்.
மறுமலர்ச்சி யுகம், பரோக் யுகம், அறிவொளி யுகம் ஆகியவை கடந்து போன பின்
வந்த ரொமாண்டிக் யுகம் மனித சிந்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதுதான் வாழ்க்கை பற்றிய மனிதனின் கடைசி அணுகுமுறை எனலாம். ‘உணர்தல்’,
’கற்பனை’, ‘அனுபவம்’, ‘ஏக்கம்’ ஆகியவை ரொமாண்டிக் யுகத்தின்
சொல்லாடல்களாகும்.
இதுவரை அறிவின் வெளிப்பாடு என்பது தத்துவவாதிகளின் கையில் இருந்தது.
ரொமாண்டிக் யுகம் அதை மாற்றிப்போட்டது. அறிவின் வெளிப்பாடு என்பது
கலைஞர்களின் கைக்கு வந்தது. எந்த ஒரு சிந்தனையையும் ஒரு தத்துவவாதியை விட
கலைஞனால் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று கூறியது.
ஜெர்மன் தத்துவவாதியான இம்மானுவேல் காண்ட் ரொமாண்டிசிசத்தின் தந்தை என்று
அறியப்படுகிறார். ‘சுய அனுபவவாதத்தின் மூலம் அறியப்படும் அறிவே உண்மையான
அறிவு’ என்பது அவரது கொள்கை. எனவே சுயம் போற்றப்பட்டது. மனிதன் கொண்டாடப்பட
வேண்டியவன் ஆனான். தன்முனைப்பு (Ego) வணங்கப்பட வேண்டியதாயிற்று. காண்டின்
கருத்தை ஷில்லர் என்ற ஜெர்மன் கவி வளர்த்தெடுத்து, ‘கலை மட்டுமே நம்மை
வெளிப்படுத்த முடியாததைக் கூட வெளிப்படுத்தும் தன்மைக்குக் கிட்டத்தில்
கொண்டு போகிறது. எனவே, கலைஞன் கடவுளுக்குச் சமம்’ என்றார். இதன் விளைவாக
கலைஞன் படைப்பாளி ஆனான். கடவுள் படைக்கிறார்; படைப்பாளியும் படைக்கிறான்.
எனவே படைப்பாளியும் ஒரு கடவுளே’ என்பது ரொமாண்டிசிசத்தின் கோட்பாடு எனலாம்.
‘கலைஞன் என்பவன் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டியதில்லை; சோம்பலே கலைஞனின்
லட்சியம்’ என்றெல்லாம் ரொமாண்டிசிசத்தின் கோட்பாடுகள் நீட்சியடைந்தன.
ஒரு கலைஞன் தான்தோன்றியாக வாழலாம். ஒழுக்கம் மீறலாம். அதற்கான உரிமை
அவனுக்கு உண்டு. அவனை அவனது கலைத்திறமைக்காகக் கொண்டாட வேண்டும்.
என்றெல்லாம் ரொமாண்டிசிசம் தனது கோட்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டே
போயிற்று. கலைஞனின் தலைக்குப் பின்னே ஒளிவட்டம் சுழன்றது. மாபெரும்
கலைஞர்களான பீத்தோவன், பைரன், ஷெல்லி போன்றவர்கள் ரொமாண்டிசிசிஸ்டுகள்.
இதுவரை வந்த கருத்தியல்கள் கடவுளைக் கொண்டாடின; அல்லது நிராகரித்தன.
ரொமாண்டிசிசமோ கடவுளைப் பொருத்தவரை ஒரு புதிய நிலைப்பாட்டை எடுத்தது.
கடவுள் உண்டு; அவருக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் ஒளி வீசும்
பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இருண்ட பக்கம் என்று புது விளக்கம்
கொடுத்தது.
1844ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த பிரட்ரிக் நீட்ஷே இன்னொரு கருத்தை
வெளியிட்டு அனைவரையும் திடுக்கிட வைத்தார். ‘கடவுள் இறந்து விட்டார்’
என்பதுதான் அவரது அறிவிப்பு. கடவுளின் மரணம் மனித வாழ்க்கையில் அந்திம
இருளையும், நம்பிக்கை வறட்சியையும் கொண்டு வந்திருக்கிறது. கடவுளற்ற இந்த
உலகில் கடவுளின் இடத்தை நிரப்ப ஓர் அதி மனிதன் தேவை’ என்றார் நீட்ஷே.
நீட்ஷேயின் கருத்துகள் அதுவரை நிலவிக்க்கொண்டிருந்த கோட்பாடுகளைத்
தகர்த்தன. சிந்தனைகளில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின.
உலகம் இயங்குவது பற்றி பலர் பலவிதமாக விளக்கி இருக்கிறார்கள். நீட்ஷே புது
விளக்கம் தந்தார். ‘உலகம் இயங்குவது அதிகாரத்துக்கான விருப்புறுதியினால்
மட்டுமே அல்லாமல் வேறில்லை’ என்றார் அவர். வாழும் மனிதர்கள்
ஒவ்வொருவருக்கும் ஆசைகள் இருக்கின்றன. அந்த ஆசைகள் நிறைவேற அதிகாரம் தேவை.
அதிகாரம் தன் கை வசப்படுவதன் மூலம், தனது ஆசைகளை ஒருவன் நிறைவேற்றிக்
கொள்ளும் போது மற்றவர்களின் ஆசைகள் விலக்கி வைக்கப்படுகின்றன. இதனால்
தங்கள் ஆசைகள் விலக்கப்பட்ட மனிதர்கள் துன்பம் அடைகிறார்கள். தங்கள் ஆசை
நிறைவேற வேறு சாத்தியங்கள் உண்டா என்று தேடுகிறார்கள். அப்போதுதான்
அவர்களுக்குக் கடவுள், மதம் போன்ற புகலிடங்கள் தேவைப்படுகின்றன. இப்போது
இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று, வெற்றியாளர்கள்; இரண்டு
வெற்றியின்றி விலக்கப்பட்டவர்கள். இவர்கள் இருவருக்குமான் உண்மை, அறிவு,
அறம் போன்றவை ஒன்று அல்ல. அப்படி இருக்கவும் முடியாது. இவை யாவும்
வெற்றியாளர்களுக்கும், விலக்கப்பட்டவர்களுக்கும் இடையே நிகழும் யுத்தமே.
எனவே, உண்மை என்பது உண்மையான நிலவரம் அல்ல. பொருள்படுத்திப் பார்த்தலே.
உலகத் தத்துவ இயலில் நீட்ஷேயின் தத்துவங்கள் ஒரு புயலைக் கிளப்பின்.
மரபார்ந்த சிந்தனைகளுக்கு மாறாக ஒரு மாற்றுச் சிந்தனையை முன் வைத்தன.
நீட்ஷே வருவதற்கு முன் எல்லோரும் அறிவு, ஒழுக்கம், அறம் போன்றவை ஒன்று
என்றே நினத்தார்கள். நீட்ஷேதான் இவை யாவும் ஒற்றையானவை அல்ல. இரட்டைத்தன்மை
கொண்டவை என்று சொன்னார்.
அதிகாரத்தைக் கையில் எடுத்த ஆண்டான் ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற கருத்தைத்
தன அடிமையின் தலையில் சுமத்தி விட்டு தான் உழைக்காமல் சொகுசு வாழ்க்கை
வாழ்கிறான். சோம்பித்திரிகிறான். அப்படியானால் ‘உழைப்பே உயர்வு’ என்பது
அனைவருக்குமான சித்தாந்தம் இல்லை என்று புலப்படுகிறது அல்லவா? ’ஒருவனுக்கு
ஒருத்தி’ என்பது அடிமைகளுக்காகவே வடித்தெடுக்கப்பட்ட சித்தாந்தம். ஏனெனில்
ஆண்டான்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. எத்தனை பெண்டாட்டிகள்
வேண்டுமானாலும் அவர்கள் வைத்துக் கொள்ளலாம். அதை யாரும் கேள்வி கேட்க
முடியாது. என்வே, ‘அடிமைகளே ஆண்டான்களின் அறத்தைக் கைப்பற்றுங்கள்’ என்று
அறை கூவல் விடுத்தார் நீட்ஷே.
சிந்தனைக் களத்தில் நீட்ஷேயின் கோட்பாடுகள் வித்தியாசமானவை. அவற்றின்
தாக்கம் மிகப் பெரியது. உலகப்புகழ்பெற்ற தத்துவவாதிகளான மார்டின்
ஹைடெக்கர், ஜீன் பால் சார்த்தர், தெரிதா, ஃபூக்கோ போன்றவர்களை உருவாக்கியது
நீட்ஷேயின் சிந்தனைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)
|
|