முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 26
பிப்ரவரி 2011

  கட்டங்களில் அமைந்த உலகு
யோகி
 
 
       
நேர்காணல்:

எல்லா தவறுகளையும் அனுமதிக்கும் இந்த வாழ்வில், நான் சொல்ல என்ன கருத்து இருக்கிறது?

சஞ்சய் குமார் பெருமாள்



குறும்பட விமர்சனம்:

'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)
கே. பாலமுருகன்



மலேசிய இந்தியர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் 'இண்டர்லோக்' (Interlok) மலாய் நாவல் சர்ச்சை குறித்தான அலசல்கள்

"பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?"
ம‌. ந‌வீன்

காலம் கடந்த ஞானமும் தண்டனையும்: “இண்டர்லோக் சமூகத்தின் ஆழ்மனம்”
கே. பாலமுருகன்

அடையாளமற்றவர்கள்
சு. யுவராஜன்



சிறுகதை:

அமென்
கிர‌க‌ம்

விட்டாச்சு லீவு
சின்னப்பயல்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...8
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...15
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...16

லதாமகன்

தவ சஜிதரன்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

ரெ. பாண்டியன்

முத‌லாளிக‌ள் வைத்துள்ள முக‌மூடிக‌ள்

ஒரு பொழுதுபோக்குக்காக வேலைக்குப் போகலாம் என்றிருந்த எனக்கு நிரந்தரமாக வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தை அப்பாவின் மறைவு ஏற்படுத்தியது. தோட்டத்தில் கூலி வேலை செய்யும் அம்மாவின் சொற்ப சம்ப‌ள‌த்தை ஐந்து பேரின் வயிற்றுக்கும், பள்ளிப்படிப்பு மற்றும் இதர செலவுகளுக்கும் ப‌ங்கிடுத‌ல் என்பது கனவிலும் நடவாத ஒன்று. பகுதி நேர வேலையைத் தேடிக்கொண்டு சமாளிக்கலாம் என்பதெல்லாம் வாய்மொழிக்கே வசதியாக இருந்ததே ஒழிய நிஜ வாழ்க்கையில் எப்படித் திட்டமிட்டாலும் செலவுகள் கழுத்தை நெரித்தன. மேலும் அப்பாவின் பராமரிப்பின் போதே தடுமாறிய குடும்ப வண்டியை எங்களால் சீர் செய்து ஓட்ட முடியும் என்றெல்லாம் கூறிக்கொள்ள தைரியம் இல்லை. சமையல் கட்டுக்குள்ளேயே அனுமதிக்காத... பகுதி நேர வேலைக்குத் தடைக்கூறும் அப்பா குடும்ப சந்தையின் செலவாணிகளையும், அதன் பராமரிப்பின் முறைகளையுமா கற்றுக்கொடுப்பார்?

அப்பா "One Man Show"வாக இருந்தே வாழ்ந்தவர். அவரின் விஷ‌யத்தில் தலையிடுவதையோ மூக்கை நுழைப்பதையோ விரும்பாதவர். 18 வருடமாக அவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த குடும்ப வண்டியை மேம்படுத்துவதை விட குடைசாய்ந்திடாமல் காப்பற்றுவதே முக்கியமாக எங்களுக்கு பட்டது. அதற்கு உடனடியாக ஒரு வேலையை நான் தேடிக்கொள்ள வேண்டும். பகுதி நேரமாக அல்லாமல் முழுநேரமாகவே. இந்த முடிவை நான் தெரிவு செய்தபோது ஏற்பட்ட மன உளைச்சலை சொல்லி மாளாது. ஓர‌ள‌வு அந்தஸ்தான வேலைக்குப் போவதற்கும் போதிய கல்வி பூர்த்தியாகாத நிலையில் தொழிற்சாலைக்கு வேலைக்கு போவதற்கா இத்தனைக்காலம் மிகுந்த பண சிரமத்திலும் கல்வி பயின்றேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். அம்மாவைப் போல‌வே அப்பாவும் ஒரு கூலித்தொழிலாளிதான். அந்த வரிசையில் நானும் சேர்ந்து விடுவேனா என்ற எண்ணம் தீயாக நெஞ்சில் உழல ஆரம்பித்தது. என் ஆற்றலை சக்கையாக யாரோ பிழிந்தெடுப்பதைப் போன்ற ஒரு பீதி கௌவிக்கொண்ட‌து. கனத்த இதயத்தோடு அக்கம் பக்கமெல்லாம் வேலைக்குச் சொல்லி வைத்தேன். நானும் அங்காடிக் கடைகள், சில தொழிற்சாலைகள் என வேலைக்கு விண்ணப்பித்து வந்தேன்.

ஒரு மாலைப்பொழுதில் எங்கள் வீட்டிற்கு வந்தான் ஓர் இளைஞன். அழகான முகவெட்டு. கவர்ச்சியான தோற்றம். இதற்கு முன் நான் அவனை பார்த்ததில்லை. "வேலைக்குச் சொல்லி வச்சிங்களா?" என்றான். "ஆமாம்" என்றேன். நான்தான் வேலைக்கு ஆள் எடுக்கிறேன் என்றான். என்ன வேலை? என்றேன். குளிர்சாதன அறையில் வேலை என்றான். குளிர்சாதன அறையில் வேலை என்பது படித்தவர்களுக்கு மட்டுமே அமையக்கூடிய இடமாக பலரும் ஒரு மாயையில் இருந்த கால‌ம் அது. வந்தவனும் கனகச்சிதமாக மாயையை என் மேல் பாய்ச்ச ஆரம்பித்தான். சட்டையில் அழுக்குப் படாமல் வேலைப்பார்த்துவிட்டு வரலாம். நீங்கள் இன்னும் சாமர்த்தியமாக வேலைப்பார்த்து மேல் இடத்தில் நல்ல பெயர் வாங்கிவிட்டால் சூப்ப‌ர்வைச‌ர் ப‌த‌விகூடக் கிடைக்கும். எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கு என்றான். இப்படி பதவி ஆசையைக் காட்டியே வேலையில் சேர்த்துவிடுவ‌து என்ன கலாச்சாரம் என்றே தெரியவில்லை. அவன் என் கண்களையே ஊடுருவி பார்த்தான். இனிக்க இனிக்க பேசினான். என் கண்கள் காட்டப்போகும் ஆர்வத்தையே தேடினான். வேலை எங்கே என்றேன். அருகில் இருக்கும் 'யுபி' தோட்டத்தில் என்றான்.

'யுபி' தோட்டம் வெள்ளைக்கார துரையுடையது. அந்தத் துரை கூலியாட்களுக்கு நல்ல நல்ல சலுகைகள் வழங்குவதாகவும் கூலியாட்களின் நலனைப் பேணுவதாகவும் நானும் கேள்விப்பட்டு இருந்தேன். ஆனால் எனக்கு தோட்டத்தில் வேலைப்பார்ப்பதில் துளியும் விருப்பம் இல்லை என்று தயங்கினேன். தோட்டத்தொழிளார்கள் தற்சமயம் நாள் ஒன்றுக்கு 14ரிங்கிட் சம்பளம் பெறுவதாகவும் இதர அலவன்ஸ்களை சேர்த்து கணிசமான ஒரு தொகையைச் சம்பளமாக ஈட்ட முடியும் எனவும் தொழிற்சாலைகளை விட கொஞ்ச‌ம் அதிகமாகவே சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தான். பார்த்து அரைமணி நேரம் கூட ஆகாத அவன் நெருங்கிய நண்பன் மாதிரி சில சமயம் குழைந்தும், சில சமயம் கனிந்தும் பேசினான். பலவீனமான இதயம் கொண்ட பெண்களாக இருந்தால் அவனிடம் நிச்சயம் காதல் வசப்படக்கூடும். அது அவனின் சாமர்த்தியமாக இருக்கலாம். அல்லது அவனின் இய‌ல்பாக‌வும் இருக்கலாம். மூடுந்து ஓட்டுனரான அவன் ஆட்களைச் சேகரித்து வேலைக்கு அமர்த்தினால் கமிசன் உண்டு. தொழிலாள‌ர்களின் அன்றாட வேலை போக்குவரத்துக்குத் தனியாக மாதச்சம்பளம் உண்டு. பயன்படுத்த‌ப்படும் வாகனம் அவனின் சொந்த வாகனமாக இருப்பின் அதற்கும் த‌னி அல‌வ‌ன்ஸ் உண்டு. இத்தனை சம்பளத்துக்கும் அவன் பேச்சையே அதிகமாக முதலீடு செய்வான் போல் தோன்றிய‌து. குறிப்பாக பெண்களிடம்.

குளிர்சாதன அறையில் சுலபமாக யாருக்கும் வேலை கிடைக்காது. உங்களைப்போன்ற வயதுப் பெண்கள் மட்டுமே அங்கே வேலை செய்கிறார்கள். தயங்காமல் வரவும் என்றான். அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் "சரி வருகிறேன்" என்றேன். நாளைக்காலை 7 மணிக்குத் தயாராக இருங்கள் என்றுக்கூறி மெல்லியதாக சிரித்துவிட்டு சென்றான். என் வாழ்க்கையில் நிகழப்போகும் எதிர்பாராத திருப்பங்களை எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற ஆற்றாமை ஒரு புறமும் அப்பாவின் மரணம் மறுபுறமும் என்னை நெருக்கடியில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.

என் எதிர்காலத்தை நிர்ணயித்த அந்த விடியலில், அவன் சொன்ன அந்த நேரத்தில் நான் தயாராக இருந்தேன். இதே போல விடியலில்தான் நான் நேற்றுவரை பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தேன். இன்று அந்த விடியல் உழைப்புக்காகவும் ஊதியத்துக்காகவும் எனக்காக உதித்திருந்த‌து. காலம் எத்தனை விரைவாகவும் சாதுர்யமாகவும் தன்னை நகர்த்திக்கொள்கிறது. அது கற்பிக்கும் பாடம்தான் என்ன? விளங்காமலே மூடுந்துக்காகக் காத்திருந்தேன். அந்த பையன் வந்தான். காலை 8 மணிக்கு வேலை. காலை பசியாறுவதற்கு ஏதாவது வாங்கிக் கொள் என்றான். நான் தயாராக வைத்திருப்பதாக அவனிடம் சொன்னேன். மீண்டும் அதே புன்முறுவல். ஏன் சிரிக்கிறான்? வழிவதைப்போல அல்லது மழுப்புவதைப்போல. அப்பாவின் மரணம் நெஞ்சில் கனன்றுகொண்டே இருந்ததால் அவன் பார்ப்பதையும் சிரிப்பதையும் சிலாகிக்க முடியவில்லை. அவன் என்னை சிடுமூஞ்சி என்றோ நினைப்பு பிடித்தவள் என்றோ நினைத்திருக்கலாம்.

நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த தோட்டத்துச் சாலையை நெருங்கியபோது காலை மணி 7.30 ஆகியிருந்தது. உள்நுழையும் தோட்டத்துச் சாலையின் வடது இடது புறமும் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு பொட்டலான நிலம். அங்குதான் வெள்ளைக்கார துரை தன் ஹெலிகாப்ட‌ரை கொண்டு வந்து இறக்குவானாம். அதைப்பார்ப்பதற்கே நிறைய மக்கள் அங்கே கூடுவார்கள். இதற்காகவே துரை அந்த இடத்தை பொட்டலாக வைத்திருந்தான். அவன் சொன்ன அந்தக் குளிர்சாதன அறையின் முன் வண்டியை நிறுத்தினான். அது ஒரு பலகை கொட்டகை. பழைய பொருட்களை போட்டு வைக்கும் ஸ்டோர் மாதிரி இருந்தது. திரு திருவென விழித்துக்கொண்டே நின்றேன். ஆனால் ஒரு வார்த்தைக்கூட அவனிடம் எதுவும் பேசவில்லை. எனக்குள்ளே ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் இதுதான் குளிர்சாதன அறை. உள்ளே போ என்றான். கழுத்து அறுக்கப்ப‌ட‌ப்போகும் கோழியின் மனநிலை எப்படி இருக்குமோ தெரியாது. அந்நேர‌த்தில் என் ம‌ன‌நிலையை வைத்து அதை யூகித்துக் கொண்ட‌ப‌டி உள்ளே சென்றேன். வயதுப்பெண்கள்தான் உள்ளே இருந்தனர். சுமார் 14 பெண்கள் இருந்திருப்பார்கள். அத்தனைக் கண்களும் ஒரே நேரத்தில் என்னை எதிர்க்கொண்டன. சிலர் சிரித்தனர் சத்தமாகவும் சிலர் மௌன‌மாகவும். அதற்கு காரணம் நான் அணிந்திருந்த உடை. அவர்கள் முழுக்கால் சிலுவார். அதன் மேல் முட்டிக்கால் வரை பாவாடை. நீண்ட காலுரையை சிழுவாரின் மேல் இழுத்துமாட்டி இருந்தனர். ரப்பர் காலணி. முழுக்கை சட்டையினுள் அரைக்கை சட்டை. முகத்தில் மஞ்ச‌ள். பொட்டு, கண்மை, தலையில் பூ. என் பாட்டி தோட்டத்தில் வேலைப் பார்த்தபோது இப்படித்தான் உடை அணிந்து மண் வெட்டியை தோளில் மாட்டிக்கொண்டு வருவார். இந்தப்பெண்கள் என் பாட்டியை ஞாபகப்படுத்தினர். நானோ முழுக்கால் சிலுவார். இடுப்புவரைக்கொண்ட அரைக்கை சட்டை. துணிச் சப்பாத்து. 'வந்துட்டா துரை பொண்டாட்டி, மேனஜர் வேலைக்கு' என்பது மாதிரி இருந்தது அவர்களின் பார்வையும் சிரிப்பும்.

யாருமே என்னிடம் பேச வில்லை. கற்கள் படாமலே அவமானத்தில் அடி வாங்கிக்கொண்டேன். உள்ளே 2 மேஜைகள். அதற்கு தோதாக நீண்ட நாற்காலிகள். ஒரு மேஜையில் 8 பேர் அமரலாம். காலியாக இருந்த இடத்தில் அமர்ந்துக்கொண்டேன். அங்கே ஒரு காத்தாடிக்கூட இல்லை. ஏன் குளிர்சாதன அறை என்று அதை அழைக்கிறார்கள் என்றே புரியவில்லை. இர‌ண்டு ஜன்னல்கள் இருந்தன. அதையும் மெல்லிய வலைக்கொண்டு மூடி இருந்தனர். சிறையில் மாட்டிக்கொண்ட மாதிரி ஒரு பரிதவிப்பு இருந்தது. நான் அமர்ந்திருந்த இடத்தில் துணியால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்றை கொண்டுவந்து வைத்தாள் ஒரு பெண். பாத்திரம் நிறைய செம்பனை உதிரி பழங்களையும் கொண்டு வந்து வைத்தாள். கையுரையும் கொடுத்தாள். எல்லோருக்கும் அது போலவே கொண்டு வந்து வைத்தாள். நான் பொட்டலத்தைப் பிரித்தேன். கையளவு சின்னதாக ஒரு வெட்டுக்கத்தி. வெங்காயம் நறுக்குவதை போன்றதொரு சிறிய கத்தி. ஆறு இஞ்சிக்கும் குறைவான நீள‌த்தில் ஒரு பலகை. நிமிந்து பார்த்தேன். பெண்கள் துரிதமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். உதிரி பழங்களை ஒவ்வொன்றாக பலகையில் வைத்து நறுக்கி அதன் விதையையும் சுளையையும் தனியே பிரித்துக்கொண்டிருந்தனர். இதுதான் வேலை என்பதை புரிந்துகொண்டேன். பெண்களின் கை எவ்வளவு வேகமாக வேலை செய்ததோ அதே அளவுக்கு அவர்களின் வாயும் வேலை செய்தது. முந்திய நாளில் பார்த்த படம், புதிதாக வாங்கிய துணி, கூட்டுக்கட்டுதல் இப்படி ஆளுக்கொரு கதையாக அவர்களின் வாய் அளந்துகொண்டே இருந்தது.

சிறிது நேர‌த்தில் கங்காணி வந்தார். என்னை நேர்முக தேர்வு செய்வதற்கும் பெயர் பதிவதற்கும். அரைக்கால் சிலுவார் மற்றும் அரைக்கை சட்டையை 'டக் இன்' செய்து இடைவார் அணிந்திருந்தார். தொப்பி போட்டிருந்தார். என் பெயர், வயது, படிப்பு போன்றவற்றை விசாரித்தவர், தாய் தகப்பன் தோட்டத்தில் வேலை பார்த்திருக்கிறார்களா என்று கேட்டார். ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை. வேலைக்கு வரும் யாரிடமும் இதைக்கேட்பார் என்றே நினைக்கிறேன்.

அம்மா தோட்டத்தில் பிறந்து வள‌ர்ந்தவர். பாட்டி ஓய்வு பெறும் வரை தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார். அம்மா கொஞ்ச‌காலமாகத்தான் வேறு ஒரு தோட்டத்துக்குக் காட்டுவேலைக்கு போய்க்கொண்டு இருக்கிறார். அப்பா திருமணத்துக்கு முன் தோட்டத்தில் ஒரு மாதம் என்னவோ வேலை பார்த்தாராம். காட்டு வேலைதான். அதன்பிறகு தோட்டத்து வேலைக்கே போகவில்லை என விள‌க்கினேன். அதற்குதான் நீ வந்துட்டியே என்றார். சடாரென்று யார் யாரோ என் முகத்தில் அறைவது மாதிரி இருந்தது. வாயடைத்துப்போய் அவரையே பார்த்தேன். எந்த சீமைக்கு போனாலும் பூர்வீகத்துக்கு வந்துதான் ஆகனும். டாக்டர் மகன் டாக்டர்; டீச்சர் மகன் டீச்சர்; கூலி மகன் என்ன வென்று பெண்களைப்பார்த்து கேட்டார் கங்காணி. 'கூலி' என்றார்கள் பெண்கள் ஒரே குரலில். அவர் என்னிடம்தான் பேசுகிறாரா என்ற குழப்பமே எனக்கு வந்துவிட்டது. அதற்கு பிறகு அவர் பேசிய எதுவுமே என் செவிகளில் விழவில்லை. அதைவிட நானே என் மனதுக்குள் உரக்க பேசிக்கொண்டிருந்தேன்.

தப்பு செய்துவிட்டேன். நான் இங்கு வந்திருக்கவே கூடாது. இது அப்பாவுக்கு செய்யும் துரோகம். நாங்கள் செய்யும் பணியை நீங்கள் செய்யக்கூடாது என்ற அவரின் சொல்லை மிகை படுத்தி மீறுவதற்கு ஒரு போதும் நான் தயாராக இல்லை. உண்மையில் வேறு வேலை கிடைக்கும் வரை இந்த வேலையை செய்யலாம் என்றெண்ணிதான் போனேன். ஆனால் கூலி என்ற அப்பாவின் முத்திரையின் நிழல் எங்கள் மேல் விழுவதற்கு நானே காரணமாக இருக்க கூடாது. அதைவிட கூலி என்ற முகமுடியை அணிவிக்க இவர் யார். சிலர் இதுபோன்ற முத்திரை குத்துவதில் கில்லாடிகள். முகத்துக்கு நேராகவும், முகத்துக்கு பின்னாடியும் எப்படி வசதி படுகிறதோ அப்படி முத்திரையை குத்துகிறார்கள். இது விதி செய்த சதி என்று வரையருக்க நான் பக்குவப்படவில்லை. தாத்தாவிடமிருந்து அப்பாவுக்கும் அப்பாவிடமிருந்து எனக்கும் இடம் மாறப்போகும் முத்திரையை உடனே கிழித்தாக வேண்டும். அது என்னால் முடியும். தாமதிக்காமல் குளிர்சாதன அறையை விட்டு வெளியேறினேன். மூடுந்து ஓட்டுனரான அந்த இளைஞன் வெளியே நின்றுகொண்டிருந்தான். எனக்கு உடல்நலம் சரியில்லை. வீட்டிற்கு போகனும் என்றேன். அவன் என்னை எந்தக்கேள்வியும் கேட்கவில்லை. இவன் இதை எதிர்பார்த்திருக்கவும் கூடும் என நினைக்கிறேன். வீட்டை அடைந்ததும் நாளை வேலைக்கு ஏற்றுவதற்கு வர வேண்டாம். நான் வர மாட்டேன் என்றேன். அவன் அப்போதும் எதுவும் பேசவில்லை. முக்கியமாக இந்த முறை அவன் என்னைப்பார்த்து சிரிக்கவில்லை.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>