முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 27
மார்ச் 2011

  ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் ...3
கே.பாலமுருகன்
 
 
       
நேர்காணல்:

'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?'

லீனா மணிமேகலை



கட்டுரை:

ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.



பத்தி:

மலேசிய பிரதமருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்

இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்




சிறுகதை:

விரல்
கமலாதேவி அரவிந்தன்

எதைத்தான் தொலைப்பது?
குரு அரவிந்தன்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...16
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



'நேர்காணல்' இதழில் வெளிவந்த எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...17

சபரிநாதன்

செல்வராஜ் ஜெகதீசன்

எம். ரிஷான் ஷெரீப்

தோழி

கே. பாலமுருகன்

யாங்சே நதிக்கரையின் சோகமும் ஒரு தெரு விட்டுச்
செல்லும் குழந்தைகளும்
(ஹங்காங் சினிமா: மே மற்றும் ஆகஸ்ட்)

“ஜப்பானிய இராணுவத்தால் எரிக்கப்பட்ட
எங்களின் பெற்றோர்கள்
பின்னர் சாம்பலாகி மேகத்தோடு சேர்ந்து
மழையாகிப் பொழிந்து
இன்று யங்சே நதியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்”

சீன இசை பின்னணி பெருகி ஒலிக்க சோகம் ததும்ப இரண்டாம் சீன ஜப்பானிய போரில் பெற்றோர்களை இழந்த பல்லாயிரக்கணக்கான சீன சிறுவர்கள் யங்சே நதிகரைக்கு வந்து சேர்கிறார்கள். நதியில் சலனமின்றி ஓடிக்கொண்டிருக்கும் நீரைப் பார்த்து “அப்பா... அம்மா... நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என எல்லோரும் கதறுகிறார்கள். அவர்களின் குரல்களைச் சேமித்துக் கொண்டு மீண்டும் எந்தச் சலனமுமின்றி யங்சே நதி தூரமாகத் தெரியும் வானத்தின் பரந்த விரிப்பின் அடியில் மறைந்து ஓட மே மற்றும் ஆகஸ்ட் என்கிற இந்த ஹங்காங் திரைப்படம் நிறைவடைகிறது.

“சம்பவம் ஜனவரி 28” எனும் சொல்லப்படும் சரித்திர நாளில் சீன குடியரசிற்கும் ஜப்பானிய படைக்கும் பயங்கரமான போர் மூள்கிறது. உலகப் பார்வையில் இதை “சங்ஹாய் போர் 1932” என்றும் அடையாளப் படுத்துகின்றனர். 1937-ல் சீனாவில் நிகழ்ந்த 20ஆம் நூற்றாண்டின் ஆசியாவின் மிகக் கொடூரமான போர் எனச் சொல்லக்கூடிய “சீன-ஜப்பானிய இரண்டாம் யுத்தம்” தொடங்குவதற்கு முன்பான கோபத்தையும் போர் வெறியையும் வளர்த்துவிட்டதாகவும் இந்த “ஜனவரி சம்பவம் 28” சொல்லப்படுகிறது. சீனாவின் ஷங்ஹாய் நகரத்தில் ஜப்பானிய மையத்தை உருவாக்கிவிடுவதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தையும் சீனாவின் வளங்களையும் அபகரித்துவிட முடியும் என்ற ஜப்பானிய அரசின் தீவிரமான வேட்டைத்தான் “இரண்டாம் சீன ஜப்பானிய போர்” நடப்பத்தற்கான மூலக்காரணம் ஆகும்.

போரின் உக்கிரமும் குழந்தைகளும்

ஜூலை 7 1937-இல் தொடங்கும் இந்த இரண்டாம் சீன ஜப்பானிய யுத்தம் 1945 செப்டம்பர் 9 வரை நீள்கிறது. 1945இல் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்த பிறகே ஜப்பானிய அரசு தன் படைகளை ஆக்கிரமித்து வைத்திருந்த அடிமை நாடுகளிலிருந்து மீட்கிறது. அப்படியொரு ஜப்பானிய இராணுவ படையினரால் அடிமை நிலப்பரப்பாக இருந்த நஞ்சிங் சிறுநகரத்தில் பெற்றோர்கள் இல்லாமல் அனாதையாகிவிட்ட இரு குழந்தைகளின் கதைத்தான் இந்த மே மற்றும் ஆகஸ்ட் திரைப்படம். டிசம்பர் 1937-இல் நஞ்சிங் சிறுநகரத்தில் நுழையும் ஜப்பானிய இராணுவப் படை அங்குள்ள மக்களைக் கொடூரமாகக் கொன்று குவிக்கின்றது. தனது மரப்பலகை வீட்டின் சன்னலில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மே மற்றும் ஆகஸ்ட் எனும் இரு குழந்தைகளின் பார்வையிலிருந்து யுத்தத்தின் வெடிச்சத்தம் துவங்குகிறது. ஜப்பானிய இராணுவம் உள்ளே நுழைவதைத் தன் வீட்டுக்கூரைகளில் ஏறி வேடிக்கைப்பார்க்கும் அனைவரும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.

4 வயதான ஆகஸ்ட் அந்தக் கூரைகளில் ஏறி நின்றவர்களில் ஒருவரின் தோளில் குரங்கொன்று அமர்ந்திருப்பதையும் பிறகு அது சுடப்படுவதையும் பார்த்து மிரண்டு போகிறாள். அன்று இரவு முழுக்க குரங்கரசன் இறந்துவிட்டான் எனப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். சீனக் கலாச்சாரத்தின் கதைகளில் குரங்கென்பது மிகவும் ஆன்மீகம் நிறைந்த கதைப்பாத்திரமாகும். “Journey to the west - the monkey king” எனும் கதை சீனத்திலும் புத்த மத சரித்திரத்திலும் மிகவும் பிரபலமான கதை. சீனத்தின் பழங்கதைகளில், கற்பனை கதைகளில் ஜென் தத்துவக் கதைகளில் குரங்கின் இருப்பென்பது மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. ஆகையால் தன் அம்மாவின் வழி கூறப்பட்ட கதைகளின் மூலம் ஆகஸ்ட் குரங்கை ஒரு நாட்டின் அரசன் என்றே கற்பனை செய்து வைத்திருக்கிறாள். ஜப்பானிய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் ஒரு குரங்கின் இறப்பு அவளைச் சலனப்படுத்துகிறது. தனது பால்யத்தின் கதைப்பரப்பே சிதைந்துவிட்டதாக எண்ணி படுக்கையில் படுத்துக்கொண்டு அழுகிறாள்.

ஏழாம் நூற்றாண்டில் புத்தத் தத்துவங்களை மீண்டும் சீனாவிற்குக் கொண்டு வர இந்தியா புறப்படும் ஓர் அரசனின் கதையையே மறுப்புனைவு செய்து ஆசியா கண்டத்தை நோக்கி புறப்படும் குரங்கரசன் எனும் கதையாக எழுதப்படுகிறது. கதை நெடுக புத்தப்பிக்குகளின் பயணமும் வலியும் தத்துவங்களும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆகையால் இந்தக் கதை சீன நிலப்பரப்பின் ஒட்டுமொத்த இதயத் துடிப்பாகவே கருத முடிகிறது. குரங்கு சுடப்படுவதன் மூலம் ஆகஸ்ட் எனும் சிறுமியின் வழி அந்தச் சமூகம் எவ்வளவு ஆழமாக அந்தக் கதையோடு பிண்ணப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. அவளைக் கதைச்சொல்லி உறங்க வைக்க வரும் ஆகஸ்ட்டின் அம்மா, குரங்கரசன் எப்படி இறந்து போகக்கூடும் எனக் கேட்டுவிட்டு குழந்தையை ஆர்வமாய் பார்க்கிறாள். மேலும் குரங்கரசன் இறக்கவில்லை அவன் மீண்டும் ஒரு பயணம் சென்றுள்ளான். திரும்பி வரும்போது நிறைய கதைகளுடன் வருவான் எனச் சொல்லி அவளைச் சமாதானப்படுத்துகிறாள். குரங்கரசனின் இல்லாத அந்தப் பயணத்தையும் கதைகளையும் தன் கற்பனைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டே உறங்கிப் போகிறாள் ஆகஸ்ட். ஒவ்வொரு போர் காலத்திலும், இப்படிப் போர் குறித்து எந்தக் கவலையும் தெளிவும் இல்லாத குழந்தைகள் தொடர்ந்து தன் கற்பனை உலகத்துக்குள்ளேயே இருந்துவிடுகிறார்கள். வெடிச்சத்தமும் மரண ஓலங்களும் அவர்களின் உலகத்தை அசைத்துக் கரைக்க மட்டுமே செய்கிறது.

ஒரு தெருவின் துயரமான பிரிவு

மறுநாள் போர் உக்கிரமடையத் துவங்கிறது. நஞ்சிங் சிறுநகரம் முழுக்க ஜப்பானிய இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்குள் வருகிறது. ஆகையால் தெருக்கள்தோறும் நுழைந்து இராணுவம் எளிய மக்களின் உடமையையும் உயிரையும் சூரையாடுவதாகத் தகவல் வருகிறது. ஆகஸ்ட்டின் அம்மா போரையும் வெடிச்சத்தத்தையும் கேட்டு பதற்றம் அடைகிறாள். அவர்கள் வசித்த அந்தத் தெருக்களில் உள்ள எல்லோரும் சிறுக சிறுக அங்கிருந்து கிளம்பத் துவங்குகிறார்கள். தெரு முழுவதும் மனித நகர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொருவரும் தன் வீட்டையும் வாழ்ந்த தெருவையும் விட்டு சோகமாக விடைப்பெறும் இந்தக் காட்சி போரின் கொடூரமான அடுத்தப்பக்கத்தைக் காட்டுகிறது. மரணத்திற்குப் பயந்து தெருவைக் காலி செய்துவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் எல்லோரையும் பார்த்தப்படியே ஆகஸ்டும் மேவும் அம்மா அப்பாவுடன் அங்கேயே இருக்கிறார்கள். போர் ஒரு முடிவுக்கு வரும் எனத் தீர்க்கமாக நம்புகிறார் சீனக் கிராமப்பள்ளியின் ஆசிரியரான மே-வின் அப்பா. ஆகையால் அவர்கள் மட்டும் அந்தத் தெருவைவிட்டு ஓடாமல் அங்கேயே மறைவாக இருந்துவிடுகிறார்கள். குழந்தைகள் எப்பொழுதும் இருத்தலின் மீதான கொண்டாட்ட உணர்வுகளைக் கொண்டிருப்பார்கள். இதை அவர்களின் வாழ்வு முழுக்க நாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தான் சார்ந்திருக்கும் வீடு, வீட்டில் வளரும் நாய், தெரு முனையில் இருக்கும் பாட்டி, தெருவில் ஓடியாடி விளையாடிய நண்பர்கள் என அவர்கள் தன்னைச் சுற்றிய அனைத்தின் மீதும் ஓர் உரிமையையும் உணர்வையும் பதித்திருப்பார்கள். அது அவர்களை விட்டு நீங்கும்போது அவர்கள் அடையும் துயரம் சொற்களைத் திரட்டி அர்த்தப்படுத்த முடியாதவையாகும்.

நஞ்சிங் சிறுநகரத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இந்தத் தெருவைவிட்டுப் போகும் தனது நண்பர்களின் பிரிவை மே தரிசித்தப்படியே இருக்கிறாள். தனது உடலிலிருந்து ஓர் உறுப்பைக் கழற்றி எடுத்துப்போவது போன்ற அதிருப்தியுடன் அவள் எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு மிகநெருக்கமான தோழியான லில்லியின் வீடு மே-யின் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் நன்றாகத் தெரியக்கூடியது. மேயும் ஆகஸ்டும் மொட்டை மாடிக்கு வரும்போது லில்லி தன் வீட்டை விட்டுச் செல்ல ஆய்த்தமாகி கொண்டிருக்கிறாள். லில்லி அங்கிருந்து தன் குடும்பாத்தாருடன் வீட்டைவிட்டு வெளியேறப் போகும் ஒரு பிரிவின் நுனியில் மிக வலுவான ஒரு துயரம் ஒட்டிக்கொண்டிருப்பதை அந்தக் காட்சியில் உணர முடிகிறது. லில்லி போவதற்கு முன்பாக மேயைப் பார்த்து தன் வீட்டிற்கு வெளியே இருக்கும் அவளுடைய மீன் தொட்டியைக் காட்டி, அந்த மீன்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு பாதுகாப்பு முகாமிற்கு விரையும் கூட்டத்தோடு கூட்டமாக மறைகிறாள்.

குழந்தைகள் தன் இருப்பிடத்தை விட்டு போகும் முன் இப்படி எதையாவது விட்டுப்போகிறார்கள். தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடியான சூழலிலும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், தனக்கு விருப்பமான ஒன்றை விட்டு வரும் சோகம் மட்டுமே அவர்களின் முகம் முழுக்க வியாபித்திருக்கின்றது. லில்லி போரைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் கொள்ளாமல் தான் வளர்த்த மீன்களைப் பற்றி மட்டுமே கவலை கொள்ளும் இடம், குழந்தைகள் போருக்கும் அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதை அழுத்தமாக நிறுவுகிறது. ஆனால் வரலாற்றில் ஒவ்வொரு நகரமும் அதிகாரத்தாலும் முதலாளிகளாளும் சுரண்டப்படும்போது அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும்தான் என்பதைப் பல உலக சினிமா காட்சிப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக ஈரானிய படங்கள் போரினாலும் அடிமைத்தனத்தினாலும் ஆணாத்திக்கத்தினாலும் பாதிக்கப்படும் குழந்தைகளின் பெண்களின் வாழ்வை மிகத் துல்லியமாக அதன் பாதிப்பின் உக்கிரம் குறையாமல் தொடர்ந்து பதிவு செய்துள்ளன.

பிரிவிலிருந்து மீளாத மனம்

பயமும் சோகமும் அழுத்த மனதில் தெம்பில்லாமல் நகரும் கூட்டத்திற்கு மத்தியில் லில்லி இன்னொன்றையும் ஞாபகப்படுத்துகிறாள். “ஆபு என் மீன்களைச் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கூறுகிறாள். உடனே ஆகஸ்ட், “என் ஆபு அப்படியெல்லாம் ஒன்றும் செய்யமாட்டான்” எனப் பதிலளிக்கிறாள். ஆபு ஆகஸ்ட்டின் செல்லப் பிராணி. படத்தின் மையத்திலிருந்து சடாரென நாம் இந்தக் காட்சியின் வழி தகர்க்கப்படுகிறோம். போரைப் பற்றி மறந்து நமக்குள் ஒரு குழந்தைத்தனமும் எழுந்து கைத்தட்டி குதித்து ஆரவாரம் செய்து வேடிக்கைப் பார்க்கிறது.

இன்னமும் எனக்கு என் வீட்டில் வளர்ந்த ஜூலி ஜானி நாய்களைப் பற்றிய குறிப்புகள் மனதின் ஆழத்தில் விழித்துக்கொண்டிருக்கின்றன. வளர்ப்பதற்கு நாய் வேண்டும் எனக் கேட்டு கேட்டு சோர்வில் உறங்கிவிட்டிருந்த ஒரு இரவு நேரம். அப்பொழுது மலாய்க்காரக் கம்பத்தில் பெரிய சாலையிலிருந்து வலப்பக்கமாகப் பிரிந்து 2 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டிய குடியிருப்புப் பகுதியில் இருந்தோம். அக்கப்பக்கம் அதிகமான மலாய்க்காரர்கள் என்பதால் நாய் வளர்க்க அப்பா வீட்டில் ஒரு தடையை உருவாக்கியிருந்தார். வீட்டிற்குள்ளேயே ஒளித்து வைத்து ஒரு நாயை வளர்க்கலாம் எனக் கேட்டு அடம் பிடித்தேன். அப்பா நாய்க்கு ஒரு தொழில் உண்டு எனவும் அவை அதை மட்டும் செய்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பிரச்சாரம் செய்யத் துவங்கினார்.

நாய்கள் வீட்டைக் காவல் காக்கும் தொழிலைச் செய்வதாக அப்பா கூறிய போது ஆச்சர்யமாக இருந்தது. நாம் வளர்க்க நினைக்கும் ஒவ்வொரு செல்ல பிராணியும் நம்மிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்ப்பார்த்து செல்லமாக வீட்டில் வளரக்கூடியது என்பதாகவே கற்பனை செய்து வைத்திருந்தேன். அக்கப்பக்கம் அதிகமான வீடுகளும் மனிதர்களும் இருப்பதால் அப்பாவைப் பொருத்தவரை வீட்டிற்குப் பாதுகாப்பு தேவையில்லை என நாயை நிராகரித்திருந்தார். மேலும் இங்கு மலாய்க்காரர்கள் அதிகமாக வாழும் இடமென்பதால் நாய்களுக்கும் அவர்களுக்கும் ஆகாது என வேறு பயமுறுத்தி வைத்திருந்தார். எப்படியோ என்னுடைய பிடிவாதம் கடைசியில் அப்பாவின் வியாக்கியானங்களை நான் அறிந்திருந்திராத ஓர் இரவு நேரத்தில் வென்றிருந்தது. வீட்டின் வரவேற்பரையில் உறங்கிவிட்டிருந்த என் காதை ஏதோ ஒன்று நக்கிவிட்டு ஓடியது. மங்கலாகத் தெரிந்த வீட்டைச் சுற்றிலும் பார்த்துவிட்டு எனக்கு முன் வாலை ஆட்டிக்கொண்டிருந்த இரண்டு நாய் குட்டிகளைப் பார்த்தப்போது திக்கென்று இருந்தது. ஒரு கணம் மலாய்க்காரர்கள் நாய் வளர்த்தால் பிரச்சனை கொடுப்பார்கள் என்கிற பயமெல்லாம் வீட்டின் பலகைச் சன்னலில் இருந்த ஓட்டைகள் வழியாகப் பறந்து போயிருந்தது.

அதன் பிறகு இரண்டையும் மிகப்பத்திரமாக வீட்டிற்குள்ளேயே வைத்து அண்டை மனிதர்களின் பார்வை படாமல் வளர்க்கத் துவங்கினோம். அப்பா மீண்டும் மீண்டும் என்னை எச்சரித்த ஒரே விசயம் என்னை திகைக்க வைத்தது. இந்த இரண்டையும் செல்ல பிராணியாக மட்டுமே வளர்க்க வேண்டும், தவறியும் வீட்டைக் காவல் காக்க வேண்டும் என்கிற கடமை உணர்ச்சி வந்துவிட்டாலும் அது நமக்கு ஆபத்து எனக் கூறினார். ஆகையால் தொடர்ந்து நான் வளர்த்த நாய்களுக்கு எந்தவகையிலும் கடமை உணர்ச்சி வராமல் இருக்கும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டேன். 5 வேளைக்கும் மேலாக அதற்கு உணவிட்டு அதனுடன் விளையாடி பள்ளிக்குச் செல்லும் வேளைகளில் வீட்டின் அறையில் வைத்து பூட்டி படுககையறையின் மீது சுதந்திரமாக விளையாடச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அவை இரண்டையும் செல்ல பிராணியாக மட்டுமே மாற்றியிருந்தேன். அப்பா அவ்வப்போது ஜோனிக்கும் ஜூலிக்கும் எப்படிப் பயந்து ஓடி ஒளிவது எனக் கற்றுக் கொடுத்தார். நாம் இருக்கும் இடம் மலாய்க்காரர்களால் நிரம்பியிருப்பதால், அவர்களுக்கு உன்னைக் கண்டாலே வெறுப்பு மேலோங்கும் என்றும் தொடர்ந்து என் வீட்டில் வளர்ந்த இரு நாய்களையும் கோலைகளாகப் பழக்கி வைத்திருந்தோம். இந்த வீட்டில் இப்படிச் சுருங்கி அடைந்து ஒடுங்கிக் கிடப்பதே தற்காலிகமான விடுதலை என அப்பா அப்பொழுதே உணர்ந்து வைத்திருந்தார். அதை எனக்கும் நாய்களுக்கும் பிராச்சாரம் செய்யவில்லை என்றாலும் இன்று அதை மிக நுணுக்கமான உணர முடிகிறது.

நாங்கள் எல்லோரும் கோலாலம்பூரிலுள்ள மாமாவின் திருமணத்திற்குச் சென்றிருந்தபோது, நாய்களை இரகசியமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என் அக்காவிற்கும் இன்னொரு மாமாவிற்கும் வழங்கப்பட்டிருந்தது. இரண்டு நாள் கழித்து அக்காவிடமிருந்து அழைப்பு வந்தது. இரண்டு நாய்களும் வீட்டின் சன்னல் வழியாகக் குதித்து வெளியே ஓடி விட்டதென. எனக்கும் அப்பாவிற்கும் பதற்றம் அதிகமானது. அப்பா இரவு முழுக்கப் புலம்பிக் கொண்டே இருந்தார். ஜூலி என்ன செய்து கொண்டிருக்கும் ஜோனி என்ன சாப்பிட்டிருக்கும், நாய்கள் பசி வந்தால் அழுமா என்கிற யோசனையில் நான் உறங்கிப் போயிருந்தேன். மறுநாள் காலையில் அக்காவிடமிருந்து மீண்டும் அழைப்பு. இரு நாய்களும் முட்டையில் ஊசி திணிக்கப்பட்டு கொல்லப்பட்டு கால்வாயில் கிடந்ததாகச் சொல்லும்போது அக்கா அழுதுகொண்டிருந்தார்

மேவும் லில்லியும் ஆகஸ்ட்டும் போர் சூழலின் நெருக்கடியான காலக்கட்டத்தில் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள் தங்களை விட்டுத் தொலைந்து போகக்கூடாது எனக் கவலைப்படுகிறார்கள். அதுவே அவர்களின் கவலையின் உச்சமாக இருக்கிறது. அந்தத் தெருவைவிட்டுப் போகும் லில்லிக்கு ஆகஸ்ட் குரங்கரசனின் சிலையைப் பரிசாகத் தந்து வழியணுப்பும் காட்சி எந்தப் பின்னணி இசையும் இல்லாமல் வெறுமனே கடந்து போகிறது. நாம் அதீதமாக நினைத்துச் சோகப்பட வேண்டும் நெகிழ்ச்சியடைய வேண்டும் என நினைக்கும் காட்சிகள் அதற்கான எந்தத் தருணத்தையும் வழங்காமல் வாழ்க்கை துயரத்திலும் மகிழ்ச்சியிலும் கொண்டாட்டத்தின் போதும் வெகு இயல்பாகவே நம்மைக் கடந்து போகிறது என்பதன் நிதர்சனத்தைப் படம் முழுக்கக் காண நேரிடுகிறது.

எல்லோரும் சென்றுவிட மேயின் அம்மா அவர்கள் இருவரையும் போர் சூழலில் எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறாள். இருவரையும் இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறி மாறி ஓடவிடுகிறாள். இருவரும் ஓடி களைத்து அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு போதுமெனக் கெஞ்சுகின்றனர். தொடர்ந்து போதுமான உணவைச் சேமித்துக்கொண்டு வீட்டிற்குள்ளேயே தங்கிவிடுகின்றனர். நாய் குரைக்கும் சத்தங்களும் துப்பாக்கி வெடிகளும் மரணம் நெருங்கிக் கொண்டிருக்கும் செய்தியை உணர்த்துவது போல சூழலைக் கொடுக்கிறது. ஒருநாள் இரவில் பாதுகாப்பு முகாமிற்குத் தப்பி ஓடிய லில்லியும் அவளின் குடும்பாத்தாரும் மே வீட்டிற்குத் திரும்புகிறார்கள். அவர்கள் யாவரும் ஜப்பானிய இராணுவத்திடமிருந்து தப்பி ஓடி காயப்பட்டு வந்திருந்தார்கள். லில்லியின் முகம் வாடியிருக்க முகமெல்லாம் கருமையடைந்திருந்தது. மே அவளைப் பரிதாபத்துடன் பார்க்கிறாள். பிறகு லில்லியின் நீண்ட கூந்தல் வெட்டப்படுகிறது. மே அதையெல்லாம் பார்த்து பதற்றமடைகிறாள். போரிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள ஆண் போன்ற தோற்றம் வேண்டும் என அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். போர் என்பது பெண்களைச் சீரழித்துவிடும் என்பதை இக்காட்சி சொல்லி செல்கிறது. கொடூரமான போர் நிலப்பரப்பின் இன்னொரு பகுதியில் பெண்கள் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு நசுக்கப்படுவது எப்பொழுதும் நிகழும் துயரமாகும். இலங்கை இராணுவத்தாலும் அமைதிபடை என்கிற பெயரில் இலங்கையில் நுழைந்த அயல்நாட்டு படைகளும் கணக்கு வழக்கில்லாமல் தமிழ் பெண்களைக் கற்பழித்தக் கொன்ற கொடூரம் நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றது.

வீட்டைவிட்டுச் செல்லும் மேயின் அப்பா இரவாகியும் வீடு திரும்பாததை எண்ணி குடும்பமே பயத்தில் ஆழ்ந்திருக்கிறது. அப்பொழுது ஆபுவின் குரைக்கும் சத்தம் கதவுக்கடியில் கேட்க, மேயின் அம்மா கதவைத் திறக்கிறாள். மேயின் அப்பாவின் கையின் அரைப்பகுதியை வாயில் கவ்விக்கொண்டு வந்து ஆபு வாசலில் போடுகிறது. இந்தக் காட்சி நம்மை உறைய வைக்கிறது. அதற்கு மேல் காலம் என்கிற ஒன்று இல்லாமல் போய்விடும் மாயை நிகழ வேண்டும் என மனம் துடிக்கிறது. ஒவ்வொரு போரின் கொடுமையும் அதில் சிக்கிகொண்ட மக்களுக்கு இப்படியான மன அவதிகளைத்தான் கொடுத்திருக்கும். அதன் பிறகு மேயின் அம்மாவும் இராணுவத்தால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்படுகிறாள். மேயும் ஆகஸ்டும் மட்டும் மேல்மாடியில் ஒளிந்திருக்கிறார்கள். உணவு தீர்ந்ததும் இருவரும் உணவுத் தேடி வெளியே செல்கிறார்கள். நகரம் முழுவதும் வெறும் புகை மட்டுமே அண்டிக்கிடக்கிறது. மனிதர்களின் நடமாட்டமில்லாத தெருக்களில் ஒரு அடர்த்தியான சூன்யமும் மௌனமும் படுத்துக்கிடக்கின்றன. மேயும் ஆகஸ்டும் அதனையெல்லாம் கடந்து செல்கிறார்கள்.

இறுதியில் நஞ்சிங் போரினால் அழிந்துவிட்டதை அறிந்து வரும் மேயின் மாமா அவர்களைக் கண்டுபிடித்து அவர்களை ஹங்காங் பெருநகரத்திற்குக் கொண்டு போகிறார். அங்கு மே அவருடைய மாமா மகன் படிக்கும் பள்ளியிலேயே சேர்க்கப்படுகிறாள். மேயின் தங்கை ஆக்ஸ்டு அவர்கள் இருக்கும் அந்த மாமாவின் வீட்டை வியப்போடு பார்த்தப்படி தன் பொழுதுகளை விளையாடி கழிக்கிறாள். நஞ்சிங் நகரில் தோன்றிய யுத்தம் எல்லாம் இடங்களிலும் பரவ இவர்கள் இருக்கும் ஹங்காங் பெருநகரம் வரை வந்துவிடுகிறது. ஜப்பானிய இராணுவப்படை அங்கேயும் ஆக்கிரமித்து தன் கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துகிறது. அப்பொழுது மேயின் மாமா துப்பாக்கி சூடு பட்டு இறந்துவிடுகிறார். அதன் பிறகு அங்கும் மனித நகர்ச்சி ஏற்படுகிறது. மாமாவின் குடும்பம் மேயையும் ஆகஸ்ட்டையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு உயிருக்குப் பயந்து சென்றுவிடுகிறார்கள். எல்லோரும் செல்ல மீண்டும் மே மனித நகர்வைப் பார்த்தப்படி வீட்டின் வாசலில் அமர்ந்திருக்கிறாள். போர் குழந்தைகளைத் தனிமையில் விட்டுச் செல்கிறது. அவர்கள் தன் உறவுகளையும் தொலைத்த வீட்டையும் தேடி அலைந்துகொண்டே இருக்கிறார்கள். 2002 ஆம் ஆண்டில் ரேய்மண்ட் தோ எனும் இயக்குனரால் எடுக்கப்பட்ட இந்த ஹங்காங் திரைப்படம் இன்றளவும் அந்த நாட்டில் பேசப்படும் திரைப்படமாகும். போரில் எரிக்கப்படும் மரணித்த உறவுகள் இன்னமும் மழையாக அங்குள்ள நதிகளில் பொழிந்துகொண்டிருக்கிறார்கள் எனும் நம்பிக்கையை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பைக் கொடுத்த இத்திரைப்படம் போர்ப் பகுதிகளில் தான் வாழ்ந்த தெருவிலிருந்தும் வீட்டிலிருந்தும் துரத்தப்படும் குழந்தைகளை நினைவுப்படுத்துகிறது.

படத்தின் ஒரு கட்டத்தில் இனி ஆபு என்கிற நாய்க்குட்டியை அவர்கள் பராமாரிக்க முடியாத என்ற நிலை வரும்போது மேயின் அம்மா அந்த நாயை ஒரு சட்டியில் அமர வைத்து ஆற்றில் விட முடிவெடுக்கிறாள். முதலில் அம்மாவின் இந்தச் செயலைத் தடுக்க முயல்கிறாள் ஆகஸ்டு. அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுகிறாள். அதற்கு அம்மா ஆபு சாகவில்லை, அது ஒரு பயணம் செல்லவிருக்கிறது எனச் சமாதானம் கூறுகிறாள். சட்டியில் வைக்கப்பட்டு ஆற்றில் விடப்படும் ஆபு கரையில் நின்றிருக்கும் எல்லோரையும் பரிதாபமாகப் பார்க்கும்போது மனம் என்னவோ செய்கிறது. மே ஆபுவைப் பார்த்து வேகமாகக் கத்துகிறாள், “ஆபு செத்துறாதெ, எப்படியாவது உன்னைக் காப்பத்திக்க”. குழந்தைகள் சந்திக்கும் பிரிவென்பது அவர்களுக்குச் சொல்லப்படாத ஓர் இரகசிய பயணம் போல நீள்கிறது. குரங்கரசன் சென்ற பயணமும் ஆபு சென்ற பயணமும் ஏதோ ஒரு கற்பனையைப் போல மனதில் கணக்கிறது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>