|
|
அன்புள்ள மலேசிய பிரதமருக்கு,
நான்
சுங்கைப்பட்டாணி, கெடாவில் வசிக்கும் உங்களுக்குச் சிறிதும் அறிமுகமிருக்க
வாய்ப்பில்லாத ஒரு சராசரி மலேசியக் குடிமகன். அண்மையில் சுங்கைப்பட்டாணி
தைப்பூசத் திருவிழாவிற்கு நீங்கள் வருவதாக அமர்க்களமான தகவல்கள்
சுங்கைப்பட்டாணி நகரம் முழுக்க பரவியபடியே இருந்தன. இதுவரை இங்கே எந்தப்
பிரதமரும் தைப்பூச விழாவில் கலந்துகொள்ள வந்ததில்லை. ஆகையால் எனக்கு பல
நாட்களாகவே கடுமையான திகைப்பும் அதிர்ச்சியும் உருவாகிக்கொண்டே இருந்தது.
கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக நான் தைப்பூசமே செல்வதில்லை. ஆனால் இந்த
வருடம் உங்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் சரியாக 7.20 மணிக்கெல்லாம்
சுப்ரமண்ய கோவிலுக்கு வந்துவிட்டிருந்தேன். அப்பொழுதுதான் கோவிலிலும்
கோவிலுக்கு வெளியேயும் கூட்டம் நிரம்பத் துவங்கியிருந்தது. எப்பொழுதும்
அந்த நேரத்தில் கோவிலில் தைப்பூசக் கொண்டாட்டமும் அதைச் சார்ந்த உணர்வும்
எங்கும் பரவியிருக்கும். காவடிகளைச் சுமந்துகொண்டு பக்தர்கள் உடலெங்கும்
மஞ்சள் நீர் ஒழுக தங்களின் வேண்டுதல்களைச் செலுத்துவதற்காக உற்றார்
உறவினர்களுடன் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் வருகையை உணர்த்தும்
விதமாக தாளமும் தப்பும் ஓங்கி ஒலித்து பரவசத்தை ஏற்படுத்தும்.
இத்தனை நாள் எங்களைப் போன்றவர்கள் அனுபவித்த பார்த்துப் பழகிய தைப்பூசம்
இப்படித்தான் இருந்தது. ஆனால் அன்று காவடிகள் எல்லாமும் 3 மணி
நேரத்திற்கும் மேலாக வெளிவரக்கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டிருந்ததைக்
கேட்டு அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். அன்பும் பாசமுமிக்க
தலைவருக்காக இந்தத் தியாகத்தைக்கூட செய்யவில்லையென்றால் ஒரு குடிமகனாக
இருந்து என்ன பயன் எனத் தோன்றியது. காவடிகள் தடைச்செய்யப்பட்டதால்
வேண்டுதல்களைக் குறித்த நேரத்தில் செலுத்தவிருந்த பக்தர்கள்
ஆற்றங்கரையிலேயே (தலைவெட்டி கோவில்) வெகுநேரம் தங்கள் காவடிகளுடன்
காத்திருக்க வேண்டியதாகப் போயிற்று. மேலும் பாதி வழியில் வந்து கொண்டிருந்த
சில காவடிகள் அங்கேயே நிறுத்தப்பட்டதால் சோர்வும் களைப்பும் ததும்ப காவடி
தூக்கியப் பக்தர்கள் கூட்டத்தோடு கூட்டமாக சாலையிலேயே அமர்ந்துவிட்டதையும்
இங்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த
வருடம் உங்களின் வருகை நிகழவிருந்ததால், தைப்பூசம் என்பதன் முகமே மாறி
அமைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். நீங்கள் கோவிலுக்கு 7.30 வருவதாகச்
சொல்லப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் நீங்கள் வந்து சேரும்
போது 8.30ஐ தாண்டியிருந்தது. 7.30க்கெல்லாம் நீங்கள் பேசுவதற்காக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த ஆடம்பரமான மேடையின் அலங்காரங்களைப் பார்த்தபடியே மக்கள்
கூட்டம் கால் வலிக்க காத்திருந்தன. வழக்கமாகத் தொனிக்கும் தைப்பூசச் சூழல்
கொஞ்சம் மாறுப்பட்டு காவடிகள் ஏதும் இல்லாமல் வெறும் பெருகி வரும் மக்கள்
கூட்டமே கண்களுக்கு எட்டின. இவையனைத்தும் எங்களுக்கு ஒரு தடையாகவோ
இம்சையாகவோ இல்லை. எங்களின் நேசத்திற்குரிய தலைவரைக் காணும் ஆவலில்
எல்லோரும் எந்த வருத்தமுமின்றி, தைப்பூசம் என்கிற ஓர் உணர்வே மறைந்துவிட்ட
அந்த நாளில் ஒருவருக்கொருவர் மோதி கொண்டும் நகர்ந்துகொண்டும் இருந்த மக்கள்
கூட்டத்தின் நெரிசலைப் பார்த்து இரசித்தப்படி நின்றிருந்தோம்.
நீங்கள் கோவிலை வந்தடையும்போது உங்கள் வாகனம் மட்டுமே கூட்டத்தை
உடைத்துக்கொண்டு வரும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் 15க்கும் மேற்பட்ட
வாகனங்கள் கூட்டம் அதிகமாக உள்ள சிறிய இடைவெளி கொண்ட சாலையில் வரிசையாக
ஊர்ந்து வந்திருக்கின்றன என்பதை ஊகித்துப் பார்க்கும்போதே எனக்குத் தலை
சுற்றியது தலைவா. பிரதமரின் மீதான அன்பாலும் மரியாதையாலும் உங்களுடன் பல
அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் வந்திருந்ததைக் கண்டதும் பெரிதும்
மகிழ்ச்சியடைந்து நிலைக்குத்தி நின்றேன். எனக்கு அருகாமையில் வியர்த்து
வடிய குடும்பத்துடன் நின்றிருந்த பலர், உங்களுடன் மேடையில் அண்ணன்
தனேந்திரன் (மக்கள் சக்தி) அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் “நல்ல’
வார்த்தைகளைப் பயன்படுத்தி பூஜிக்கத் தொடங்கியிருந்தனர்.
சுப்ரமண்ய தேவஸ்தானத்தின் தலைவர் அவர்கள் கோவிலின் செயற்குழு சார்பாக
மலாய்மொழியில் உரையாற்றினார். உங்கள் முன் பேசும் வாய்ப்பு
கிடைத்திருக்கும் ஒருவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய
சமூகத்தின் பிரச்சனைகள், இந்திய சமூகம் எதிர்க்கொண்டிருக்கும் ஏழ்மை, கல்வி
வாய்ப்பு எனப் பேச வேண்டும் எனப் பல கற்பனைகளுடன் எதிர்ப்பார்த்திருந்து
காத்திருந்த அப்பாவி பார்வையாளர்களின் முகத்தில் அன்போடு சாயத்தைப் பூசி
அவர் வெள்ளையடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. தைப்பூசத்திற்கு விடுமுறை
வேண்டும், கோவிலைப் புதுப்பிக்க ஒதுக்கீடு/நன்கொடை வேண்டும் என அவர்
உங்களிடம் கேட்டபோது கடாரத்தில் பிறந்ததற்காக முதன்முதலாக உள்ளத்தால்
பெருகி வழிந்தேன். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும்
அங்குள்ளவர்கள் விடுமுறை வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன்தான்
இருப்பார்கள் எனத் தைரியமாக நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்.
மேலும் அவர் ஒரு வரலாற்று தகவலையும் மேடையில் குறிப்பிட்டது என்னை
மெய்சிலிர்க்க வைத்தது. மலேசியாவில் இந்தியர்களின் வரலாறு சரியாகத்
தொகுக்கப்படாததும் வரலாற்று ரீதியில் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதும் ஒரு
பிற்போக்குத்தனமான கவலையாகி போனதோடு, அன்று மேடையில் சொல்லப்பட்ட வரலாறு
எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தது. உங்களின் தந்தையரான மலேசியாவின் முன்னாள்
பிரதமர் துன் ரசாக் அவர்கள், முன்பொருமுறை கெடாவிற்கு வந்திருந்தபோது
இந்தக் கோவிலுக்கு மான்யம் வழங்கி சிறப்பித்திருந்தாராம். இப்பொழுது அவரின்
மகனான நீங்கள் பிரதமராகி கெடாவிற்கு மீண்டும் வந்திருப்பதால் இது ஒரு
வரலாற்று நிகழ்வு எனக் கோவில் தலைவர் பெருமைப்படக் கூறும்போது என் உடல்
ஒருமுறை சிலிர்த்து அதிர்ந்தது. அவர் அந்தச் சமயத்தில் 50,000 வெள்ளி
கொடுத்ததைச் சொல்லிக்காட்டி இன்றைய சூழலில் இன்னும் அதிகமான தொகையையே
தரமுடியும் எனச் சொன்னபோது எல்லோரும் சிரித்துக்கொண்டே கைத்தட்டினோம். அந்த
அரங்கமே எங்களின் ஆனந்த சிரிப்பால் கொஞ்ச நேரம் அதிர்ந்ததை நீங்கள்
கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
அடுத்ததாக மக்கள் சக்தி தலைவர் தனேந்திரன் உங்களைக் கொண்டாடி பேசுவதற்காக
மேடைக்கு வந்தபோது கூட்டம் மெல்ல களையத் தொடங்கியது. என்ன துரோகம் இது?
மக்களுக்காகத் தொடர்ந்து போராடும் ஓர் அடையாளத்தைப் பெற்றிருக்கும் இந்திய
சமூகத்தின் முடி சூடா மன்னன் பேசத் துவங்கும்போது மக்கள் இப்படியொரு
காரியத்தைச் செய்திருக்கலாமா? தனேந்திரன் அண்ணன் பேசுவதையே நான் மிகவும்
உன்னிப்பாகக் கேட்டேன். தவறியும் இந்திய சமூகத்தின் இன்றைய பிரச்சனைகளையும்
சவால்களையும் சிரமங்களையும் அவர் பேசக்கூடும் என்கிற அழுத்தமான
நம்பிக்கையில் வெகுநேரம் தவமாய் கிடந்தேன். நாட்டின் தலைவருக்கு முன்
மிகவும் விசுவாசமாக மட்டுமே அவரால் பேச முடிந்ததை எண்ணி அவருடைய தம்பி எனச்
சொல்லிக்கொள்வதில் ஆயிரத்தில் ஒருவனாக மகிழ்ச்சிக்கொள்கிறேன்.
உங்களையெல்லாம் வரவேற்கும் விதமாக மலாய் சீனப் பாடல்களும் அங்கு
ஒலிப்பரப்பபட்டு அந்தச் சிறுநகரமெங்கும் ஒரே மலேசியா கொள்கை பரவியது.
வழக்கமாக இந்துமத பக்தி பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த நாளில்
முதன்முதலாக அப்படியொரு நாள் என்பதையே மறக்கடிப்பது போல சீன, மலாய்
நடனங்கள், பரதநாட்டியம் என அங்கங்கள் அரங்கேறி எல்லோரையும் மகிழ்ச்சி
வெள்ளத்தில் ஆழ்த்தியது.
நிகழ்வு முடிந்து அவசரமாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனப் பெரிய சாலையை
நோக்கி கூட்டத்தோடு கூட்டமாக ஊர்ந்து செல்கையில், திடீரென நீங்கள் வந்த
அனைத்து வாகனங்களும் நெருக்கிக்கொண்டிருந்த கூட்டத்தை நடுவில் இரண்டாக
உடைத்துச் செல்லத் தொடங்கின. இதற்கிடையில் உங்களின் வாகனங்களை
நெருங்கிவிடாதபடிக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
காவல்துறையினரின் கூட்டம் ஒருபக்கம் மேலும் நெரிசலை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளும் பெண்களும் வாய்விட்டு அழத்
துவங்கியதைப் பார்த்ததும்தான் எனக்கு ஆன்ம திருப்தியே வந்தது என்பதை இங்கே
சொல்லிக்கொள்கிறேன். இப்படிக் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ஒரு சிலர் பட்ட
அவதியும் சிரமமும் சற்று முன்பு மேடையில் பேசிய கோவில் தலைவருக்கும் அண்ணன்
தனேந்திரனுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆகையால் நீங்கள்தான் தயவு கூர்ந்து
அந்த அன்புள்ளங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இறுதியாக உங்கள் உரையைக் கேட்ட மகிழ்ச்சி இன்னமும் மனதில் இனிமையான
நினைவுகளாகத் தேங்கியிருக்கிறது. உங்களுடன் தைப்பூசத்தில்
கலந்துகொண்டவர்கள் ஒரு லட்சம் மக்களாவது இருந்திருப்பார்கள் என்றாலும்
உங்களுக்குக் கடிதம் எழுதி எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட ஒரே ஒரு
அன்பர் நான் மட்டுமே எனச் சொல்லிக்கொண்டு விடைப்பெறுகிறேன் என்
அன்பிற்கினிய பிரதமரே. நன்றி.
வாழ்க ஒரே மலேசியா!
என்றும் உங்கள் தொண்டன்,
கே. பாலமுருகன்
|
|