|
|
மைதிலியின் இரவில் சலனமற்று கரையும் மனிதர்கள்...

மைதிலி. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘திசை’ வார இதழ் மூலம்
எழுத்துலகிற்கு அறிமுகமானவர். ‘கொற்றவை’ எனும் புனைப் பெயரில் இவரின் பல
கவிதைகள் வெளிவந்துள்ளன. கனடாவில் வன்முறையால் பாதிப்படைந்த பெண்கள்,
குழந்தைகளுக்கு ஆலோசனையும் உதவியும் வழங்குகிற கல்வித் துறையில் ஈடுபட்டு
வருகிறார். அத்துடன் OMNI-II தொலைக்காட்சி சேவையில் பகுதி நேர நிருபராகப்
பணிபுரிகிறார். அவரின் “இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்” கவிதைத்
தொகுப்பிலுள்ள 'அந்த நாள்' என்னைப் பெரிதும் கவர்ந்த கவிதைகளில் ஒன்று.
பல ஒளிமிகுந்த நாட்களிலும் மேலாகக்
கசப்பற்ற நாள் ஒன்றை
தெரிவு செய்வதில் நான் பெருமைப்படுகிறேன்...
பொதுவான தொனியில் சமூக நடப்புகளை எழுத்தில் கொண்டு வருவது அவ்வளவு
எளிதில்லை. கொஞ்சம் சறுக்கினாலும் பிரச்சார தொனியிலோ, பிறருக்கு அறிவுரை
சொல்லும் நடையிலோ அடிப்பட்டுப் போகும் வாய்ப்புகள் மிக அதிகம். அப்படியே
சமூக நடப்புகள் எழுத்தானாலும் எவ்வளவு தூரம் அது இலக்கியமாகிறது என்பது
அடுத்த கட்ட கேள்வியாகிறது. ஒரு தனிமனிதனின் உள்ளத்தில் எழும் மிக மெல்லிய
உணர்வுகள் தன் கதியிலேயே கவிதையாகின்றது. வாழ்வனுபவங்கள் கொதித்து
குமுறும் போது மிக இயல்பான வாழ்வைப் பேசும் கவிதைகள் பிறக்கின்றன.
வாழ்வு முழுக்க மகிழ்வினை அனுபவிக்கும் மக்களுக்குக் கசப்பான நாட்கள்
குறித்து கவலைப்பட எந்த காரணமும் இல்லை. வாழ்வு முழுக்க சோகத்தினையும் அது
தரும் வலியினையும் அனுப்பவிப்பவர்களுக்குக் கசப்பற்ற நாள் என்பது அவர்கள்
தேடியலையும் வாழ்நாள் சாதனையாகும்.
அது விட்டில்கள் பறக்காத நாள்
முகப்பு வாயிலில் கவிகிற
ஈக்களை விரட்டுகிற நாள்...
பல்லிளிக்கிற தெரு மனிதரையும்
அருவருப்பான பேச்சுக்களையும்
தவிர்க்கிற நாள்...
விட்டில்கள் பறக்காத நாள் என்று என்றாவது உண்டா? முகப்பு ஈக்களை எல்லாம்
விரட்டி விடத்தான் முடியுமா? தேவையற்று பல்லிளிக்கிற தெரு மனிதர்களையும்
அடிக்கடி காதைத் தீண்டும் அருவருப்பான பேச்சுகளையும் தவிர்த்துவிடத்தான்
முடியுமா? முடியாது எனத் தெரிந்தும் இவை எல்லாம் தவிர்த்த கசப்பற்ற நாள்
ஒன்றைத் தேடியபடி போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை.
உன்னி உன்னிக் கூர்மையடைந்து
கத்தி பாய்ச்சும் கண்களிலிருந்து
அந்த நாளைப் பொத்தி வைப்பேன்...
பிறருக்கு ஒரு நல்லது கிடைத்தால் விரைந்து அதை பறிக்க அல்லது எவ்வகையிலாவது
அதற்கு கேடு செய்ய நினைக்கும் மக்கள் கூட்டத்தைப் பற்றிய பயம்
எல்லாருக்கும் இருக்கிறது. வாழ்வியல் தேடலில் கிடைத்த கசப்பற்றதொரு நாளை
எவ்வகையிலாவது அவர்கள் பறித்துவிட முயல்வார்கள். அதை அவர்களின்
பார்வையிலிருந்து மிகப் பத்திரமாக பாதுகாத்து வர வேண்டும். நமது
மாற்றத்தைப் பிறர் உணரத் தொடங்குகிற வேளையில் நமது இருப்பு அவர்களுக்கு
அந்நியமாய்ப் போகும். சிலவேளை நம்மை வேற்றுகிரக வாசிகளாவோ அல்லது மனநிலை
பாதிக்கப்பட்டவர்களாகவோ கற்பனை செய்துக் கொள்ளும் எல்லாவித திறமையும்
அவர்களுக்கு இருக்கிறது.
சமையலறைக் கதவுகளை உதைந்து
புகைமண்டிய விழிகளினால்
என்னைத் தேடுவேன்
இறுகி இறுகிக் கட்டிய
சேலைகள் சட்டைகள்
உரிந்தெறிந்து பின்
ஒவ்வொரு அங்கங்களிலும்
என்னை நான் காண முயல்வேன்.
மிகப் பழைய கதைதான் இது. காலங் காலமாய் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வரும்
பெண்ணின் கதை. சில இடங்களில் இந்த கதையின் வடிவங்கள் மாறியிருக்கலாம்.
ஆனால், பெண்கள் மீதான அடக்குமுறைகள் என்பது பல வடிவங்களில் தொடர்ந்த
படியேதான் இருக்கிறது. தன்மீது திணிக்கப்பட்ட, திணிக்கப்படும்
அடக்குமுறைகளைத் தம் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்று வாழ்கின்ற பெண்கள்
ஏராளம். எது தமக்கான உரிமை, எது தமக்கு இழைக்கப்படும் அநீதி எந்தவொரு
கவலையுமற்று பிறந்ததற்காக வாழ்கிற அவர்களின் வாழ்வு வருத்தத்திட்குறியது.
இதை எல்லாம் கடந்து, தம்மீது இறுக்கப்பட்டுள்ள கட்டுகள் மீறி வெளிவர
நினைக்கிற பெண்கள் சந்திக்கும் சவால்கள் மிக அதிகம். தான் யார், தன் சுயம்
என்ன என்பதை ஒரு பெண் தேடியடைய முற்படும் போது இயல்பாகவே ஒரு பெண் தன்னை
உணர்கிறாள். உணர்தல் மட்டுமின்றி அதை நோக்கி இயங்கவும் தொடங்குகின்றாள்.
அந்த நாள் –
என் வளையல்கள் நொறுங்கும்
கொலுசின் மணிகள் சிதறும்
கழுத்தை அண்டும் நகைகள் அகலும்
இதுநாள் வரையும்
அனுமதியின்றி
என்மீது அழுந்தி அழுத்தி
அமுக்குகிற முரட்டுத் தேகத்தை
வெறுப்பேன்
சபிப்பேன் அதை நான்.
வளையல், கொலுசு, நகைகள் என இன்றுவரை இதனைச் சுமந்துத் திரியும் பெண்கள்
ஏராளம். வெறும் புற அழகிற்குப் பயன்படும் ஒன்றாக இருந்ததைத் தாண்டி, இந்த
வளையலும் நகைகளும் பெண்களை வாழ்வை அளக்கும் கருவிகளாக மாறிப் போனதுதான்
பரிதாபத்தின் உச்சம். இவற்றை வைத்தே பெண்களை அடக்கி ஆள ஒரு கூட்டம்
அலைந்தபடியே இருக்கிறது. பெண்ணின் விருப்பு வெறுப்புகள் மீறி, அவளை வெறும்
உணர்வினை வெளிப்படுத்தும் இடமாக பார்க்கின்ற எத்தனையோ கதைகளை நீங்கள்
பார்த்திருப்பீர்கள். இன்றுவரை அவை எல்லாம் மாறிவிட்டதாகவோ,
மாற்றப்பட்டுவிட்டதாகவோ நம்மால் சொல்லிக் கொள்ள முடியாது.
சோற்றும் பருக்கைகளிற்காகக்
கூச்சலிடும் இதழ்களுக்கிடையே
அந்த நாளை பதுக்கி வைப்பேன்
எந்நேரமும்
என்னுள் அமுங்கி
என்னை நான் கண்டெடுப்பேன்
பின்
அந்த நாள் என்னைத் தேடிவரும்...
தன்னைப் பண்படுத்திக் கொள்கிற போது, நாம் தேடித் திரியும் ஒன்று
கண்டிப்பாய் நம்மை வந்தடையும்... நம்மைக் கண்டடைய முற்படும்போது நாம்
கண்டெடுக்கப்படுவோம்.
|
|