|
|
முனைவர் ரெ. கார்த்திகேசுவின் 'என் வயிற்றில் ஓர் எலி!'
'என் வயிற்றில் ஓர் எலி' என்ற முனைவர் ரெ. கார்த்திகேசுவின் கதையின்
தலைப்பே வித்தியாசமும் ஆச்சரியமும் நிரம்பியக் கரங்களால் நம்மைப் பிடித்து
கதைக்குள் இழுத்துச் செல்கின்றன. கதையில் முக்கியமான இவ்வரிகளைக் கூறுபவள்
நான்கே வயதான மல்லி. இவளுடன் முக்கிய கதாபாத்திரமாய் அவளது தாத்தாவும்
கதையில் வலம் வருகிறார்.
"என் வயித்திலியும் ஒரு எலி இருக்கு தாத்தா!"
மல்லியின் வார்த்தைகள் நம்மையும் சற்று வியப்புக்குள்ளாக்குக்கின்றன.
மல்லியின் தாத்தாவும் புரியாமல் தடுமாறவே செய்கின்றார். மழலைப்பள்ளியிலும்
தன் சக மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் எலிக்கதையைக் கூறுகின்றாள்.
குழந்தையின் உடல்நிலை பாதிப்புற்றிருக்குமோ என அஞ்சி தாத்தா
மருத்துவரிடமும் தொடர்பு கொண்டு அறிய முற்படுகின்றார். எதுவுமே புரியாது
பதற்றமுறும் தாத்தாவின் மனம் அச்சூழலின் வழி நம்மாலும் உணர முடிகின்றது.
பணி முடிந்து வீடு திரும்பும் மருமகளிடம் குழப்பத்தை முன்வைக்கின்றார்.
மல்லி ஏற்படுத்திய வியப்பின் காரணத்தைச் சிறிதும் வியப்பின்றி
விளக்குகின்றார் மருமகள். முன்தினம் தாத்தா நோய்க்கான மருந்து
சாப்பிடுவதைக் கவனித்துவிட்டிருந்தாள் மல்லி. அதுப்பற்றி தாயிடம் வினவ,
தொடர் கேள்விகளுக்கு விளக்கம் தர இடம் தராமல் இருக்க தாய் தந்த பதில்தான்
இது. 'தாத்தா வயித்தில ஒரு எலி இருக்கு! அதுக்குத் தீனி போட்றாரு'.
மல்லியின் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து நிம்மதி பெருமூச்சு
விடுகின்றார் தாத்தா. கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை ஏற்படும் பதற்றம்
வாசிக்கும் ஒவ்வொருவரின் மீதும் பரவி மல்லியின் தாத்தாவாக்கிவிடுகின்றது.
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில்
குழந்தைகளின் அறிவுத்திறனும் மேன்மையடைந்தே வருகின்றது. குழந்தைகளின்
கேள்விகளுக்கு வாயடைத்து போவோரும் உண்டு. தொடர்ந்து எழும் குழந்தைகளின்
மனக்கேள்விகளுக்குச் சரியான பதிலை அன்போடு பகிர்வோரும் உண்டு. ஆனாலும்
இவ்வகையினரைக் காண்பது அரிதே. கேள்விக்கான பதில் சரியா தவறா என்பதை தூர
எறிந்துவிட்டு மறுகேள்வியை எதிர்கொள்ளாவண்ணம் ஏதாவதொரு பதிலை
உதிர்த்துவிட்டு நழுவும் சிலர் அதன் தாக்கத்தை உணர்வதில்லை. ஒரு நாள்
முழுவதும் விரிந்துள்ள இக்கதையின் தளம் இதையே தழுவி செல்கின்றது.
குழந்தைகளின் கற்பனை வளமும் நினைவுத்திறனும் கூர்மையானவை.
குழந்தைப்பருவத்தில் விதைக்கும் செயல்கள், பேச்சுக்கள் என் அனைத்துமே ஆழ
பதிந்து பின்வரும் பருவங்களில் துளிர் விடுபவை. 'ஏன்? எப்படி? யார்?' என
அனைத்து கேள்வி குறியீடுகளையும் குழந்தைகள் விருப்பமுடன்
பயன்படுத்துகின்றனர். அத்தகைய கேள்விகளை எதிர்கொள்வோர் பிழையான பதிலைத்
தருவதைவிட சரியான பதிலைத் தெரிந்தளவாவது தருவது சிறப்பானது எனத்
தோன்றுகின்றது. தெரியாவிட்டால் ஒப்புக்கொண்டுவிட்டாலோ அல்லது அதைப்பற்றிய
விவரங்களை மேற்கொண்டு அறிந்து தெளிவிப்பதும் ஆரோக்கியமானது. குழந்தைகள்
எதிர்கால சந்ததியினர் என்பதை ஒரு வினாடி கூட மறக்காமல் இருப்பது
மேற்கண்டவற்றை சாத்தியமாக்கும்.
"பெற்றோர்களுக்கு வருமானம் அதிகமாக அதிகமாக அவங்களே பல நோய்களை சொந்தமா
கண்டுபிடிக்கறாங்க. குழந்தை கொட்டாவி விட்டா கூட "என்னென்னு பாருங்க
டாக்டர்னு வந்திர்ராங்க!" கதையில் வரும் டாக்டரின் பேச்சு நம்மையும்
சிந்திக்க வைப்பதாக உள்ளது. அன்பெனும் வாழ்க்கை பகுதியைப் பெற்றோரின்
பணிச்சுமை அபகரித்துக் கொள்ள அதன் தாக்கம் குழந்தைகளின் நோய்களை
அதிகரித்துக் கொண்டிருப்பது ஒரு புறமிருக்க, குழந்தைகளின் மனதையும்
உணர்வையும் புரிந்து கொள்ள முடியாத பெற்றோர்களும் குழந்தைகளிடம் தாங்களே
விநோதமான நோய்களைக் கொண்டு சேர்த்துவிடுகின்றனர். அன்பு வாழ்க்கையில்
நிறைந்திருந்த பொழுதில் நோய்கள் குறைவாகவே இருந்தன. அன்பிற்கு நோய்
எதிர்ப்புச்சக்தி அதிகம். அன்பெனும் இடத்தைப் பணம் நிரப்ப நோய்களும்
பெருகிக் கொண்டே வருகின்றன. அன்பை வழிதவற விட்டு நோயிடம் பணத்தையும் இழந்து
உடல்நலத்தை மீட்கமுடியாமல் போகும்போதே அன்பின் மதிப்பு பளிச்சிடுகின்றது.
கதையில்,
"நேத்து அமீர் முடியப் பிடிச்சி இழுத்தீங்களாமே! அடிச்சிங்களாமே!"
"அவன்தான் முதல்ல என் முடியப் பிடிச்சி இழுத்தான்!"
"அப்ப டீச்சர்கிட்ட இல்ல சொல்லணும்! நீங்க எப்படி அடிக்கலாம்?"
"டீச்சர் அவன அடிக்க மாட்டாங்க! சும்மா ஏசுவாங்க!"
"அதனால?"
"அப்படி ரெண்டு போட்டாத்தான் சும்மா இருப்பான்!"
என்ற வரிகளைப் படிக்கும்போது சிரிப்பு தானாக உதிர்கின்றது. பல முறை
அவ்வரிகளை வாசிக்கச் செய்த மழலைமொழியின் ஈர்ப்பு இன்னும் பசுமையாகவே
உள்ளது.
குழந்தைகளின் கேள்விகளுக்கு மறு கேள்வி உருவாகாவண்ணம் பதில் தேடும்
முயற்சியில் இனி இறங்கும்போது இக்கதை சற்றே உரசிவிட்டு செல்லும்.
குழந்தைகளின் கேள்விகள் யாவும் வாழ்க்கைத்தேடலின் ஆரம்பம்தானே.
|
|