|
|
பயணம் ...2
இலங்கை சிறு தீவாக இருந்த போதும் தலைநகர் கொழும்புக்குப் போகாதவர்கள்
எத்தனையோ பேர் இருக்கின்றனர். பெரும்பான்மையோர் பேசும் மொழியைப் பேசத்
தெரியாதவர்களாகச் சிறுபான்மையோரில் பலரும் இருக்கின்றனர். ஆனால் யுத்தம்
முடிவுற்ற பின் அது திணிக்கப்படுகிறது. சகல சமூகத்தினரையும் சமமாகக்
கருதும் ஒரு நாட்டில் அது நடைமுறைச்சிக்கல்களைக் களையலாம்.
புரிந்துணர்வுக்கு வழிவகுக்கும். ஆனால் மொழியைக் கொண்டே ஒடுக்குதல்
செய்யும் இனவாத அரசின் கட்டாயப்படுத்தல், திணிப்பாகவே ஒடுக்கப்படும்
மக்களால் உணரப்படும். இது இன்னும் சந்தேகங்களையும் முரண்களையும்
ஏற்படுத்தவே வழிவகுக்கும்.
போக்குவரத்துப் பாதைகள் மற்றும் பிரயாணத்தடைகள் காரணமாக மூடுண்ட வாழ்வுதான்
இலங்கையின் வடபகுதியிலிருந்தது. சிங்கள மொழியை இராணுவத்தின் மொழியாக
நாமறிந்திருந்தோம். மற்றபடி ஒரு குறிப்பிட்ட மொழியின்பால் துவேசம் எதற்கு?
அதுவொரு அந்நியமொழியாகவும் அதிகாரங்களைக் கொண்டதாகவும் பயமுறுத்தியது. என்
வாழ்வில் அப்போது தான் முதன்முதலாக நள்ளிரவில் நடுக்கடலில் கடற்படையைக்
காண்கிறேன்.
பெரும் வெளிச்சம் பகலைப் போலப் பாய்ச்சப்பட்டது. சிறு அசைவைச் செய்யவும்
பயந்தேன். எதிரில் வந்து நிற்கும் கடற்படை அந்நேரம் நம்மை எதுவும்
செய்யலாம். துப்பாக்கிகள் எம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. அவ்வளவு
பெரிய கப்பல் எம் படகை அண்மித்து நின்ற போது அது பயங்கரமாக ஆடியது.
நாட்டின் போர்ச்சூழலிருந்து தப்பிச் சென்று காலையில் தமிழ்நாட்டுக்
கரையேறினால் நிம்மதியாக இருக்கலாம் என்ற எங்கள் கனவு அந்தக் கடலினுள்
கரைந்து கொண்டிருந்தது. அன்று 'எனது உயிர் என் கையில் இல்லை' என்ற
வாக்கியத்தை அனுபவித்தேன். நாங்கள் திகைத்து நின்றோம் என்பது மிகச் சிறிய
சொல். இதுதான் எங்கள் வாழ்நாளின் இறுதி என்பதை ஒவ்வொருவரும்
நினைத்திருக்கக் கூடும்.
சிங்களத்தில் கடற்படைக்கப்பலில் இருந்து கேள்விகள் வந்தன. சிங்களம்
தெரிந்தவர் ஏறித் தங்களின் கப்பலுக்கு வருமாறு கயிறொன்று வீசப்பட்டது
எங்கள் படகுக்கு. அங்கே பலரும் என்னைப் போலவே ஒரு சொல்லும் தெரியாதவர்களாக
இருந்தோம். வயதானவர்கள் இரண்டு மூன்று பேராவது அம்மொழியைப் பேச
அறிந்திருந்தனர். ஆனால் பேசத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்வது ஆபத்தானதாக
நினைத்தனர். ஏனெனில், கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலைச்
சொல்லித் தாங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டுமே. கேள்விகள்
விளங்கியதாக அவர்கள் நம்மிடையே முணுமுணுத்த போதும் முன் சென்று பேசத்
தயாராகவில்லை.
சிறுகுழந்தைகளை கொண்டு வந்திருந்தவர்கள் பெருஞ் சத்தமாக வாய்விட்டு
அழுதனர். ஆண்களின் நிலையோ எழுதமுடியாத அவலத்தை அவர்களின் முகங்களில்
காட்டியது. 'இப்பிடி நடுக்கடலில் சாகவா வெளிக்கிட்டனாங்கள்?" என்று என்
தாயும் அழத்தொடங்கினார்.
குறிப்பிட்ட அளவு இளம்பெண்களும் இருந்தோம். என்ன நடக்குமோ என்று
அதிர்ச்சியும் பயமும் நிறைந்தவர்களாயிருந்தோம். நடக்கப் போவது எதுவாயினும்
அந்நேரம் எங்களை எவருமே காப்பாற்ற முடியாது என்ற உண்மையை
உணர்ந்திருந்தவர்களாக அனைவரும் அந்தரித்து நின்றோம். ஏனென்றால், இலங்கை
இராணுவம் ஊர்களை நோக்கி வந்து செய்த கொடுமைகளை அனுபவித்த மக்கள்தானே
எல்லோரும். ஆகவே இலங்கைக் கடற்படையின் கப்பலில் எம்மை நோக்கித்
திருப்பப்பட்டிருந்த ஆயுதங்களையிட்டு அச்சமடைந்தோம். தப்பித்தோடவும்
வழியற்று நட்ட நடுக்கடலில் சிக்குப்பட்ட அபலைகளாயினோம். எங்கள்
காலத்தில்தான் இலங்கைக் கடற்படை குமுதினிப் படகுக் கொலைகளைக் கொடூரமாகச்
செய்திருந்தது - மண்டைதீவுக் கடலில் மீனவர்களை வெட்டிச் சாய்த்திருந்தது -
இன்னும் இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வருவதாகக் கொலை செய்வது - கைது
செய்வது என நிகழ்ந்திருந்தது. எமது ஊரில் கரையொதுங்கிய சடலங்களைப்
பார்த்திருக்கிறேன். அவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற வழியில்
கடலில் மிதந்து சடலங்களாக ஒதுங்கியதைக் கண்டிருக்கிறேன்.
எமது படகு அளவுக்கு மீறிய ஆட்களின் தொகை மற்றும் பயணத்திற்கு ஏற்றவாறு நல்ல
இயந்திரங்களைக் கொண்டிருக்கவில்லை போன்ற காரணங்களால் விரைந்து செல்ல
முடியாமல் கடற்படையின் கைகளில் சிக்கியது. புலிகள்தான் இதற்கான அலவலகம்
ஒன்றைக் கரையோரம் நடத்தி ஆட்களை இந்தியாவுக்கு அகதிகளாக அனுப்ப
ஓட்டிகளையும் படகுகளையும் ஏற்பாடு செய்தனர். மக்களிடமிருந்து கட்டணங்களை
அறவிட்டு அதிலும் ஒரு தொகை உழைத்தனர். அத்துடன் தம்மை அறியாமல்
இந்தியாவுக்கு எவரும் தப்பி ஓட முடியாதவாறு விசாரணை செய்து பெயர்ப்பட்டியல்
சரி பார்க்கப்பட்டு சனங்களை படகிலும் ஏற்றும் வரை பார்த்துக்
கொண்டிருந்தனர். அளவுகணக்கற்ற ஆட்களினால் விபத்து நேரலாம் என்பதைக் கூட
அறியாதவர்களாக அள்ளி அடைந்து அகதிகளாக அனுப்பிருக்கிறார்கள். பழுதாகக்
கூடிய படகைப் பொறுப்பற்றுப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், நாம்
எத்துன்பத்தை எதிர் கொண்டாலும் பதில் சொல்ல அவர்கள் வரப் போவதில்லை.
அவர்கள் பணத்தைப் பத்திரப்படுத்தினார்கள்.
தங்கள் படகைத் தொடர்ந்து வருமாறு கட்டளையிட்டபோதுதான் ஓரளவு சுயநினைவைப்
பெற்றோம். ஆனால் எங்கு கொண்டு செல்வார்கள்? எவரிடம் கையளிப்பார்கள்? கைது
செய்தால் வருடக்கணக்காகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களைப் போல
கேட்பாரற்றுப் போவோமா? என்ற கேள்விகள் மனதில் தொடராக எழுந்தன.
எங்கள் படகோ நகர முடியாமல் நின்றது. இறுதியாகக் கடற்படையின் படகுகள் சில
புதிதாக எம்மை நோக்கி வந்தன. அவை எம்மைக் கைப்பற்றிய கப்பலைப் போலன்றிச்
சிறியன. கொஞ்சம் கொஞ்சமாக மக்களை ஏற்றினர். கடற்படையின் தலைமன்னார்
தளத்தைச் சென்றடைந்தோம். இப்போது விடியற்காலை ஏழு மணியிருக்கலாம். ஈர
உடைகளும் பசியும் பயமும் நிரம்பியவர்களாக மௌனித்திருந்தோம்.
அங்கிருந்தவர்கள் கொச்சைத் தமிழும் ஆங்கிலமும் பேசினர். ஒவ்வொருவராக
விபரங்கள் கேட்கப்பட்டு எழுதினார்கள். பயணப் பைகள் பரிசோதிக்கப்பட்டு ஏன்
இந்தியா போகிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். இளைஞர்கள் அவர்கள்
அணிந்திருந்த மேற்சட்டைகளினால் முதுகுப் பக்கமாகக் கைகள் மடக்கிக்
கட்டப்பட்டிருந்தனர். படகோட்டிகள் அடித்து உதைக்கப்பட்டு பொலிஸிடம்
ஒப்படைக்கப்பட்டனர். வயோதிபர்களும் குழந்தைகளும் அதிகமாக அழுது
கொண்டிருந்ததனர். பின்னரும் எங்களைக் கொண்டு சென்று மன்னார் பொலிஸிடம்
ஒப்படைத்தனர். மதியமாகியது. கைகள் கட்டப்பட்ட அந்த இளைஞர்கள் எம்முடன்
வரவில்லை.
அப்போது எங்களுக்குச் சொல்லப்பட்டது என்னவென்றால் 'உங்களை "நடுக்கடலில்
வைத்துப் பிடித்தவுடன் எங்கள் தளபதியுடன் தொடர்பு கொண்டோம். இவர்கள்
அனைவரையும் என்ன செய்வதென்று கேட்ட போது கைது செய்து தளத்திற்குக் கொண்டு
வருமாறு சொல்லப்பட்டது. ஆகவே, கொண்டு வந்தோம். ஆனால் நடுக்கடலில் வைத்து
உங்கள் அனைவரையும் மூழ்கடிக்குமாறு அல்லது சுட்டுக் கொல்லுமாறு
உத்தரவிடப்பட்டிருந்தால் அதையே செய்திருப்போம். எமது தளபதி நேற்று நல்ல
மனநிலையிலிருந்ததால் தப்பித்து விட்டீர்கள்" அந்தத் தளபதிக்கும் அவரைப்
போன்ற எல்லாத் தளபதிகளுக்கும் எப்போதும் நல்ல மனநிலை இருக்கட்டும்.
ஆயுதங்களையும் அதிகாரங்களையும் சுமந்த அவர்கள் எல்லோருக்கும் எப்போதும்
அந்த மனம் வரட்டும். சுடப்படும் மீனவர்கள் மீது அம்மனநிலை வரட்டும். தம்
கைகளிலிருப்பதைக் கொண்டு சனங்களை எதுவும் செய்யலாம் என்ற அதிகாரம் கொடுத்த
ஆணவத்தை அவர்கள் உயிர்களைப் பலியெடுக்கப் பயன்படுத்த வேண்டாம்.
தொடரும்...
|
|