முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 28
ஏப்ரல் 2011

  மதவாதம் என்கிற நோய்
கே. பாலமுருகன்
 
 
       
நேர்காணல்:

"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை"

லீனா மணிமேகலை



பத்தி:

மதவாதம் என்கிற நோய்
கே. பாலமுருகன்

ஆடுதின்னவன் பட்டுக்கலை அணி தின்னவன்....
அ. ரெங்கசாமி

ஓர் இலக்கிய நிகழ்ச்சியாம்!
தினேசுவரி



சிறுகதை:

கூலி
ம. நவீன்

ரயில்பயணத்தில்
கிரகம்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...10
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



'நேர்காணல்' இதழில் வெளிவந்த இயக்குனர், நடிகர் நாசரின் நேர்காணல்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...18

ம. நவீன்

லதாமகன்



எதிர்வினை

13ஆவது வயதில் நாடகம் நடிப்பதில் இருந்த அதிகமான விருப்பமும் ஆர்வமும் ஏற்படுத்திய வாய்ப்புதான் ஹரே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அறிமுகம். பத்து டுவா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த திருவிழா கச்சேரியில் ஒரு பாடலுக்கு நண்பர்களுடன் ஆடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த ஓர் இரவுநேரம் அது. கொஞ்சம் கராரான குரலில் எங்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் பேசத்துவங்கியது மட்டும் தனியாகப் பிரிந்து எனக்குள் சத்தமாக ஒலித்தது. அவன் பேசிய முதல் சில சொற்களே எனக்குள் தடுமாற்றத்தை உருவாக்கியது. ஒழுக்கம், ஆன்மீகம், கடவுளைத் தேடுதல் எனும் அந்த வரிசை சட்டென மயக்கத்தைக் கொடுத்தது. என்னுடைய 13 மற்றும் 14 வயதில் நான் இறைவனைத் தேடுகிறேன் எனத் தேவாலயத்தில் கழித்து முடிந்து சோர்வுற்று மீண்டும் அதிலிருந்து விடுப்பட்டிருந்த காலம்.

பைபிளின் ஒரு வரி சடசடவென வந்து மனதில் தொங்கி கணத்தது. 'பிதா தன்னைக் காட்டிக்கொள்வதற்காக தன் பாசத்திற்குரிய மகனை வெவ்வேறான வடிவத்தில் அனுப்பிக்கொண்டே இருப்பார்'. ஆகையால் இந்தப் பத்து டுவா கம்பத்தின் மிகவும் சாதாரண ஒரு திருவிழாவிற்கு வந்திருப்பது இறை தூதன் அல்லது அவருடைய செய்தியைச் சொல்ல வந்த மகன் என்றே நினைத்தேன். ஒரு சாமி படத்தைப் பார்த்தாலோ அல்லது கோவிலுக்குச் சென்றாலோ உடனடியாகப் பக்திமானாக மாறக்கூடிய ஒரு நிலையில் இருந்ததால் அடிக்கடி தற்காலிகமான ஒரு தேடலை ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கம் கூடுதலாகவே இருந்தது.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்த ‘அம்மன்’ திரைப்படத்தைப் பார்த்தே பல தடவை அம்மன் பக்தனாக இருந்திருக்கிறேன். அம்மனுக்கு எப்படிப் பக்தனாக இருப்பது எனத் தெரியாத ஒரு கட்டத்தில், அம்மனுக்குப் பயந்து அவளுக்கு முன் ஒடுங்கி சரணடைந்து கிடப்பதுதான் ஆக உயர்ந்த பக்தி எனத் தீர்மானித்தேன். ஒடுங்கி தனது பயத்தைக் காட்டுவதே பக்தியென பார்ப்பவர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். ஆக, நெற்றி முழுக்க திருநீர் பரப்பி கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு வெள்ளை ஜிப்பா அணிந்துகொண்ட பிறகு நான் அம்மன் பக்தன் ஆகியிருந்தேன். கோலாலம்பூருக்கு இடைநிலைப்பள்ளியில் மாமா வீட்டில் தங்கிப் படிக்கச் செல்லும்வரை அம்மன் பக்தனாகத்தான் இருந்தேன். ஆனால் அங்குச் சென்றதும் அக்காவின் மூலம் கிருஸ்த்துவர்களின் நட்பும் அவர்களின் பிரச்சாரத்தின் வலிமையை உணரும் வாய்ப்பும் கிட்டியது.

இரவு 7மணிக்கு மேல் மாமாவிற்குத் தெரியாமல் பேருந்தின் மூலம் ஜெபக்கூட்டத்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புகையில் கர்த்தரின் பாடலின் மூலம் மாமாவிடம் மாட்டிக்கொள்ளும் அபாயத்தைக் கடப்பதற்கு முயன்றிருக்கிறேன். நண்பன் வீட்டில் பாடம் செய்து கொண்டிருந்தேன் அல்லது காற்பந்து பார்க்கச் சென்றேன் என நான் சொல்லப்போகும் பொய்களை வலிமையாக்குவதற்கான நம்பிக்கைகள் கர்த்தரின் பாடல் வரிகளில் இருந்ததை உணர்ந்துள்ளேன். வீட்டின் முன்கதவைத் தாண்டியதும் மாமா என் வருகையைப் பற்றி அக்கறைகொள்ளாத வரைக்குமான அற்புதங்கள் நடந்திருக்கின்றன. எப்பொழுதும் நமக்கொரு அற்புதம் நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆகையால் மீண்டும் மீண்டும் கர்த்தர் அற்புதங்களின் வழி உங்களுக்கும் இறைவனுக்குமான உறவை வலுப்படுத்தவுள்ளார் என ஜேம்ஸ் பாதிரியார் சொல்வதைக் கேட்டு நானும் எனக்கு முன் எனக்கு சாதகமாக நிகழும் அனைத்தையும் கர்த்தரின் அற்புதங்கள் என்றே நம்பியிருந்தேன்.

எப்படி கிருத்துவ நம்பிக்கைகளின் உச்சத்தை அடைவதென்றே தொடர்ந்து யோசித்துக்கொண்டிருப்பேன். ஒரு முழு கிருத்துவனாக மாறுவதில் நான் காட்டிய ஆர்வத்தில் பலர் திணறினார்கள் என்றே சொல்ல வேண்டும். என்னைக் கட்டுப்படுத்தி எப்படி மனதளவில் ஒரு உண்மையான கிருத்துவனாக வாழ வேண்டும் எனக் கற்பித்ததில் அடுக்கும்மாடி வீட்டிலிருந்த மேரி பாட்டிக்குத்தான் பங்கு அதிகம். மிகவும் சாந்தமானவர். மதியம் அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். வீட்டின் சுவர் முழுக்க இயேசுவின் படங்கள். ஆங்காங்கே இயேசுவை மேய்ப்பவனாகச் சித்திரிக்கும் வாசகங்கள். நாமெல்லாம் ஆடு மாதிரி இயேசுவின் மெய்த்தலுக்கு நம்மை ஒப்படைத்துவிட வேண்டும் எனக் கூறிவிட்டு பைபளின் ஒரு வரியைப் படித்துக் காட்டும் மேரி பாட்டியிடம் நான் பிரமித்த ஓர் அன்பு இருந்தது. அந்த அன்பைப் பெற்றுக்கொள்வதற்காக அவருடன் தேவாலாயம் ஜெபம் மாலை வகுப்புகள் என அலைந்தேன்.

பைபளை இரண்டுமுறை வாசித்துவிட்டால் நான் இயேசுவின் பிள்ளையாகிவிடலாம் எனத் தீர்க்கமாக நம்பி வாசித்தும் முடித்தேன். பைபிள் வரிகள் ஒவ்வொன்றும் ஞாபகத்தில் இருந்ததே தவிர நான் எதிர்ப்பார்த்த திடீர் மாயம் ஏதும் நடக்கவில்லை. பைபிள் படித்துக்கொண்டிருக்கும்போது கர்த்தர் தோன்றுவார் எனவும் அல்லது ஏதாவது ஒரு வாசகம் திடீரென நம்மை அழ வைக்கும், அந்த வரி கர்த்தர் நமக்கென சொல்வதாகும் எனவும் ஜேம்ஸ் பாதிரியார் சொல்லியிருக்கிறார். தொடர் வெறுமையும் அமைதியும் மாயம் நிகழாத பொழுதுகளும் கற்பனையை உருவாக்கிக் கொண்டு சுயமாக பரவசப்படுத்திக்கொள்ளும் ஒரு பழக்கத்திற்கு ஆளாக்கியிருந்தது. பிறகு பைபிளைக் கையில் பிடித்திருப்பதும் அதைப் பிறருக்குப் பிரச்சாரம் செய்வதுமே புனிதமான செயல் என நம்பினேன். பைபிளை அப்படிப் பிரச்சாரம் செய்ததற்காக முதலாம் படிவத்தில் ஒரு சில மாணவர்களால் மிரட்டப்பட்டிருக்கிறேன். கர்த்தர் என்னைக் கவனித்துக்கொள்வார், அவரின் அற்புதங்களின் மூலம் என்னை இரட்சிப்பார், ஆகவே பயமில்லாமல் நண்பர்களிடம் பேசுவதற்குத் துணிச்சல் இருந்தது.

தாத்தாவும் ஒரு கிருத்துவராகத்தான் இருந்தார். ஞாயிறுதோறும் தேவாலயத்தில் கிடைக்கும் 25 வெள்ளிக்காக அவர் தீவிரமான கிருத்துவராக மாறியிருந்தார். கர்த்தரை முன்வைத்து அவருக்குப் பிடிக்காதவர்களை நோக்கி சாபமிடும் அளவிற்கு இந்திய மனதையும் கிருத்துவ வார்த்தைகளையும் சேர்த்து ஆயுதமாக்கி வைத்திருப்பார்.

வரவேற்பறையின் ஒரு மூலையில் பாய் விரித்து படுத்திருக்கும் தாத்தாவிடம் இரவு முழுக்க ஆற்றாமை இருந்துகொண்டே இருக்கும். வீட்டிலுள்ளவர்கள் அத்துனைப் பேரையும் சபித்துக்கொண்டே இருப்பார். அவருக்கு நேர்ந்த புறக்கணிப்புகளைச் சமாளிக்க அவரிடம் அதீதமாக வெளிப்பட்டது 'ஆண்டவரே' என்கிற சொல் மட்டுமே. “ஆண்டவரே இவர்களின் பாவங்களை மன்னிக்காதீர்கள்” எனத் தொடர்ந்து பாட்டியையும் மாமாவையும் பார்த்துச் சொல்லிக்கொண்டே இருப்பார். பிறகொருநாள் அது வசையாகவும் மாறியிருந்தது. மனிதனின் ஒவ்வொரு பாவத்தையும் மன்னிக்கும் வசதியைக் கொடுக்கும் கிருத்துவத்தின் நம்பிக்கையில் இருந்துகொண்டு தாத்தா அதற்கு முரணான கற்பிதங்களைக் கொண்டிருப்பது ஆச்சர்யமானதாகத் தோன்றியது.

தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு கர்த்தரின் மீது திடீர் வெறுப்புத் தோன்றியது. கர்த்தரின் ஓர் ஆட்டை அவர் ஏன் பாதுகாக்கவில்லை எனவும் அவர் சரியான மேய்ப்பவன் இல்லை எனவும் ஏதுமறியாமல் அவருடன் கோபித்துக்கொண்டு ஜெபம் செய்யாமல் நாட்கள் தொடர்ந்தன. ஜெபம் செய்யும்போது அழவில்லை என்றால் கண்களில் நீர் ஒழுகவில்லை என்றால் அந்த ஜெபம் இரட்சிக்கப்படவில்லை என அக்கா சொல்லியிருக்கிறார். பொய்யாக அழுது பார்த்தும் ஜெபத்தில் மனம் சிக்கவில்லை. கோபம் தணிந்து சோதனை நெருங்கிய ஒரு இரவில், திடீரென ஜெபம் செய்ய மனம் தூண்டியது. அக்கா இல்லாத அறையில் சன்னலைப் பார்த்தப்படி முட்டிகாலிட்டு ஜெபிக்கத் துவங்கினேன். மனம் முழுக்க பரீட்சை குறித்தான பதற்றமும் பயமும் பெருகி இருந்ததால், இலேசாக முகத்தை வருடக்கூடிய ஒரு காற்றை உணர்ந்த மறுகணமே அழுகை பெருக்கெடுத்தது. பிதாவே பிதாவே எனச் சொல்லி அழுதேன். அழுது கண்ணீர் வடித்து அப்படியே தூங்கியும்விட்டேன். அதன் பிறகு கிருத்துவத்திற்கும் எனக்கும் முற்றிலுமாகத் தொடர்பற்றுப் போனது. அக்காவிடமிருந்தும் மேரி பாட்டியிடமிருந்தும் தப்பித்து ஓடத் துவங்கினேன். நான் ஆடாக இருக்க விரும்பவில்லை எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டேன்.

ஆடு கூட்டமாக மேய்க்கப்பட்டு ஓரிரு வழக்கமான சொல்லுக்குக் கட்டுப்படக்கூடிய மிருகம். கூட்டாக என்னை நடுவில் வைத்து கையில் கட்டியிருந்த முடி கயிற்றை அறுக்கும்போதும் சத்தமாக 4 பேர் ஜெபித்தப்போதும் வெறுமனே ஓர் உணர்வு அதிர்வுக்கு மட்டும் கட்டுப்பட்டுப் போன ஒன்றை நான் பக்தியாகவும் ஆன்மீகமாகவும் எப்படி அர்த்தப்படுத்திக்கொண்டேன்? பிற கடவுள்களை வணங்குவது சாத்தானை வழிப்படுவதற்குச் சமம் எனச் சொல்லப்பட்டபோது கூட எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தேன் ஆனால் சாத்தான்களை வணங்குபவர்களும் சாத்தான்களின் பிள்ளைகள், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனச் சொன்னப்போது சட்டென அம்மாவும் அம்மனும் முருகனும் ஞாபகத்திற்கு வந்தார்கள். அன்று இரவே மாமா வீட்டின் சாமியறைக்குள் புகுந்து வெகுநேரம் அம்மன் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிவசக்தி குடும்பப் படம், என் குடும்பத்தை ஞாபகப்படுத்தியது.

மதம் என்கிற அமைப்பின் மூலம் ஒரு சாமான்யன் அடையும் நிலை என்ன என்பதை இப்பொழுது உணர முடிகிறது. பலவீனமானவர்களையும் நோய்வாய்ப்பட்டவர்களையும் தொடர்ந்து மதப்பிரசாரத்திற்குள்ளாக்கி அவர்களின் மனதை ஆக்கிரமிக்கும் ஒரு அபாரமான வேட்டையாடுதலை ஒவ்வொரு காலமும் சந்தித்து வருவதைப் பார்க்க முடிகிறது. மனிதர்களை அணுகி அன்பு செலுத்துவதில் நமக்கெதற்கு மத அடையாளமும் மதத் தீவிரத்தன்மையும்? கூட்டாகச் சேர்ந்து மதப் போதனைகளைப் பரப்பும் ஒரு நிறுவனமாக மதம் செயல்படுவதுன் மூலம் தொடர்ந்து மனித உறவுக்களுக்கிடையேயான அழுத்தமான இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது. சக மனிதர்களின் மீதான மதிப்பீடுகளை உருவாக்குவதில் மதம் காட்டும் பிற்போக்குத்தனம் மிகவும் ஆபத்தானவை. கிருஷ்ண பக்தராக இல்லாத நிலையில் அம்மா சமைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்கிற நம்பிக்கை கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நடைமுறையில் உள்ளது. முடிந்தால் அம்மாவைப் பக்தையாக்கி பகவானுக்கு உணவு படைத்துவிட்டு அதில் மீதியைச் சாப்பிடும் ஒருவராக அவரை மாற்றுங்கள் எனும் விதிமுறை பிறப்பிக்கப்பட்டது.

ஆக, மதம் நம்மை அதன் கொள்கைகள் போதனைகள் நம்பிக்கைகள் சார்ந்து ஒழுங்குப்படுத்தவே முயல்கிறது. பிறகு அது விதிக்கும் புதிய ஒழுங்கை வலுக்கட்டாயமாக நம்மை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. மதத்தின் பெயரில் வெவ்வேறுவிதமாக இயங்கும் பல்வகையான மத அமைப்புகளின் மீதான விமர்சனமும் கருத்தும்தான் இவையாவும். ஒட்டுமொத்த கிருத்துவமும் அல்லது கிருஷ்ண பக்தி இயக்கமும் ஒரே மாதிரித்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது என் குற்றசாற்றல்ல.

எப்பொழுதாவது தேவாலயத்தைக் கடக்கும்போதும், அல்லது பட்டணத்தில் கிருஷ்ணப் பக்தர்களைச் சந்திக்கும்போதும், மதத்திற்கும் தெய்வ நம்பிக்கைக்கும் அப்பாற்பட்ட அவர்களின் அன்பு மட்டும் சட்டென தரிசனம் காட்டிச் செல்கிறது. அடுத்த பத்தியில் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் ஐந்தாண்டுகள் தீவிரமாக அலைந்து திரிந்ததைப் பற்றி சொல்லியாக வேண்டும்.

எல்லா வகையான பகிர்தலுக்கும் பிறகும் வழக்கம்போலவே என்னிடம் " நீங்கள் மதவாதியா?" என்ற கேள்வி முன்வந்து நிர்க்கும். கேட்பவரின் முகத்தில் பாதுகாப்பாய் பூசப்பட்டிருக்கும் மதச்சாயத்தைக் கண்டு மென்மையாகச் சிரிப்பேன். என் சிரிப்புக்கு அவர்கள் ஓர் அர்த்தம் வைத்திருக்கலாம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>