முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 28
ஏப்ரல் 2011

  ஆடுதின்னவன் பட்டுக்கலை, அணி தின்னவன்....
அ. ரெங்கசாமி
 
 
       
நேர்காணல்:

"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை"

லீனா மணிமேகலை



பத்தி:

மதவாதம் என்கிற நோய்
கே. பாலமுருகன்

ஆடுதின்னவன் பட்டுக்கலை அணி தின்னவன்....
அ. ரெங்கசாமி

ஓர் இலக்கிய நிகழ்ச்சியாம்!
தினேசுவரி



சிறுகதை:

கூலி
ம. நவீன்

ரயில்பயணத்தில்
கிரகம்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...10
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



'நேர்காணல்' இதழில் வெளிவந்த இயக்குனர், நடிகர் நாசரின் நேர்காணல்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...18

ம. நவீன்

லதாமகன்



எதிர்வினை

1942ஆம் ஆண்டு சப்பானியர் மலாயாவை ஆண்டு கொண்டிருந்த காலம். எசுட்டேட் எனப்படும் வெள்ளைக்காரன் தோட்டங்களும் கம்பங்களில் இருந்த சீனர்களின் தோட்டங்களும் செயலற்றுக் கிடந்தன. பிழைப்புக்கு வழியில்லை. தங்களின் பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் இறங்கினர் தமிழ்ப் பாட்டாளிகள்.

வெளி உலகத் தொடர்பு நின்று போனதன் காரணமாக அரிசி, சீனி, உப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கும் உடுத்துகின்ற உடைக்கும் பஞ்சமாகி விட்டிருந்தது. பஞ்சம் பிழைக்க வேண்டி இருந்தது.

மரவள்ளி, சர்க்கரைவள்ளி, வாழை போன்ற பயிர்களுடன் கேழ்வரகு, சோளம் போன்ற தமிழகத் தானியங்களையும் பயிர் செய்வதில் முனைந்திருந்தனர் பெரியவர்கள். பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுக் கிடந்தன. எனவே, சிறுவர் சிறுமியர்கள் விளைந்து கிடக்கும் சோளம், கேப்பைக் காடுகளில் குருவி ஓட்டுதல் ஆடு மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் அடியேனுக்குக் கிடைத்திருந்த வேலை ஆடு மேய்ப்பது.

கம்பத்தில் ஒவ்வொரு வீடும் தீவுகள் போன்று தனித்தே நிற்கும், வீடுதோறும் ஆடுகள் வளர்க்கப்பட்டிருந்தன. ஆடுமேய்க்கும் சிறுவர்கள் குழு குழுவாகப் பிரிந்து ஆடு மேய்ப்பது வழக்கம். என் அம்மான் மகன் காத்தானும் நானும் ஒரு குழுவாகச் செல்வது வழக்கம். இங்கே, பெரிய கானு என்று அழைக்கப்பட்ட ஒரு சிற்றாறு கிழக்கில் இருந்து மேற்கில் ஓடுகின்ற லங்காட் நதியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. இதன் நீர் கன்னங்கரேல் என்று இருக்கும். எனவே, இதனைக் கருங்கானு என்னும் அழைப்பதுண்டு. இக்கருங்கானு, கம்பத்தை இரண்டாகப் பிரித்து விட்டிருந்தது. இதன் தென்பக்கத்தில் சீனர்களும் தமிழர்களும் வாழ்ந்திருக்க, வட பக்கத்தில் மலாய்க் கம்பம் நீண்டு கிடந்தது.

வடக்கையும் தெற்கையும் இணைத்து இக்கானில் நீண்ட ஒரு மரப்பாலம் கட்டியிருந்தனர். பாலத்தின் மேல் பகுதியில் குடிசை போன்று அத்தாப்பால் கூரை இடப்பட்டிருந்தது. ஆடு மேய்க்கும் போது திடீர் என்று மழை வந்து விட்டால் நாங்களும் ஆடுகளும் ஓடிவந்து ஒதுங்குவது இப்பாலத்தில்தான். இப்பாலத்தில் இருந்து நேர் தெற்காக ஒரு பெரும் பாதை நீண்டு கிடந்தது. இப்பாதையின் இரு மருங்கிலும்தான் சீனர்களும் தமிழர்களும் வாழ்ந்து இருந்தனர்.

இங்கே, ஒரு சீனரின் கடையும் இருந்தது. இதற்குக் “கூனன் கடை” என்று பெயரிட்டிருந்தனர் தமிழர்கள். இப்பகுதியில் வாழ்ந்திருந்த அனைத்து மக்களுக்கும் இதுதான் ஒரு பேரங்காடியாய் விளங்கியது. பாலத்தில் இருந்து கிழக்கு நோக்கி கருங்கானின் தென்புறமாய் ஒரு கொடிப்பாதையும் உண்டு. இப்பாதையைப் பெரும்பாலும் மலாய்க்கம்பத்து மக்களே பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இக்கொடிப் பாதைக்கு எதிர்க்கரையில்தான் நாங்கள் எப்பொழுதும் ஆடு மேய்ப்பது வழக்கம்.

காலையில் சுமார் பத்து மணிக்கு மேல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் நாங்கள், பொழுது இறங்கத்தான் வீடு திரும்புவோம். எங்களின் கழுத்தில் எப்போதும் உண்டைவில் தொங்கிக்கொண்டிருக்கும். ஆடுகள் மேய்த்து கொண்டிருக்கும் வேளையில் உண்டைவில் கொண்டு குருவி, அணில் ஆகியவற்றை வேட்டையாடுதல், பிறத்தியார் தோப்பில் கள்ளத்தனமாய் இளநீர் பறித்தல், கருங்கானில் குதித்து நீந்திக் கும்மாளம் போடுதல், இரப்பர் மரக்கிளைகளில் ஊஞ்சலாடுதல் போன்றவை எங்களின் பொழுது போக்காய் இருந்தன.

மலாய்க்கம்பத்தில் சாவானிய மக்களும் வாழ்ந்திருந்தனர். அங்கே வாழ்ந்திருந்த அனைவருமே என் தந்தைக்கு நன்கு அறிமுகமானவர்கள்தாம். அங்கே இருந்த ஒரு சாவானியக் குடும்பத்துக்கும் ‘கிழவி வீடு’ என்று பெயர் வைத்திருந்தார் என் தந்தை. அவ்வீட்டுக் கிழவி நன்றாக வெற்றிலை போடுவாள். எனவே, அவளின் தோப்பில் பாக்கு மரங்கள் நிறைய இருந்தன. என் பெற்றோர்களும் வெற்றிலை போடும் பழக்கம் உடையவர்கள். பாக்குக்காய் பறிப்பதற்காக தந்தை அடிக்கடி அங்கே செல்வதுண்டு. அவருடன் நானும் சென்றிருக்கிறேன்.

கால்கட்டி (4 தயின் - அன்றைய நிறுத்தலளவை) ஊசி மிளகாய் கொடுத்தால் போதும் வேண்டிய அளவு பாக்குக் காய்கள் அறுத்துக் கொள்ளலாம். இந்த வகையில் அக்குடும்பத்துக்கு நானும் நன்கு அறிமுகம் ஆனவன்தான். கிழவியின் குடும்பத்தில் பெண்பிள்ளைகளே நிறைய இருந்தனர். அதன் விளைவாக ‘மருமகன்’ என்ற பெயரில் ஒரு சாவானிய (Jawa) முரடன் அங்கே புதிதாய் வந்து ஒட்டிக் கொண்டிருந்தான்.

பரட்டைத் தலையும் தடித்த உதடுமாய்ப் பார்ப்பதற்குப் பயங்கரமாய் இருந்தான். கறுப்பு நிறத்தில் பளிச்சென்ற வெள்ளைப்பட்டைக் கோடுகள். போட்ட உடைதான் எப்போதும் அவன் அணிந்திருப்பான். ‘சப்பான்காரனை எதிர்த்துச் சண்டை போட, வெள்ளைக் காரன் அமைத்திருந்த மலாய்ப்பட்டாளத்தில் இருந்தவனாம் அவன். சப்பான் மலாயாவைப் பிடித்தும் தப்பி ஓடி வந்து இங்கே பதுங்கிக் கிடக்கிறான்’ என்று மக்கள் பேசிக் கொள்வார்கள். எனவே, அவனுக்கு பட்டாளத்தான் என்று பெயர் வைத்திருந்தனர் மக்கள். பொதுவாக நம்மவர்களுக்கு அவனைக் கண்டால் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கும்.

ஆனால், நான் அப்பாவோடு அடிக்கடி கிழவி வீட்டுக்குச் சென்று வந்த காரணத்தாலே என்னவோ என்னை, ‘தம்பி’ என்றுதான் அழைப்பான் அவன். அதனால் பட்டாளத்தானைக் கண்டு நான் பயன்படுவதில்லை! வெளியில் வரும்போது கையில் நீண்ட பட்டாக்கத்தியோடுதான் வருவான் பட்டாளத்தான். கொடிப்பாதையில் வந்து போவதுண்டு. அன்றும் அவன் அப்படித்தான் அப்பாதையில் வந்து கொண்டிருந்தான். ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காத்தானும் நானும் சாய்ந்து நின்ற ஒரு ரப்பர் மரக்கிளையில் ஏறி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தோம்.

“தம்பி! பாய்க்கா!” ஓங்கிக் குரல் கொடுத்தான் பட்டாளத்தான்.

“பாய்க்!” நாங்களும் குரல் கொடுத்தோம்.

கடைப்பக்கம் சென்ற அவன் என்னவோ வாங்கிக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தான். அந்தநேரத்தில் ரப்பர்க்காட்டுக்குள் தரையில் அமர்ந்து ரப்பர் விதைகளைப் பொறுக்கி, “சொடுக்கான் காய்” ஆடிக்கொண்டிருந்தோம் காத்தானும் நானும். நாங்கள் பட்டாளத்தானைப் பார்த்தோம். அவனால் எங்களைப் பார்க்க இயலவில்லை! எங்களின் ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் பட்டாளத்தான் மீண்டும் கடையை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. நாங்கள் எழுந்து கொண்டோம்.
எழுந்து நின்ற காத்தான் திடீர் என்று உட்கார்ந்து வாந்தி எடுத்துட்டான்.

“காத்தான்! ஏன் இப்படி? என்ன பாண்ணுது?” நான் கேட்டேன்.

“என்னவோ தெரியலை மச்சான்! வயிற்றைப் புரட்டுது! வாந்தி வருது! நான் வீட்டுக்குப் போறேன் மச்சான் ஆடுங்களைப் பார்த்து ஓட்டிக்கிட்டு வந்திடு” என்று சொன்ன காத்தான் விடு விடு என்று நடந்து விட்டான்.

அப்பொழுது மணி சுமார் நாலுதான் இருக்கும்.

“இன்னும் ரொம்ப நேரமிருக்கே, நாம் வழக்கம் போல போவோம்” என்ற நினைப்போடு தனியே நின்று ஆடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

கடைப்பக்கம் போன பட்டாளத்தான் கம்பத்துப் பக்கமாய் இருந்து அந்தக் கொடிப்பாதையில் தலைவிரி கோலமாய் ஓடி வந்தான். நான் திடுக்கிட்டும் போனேன்.

“என்னடா இது? கடைப்பக்கம் போனவன் எப்படி இப்ப கம்பத்துப் பக்கம் இருந்து ஓடி வர்றான்? ஏன் ஓடி வர்றான்?” என்ற கேள்வியோடு கானுக்கரை மேட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் நான். பட்டாளத்தான் என்னைப் பார்த்து விட்டான்.

“தம்பி! மரிசினி! மரிசினி! வக்காசு!”

ஏதோ பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டு, என்னை உதவிக்கு அழைப்பது போல் இருந்தது அவனின் அழைப்பு! பட்டாளத்தானுக்கும் எனக்கும் இடையில் ஓடிக் கொண்டிருந்த கருங்கானில் அந்த நேரத்தில் நீர்மட்டம் குறைவாக இருந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் சிறு பிள்ளைத்தனமாய் கிடு கிடு என்று கானுக்குள் இறங்கி - ஏறி பட்டாளத்தான் பக்கத்தில் போய் நின்றேன்.

அவ்வளவுதான்! பாயும் புலியாக மாறிவிட்டான் பட்டாளத்தான்.

வழக்கமாய் நான் கழுத்தில் மாட்டியிருக்கும் உண்டை வில்லை, தமது முரட்டுக்காரங்களால் முறுக்கிப் பிடித்து எனது கழுத்தை இறுக்கிக் கொண்டான்.

“தடி சய சிம்பான் போத்தல் மிஞ்ஞா கிளப்பா டி பொக்கோ பாவா இத்து! அவா பாண்டையா! சுடா சூரி போத்தல் இத்து. மானா போத்தல் இத்து?” காட்டுப் பன்றியைப் போல உறுமி கத்தியை ஓங்கினான் அப்பேயன்!

நான் நடு நடுங்கிப் போனேன்.

“எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது. நான் ஆடுதான் மேய்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று உண்மையைச் சொன்னேன்.

“டேய்! ஜஞ்ஞான் சக்காப் பொகோங், பகி போத்தல் இத்து இஸ்க்காராங். காலோ தடா பகி, நந்தி அவா மத்தி சினி!” மீண்டும் கத்தியை ஓங்கினான் அவன்.

எனக்குக் கண்ணீர் கொட்டியது. வாய்விட்டு அழவோ கூச்சல் போடவோ முடியவில்லை. அந்தப் பக்கம் எவராவது கண்ணுக்குத் தெரிகிறார்களா என்று கவனித்தானே. ஒரு நாதியும் காணோம். காத்தானும் இல்லையே! வெறிநாய் மாதிரி அவன் கையைக் கடித்துக் குதறிவிட்டு ஓடிடுவோம் என்று நினைத்தேன். அவன் கையிலே இருந்த கத்தி என்னை ரொம்பவும் பயமுறுத்தியது. இந்த எமப்பயலுக்கிட்டே இருந்து எப்படித்தப்புவது என்று தவித்துக் கொண்டிருந்தேன். என் கழுத்தை மேலும் மேலும் இறுக்கியபடி காட்டெருமையாக கத்திக் கொண்டிருந்தான் அவன்.

சட்டென்று ஒரு யோசனை தோன்றியது என்னை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனால், எண்ணெய்ப் போத்தலைத் தருவதாக ஒரு பொய்யைச் சொன்னேன் நான். உடனே, பிடித்த பிடியைக் கொஞ்சமும் விடாமல் தர தரன்னு என்னை வீட்டுக்கு இழுத்துக் கொண்டு போய் விட்டு விட்டான் பட்டாளத்தான். நல்லவேளை! அந்த நேரம் அப்பா வீட்டில் இருந்தார். நான் ஓடோடிப் போய் அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது கொண்டே நடந்தவற்றை எல்லாம் சொல்லிவிட்டேன். ஊரே கூடிவிட்டது! நான் சொன்ன கதையில் இருந்து என்ன நடந்திருக்கும் என்பது என் தந்தைக்குப் புரிந்திருக்க வேண்டும். பட்டாளத்தானை அமரச் செய்து சிறிது நேரம் என்னவோ பேசிக் கொண்டிருந்தார் தந்தை. பட்டாளத்தான் வந்த வழியே திரும்பிப் போய் விட்டான்.

பட்டாளத்தான் போன பிறகு, தந்தையார் எழுந்து வேகமாக எங்கோ நடந்தார். மேய்ச்சல் காட்டுக்குச் சென்று ஆடுகளை ஓட்டி வருவதற்காக நான் பாதைக்கு வந்தேன். மேய்ப்பானைக் காணவில்லையே என்பதை அந்த ஆடுகள் உணர்ந்தனவோ என்னவோ அனைத்து ஆடுகளும் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தன.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. பொழுதும் மறையத் தொடங்கியது. வெளியில் சென்ற தந்தையாரின் வரவுக்காக எங்கள் குடும்பம் மட்டும் அல்லாமல் அங்கே ஊரே காத்திருந்தது. அப்பாவும் வந்து சேர்ந்தார். பரஞ்சாவில் அமர்ந்தார். என்னை அருகில் அழைத்துத் தழுவிக் கொண்டு மெல்லச் சிரித்தார்.

“அப்பா! என்னப்பா ஆச்சு?” ஆவலாய்க் கேட்டாள் அக்கா.

“நல்லபடியா முடிஞ்சுச்சு. உன்பொறந்தவன் ரொம்பக் கெட்டிக்காரன் ஆத்தா!

நல்ல காரியத்துக்காகப் பொய்யும் சொல்லலாம்ன்னா பெரியவங்க சொல்லியிருக்காங்க அப்படி ஒரு பொய்யைச் சொல்லித்தான் அந்தப் பொல்லா பட்டாளத்துக்காரன் பிடியிலே இருந்து தப்பி வந்திருக்கிறான் நம்ம பயல்."

“என்னம்மேன் புதிர் போடுறியா! என்ன தான் நடந்துச்சு. விவரமாச் சொல்லுங்க.” அப்பாவின் அருகில் வந்து அமர்ந்தார் எங்கம்மேன்!

“மாப்பிள்ளை! பட்டாளத்தான் கூனன் கடையிலே தேங்காய் எண்ணெய் வாங்கிக்கிட்டு போகும்போது அவன் வழக்கமாக கையில் வச்சிருக்கிற கத்தியை கடையிலே வச்சுட்டு மறந்துட்டுப் போய்ட்டான். போற வழியிலே தான் நினைப்பு வந்திருக்குது. கையிலே இருந்த எண்ணெய்ப் போத்தலை, பாதை ஓரமா இருந்த ஒரு தென்னை மரத்தடியிலே மறைச்சு வச்சுட்டு மீண்டும் கடைக்கு ஓடி, கத்தியை எடுத்துக்கிட்டு வந்து எண்ணெய்ப் போத்தலைப் பார்த்திருக்கிறான். அது அங்கே இல்லை! திடுக்கிட்டுப் போன பட்டாளத்தான் ஆத்திரத்தோடு போத்தலைத் தேடி அலைஞ்சிருக்கிறான். அப்பத்தான் ஆடுமேய்ச்சுக் கிட்டிருந்த நம்ம பய மாட்டிக்கிட்டான்! தந்திரமா கிட்ட வரவழைச்சு, நீ தாண்டா திருடிட்டே என்று கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறான் அந்த ராட்சதப் பய!"

“அது சரிங்க அம்மேன் - மரத்தடியிலே வச்ச எண்ணெப் போத்தல் எங்கே போச்சு?”

“அது கிள்ளான் தோட்டத்துக்குப் போயிடுச்சு மாப்பிள்ளை!” அப்பா சிரித்தார்.

“எப்படி அம்மேன்?”

“கிள்ளான் தோட்டத்துக் கிறுக்காண்டிப்பய தான் அடிக்கடி அடுத்தவன் தோப்புலே திருட்டுத்தனமா மரமேறி தேங்காய் திருடுவாங்கிறது நமக்கெல்லாம் தெரியும். அப்படித்தான் இன்றைக்கும் அந்தப் பய அங்கே ஒரு தென்னை மரத்துலே தொற்றிக்கிட்டு இருந்திருக்கிறான். ஏதோ அரவம் கேட்டு, கீழே பார்த்திருக்கிறான். பட்டாளத்தான் தென்னை மரத்தடியிலே போத்தலை வைக்கிறதைப் பார்த்துட்டான் கிறுக்காண்டி. மரத்தோடு மரமாய் பதுங்கிக் கிட்ட அவன். பட்டாளத்தான் கடைப்பக்கம் போவதையும் கவனிச்சுக்கிட்டான். மளமளன்னு தேங்காய்களை உதிர்த்து விட்டு, கீழே இறங்கிய கிறுக்காண்டி தேங்காய்களைக் காவடி கட்டிக்கிட்டு, பட்டாளத்தான் எண்ணெய்ப் போத்தலையும் எடுத்துக்கிட்டு குறுக்கு வழியில் வீடுபோய்ச் சேர்ந்துட்டான். இப்ப நான் அவன் வீட்டுக்குப் போய் இங்கே நடந்ததைச் சொன்னதும், அங்கே நடந்த இந்தக் கதை எல்லாம் சொல்லிவிட்டு எண்ணெய்ப் போத்தலையும் தந்து 'பட்டாளத்தானிடம் என்னைக் காட்டிக் கொடுத்திடாதிங்க அப்பச்சி'ன்னு காலைப் புடிச்சிட்டான் கிறுக்காண்டி!"

“அப்புறம்?”

“அப்புறம் என்ன! பட்டாளத்தானிடம் போத்தலை ஒப்படைச்சிட்டு எப்படியோ சமாதானம் பண்ணி சமாளிச்சுட்டு வந்துவிட்டேன் மாப்பிள்ளை!”

“ஆடுதின்னவன் பட்டுக்கலை அணிதின்னவன் பட்டுக்கிட்டான்னு சும்மாவா சொன்னாக பெரியவுக!”

கண்ணீர் பொங்க என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள் பெற்றவள்!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>