|
|
ராஜா சந்திரசேகரின் “பிரிட்ஜின் மீது ஒட்டப்பட்டிருக்கும் கவிதை”
ராஜா சந்திரசேகர் எனக்கு ஒரு கவிஞராய் “பிரிட்ஜின் மீது
ஒட்டப்பட்டிருக்கும் கவிதையை” வாசிக்கும் வரை பரிட்சயமில்லாதவர். மிக
எளிமையான அவரின் கவிதைகள் மட்டுமே தொடர் தேடலில் எனக்கு வாசிக்கக்
கிடைத்தன. கைக்குள் பிரபஞ்சம், என்னோடு நான், ஒற்றைக் கனவும் அதைவிடாத
நானும், அனுபவ சித்தனின் குறிப்புகள், நினைவுகளின் போன்ற கவிதைத் தொகுதிகளை
வெளியிட்டுள்ளார். இணைய உலாவலில் வாசிக்கக் கிடைத்த இந்த கவிதையோடு
இம்மாதத் தொடர்...
ஓர் அரவமற்றக் காலைப் பொழுதில் கதவுத் திறக்கையில் வானமெங்கும் பறந்து
திரிகின்றன வெள்ளைக் கொக்குகள்... மெல்ல மெல்ல சிறு புள்ளியாகி கண்ணில்
இருந்து காணாமல் போகின்றன. கண்ணை விட்டு மறைந்தாலும் அந்த வெள்ளைக்
கொக்குகள் வானத்தின் ஏதோ ஒரு மூலையிலோ அல்லது நிலத்தின் ஏதோ ஒரு பகுதியிலோ
தன் வெண்மைத் தன்மை மாறாது திரிந்தபடியிருக்கும்.
கவிதையும் கவிதை மனமும் கூட அது போன்றதுதான். கண்ணுக்குத் தெரியும்
வெள்ளைக் கொக்கும் கண்ணுக்குப் புலப்படாத வெள்ளைக் கொக்கும் கவிதை மனதிற்கு
ஒன்றுதான். இரண்டையும் கவிதையால் வெளிக்கொணர முடியும். கண்முன் பறத்தல்
போலவும் அதே வேளை காணாமல் போதல் போலவும் காட்ட முடியும்.
பிரிட்ஜின் மீது
ஒட்டப்பட்டிருக்கிறது
ஒரு கவிதை...
மிக எளிமையான ஒரு பதிவு. என்ன இது பைத்தியக்காரத்தனம் என்றுகூட சிலர்
நினைக்கலாம். இங்கெல்லாமா கவிதைகளை ஒட்டி வைப்பார்கள் என்று கூட கேட்கலாம்.
பழங்களும், பூக்களும், காய்கறிகளும் ஏன் சில வேளை உங்கள் முகங்களும் கூட
அதில் ஒட்டப்பட்டிருக்கும் போது ஒரு கவிதைக்கு அங்கு இடமிருக்காதா என்ன?
திறந்து மூடும் நேரத்தில்
சின்ன வரிகளைப்
படித்துவிட முடிகிறது...
ஒட்டப்பட்டிருக்கும் கோணத்தில்
கவிதையால் வாசிக்க முடிகிறது
முழு வீட்டையும்...
கவிஞனின் கற்பனைக்கு வரையறைகள், எல்லைகள் என்பன எல்லாம் எப்போதும் இல்லை.
மனிதன் செய்வதை எல்லாம் பிறவற்றாலும் செய்ய முடியும் என்பது பலவேளைகளில்
கவிஞனின் வாதமாகிறது. அஃறிணைகள் கவிஞனின் பார்வையில் உயர்திணைகள் ஆகின்றன.
உயர்திணைகள் சில வேளை அஃறிணைகள் ஆகின்றன. கவிதைகளை நாம் படித்தது போக
இப்போது கவிதை நம் முழுவீட்டையும் அதில் நடமாடித் திரியும் மனிதர்களையும்
படித்தபடியிருக்கிறது.
பிரிட்ஜ்க்குள் இருக்கும் பழம் போல
எழுத்து கெடாமல் இருக்குமா
சிரித்தபடிக் கேட்கிறாள் பாட்டி.
எழுத்துகள் எப்போதும் கெட்டுப் போவதில்லை என்பது பாட்டிக்குப்
புரிவதில்லை. புரியப் போவதுமில்லை. குளிர்சாதனப் பெட்டிக்குள் இருக்கும்
பழத்திற்கும் ஆயுட்காலம் இருக்கிறது. முதலில் மலர்ச்சியாக இருக்கும் பழம்
நாளா வட்டத்தில் மெல்ல உலர்ந்து, காய்ந்து வற்றிப்போய் அடையாளம்
தொலைக்கும் பரிதாபம் நிகழும். ஆனால் உண்மையான எழுத்துகள் அப்படியல்ல. அது
எழுதப்பட்டதன் பின் உயிர்பெறுகின்றது. வாசிக்கப்படும் நிலையில் சாகாவரம்
பெறுகின்றன.
அந்தக் காகிதம்
குளிர்சாதனப் பெட்டியின்
அழகைக் குறைக்கிறது
என்கிறாள் மருமகள்...
வேலைக்காரியின் மகள்
சத்தம் போட்டு
எழுத்துக் கூட்டிப் படிக்கிறாள்...
ஏழ்மைக்கும் கவிஞனுக்கும் இருக்கும் தொடர்பு மிக நேர்மையானது என நான்
நினைக்கிறேன். கவிஞனின் மருமகளுக்குக் கவிதை வெறும் காகிதமாகப் படுகிறது.
வேலைக்காரியின் மகளுக்கு அது வாசிப்புத் தளமாகிறது. ஒரே கவிதை ஒருவருக்கு
வெற்றுக் காகிதமாகவும் மற்றொருவருக்கு வார்த்தைகள் தரும் காகிதமாகவும்
பரிணமிக்கின்றது. மாந்த வாழ்வும் இப்படியானதுதான். பலருக்கு நாம்
எப்போதும் வெற்றுக் காகிதம்தான். யாரோ ஒரு சிலருக்கு மட்டும்தான் நாம்
வார்த்தைகள் தரும் காகிதம்.
ஒரு விருந்தினர்
யார் எழுதியது எனக் கேட்டு
காப்பியைக் குடித்து முடித்து
பாராட்டிச் செல்கிறார்
இதனால்
கிழிக்கப்பட இருந்த கவிதையின்
ஆயுள் நீள்கிறது.
எப்போதும் உடன் இருப்பவர்களுக்கு நமது சுயத்தின் மீதும் எழுத்துகளின்
மீதும் நம்பிக்கை இருப்பதில்லை. நம்பிக்கை பிறப்பதும் குறைவுதான்.
பெரும்பாலான வேலைகளில் ஏதோ ஒரு மூன்றாமவருக்கு மட்டுமே நமது எழுத்துகளின்
மீது ஆழ்ந்த அபிப்ராயம் ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்பட்டதில் தப்பித்த தனது
கவிதை குறித்த இந்த பதிவு, தொலைந்துபோவதிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கும்
சில நல்ல படைப்புகள் குறித்த நினைவினை நமக்குக் கொண்டு வரலாம்.
தூக்கம் வராத அப்பா
ஒரு நள்ளிரவில்
அருகில் போய் படித்து
கையால் வருடிக் கொடுக்கிறார்
சிலிர்த்துப் போகின்றன எழுத்துகள்...
தனது கவிதையை தனது ஒட்டுமொத்த குடும்ப உறவுகளும் எப்படிப் பார்க்கிறார்கள்
என்பதன் மிகத் துல்லியமான பதிவு இது. அப்பா... எப்போதும் அவரிடமிருந்து
நேரடி விமர்சனங்கள் வருவது மிகக் குறைவாகவே இருக்கும். ஒரு மெல்லிய
புன்னகை, தலையாட்டல், சிறு செருமல் இப்படியானதாகத்தான் இருக்கும் ஓர்
அப்பாவின் விமர்சனம். நம் கண்முன்னே நம்மைப் பற்றிய அவரின் விமர்சனங்களைப்
பெரும்பாலும் கேட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காது. ஆனால் பிறரிடம் நாம்
குறித்த விமர்சனம் மிக நீண்டதாக இருக்கும். வாஞ்சையுடன் அவர் வருடிக்
கொடுக்கையில் எழுத்துகளோடு சேர்த்து நாமும் சிலிர்த்துப் போகிறோம்.
கவிதையின் பக்கத்தில்
ஆப்பிள் ஓவியத்தை ஒட்டி வைத்து
எப்படி இருக்கிறது
கேட்கிறாள் மகள்.
கைதட்டி ரசித்து
அவளைப் பாராட்டிய அப்பா
படித்துப் பார்க்கிறார்...
“மகள்” கவிதையைப் போல கவிஞனின் இன்னொரு படைப்பு. தான் படைத்த ஆப்பிள்
ஓவியத்தைக் கவிதைக்குப் பக்கத்தில் ஒட்டி வைக்கிறாள். இரண்டும் படைப்புகள்
தான். கவிதையை வாய்திறந்து பாராட்டாத அப்பா ஓவியத்தை பாராட்டி மகிழ்கிறார்.
இது கவிஞனின் ஏக்கப் பதிவாக நான் உணர்கிறேன்...
கூடி இருக்கிறது
கவிதையின் சுவை.
முன்பிருந்ததை விட மெருகேறியிருக்கிறது கவிதை. ஏன் என்பதை வாசிப்பவர்களின்
பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
|
|