|
|
பயணங்கள் முடிவதில்லை...
1994, ஏப்ரல் இறுதியில், சண்டகானின் மொத்த நினைவுகளையும் மனதில் சுமந்து
கொண்டு, பயணமானேன். வேலை இடமாற்றல். நானே கேட்டுப் பெற்றது. எவ்வளவுதான்
முயன்றாலும், மாற்றம் என்பது நிதர்சனமானது; உங்கள் இருப்பின் தேவை
முடிந்தபின் நீங்கள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தப்பட்டுக்கொண்டே
இருப்பீர்கள். மாற்றத்தின் நியதி!
என்னுடைய முதல் ஐந்து ஆண்டுகளை, மிகத் திருப்தியாகப்
பயன்படுத்தியிருக்கிறேன் என்ற நிறைவுடன் விமான நிலையம் வந்தடைந்தேன்.
பஸ்களிலும், கார்களிலும், மோட்டாரில் வந்து காத்திருந்த மாணவர்களைக்
கண்டபோது, மகிழ்ச்சியும், சோகமும், திருப்தியும், பிரிவேக்கமும்
சுழற்றியடித்த ஆற்றாமையில் நிலைகுழைந்து போனேன். மாற்றலாகிச் செல்லும்
விஷயம் பரவலாகத் தெரியவர. ஒரு மாத காலமாக இடைவிடாத விருந்தோம்பல்.
முன்பதிவு வேறு! 5 வருட இடைவெளியில்தான் எவ்வளவு மாற்றங்கள். மந்திரித்து
விட்டது போல். சோகம் ததும்ப ஒற்றையில் சுற்றிய ஆரம்ப நாட்கள்... இன்று...
எவ்வளவு பேர்... எல்லாம் அன்பால் சேர்ந்த கூட்டம்...!
பள்ளியிலேயே இரவு 12 வரை கழித்த நாட்கள் ஏராளம். என் பள்ளி என்
சொர்க்கம்...என்பதான வாழ்க்கை. மனதை வருடிய, அலைக்கழித்த சம்பவங்கள்
ஏராளம்.
ஒரு முறை, மாணவி ஒருவர் கல்வி உபகாரச் சம்பளம் விண்ணப்பித்து தலைமை
ஆசிரியரிடம் ஒப்பம் கேட்டிருந்தார். மிக முக்கியமான விண்ணப்பம். மாணவியின்
எதிர்காலத்தை நிர்ணயக்கக்கூடியது. கெடு முடிந்தும் அனுப்ப இயலவில்லை.
கையொப்பம் இடாமல் இழுத்தடித்தால் வந்த வினை. மாணவியின் கண்ணில் தாரை
தாரையாக ஊற்று. தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது சாவகாசமாக, சிரித்துக் கொண்டே
சொன்னார், "அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம். கிடைப்பது சிரமம்." அந்த
விண்ணப்ப பாரத்தை வாங்கிக் கொண்டு சொன்னேன். "நீயெல்லாம் ஒரு
பெரியவாத்தியாரு...என்னா மசுரு வேலை பாக்கறீங்களோ தெரியல..." இப்படியான
மொழியில்...இன்னும் சில வார்த்தைகளும். சீனர்தான், ஆனால் சுத்தமாகத் தமிழ்
தெரிந்தவர். பக்கத்தில் இருந்த ஜோன்சன்(தமிழர்) அடக்கமுடியாமல்
சிரித்துவிட்டார். என் 'போஸ்' பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். அதே
அளவு பின் விளைவுகள்!
என்னுடன் மனோ & சாந்தி அவர்களின் இரு குழந்தைகள், சிவா ஆகியோரும்
பணிமாற்றலாகி ஒன்றாகவே பயணப்பட்டனர். மன இறுக்கத்தில் அவர்களின் இருப்பும்,
துணையும் ஆறுதலாக அமைந்தது.
திரண்டு வந்திருந்த மாணவர்கள் சிரிப்பும், அழுகையுமாக தொட்டும்,
கட்டிப்பிடித்தும் என்னைச் சுற்றியே இருந்தனர். பயணிகளைக் காத்திருப்பு
வளாகத்திற்கு அழைக்கும் குரல் ஒளித்ததும் மாணவர்கள் இரண்டு நீண்ட வரிசையில்
நின்று, கையசைத்து என்னை வழியனுப்பினர். ஒவ்வொருவரின் முகத்தையும் என்
மனதில் பதித்தவாறு அந்தக் கணங்கக்ச் சேகரித்துக் கொண்டேன். ஆசிரியப்
பணியில் தொய்வு ஏற்படும் தருணங்களிலெல்லாம் என்னை மீட்டெடுக்க நான்
மீண்டும் மீண்டும் பயணிப்பது இந்த நினைவுகளில்தான். நம்பிக்கையும்,
உவகையும், செயலூக்கமும் அங்கீகரிப்பில் கிடைப்பதுதானே.
(2010-ல் என்னை முகப்புத்தகத்தில் (facebook) இழுத்துபோட்டு என் சமூக
வெளியை பெரிதும் மாற்றியமைத்தனர் என் தங்கையின் பிள்ளைகள். 1994-ல் விட்டு
வந்த என் மாணவர்களில் பெரும்பாலோரை மீண்டும் தொடர்புகொண்டேன். உலகம்
பூராவும் பரவி இருக்கின்றனர். 16 ஆண்டு இடைவெளி சற்றென விலகி, குடும்பமும்
குழந்தைகளுமாக அவர்களைப் பார்க்கும்போது மிக அலாதியான சுகம் மனதில்
படர்கிறது. என் படத்தைப் பார்த்தவுடன் 'cikguuuuuu..' என்று வரும்
அவர்களின் பதிவில் எல்லாச் சலிப்பும், சஞ்சலமும், ஆற்றாமையும் சட்டென்று
விலகி, இன்றுதான் புதிதாய்ப் பணியில் சேர்ந்ததுபோல் ஒரு புத்துணர்ச்சியும்,
செயலூக்கமும் மனதில் நிறைகிறது. அடுத்த வருடம் ஒரு சந்திப்பும் ஏற்பாடாகி
வருகிறது. மிகவும் எதிர்ப்பார்க்கிறேன்.)
நக்கீரனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். இடையில், 1998-ல் சண்டகான்
சென்று வந்தேன். 'கண்ணன்' என்ற தன் புதிய பரிணாமத்தில், 17 ஆண்டுகள்
கழித்து தமிழகம் சென்றுவர அவர் முடிவெடுத்தபோது, சுபாங் விமான நிலையத்தில்
சந்தித்து, 7 மணிநேர காத்திருப்பை தலைநகரத்தில் சுற்றியலைந்து முடித்தோம்.
அதன் பிறகு நாங்கள் சந்தித்தது 20/11/2001-ல்.
திரும்பவும் 'கண்ணன்' நக்கீரனாகி, இந்தியனாகிவிட்டிருந்தார்! மின்னஞ்சலில்
தொடர்புகொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். எங்கள் பயணத்திற்கான
வாகனம், பயண நிரல் போன்றவற்றை கவனித்துக் கொண்டார். 20/11 முதல் 14/12 வரை
நண்பர்களுடன் சுற்றுலா. 15/12 முதல் 22/12 வரை வேர்களைத் தேடி கிராமம்
சென்றேன்.
என்னுடன் தமிழ்மாறன் (விரிவுரையாளர், தனது வலைப்பூவில் இப்பயணம் பற்றி
எழுதியிருக்கிறார்), முனு (பால்ய நண்பன்), குணா, சிம்மாச்சலம், முனியாண்டி
(இவரும் விரிவுரையாளர்தான்) ஆகியோரும் இருந்தனர்.
விமான நிலையத்தில், 'டாடா சுமோ' மற்றும் ஓட்டுனருடன் நக்கீரன்
காத்திருந்தார். எங்கள் பயணத்தில் சில நாட்கள் இணைந்து கொள்ளும்
எண்ணத்துடன். அழுக்கேறிய வண்டியையும், முகத்தில் முறைத்த தூசி
மண்டலத்தையும் பார்த்தவுடனேயே மலேசியாவிற்கு திரும்பிவிட
முடிவெடுத்துவிட்டார் சிம்மாச்சலம். பற்றாததற்கு ஒரு பன்றி தன்
குடும்பத்தோடு நடைப்பயின்ற காட்சி வேறு. அவரை தமிழ்மாறன்தான் ஆற்றுப்
படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டுந்தார். சிங்காரச் சென்னையை விட்டு விலகி
மற்ற இடங்களுக்குப் பயணப்பட்ட பின்புதான் அவருக்கு சுவாசமே சீரானது!
'புகை நமக்குப் பகை'
`Save today, Safety tomorrow'
'பெண்கள் நாட்டின் கண்கள்;
`ஆணுரை வாங்க வெட்கப்படாதே, ஏய்ட்ஸ்-ஐ வாங்கித் துக்கப்படாதே'
'படிப்பை பாதியில் நிறுத்தாதீர், பாவத்தை பெற்றோர் சுமக்காதீர்'
பயண நெடுகிலும் பார்த்த வாசகங்கள். பல ஞாபகத்தில் இல்லை. சுவரோவியங்களும்,
அவற்றுக்கு ஒப்பான வாசகங்களும் (captions) மனதுக்குள் பதியவேண்டியவை;
சட்டென்று கவனத்தை ஈர்த்து, காதோரம் கதைத்துச் செல்பவை. புலன்கள்
அனைத்தையும் திறந்து வைத்திருந்தாலே அன்றி எந்தப் பயணமும் முழுமைப்
பெற்றிடாது. பெரும் வெற்றி பெற்ற / நிலைத்த இலக்கியங்கள் படைத்த ஆளுமைகள்
தங்கள் வாழ்நாளில் பெரும்பாலும் பயணித்துக்கொண்டே இருந்துள்ளனர்.
எஸ்.ராவின் படைப்புகளில் கனம் சேர்ப்பது அவரது தொடர்ப்பயணங்கள்தானே. அவரின்
கட்டுரைத் தொகுப்பான 'விழித்திருப்பவனின் இரவுகள்' கூட அதிகமும் தேடல்
தாகம் நிரம்பிய பயணங்களில் வாழ் நாளெல்லாம் ஈடுபட்ட புகழ்ப் பெற்ற
இலக்கியவாதிகள் பற்றியதுதானே. வெறும் ஜாலிப் பயணம் அல்ல; தேடல் நிரம்பியது.
போதி மரம்போல...வழி நெடுக வாழ்க்கையின் சாராம்சத்தை
கட்டவிழ்த்துக்கொண்டேபோய், சட்டென விசுவரூபமெடுத்து, தெள்ளத் தெளிவாக
உங்கள் முன் புன்னகைத்து நிற்கும்.
(இந்தத் தேடல் பற்றிய படைப்புதான் Paulo Coelho-வின் The Alchemist
(ரசவாதி). 'தேடு, உன்னையே கண்டடைவாய்'... 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத
இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே' சங்கதிதான். மனதைக் கொள்ளை
கொள்ளும்படி, மிக சுவாரசியமான நடையில் புனையப்பட்ட வாழ்க்கையின் நிதர்சனம்
தேடும் பயணம். கனவில் வந்த பொக்கிஷத்தைத் தேடிச் செல்லும் ஓர் இடையன்
இறுதியில் அதைக் கண்டடையும்போது... உங்கள் மனதில் பொங்கும் உவகையை
அனுபவித்துதான் அறியமுடியும். அனுபவித்துப் படியுங்கள். தியாகம்,
அர்ப்பணிப்பு, அன்பின் வலிமை, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, படைப்பின்
ஊற்றுக் கண்னை உணரும் தருணங்கள்... அருமையான படைப்பு.)
எங்கள் பயணம் பெரிய தத்துவத் தேடல்களை அடிப்படையாகக் கொள்ளாவிட்டாலும்,
கொஞ்சம் தேடல் இருக்கவே செய்தது. நல்ல புத்தங்கள் தேடினோம்; நல்ல மலிவான
திருமணப் பத்திரிக்கை தேடினோம்; நல்ல சாப்பாட்டைத் தேடினோம்; அழகழகான
பெண்கள் எல்லாம் எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தேடினோம்;
அப்புறம் எல்லோரும் தேடிய எல்லாக் கோயில்களையும் தேடினோம். யார் யார் எதை
எதைத் தேடினோமென்பதும், யாருக்குத் தேடியது கிடைத்தது என்பதும் இன்னும்
சரிவரத் தெரியவில்லை!
|
|