|
|
சாவிகள்
கையில் தொங்கும் சாவிக்கொத்தினால்
மூடி மறைக்கப்பட்ட
ஆயிரமாயிரம் கதவுகளைத் திறப்பதும்,
இதயச் சந்து பொந்துகளில்
பதுங்கித் திரிந்து ஊறிப்போன
துயரங்களை உன் முன்னால் நிறுத்திவதும்,
பட்டினிக்கு மத்தியில் பணபலம்
பணவீக்கத்தில் மத்தியில் மனவொற்றுமை
மகிழ்ச்சியில் மண்டிக் கிடக்கும் கவலை
என்றால் என்னவென்று
நீ உணர்வதற்காகத்தான்.
சாவிக்கொத்து காலடியில் தத்தளிக்க
உளைச்சல்களோடு ஏமாற்றங்களை எதிர்கொள்ள
ஆயிரங்கதவுகள் படபடக்கும்
குழப்பச்சதுக்கத்தினுள் நுழைகிறேன்.
சாக்கடை கூட்டிக் கொண்டிருந்த
ஒரு மாலை நேரக் கூலியின்
கதை சொல்வேன் கேள்:
அவன் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தது
குப்பைக் கூளங்களையல்ல...
அவனது வாழ்க்கையின் சிதறல்களை,
எதிர்காலக் கனவுகளை,
நம்பிக்கைகளை... உறவுகளின் வேண்டுதல்களை...
சாவிக்கொத்து விழிகளின் முன் ஆட
ஆயிரம் அற்புதங்கள்
ஆயிரம் விடுகதைகள்
வாழ்வின் புதிர்கள் எல்லாம்
முடிச்சு முடிச்சாய்
சிக்கல் சேர்த்துச் சிரிக்கக் காண்கிறேன்.
நம் மலைச்சிகரப் பயணத்தைப் போலவே,
சமயங்களில் தொடக்கம் இருந்தால் முடிவில்லை
சமயங்களில் முடிவு இருந்தால் தொடக்கமில்லை
சமயங்களில் தொடக்கம் முடிவு இரண்டுமேயில்லை
மனத்தில்
சிரமங்கள் கொத்தாய் பூக்க
கண்களுக்கெட்டாத தூ...ரத்தில்
சாவிக்கொத்தை எறிகிறேன்.
|
|