முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 28
ஏப்ரல் 2011

  மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள் ...3
ஏ. தேவராஜன்
 
 
       
நேர்காணல்:

"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை"

லீனா மணிமேகலை



பத்தி:

மதவாதம் என்கிற நோய்
கே. பாலமுருகன்

ஆடுதின்னவன் பட்டுக்கலை அணி தின்னவன்....
அ. ரெங்கசாமி

ஓர் இலக்கிய நிகழ்ச்சியாம்!
தினேசுவரி



சிறுகதை:

கூலி
ம. நவீன்

ரயில்பயணத்தில்
கிரகம்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...10
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



'நேர்காணல்' இதழில் வெளிவந்த இயக்குனர், நடிகர் நாசரின் நேர்காணல்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...18

ம. நவீன்

லதாமகன்



எதிர்வினை

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்!

கல்விமான்கள் கூடிய சபையொன்றில் ஒரு தடவை கல்வியதிகாரியை ஏதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது. கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஏற இறங்கப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரை யாரென்று நான் கேட்டது அவருக்குக் கெளரவக் குறைச்சலாயிருந்ததோ என்னவோ, ஒரு வார்த்தையும் சொல்லாது முகத்தை வேறு திசையில் வைத்துக்கொண்டு உள்ளுக்குள் பேசிக்கொண்டார்.

சமூகத்திற்கு நல்லதோ கெட்டதோ எதையாவது செய்து தொலைத்திருந்தால்தான் ஒருவரை ஊரே அறிந்திருக்கும். இந்த மனிதர் அப்படி என்னதான் செய்திருக்கிறார்? ஒரு கொசுவையாவது அடித்திருப்பாரா? இந்த மனிதன் பதவியைப் பிடித்துக்கொண்டு தம் பணியைத்தானே செய்தார்? அது சேவையில்லையே! அவர் கிழக்குக்கரை மாநிலத்தைச் சேர்ந்தவரெனப் பின்பு நண்பர்களின் மூலமாகத் தெரிந்துகொண்டேன். இந்த மனிதனுக்கு ஏனிந்த மதமதப்பும் வறட்டு நினைப்பும் என்பதைக் குறித்து அன்றைய இரவெல்லாம் நினைக்கத் தோன்றியது. இங்குத் தமிழாசிரியர்கள் இல்லையென்றால், இந்தப் பிரமாண்ட பதவியெல்லாம் எவன் தருவான் என்ற இங்கிதமெல்லாம் இந்தச் சொகுசு அதிகாரிக்கு விளங்கவா போகிறது?

கூலிக்கு மாரடிக்கிறவர்களுக்கு இதுவெல்லாம் உறைக்கிற விடயமல்ல! "நீங்க எல்லாம் என்னப்பா பண்றீங்க ? எஸ்.டி.பி.எம்ல பிள்ளைங்க படிக்கிறாங்களா இல்லையா?" என மண்டைக்குச் சூடேற்றுகின்ற பொறுப்பு மிகுந்த வினாவைத் தொடுத்தார். கோபம் ஒரு பக்கமிருந்தாலும், சம்பத்தப்பட்ட அதிகாரியின் பொறுப்பைக் குறித்துக் கொஞ்சமாவது தலைவணங்கவேண்டியிருந்தது. அது பண்புங்கூட. ஆனாலும், இந்த வகை அதிகாரிகள் மீது பிறவி கடந்த வெறுப்பு எந்தக் கடவுளாலும் தீர்க்கமுடியாதது.

சில நாட்கள் கடந்த பின்பு நடப்புநிலை பார்க்குமிடத்து அவரது கேள்வி சரிதானென்றாலும் இலக்குத்தான் தவறென்று எனக்குப் பட்டது. இந்தக் கேள்வி போய்ச் சேரவேண்டிய கூட்டத்தில் சேரவில்லையே! அவர் கருதுகின்ற கூட்டத்தில் என்னைப் போன்றவர்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதை மனச்சான்றிடமே விட்டுவிடுவோம். கடந்த சில ஆண்டுகளில் எஸ்.டி.பி.எம் தேர்வுத் தமிழ்த் தாளின் அடைவுநிலை 68%-75% தானென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். புள்ளி விபரங்கள் சரியா,தவறா என்பது இவ்விடம் கேள்வியல்ல. அது சரியே என்றாலும் அச்சரிவுக்கு அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். குண்டு சரியான இடத்தில் விழுந்தால்தான் வெடிக்கும். ஒரு பகுதியைத் துப்புரவு செய்யவேண்டுமாயின் அங்கேதான் அது வெடிக்க வேண்டுமேயொழிய இலக்குத் தவறியல்ல. அப்படித்தான் வெடிக்கவும் வேண்டும். இங்கே வந்து அதுவும் என்னிடம் ஏன் புழுங்கவேண்டும் என்பதில் ஒரு நெருடல். இந்தத் தேசத்தின் தமிழ்க் கல்விக்கு நான் மட்டுமா பொறுப்பாற்றுகிறேன்? ஏடுகளுக்கு எழுதுவதாலா என் மீது பாய்கிறார்? அல்லது எழுதுபவர்களுக்குக் கூடுதல் மதிப்பும் சமூகக் கடப்பாடும் இருக்கிறது என்பதாலா? அவ்வாறாயின், எல்லா ஆசிரியர்களையும் எழுதச் சொல்லலாமே? ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிக்குச் செல்வதற்கு புனைவிலக்கிய ஈடுபாட்டை இரகசிய அளவுகோலாக வைத்திருக்கலாமே?

உண்மையைச் சொல்லவேண்டுமானால் மலேசியத் தமிழ்க்கல்வி என்று நோக்குமிடத்துத் தமிழ் மொழி மிகப் பெரிய அபாயத்தை எதிர்நோக்கிவருகிறது. அரைநூற்றாண்டுத் தேசிய நீரோட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கைச் சரிவும் இடைநிலைப்பள்ளி உட்பட மற்ற மொழிப் பள்ளிகளின் அதிகரிப்பும் தமிழுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன. ஒரு தமிழ்ப்பள்ளி உடைபடும்போது அதே உரிமத்தில் இன்னொரு தமிழ்ப்பள்ளி எழும்ப உத்தரவாதமில்லை.1957 இல் ஆயிரக்கணக்கிலிருந்த தமிழ்ப்பள்ளி, இன்று 523 ஆகச் சரிவு கண்டு 105,618 மாணவர்களுடன் போராடிக்கொண்டிருக்கிறது. அவற்றில் சில பள்ளிகள் கடைவீதிகளில் நடத்தப்படுகின்றன. மாதிரிக்கு ஒன்று,சிரம்பான் லுக்குட்டிலுள்ள சுங்கை சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி!

இந்த மாணவர்கள்தான் யூ.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர், எஸ்.பி.எம் ஆகிய அரசு தேர்வுகளில் அமர்கின்றனர். எஸ்.பி.எம் தேர்வு முடிவில் 80 விழுக்காட்டு இந்திய மாணவர்கள் தேர்வில் தோல்வியுற்று வாழ்வின் அடுத்த கட்ட சிரமத்துக்கு ஆளாகின்றனர். அரசுத் துறை கைவிரிக்க தனியார்த்துறையோ, 50 விழுக்காட்டுத் தமிழர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்வதில்லை. அப்படியே ஏற்றுக்கொண்டாலும் அதில் 75 விழுக்காட்டினர் கீழ்மட்டத் தொழிலாளிகளாகக் குறைந்த ஊதியத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். எஸ்.பி.எம் தேர்வு முடித்த இளைஞர்களால் இவ்வேலைகளில் ஈடுபட மனம் வருமா? வகுக்கப்பட்ட மாற்று வழி நிலையான தீர்வாக அமையவில்லை. விளைவு, அவர்களாகவே தங்கள் வாழ்வை தவறான போக்கில் நிர்ணயித்துக்கொண்டு இன்னொரு மரணத்துக்கு ஆளாகின்றனர். ஆண்டுதோறும் குற்றவியல் அடிப்படையில் நீதி பரிபாலனத்துறையின் தீர்ப்புக்கு ஆளாகி 60 விழுக்காட்டினர் அநீதியாய்,அப்பாவியாய் இறக்கின்றனர். 1957 இல் 12 விழுக்காடாக இருந்த மலேசிய இந்தியச் சமுதாயம் 2007 இல் 8 விழுக்காடாகச் சரிந்து 2057 ஆம் ஆண்டு வாக்கில் 4 விழுக்காடாகக் குறையக்கூடும் என்பது நம்பத்தகுந்த ஆருடம்.

இது போன்ற மரணங்கள் தொடந்து நடக்குமாயின் அந்தக் கறுப்புக்கனவு சீக்கிரம் அரங்கேறக்கூடும்! எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20 விழுக்காட்டினரில் பலர் உச்சபட்ச போராட்டத்திற்குப் பிறகுதான் மேற்கல்விக்கே வாய்ப்புக் கிடைத்துச் செல்கின்றனர். தகுதியானவர்கள் பலர் புறக்கணிக்கப்படுகின்றனர். இத்தகுச் சூழலில்தான் தமிழ் போராடிக்கொண்டிருக்கிறது. வாழ்வா,மொழியா எதைக் காவு கொடுப்பது எனும் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயம் திணறிக்கொண்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில் ஆரம்பப் பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளிக்குச் செல்கின்றவர்களின் எண்ணிக்கையும் அவர்களில் எத்தனை பேர் தமிழை ஒரு தேர்வுப் பாடமாக எடுக்கிறார்கள் என்பதை அலசப் புகின், மலேசியத் தமிழ்க் கல்வியுலகம் வெட்கப்பட நேரிடும்! அது மிகப் பெரிய கைங்கர்யம்! அது வெட்கம் மட்டுமல்ல, தமிழை அமுக்கிப் பேரொலியெழுப்பும் சாவுமணியுங்கூட! அதைத் தனிக் கட்டுரையாக எழுதும் காலம் வரும்போது எழுதுகிறேன். இக்கட்டுரையின் பாடுபொருள் அதுவல்லவென்பதால் மீண்டும் எஸ்.டி.பி.எம் தேர்வுக்கு வருகிறேன்.

இன்றைய நிலையில் எஸ்.டி.பி.எம் தமிழ் மொழி அழகாகக் கொலை செய்யப்பட்டுவருகிறது. தமிழைப் பாடமாக எடுப்பவர்களின் தரமும், ஆசிரியர்களின் தரமும் மனனம் செய்யும் கிளிப்பிள்ளையாகிவிட்டன. நாட்டின் பல பள்ளிகளில் பணி புரிகின்ற ஆசிரியர்கள், தமிழ்த்துறையில் பட்டப் படிப்புப் பெற்றிருப்பினும் அவர்களது கற்பித்தல் ஐந்தாம் படிவத் தரத்துடனேயே நின்றுவிடுகிறது. ஆறாம் படிவத் தமிழில் சற்று அதிகமான பழஞ்செய்யுள்களும் கரடு முரடான உரைநடைகளும் இருப்பதாகப் மெளனப் புகார்களை ஆசிரியர்கள் பலர் மனத்துக்குள் வைத்துள்ளனர். தமிழுக்கு ஆசிரியரை நாடிவரும் மாணவர்களிடம் தங்கள் பலவீனத்தை மறைக்கும் பொருட்டுப் பள்ளி நிர்வாகம் அனுமதியளிக்கவில்லையென்று அவர்களின் கண்களைக் கட்டிவிடுகின்றனர். இன்னும் சில பள்ளிகளில் தமிழைப் படித்துப் பல்கலைக்கழகம் சென்று சாதிக்கப்போவது என்ன என்றும் பட்டவர்த்தனமாகவே கேட்டுவிடும் ஆசிரியர்களும் உள்ளனர்!

தமிழைப் படித்தால் தமிழாசிரியர் அல்லது நீதித்துறையின் மொழிபெயர்ப்பாளர் என்ற மிகச் சிறிய கதவுகளைத் தவிர தமிழ் வேறெங்கு நுழைந்திருக்கிறது? மலேசிய அரசுத் துறைகளில் நம்மவர்களின் இருப்பை நுண்பெருக்கியைக் கொண்டுதான் தேடவேண்டும்.தமிழுக்குப் பதில் மாண்டரின் மொழியைக் கற்றாலாவது வயிற்றைக் கழுவலாம் எனும் விரக்தியான பேச்சும் அடிபடுகிறது. தமிழ் வணிக மொழியாக மாறாதவரை தமிழருக்கு விடிவு இல்லை என்பது மாதிரியான கருதுகோள்கள் அவர்கள் மத்தியில் உள்ளன. இதில் தமிழாசிரியர்கள் மட்டுமல்ல நமது பெற்றோர்களும் அடங்குவர். அதிலும் குறிப்பாக அரசியல் பேசுகின்ற 99% விழுக்காட்டினர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லை! தமிழ் ஊடகவியலாளர்களும் தமிழ் விரிவுரையாளர்கள்/பேராசிரியர்களும் இதில் அடக்கம் என்பது வேதனை! தமிழுக்கும் தமிழ்க் குமுகாயத்திற்கும் இடரென்றால் எந்த அடிப்படையில் துள்ளிக் குதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மாற்றணியில் இருக்கின்ற பிரபலங்கள்கூட தங்கள் பிள்ளைகளைச் சீனப் பள்ளிக்கு அனுப்பியிருப்பதாகத் தகவல்! மனச்சான்றாண்மை உள்ளவர்கள் இக்கருத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். கடந்த ஆண்டு ஒரு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் அரசியல் பிரமுகர் ஒருவர் திறப்புரையாற்ற வேண்டியிருந்தது. அங்குள்ள பெற்றோர்களைப் பார்த்து வலியுறுத்திச் சொன்னார், பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவேண்டுமென்று! யார், யாரைப் பார்த்துக் கூறவேண்டும் என்ற விவஸ்தைகூடவா தெரியவில்லை அந்தப் பிரமுகருக்கு?

சரி, இடைநிலைப் பள்ளித் தமிழ்க் கல்விக்கு வருவோம். அங்கு ஆறாம் படிவம் படும் பாட்டைக் கொஞ்சம் சொன்னால்தான் கட்டுரை முழுமைபெறும். மாதிரிக்கு ஒரு சம்பவம். தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்த ஒருவர், தூரமுறை பட்டப்படிப்பை முடித்துவிட்டுப் பிரபலமிக்க இடைநிலைப்பள்ளிக்கு விண்ணப்பித்திருந்தார். அதோடு,அரசியலில் வளர்ந்துவரும் புள்ளியாகவும் மக்கள் பார்வைக்குத் தோற்றமளித்திருந்தார். அவரைப்போல் மேலும் சிலர் அவ்வாறே விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்திருந்தவர்களில் சிலர் தமிழ்த்துறையில் பட்டப்பட்டிப்பு இல்லாவிட்டாலும் இடைநிலைப்பள்ளியின் தமிழ்ப்போதனா முறையில் நீண்ட அனுபவம் பெற்றிருப்பவர்கள். முடிவு முன்னவருக்குச் சாதகமாய் அமைந்ததுதான் தமிழுக்குச் சகுனியின் நுழைவாகும். அவர் அப்பள்ளிக்குள் நுழைந்த பின்பு ஆறாம் படிவத் தமிழ் மூடுவிழா கண்டது. ஆசிரியரின் கைவிரிப்பால் தமிழ்ப் பாடத்திற்காக மாணவர்கள் மழைக்கால ஈசல்களைப் போல வெளியே மொய்க்கத் தொடங்கினர். நல்ல வேளையாக முன்பு தமிழ் படித்த மாணவியொருத்தி தாம் ஆசிரியரல்லர் எனத் தெரிந்தும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு வாடகை அறையில் வாரத்திற்கு இரண்டு மூன்று தடவை கூடுதல் நேரமெடுத்துப் பாடத்தைப் போதித்தார்.

மும்முரமாகப் படித்த மாணவர்கள் அனைவரும்,சிறப்புத் தேர்ச்சியடைவைப் பதிவு செய்து பள்ளிக்குப் பெருமையைத் தேடித் தந்தனர். பள்ளி விழாவில் அப்பெருமையெல்லாம் அந்தப் பொம்மை ஆசிரியருக்கே போய்ச் சேர்ந்தது. சம்பத்தப்ட்ட மாணவிக்கு மருந்துக்கும் நன்றி சொல்ல மறந்துபோனார்! மூன்றாண்டு காலம் இப்படியே சொற்பக் கட்டணத்தில் போதித்துவந்த அம்மாணவி பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் சாராத நிர்வாகவியல் துறையில் படிக்கச் சென்றுவிட்டார். மாணவர்களோ அம்போவெனத் தமிழைத் தாரை வார்க்க நேரிட்டுள்ளது! பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ள அம்மாணவி ஒரேயோர் ஆசிரியரிடம் ஆசிர்வாதத்தைக் கேட்டுப் பெறுவார். அதுவும் தமது மாணவர்களின் தேர்வுக் காலத்தின்போது! இதற்குக் காரணம், நல்லாசிக்காக யாசித்த ஆசிரியர்தான் முன்பு அவருக்கு ஆறாம் படிவத் தமிழைச் சுவை ததும்பப் போதித்துள்ளார். அவர் போதித்தவை உயிரோட்டம் மிகுந்த இலக்கியமெனவும் மனத்தில் அப்படியே பதிவாகியுள்ளன எனவும், அந்தத் துணிச்சலில்தான் தம்மாலும் போதிக்க முடிந்ததெனவும் கூறுகிறார். இதுபோல நாட்டில் மூலை முடுக்கிலும் இந்த மாணவியைப் போன்று சிலர் இருக்கலாம். இவர்களைப் போன்றவர்கள்தான் தமிழ்ப்பணியைச் செம்மையாக ஆற்றிவருகிறார்கள். இவர்கள் இன்னாரென்று மாணவர்கள்தான் முன்னிலைப்படுத்த முன்வரவேண்டும். அதை யாரும் தெரியும்படி செய்ததாகத் தெரியவில்லை.

கெடா, சுங்கைப் பட்டாணியிலிருந்து அமைதியாய்ப் பணிசெய்துவரும் ஆசிரியர் திரு.சிவலிங்கம் அவர்களைப் பற்றி இவ்விடம் அவசியம் சொல்லியாக வேண்டும். ஒருவகையில் அவர் இரட்சகர்தான்! அன்னார் மட்டும் இல்லாவிட்டால் எத்தனையோ இடைநிலைப்பள்ளிகளில் ஆறாம் படிவத் தமிழ் காணாமலேயே போய், பல்கலைக்கழகத்தில் தமிழ் தூக்குப் போட்டிருக்கும்! திரு.சிவலிங்கத்தை எந்த மகாராசனும் முன்னிலைப்படுத்தவில்லை. அந்த ஐயா வழங்கியிருக்கிற குறிப்புகளையே ‘உள்டாப்’ செய்து மாணவர்களுக்குப் பந்தி போடுகிற சமாச்சாரம் நான் படிக்கிற காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பே திரு.சிவலிங்கம் எஸ்.டி.பி.எம் தமிழ்ப் பாட விளக்கவுரையை ஐந்தாறு பிரிவுகளாக வகைப்படுத்தித் தந்திருக்கிறாரென்றால் அவர் இரட்சகன்தானே? நாட்டில் செயல்பட்டுவருகிற மிகப் பிரபலமான கல்வி நிலையங்கள்கூட இவரது குறிப்புகளைத்தான் பயன்படுத்தியுள்ளன என்று தாராளமாகச் சொல்லலாம். இதை மெய்ப்படுத்த மனச்சான்றாண்மையைத் தவிர வேறெந்தத் தெய்வச் சக்தியும் ஈடாகாது எனக் கருதுகிறேன்.எந்தப் பயலுவளாவது இந்த உண்மையை ஊடகங்களில் பல்லிளிக்கக் கசியவிட்டார்களா? ஏதாகிலும் ஒரு மேடையில் அன்னாரைக் கெளரவித்தார்களா? அட, பெயரையாவது உருப்படியாய்ச் சொல்லித் தொலைத்தார்களா? சரி அது போகட்டும். அவர் போட்ட பிச்சையைக்கூட பலருக்குப் பயன்படுத்தத் தெரியவில்லையே! கொஞ்சம் முயற்சி செய்து விளக்க நூல்களைப் பெறும் யத்தனம்கூட ஆசிரியர்களிடம் இல்லையே.

எஸ்.டி.பி.எம் பாட நூலில் உள்ள உள்ளீடுகளும் வழங்கப்பட்டுள்ள விளக்கங்களும் எளிதானவையென்றாலும் அவற்றையும் விளங்கிக்கொள்ள ஆசிரியர்களே பின்வாங்கியுள்ளனர் என்பதே உண்மை! இலக்கிய ஈடுபாடும் படைப்பிலக்கியத் துறையில் நாட்டமுமற்ற மழுங்கலுணர்வால் அவர்களின் தமிழாளுமையும் மங்கிப்போய்க்கிடக்கிறது. இலக்கிய இன்பத்தை நுகரும் இலாவகமோ அதனைத் தேடிக் கண்டடையும் முயற்சியோ பலரிடம் இல்லை. அதற்காகப் பணத்தைச் செலவழிப்பதுமில்லை; படித்த இலக்கியத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வழிவகையும் அறிந்திலர். ஆக மொத்தத்தில் பாடப் புத்தகமே சரணாகதி! மிகவும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் (‘உள்டாப்’ வேலையெல்லாம் செய்யாத) பொறுப்பான ஆசிரியர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ளனர்.இதற்குக் காரணம் யார், இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் யாவையென யோசிக்குங்கால், மேலே என்னிடம் முறைத்துக்கொண்ட அதிகாரியின் கூற்றும் பொருந்திவருவதைப் பார்க்கலாம். ஆனாலும், அந்தக் கூட்டத்திலும் அவரும் முன்பு இருந்தவர்தான். பணியின் காலத்தில் தான் எதையெல்லாம் புரியத் தவறினாரோ, அதையேதான் இப்பொழுது வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சியைப் பெற்ற மாணவியொருத்தி ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றார். நமது மாணவர்களால் அதுவும் தமிழ் மொழி,தமிழ் இலக்கிய வெளியில் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. காரணம், பாடத்தைத் தவிர வேறெதையும் சீந்துவதில்லை. எனவே, பாட நூலைத் தவிர்த்துத் தமிழை அதிகமாக வெளியே தேடுங்கள் என்று மட்டும் கூறி வழியனுப்பினேன். சில மாதங்கள் கழித்துத் திரும்பவும் வந்தார். எனக்குத் தலைவலி ஆரம்பமானது. என்ன சிக்கல் எனக் கேட்டேன். விரிவுரையாளர் தன்னைப் பத்து வெண்பாக்கள் எழுதிவருமாறு பணித்துள்ளதாகச் சொன்னார். சொல்லிக் கொடுத்தாரா என மறுவினாடி கேட்டதும் ஆமோதித்துப் பின் தலைகவிழ்ந்துகொண்டார். அதற்குப் பின்னர் அந்த மாணவியின் அப்பாதான் பேசினார். வெண்பாவின் இலக்கணத்தை மேலோட்டமாகச் சொல்லித் தந்துவிட்டு வீட்டுப்பாடம் செய்துவா என்றால் எப்படி என என்னிடமே முறையிட்டார். பிறகு, நானே பத்து வெண்பாக்களை எழுதித் தரவேண்டிய நிலை வந்தது. அவற்றில் சிலவற்றுள் தளைதட்டியிருக்கலாம் என்பது வேறு. அப்பா விடுத்த இந்தக் கேள்வியை அந்தத் தமிழ் விரிவுரையாளரிடந்தான் முறையிட்டிருக்க வேண்டும். என்னைப் போன்றவர்களிடம் தேவைதானா? இந்தக் கடைசிக் கேள்வி இக்கட்டுரையின் முதல் வாக்கியத்தில் வந்துள்ளாரே, அவருக்குந்தான்!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>