முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 28
ஏப்ரல் 2011

  கட்டங்களில் அமைந்த உலகு ...4
யோகி
 
 
       
நேர்காணல்:

"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை"

லீனா மணிமேகலை



பத்தி:

மதவாதம் என்கிற நோய்
கே. பாலமுருகன்

ஆடுதின்னவன் பட்டுக்கலை அணி தின்னவன்....
அ. ரெங்கசாமி

ஓர் இலக்கிய நிகழ்ச்சியாம்!
தினேசுவரி



சிறுகதை:

கூலி
ம. நவீன்

ரயில்பயணத்தில்
கிரகம்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...10
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



'நேர்காணல்' இதழில் வெளிவந்த இயக்குனர், நடிகர் நாசரின் நேர்காணல்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...18

ம. நவீன்

லதாமகன்



எதிர்வினை

பொருந்தாப் பணி!

‘கெட்டும் பட்டணம் போ' என்ற பேச்சு வழக்கில் உண்டு. பட்டணம் போனால் கெடமாட்டார்களா என்பதற்கு விளக்கம் இல்லை. பட்டணம் தன் வாசல் கதவை எல்லோருக்கும் திறந்தே வைத்திருந்தது. அகழ்வாரையும் இகழ்வாரையும் ஒரு சுமைதாங்கியைப்போல் சுமந்துக்கொள்ளும் பட்டிணம் என் ஒருத்திக்கு தன் வாயில் கதவை தாளிட்டுக்கொள்ளுமா என்ன?

நான் தலைநகர் போவது கிட்டதட்ட வீட்டில் யாருக்குமே விருப்பம் இல்லை. அம்மா என்னிடம் போருக்கே நின்றார். கடைசி தங்கையைக் காரணம் காட்டி தடுத்தார். பட்டணத்தில் நான் நாசமாய் போவேன் என்று பயமுறுத்தினார். பொம்பள பிள்ளை அவ்வளவு தொலைவு போவது நல்லதல்ல என்று கடிந்துரைத்தார். இந்தக் குடும்பத்தை யார் பார்த்துக்கொள்வது என்று பரிந்துரைக்கவும் செய்தார். நான் யாருடைய ஆலோசனையையும் கேட்கத் தயாராக இல்லை. அப்பாவின் அடிமைப்படுத்தலில் நானும் அம்மாவும் மனதளவில் பாதிப்படைந்திருந்தோம். அப்பா இறந்த பிறகு அம்மா தன் ஆதிக்கத்தை ஆரம்பித்துவிட்டார். என்னால் அதை அனுமதிக்க முடியவில்லை. அதில் என்னுடைய சுயநலமும் இருக்கலாம். அதையும் நான் மறுக்கவில்லை. நான் ஒரு முடிவோடுதான் இருந்தேன்.

தலைநகருக்குப் போவதற்கான ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு பிடிவாதமாக நான் பட்டணம் போவதற்குப் பணப்பிரச்சனைதான் முதன்மை காரணமாக இருந்தது. தம்பி அவன் செலவுகளைப் பகுதி நேர வேலையைப் பார்த்துக்கொண்டு சமாளித்துக்கொண்டான். ஆனால் தங்கைகளை அப்படி விடமுடியவில்லை. நாட்டில் விலைவாசியும் அன்றாட வாழ்கையின் தேவையும் உயர்ந்ததே தவிர சம்பள உயர்வை எங்கேயும் காண நேரவில்லை. அதுவும் கம்பத்தில் 2000 ஆண்டுகளில் மாதச் சம்பளமாக 350ரிங்கிட் கிடைப்பதற்க்கே மாதம் முழுதும் உழைக்க வேண்டியிருந்தது. ஆனால் பட்டணத்தின் நிலை வேறுமாதிரி இருப்பதை நாளிதலில் வரும் வேலை வாய்ப்புகளும் அதற்கேற்ற சம்பளமும் உறுதிபடுத்தின.

எனக்கு தலைநகரில் உறவுக்காரர்கள் இருந்ததால் ஒரு நம்பிக்கையுடன் அந்த முடிவை எடுத்தேன். அடிப்படை கணினி பயிற்சியும், shift வேலை அனுபவமும் மற்றும் தனியார் மருத்துவமனையில் தாதியாக வேலை செய்த அனுபவம் இருந்ததால் எனக்கு வேலை கிடைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்ற நம்பிக்கை இருந்தது. சொர்ப்ப பணத்துடனும் கொஞ்சம் நகைகளுடனும் தலைநகருக்குப் புறப்பட்டேன்.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்பார்கள். என் உறவுக்காரர்கள் அதில் விதி விளக்கா என்ன? வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்த என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தார்கள். புதிய இடத்தில் எங்கே வேலை தேடி போவதென்று தெரியவில்லை. என்னை அழைத்து போவதற்கும் அவர்களுக்கு நேரம் இல்லை. ஒரு மாதம் முடிந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் வேலை கிடைக்கவில்லை என்றால் கம்பத்துக்கே திரும்பி விடலாம் என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் பெரிய மருத்துவமனையில் பாதுகாவலர் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக ஒரு செய்தி வந்தது.

என் சிற்றன்னை அந்த வேலைக்கு என்னை போகச்சொன்னார். நான் மறுக்க வில்லை. எதைத்தின்னால் பித்தம் தீரும் என்ற நிலை எனக்கு. ஆனாலும் குழப்பம்தான். யார் வேண்டுமானாலும் பாதுகாவலர் வேலைக்கு போகலாம் என்பது எனக்கு தெரியாது. கிணற்றை விட்டு வெளியே வந்த தவளையாக எல்லாமும் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. நேர்முகத்தேர்வு முடிந்து எனக்கு சீருடை வழங்கப்பட்டது. சேற்றுமஞ்சள் வர்ணம் கொண்ட சீருடை. அதை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்தேன். எடுப்பாகவும் கம்பீரமாகவும் இருந்தது. முகத்தை சிரிப்பதும், முறைப்பதும், யோசிப்பதும் என பல கோணங்களில் நடித்துப்பார்த்தேன். எனக்கே நான் அழகாக தெரிந்தேன்.

'யோகி அசத்து' என்று கண்ணாடியைப் பார்த்து சொல்லிக்கொண்டேன். ஒரு மலாய் மாது அங்கே வந்தார். அந்தச் சீருடையில் அவர்தான் என்னை முதல்முறையாக பார்த்தவர். என்னை பார்த்து சிரித்தார். அவ்வளவுதான். "ஆண்டி (aunty) நான் நல்லா இருக்கிறேனா? இன்றைக்கு முதல்நாள் வேலை. இந்த உடை நல்லா இருக்கா" என்றேன். ஒரு வேளை எனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியை யாரிடமாவது பகிர்ந்துக்கொள்ள மனம் அவ்வளவு நேரம் அலைக்கழித்ததோ என்னவோ. என்னையே என்னால் சில நேரங்களிள் புரிந்துக்கொள்ள முடியவில்லைதான். அந்த ஆண்டி ‘Adik awak lawak sekali. Semoga berjaya’ என்றார். நான் நன்றியை தெரிவித்து வேலைக்கு கிளம்பினேன். அவரின் வார்த்தை புது தெம்பையும் மனோ தைரியத்தையும் கொடுத்தது.

பெரிய மருத்துவமனையில் பாதுகாவலராக வேலை செய்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது. உயிர் என்ற நம்பிக்கையை உடல் என்ற கூட்டோடு தக்க வைக்க மருத்துவர்கள் அலுக்காமல் பாடுபடுவதும், பிழைத்தே ஆக வேண்டும் என்ற கட்டளையோடு அவரைச் சார்ந்தவர்கள் வேண்டுவதும் ஆரம்பத்தில் பயத்தை ஏற்படுத்தியது. நோயாளி பிழைத்துக்கொண்டால் சரி. இறந்துவிட்டால் மரண ஓலமும் கூப்பாடும் அழுகையும் என்னை பலவீனப்படுத்தி விடும். அவர்களின் அலுகையைப்பார்த்து நான் கண்கலங்கி நிர்ப்பேன். சீனர் மற்றும் மலாய்க்காரர்கள் கொஞ்சம் தேவலாம். வாய்விட்டு கதர மாட்டார்கள் , அதுவும் மருத்துவமனை வார்ட்டில்.

இந்தியர்களாக இருந்தால் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் மருத்துவமனையே ரெண்டாக்கி விடுவார்கள். அவர்கள் பரிதவிப்பதைப் பார்த்து மனது கேட்காது. அழுது விடுவேன். இவ்வளவும் கொஞ்ச நாட்களுக்குதான் நிகழ்ந்தது. நாளொறு பிணத்தையும் பொழுதொரு அபாயத்தையும் பார்த்து பார்த்து, கேட்டு கேட்டு மனம் கல்லாகத் தொடங்கியது. அழுது ஆர்பாட்டம் பண்ணுபவர்களைச் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்துவதற்குள் சில சமயம் கடுப்பாகி விடும். சமாதானமும் ஆக மாட்டார்கள், சொல்வதையும் கேட்க மாட்டார்கள். 'ஓர் உயிரே போச்சே' என்று எங்களின் உயிரை எடுப்பதை மட்டுமல்லாமல் உயிருக்கு போராடும் மற்ற நோயாளிகளைப்பற்றிய அக்கரையும் இல்லாமல் சண்டைக்கு நிர்ப்பார்கள்.

ஆத்திரம் எல்லையை தாண்ட ஆரம்பிக்கும். மலாய்மொழியில் padan muka என்ற ஒரு சொல் உண்டு. 'நல்லா வேணும்' என்று அர்த்தம். நேராக சொல்லாவிட்டாலும் மனதில் நினைத்துக்கொள்வோம். ஐயோ! எனக்குத்தான் எத்தனை கொடூரமான மனது வந்துவிட்டது. மரணம், பிணம் என்றாலே ஏற்படும் பயமும் திகிலும் ரத்தத்தைப் பார்த்தால் ஏற்படும் மிரட்சியும் ஒன்றும் இல்லாமல் போய், இன்றைக்கு எந்த வாட்டில் யார் போகப்போறது... 'ஒரே பிஸி' என்று சளித்து கொள்ளும் அளவுக்கு கருணையும் இரக்கமும் என்னுள் அறுந்து போய் இருந்தது.

தனியார் மருத்துவமனையில் பகுதிநேர தாதியாக இருந்த போது இரத்தத்தை சகித்துக்கொள்ள முடியாமல் வேலையை விட்டு வந்தேன். ஆனால் தலைநகரில் காலம் எனக்கு எதையும் தாங்கிக் கொள்ளும் , சுலபமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை கொடுத்தது. இந்த மாறுதல்கள் இயல்பாக எனக்குள் நிகழ்ந்தன. எனக்கே இப்படி என்றால், தாதிகளையும் மருத்துவர்களையும் நினைத்து பாருங்கள்.

நான் சுமார் ஒரு வருடம் அங்கே வேலை செய்திருப்பேன். பலதரப்பட்ட மனிதர்களையும் சந்தித்திருக்கிறேன். பார்வையாளர்கள் நேரம் தாழ்த்தி வந்து நோயாளிகளை காண்பதற்குப் பாதுகாவலர்களை கெஞ்சுவதும், கூத்தாடுவதும், சில சமயம் லஞ்சமாக தேனீர், பலகாரம், இன்னும் சிலர் பணத்தையும் காட்டி பாதுகாவலர்களை மடக்கப் பார்ப்பார்கள். பெருவாரியாக நான் யாரையும் அனுமதிக்க மாட்டேன். அதற்குதான் எனக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பார்வையாளர்கள் நிறைய கேள்வி கேட்பார்கள். அதிகமாக பதில் சொல்ல வேண்டியிருந்தது. சில சமயம் பதில் சொல்ல வார்த்தையும் போதாது. சாமர்த்தியமும் பத்தாது. சிலர் மிரட்டுவார்கள். 'வெளியே தானடி வருவ, அப்ப பாக்குறேன்' என்பார்கள். பெரிய மருத்துவமனையில் ஏகப்பட்ட வாசல்கள் இருந்தன. பாதுகாவலர்களுக்கு மட்டும்தான் அது தெரியும். உருட்டல் மிரட்டல் எல்லாம் எங்களிடம் செல்லாது.

நான் வெளி உலகத்தைப் பட்டணத்தில்தான் படிக்கத்தொடங்கினேன். பட்டணத்தில் வேலை செய்தால் சேமிக்கலாம் என்பது ஒரு மாயைதான். காரணம் இங்கேயும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. விலைவாசிகள் கம்பத்தைவிடவும் அதிகமாகவே இருந்தன. நான் அளவுச் சாப்பாடுதான் சாப்பிட வேண்டியிருந்தது. புத்தகங்கள் வாங்கக்கூட சிரமப்பட்டேன். இருப்பினும் கம்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு தொகையை அனுப்பி விடுவேன்.

படிக்காதவர்களும் வயதானவர்களும் பெரும்பாலும் தேர்வு செய்யும் இந்த பாதுகாவலர் வேலையை ஒரு தரமற்ற வேலையாகவே பலரும் பார்த்தனர். சிலரின் பார்வை அலட்சியமாகவும் கேவலமாகவும் என் மீது விழுந்து செல்லும். ஒரு காலக்கட்டத்துக்கு பிறகு அதை அலட்சியப்படுத்த நான் பழகிக்கொண்டேன்.

பொறுப்பற்ற சிலரால் எங்கள் நிர்வாகம் மீது நிறைய புகார்கள் இருந்தன. இதனால் நிர்வாகப் பதிவின் காலக்கேடு முடிந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அதை நீட்டிக்க மறுத்தது. இதனால் கம்பனியை மூடிவிட எங்களின் நிர்வாகம் முடிவெடுத்தது.

பெரிய மருத்துவமனையில் பல்லாயிரம் கணக்கான திகில் கதைகளும் புனைக்கதைகளும் புதைந்துக்கிடக்கின்றன. யாரும் தோண்டிப் பார்ப்பதற்குள் வேறொரு கதை உயிர் பெற்றுக்கொள்ளும். நான் பாதுகாவலர் வேலையை விரும்பித்தான் செய்தேன். யாரிடமாவது இதைப்பற்றிக் பேசினால் சிரித்து கேலி செய்வார்கள். பெண்களுக்கு அது ஒரு பொருத்தமில்லாத வேலையாகப் பார்க்கப்படுகிறது. பெண் என்பவள் ஆண் வர்க்கத்தினரால் பாதுக்காக்கப் பட மட்டுமே தகுதி கொண்ட பலவீனமான பிறவி என எண்ணுகிறவர்களாக அவர்கள் இருக்கலாம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>