முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 29
மே 2011

  அசுரனாகத் தொடங்கிய வாழ்வு
கே. பாலமுருகன்
 
 
       
நேர்காணல்:

பாலஸ்தீனப் பயண அனுபவங்கள் : "உலகின் அனைத்து துயரங்களின் மொழியும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கின்றன"

அ. முத்துகிருஷ்ணன்



பத்தி:

அசுரனாகத் தொடங்கிய வாழ்வு
கே. பாலமுருகன்



சிறுகதை:

ஒட்டிக் கொண்டது...
ஸ்ரீஜா வெங்கடேஷ்



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...11
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...19

ஷம்மி முத்துவேல்

சூர்யகுமாரன்

ந. மயூரரூபன்

லதா

என். விநாயக முருகன்

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

“கம்சா! தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்துண்டு” இந்த வசனம் எப்பொழுதும் போல ஒரு அசரீரித்தன்மையுடன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

கிருஷ்ண ஜெயந்திக்கு நான்கு நாட்களுக்கு முன் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சுங்கைப்பட்டாணி கிளைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். மேடை நாடகத்தின் மீதான ஆர்வம் என்னை அதுவரை இழுத்து வந்திருந்தது. ஆகையால் கிருஷ்ண ஜெயந்திக்கு அந்தப் பக்தி இயக்கம் மேடையேற்றும் நாடகத்தில் எனக்கும் நடிப்பதற்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது. கிருஷ்ணரின் அவதாரத்தைப் பற்றிய கதை அது. சிறையில் பிறக்கும் கிருஷ்ணரைக் கம்சனிடமிருந்து காப்பாற்றுவதற்காக வாசுதேவன் அவரைத் தூக்கிக்கொண்டு மழையில் கடல் கடந்து பிருந்தாவனத்தில் யசோதையின் இல்லத்தில் கொண்டு சேர்க்கிறார் எனத் தொடங்கும் நாடகம் இறுதியில் கிருஷ்ணர் கம்சனைக் கொல்வதில் முடிந்துவிடும். எல்லாம் சாமிக் கதைகளும் அசுரனும் பகையாளியும் இறப்பதோடு முடிவடைந்துவிடுகிறது. அசுரனும் எதிரியும் இருக்கும் வரைத்தான் கடவுளும் அவதாரமும் என்பதைப் பிறகொருநாளில் கிருஷ்ண அவதாரங்களின் நோக்கங்களைப் பற்றி வாசித்தப்போது தெரிந்துகொண்டேன்.

எல்லாமும் ஒரு தீர்க்கமான ஏற்பாடு எனப் புரியும் தருணத்தில் பக்தி என்பதை அழுத்தமாக நிறுவுவதற்காக எத்தனை ஆயிரம் கதைகள் மிகவும் நேர்த்தியாகப் பிண்ணப்பட்டிருக்கின்றன என்பதை உணர முடிகிறது. சநாதன முனிவர்கள் (பிரம்மாவின் குழந்தைகள் எனச் சொல்லப்படுகிறது) விஷ்ணுவைத் தரிசிப்பதற்காக வைகுண்டம் வருகிறார்கள். வைக்குண்ட வாசலின் பாதுகாவலர்களான அஜயனும் விஜயனும் அவர்களைத் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திவிடுகிறார்கள். அந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத முனிவர்கள் (கைவசம்தான் ஆயிரம் சாபங்களை வைத்திருப்பார்களே) ஏழு ஜென்மங்கள் மனிதர்களாகப் பிறக்கக்கடவீர்கள் எனச் சாபத்தை விட்டுவிடுகிறார்கள்.

இதைக் கேட்ட அஜயனும் விஜயனும் விஷ்ணுவிடம் மன்றாடுகிறார்கள். விஷ்ணுவும் அவர்களுக்கு இரண்டுவகையான தேர்வை (option) அளிக்கிறார். ஒன்று: ஏழு பிறவிகள் மனிதர்களாகப் பிறந்து மீண்டும் இறைவனை அடைவது, இரண்டு: 5 பிறவிகள் அசுரனாகப் பிறந்து இறைவன் கையால் மரணமடைந்து மோட்சம் பெறுவது. அஜயனும் விஜயனும் இரண்டாவது தேர்வையே பெற்றுக்கொள்ள முடிவெடுத்து, பூமியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் அசுரனாகப் பிறக்க அவர்களை அழிக்க விஷ்ணுவும் அவதாரம் எடுக்கிறார்.

இந்தக் கதை எனக்கு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. நெடுஞ்சாலையில் மோட்டார்கள் செல்லும் பாதையில் ஆணியையும் கூர்மையான பொருள்களையும் போட்டுவிட்டு, பிறகு சக்கரம் பிய்ந்துபோன மோட்டார்களை நோக்கி அவர்களே ஆளை அனுப்பி செய்து பணத்தை நாகரிகமாகப் பறித்துச் செல்லும் கதை.

2

அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தி. நான் கிருஷ்ணரின் எதிரியான கம்சனின் அடியாளாக உடல் முழுக்கக் கருப்பு சாயம் பூசிக்கொண்டு அரக்கனாகியிருந்தேன். காலையிலேயே எப்படி ஒரு அசுரனைப் போல நடப்பது, உடல் அசைவுகளைச் செய்வது, அசுரனைப் போல உருமுவது, பேசுவது எனக் கற்றுக்கொள்ளத் துவங்கினேன். ஒரு பக்தி இயக்கத்தில் நான் முதலில் கற்றுக்கொண்ட பாடம் எப்படி அரக்கனாக வாழ்வது என்பதைப் பற்றித்தான். கருப்பு வேட்டி, நெஞ்சில் வெள்ளை மண்டை ஓடுகள் வரையப்பட்டிருக்க, தலைக்கு மேல் கொம்பு முளைத்திருந்தது. ஒருமுறை கண்ணாடியில் என் வேடத்தைப் பார்த்துப் பிரமித்தேன். எனக்குக் கிடைத்த முதல் வேடமிது. இனி காலத்திற்கும் இதை நேசிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மேடையில் எனக்களிக்கப்பட்டிருந்த மொத்த நேரம் 4 நிமிடம்தான். அதில் இரு நிமிடங்கள் தேவகியையும் வாசுதேவனையும் அடைத்து வைத்திருக்கும் சிறையைப் பாதுகாப்பது போல் இரு பக்கமும் அசுரனைப் போல நடக்க வேண்டும். பிறகு இரண்டு நிமிடம் உலகிலேயே இதுவரை யாரும் விடாத ஒரு கொடூரமான குரட்டையை விட்டுத் தொலைய வேண்டும். கட்டியிருந்த வேட்டி இலேசாக விலகி, உள்ளே அணிந்திருந்த நீல வர்ண அரைக்கால் சட்டை தெரிந்ததைக்கூட பொருட்படுத்தாமல் குரட்டைவிடுவதில் ஆர்வமாகியிருந்தேன்.

வேடத்தைக் களைக்கும்போது இரண்டு பக்தர்கள் உள்ளே நுழைந்து, கிருஷ்ணர் வேடம் அணிந்திருந்தவரையும் கடந்து வந்து எனக்கு கைக்குலுக்கி பாராட்டினார்கள். முகத்தில் பூசப்பட்டிருந்த மை முகம் முழுக்கப் பரவியிருந்ததைப் பார்த்தும் கொஞ்சமும் சிரிக்காமல் என் அபாரமான நடிப்பைப் பாராட்டிக்கொண்டிருந்தனர். அருகில் நின்றிருந்த நண்பன் ஒருவன் எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாகச் சொன்னான். “டேய் எவன் ஆபாசமா நடிக்கிறானோ அவனுக்குத்தான் மதிப்புடா”. எனக்கு அப்பொழுது அதில் வியப்பொன்றும் தென்படவில்லை. என் குரட்டை சத்தத்தைக் கேட்டுத்தான் அரங்கமே வெடித்துச் சிதறியது என நம்பியிருந்தேன் . ஆனால் வெளியே தெரிந்த என் நீல வர்ணக் அரைக்கால் சட்டையைப் பார்த்துதான் எனத் தெரிந்ததும் கோபம் அதிகமாகியது. எல்லோருக்கும் எல்லாம் நேரங்களிலும் ஒரு அற்புதம் நிகழ வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு இருப்பதை அப்பொழுது உணர்ந்துகொள்ள முடிந்தது.

அதன் பிறகு அடிக்கடி பெருநாள் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் பல நாடகங்களில் நடிக்கத் துவங்கியிருந்தேன். எனக்கு கிடைக்கும் எல்லாம் வேடங்களும் தேவலோகத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும். பினாங்கு மாநிலத்திற்குச் சென்று ஒரு குழுவாக நாடகம் நடிக்கத் துவங்கியிருந்த காலக்கட்டம் மறக்க முடியாதவை. 'இரண்டாம் வாய்ப்பு' எனும் ஒரு நாடகம். வழித்தவறி போய் பாலியல் தொழிலாளியைத் திருமணம் செய்துகொண்டு நாசமாகி போன ஒரு கிருஷ்ணப் பக்தனின் மரணம் பற்றியது.

அப்பொழுதெல்லாம் வாழ்வின் நெறியையும் ஒழுங்கையும் மீறுவதன் வரையறையைப் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை முன்வைத்தே அதிகமாக மதிப்பிட்டார்கள். வழித்தவறும் ஆண்கள் மது பழக்கத்திற்கு ஆளாகுவதை அதிகப்பட்ச குற்றமாகச் சொல்லும் மதம், வழித்தவறும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக மாறுவதைக் குற்றத்தின் உச்சமாக நிருவியிருந்தது. ஆக வழித்தவறும் பக்தர்களின் பாவங்களைக் கணக்கெடுக்கப் பாலியல் தொழிலாளிகளின் இருப்பும் வருகையும் அவசியமாகியிருந்தன. பாலியல் தொழிலாலியின் சிதைக்கப்பட்ட வாழ்வு பற்றி எந்தக் கவலையுமில்லாமல், அதைப் பாவக்கணக்கெடுப்பின் ஒரு விதியாக மட்டுமே பார்த்து அழித்தொழிக்கும் மதத்தையும் மதப்போதனைகளைப் பற்றியும் ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் வெறுமனே நடித்துத் திரிந்த ஒரு காலத்தில் இவையாவும் நடந்துகொண்டிருந்தன.

இரண்டாம் வாய்ப்பு எனும் நாடகத்தில் வரும் கதைமாந்தரான அந்தப் பக்தன் பாவங்கள் செய்து செய்து முதுமையடைந்து ஓய்ந்து போயிருக்கிறான். மரணத்தின் வருகைக்காகக் காத்திருக்கும் கடைசி காலக்கட்டம் அது. இறப்பதற்கு முன் தன் கடைசி மகனான நாராயணன் மட்டும்தான் வீட்டில் இருக்கிறான். ஆகையால் இறுதி மூச்சிக்கு முன் நாராயணன் நாராயணன் என அழைத்துவிட்டு உயிரைத் துறக்கிறான். எமலோக தூதர்களும் தேவர்களும் அவனுடைய ஆன்மாவைத் தேடி வருகிறார்கள். யார் அவனுடைய ஆன்மாவை அழைத்துச் செல்வது எனும் விவாதமும்தான் நாடகத்தின் மையம். நாராயணன் என விஷ்ணுவின் பெயரை இறப்பதற்கு முன் உச்சரித்ததால் இந்த உயிருக்குத் தன் வாழ்நாள் பாவங்களிலிருந்து மீட்பு உண்டு என்பதைத் தேவர்கள் ஒரு பக்கம் விவாதிக்க, அவன் பாவங்கள் செய்து பிழைத்தவன் ஆகையால் நரகத்திற்குச் செல்ல வேண்டும் என எமலோக தூதர்கள் ஒரு பக்கம் விவாதிக்க, இறுதியில் அந்தப் பக்தன் காப்பாற்றப்பட்டு அடுத்த பிறவியில் நல்லவனாக வாழ இரண்டாவது வாய்ப்புத் தரப்படுகிறான்.

பாவங்கள் செய்தாலும் மரணக் காலத்தில் இறைவனை நோக்கி தவம் கிடந்து, இறைவனின் நாமத்தை ஜெபித்து இறை சிந்தனையுடன் இருந்தால், இறக்கும் தருவாயில் கடவுள் அவனுக்குத் தன்னைப் பற்றிய ஞாபகத்தைக் கொடுப்பார் எனும் நம்பிக்கை கிருஷ்ண பக்தியில் வலுவாக இருக்கிறது. கடைசி காலத்தில் பிறப்பு இறப்பு எனும் இந்தக் காலச்சக்கரத்திலிருந்து தனக்கு விடுதலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பக்தர்கள் சதா இறைத்தொண்டு செய்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் நாமத்தை ஜெபித்துக்கொண்டு அவர் பெயரை உச்சரித்துக்கொண்டே விடைப்பெறுவோம் என்கிற எதிர்ப்பார்ப்புடன்தான் அவர்கள் ஒவ்வொரு கணமும் இறைச்சிந்தனையில் இருக்கவே முயற்சிக்கிறார்கள். சட்டென என் பாட்டி சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. முதுமை காலத்தில் எப்பொழுதும் கடவுள் நம்பிக்கையிலேயே இருக்க வேண்டும், மரணத்திற்கு முன்பாக நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள அதுவே சிறந்த முறையாகும் என அவர் சொல்லியிருக்கிறார்.

ஆக, நம் மதம் கடவுள் நம்பிக்கைக்கு ஒரு நோக்கமும் வயது வரையறையையும் கொடுத்திருப்பதை மெல்ல உணர முடிந்தது.

18SX, 18PL எனும் சினிமாவைப் பார்ப்பதற்கான வயது வரையறை சான்றிதழ் போல 40> பக்தி, 50> தியானம், 60> ஆன்மீகம், 70 > தொண்டு, 80> இறைவனடி என இறை நம்பிக்கையில் ஈடுபடவும் அப்படியொரு அட்டவணையை உருவாக்கிக்கொள்ளலாம். நான் கிருஷ்ண பக்தியில் முழு ஈடுபாடுடன் இணைந்து செயல்படத் துவங்கியக் காலக்கட்டத்தில் தொடர்ந்து எனக்கு அளிக்கப்பட்ட உபதேசம் பக்தி செய்யவும் ஆன்மீகத்தில் ஈடுபடவும் இது சரியான வயதல்ல என்பதாகும். குடும்ப உறவுகள் நண்பர்கள் என அனைவரும் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். அதனால்தான் என்னவோ நான் கிருஷ்ண பக்தியில் மேலும் தீவிரமானேன்.

மலாய்க்காரர்கள் 5 வயதிலேயே தன் பிள்ளைகளை வேத வகுப்புகளுக்கு அனுப்பி தங்களின் மதப்போதனைகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஐந்துவேளை தொழுவும் ஒழுங்கை ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு மதமும் சமய ஈடுபாடுகளுக்கென தனித்தனி விதிகளையும் கட்டமைப்புகளையும் கொண்டிருக்கின்றன. சிறுவர்களைத் தேவார வகுப்புகளுக்கு அனுப்பி தேவாரம் பாட வைப்பதோடு, சரஸ்வதி, விநாயகர் படங்களுக்கு வர்ணம் தீட்டி பக்தியை வளர்க்கும் ஒரு அபாரமான முயற்சி இந்து மதத்தில் மட்டும்தான் உண்டு. ஆனால் கிருஷ்ண பக்தியில் சிறுவர்களுக்கு ஒவ்வொரு ஞாயிரும் ஆன்மீகம் சமயம் கற்பிக்கப்படும் விதம் வித்தியாசமானவை. கிருஷ்ணரின் சிறுவயது லீலைகளைக் கதையாகச் சொல்லியும், பகவத் கீதையை எளிமைப்படுத்திக் கற்றுக்கொடுத்தும் அவர்களுக்கென ஒரு சமய அறிவைப் புகட்டும் தீவிரத்தை முன்னெடுப்பதைப் பார்க்க முடிகின்றன.

சில நாட்களில் சிறுவர்களுக்குக் கிருஷ்ணர் கதைகளைச் சொல்லும் பணி எனக்களிக்கப்பட்டது. பகவத் கீதையில் உள்ள கதைகளை வாசித்து அதை எளிமைப்படுத்தி சொல்ல முயன்றேன். ஆனால் சிறுவர்கள் கதைகளிலிருந்து சமயத்தையும் ஆன்மீகத்தையும் நீக்கிவிட்டு சுவரைச் சுரண்டுவதும் விளையாட்டுப் பொருள்களை உருட்டுவதும் எனக் குதுகலமாக இருந்தார்கள். மறுவாரம் கிருஷ்ணர் சிலையை வைத்துக்கொண்டு கதை சொல்ல முயன்றேன். சிறுவர்கள் அந்தச் சிலையை எடுத்து தரையில் வைத்து கார் ஓட்டினார்கள். கிருஷ்ணரின் கையிலிருந்த புல்லாங்குழலை உடைத்துத் தனியாக எடுத்து ஊதிக் கொண்டிருந்தனர்.

3

வேட்டிக் கட்டி நெற்றியில் திலகமிட்டு, கையில் மஞ்சள் பத்திரிக்கையுடன் நான் ஒரு முழுமையான கிருஷ்ணப் பக்தராக அறிமுகமாகத் தொடங்கியது, 2001ஆம் ஆண்டின் தொடக்கத்தில்தான். ஜெகநாத் தேர்விழாவை கிருஷ்ணப் பக்தி இயக்கங்கள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். எந்தச் சண்டை சச்சரவும் இல்லாத, எந்த அதீதமான ஆர்பாட்டமும் இல்லாத பெண்களும் நடனமாடி தேரிழுக்கும் ஒரு முக்கியமான சாலை திருவிழா இது. அந்தத் தேர் விழாவுக்காக நகரம் முழுவதும் சென்று பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட காலம் மிகவும் அற்புதமானவை. ஒரு மாதம் காலக்கட்டம் அன்றாடம் மாலையில் 5மணி தொடக்கம் 8மணிவரை ஒவ்வொரு இடமாகச் சுற்றி அலைந்தேன். அறிவியல்துறை மாணவன் என்கிற பிரமிப்பும், நகரத்திலேயே கெட்டிக்கார மாணவர்கள் பயிலும் பள்ளியின் மாணவன் என்கிற மாயை உருவாக்கமெல்லாம் உடைந்து நாசமானது எல்லாம் இந்தக் காலக்கட்டத்தில்தான். அசுரனாகத் தொடங்கிய வாழ்வு சேவைக்காக ஓடியாடி வேலை செய்யும் தீவிரப் பக்தனாக்கியிருந்தது.

வீட்டைவிட்டு வெளியேறாமல் சீனக் கம்பத்திற்குள்ளேயே முடங்கிக் கிடந்த என்னை நகரம் முழுக்கப் பயணிக்க வைத்தது கிருஷ்ணப் பக்தி இயக்கமே. தினமும் பணம் வசூல் செய்யும் பக்தர்களுக்கிடையே ஒரு போட்டி இருந்தது. யார் அன்று கிருஷ்ணருக்காக அதிகமான பணம் வசூலித்தார்கள் என்பதை அறிந்துகொள்வதில் ஏற்பட்ட ஆர்வம் மிகுதியாகியபடியே இருந்தது. ஒவ்வொரு வசிப்பிடப் பகுதியாகக் கிருஷ்ணப் பக்தியின் வாகனம் பக்தர்களை இறக்கிவிடும். இறங்கியதும் வேட்டியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வீடுகளை நோக்கி வேகமாக ஓடி பணம் வசூல் செய்யும் அளவிற்கு ஓரிரு நாட்களிலேயே நான் என்பதன் பிரக்ஞையை இழந்திருந்தேன்.

நான் யாரிடமும் சட்டென பழகக்கூடியவன் அல்ல. உறவினர்கள் வந்தால்கூட அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொள்ளும் பழக்கமுடையவன். எல்லாவற்றையும் மீறி சமூகத்தின் எல்லாம் நிலை மனிதர்களுடனும் திமிரும் கர்வமும் இல்லாமல் சாந்தமாகப் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது ஹரே ராமா ஹரே கிருஷ்ண இயக்கம்.

கிருஷ்ண சேவையில் நம்மைச் சுற்றி வாழும் எல்லா கருமிகளையும் ஈடுப்படுத்த வேண்டும் என்கிற கொள்கை கிருஷ்ணப் பக்தியில் இருந்தது. கருமி என்றால் பக்தர் இல்லாதவர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் அடையாளம். ஏழ்மையில் வாடுபவர்களிடம்கூட பத்து சென் பெற்று அதையும் ஒரு நன்கொடையாக்கிவிடுவதுதான் சமயத்தை உயர்த்திக் காட்டப் பயன்படுத்தப்படும் ஆயுதமாகும். ஆகையால் எந்தப் பொருளும் இல்லாமல் குழந்தைகள் அங்கொன்றும் இங்கொன்றும் படுத்துறங்கிக் கிடக்கும் வீட்டிற்குள்ளும் எக்கிப் பார்த்து நன்கொடை கேட்கும் அளவிற்கு மனதைத் தயார்ப்படுத்தியிருந்தேன்.

சிறுவர்களை அனுப்பி வைத்து பொய் சொல்ல வைப்பது, பணம் இல்லாத தன்னுடைய கொடூரமான வறுமையைப் பற்றி புலம்புவது, பார்த்தும் பார்க்காதது போல தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பது, இந்த வயதில் உனக்கென்ன இந்த வேலை என மிரட்டுவது, நாயை விட்டு குரைக்க வைப்பது, காசைக் கொடுத்துவிட்டு மறைமுகமாக விமர்சிப்பது, கிருஷ்ணப் பக்தியின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது என ஒரு விசயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் எப்படி மனதை இயங்க வைக்கிறது என்பதை அறியும் பேரனுபவத்தைப் பெற்றிருந்தேன். தலைக்கு மேல் கொளுந்துவிட்டு எரியும் வெயிலைச் சுமந்துகொண்டு கருவடைந்த முகத்துடன் ஒவ்வொரு வீட்டு வாசலின் முன்கதவைப் பிடித்துக் கொண்டு கத்தி கத்தி பழகியது ஒரே ஒரு வசனத்தைத்தான். “ஹரே கிருஷ்ணா. வருகிற மார்கழி மாசம் ஜெகநாத்க்கு தேர் இழுக்கறோம், உங்களால முடிஞ்ச உதவியைச் செய்யலாம்”.

4

நாடகங்களும், பயணங்களும், பகவத் கீதை வாசிப்பும், அதிகாலை பூஜைகளும், மத்தலம் கற்றுக்கொண்டு பஜனையில் வாசித்து ஆடிப்பாடி மகிழ்ந்ததும் என எல்லாமும் கிருஷ்ணப் பக்தர்களையெல்லாம் தெய்வத்தின் தூதர்கள் என நம்ப வைத்தது. ஒரு முழுமையான பக்தன் சக பக்தர்களுடன் நல்லுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற விதி இருந்தது. ஆகையால் பக்தர்களுடன் அன்பாகவும் நட்பாகவும் பழகிக் கொண்டும் சொந்த வீட்டைப் போல படுத்துறங்கிக் கொண்டும் நாள் முழுக்க எல்லா பூஜைகளிலும் கலந்துகொண்டு வீட்டைப் பற்றி நினைவுகளை இழந்திருந்த காலக்கட்டம். கிருஷ்ணப் பக்தி இயக்கத்தில் தலைவர் பதவிக்கான போட்டி வந்திருந்தது.

பக்தியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பக்தர்களுக்குள்ளேயே இரு பிரிவுகள் அழுத்தமாக விழுந்துகிடந்ததை நான் அறிந்ததே இல்லை. மிகையாகப் படித்தவர்கள் ஒரு பக்கமும் படிக்காமல் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த இன்னொரு கூட்டம் ஒரு பக்கமும் யாரைத் தலைவராகக் கொண்டு வரவேண்டும் என்பதில் சர்ச்சையும் விவாதமும் தொடங்கியிருந்தது. முதலில் அதிர்ச்சியாக இருந்த எனக்கு, கிருஷ்ணப் பக்தி இயக்கத்தில் ஒரு அப்பாவியாக என் இளமை பருவத்தை இழந்து இங்கேயே கதியாய் கிடந்த கடந்தகாலத்தை ஒருமுறை நினைத்துக்கொண்டேன். அன்பான மனிதர்களாகவே நான் பார்த்துப்பழகிய முகங்களில் வழக்கத்திற்கு எதிராகக் குரூரத்தையும் பதவி ஆசையையும் பகை உணர்ச்சியையும் பார்க்க நேர்ந்தது. பிரமை பிடித்து அந்தப் பக்கம் போகாமல் அறையிலேயே பல வாரங்கள் கழித்தேன். பிறகொருநாள் செய்தி வந்திருந்தது. அந்தக் கிருஷ்ணப் பக்தி இயக்கம் இரண்டாக உடைந்து இன்னொன்று வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டதாகவும் இவையாவும் கிருஷ்ணரின் லீலையில் ஒன்றெனவும்.

அதன் பிறகு எங்காவது கிருஷ்ணப் பக்தர்களைப் பார்த்தால் சிரித்து மட்டுமே வைப்பேன். எப்பொழுதும் அவர்கள் கேட்டுக்கொண்டிருந்த கேள்விகள் காலம் நகர நகர வேறு மாதிரியாக மாறியிருந்தன.

“ஹரே கிருஷ்ணா. என்ன பாலா இப்பெல்லாம் வர்றதே இல்லெ? என்னாச்சி?”

வேறொரு சமயத்தில்.....

“நேரம் இருந்தா வா பாலா. ஹரே கிருஷ்ணா.”

பிறகொரு நாளில்...

“எப்படி இருக்க பாலா?”

காலம் நகர....

“..................” - இலேசான புன்னகை, தலையாட்டுதல்

“..................” மௌனம்.

மௌனம் இறுகத் தொடங்கியபோது எனக்கொரு கேள்வி உருவாகியது. பக்தி என்றால் என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காமல் போன காலத்தில் மீண்டும் நான் அசுரனாகியிருந்தேன்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768