|
|
அம்மாவின் மரணம் - தஸ்லீமா நஸ்ஸ்ரீன் கவிதைகள்
1962ஆம் ஆகஸ்டு மாதம் 25ஆம் தேதி வங்காள தேசத்திலுள்ள மைமன்சிங் நகரத்தில்
தஸ்லீமா பிறந்தார். குழந்தைப்பேறு நிபுணரான இவர், வங்காள சமூகத்தை
அதிர்ச்சியுறச் செய்யும் விதத்தில், மூன்று முறை திருமணமாகி விவாகரத்துப்
பெற்றவர். தெற்கு ஆசியப்பெண்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள்
குறித்துப் பத்தி எழுத்துகளில் எழுதிவந்த இவர், 1992 ஆம் ஆண்டு நபசித்ரா
எனும் கட்டுரைத் தொகுதிக்காக மேற்கு வங்கத்தின் ஆனந்த் புரஸ்கார் இலக்கிய
விருது பெற்றார். இவரின் 'அம்மாவின் மரணம்' என்ற இந்த கவிதைத் தொகுப்பை
தொகுத்து மொழியாக்கம் செய்தவர் யமுனா ராஜேந்திரன் ஆவார். அவரின் “எல்லை”
என்ற கவிதையோடு இம்மாத தொடர்.
மனித மனம்தான் எல்லாவற்றிற்கும் மூல காரணமாக இருக்கின்றது. மனம்
நினைப்பதைத்தான் பெரும்பாலும் செய்வதற்குச் மனித சிந்தனை தூண்டப்படுகிறது.
அறிவின் வயப்பட்டு சிந்தித்தாலும் மனித இயல்பியலின் படி மனதின் முடிவே
வெற்றி பெறுகிறது. மனம் எண்ணுவது நடக்கிற போது மகிழ்ச்சி நிலை கூடுகிறது.
வாழ்வு கைக்கூடி விட்டதாக ஆர்ப்பரிக்கிறது.
நான் இங்கிருந்து போகப் போகிறேன்
எனக்குப் பின்னால் என் முழுக்குடும்பமும் கூப்பிட்டுக் கொண்டே நிற்கிறது.
என் குழந்தை
எனது சேலையின் நுனியைப் பிடித்து இழுக்கிறது.
எனது கணவன்
கதவை அடைத்துக் கொண்டு நிற்கிறான்.
பல வேளைகளில் ஒவ்வொரு மனித மனமும் இதைத்தான் நினைக்கிறது. இந்த இடம் எனக்கு
சரியில்லை ; இந்த மனிதர்கள் எனக்கு உகந்தவர்கள் அல்லர் ; இவர்களோடு வாழ்தல்
என்பது சாவதற்குச் சமம் என்றெல்லாம் மனம் கூப்பாடு போடும். அடுத்த நொடியே
வெளிக்கிளம்பிவிடும் முடிவோடு எல்லாம் நடக்கும். திரும்பிப் பார்க்கும்
ஒற்றை நொடியில் கண் கசக்கும் அம்மாவும், பால் கேட்டு சிரிக்கும் ஒரு சிறு
குழந்தையும் இன்னபிற வந்து சேர்ந்த உறவுகளும் நம் முடிவைத் தூரத் தள்ளிப்
போடும். கொஞ்சம் கொஞ்சமாய் நமது வெறுப்புகள் தகர்ந்து போகும். இடைவெளிகளைச்
சமாதானங்கள் கொண்டு நிரப்பிக் கொண்டு வாழப் பழகுவோம்.
ஆனாலும் நான் போக வேண்டும்
எனக்கு முன்னால் வேறெதுவும் இல்லை
ஒரு நதி மட்டும்தான்
நான் அதைத் கடப்பேன்
எவ்வாறு நீந்துவதென்பதும் எனக்குத் தெரியும்
ஆனாலும் விருப்பமில்லாத ஒன்றில் மாற்றத்தை எதிர்பார்க்கிற நொடியில் மனம்
அடிக்கடி முரண்படத் தொடங்கும். அங்கேயே இருக்கலாம் என்பது போலவும் உடனே
போய்விட வேண்டும் என்பது போலவும் காற்று அடிக்கடி திசைமாறி வீசும். நம்மை
நம் சொந்த வார்த்தைகளால் நாமே திடப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்வதற்கு
நமது தயார்ப்படுத்துதல்கள் நீளும்.
என்னை அவர்கள்
நதியைக் கடக்க விடுவதில்லை
நதிக்கு அப்பால்
விரியும் வயல்வெளித் தவிரவும் வேறெதுவும் இல்லை.
சில வேளைகளில் சிறு குழந்தைகள் பயமுறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போல்தான்
நாமும் பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றோம். வழமைக்கு மீறி ஏதாவதொன்றைச்
செய்ய விழையும் போது நாம் பார்க்கிறோமா என குழந்தை நம்மைத் திரும்பிப்
பார்க்குமே அந்தப் பார்வைதான் இன்றுவரை நம்மை தொடர்ந்தபடி இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் அனுமதி கேட்டு நிற்கும் பார்வை...
நான் தனிமையின் மடியில் தலைசாய்த்து அழுது
பற்பல ஆண்டுகளாயிற்று
அங்கிருந்து மனம் சாந்தப்படும்படி
கொஞ்சநேரம் அழுதுவிட்டு
நான் வீடு திரும்பினேன்.
நாளாந்தர வாழ்க்கையில் எப்போதும் போல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு
எந்தவொரு கவலையும் இருக்கப்போவதில்லை என எல்லாரும் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். காலையில் எழுவது தொடங்கி, வீட்டு வேலைகள் எல்லாம்
முடித்து வேலைக்குப் போய் பின் வீடு திரும்பி பிள்ளைகளைக் கவனித்து தூங்கி
மறுபடியும் அடுத்த நாள் அதே சுழற்சிக்கு தயாராகும் ஒரு பெண்ணுக்கும்
சிலவேளைகளில் தனிமை மிகத் தேவையானதாய் இருக்கிறது.
இந்தப் பெண்ணுக்குத் தேவை தனிமையின் மடியில் தலைசாய்த்து அழுமொரு தருணம்.
அந்தத் தருணம் கைக்கூடும் போது அவள் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு தன்
கூட்டுக்கே மீண்டும் திரும்பி விடுகிறாள்.
எனக்கு முன்னால்
ஒரு நதி தவிரவும் வேறேதுமில்லை
எவ்வாறு நீந்துவதெனவும் எனக்குத் தெரியும்
நான் ஏன் போகக் கூடாது?
நான் போவேன்.
வாழ்வு எனில் தேடல். தேடல் எனில் வாழ்வு. இந்தப் புள்ளியிலிருந்து அடுத்த
புள்ளி நோக்கி நகர்வதுதான் நமது தேடல் எனில் அது தொடர வேண்டும்.
தஸ்லீமா தன் மீதான ஒழுக்கவாத விமர்சனங்களுக்கு இவ்வாறாகப் பதில்
சொல்கிறார்:-
“நான் பெண்களின் உரிமைகளைப் பேசுகிறேன். சலுகைகளை அனுபவித்துக்
கொண்டிருப்பவர்கள் என்மீது கோபம் கொள்கிறார்கள். எனது கோபம், எனது
குருட்டுத் தனம், எனது சந்தோஷம், எனது தோல்விகள், எனது வெற்றிகள், எனது
பார்வை என நான் வளர்ந்ததன் பதிவே எனது சுயசரிதம். எழுதும்போது எழுதியதன்
பின்விளைவு தொடர்பான பயம் வந்து விட நான் அனுமதிப்பதில்லை.“
|
|