|
|
சில நேரங்களில் சில நினைவுகள்
சில நேரங்களில் சில நினைவுகள். என் மனதில் அடிக்கடி தோன்றும் வரிகள்.
எனக்கு நானே முரணாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் ஆறுதலாய் இருக்கும்
வரிகள். அப்படித்தான் என் வாழ்வின் அடுத்த கட்டம் ஆரம்பமானது. அந்தக்
கட்டம் நடந்த களம் சரவாக்.
சரவாக். நான் எப்படி அங்கே சென்றேன் என்பதை இங்கே நான் குறிப்பிட்டு சொல்ல
வேண்டும் . சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைகழகத்தில் நான்காண்டு
பட்டப்படிப்பை முடித்து விட்டு வேலையமர்வு தகவலுக்காகக் காத்திருந்த
தருணம். பட்டப்படிப்பை முடித்த எல்லா பயிற்சி ஆசிரியர்களும் தாங்கள் கேட்ட
இடம் கிடைக்குமா கிடைக்காதா என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு
காத்திருந்த காலம். நான் மட்டும் என்ன விதிவிளக்கா? தினமும் நான் புரட்டி
பார்க்கும் வேதமாக மாறி விட்டிருந்தது மலேசியக் கல்வித்துறை இணையத்தளம்.
அப்படிக் காத்திருந்து காத்திருந்து அலுத்து போன போதுதான் என் தோழி சத்யா
எனக்கு சரவாக் கிடைத்திருக்கிறது என தெரிவித்தாள். என்னால் என் காதையே நம்ப
முடியவில்லை. (கண்ணால் பார்க்கவில்லை அல்லவா! எனவே கண்ணையே நம்ப
முடியவில்லை என சொல்ல முடியாது.) அதே நேரம் அந்தச் சமயத்தில் என்னிடமோ இணைய
சேவை உள்ள மடிக்கணினி இல்லை. குறுகிய காலத்திற்கு நான் வேலை செய்த
அலுவலகத்தில் எல்லாமே கையெழுத்துதான். இருப்பு கொள்ளவில்லை. நிஜம் தானா?
இதில் என்ன அபூர்வம் என்றால் என்னுடன் படித்த எல்லாருக்கும் அவர்கள் கேட்ட
இடமே கிடைடிருக்க நான் மட்டும் தவறி விழுந்த மணி போல தூரமாய். உள்ளுக்குள்
ஒரு கிளர்ச்சி. "இது தான் சாக்கு. நல்லா ஊர் சுற்றலாம்". சிக்கிரமே வேலையே
முடித்து விட்டு அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்து பின் வீடு வந்து
சேர்ந்து மடிக்கணினியைத் திறந்து, பார்ப்பதற்குள் போதும் போதும்
என்றாகிவிட்டது.
நான் சரவாக் போவது உறுதியாகி விட்ட நிலையில் தேவையான அலுவல்களை எல்லாம்
செய்து முடித்து எங்களுக்கென நிரலிடப்பட்ட விடுதிக்கும் வந்து
சேர்ந்துவிட்டேன். இங்கே இன்னொரு விசயமும் எனக்கு காத்திருந்தது. என்னுடன்
சரவாக்கில் பணிக்கு அமர்த்த தேர்வு செய்ய பட்ட 360 பேரில் முக்கால்வாசி
என்னுடன் ஒன்றாக படித்தவர்கள். எனக்கு தெரிந்த முகங்கள். ஆனாலும் அங்கே
வந்தவர்களில் இரண்டே இந்தியர்கள். அதுவும் பெண்கள். நானும் மித்ராவும்.
பரவாயில்லை. தமிழில் பேச ஒரு துணை. மனசுக்குள் மீண்டும் ஒரு கிளர்ச்சி.
சந்தோசமாகக் கிளம்பி போனேன். கோலாம்பூரில் ஓர் இரவு பல கதைகளோடு கழிந்தது.
மறுநாள் விடியற்காலை 4 மணியளவில் எங்களையெல்லாம் கோலாலம்பூர் அனைத்துலக
விமான நிலையத்தில் கொண்டு சேர்த்து விட்டார்கள். ஒரு நிமிடம் என்னை சுற்றி
என்ன நடக்கிறது என்று பார்த்தேன். ஆளாளுக்குத் தங்களின் பெரிய பெரிய
பெட்டிகளை எல்லாம் காணாமல் போக கூடாது என்பதில் படும் எச்சரிக்கையாய்
இருக்க, அப்படியே எங்களின் கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. சிலர் கண்களில்
பயம், சிலர் கண்களில் மிரட்சி, சிலர் எங்கோ வேறு நாட்டுக்கு பயணிப்பது
போன்ற உணர்வுடனும் இருந்தனர். என் நிலையோ மனதுக்குள் பதட்டம். நல்ல
காலத்திலேயே கையிலிருந்த பொட்டலத்தைத் தரையில் விட்டு போயிருக்கிறேன் என்று
அம்மா அடிக்கடி சொல்லி காட்டியதால் கொஞ்சம் (நிறையவே!) ஜாக்கிரதையாக
இருந்தேன்.
எங்களுக்காக மாஸ் விமானத்தைத் தயார் செய்திருந்தார்கள். ஏற்கனவே இரு முறை
விமானத்தில் பயணித்திருந்தாலும் 'மாஸ்' விமானத்தில் பயணிப்பது இதுவே முதல்
முறை. என்னதான் நானே எனக்கு தைரியம் சொல்லி கொண்டாலும் புது இடத்துக்கு
போவதில் ஒரு பயம் இருக்கவே செய்தது. இட்ஸ் ஓகே, இட்ஸ் ஆல் இன் தா கேம் (its
ok, its all in the game) என நானே சொல்லி கொண்டேன். விமானத்திலும் ஏறி
விட்டேன். என் இரு புறத்தில் அமர்ந்தவர்கள் என்னுடன் ஒன்றாக படித்தவர்கள்.
மித்ரா 6 இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார். குரலை மட்டுமே கேட்க
முடிந்ததே தவிர உருவத்தைப் பார்க்க முடியவில்லை.
பயண தொடக்கத்தில் பெரிதாகத் தெரிந்த கட்டிடங்களும் சாலைகளும் விமானம்
மேலெழும் போது கண்ணுக்குத் தெரியாத புள்ளிகளாகி மறைந்து போயிருந்தன. ஒரே
ஒரு அதிருப்தி. எனக்கு ஜன்னல் அருகில் இடம் கிடைக்க வில்லை. அப்போது எனக்கு
அதுதான் பெரிய குறையாக தென்பட்டது. 'மாஸ்' என்பதால் உணவும் கூட இலவசம்.
நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டேன். கண்ணில் ஒரு பொட்டு தூக்கம் இல்லை. பயணம்
நெடுக்க நீலவானமும் வெள்ளை மேகங்களும்தான் கண்ணுக்கினிய காட்சிகள்.
என்னருகில் அமர்ந்திருந்தவர் முதல் முறை விமான பயணமாம். முகத்தில்
மிரட்சியுடனே இருந்தார்.
1 மணி 45 நிமிடம் பயணத்திற்கு பின் சரவாக் மண்ணில் என் பாதம் பட்டது.
மண்ணைத் தொட்டு கும்பிடுவது பற்றி பிறர் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன்.
ஆனால் அது எனக்கு நிகழ்ந்தது இதுவே முதல் முறை. கஸ்டாம் எல்லாம் தாண்டி
வந்து தள்ளுவண்டியில் பயண பைகளை வைத்து தள்ளி கொண்டு 'கூச்சிங்' அனைத்துலக
விமான நிலையத்திலிருந்து வெளியேற ஒரு அடி வெளியே எடுத்து வைத்தேன்.
அவ்வளவுதான். சரவாக் மண்ணைத் தொட்டு கும்பிடவேண்டிய நிர்பந்தம்.
குப்புற விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பார்கள். அங்கு சாம்பல் நிற
பளிங்குக் கல் மட்டுமே இருந்ததால் உண்மையிலேயே எனக்கு மண் ஒட்டவில்லை. சிறு
வயதிலிருந்தே எல்லாவித சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள என்னை நானே தயார்
படுத்தி இருந்ததால் இதுவும் சட்டையில் பட்ட தூசியை போலவே தட்டி விட்டு
எங்கள் குழுவுக்காகக் காத்திருந்த பேருந்தை நோக்கி சென்றோம் நானும்
மித்ராவும் மற்றும் பலரும். எங்களுக்கு தெரிவிக்க பட்டிருந்தது போலவே
பேருந்து சரவாக் அத்தியாயத்தின் முதல் 2 நாள்களை கழிக்க சந்த்துபோங் (Santubong)
உல்லாச விடுதியை நோக்கி நகர்ந்தது...
|
|