|
|
இரண்டாவது காலணித்துவத்தின்
சில காட்சிகள்
1.
நடந்தவைகளைக் கடந்தேகும்
மனவேகம் வாகனத்தைத் தாண்டுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகான பயணம்
சாலைக்கும் எனக்கும்
முதல்படியில் நிற்கும்
சீருடைப் பணியாளன்
மே மாதத்துக்குள் நுழைந்து
பீரங்கி, கண்ணிவெடி, எறிகணை, துப்பாக்கி,
ரத்தம், கண்ணீர், பயம் எனத் தொடர்கிறான்
வாகனம் குலுங்கி நிற்க
'தமிழீழம் வரவேற்கிறது'
என்றொரு காலம்
இங்கிருந்தது
என்றான்.
வெய்யிலுக்கு முகம் சிவந்தது
துப்பட்டாவால் மூடிக்கொண்டேன்
ஏங்கிக் கிடக்கிறது சோதனைச் சாவடி
சிங்களத்துக்குக் கீழே
தமிழ்
வழியெங்கும்
2.
கோட்டையும் காவலுமாய்
கோலொச்சிய
காலத் தடங்கள்
அறுகம் வேரில் அழிந்திருந்தன
குரல்களை மூடிப் படர்ந்திருந்தது
பசுமை.
நடுகல்கள் விசாரணைக்குச்
சென்று விட்டனதென்றனர்
பாதை காட்டும்
முண்டப் பனைகளையும் காணோம்
பாலையில் முளைத்திருந்த
வெள்ளைப் புத்தர்
கார்த்திகைப் பூ
சூடியிருந்தார்
அவரது மௌனத்தில்
புதைந்திருந்த
எனது வன்மம்
பூவின் கங்குகளில்
பற்றியெரிகிறது
3.
கலைக் காட்சியென
விசித்திர வடிவங்களில் சிதைந்த வீடுகள்
மண்டிக் கிடக்கும் புதர்களின் நடுவே
ஈரச்சுவடுகள்
துணியோடு உலரும் முள்முருங்கையில்
எட்டிப் பார்க்கிறது ஒரு தளிர்
முள் குத்தாமல் கம்பியை
லாவகமாகப் பிடித்தபடி
மணிக்கணக்காக முகம் காட்டப்
பழகி விட்டிருந்தனர்
மக்கள்
நொடித்துப் போன நகரின்
மூலை முடுக்கெங்கும்
வானளாவிய
வங்கிப் பதாகைகள்
4.
வாழ்தலையும் அழிதலையும்
முடிந்திருந்த பூமிக்கு
வந்திருந்தது பழைய காற்று
நிறமழிந்திருந்த அதன்
மொழி புதிது
அது படர்ந்துள்ள கொடியும் புதிது
நிலக்கோளில்
மண் அள்ளிச் செல்ல
வந்துள்ள காற்றின்
ஆரத் தழுவலில்
ஒடிகிறது கிழவனின் கைத்தடி
5.
வென்றவரின் வாட்களையும்
அழிந்தவரின் விழிகளையும்
புதைத்தாகி விட்டது
வரலாறு
மதுவிலும் குருதியிலும்
பிறழ்ந்து கிடக்கிறது
கனவுகளைக் கடந்த
வேற்று நிலத்தில்
சாப்பாடு தூக்கம் வேலை
எல்லாம் நேராகிவிட்டதாகச்
சொல்கிறார்கள்
என்றாலும்
பிறந்த இடம் ஈழம்
என்றதும்
முன்னைக்கிப்போது அதிகம்
மிரள்கிறார்கள்.
|
|