|
|
என் மீதான சமீபத்தியக் குற்றச்சாட்டுகள்
-
எப்போதும் கையில் புத்தகத்துடன் இருந்து; என்னை புத்தகப்புழுவாகக்
காட்டுகின்றேனாம்.
-
இந்திரா சௌந்திரராஜன், சுஜாதா, எஸ்.ரா, பிரபஞ்சன் என வந்து தற்போது
கலீல் ஜிப்ரானைப் புகழ்வது என் வாசிப்பின் பலவீனத்தைக் காட்டுகின்றதாம்.
-
தற்போது நான் பழகிக் கொண்டிருக்கும் இலக்கிய வட்டம் ரொம்ப குறுகியதாம்,
இந்த சின்ன வட்டத்தை தாண்டினால்தான் என் சின்னப்பையன் புத்தி மாறுமாம்.
-
இப்போதுப் படித்துக் கொண்டிருக்கும் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘பெண்
வாசனை’ என்ற புத்தகத்திலிருந்து எதையும் கற்க முடியாதாம், அதோடு அதில்
இருப்பவை எல்லாம் அருவருக்கத்தக்க கவிதைகளாம்.
ஒவ்வொரு முறையும் நான் கடந்து செல்லும் இந்த குற்றச்சாட்டுகள் இவை. ஏன் என
யோசிக்கையில் சொன்னவர்கள் மீது கேள்வியினைக் தொடுக்கின்றேன்.
இயலாமையா..?
அக்கரையா..?
பயமா..?
உண்மையா..?
இன்னும்கூட கேள்விகளை அடுக்கலாம்தான்; ஆனால் அவசியம் இல்லையென ஆனபோது
கேள்விகளை வீண்செய்ய வேண்டாம். பதிலை யோசிக்கின்றேன்.
குற்றச்சாட்டு 1
எப்போதும் கையில் புத்தகம் இருப்பது என்ன அவ்வளவு பாவச்செயலா..? கையில்
மடிக்கணினியுடன் சென்றால் கௌரவம், புத்தகத்துடன் சென்றால் ‘அ’கௌரவம் இது
எந்த வகை நியாயம். புத்தகத்தை வெறும் படிக்க மட்டும்
பயன்படுத்துகின்றவர்களுக்கு அதன் மதிப்புத் தெரியப்போவதில்லை. ஆரம்பப்பள்ளி
படிக்கும் சமயம் என்னுடன் படித்த சக மாணவர்கள் கையில் கலர்கலர் கார்டூன்
புத்தகங்களை பார்க்க மட்டும் முடிந்த எனக்கு இரவல் தரவும் யாருமில்லை
வாங்கிக் கொடுக்கவும் வழியில்லை. அப்பாவும் அவ்வபோது எழுதுவது எனக்கு 4ம்
வகுப்பு படிக்கும் போதுதான் தெரிந்தது. அதுவும் தற்காலிகப் பெண் ஆசிரியர்
ஒருவர் மூலம். வீட்டில் அவர் வைந்திருந்த புத்தகங்களை திருட்டுத்தனமாகப்
படித்து, பள்ளி நூல்நிலைய புத்தங்களைத் திருடிவந்து, கொஞ்சம் கொஞ்சமாக பணம்
சேர்த்து தைப்பூசத் தின புத்தகக் கடைகளில் தேடித் தேடி புத்தகம் வாங்கிப்
பழகிய எனக்கு மனித உறவுகளை விட புத்தக வரவுகள்தான் பிடிந்திருந்தது. பல
சமயம் புத்தக்கடைகளில் நுழைந்தால் கடையில் வேலை செய்கின்றவர் “என்ன மாதிரி
புத்தகங்கள் வேணும்” என்றுக் கேட்பதையும் அவரின் உதவியையும் பிடிப்பதில்லை.
தேடித்தேடி வாங்கி பணம் கட்டும் நேரத்தில் கடைக்காரருக்கே அந்தப் புத்தகம்
இருந்த இடம் தெரிந்திருக்காது. அம்மாவும் குறைபட்டுக் கொள்வார் “இப்படி
புத்தகம் வாங்கும் பணத்திற்கு வேற எதையும் வாங்கினா சாமி
கோவிச்சுக்குமா..?” ஒரே பதில்தான் கொடுப்பேன். “அம்மா... இன்னிக்கு வாங்கின
புத்தகம் எனக்கு இந்த இடத்தைக் கொடுத்தது. நான் இன்னிக்கு வாங்கும்
புத்தகம் நாளைக்கு இன்னோரு இடம் கொடுக்கும்”. அன்றிலிருந்து புத்தகம்
குறித்து அம்மா பேசுவதில்லை. அப்பாவும் என்னுடையப் புத்தகங்களை இரவல்
வாங்குவதால், என்னை குறைசொன்னால் ஆபத்து அவருக்குத்தான் என்று அமைதி
காப்பார்.
பள்ளியில் ஒரு முறை; ஆசிரியர் ஒருவர் கேட்டார்
“ஜப்பான்காரனுங்க கழிவறை போகும் போது கூட கையில் பேப்பர் இருக்கும் ஏன்
தெரியுமா..?”
“அவங்க நாட்டில் தண்ணி பஞ்சம் சார்..”
அடிவிழுந்தது சொன்னவனுக்கு. இப்படியாக ஒவ்வொரு முறையும் என்னுடன்
வந்திருந்த புத்தகங்களை நேசிப்பது ஒன்றும் தவறில்லையே. ‘கற்றதும்
பெற்றதும்’-ல் சுஜாதாவிடம் எப்படிப் பல புத்தங்களைப்
படித்துவிடுகின்றீர்கள் என்ற கேள்விக்கு அவர் சொல்லியிருப்பார். வரிசை
நிற்கும் போதும் யாருக்காவது காத்திருக்கும் போதும் பேருந்து பயணங்களின்
போதும் கையில் புத்தகம் இருக்கும். அதிலும் குறிப்பாக எல்லா இடங்களுக்கு
ஒரே புத்தகத்தை எடுத்துச் செல்வதில்லை. வீட்டில் ஒரு புத்தகம் ; படுக்கை
அறையில் ஒரு புத்தகம்; வெளியேச் சென்றால் ஒரு புத்தகம் என இருப்பதாக....
அந்த பதிலைப் படித்ததிலிருந்து நான் செல்லும் வழி சரியெனத்தான்
நினைத்திருந்தேன். சிலருக்காக என் பழக்கத்தை மாற்றப்போவதில்லை.
குற்றச்சாட்டு 2
பலவகை புத்தகங்களைப் படித்துவந்த எனக்கு ஒரு காலக்கட்டத்தில் ஆவிகள்
குறித்து ஆய்வு செய்யலாம் என்ற எண்ணத்தில் உந்துதலால் ஆவிகள் குறித்த
புத்தகங்களை வாங்கினேன். 1999-ல் முதன்முறையாக ஆவிகள் உலகம் என்ற மாத இதழை
தைப்பூசத் தினத்தன்று வாங்கினேன். அதில் தொடங்கி ஆய்வுகள் பல ஆவிகள்
பற்றியப் பல புத்தகங்களை என்னிடம் கொண்டுவந்தது. அதிலும் குறிப்பாக
விக்கிரவண்டி வீ.ரவிச்சந்திரன் என்பவர் எழுதிய புத்தகங்களே அதிகம்.
அதிலிருந்து அவர் எழுதிய ஆவிகள், அமானுஷ்யங்கள்,மறுபிறவி, ஆவி மூலம் நோய்
தீர்க்கும் முறைகள் மற்றும் ஆவிகளுடன் பேசுவது எப்படி? என்ற புத்தகம் வரை
படித்து அவரைக் கொண்டாடினேன் . அப்பாவிடம் தொடங்கி என்னுடன் படிக்கும் சக
தோழதோழியரிடம் அவரைப் பற்றி பேசி, அவர் குறித்த அறிமுகம் செய்தேன். அதனை
அடுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒலியேறிய ‘விடாது கறுப்பு’ நாடகத்தை
விடாது பார்த்து அதன் கதையை எழுதிய இந்திரா சௌந்திர்ராஜன் குறிந்து
அறிந்துக் கோண்டேன். தொடர்ந்து இவர் எழுதிய அமானுஷ்ய ஆன்மீக நாவல்களைப்
படிக்க ஆரம்பித்தேன். வழக்கம் போல நண்பர்களிடம் அவரைப் பற்றியும் அவர்
எழுதி வரும் அமானுஷ்ய கதைகள் குறித்தும் பேசி அவர்களுக்கும் அவர் எழுத்தின்
மீது ஆர்வத்தை கொண்டுவந்தேன்.
சில ஆண்டுகள் கழித்து என் வாசிப்பில் வந்தவர்தான் சுஜாதா. தலைநகருக்கு
வருவதற்கு முன்பாகவே அவரைப் பற்றித் தெரிந்துக் கொண்டேன். பின்னர்
தலைநகரில் சுஜாதாவால் ஈர்க்கப்பட்டேன். அவரை மானாசீக ஆசானாக் கொண்டாடினேன்.
என வலைப்பூவிலும் அவரை பற்றி பதிவுகளைச் செய்தேன். அதன் பிறகு வந்தவர்
எஸ்.ரா. இவர்கள் இருவரைக் குறித்தும் கடந்த கட்டுரைகளான ‘இரு
ஆளுமைகள்’-லில் எழுதியிருக்கின்றேன். அதிலேயே பிரபஞ்சனின் புத்தகம்
குறித்தும் எழுதிவிட்டேன். ‘நாளைய மனிதர்கள்’ என்ற அவரது சிறுகதை
தொகுப்பையும் நான் பார்ப்பவர்களிடமெல்லாம் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.
மூன்றாம் மாதம்; வானொலி நிகழ்ச்சி மூலம் அறிந்த ‘கலீல் ஜிப்ரான்’ என்ற
பெயர் கொண்ட புத்தகத்தை வாங்கினேன். அந்த சமயம் என் வீட்டிற்குச்
சென்றிருந்தேன். கையில் பணம் இருந்ததால் கலீல் ஜிப்ரானின் ‘மனலும்
நுரையும்’ என்ற புத்தகத்தை வாங்கினேன். வீட்டில் கால் மேல் கால் போட்டு
வாங்கிய சில புத்தகங்களில் தேதியையும் என் பெயரையும் எழுதிக்
கொண்டிருந்தேன். அப்போது தங்கையை சந்திக்க ஒரு சிறுமி வந்தாள். தங்கை அந்த
சிறுமியை எனக்கு அறிமுகம் செய்தாள். தங்கையில் செயலில் காரணம் இருப்பதைப்
புரிந்து அந்த பெண்ணுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே கலீல் ஜிப்ரான்
புத்தகத்தில் என் பெயரை எழுதிவிட்டு ஒவ்வொருப் பக்கமாகத்
திருப்பிக்கொண்டிருந்தேன். சட்டென ஒரு பக்கத்தை திருப்பியது அந்த சிறுமியை
நிமிர்ந்துப் பார்த்தேன். உரையாடல் தொடர்ந்தது;
“உண்மையா உங்களுக்கு வயது பத்தா..?”
“ம்”
“ஸ்கூலுக்கு போகலையா..?”
“ம்”
“ஏன்”
“அப்பாகிட்ட காசில்லை”
“அம்மா..?”
“அம்மா இல்லை. எங்கயோ போய்ட்டாங்க..”
“வீட்டில் மொத்தம் எத்தனை பேரு..?”
“நானும் ரெண்டு தங்கச்சியும் இருக்கோம்.”
“அப்பா என்ன வேலை செய்ராரு..?”
“தெரியலையே..”
அந்த சிறுமி வந்த வேலை முடிந்து கிளம்பினாள். தலையை குனிந்தேன் .பக்கத்தில்
எழுதியிருந்தது. ‘நாம் வாழ்ந்தது வெறுமனே இல்லை. நமது எலும்புகளைக்
கொண்டுதானே அவர்கள் கோபுரங்கள் கட்டினார்கள்’ கலீல் ஜிப்ராலின் இந்த
வார்த்தை என்னை மீண்டும் அந்த சிறுமியை நினைக்க வைத்தது. இறந்து
போனர்வகளில் உழைப்பே கட்டிடங்களாகவும் சுவர்களாகவும் கோபுரங்களாகவும்
இருக்கின்றபோது... உயிரோடிருக்கும் என் உழைப்பு எங்கே உள்ளது என
யோசிக்களானேன். அன்று முதல் கலீல் ஜிப்ரான் எழுதியவைகளைத் தேடிப்படிக்க
ஆரம்பித்தேன். ஏதோ உள்ளுணர்வில் அவரின் ஒவ்வொரு வரிகளும் செல்வதாக
உணர்கின்றேன். அவர் குறித்தும் அவரின் மொழிபெயர்ப்பு குறித்தும் சில
நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த சமயம்தான் இந்தக் குற்றச்சாட்டுக்கு
ஆளானேன்.
படித்தையும் பிடித்தவர்களையும் கொண்டாடுவது என்ன தவறா..? கடந்த மாதம்
இணையத்தில் ‘ஆயிஷா’ என்ற குறுநாவலைப் படித்தேன். மனம் கணத்தது. உடனே சில
பிரதி எழுத்து நண்பர்களுக்குக் கொடுத்தேன். நவீனுக்கு போன் செய்து அது
குறித்துப் பேசி அந்த கதையை மின்னஞ்சலில் அனுப்பினேன். முகநூலிலும் அந்த
கதையை பலர் கவனிக்கச் செய்தேன். படித்தவர்களும் தங்கள் நண்பர்களுக்கு
அனுப்பியுள்ளார்கள். ஒரு படைப்பிற்கும் படைப்பாளிக்கும் நாம் கொடுக்கும்
இந்த கொண்டாட்டத்தை விட வேற என்ன ஈடாகும். அதைத்தான் நான் செய்துக்
கொண்டிருக்கின்றேன். புதியவர் வந்ததும் பழையவரை மறக்கவில்லை. ஒவ்வொரு
படைப்பாளரையும் அவரின் படைப்பையும் அறியும் போது அடுத்தக்கட்டத்திற்கு நான்
தயாராவதை வேறு எப்படி அறிய..?
குற்றச்சாட்டு 3
இதற்கு இப்போது பதில் வேண்டாம்.......
குற்றச்சாட்டு 4
டிரகுலா என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நாவலை (நூறாண்டு பழமையான புத்தகத்தின்
மொழிபெயர்ப்பு) படித்து முடித்ததும் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘பெண்
வாசனை’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன். சங்க காலம் முதல்
தற்காலம் வரை பெண்களை எப்படி பாடுகின்றார்கள்; பார்க்கின்றார்கள், பெண்கள்
எப்படி எதனைப் படைக்கின்றார்கள் என்பதை குறித்து எழுத பட்ட தொகுப்பு இந்த
பெண் வாசனை. ஒரு பெண், என் கையில் இந்த புத்தகத்தை பார்த்ததும் நான் ஏதோ
பலானக் கதைகள் படிப்பது போல பார்த்தப் பார்வை இன்னமும் என் நினைவில்
இருக்கின்றது. இவர் பரவாயில்லை புத்தகத்தின் தலைப்பும் அதன் முகப்பும்
வைத்து புத்தகத்தை கணித்திருந்தார். அடுத்து சிலரிடம் இதில் உள்ள கவிதைகள்
குறித்து பேசினேன். எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“முத்தத்தில் துவங்கி
முத்தத்தில் முடியும்
தாம்பத்திய உறவு
எத்தனைப் பேருக்கு வாய்க்கிறது
யாரும் சொல்லாமலேயே
கற்றுக் கொள்கின்றார்கள்
அலுத்துத் தூங்குவதற்கான
உடற்பயிற்சியாய்........”
(வெண்ணிலா - நீரில்லையும் முகம்)
இந்த கவிதையினைப் படித்ததும்; சொல்லப்படும் கருத்து என்னை பாதித்தது.
காதலும் காமமும் மாறுபடும் விதத்தை இதன் வழி என்னால் உணர முடிந்தது. இதை
சில நண்பர்களுடன் பகிரும் போது உடனே முகம் சுழித்துவிட்டார்கள். ஏன் இது
என்ன அவ்வளவு இழிவானக் கருத்தா..? இதற்கே இப்படியென்றால் ‘பெண் வாசனை’ உள்ள
மற்றொரு கவிதையின் நிலையை நான் சொல்லவேண்டாம். இன்னொரு பெண்ணுடன் இல்லறம்
செய்பவராக தன் உணர்வுகளை கவிதையாய் எழுதியிருந்தார் தோமியோ இசிதா ‘சிவப்பு
நிறம்’ கலப்பு ஆசியக் கவிஞர்.
இந்த பெண் வாசனைக்கு பின் பெண்கள் மீதான மதிப்பும் அக்கரையும்
அதிகரித்திருக்கின்றதே தவிர குறையவில்லை. ஆனாலும் என் மீது குற்றாச்சாட்டு
. இந்த மாதிரி புத்தகங்கள் என் இலக்கியத்தை வளர்க்காதாம். இப்படி
சொல்கின்றவர்கள். எதையெல்லாம் படிக்கின்றார்கள் என கேட்டால்; ஒரே பதில்
“நீங்க பரவாயில்லை...நேரம் இருக்கு படிக்கறிங்க... எனக்கு அப்படியா...”
உடனே “போதும் வாயை மூடுங்க” எனச் சொல்லத்தான் ஆசை என்ன செய்வது, வயது
வித்தியாசப்படுகின்றதே... ஆனால் எல்லா நேரமும் வயது வித்தியாசப்படும் என
நான் உறுதி கூற முடியாது.
|
|