|
|
2011-ஆம் ஆண்டின் மே தினத்தில் மலேசிய தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சனைகளை
ஒட்டி ஒரு கட்டுரையைத் தமிழில் படிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
கோரிக்கை என்பதை விட கட்டளை என்பதுதான் சரி. நான் முடிந்த வரை தவிர்க்கப்
பார்த்தேன். என்னுடைய போதாமைகளைச் சொன்னேன். நான் இவரைப் போன்று சிலரைப்
பார்த்திருக்கிறேன். அவர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் இருப்பது சிரமம்
என்பது போன்ற தொனி இயல்பாகவே அவர்களின் பேச்சில் இருக்கும்.
நான் வேறு வழியில்லாமல் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் எழுத்தாளர் சாமி
மூர்த்தி மற்றும் ஜிவி காத்தையா போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டேன். பொதுவாக
தோட்டத் தொழிலாளர்களை ஒட்டிய பிரச்சனையை எடுத்துக் கொள்ளலாம் என ஆலோசனை
தந்தார்கள். முன்னாள் மஇகா தலைவர் துன் சம்பந்தன் சொன்ன ‘குருவிக்கும் கூடு
உண்டு, நமக்கு வீடில்லையே’ என்ற சொற்றொடர் நினைவுக்கு வந்தது.
மலேசியாவிலுள்ள இந்திய தோட்டத் தொழிலாளிகளின் வீடமைப்பு பிரச்சனையைப் பற்றி
கட்டுரை எழுதலாமென முடிவெடுத்தேன்.
தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியபோதுதான் அதன் விரிவு புரிந்தது.
அதுமட்டுமல்லாமல் மலேசியா அளவில் பிரச்சனையைப் பார்க்க தரவுகளும்
போதவில்லை. நேரம் நெருங்க நெருங்க மலேசியா சிலாங்கூராக சுருங்கி போனது.
சுவாராம் நளினி போன்றவர்களின் உதவியோடு ஒருவாராக கட்டுரையை
முடித்திருந்தேன். திரு. மோகன் கேட்டுகொண்டதற்கிணங்க மலாய் மொழியிலும்
கட்டுரையை மொழி பெயர்த்தேன்.
திரு. மோகன் நிகழ்வுக்கு ஒரு நாள் முன்பே வரச் சொல்லியிருந்தார். கூடவே
தோழியையும் அழைத்து வரச் சொல்லியிருந்தார். தங்க ஒரு வசதியான தங்கும்
விடுதியும் ஏற்பாடு செய்திருந்தனர். சரி அப்படியே பக்கத்தில் உள்ள
சிங்கபூருக்கும் போய்வரலாம் என உபத் திட்டம்.
நிகழ்விற்கு ஒரு நாள் முன்பே ஜொகூரை அடைந்தோம் நானும் தோழியும். திரு.மோகன்
அவரது செம்பருத்தி இயக்கம் இயங்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரது ஆசிரியை மனைவியான திருமதி சாந்தா பிள்ளைகளுக்குப் பாடம்
எடுத்துக் கொண்டிருந்தார். அலுவலக வாடகைக்காக டியுசன் செய்ய வேண்டியுள்ளது
என்றார். நிகழ்வு மும்மொழியில் நடப்பதால் மற்ற மொழி கட்டுரைகளையும்
மொழிபெயர்க்கும் பணியில் இருவரும் இருந்தனர். சீன மொழிக்கு இருந்த ஆள்பலம்
தமிழுக்கு இல்லை என மோகன் சொன்னார். பக்கத்தில் இருக்கும் பல்கலைக்கழக
இந்திய மாணவர்களிடமிருந்து சமூக சார்ந்த நடவடிக்கைகளில் உதவிகள் பெறுவது
சிரமமாகவும் இருப்பதாகவும் கூறினார். தற்போது சீன மொழிபெயர்ப்பை செய்து
கொண்டிருப்பவர்களெல்லாம் அப்பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் சீன
மாணவர்கள்தானாம்.
சிங்கப்பூருக்கு முதல் முறை என்பதால் வழிகாட்டியாக நண்பரை ஏற்பாடு செய்வதாக
சொல்லியிருந்தார் திரு. மோகன். எனக்கு சிங்கபூரில் நெருக்கமாகத் தெரிந்தவர்
திரு. இளங்கோவன் மட்டும்தான். திரு. கண்ணப்பிரான் அவர்கள் ஒரு முறை
சந்தித்தும் அவ்வப்போது தொலைபேசியில் பேசியும் பழக்கம். எனக்கு
சிங்கப்பூரில் அதிகமாக சுற்றிப் பார்க்கும் மனநிலை இல்லை. ஒன்றிரண்டு
இடங்களைப் பார்த்துவிட்டு இளங்கோவன், கண்ணப்பிரான் இருவரையும் காண
முடிந்தால் கூட போதும் என்று நினைத்தேன்.
விடுமுறையாதலால் பாலத்தில் பெரும் நெரிசல். சிங்கபூரின் பேருந்து
நிலையத்தையடையவே மதியம் ஒன்றாகிவிட்டது. காலையில் இளங்கோவனின் தொடர்பு
கிடைக்கவில்லை. கண்ணபிரான் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அவருக்கு
அன்று நீரிழிவு பரிசோதனை இருந்தது. எவ்வளவு சொல்லியும் எனக்காக அதை ரத்து
செய்துவிட்டு வந்திருந்தார்.
மதிய உணவிற்குப் பின் அருகிலிருந்த கலைக் கூடம், கிருஷ்ணன் கோவில் எல்லாம்
பார்த்துவிட்டு நூல் நிலையத்தை நோக்கி நடந்தோம். நேர்த்தியாக
கட்டப்பட்டிருந்தது நூல்நிலையம். மக்கள் கூட்டம் கணிசமாக இருந்தது.
நூல்நிலையத்தின் மேல் மாடியிலிருந்து சிங்கப்பூர் முழுவைதையும்
பார்க்கலாம். புதிதாக கட்டப்பட்ட சூதாட்ட மையத்தையும் பார்க்க முடிந்தது.
சிங்கப்பூரர்கள் அங்கு செல்ல 100 டாலர் நுழைவு கட்டணம் இருப்பதாக
கண்ணப்பிரான் சொன்னார். அங்கு செல்வதற்கு தடுக்கும் வழியாம். அருமை என
நினைத்துக் கொண்டேன்.
பிறகு 5 மணி அளவில் இளங்கோவன் வந்து சேர்ந்தார். முஸ்தாபாவில் தோழி உடைகள்
வாங்கினார். 7 மணி அளவில் இளங்கோவனுக்கு நெருக்கமான இரவு விடுதிக்கு
சென்றோம். கண்ணபிரானுக்கு கோப்பியும் தோழி ஆரஞ்சு சாறும் அருந்தினர்.
இளங்கோவனுக்கும் எனக்கும் பீர். தரமான அதிகம் நீர் கலக்கப்படாத பீர்.
பொதுவாக இலக்கியம், அரசியல், என எங்குமே நிற்காமல் பேச்சு மட்டும் தள்ளாடி
சென்றது. இரவு பதினொரு மணிக்கு கிளம்பி 1 மணி அளவில் ஜொகூரில் நாங்கள்
தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். பயணக் களைப்பு, பீர் இரண்டும் நல்ல
தூக்கத்திற்கு வழிவகுத்தது.
காலையில் 11 மணி அளவில் மோகனின் நண்பரும் விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான
திரு. செல்வராஜா எங்களை நிகழ்வு நடந்த ஸ்துலாங் லாவுட் பகுதியில் உள்ள
ஃபூன் யு சீன இடைநிலைப்பள்ளி அரங்கத்திற்கு அழைத்துச் சென்றார். அதை
இடைநிலைப்பள்ளி என்றே நம்பமுடியவில்லை. கல்லூரி போல அத்தனை வசதியும்
இருந்தது.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள்:
1. செம்பருத்தி தோழர்கள்
2. ஒடுக்கப்பட்ட மக்கள் அணி (ஜெரிட்)
3. எல்.எல்.ஜி கலாச்சார மேம்பாட்டு மையம்
4. சுவாராம்
நிகழ்வு மும்மொழியிலும் நடக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நூற்றுக்கும் அதிகமான பல்லின மக்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார். நான்
தமிழில் ‘நாங்கள் கேட்பது வீடு மட்டுமே’ என்ற தலைப்பில் பேசினேன். (முழு
கட்டுரையைப் படிக்க :
http://syuvarajan.com/?p=897). ஜொகூரின் முக்கிய மனித
உரிமை இயக்கவாதியும் வழக்கறிஞருமான பி.கெ.யாங் ‘மலேசியா இந்தியர்களின்
போராட்டம்’ என்ற தலைப்பில் திரு.ஜானகிராமனின் நூலை ஒட்டி சீனத்தில்
பேசினார். தொடர்ந்து மலாய் கவிஞர் அமின் ஜகாட் மலாய் மொழியில் தொழிலாளர்கள்
ஒற்றுமையை கோரி இனவாததை மறுக்கும் வகையில் அமைந்த கவிதையை உணர்ச்சிபூர்வமாக
வாசித்தார். இவை எல்லாம் ஏற்கெனவே மும்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பேசிக்
கொண்டிக்கும்போது இருபக்கமும் இரண்டு வெண்திரையில் காட்டப்பட்டன.
பல்லின மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் தமிழில் பேசியது நிச்சயம் மறக்க
முடியாத அனுபவம். இந்திய பிரச்சனைகளை சீனர் சீன மொழியில் பேசியது கேட்க
புரியாவிட்டாலும் நெகிழ்வாக இருந்தது. மலாய்காரர் அனைவருக்குமாக கவிதை
பாடியது உற்சாகமாக இருந்தது.
நிகழ்வு முடிந்ததும் பல புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது. சீனர்கள்
இந்திய தொழிலாளர்களின் பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம்
காட்டினர். முக்கியமாக ச்சூ என்ற சீன நண்பர். அவர்தான் அவை தலைவராக
இருந்தார். நெடுநேரம் நடப்பு அரசியலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இந்தியர்களின் அரசியலை என்னைவிட இன்னும் அவர் அதிகமாக தெரிந்து
வைத்திருப்பது போல் இருந்தது. அவர் பொறியாளராக இருக்கிறார். அவருடன் படித்த
முன்னாள் பல்கலைக்கழக நண்பர் குழு ஒன்று இன்னும் இருக்கிறதாம். வாரத்தில்
இரண்டு முறை சந்தித்து நடப்பு அரசியல. பொருளாதாரம், சமூக நிகழ்வுகளில்
ஏதாவதொரு தலைப்பில் உரையாடுவார்களாம்.
இனவாத அரசியல் மலேசியாவிற்கு கொண்டு வரப்போகும் பாதகங்களைப் பற்றி
பேசினோம். நடப்பு தேசிய முன்ன்ணி அரசு வெற்றிக்கரமாக இதை 60 ஆண்டுகள்
செய்துவிட்டது. வர்க்க ரீதியாக மக்களை இணைக்கும் சாத்தியங்களை நோக்கி நாம்
முன்னகர வேண்டுவதைப் பற்றி சிந்தித்தோம். அதன் தொடக்க அடியாகத்தான் பல்லின
தொழிலாளர்களை உள்ளடக்கிய மே தின விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே கோலாலும்பூரில் மேதின விழா பேரணி
நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மலேசிய சோசியலிஸ்ட் கட்சியினர் பற்றி
செய்தி வந்து கொண்டிருந்தது. அருட்செல்வனை தவிர மற்றவர்கள்
விடுவிக்கப்பட்டதாக ச்சூ சொல்லிக் கொண்டிருந்தார். ஏதோ திருட்டு சம்பவம்
தொடர்பாக அவர் மட்டும் தடுத்து வைக்கப்பட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் அப்போதுதான் சாப்பிட்டு முடித்திருந்தேன். நிரம்பியிருந்தது வயிறு
மட்டுமல்ல.
|
|