முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 30
ஜூன் 2011

  மே மாதம் : அமெரிக்கா, சிங்கப்பூர் , தமிழ்நாடு
கெ. எல்.
 
 
       
நேர்காணல்:

“பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்”

தீபச்செல்வன்



பத்தி:

மே தினம் 2011 : பல்லின சங்கமத்தில் ஒரு நாள்
சு. யுவராஜன்

மே மாதம் : அமெரிக்கா, சிங்கப்பூர், தமிழ்நாடு
கெ. எல்.



புத்தகப்பார்வை:

பறவையின் தடங்கள் : மலாய் மொழிக்கவிதைகள்
பாவண்ணன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...12
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...20

ஷம்மி முத்துவேல்

வீ. நித்தியா

ஏ. தேவராஜன்



எதிர்வினை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 2011ம் ஆண்டின் சிறப்புப் பற்றியும் மே மாதத்தின் சிறப்புப் பற்றியுமான கூட்டு மின்னஞ்சல்களில் எக்கச்சக்கமாகப் பரிமாறப்பட்டன. 5 ஞாயிறுகள், 5 திங்கள்கள், 5 செவ்வாய்களைக் கொண்டிருந்த மே மாதம் அதிர்ஷடமான மாதம் என்றும் வர்ணிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு கிட்டத்தட்ட 823 ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஏற்படும் என்று கூறப்பட்டது. இதுபோன்ற எண் சிறப்புகளையும் மீறி, திருப்புமுனைகள் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாதமாக அமைந்துவிட்டது 2011ம் ஆண்டின் மே மாதம்.

திருப்புமுனைத் தேர்தல்கள், அதிரடி அரசியல் நடவடிக்கைகள், அதிர வைக்கும் செய்திகள் என்று அரசியல் சரித்திரம் படைத்து, மறக்க முடியாத மாதமாக நிலைபெற்று விட்டது மே மாதம்.

ஒபாமாவின் கணக்கும் ஒசாமாவின் கதையும்

மாதத் தொடக்கத்திலேயே உலகப் பயங்கரவாதியான ஒசாமா பின் லாடனைக் கொன்று அதிர்ச்சி அலையைத் தொடங்கி வைத்தது அமெரிக்கா. மே மாதம் 2 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் ஓசாமா பின் லாடன் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்த முக்கிய இடத்திற்கு அருகில் பெரிய வீட்டில் மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வந்த ஒசாமாவை ரகசியக் கடிதம் கொண்டு சென்ற ஒருவர் மூலம் கண்டறிந்து, அவரைக் கொல்ல ரகசியமாத் திட்டம் தீட்டி, உலகின் சிறந்த உளவுத் துறைகளில் ஒன்றாகக் கருதப்படும் பாகிஸ்தான் உளவுத் துறைக்குக்கூடத் தெரியாமல், மிக கமுக்ககாக தீர்த்துக் கட்டியதோடு அடையாளமே இல்லாதபடி நடுக்கடலில் தூக்கிப் போட்டி கதையை முடித்துவிட்டது.

அமெரிக்க டாலரின் மதிப்பும் அதிபர் ஓபாமாவின் மதிப்பும் குறைந்துகொண்டே வந்த சமயத்தில், தகுந்த நேரம் பார்த்து ஓசாமாவின் முடிவை அரங்கேற்றியது அமெரிக்கா. உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றான ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கும் இந்நேரத்தில் அடிக்கிணற்றில் இருந்து விறுவிறுவென்று மேலே ஏற வரிசையாகக் காய்களை நகர்த்த அமெரிக்கா ஆரம்பித்து விட்டது.

அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல ஏறத் தொடங்கியிருக்கும் அதேநேரத்தில் எண்ணெய் விலை ஏற்றமும் மட்டுப்படத் தொடங்கியிருக்கும். சூட்டோடு சூடாக மத்திய கிழக்குப் பேச்சு வார்த்தையில் இறங்கிவிட்டார் அதிபர் ஒபாமா.

மத்திய கிழக்குக் குட்டை கலங்கிக் கிடக்கும் இந்தத் தருணத்தைவிட, பாலஸ்தீன் -இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண சரியான நேரம் வாய்க்க முடியாது. பாலஸ்தீனத்துக்குச் சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்றால், அதைச் சுற்றியுள்ள நாடுகளில் சர்வவல்லமை பொருந்திய ஆட்சி பீடங்கள் இருக்கக்கூடாது என்பது இஸ்ரேலினதும் உலகின் மூளைகளாகச் செயல்படும் இஸ்ரேலியர்களினும் விருப்பம்.

எகிப்தின் ஏகாதிபத்தியம் சிதைந்து விட்டது. லிபியாவின் இரும்புக் கோட்டையும் வெகுவிரைவில் பிளக்கப்பட்டு விடும். அதன்பிறகு மற்ற நாடுகளையும் பெரும் சக்திகளால் மெல்லச் சரிப்படுத்தி விட முடியும்.

அமெரிக்காவின் வல்லமையை மீண்டும் உலக அரங்கில் நிலைப்படுத்தும் அதேநேரத்தில் அமெரிக்க அதிபரின் நிலையையும் உறுதிப்படுத்தும் முயற்சிகளையும் முடுக்கிவிட முதல் சொடுக்கே படு ஆழமாக விழுந்துள்ளது.

திகைக்க வைத்த சிங்கப்பூர் மக்களும் அரசியல்வாதிகளும்

சொர்க்க பூமி, உல்லாச புரி என்றெல்லாம் உலகப் பயணிகளால் வர்ணக்கப்படும் சிங்கப்பூரின் ஜனநாயகம், மக்களின் சுதந்திரச் சிந்தினைகள் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்!

எல்லாமே சீராகவும், ஒழுங்காகவும் காணப்படும் சிங்கப்பூரில் மூச்சு முட்டச் செய்யும் ஒரு அழுத்தமும் இருப்பதை சுதந்திர வாழ்வைச் சுவாசித்தவர்களால் உடனடியாக உணர முடியும். அசைக்க முடியாத அரசு, மாற்றத்துக்குப் பயப்படும் மக்கள் என்றிருந்த சிங்கப்பூரின் அண்மைய பொதுத்தேர்தல் உலக நாடுகளையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

மே 7ம் தேதி நடந்து முடிந்த சிங்கப்பூரின் திருப்புமுனை பொதுத் தேர்தல் சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக சிங்கப்பூர் 1959 ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்றது முதல் ஆட்சி செய்து வரும் மக்கள் செயல் கட்சி, அமைச்சரவையிலும் அரசியலிலும் கட்சி மறுசீரமைப்பிலும் அதிரடி மாற்றங்களை அசுர வேகத்தில் மேற்கொண்டு வருகிறது.

இந்தத் தேர்தலில் மக்கள் செயல்கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 60.1%. 2006ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிடைத்த 66.6% விட இது குறைவு. சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த 1965ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவில், ஆறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

சிங்கப்பூரின் 87 நாடாளுமன்ற இடங்களில் 82 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அதில் மக்கள் செயல் கட்சி 76 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் பாரம்பரியத்திலும், செயல்பாட்டிலும் ஏற்பட்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இது பெரிய இடி.

இந்தத் தேர்தலில் தகவல் தொடர்பு சாதனங்களிலும் சமூக ஊடங்களிலும் இணையங்களிலும் விவாதங்களிலும் கருத்தாடல்களிலும் வெளிப்படையாகவும் வியக்க வைக்கும் அளவுக்கு மக்களின் ஈடுபாடு இருந்தது. குறிப்பாக இளையர்களின் ஈடுபாடு. இந்தத் வாக்களித்த 2,211,102 சிங்கப்பூரர்களில் வாக்களித்தனர். கிட்டத்தட்ட 200,000 பேர் 21 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள், முதல் முறையாக வாக்களித்தவர்கள்.

சுதந்திரத்திற்கு பின்னரான சிங்கப்பூரின் அரசியல் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், மக்களின் இந்த எழுச்சியும் ஆட்சியாளர்களின் விழிப்புணர்வும் மிகவும் புதியது.

சிங்கப்பூர் 12 தனித் தொகுதிகளாகவும் 15 குழுத் தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தனித் தொகுதியில் ஒருவர் போட்டியிடுவார். குழுத் தொகுதியில் நான்கு முதல் ஆறு பேர் வரை குழுவாகப் போட்டியிடுவார்கள்.

குழுத் தொகுதி என்பது சிங்கப்பூரில் மட்டுமே உள்ள சிறப்பம்சம். இந்தியர், மலாய்க்காரர் போன்ற நாட்டின் சிறுபான்மையினத்தவரும் நாடாளுமன்ற உறுப்பினராக வாய்ப்பளிக்கும் வகையில் இந்தக் குழுத் தொகுதி முறை உருவாக்கப்பட்டது.

மொத்தம் 87 நாடாளுமன்ற இடங்கள். இதில் 82 இடங்களுக்கு மட்டுமே போட்டி இருந்தது. தஞ்சோங் பகார் குழுத் தொகுதியில் போட்டி இருக்கவில்லை. எனவே அங்கு போட்டியிட்ட மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர்களான திரு லீ குவான் இயூ உட்பட, ஐந்து பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.

புதிய அமைச்சரவை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, நவீன சிங்கப்பூரின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவரான லீ குவான் இயூ அமைச்சரவையில் இருந்து விலகினார். மக்கள் செயல் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவரான லீ குவான் இயூ 1959 முதல் 1990 வரை சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். பின்னர் மூத்த அமைச்சராகவும் மதியுரை அமைச்சராகவும் இருந்தார். திரு லீயுடன் முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான கோ சோக் டோங்கும் அமைச்சரவையில் இருந்து விலகினார்.

அரசியல் கணிப்பாளர்கள் எவருமே கணிக்காத, எதிர்பார்க்கப்படாத மாற்றங்களுடன் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. அமைச்சரவை சுருங்கியது. 14 அமைச்சுகளில் 11ல் புதிய அமைச்சர்கள். முன்னைய துணைப் பிரதமர் வோங் கான் செங், தேசிய வளர்ச்சி அமைச்சர் மா போ டான், போக்குவரத்து அமைச்சர் ரேமண்ட் லிம் ஆகிய மூவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

இந்தத் தேர்தலில் சிங்கப்பூர் மக்களின் அக்கறைக்குரிய விஷயங்களாக, பொது வீடமைப்பு, போக்குவரத்து, பாதுகாப்பு, வெளிநாட்டுநர் அதிகரிப்பு போன்றவை அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு முன்னதாக அரசின் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்ட பிரதமர் லீ சியன் லூங், தேர்தலுக்குப் பிறகு அரசாங்கம் மக்களின் அக்கறைக்குரிய அம்சங்களில் அதிக கவனம் செலுத்தும் என்று உறுதி கூறியிருந்தார். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார். அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் மக்களின் கருத்துகளைக் கேட்பதிலும், நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சினைகளையும் அக்கறைகளையும் நேரில் தெரிந்துகொள்வதிலும், சுறுசுறுப்பாக முனைந்துள்ளனர்.

அத்துடன் சர்ச்சைக்குரிய அமைச்சர்களின் சம்பளங்கள் குறித்தும் ஆராய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிக சம்பளம் பெறும் அமைச்சரவையாக சிங்கப்பூர் அமைச்சரவை உள்ளது. ஊழலையும் லஞ்சத்தையும் தடுக்கும் வகையில் அதிகமாக சம்பாதிக்கும் ஆறு துறைகளைச் சேர்ந்தவர்களின் சராசரி சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு என்ற நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2009ம் ஆண்டில் அமைச்சர்கள் $1.57 மில்லியனிலிருந்து $3.04 மில்லியன் வரை சம்பளம் பெற்றதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

புதிய அமைச்சரவை பதவியேற்று இரு வாரங்கள் நிறைவடைவதற்குள்ளாகவே புதிய கொள்கைகள், திட்டங்கள், முயற்சிகளை அறிவிக்கப்படத் தொடங்கிவிட்டன.

முன்னுதாரண நாட்டின் முன்னுதாராண அரசு என்பதைக் கட்டிக்காப்பதில் பொறுப்புடனும் அக்கறையுடனும் செயல்படத் தொடங்கியுள்ளது மக்கள் செயல் கட்சி. கிணற்றில் போட்ட கல்லாகக் கிடந்த சிங்கப்பூரின் அரசியல், உலகம் உற்றுநோக்கத் தக்கதாக மாறிவிட்டது.

அரசியல் சாணக்கியத்தைத் தோற்கடித்த தமிழக மக்கள்

மற்றொரு திருப்புமுனை தேர்தல் தமிழகத்தின் 2011 சட்டமன்றத் தேர்தல். இந்தியாவின் தலை சிறந்த அரசியல் சாணக்கியர்களில் ஒருவராகக் கருதப்படும் திராவிட முன்னேறக் கழகத்தின் தலைவரான மு.கருணாநிதியின் ராஜதந்திரங்களையும் அனுமானங்களையும் பொய்யாக்கி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் கழகத் தலைவியான ஜெ.ஜெயலலிதாவுக்கு அவர் கனவிலும் நினைத்துப் பார்க்க அறுதிப் பெரும்பான்மையை அளித்துள்ளனர் தமிழ் நாட்டு மக்கள்.

தமிழக மக்களின் மௌனப் புரட்சியை அனுமிக்க அரசியல் அவதானிப்பாளர்களோ ஆற்றல் மிக்க ஆரூடர்களோ எவருமே கணித்திருக்கவில்லை. மே மாதம் 13ம் தேதி வெளிந்த தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்த்திராத ஒன்று.

வரலாற்று சாதனையாக இந்தத் தேர்தலில் 78% மக்கள் வாக்களித்துள்ளனர். பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரும்பான்மை வெற்றியை ஒரு கட்சி பெற்றுள்ளது. சட்ட மன்றத்தின் 234 இடங்களில் 203 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது. இதில் அதிமுக மட்டுமே போட்டியிட்ட 160 இடங்களில் 146 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக வெறும் கூட்டணி 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பெரும் வெற்றியோடு பெரும் பொறுப்பையும் ஜெயலலிதா தலையில் மக்கள் சுமத்தியுள்ளனர். ஊழலை ஒழித்து; குடும்பத்தினருக்கும் வேண்டியவர்களுக்கும் சலுகைகள் அளிக்கப்படும் அரசியல் போக்கை மாற்றி, சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்தி, மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றி, திறனாளர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் சமூகத்தில் உரிய இடத்தை அளித்த, நேர்மையான நியாயமான ஆட்சி முறையைக் கொண்டு வரும் மிகப் பெரும் கடமை அவர் முன்னே உள்ளது.

அதிமுக தலைவி ஜெயலலிதா முன்புபோல் இல்லை; அவர் மிகவும் மாறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் தன்னை விட வாக்காளர்கள், பொதுமக்கள் இன்னும் மாறிவிட்டார்கள் என்பதை உணர்ந்துகொள்ளும் அளவுக்கு அவர் மாறி இருக்கிறாரா என்பதைக் கணிக்க இன்னமும் சம்பவங்கள் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், சுய வருமானத் திட்ட மேம்பாடு, மருத்துவக் காப்புறுதித் திட்டம், ஆம்புலனஸ் சேவை போன்ற திமுக செய்த சாதனைகளை மறுப்பதற்கில்லை. இரண்டு ரூபாய்க்கு அரிசியும் குறைந்த விலையில் பருப்பும் அளித்து அனைந்திந்திய அளவில் பரபரப்பை ஏற்படத்தியது திமுக. இலவச டிவி திட்டமும் திமுகவின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எனினும் சாதனைகளை மிஞ்சி, எல்லை கடந்து போன ஊழலும் குடும்ப ஆட்சி முறையும் மக்களை வெறுப்படைய வைத்துவிட்டது. பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று எண்ணியிருந்த திமுகவை மண்ணைக் கவ்வ வைத்தனர் தமிழக மக்கள்.

பணத்தையும் இலவசங்களையும் அள்ளிக் கொடுத்து வாக்காளர்களை விலைகொடுத்து வாங்கும் போக்கையும் வளர்த்த திமுக, அதில் அசையாத நம்பிக்கையைக் கொண்டிருந்தது. ஆனால் உடனடி லாபங்களுக்கும் வெறும் உணர்ச்சிபூர்வமான சிந்தனைக்கும் பற்றுக்கும் அடிமையாக தமிழ் நாட்டின் புதிய தலைமுறை தயாராக இல்லை.

மூன்றாவது தடவையாக தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்று இருக்கும் ஜெயலலிதா இதை உணர்ந்து செயல்பட்டால், நீடித்திருக்க முடியும். இல்லாவிட்டால், இன்று பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்ற அதே மக்கள் ஒரே நிமிடத்தில் தூக்கி எறியும் தயங்க மாட்டார்கள்.

தமிழக மக்களின் இந்த எழுச்சி, இந்தியாவெங்கும் வாழும் மக்களிடம் குறிப்பாக இளையர்களிடமும் கனன்று கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் எதிர்கால வரலாறு ஊழலை எதிர்த்துப் போராடும் சமூகவாதியான அன்னா கசாரே போன்றவர்களால் எழுதப்படும் என நிச்சயம் நம்பலாம்.

தி.மு.க.

திமுகவின் படுதோல்விக்கான காரணங்களின் முக்கியமாகக் கருதப்படுவது ஸ்பெக்டரம் ஊழல் விவகாரம். இந்தப் பிரச்சினையைத் திமுகவுக்கு எதிரான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, திமுகவை கிடுக்குப் பிடிக்குள் வைத்துள்ளது காங்கிரஸ். மத்திய அமைச்சரவையின் தனது பலத்தைப் பயன்படுத்தி, காங்கிரஸை ஆட்டி வைத்து வந்தார் கருணாநிதி. தனது குடும்பத்தினருக்கும் வேண்டியவர்களுக்கும் அமைச்சர் பதவிகளைப் பெற்று தந்ததுடன் சுயநலத்துக்காக பல காரியங்களையும் சாதித்து வந்துள்ளார். இப்போது காங்கிரஸ் தரப்பில் ஆட்டம் நடக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதுமே கனிமொழி கைது செய்யப்பட்டார். அவருக்கு இன்று வரை (ஜூன் 1) ஜாமீன் கிடைக்கவில்லை. அவரது ஜாமீன் மனுவும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தின் மிக பரபரப்பான விஷயங்களில் ஒன்று கனிமொழி கைது.

கைத்தொலைபேசி, கணினிக்கு இணைப்பு வழங்கும் 2ஜி அலைக்கற்றை சேவைக்கான உரிமம் வழங்குதில் ஊழல் முறைகேடுகள் நடந்ததால் இந்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இதை அம்பலத்துக்குக் கொண்டு வந்தவர் தலைமைக் கணக்குத் துறை அதிகாரி வினோத் ராய். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்தே இந்த விவகாரத்தில் விசாரணை சூடு பிடித்தது. இதனால் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது.

இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் மத்திய புலன் ஆய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம்ஸ் நிறுவனம். அதன் ஒரு அங்கமான சினியுக் நிறுவனம் வாயிலாக கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணத்தை பரிவர்த்தனை செய்தது என்பது சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டின் பேரில்தான் கலைஞர் டிவியின் இயக்குநராக இருந்த கனிமொழியும் சரத்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ரூ. 1.76 லட்சம் கோடியில் வெறும் 200 கோடி பற்றி மட்டுமே தற்போது பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் மீதி தொகை எங்கே போனது, யார் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்பது பற்றியெல்லாம் மெல்ல மறைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் மேலிடத்துக்குத் தெரியாமல், அமைச்சரவையின் முக்கிய புள்ளிகளுக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை சாதாரண ஒரு குடிமகனால்கூட புரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த ஊழில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படும் அம்பானி போன்ற மிகப் பெரும் தொழில் அதிபர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா என்பது கேள்விக்குறிதான். இந்தியாவும் அரசியலும் ஊழலும் தனியாக அலசப்பட வேண்டிய பிரச்சினை.
 
கனிமொழி கைது

கலைஞரின் இரண்டாவது மனைவியான ராஜாத்தி அம்மாளின் ஒரே மகளான கனிமொழி கலைஞரின் கடைக்குட்டி, செல்லப்பெண். கனிமொழி பிறந்தபின் தான் கருணாநிதிக்கு அதிர்ஷ்டம் வந்தது என்றும் அதன் பின்னர்தான் அவர் முதலமைச்சர் ஆனார் என்றும் பகுத்தறிவுவாதிகளான திமுகவினர் சொல்வார்கள்.

கலைஞரின் இலக்கிய வாரிசு என்று வர்ணிக்கப்பட்ட கனிமொழி, மென்மையான சுபாவம் கொண்டவர். இனிமையாகப் பழகுபவர். பக்கத்து வீட்டுப் பெண்போல் எல்லாரிடமும் சகஜமாகப் பேசிப் பழகக்கூடியவர். அதனால் கலைஞரின் மற்ற பிள்ளைகள் பெற்றிராத செல்வாக்கையும் ஒரு வித பாசத்தையும் மக்களிடமும் ஊடகங்களிடமும் அவர் பெற்றிருந்தார்.

பிராமணிய எதிர்ப்பு போன்ற திமுகவின் சித்தாந்தங்களால் மேட்டுக்குடியினரின் ஆதரவு திமுகவுக்கு இருப்பதில்லை. ஆனால் கனிமொழி இந்தத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.

இலக்கிய ஆர்வமும் கர்நாட இசை மற்றும் கலைகளில் அவரது ஈடுபாடும், ஸ்டாலின், அழகிரி மற்றும் கலைஞர் குடும்பத்தினர் நெருக்கம் பெற்றிராத தரப்பினரிடமும் அவரை பிரபலமாக்கியது. மேலும் தமிழினத் தலைவர் என போற்றப்படும் கருணாநிதிகூட, மௌனமாக இருந்த நிலையிலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் கனிமொழி காட்டிய அக்கறை அவருக்கு உலகத் தமிழர்களிடமும் மதிப்பை ஏற்படுத்தியது.

ஹிந்து நாளிதழிலிலும் சிங்கப்பூர் தமிழ் முரசிலும் பணிபுரிந்துள்ள கனிமொழி, பத்திரிகையாளர்களைக் கவரும் லாவகத்தையும் நன்கு அறிந்தவர். மேலும் தமிழுடன் ஆங்கில மொழியிலும் அவருக்குள்ள ஆற்றல், தமிழ் ஊடகங்களுடன் ஆங்கில ஊடகங்களையும் கையாள அவருக்கு உதவுகிறது. கருணாநிதியின் மனைவி உட்பட, அவரின் குடும்பத்தினர் பலரும் பத்திரிகைகளினதும் எதிர்க்கட்சியினரதும் விமர்சனங்களுக்கு உள்ளானபோதுகூட, கனிமொழியை எவருமே விமர்சித்ததில்லை.

இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினரானதுடன், மாறன் குடும்பத்தினுடன் ஏற்பட்ட பிணக்கினால், தயாநிதி ஓரங்கப்பட்டு டில்லியில் திமுகவின் குரலாகவும் கருணாநிதியின் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்படும் வாய்ப்பை கனிமொழி பெற்றார். அதனால் டில்லி அரசியல் வட்டாரத்தில் அவரது செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. எல்லாத்தரப்பிலும் நற்பெயரையும் ஆதரவையும் பெற்றிருந்த கனிமொழி இன்று உலக அளவில் விமர்சனத்துக்கு உள்ளான தமிழக அரசியல்வாதியாக ஆகிவிட்டார்.

அதிகாரத்தின்மீது கனிமொழிக்கு ஏற்பட்ட மோகமும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் கடைப்பிடிக்கத் தொடங்கிய அவரது தன்மைக்கு எதிரான போக்குகளும் அரசியல் காய் நகர்த்தலில் அவருக்கு இன்னும் கைவரப் பெறாத முதிர்ச்சியுமே அவரது இன்றைய நிலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. 43 வயதில் கருணாநிதி அமைச்சரானார். அதன் பின்னர்தான் அவரது ‘அரசியல்’ செயல்பாடுகள் வலுப்பெறத் தொடங்கின. ஆனால் 43 வயதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நிலையிலேயே பெரும் ஊழல் குற்றத்தின் பேரில் கனிமொழி சிறைக்குச் சென்றுள்ளார்.

இதன் மூலம் உலக அளவில் அவர் பெற்றிருக்கும் விளம்பரமே அவருக்கு பெரும் பலமாகும் வாய்ப்புள்ளதாகவும் ஒரு தரப்பினர் கணிக்கின்றனர். சட்ட ஓட்டைகளும், இந்திய அரசியலும், நாட்டின் ஆணி வேர் வரை புரையோடிப் போயிருக்கும் லஞ்ச ஊழலும் உலகம் அறிந்தது. எனவே விசாரணை, வழக்கு என்பதெல்லாம் எப்படிப் போகும் என்பது பற்றி கணிப்பதற்கில்லை.

அதேபோல் குடும்பத்துக்காகக் கட்சியைப் பலிகொடுத்தார், 70 ஆண்டுகாலமாகக் கட்டி வளர்க்கப்பட்ட திமுக கட்சியின் சிதைவுக்கு வித்திட்டார் போன்று கருணாநிதி மீது இன்று சுமத்தப்படும் பழிகளும் விரைவில் மறக்கப்பட்டு, மறைந்து போய் விடலாம்.

கருணாநிதியின் உண்மையான அரசியல் வாரிசு கனிமொழிதான் என்றும், திமுகவின் அடுத்த தலைவராக தலையெடுக்கும் எல்லாத் தகுதிகளையும் அவர் பெற்றுள்ளார் என்றும் இப்போது பலர் சொல்லத் தொடங்கி விட்டனர்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768